வைரமணிக் கதைகள் – 12 கறவை

1
0 minutes, 34 seconds Read
This entry is part 12 of 19 in the series 19 ஏப்ரல் 2015

காடு வெட்டியாருக்கு நாற்காலி கொண்டு வந்து ஒருவன் களத்தில் போடும்போதுதான் கான்ஸ்டபிள் வந்தார்.

 

காலையில் காப்பி, பலகாரம் முடித்துக் கொண்டு, அமர்த்தலாக ஏப்பம் விட்டவாறே பண்ணை வீட்டிலிருந்து கீழே இறங்கும்போதே காடு வெட்டியார் பார்வை கான்ஸ்டபிள் மேல் பட்டுவிட்டது.

 

அதைக் கண்டு கொள்ளாமல் வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தவர்களிடம் ஓர் அதட்டல். சாக்கில் அறுவடை நெல் அளந்து நிரப்புகிறவனிடம் ஒரு விசாரிப்பு. தலையைச் சொறிந்து நின்ற டிராக்டர் டிரைவரிடம் ஒரு சீறல்… இத்தனையும் நடத்திக் கொண்டு தான் அடி அடியாக நாற்காலியை நோக்கி முன்னேறினார்.

 

இடையிடையே மாட்டுத் தொழுவத்தில் முண்டாசை அவிழ்த்து இடுப்பில் கட்டி நின்ற மாட்டுக்காரன் மயில்சாமியை அரைக் கண்ணால் பார்த்துக் கொண்டார்.

 

நாற்காலியை நெருங்கிய போதுதான், கான்ஸ்டபிளை கவனிக்கிற மாதிரி காட்டிக் கொண்டார். பஞ்சாயத்து பிரசிடெண்ட் அல்லவா!

 

“வணக்கம் சார்.”

 

“ஓ போலீஸ்காரா… வாங்க வாங்க” என்று நாற்காலியில் உட்கார்ந்தார்.

 

வெறும் கான்ஸ்டபிள்தானே. இரண்டு மூன்று நிமிஷம் நிற்கட்டுமே என்று மனசிற்குள் ஒரு கணக்குப் போட்டு விட்டுப் பேசத் தொடங்கினார்.

 

“எங்கே ரொம்ப தூரம்?”

 

“மாடு காணாமப் போச்சுன்னு கம்ப்ளெய்ண்ட் கொடுத்தீங்களாமே… அதுதான் ஐயா அனுப்பிச்சாரு.”

 

“என்ன, மாடு கெடைச்சுடுச்சா?”

 

“இல்லீங்களே அதைப் பத்தி வெவரம் விசாரிக்கத்தான் வந்தேன்.”

 

காடுவெட்டியார் அரைக்கண்ணால் மாட்டுத் தொழுவத்தருகில் நிற்கும் மயில்சாமியைப் பார்த்தார்.

 

“நிக்கறீங்களே…” என்று அவர் நிற்பதை அப்போது தான் கவனித்த மாதிரி, ஒரு குறிப்புக் காட்டி விட்டு, “டேய் மயில்சாமீ! உள்ளார போய் ஒரு ஸ்டூல் கொண்டா!” என்றார்.

 

விஷயம் தன்னைச் சுற்றித்தான் வரப் போகிறது என்று மயில்சாமிக்கு நன்றாகத் தெரியும். என்ன பேசப் போகிறாரோ அது தனக்குத் தெரியக்கூடாது என்பதற்காகத் தான் எல்லாரையும் விட்டு விட்டுத் தன்னை உள்ளே அனுப்புகிறார் என்றும் மயில்சாமிக்குத் தெரியும்.

 

காடு வெட்டியாரைப் பதினெட்டு வருஷங்களாகப் பார்க்கிறவனாச்சே அவன்!

 

“காணாமப் போனது என்ன மாடுங்க?”

 

“கறவை மாடு.”

 

“தொழுவத்திலே இருந்து அவுத்துட்டுப் போயிட்டாங்களா?”

 

“இல்லே, காட்டுக்கு மேய்ச்சலுக்குப் போன மாடு வீடு திரும்பலே.”

 

“சிறுத்தை கிறுத்தை அடிச்சுருக்குமோ?” கான்ஸ்டபிள் மெதுவாகக் குரல் தாழ்த்திச் சொன்னார்.

 

“அதைக் கண்டுபிடிக்கத் தானேங்க நான் ரிப்போர்ட் குடுத்தேன்!” காடு வெட்டியார் மீண்டும் தான் பிரசிடெண்ட் என்பதை கான்ஸ்டபிளுக்கு நினைவூட்டினார்.

 

அதற்குள் ஸ்டூலைக் கவிழ்த்துக் கால்கள் மேலே பார்க்க தோள் மேல் வைத்துத் தூக்கி வந்தான் மயில்சாமி.

 

“காட்டுக்கு மாடு மேய்க்கப் போறது யாருங்க?”

 

ஸ்டூலைத் தோளிலிருந்து கீழே இறக்கி நிமிர்த்தித் தரையில் வைத்தான் மயில்சாமி.

 

“இதோ, இவன்தான்!”

 

இவனா?

 

கான்ஸ்டபிள் மயில்சாமி முகத்தை உற்றுப் பார்த்தார். பார்க்கிற பார்வையிலேயே உண்மையைக் கக்க வைத்து விடுகிற உக்கிரம் தெரிந்தது.

 

“யோவ் நீதான் மாட்டுக்காரனா?”

 

“ஆமாங்க.”

 

“உன் பேரு இன்னா?”

 

“மயில்சாமி.”

 

அவன் தன் முன் விசாரிக்கப்படுவதை காடு வெட்டியார் விரும்பவில்லை.

 

“டேய், போய் கான்ஸ்டபிளுக்குக் காப்பி வாங்கிட்டு வா!”

 

“அதெல்லாம் வேணாங்க…” என்று நெளிந்தார் கான்ஸ்டபிள்.

 

“நீ போடா!”

 

மயில்சாமி தலை மறைந்தது.

 

“இவன் மேலே ஒங்களுக்குச் சந்தேகமா சார்?”

 

“இவன் மேலே சந்தேகம்னு சொல்றதுக்கும் இல்லே. சந்தேகமில்லைன்னு சொல்றதுக்கும் இல்லே.”

 

“ஸ்டேஷனுக்கு இளுத்துக்கிட்டுப் போயி ரெண்டு தட்டு தட்டினாக் கக்கிடறான்!”

 

“நான் அதைச்சொல்லலே”

 

காடு வெட்டியார் திரும்பி, வைக்கோல் போர் போடுகிறவன் முதல், கவனிக்கிற எல்லாரையும் அரைப் பார்வை பார்த்தார். காப்பிக்குப் போன மயில்சாமி இன்னும் வரவில்லை.

 

“எனக்கு மாடு முக்கியம், அதோ பார்த்தீங்களா? அந்தத் தொழுவத்திலே கட்டியிருக்கிற மாடுங்க எல்லாம் அது போட்ட கன்னுங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னே கூட ஒரு கன்னுப் போட்டுது, கறந்தா ஒரு வேளைக்கு ரெண்டு லிட்டர் கறக்கும்.”

 

காடு வெட்டியார் ஒரு சிறு நெடுமூச்சு விட்டார்.

 

“பால் நஷ்டம் பெரிய நஷ்டம் இல்லே. அது போட்ட கன்னு கூட சமீபத்திலே செத்துப் போச்சு. இன்னும் கொஞ்ச நாள்லே பால் மடிச் சுரப்பு கூட நின்னுடும்.”

 

கான்ஸ்டபிள் அவர் என்ன சொல்லவருகிறார் என்பதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

 

“இந்தப் பண்ணை சம்பந்தப்பட்ட வரையிலே அது ஒரு முக்கியமான மாடு.”

 

“கன்னுக்குட்டி செத்த பின்பும் பால் சுரந்திட்டிருந்துதுங்களா?”

 

“அதான் சொன்னேனே ரெண்டு லிட்டர்!”

 

“பால் கறக்கிறது யாரு?”

 

“எல்லாம் அவன்தான் கறப்பான்.”

 

அதற்குள் மயில்சாமி காப்பி டபராவுடன் படியிறங்கி வந்தான்.

 

“இவனை நீங்க விசாரிச்சீங்களா?”

 

“விசாரிச்சேன். எனக்குத் தெரியவே தெரியாதுங்கறேன்.”

 

காப்பி டபரா அருகில் வந்தது. அவன் கான்ஸ்டபிளிடம் நீட்டினான். அவர் வாங்கிக் கொண்டார்.

 

குடித்து விட்டு டபராவைக் கீழே வைத்தார்.

 

“சார் இவனை ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப் போகணும்.”

 

“இவன்தான் தெரியவே தெரியாதுங்கறானே!”

 

“அதை ஸ்டேஷன்லே வந்து சொல்லிடட்டும்.”

 

மயில்சாமி பேசாமல் நின்றான்.

 

“என்ன மயில்சாமி!” என்று காடு வெட்டியார் அபிப்பிராயம் கேட்கிற தோரணையில் குரல் கொடுத்தார்.

 

“ஐயா.”

 

“கான்ஸ்டபிள் சொல்றது கேட்டுதில்லே?”

 

“கேட்டுதுங்க!”

 

“ஸ்டேஷனுக்குப் போகணுமா?”

 

அவன் பேசவில்லை.

 

“என்னடா?”

 

“எங்கே போனாலும் உண்மை அதுதானுங்களே.”

 

“வேற வழியே இல்லீங்க. நான் ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப் போறேன்.”

 

“ஒங்க பிரியம்…”

 

கான்ஸ்டபிள் மயில்சாமியின் முதுகைத் தள்ளிக் கொண்டு நடந்தார்.

 

மாட்டுக்கார மயில்சாமி காணாமற் போன அந்தப் பசு மாட்டிற்கு வைத்த பெயர் தனபாக்கியம். எந்தத் தனபாக்கியத்தை நினைத்துக் கொண்டு அந்தப் பெயர் வைத்தானோ அது நிலைத்து விட்டது.

 

காடுவெட்டியார் பண்ணையில் பத்து உரு மாடுகள். ஒரு செவலைக் காளை. மீதி எட்டும் பசு மாடுகள். எல்லாம் மேய்கிற வேளையில் “தனபாக்கியம்” என்று குரல் கொடுத்தால் அது திரும்பிப் பார்க்கும்.

 

மயில்சாமி “இங்கே வா” என்று மெதுவாகச் சொன்னால் தயங்கித் தயங்கி நடந்து வந்து, அவனை உராய்ந்து கொடுத்துவிட்டுச் சொர சொரவென்று அவன் புறங்கையை நக்கும்.

 

எங்காவது வெளியூர் போய் விட்டு இரண்டு மூன்று நாள் கழித்து, அவன் பண்ணைக்குத் திரும்பினால் அவன் குரல் கேட்டதும் ‘ம்மா ஆஆ’ என்று மாட்டுக் கொட்டகையிலிருந்தே அது குரல் கொடுத்துக் குசலம் விசாரிக்கும்.

 

“எங்கே போய்ட்டே? எப்ப வந்தே? இப்படி ரெண்டு மூணு நாள் நான் என்ன பாடு பட்டேன் தெரியுமா?” இவ்வளவும் அந்த முதல் கத்தலில் தொனிக்கும்.

 

‘அதான் வந்துட்டேன் இல்லே…” என்று ஓர் அதட்டல் போட்டுவிட்டு, அரைமணி நேரம் கைக் காரியம் பண்ணிக் கொண்டிருந்தால், அதற்குப் பொறுக்காது. மறுபடி மறுபடி குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்.

 

கிட்டே போய் அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்து நெற்றியை நீவி விட்டு, உடம்பைப் பிசைந்து விட்டு, மேல் தோல் துடிக்கிற மாதிரி இரண்டு தட்டுத் தட்டினால்தான் அதற்கு ஆறுதல்.

 

‘ஒருநாள் அது குளுத்தியில் கரைத்து வைத்த கழுநீரை குடிக்காமல் போய்விட்டால் அவனுக்கு மனசு விட்டுப் போய்விடும். அது உடம்புக்கு வந்து படுத்துவிட்டால் மாட்டாஸ்பத்திரிக்கும், கால்நடை உதவியாளரிடமும் அவன்தான் சைக்கிள் போட்டுக் கொண்டு அலைவான்.

 

இப்படியெல்லாம் இருந்த மயில்சாமியா அந்த மாட்டை விற்றிருப்பான்? காடு வெட்டியாரால் நம்ப முடியவில்லை.

 

ஆனால் அடி மனசு மாடு காணாமல் போனதுக்கும் மயில்சாமிக்கும் என்னவோ தொடர்பு என்று ஊர்ஜிதம் செய்தது.

 

மறுநாள் இரவு வரை மயில்சாமி வரவில்லை.

 

லாக்கப்பில் அவனைச் செமத்தியாக அடித்து நொறுக்கினார்கள் என்று செய்தி மட்டும் வந்தது.

 

காடு வெட்டியார் போய்ப் பார்க்கவில்லை. பார்த்து மனமிரங்கினால் காரியம் கெட்டுவிடும். அதற்காகவே தவிர்த்தார்.

 

அடுத்த நாள் காலையில் காடு வெட்டியாருக்குக் களத்திலே நாற்காலி போடும் வேளையில் மீண்டும் கான்ஸ்டபிள் வந்தார்.

 

இன்று ஸ்டூல் கொண்டு வந்து டிராக்டர் டிரைவர். காப்பி வரவில்லை. மறக்கப்பட்டதா இல்லை தவிர்க்கப்பட்டதா தெரியவில்லை.

 

“என்னாங்க கான்ஸ்டபிள்?”

 

“ஐயா வணக்கம்.”

 

“வணக்கம் வணக்கம்.”

 

காடு வெட்டியார் மேல் துண்டால் முகத்தில் பூத்த வியர்வையை துடைத்து கொண்டார். பின்னர் கான்ஸ்டபிளுக்கு கனிந்தருளல் போல் ஒரு குறுஞ்சிரிப்பு வழங்கினார்.

 

“என்ன விசேஷம்… என்ன சொல்றான் மயில்சாமி?”

 

“ஒத்துக்கிட்டாங்க.”

 

“ஒத்துக்கிட்டானா?”

 

“ஆமாங்க.”

 

“அடி ஒதை பொறுக்காம என்னமோ சொல்லி வைப்போம்னு ஒத்துக்கிட்டானோ?”

 

“இல்லீங்க! பக்கத்து ஊரு மாடுங்க மேய்ச்சலுக்கு வந்தப்போ ஏதோ தாய் தவறிப் போன கன்னுக்குட்டி இதும் மடியை முட்டியிருக்கு. அது பால் குடுக்க இந்த மாடும்சுரப்பு விட்டிருக்கு அரை அவுரு. இவன் ஒங்க மாட்டுக் கழுத்திலே இருந்த மணியை அவுத்து, அந்த மந்தையோட சேத்து அடித்து விரட்டியிருக்கான்.

 

“விக்கலே?”

 

“இல்லை.”

 

“எந்த ஊரு மாடு அது?”

 

“டவுன் மாடுங்க. கணவாய் ஏறி மேய்ப்புக்குக் கொண்டு வந்து விட்டிருக்காங்க.”

 

“கண்டுபிடிக்க முடியுமா?”

 

“கஷ்டமுங்க! டவுன்ல எங்கே போய் எங்க பாக்க?”

 

காடு வெட்டியார் யோசனையில் ஆழ்ந்தார். அவர் யோசனையைக் கலைக்காது கான்ஸ்டபிள் சற்று சும்மா இருந்து தொடர்ந்தார்.

 

“ஒத்துக்கிட்டான்! கேஸ் புக் பண்ணிடலாமா?”

 

“என்ன சொல்றான் எளவு எடுத்தவன்?”

 

“இவ்வளவு நாள் கன்னுக்குட்டி உயிரோட இருக்கறப்ப அதுக்குப் பாலைவிடாமே ஒட்டக் கறக்கச் சொல்வாங்களாம். இப்ப அது செத்துப் போச்சு. மாட்டுக்கு ஆன இந்த வயசுக்கப்பறமும் ஒட்டக் கறடாண்ணா அந்த மாட்டு மேலே அவன் வச்சிருக்கிற பாசம் அவனை ரொம்பக் கலக்கிட்டிருக்கு.”

 

கான்ஸ்டபிள் கொஞ்சம் இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தார்.

 

“கன்னுப் போட்ட அந்த டவுன் மாடு செத்திட்டுது. ஒங்க மாட்டுக் கன்னும் செத்திட்டுது.”

 

காடுவெட்டியார் குறுக்கிட்டார்.

 

“இவரு பெரிய தர்மதுரை! உடனே மொதலாளி மாட்டை தானங் குடுத்திட்டாரோ?”

 

கான்ஸ்டபிள் பதிலளிக்கவில்லை.

 

இரண்டு மூன்று பேச்சுக் குரல்கள் பண்ணையில் எந்த முகாந்திரமாகவோ பேசுவது கேட்குமளவு அமைதி நிலவியது. ஒரு நிமிஷம்.

 

தொண்டையைக் கனைத்துக் கொண்டு காடுவெட்டியார் பேசினார்.

 

“அவனை விட்டுடுங்க. நான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கறேன்.”

 

 

 

+++++++++++++++++++++

Series Navigationதொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”
author

வையவன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    காடுவெட்டியார், மயில்சாமி பாத்திரப்படைப்புகள் அருமை. கரடுமுரடான காடுவெட்டியாரின் மனதில் கூட கன்றை இழந்துபோய் தவிக்கும் அந்த வயதான பசுவின் பரிதாபநிலைக்கு ஒரு தீர்வு கண்ட மயில்சாமியின் செயல் ஈரத்தை உண்டுபண்ணி கதையை முடித்துள்ள விதம் எதிர்பாராதது மட்டுமல்ல, சிறப்பானதுங்கூட ! வாழ்த்துகள் வையவன் அவர்களே…….. டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *