வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை

This entry is part 5 of 24 in the series 8 பெப்ருவரி 2015

 

 

 

தம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால் தான் எழுந்து உள்ளே போவான்.

 

இப்போது திடீரென்று காட்டுக் கொல்லைகளில் யானைக் கூட்டம் திரிகிறது என்று பரவியிருக்கிற பீதிக்காக படுக்கையை மாற்றச் சொன்னால் அவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது.

 

முதலில் அந்த யோசனையைச் சொன்னது வள்ளி அல்ல.  கட்டிய கணவன் எந்த யோசனையைக் கேட்டுக் கொள்வான், கேட்க மாட்டான் என்று திருமணமான ஒரே வருஷத்தில் புரிந்து கொண்டவள் வள்ளி.

சொன்னவன் சொக்கப்பன்.

 

“ஆனைக் கூட்டம் ராவோட ராவா அம்பிலியப்பன் கம்பங் கொல்லையை சுத்தமா மேஞ்சிட்டுது தம்புசாமி.”

அந்த கம்பங்கொல்லை ஊஞ்சால மரத்து கானாற்றின் ஓரம் இருந்தது. தம்புசாமி நிலத்திலிருந்து இரண்டு கல் தொலைவு.

 

வடக்கயிற்றைத் திரித்துக் கொண்டே தம்புசாமி கேட்டான்.

 

“முந்தா நாள்தானே!”

 

“ஆமா, யாரு சொன்னது?”

 

“கேள்விப்பட்டேன்.”

 

“அப்போ நாராயணவரத்து பெத்தப்புவை ஆம்பளை யானை மெறிச்சிட்டது தெரியுமா?”

 

“அதுவும் சொன்னாங்க.”

 

“தெரிஞ்சிக்கிட்டேவா ராத்திரியிலே திண்ணை மேல படுத்திருக்கே?”

 

“என்ன பண்ணணுங்கறே?”

 

“உசுரு மேலே பயமிருந்தா உள்ளே போய்ப் படு. ஒனக்காக இல்லே ஒம் பொண்டாட்டிக்காக.”

 

“கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டா ஆனைக்கு இந்த அளிஞ்சிமரத்துக் கதவு பெரிய இரும்பு கேட் ஆயிடுமா?”

சொக்கப்பன் துண்டை உதறித் தோளில் போட்டு எழுந்தான்.

 

“நீ ஒரு விதண்டாவாதம் புடிச்சவன் உன்கிட்டே வந்து சொன்னேன் பாரு.”

 

பிரித்த திரிக் கயிற்றை லாவி எடுத்து, மரத்தில் கட்டி முறுக்க எழுந்தான் தம்புசாமி.

 

உயிருக்கு மரியாதை மரண பீதியா? புரியவில்லை. இந்தக் காற்று, நிலா வெளிச்சம், இரவுகளில் குள்ள நரியும் ஆந்தையும் போடும் ஓலம், மண்ணும் பயிரும் விடுவிக்கும் வாசனை, மரங்களின் சங்கீதம். இத்தனை அனுபவம் திண்ணையில்.

 

வெட்டிப் போட்ட கட்டைத் துண்டு ஒன்று வெட்ட வெளியில் எப்படி இன்னும் இயற்கைக்குச் சொந்தமோ அந்தமாதிரி இயற்கைக்கு அருகில் மூடுமறைவின்றிப் படுத்திருக்கிற அந்தச் சொந்தம் சொக்கப்பனுக்கு புரியவில்லை. அது வெறும் சுகம் இல்லை. மேலே அதற்கு மேலே.

 

பயந்து பயந்து கதவைத் தாள் போட்டு மூடிப் பதுங்கி ஒதுங்கி இருந்தால் மரணத்துக்குத் தப்பித்து விட முடியுமா?

 

சொன்னால் விதண்டாவாதம். சொல்வதில்லை. தாயின் வயிற்றிலிருந்து வந்து விழுந்ததுமே மண்ணுக்கு உரிமை. அதாவது மண் மேல் நிகழப் போகிற மரணத்துக்கு உரிமை பயந்து பயந்து தப்பித்துவிட முடியுமா?

 

“மோடாமோடியாப் பேசாதே, மரியாதையா எழுந்து போய் வூட்டுக்குள்ளே படு.”

 

இரண்டு மூன்று பேர் சொல்லி விட்டார்கள்.

 

“ராக்கப்பன் கொல்லையிலே ராத்திரி கன்னங்கரேல்னு நகுந்துதாம் எருமை பூந்துட்டதுண்ணு மூங்கில் தடி எடுத்துட்டு ஓடியிருக்கான். பார்த்தா திடுதிடுண்ணு எழுந்து நிக்குதாம் ஆண் யானை.”

 

மரங்கள் உராயப்பட்ட கதைகள். குடிசைச்சுவர் யானைத் தொடையில் தேய்த்து மண் சிறாய்ப்புண்ட கதை. மனக்கிலி ஜோடிக்கிறதா, நிஜமாய் நடக்கிறதா என்று இனம் பிரிக்க முடியாதவாறு காட்டுக் கொல்லை வாசிகளிடையே இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாகக் கதைகள் பறந்தன.

 

கானாற்றின் போக்கிடம் எங்கும் பரவிய கதைகள். தம்புசாமியின் மனசை ஒன்றே ஒன்றுதான் மிகவும் தைத்தது.

 

கூட்டத்தைச் சேர்ந்த பெண் யானையை எவனோ ரயில்வே கேட் அருகே சுட்டு வீழ்த்தி விட்டது.

 

தம்புசாமிக்குச் சொல்லப்பட்ட எல்லாக் கதைகளிலும் தவறாது அங்கம் வகித்தது ஓர் ஆண் யானை. அநேகமாக

 

அதுதான் கொலையுண்ட பெண் யானையின் இணையாக இருக்க வேண்டும்.

 

அது தாங்காத வேதனையுற்றிருக்க வேண்டும். எங்கெங்கோ விரட்டியடிக்கப்பட்டு, தீனியும் தண்ணீரும் தேடி மண்ணில் வந்து விழுந்த நாள் முதல் மலை மலைகளாக, வனவனங்களாக விதியைத் தேடிக் கொண்டு அது நடத்தும் யாத்திரையில் இப்போது அது சுமக்கும் சோகம் மிகவும் கனமாகத்தான் இருக்க வேண்டும்.

 

கூட்டம் என்றுதான் சொல்கிறார்கள் சிறு கூட்டம். ஆறேழு உரு இருக்குமாம். இரண்டு குட்டிகள்.

 

எங்கிருந்து வந்தன? எங்கே போகின்றன? யாருக்கும் தெரியாது. சமீபத்தில்தான் கூட்டத்தின் முக்கிய உறுப்பினர் சுடப்பட்டிருக்கிறது. முக்கியமான இழப்பு.

 

ஆண் யானைக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அதன் வெறுமை, அதற்கு நேர்ந்துள்ள விவரிக்க முடியாத தனிமை புரிந்தது.

 

அது எதை வேண்டுமானாலும் செய்யும். எவரை வேண்டுமானாலும் மிதித்துத் துவைத்து சர்வ நாசமாக்கி விடும். தனிமைக்கும் வெறுமைக்கும் பழக்கப்பட்டு தன் விதியின் போக்கைப் புரிந்து கொண்டு சாந்தமாகிற வரை அதன் சினம் தணியாது.

 

வள்ளியிடம் அதைப் பற்றிப் பேசினான்.

 

“அந்த ஆனை ரொம்பக் கலங்கிட்டிருக்கும் வள்ளி.”

 

அவள் துவைத்து வந்த புடவையை உதறிக் காயப் போட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டாள்.

 

“பொம்பளை போய்ட்டு ஆம்பளை தனியா நிக்கப்படாது வள்ளி.”

 

“யார் போயும் யாரும் நிக்கக் கூடாது” ஆண் பெண் என்று பெயர் சொல்லாமல் பொதுவாய்ச் சொன்னாள் அவள்.

 

“இல்லே, பொம்பளை கதை வேற, இந்த ஆனையை எடுத்துக்க ஆண் போய் பெண் யானை மிஞ்சினதுன்னு வச்சுக்க, அது இவ்வளவு துக்கப்படாது. குட்டிங்க இருக்கு. சாந்தமாயிட்டிருக்கும்.”

 

அவன் யானையை மட்டும் சொல்லவில்லை அவளுக்குப் புரிந்தது. அவள் மீது வைத்திருக்கும் காதலும், பந்தமும் இதைக் கூடவா அவளுக்கு விளக்காது?

 

“ஆம்பளைக்கு ஆம்பளை மனசுதான் புரியும். மத்தது புரியாது.”

 

வள்ளி விவாதிக்கிறவள் அல்ல. அவளுக்கு விவாதங்களில் நம்பிக்கை இல்லை. குறிப்பாகத் தன் கணவனிடம் மறுக்க வேண்டியதை மறைக்காமல் மறுத்து நிறுத்திவிட்டு அவள் அனுசரிக்கும் மௌனம், சம்பந்தப்பட்டவர் மனசில் பெரிய விவாதங்களைக் கிளப்பிவிடும்.

 

“அதே மாதிரி பொம்பளைக்கும் பொம்பளை மனசு தான் புரியும்” என்று எரிச்சலோடு சொன்னான் தம்புசாமி.

 

“அப்படித்தான் வச்சிக்கயேன்! நீ ஆனை திரியற காட்டுலே வீட்டுத் திண்ணை மேலே படுத்துக்கினு கீறது, எனக்கு எவ்ளோ காப்ராவா கீதுண்ணு ஒனக்குத் தெரியப் போறதில்லே.”

 

அக்கம் பக்கம் முழுக்க அஞ்சி நடுங்கும் விஷயத்தில் அவன் காட்டும் அசிரத்தையை இப்படித்தான் அவளால் வெளிப்படுத்த முடிந்தது.

 

“சரி சரி… துணியைக் காயப் போட்டுச் சீக்கிரமா வா. பெட்டியிலேர்ந்து வேஷ்டி சர்ட் எடுத்துக் குடுக்கணும்.”

 

“எங்கே போகப் போறே?”

 

“வேட்டைக்காரக் கவுண்டர் கிட்டே”

 

“எதுக்கு?”

 

“அவரு நாட்டுத் துப்பாக்கி வச்சிருக்காரு… கொஞ்ச நாளைக்கு எரவல் கேட்டு வாங்கிட்டு வரணும்னு.”

 

“ஆனையைச் சுட்டுறப் போறியா?”

 

“அட ஆர்றா இவ… ஒண்ணொண்ணையும் இவகிட்ட புட்டுப் புட்டு வெக்கணும் போல கீது!” என்று அலுத்து விட்டு நடந்தான்.

 

துப்பாக்கி யானையைச் சுடுவதற்காக இல்லை.

 

வேட்டைக் காரக் கவுண்டரோடு அவன் வேட்டைக்குத் துணையாக எத்தனையோ நாள் போயிருக்கிறான். வள்ளி கழுத்தில் தாலி கட்டு முன்பு.

 

திருமணத்திற்குப் பின் அவனுக்குள் என்னென்னமோ நேர்ந்து விட்டது. அவள் பேதைமையின் பின்னணியில் தெரிந்த அறிவில், எந்தெந்தப் பழக்கங்களிலிருந்தோ அவன் தானாக விலகிக் கொண்டான்.

 

அவனால் இதற்கு முன் வேட்டையாடப்பட்ட மிருகங்களும் பறவைகளும் இணை பிரிந்து விட்ட இனங்களும் மீண்டும் துப்பாக்கியைத் தொட அவனை விடவில்லை.

 

அன்று இரவு கவுண்டர் துப்பாக்கியில் மருந்தைக் கெட்டித்து வைத்துவிட்டு அவன் திண்ணையில் படுத்துக் கொண்டான்.

 

“அப்ப நீ உள்ளே வர மாட்டே?” வள்ளி கேட்டாள்.

 

“தாழ்ப்பாளைக் கெட்டியாப் போட்டு வையி” என்று பதிலளித்தான் தம்புசாமி.

 

திண்ணையில் துண்டை உதறித் தூசு தட்டி விட்டுப் பக்கத்தில் அவன் நாட்டுத் துப்பாக்கியை வைப்பது உள்ளே பாயில் படுத்த வள்ளிக்குக் கேட்டது.

 

இரவில் ஏதோ ஒரு நேரத்தில், நரி ஊளையும் காட்டுக் கோழி அலப்புவதும் அடங்கிய சமயத்தில் குடிசைக்கு வெகு அருகாமையில் செடி கொடிகள் மிதிபடும் ஓசையும் கிளைகள் முறியும் ஒலியும் கேட்டன.

 

திடுதிடுவென்று பெருநடை நடக்கும் காலடி யோசனைகள் கேட்டு வள்ளி திடுக்கிட்டு விழித்தாள்.

கதவைத் திறக்க வேண்டுமென்று விளக்கைப் பெரிதாக்கினாள். லாந்தர் வெளிச்சம் குடிசைக் கூரை ஓலைகளில் கசிந்து வெளியே தெரிந்தது.

 

“வள்ளி” வெளியே படுத்திருந்த தம்புசாமி குரல் கொடுத்தான்.

 

“முளிச்சுக்கிட்டுத்தான் இருக்கியா? ஆனை நடமாட்டம் கேக்குதா?”

 

“கேக்குது… நீ வௌக்கை எறக்கு.”

 

“கதவைத் திறந்து விடறேன். நீ உள்ளார வந்துடு.”

 

“மக்கு… வாய மூடிட்டுப் படுத்திரு. கொரல் குடுத்தே ஆனை நம்ப பக்கம் திரும்பிடும்.”

 

“சுடப் போறியா?”

 

“ஸ்ஸ்ஸு”

 

அவன் அதட்டி வாய் மூடு முன் பயங்கரமான பிளிறல் ஓசை கேட்டது. அருகில் பத்தடி தூரத்தில், அந்த ஓசை இருளில் எதையோ துழாவித் துழாவி ஆராய்வது போல் கடந்து போய் எதிர்மலையிலிருந்து எதிரொலி வந்தது.

தம்புசாமி நாட்டுத் துப்பாக்கியை எடுத்தான்.

 

தற்காப்புக்காக அதை எச்சரித்து விலக்குவதற்காகத்தான் அவன் துப்பாக்கி வாங்கி வந்திருந்தான். அதைத் தோளருகே உயர்த்தும் போது மறு பிளிறல் ஓசை வந்தது.

 

அருகே நாலடி தூரத்தில் குடிசை ஓரம் நின்று வேப்ப மர நிழலில் இருளோடு இருளாக நின்றது யானை.

இனி சுடுவது மடமை. அதற்கு உயிர் போகும். அல்லது வெறியில் அது தன் மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடும். குறி தப்பிவிட்டால் அதற்கு என்ன கோபம் வரும் என்று சொல்லவே வேண்டாம்.

 

உயர்த்திய துப்பாக்கியை ஓசையின்றி, அதிக அசைவின்றி அவன் தாழ்த்தினான். திண்ணை ஓரமாக நகர்த்தி ஒதுக்கினான்.

 

யானை நிற்கிற நிழலுருவம் தெரிந்தது. அது தன்னையே பார்க்கிறதா என்றுதான் தெரியவில்லை.

 

“நீ உள்ளே வர மாட்டே?” என்று குடிசைக்குள்ளிருந்து பயத்தோடு வள்ளி கேட்பது காதில் விழுந்தது.

அவன் பதிலளிக்கவில்லை. எந்த ஓசையுமின்றி மெதுவாகக் கால் நீட்டித் திண்ணை மீது முதுகைச் சாய்த்துப் படுத்தான். இதயம் பதைக்கிற பதைப்பே அவனைக் காட்டிக் கொடுத்து விடும் போல் அவ்வளவு நடுக்கம்.

 

யானை மெதுவாக நகர்ந்து வருவது தெரிந்தது. திம்திம்மென்று பூமி அதிரும் ஓசை கேட்டது. வேப்ப மரத்தின் நிழல் மறைவை விட்டு, தும்பிக்கையை வளைத்துப் பெரிய காதுகளை விசிறி விட்டவாறு தலையை ஆட்டிக் கொண்டே அது நெருங்கி வந்தது. பின்னிலவு ஒளியில் அதன் கண்கள் மின்னுவதைக் கூட தம்புசாமி கவனித்தான்.

 

அப்புறம் சலன மற்றிருக்க வேண்டும் என்பதற்காகக் கண்களை மூடிக் கொண்டான். பயம் ஒரு முறுக்குக் கயிறு போல் தொண்டையையும் மார்பையும் பின்னி இறுக்குவதை உணர்ந்தான்.

 

அதன் ஊடே ஒன்றும் நடக்காது என்று நம்பிக்கையின் நடுச்சரடு ஓடிற்று. யானை குடிசையை நெருங்கிற்று.

அதன் முதுகு பட்டுக் கூரை மூங்கில்கள் கலகலத்தன.

 

திண்ணையில் அவன் படுத்திருப்பதைக் கண்டு அது நின்றதோ என்னவோ! பாம்போ ஒரு கையோ முகத்தின் மீது ஊர்ந்து போவது போல் ஈரமும் மிருதுவுமான ஒரு தசைப் பகுதி தன் முகத்தைத் தடவிக் கழுத்து வரை நகர்ந்ததை தம்புசாமி உணர்ந்தான்.

 

அது துதிக்கை; புரிந்தது. அவன் அசையவில்லை. பயம் தன் உச்சக்கட்டத்தை எட்டி விளிம்பு தொட்டு விட்டது. இனி ஒன்றுமில்லை. அந்தத் துதிக்கையால் வாரித் தூக்கி எறியப்பட்டு மிதிபட்டாலும் மிதிபடலாம். அல்லது ஒன்று நடக்காமலும் போகலாம்.

 

மரணம் என்பது என்னவென்று புரிந்து கொள்கிற விளிம்பு வந்து விட்டால் பயம் மாண்டு போகிறது.

 

அவன் துதிக்கையால் உயர்த்தித் தூக்கப்பட்டுக் கீழே தரையில் வீசப்பட்டு, பெரிய கர்டர் ஒன்று தன் மார்பை மிதிக்கப் போகிற அனுபவத்திற்கு மனசைத் தயார்ப்படுத்தினான்.

 

யானை நின்று கொண்டே இருந்தது. பின்பு என்ன நினைத்ததோ நகர்ந்தது. கதவருகில் நின்றது. அது கதவை முட்டியிருக்க வேண்டும். கதவின் கீல்கள் கிறீச்சிட்டுப் பிளந்தன. தாழ்ப்பாள். பிய்த்துக் கொண்டே ஒலி கேட்டது.

 

உள்ளிருந்து வீல் என்று அலறினாள் வள்ளி.

 

“அட மூடமே!” என்று மனசில் சபித்துக் கொண்டே துப்பாக்கியைத் தொட்டான் தம்புசாமி.

 

மீண்டும் இதயம் வெடித்துப் போவது போல் அது பிளிறியது.

 

குடிசைக்குள் அது நுழைந்தால் சுட்டு விடுவது என்று தீர்க்கமான முடிவுக்கு வந்தான் தம்புசாமி.

ஆனால் யானை உள்ளே நுழையவில்லை.

 

அந்த அலறல் ஓசையைக் கேட்பது போல் அது நின்றது. ஓரிரு நிமிடத்தில் அது அவன் குடிசையைக் கடந்து செல்லும் பெரிய காலடியோசைகள் கேட்டன.

 

மறுநாள். “உன் குடிசைக்கு ஆனை வந்ததாமே!” என்று கேட்டவாற வந்தான் சொக்கப்பன்.

 

தச்சனை அழைத்துப் பிய்ந்து போன தாழ்ப்பாள் பூட்டைச் சரி செய்ய வேண்டுமென்று வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான் தம்புசாமி.

 

“என்னமோ கதவைத் தாப்பாப் போட்டு உள்ளே படுத்துக்கச் சொன்னியே, என்ன ஆயிருக்கு பாரு” என்று கதவைக் காட்டினான்.

 

சொக்கப்பன் பிய்ந்து போயிருந்த தாழ்ப்பாளையும் கீலையும் மேலும் கீழும் பார்த்தான்.

 

“ஆமா வேட்டைக்காரக் கவுண்டர்கிட்டேர்ந்து துப்பாக்கி வாங்கி வச்சிருந்தியே… அதைச் சுட்டுற வேண்டியதுதானே!”

 

ஒன்றும் சொல்லாமல் சிரித்தான் தம்புசாமி.

 

“என்னா சிரிக்கிறியே?”

 

இருவரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு வள்ளி குறுக்கிட்டாள்.

 

“சுட்டிருந்தா அது யார் மேலயாவது திரும்பிட்டிருக்கும் அண்ணா!”

 

“அட, வூட்டை வுட்டு நவுந்து போனப்பறமாவது சுட்டுட்டிருக்கக் கூடாது?”

 

“இவங்க அப்படியெல்லாம் சுடமாட்டாங்க அண்ணா!” என்றாள்.

 

சட்டென்று திரும்பி வள்ளியின் கண்களைச் சந்தித்தான் தம்புசாமி.

 

அவள் தன்னை எவ்வளவு நுட்பமாக உணர்ந்து வைத்திருக்கிறாள் என்று பாராட்டுவது போலிருந்தது அந்தப் பார்வை.

 

“எத்தினி பேருக்கு எவ்வளவு காபரா! சுட்டிட்டிருக்கணும்மா.”

 

வள்ளியோ தம்புசாமியோ ஒன்றும் சொல்லவில்லை.

 

“இனிமேலயும் கூட திண்ணையிலே தான் படுக்கையா?”

 

“பளகிப் போச்சு சொக்கா, மாத்திக்க முடியாது. ஆனையச் சுட்டுடணும்ங்கறே… அது என்ன பண்ணுச்சு எங்களை? பேசாம வுட்டுட்டுப் போயிடுச்சு” என்றான் தம்புசாமி.

 

அவனால் ஒன்றைச் சொக்கப்பனிடம் வாய் விட்டுச் சொல்ல முடியவில்லை. இணையை இழந்து விட்டு அலைக் கழிந்து செல்லும் அந்த ஆண் யானையின் தவிப்பு தனக்குள் என்ன வேதனையை ஏற்படுத்தியது என்பதுதான் அது!

 

+++++++++++++++++++

வைரமணிக் கதைகள்

[வையவன் ]

முதற் பதிப்பு : 2012

 

பக்கங்கள்:500

விலை:ரூ. 500

 

 

கிடைக்குமிடம்: தாரிணி பதிப்பகம்

4 A, ரம்யா ப்ளாட்ஸ்

32/79, காந்தி நகர் 4வது பிரதான சாலை

அடையார், சென்னை-20

மொபைல்:  99401 20341

Series Navigationஅந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *