வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)

This entry is part 30 of 32 in the series 29 மார்ச் 2015

வையவன்

மூன்றாவதாகத்தான் தன் வழக்கை விசாரிக்கப் போகிறார்கள் என்று கேள்விப் பட்டதும், ஆஸ்பத்திரிக் கட்டிலில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் பீமராஜாவைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என்ற அவா மேலிட்டது கோகிலாவுக்கு.

“யம்மாடி ரணபத்ரகாளி! ஒனக்கு என்னிக்கு எஸ்கார்ட் வந்தாலும் எனக்கு ஒரு பொழுதுதான்!” என்று அலுத்தபடி தொப்பியை எடுத்துத் தலையைக் கொஞ்சம் காற்றாட விட்டார். கான்ஸ்டபிள் 456. இளைஞன் இன்னும் மீசை முதிரவில்லை.

“போலீஸ் கெடுபிடி ரத்தத்திலே ஊற கொஞ்சம் நாளாகும். கல்யாணம் ஆகலே போல இருக்குது. இன்னும் பொம்பளயப் பார்த்தா கண்ணு தத்தளிக்குது. கை படபடக்குது!’ என்று அவரை மௌனமாக எடை போட்டாள் கோகிலா.

இந்த பலவீனத்தைப் பயன்படுத்திப் பீமராஜாவைப் பார்த்து விட வேண்டும். இந்தச் சமயம் விட்டால் அப்புறம் அவள் சாம்பலைக் கூடக் காண முடியாது.

“வெயிலு ஜாஸ்தி தான் இல்லே மொய்லியாரே!” என்றாள்.

“நான் மொய்லியாரு இல்லே”

கோகிலா முத்து உதிர்க்கிற மாதிரி சிரித்தாள்.

“முத்த முத்த மொய்லியாராவப் போறீங்க! பாவம், எப்ப எஸ்கார்ட்டு வந்தீங்கன்னாலும் இந்த கோர்ட்டுல இழுபறிதான். மைதா மாவுல பரோட்டாவுக்குப் பெசயற கணக்கா இந்த வக்கீல்மாரு இன்னாத்தான் பேசுவாங்களோ… ஒரே லப்பருதான். இதுக்கு ஆமாங்கப்பா நான் குத்தம்தான் பண்ணிட்டேன்னு ஒத்துக்கிணு ஜெயிலுக்கே பூடலாம் போலக்கீது” என்று அலுத்துக் கொள்கிற மாதிரி 456ன் வாயைக் கிளறினாள்.

கர்சீப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டார் 456! கோகிலாவைப் பதிலுக்குச் சீண்டுகிற மாதிரி பார்த்தார்.

“நெஜம்மாவா சொல்றே?”

“பின்ன இன்னா… நான்தான பேஜார் பட்றன்னா என்னை இட்டாந்துட்டு நீயும் கஷ்டப்படணுமா…”

“அப்ப நான் போயி கோர்ட்டுல சொல்லிரட்டா… அக்யூஸ்டு குத்தத்தை ஒப்புக்கறா… குறுக்கு விசாரணை யெல்லாம் வாண்டாம், தீர்ப்பு குடுத்துடுங்கனு…”

உதட்டை முறுக்கிக் கொண்டு கோகிலா பதிலளித்தாள்.

“சொல்லிடு… இன்னா ஆய்ப்புடும். ஆறு மாசம் தள்ளப் போறாங்க! போய்ட்டுப் போவது. இப்ப மட்டும் அந்த கண்ல கொளுப்பேறினவள நான் ஒட்டறைக் கொம்பால வாங்கின வாங்குக்கு வுட்டுறவா போறாங்க. அவ என்னை பிராத்தலுக்கு கூப்டா… ஒதவுளுந்தவுடனே ‘பீரோவி லிருந்து ரூபா திருடிக்கினு ஓட்னா, புடிக்கப் போனேன், அடிச்சுட்டா’னு புகார் குடுத்திருக்கிறா. கேஸு மாறப் போவுது… அவ்வளவுதானே?” என்று அநாயாசமாகச் சொல்லி விட்டுச் சிரித்தாள் கோகிலா.

“ஆமா… யம்மா பத்ரகாளி” என்று ஏதோ கேட்க வாயெடுத்தார் 456.

“இன்னா சொல்லு…”

“அந்த ராதாமணி பெரிய கை. இருவது பொம்பளையை வெச்சு லாட்ஜிங் நடத்தறா. படாபடா ஆளுங்கள்லாம் அவ கைக்குள்ள அடக்கம். நீ எந்தத் தைரியத்திலே அவளை அடிச்சிட்டே, அவளும் உன்னை குளோஸ் பண்ணாம வெளியே வுட்டுட்டா… போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டா?” என்று பொழுது போக்க வாயைக் கிளறினார் 456.

“நீ காலயிலே டிபன் சாப்டியா மொய்லியாரே?”

“சாப்டேன்! இன்னாத்துக்குக் கேக்கறே?”

“தாகமா இல்லே!”

“இருக்குது… இன்னா பண்ணலாம்?”

“தோ… அந்த எதிர் கடைக்குப் போய் கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு வரலாம்… வாயேன் மொய்லியாரே?”

“சரி வா போவோம்! இப்போ அந்த பீமராஜா கேஸு. எட்டு சாட்சியாம்! விசாரிக்கறதுக்குள்ள ஜட்ஜுக்கு இந்த வெயில்ல தூக்கமே வந்துடப் போடவுது. நம்மளைக் கூப்பிடறதுக்கு ரெண்டு மணி ஆவப்போவுது!”

அவளை முன்னேவிட்டு 456 பின்னே நடந்தார். விஷயம் தானாகத் தகைந்து வசமாகச் சிக்குகிறது என்று நினைத்தாள் கோகிலா. வாய்ப்பு! தவறவிடக் கூடாது.

“அது இன்னா கேஸு மொய்லியாரே?”

“நீ நட… சும்மா தொண தொணன்னு! நாலு பேரு பாக்கறாங்க இல்லே… அக்யூஸ்டா மரியாதையா தலை குனிஞ்சுனு நட” என்று வெட்டினார் 456.

கூல்டிரிங்க்ஸ் குடித்துவிட்டுக் காசு தரப்போனார் 456.

“ஐயா… நீங்க வைங்க. நான்தானே வேணும்னேன்” என்று கோகிலா முந்திக் கொண்டாள்.

மீண்டும் அவர்கள் கோர்ட் வராந்தாவுக்கு வந்தனர்.

“நீ சொல்லமாட்டியா மொய்லியாரே?”

“என்ன சொல்றது! அதெல்லாம் பெரிய இடத்து விசயம்!”

“எடத்தை வுட்டுட்டு விசயத்தைச் சொல்லேன்”

“இன்னாடா இவளோட பெரிய பேஜாராப் போச்சு!”

“சரி… சொல்ல இஷ்டமில்லேன்னா வுட்டுரு… என்று ஆதங்கம் அவனைத் தாக்குகிற மாதிரி தொனி இறங்கிச் சொன்னாள் கோகிலா.

“கிட்டத்தட்ட உன் கதைதான். பெரிய இடத்துப் பையன் ஒருத்தன், ஒரு பொண்ணை பலாத்காரம் பண்ணி இருக்கான். பீமராஜா பெரிய வஸ்தாது. பூந்து விளையாடியிருக்காரு. பையன் கைவசம் ஒரு ரவுடி செட் வச்சிருக்கான். அவனுங்க பார்ட் பார்ட்டா பீமராஜாவைக் கள்ட்டிட்டானுங்க. இப்போ அவரு சாகப் பொளைக்கக் கிடக்கறாரு. கொள்ளையடிக்க வந்தான்னு கேஸு!”

“ராஸ்கலுங்க!” என்று பல்லைக் கடித்தாள் கோகிலா.

“எந்த ஆஸ்பிடல்ல இருக்காராம் அவுரு?” என்று துருவினாள் கோகிலா.

“தோ… கவர்மெண்ட் ஆஸ்பத்திரிதான். கொஞ்சம் நேரம் முன்னாடி எங்கிட பேசிட்டுப் போவலே 345, அவர்தான் ‘சென்ட்ரி’ டியூட்டி மாத்தறதுக்குத்தான் போனாரு!”

கோகிலா உதட்டைத் துடைத்துக் கொண்டு மார்பின் மேல் கைகட்டி நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் மனம் மீண்டும் பீமராஜா மீது கவிழ்ந்தது.

ஒரே ஒரு முறைதான் அவள் பீமராஜாவைச் சந்தித்திருக்கிறாள் அதே லாட்ஜில். அங்கே கூட்டிப் பெருக்கித் தண்ணீர் எடுத்து வைக்கிற வேலையில் அவள் சேர்ந்து நாலாம் மாதம்.
அது என்ன உடம்பு! மத யானை மாதிரி! அறை கூட்டுவதற்காக ஒரு கதவைத் தட்டியதும் திறந்து கொண்டு வந்து நின்ற அந்த உருவத்தை நினைத்தாள் கோகிலா. இப்போதுகூட வெலவெலக்கிற உணர்வு.

ஆண்மையென்றால் அப்படி ஓர் ஆண்மை! உடம்புதான் மத யானை. முகத்தில் ஒரு சாந்தம். மலைமுகட்டில் நிலவும் சாந்தம்! தன் பலம் உணர்ந்து அடங்கிய தன்னுணர்வில் உறைந்த கம்பீரம். அருகில் போய் நின்றாலே பெரிய ஆலமர நிழலில் ஒதுங்கியது போன்று ஒரு பத்திரம்! பாதுகாப்பு. தான் இந்த உடம்பு பலத்துக்கும் தோற்றப் பெருமைக்கும் மேலே என்று சுடர்வீசும் கண்கள். கர்வமில்லாத பார்வை.

“என்னா சம்பளம் குடுக்கறாங்க?”

“மாசத்துக்கு நூறு ரூபாங்க ஐயா”

“நீ சம்பாரிக்கிற அளவுக்குக் கஷ்டமான குடும்பமா?”

“கஷ்டம்தானுங்க!”

“ஹூம் பாத்து செய். இந்த மாதிரி எடத்துக்குல்லாம் வயசுப் பொண்ணு வரக்கூடாது… வந்துட்டே.”

“எடம் எப்படியிருந்தா இன்னாங்க ஐயா… நாம புத்தியோட இருந்தா பொளச்சிக்கறோம்.”

“இது வார்த்தை! ஆனா, இங்க வுடமாட்டாங்க… அதுவும் இந்த ராதாமணி இருக்கா பாரு, அவளுக்கு லச்சணமா ஒரு பொண்ணைப் பாத்தாலியே நமநமங்கும். நீ கெட்டிக்காரியா இருந்தா மட்டும் போறாதும்மா! அங்கே இங்கே வாலை நீட்டிப் பாப்பா. போட்டுரு, பெருச்சாளி அடிக்கிற மாதிரி அடிக்கணும். ஏமாந்தே? வாணாம்மா… அதெல்லாம் என் வாய்லே வரக் கூடாது!”

அதுதான் சந்திப்பு! அதுதான் அவரிடமிருந்து பெற்ற செய்தி. பெரிய ஜெனரேட்டரிலிருந்து ஒரு சிறிய பாட்டரிக்கு கோகிலா சேகரித்துக் கொண்ட மின்சாரம்.

அவள் உடம்பு சிலிர்த்தது.

“ஒரு லாட்ஜில் தங்க வந்த மனுசன் சொல்கிற வார்த்தையா அது?”

அவள் கேட்டுக் கொண்டாள். நடந்தும் காட்டி விட்டாள். அதற்கு ஒரு நன்றி பாக்கியிருக்கிறது. மானம் முக்கியமான தென்று உணர்த்திய உணர்வுக்கு செலுத்த வேண்டிய நன்றி! உயிர் பிரிந்து விடும் முன் சொல்ல வேண்டிய நன்றி!

“மொய்லியாரே, ஒரு சின்ன சங்கதி சொல்லட்டா?” என்றாள் கோகிலா.

“என்னாது?”

“ஒரு உசுரு போகப் போவுதுன்னு வெச்சிக்க… அதுங்கிட்ட கடன் வாங்கியிருந்தா இன்னா பண்ணணும்?”

“திருப்பிக் குடுத்துடணும்?”

“எதா, திருப்பிச் சொல்லு!”

“என்னாத்துக்கு அடி போடறே நீ?”

“பீமராஜாவை அவக உசுரு போறதுக்குள்ள ஒரு தபா பார்த்துடணும் மொய்லியாரே?”

“பாத்தியா… கொஞ்சம் இடம் கொடுத்தா மடத்தைக் கட்டறேன்னு ஆரம்பிக்கிறியே?”

கோகிலாவின் முகம் கற்பூரத் தட்டு மாதிரி ஜொலித்தது.

“மானத்தை எப்படிக் காப்பாத்திக்கறதுன்னு அந்த மனுஷன்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தாரு. சும்மா ஒரே ஒரு தபா மூலைல நின்னு எட்டிப் பாத்துட்டு ஓடியாந்திடறேன் மொய்லியாரே! மறுபடியும் உள்ளே தள்ளிட்டாங்கன்னா அந்த மாதிரி மனுசப் பொறவியை இந்த ஜென்மத்திலே கண்ணால பார்க்க முடியுமா மொய்லியாரே… மொய்லியாரே” என்று உருக்கமாகக் கெஞ்சத் தொடங்கினாள் கோகிலா.

அது கோர்ட்! அவள் ஒரு ‘அக்யூஸ்ட்’… தான் ஒரு ‘எஸ்கார்ட்’ என்பதெல்லாம் பின்னால பின்னால் வெகு தொலைவுக்குத் தள்ளிச் சென்றுவிட, 456 அவள் முகத்தையே ஆழ்ந்து நோக்கினார்.

அந்த வேண்டுகோளில் உயிரின் யாத்திரையில் திரும்பித் தரிசிக்க முடியாத ஏதோ ஒரு தாபம் இருப்பது அவரைத் தொட்டது. அதன் வேட்கை அவரைச் சுட்டது.

“எழுந்திரிம்மா போவலாம்” என்றார். ஆஸ்பத்திரிக்கு போய்த் திரும்ப அரைமணி போதும் என்ற கணக்கு அவருள் ஓடிற்று.

Series Navigationநீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015மிதிலாவிலாஸ்-7
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *