வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்

This entry is part 2 of 42 in the series 25 மார்ச் 2012

ந.லெட்சுமி
முனைவர் பட்ட ஆய்வாளார்,
தமிழ்த்துறை,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,
திருச்சி 2.

முன்னுரை :

மானிடச் சமூகம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும், தங்களது வாழ்வினை நலம் நிறைந்த வாழ்வாகவும், வளம் நிறைந்த வாழ்வாகவும் மாற்றிக் கொள்ள பல்வேறு சடங்குகளைச் செய்து வந்தனர். மனித வாழ்வில் நடைபெறும் செயல், பழக்கம், சடங்கு இம்மூன்றும் வெவ்வேறு வளர்ச்சிப் படியிலுள்ள செயலாகும். வைரமுத்து படைப்புகளில் சடங்குகள் பற்றிய ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சடங்கு பெயர்க்காரணம்

நாடோடிகளாகத் திரிந்த மானிடச் சமூகம் ஓரிடத்தில் நிலையாக தங்கி தங்கள் குடிகளை அமர்த்தி சமுதாய அமைப்பினை உருவாக்கிய காலக்கட்டங்களில் தனக்குத் தெரிந்த சடங்கு முறைகளைத் தோற்றுவித்தனர். சாத்திர விதி பற்றியும், வழக்கம் பற்றியும் பின்பற்றும் கிரியை சடங்கு என்று அழைப்பர்.
`எந்தவொரு செயலாக இருந்தாலும் நல்லபடியாக நடக்க
வேண்டும் என்று கருதி முறையாகச் செயல்படுகின்ற
செயற்பாடுகளே சடங்கு என்று வடிவம் பெறுகின்றன.
சில வேளைகளில் மரபு வழியாகச் செய்யப்படுகின்ற
செயற்பாடுகளையும் சடங்கு என்றே குறிப்பிடுவர்
என நா.சாந்தி விளக்கம் தருகின்றனர்.

சடங்கின் நோக்கமும் நன்மையும்

மனித வாழ்வு சிறப்பாகவும், செழிப்பாகவும், தழைத்தோங்கச் செய்வது சடங்கின் முதன்மை நோக்கமாக கருதலாம். மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி, நோயின்மை, பீடைகள் நீங்கவும், சமுதாயம் ஒருமைப்பாட்டோடு செயல்படவும், குடும்ப உறவுகள் வலுப்பெறவும் சடங்குகள் தேவையானதாக கருதப்படுகின்றது. மனிதன் நம்பிக்கையுடன் செயல்படவும் மன நிறைவு கொண்டு வாழவும் சடங்குகள் தேவையாக அமைகின்றது.

சடங்கு முறையால் சமுதாய ஒருமைப்பாடு தழைத்தோங்குகிறது. உறவினர்களுக்கிடையே நல்லுறுவு, கட்டுப்பாடுகள் போன்றவைகள் நிலைபெறுகின்றன. நம் முன்னோர்களை நினைவுப்படுத்திக் கொள்வதோடு, வழிவழியாக வந்த மரபுகளும், பண்பாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.
சடங்குகளின் மூலம் ஓர் இனத்திற்கும் மற்றோர் இனத்திற்கும்
உள்ள வேறுபாட்டையும், அச்சடங்குகளைச் செய்கின்ற
மக்களின் மனநிலைகளையும் அவர்கள் வாழும்
இடங்களையும், அவர்களுடைய கல்வி, நாகரிகம்,
பண்பாடு, ஒழுக்கம், மதம் போன்றவற்றையும் அவர்களுடைய
எதிர்காலச் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை அறியலாம்
எனச் சடங்குகள் நடைபெறுவதால் சமுதாயத்தில் விளையும் பயன்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார், க.அழகர்.

வைரமுத்து படைப்பில் இடம்பெறும் சடங்கு முறைகள்

மனித வாழ்வில் இரண்டற கலந்துள்ள சடங்குகள் அளவின் வாழ்க்கைச் சுழல்களுக்குத் தகுந்தபடி மாற்றம் கொள்கின்றனர். சடங்குகளை மங்கலம், அமங்கலம் என இருவகையாகப் பகுத்துக் காண்பதும் உண்டு. பிறப்பு, புப்பு, திருமணம், காதுகுத்துதல் முதலான சடங்குகள், மங்கலச் சடங்குகள் என்றும், இறப்புத் தொடர்பான சடங்குகள் அமங்கலம் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் கிராமிய மக்களின் வாழ்வில் இடம்பெற்ற வாழ்வியல் சடங்குகளை வைரமுத்து தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
1. பிறப்புச் சடங்குகள்
2. காதுகுத்தும் சடங்குகள்
3. திருமணச் சடங்குகள்
4. இறப்புச் சடங்குகள்
5. பேயோட்டும் சடங்குகள்
எனும் நான்கு களன்களில் வகைப்படுத்தலாம்.

பிறப்புச் சடங்குகள்

சமுதாயத்தில் வாழக்கூடிய மனித இனத்தின் மாபெரும் செல்வம் குழந்தைச் செல்வம். மழலைச் செல்வம் இல்லையெனில் அவர் பெற்றிருந்த செல்வத்தால் யாதொரு பயனும் இல்லை. குடும்பத்தின் செல்வமாக விளங்கும் குழந்தைக்கு எவ்வித தீவினையும் நிகழாமல் இருப்பதற்கு மக்கள் மேற்கொள்ளும் சடங்கு முறையே பிறப்புச் சடங்குகள் எனலாம். குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்படும் சடங்கு முறையினை வைரமுத்து தம் படைப்புகளில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புதினத்தில் பேயத்தேவரின் மகள் செல்லத்தாயிக்கு பெண்குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு சேனைத்தொட்டு வைக்கும் சடங்கு முறையினை கிராம மக்கள் பின்பற்றிய விதத்தினை எடுத்துரைக்கிறார். குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த, நல்ல குணநலன்களை உடையவர்களின் பண்பு நலன்கள் அக்குழந்தைக்கு அமைய வேண்டும் என்ற நோக்கில் இச்சடங்கு முறை அமைந்துள்ளமையை தெளிவுபடுத்திக் காட்டுகிறார்.

காதுகுத்தும் சடங்குமுறை

காது குத்தும் சடங்கு கிராம மக்களின் தவிர்க்க இயலாத சடங்கு முறையாகும். குழந்தை பிறந்த சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ காதுகுத்தும் சடங்கு நடைபெறும். குழந்தை பருவத்தில் காது குத்தவில்லையெனில் இறப்பதற்குள்ளாகவும், இல்லை இறந்த பின்பாவது காது குத்தியே அடக்கம் செய்யும் வழக்கம் இன்றளவும் மக்களிடையே நிலவி வருகின்றது.

கள்ளிக்காட்டு இதிகாசத்தில், கள்ளிக்காட்டு கிராம மக்களின் வாழ்வில் காதுகுத்தும் சடங்கு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்துள்ளமையை வைரமுத்து அவர்கள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
காது குத்திட்டா ஒச்சமாகிப் போகுமாம். ஒச்சமான
பிள்ளைகள எமன் ஏறெடுத்தும் பாக்கமாட்டானாம்
காதுகுத்துக்கு இது ஒரு சாமி கணக்கு
மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், மருத்துவ ரீதியான அடிப்படையிலும் இச்சடங்கு நன்மையை மட்டும் விளைவிக்கும் நிலையினை எடுத்துரைக்கிறார்.

திருமணச் சடங்குமுறை

மனித சமூகம் வளர்ச்சியடையவும், மேன்மையடையவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறை திருமணம் ஆகும். கட்டுப்பாடின்றி திரியும் ஒரு மனிதன் ஒழுங்குமுறையான கட்டமைப்புக்குள் நிலைநிறுத்தும் முறையை திருமணம் எனலாம். பொறுப்புணர்வு, உழைக்க வேண்டும் என்ற விருப்பம் போன்ற நற்குணங்களை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் நிகழ்வு திருமணம் ஆகும்.

வைரமுத்து தம் படைப்புக்களில் கிராமப்புற மக்களின் வாழ்வியல் பின்புலங்களை தெளிவாக உணர்த்துகிறார். ஒவ்வொரு சடங்கு முறையையும் நுட்பமாக கவனித்து தம் படைப்பில் பதிவு செய்துள்ளார். சடங்கு முறையினை தொல்காப்பியரின் காலத்திற்கு பிறகே வந்துள்ளமையை நாம் அறிய முடிகின்றது. இதனை
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
என்று கூறுகிறார். மக்களிடத்தில் பொய்யும், வழுவும், தோன்றிய பின்னரே பெரியோர்கள் அனைவரும் ஒன்று கூடி இச்சடங்கு முறையை செய்தனர்.

முடிவுரை

மக்கள் வளமோடும், மகிழ்ச்சியோடும் இருப்பதற்கு திருமணச் சடங்கு தேவைப்படுகின்றது. சடங்கு முறைகள் அனைத்தும் மனித வாழ்விற்கு பயன்களைத் தரவல்லன. உளவியல் போக்கிலும், சடங்கு முறையினை கவிஞர் வைரமுத்து படைப்புக்களின் மூலம் அறிய முடிந்தது.

Series Navigationஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வைசித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி
author

ந.லெட்சுமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *