வைரஸ்

This entry is part 25 of 29 in the series 12 ஜனவரி 2014

தெலுங்கில்: D.காமேஸ்வரி

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

கல்லூரியிலிருந்து வந்ததுமே நேராக தன் அறைகுள் போன தீபா, “மம்மி!” என்று தேள் கொட்டிவிட்டது போல் கத்திவிட்டு, சமையல் அறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தாயிடம் ஓட்டமும் நடையுமாக சென்றாள். “மம்மி! என் கட்டிலில் யார் படுத்துக் கொண்டு இருக்காங்க?” என்று கோபமாய் கத்தினாள்.

“ஷ்.. சத்தம் போடாதே. உங்க அத்தை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருப்பதாய் சொன்னேன் இல்லையா. இன்றுதான் வைசாக்லிருந்து வந்தாள். சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறாள்.” தாழ்ந்த குரலில் சொன்னாள் சுமித்ரா.

தீபாவின் முகம் சிவந்து விட்டது. “அத்தை வந்தால் என் அறையில் எதற்காக தங்க வைக்கணும்? எனக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று உனக்குத் தெரியாதா? அறை முழுவதும் சூட்கேஸ்கள்! மேஜை முழுவதும் சாமான்கள்! என்னால் எப்படி படிக்க முடியும்? முதலில் அவற்றை எல்லாம் எடுத்துவிடு.” தாழ்ந்த குரலில் ஆனால்  கடுமையாக சொன்னாள் தீபா

“வாயை மூடு. என்ன பேச்சு இது? உங்க அத்தையின் காதில் விழுந்து வைக்கப் போகிறது. வாய்க்கு வந்தபடி பேசாதே. சாமான்களை உன் அறையில் இல்லாமல்வேறு எங்கே வைக்கச் சொல்கிறாய்?. உன் அண்ணாவின் அறையில் தங்க வைக்கச் சொல்கிறாயா? இரண்டு நாட்கள் அட்ஜெஸ்ட் பண்ணிக் கொள்ள முடியாதா உன்னால்? வரவர உனக்கு மனிதர்களைக் கண்டால் ஆகாமல் போகிறது.” கடுகடுவென்று பதில் சொன்னாள் சுமித்ரா.

தீபா கறுத்துப் போன முகத்துடன் மேலும் ஏதோ சொல்லப் போகும் முன் பின்னாலிருந்து வந்த மாலதி அவள் தோளில் கையைப் பதித்து “ஹாய் தீபா! எப்படி இருக்கிறாய்? ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து. நன்றாக உசந்துவிட்டாய். பெரியப்பெண் ஆகிவிட்டாய்” என்று அண்ணன் மகளை அணைத்துக் கொண்டு அன்புடன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

தீபா வலுக்கட்டாயமாக சிரித்துவிட்டு “ஹாய் ஆண்ட்டீ! ஹௌவ் ஆர் யூ?’ என்று அத்தையின் கையை விலக்கிவிட்டு அறைக்குள் சென்று தடாலென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

“என்ன? தீபாவின் மூட் சரியாக இல்லை போலிருக்கு. ரொம்ப சூடாக இருக்கிறாளே?” மாலதி சிரித்துக் கொண்டே அண்ணியிடம் சொன்னாள்.

“அந்தம்மாளின் மூட் எப்போதும் அதுபோல்தான். எந்த ஒரு விஷயத்திற்கும் எள்ளும் கொள்ளுமாய் வெடித்துக் கொண்டுதான் இருப்பாள்.” பேச்சை மாற்றினாள் சுமித்ரா.

“அவளுடைய அறையை நான் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டேன் என்று கோபம் வந்து விட்டதா? ஏதோ சத்தம் போட்டாற் போல் இருந்ததே?” தூண்டித் துருவுவது போல் விசாரித்தாள்.

விஷயத்தை எளிதாக்குவது போல் சுமித்ரா லேசாக சிரித்துவிட்டு “இந்தக் காலத்துக் குழந்தைகள் ரொம்பத்தான் செல்லம் கொண்டாடுகிறார்கள். சொந்தம் பந்தம் என்று யாருமே தேவையில்லை அவர்களுக்கு. ஒவ்வொருத்தருக்கும் தனி அறை வேண்டும் என்றால் எப்படி முடியும்? இருபத்தி நான்கு மணிநேரமும் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே உட்கார்ந்துக் கொள்வது பழக்கமாகி விட்டது.”

“போகட்டும் அண்ணி. சாமான்களை உங்கள் அறையில் வைத்து விடுங்கள். நான்  படுத்துக் கொள்கிறேன். அவளை டிஸ்டர்ப் செய்வானேன்? இந்தக் காலத்துக் குழந்தைகள் ஹாலில் இல்லையா? பிரைவசி வேண்டும் என்று நினைப்பார்கள்.” மாலதி சமாதானப் படுத்த முயன்றாள்..

“நீ சும்மா இரு மாலதி. அவளுடைய வார்த்தைகளை பொருட்படுத்தாதே இரண்டு நாட்களுக்கு அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியாதா என்ன? வா டீயை குடிப்போம்.”

இருவரும் தேநீர் கோப்பையுடன் ஹாலுக்கு வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

“மாலதி! வரவர இந்தக் காலத்துக் குழந்தைகள் தொட்டார் சுருங்கி போல் மாறிக்கொண்டு வருக்கிறார்கள். ஒத்துப்போவது, பகிர்ந்துக் கொள்வது என்பது கொஞ்சம்கூட இல்லை. அவர்கள் சொன்னபடி நாமும் ஆடிக் கொண்டிருப்பதால் அவர்களுடைய ஆட்டம் இன்னும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இருப்பது ஒன்றோ இரண்டோ குழந்தைகள். அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தால் நன்றாக படிப்பார்கள். நம்மை போல் அவர்கள் எதற்கும் அவஸ்தை படக்கூடாது என்ற நம் எண்ணத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.” சுமித்ராவின் குரலில் வருத்தம் கலந்து இருந்தது.

“அமெரிக்காவில்தான் இப்படி என்று நினைத்தேன். இங்கேயும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். எங்களுக்கு உறவினரின் போக்கு வரத்து அவ்வளவாக இருக்காது என்பதால் பரவாயில்லை. நம்ப காலத்து உறவுகள், பாசபிணைப்பு இதெல்லாம் இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குத் தெரியாமல் போகிறது. வெளிநாட்டில்தான் அப்படி என்றால் நம் ஆட்களும் அதேபோல் மாறிக் கொண்டு வருகிறார்கள்.”

“இந்தியா அமெரிக்காவை மிஞ்சிவிடும் போல் இருக்கிறது இந்த விஷயத்தில். இங்கேயும் கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு மூன்று பெட்ரூம்கள் கொண்ட பிளாட், எல்லோருக்கும் தனி அறை என்று பழக்கமாகி விட்டதில், யாராவது வெளிநபர் வந்தாலே பிடிக்காமல் போய் விட்டது.தனி அறை, தனியாய் டி .வி. போறாத குறைக்கு கம்ப்யூட்டர். கதவைச் சாத்திக் கொண்டு மணிக்கணக்காய் இன்டர்நெட்டில் சாட்டிங். இவர்களுக்கு இப்போது மனிதர்கள் தேவையில்லை. நாள் முழுவதும் கல்லூரி, அதற்குப் பிறகு கதவைச் சாத்திக் கொண்டுஅறைக்குள்ளேயே இருப்பது. நம் சின்ன வயதில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் எவ்வளவு சந்தோஷப் படுவோம்? லீவு விட்டால் தாத்தா வீட்டிற்கு, மாமா வீட்டிற்குப் போவது, சித்திகளை, அத்தைகளை, அவர்களுடைய குழந்தைகளை சந்திப்பது எவ்வளவு நன்றாக இருந்தது? இப்போ அத்தங்கா, அம்மங்கா என்ற பேச்சே இல்லை. எல்லோருமே கசின்ஸ்!” அந்த நாட்களை நினைத்து உணர்ச்சி வசப்பட்டாள் சுமித்ரா.

“உண்மைதான் அண்ணி! எல்லோர் வீட்டிலும் ஐந்து அல்லது ஆறு குழந்தைகளாவது இருப்பார்கள். லீவு விட்டாச்சு என்றால் தாத்தா பாட்டி வீட்டுக்குப் போவோம். இருபத்தைந்து குழந்தைகளாவது ஒன்று சேருவார்கள். எல்லோரும் கொல்லைப்புறத்தில் மரத்தின் நிழலில் எத்தனை விளையாட்டுகள் விளையாடி இருக்கிறோம்? பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து விதவிதமாக பட்சணங்கள் செய்து கொண்டு, இடைவிடாமல் வேலைகள் செய்து கொண்டு இருந்தாலும் ஒருநாளும் யாரும் சலித்துக் கொண்டதில்லை. என்ன சாப்பிடுவோம், எங்கே தூங்குவோம் என்ற கேள்வியே வந்தது இல்லை. எல்லோரும் சேர்ந்து இருப்போம். கோடையாக இருந்தால் மொட்டைமாடியில் தூங்குவோம். இல்லையா கொல்லைப்புறத்தில் கயிற்றுக்கட்டில் போட்டு படுத்துக் கொள்வோம். குளிர்காலமாய் இருந்தால் ஹாலில் வரிசையாய் பாய் போட்டு படுக்கை. குழந்தைகள் எல்லோரும் ஒரு பந்தியில் சாப்பாடு, ஆண்கள் எல்லோரும் ஒரு பந்தி, பெண்கள் கடைசியில் பேசிக் கொண்டும், கலாட்டா செய்து கொண்டும் சாப்பிடுவார்கள். ஒருத்தர் குழந்தைகளை குளிபாட்டினால், இன்னொருத்தர் தலை பின்னி விடுவார்கள். இன்னொருத்தர் பழையது பிசைந்து போடுவார்கள். உன் குழந்தை என் குழந்தை என்ற பாகுபாடு இருந்தது இல்லை. பெரியம்மா, அத்தை, சித்தி என்று அழைப்பது எவ்வளவு இனிமையாய் இருந்தது? எங்கே போச்சு அந்த நாட்கள்? இப்போது ஒரு ஆள் வந்தால் கூட வீடு போறாது என்பது போல் நினைப்பானேன்?” பழைய நினைவுகளில் மூழ்கிப் போன மாலதியின குரல் தழுதழுத்தது.

“போதாதது வீடு இல்லை மாலதி! மனங்கள் குறுகிப் போய் விட்டன. அந்தக் காலத்தில் வீட்டில் நிறைய மனிதர்கள் இருந்தார்கள். அன்பு, நெருக்கம் எல்லாம் இருந்து வந்தது. ஒருத்தருக்காக மற்றவர்கள் விட்டுக் கொடுப்பார்கள். இப்போது வீட்டில் உயிர் இல்லாத சாமான்கள் பெருகிவிட்டன. அவற்றால் எப்படி அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்? வீடு எவ்வளவு சின்னதாக இருந்தாலும் எத்தனை பேர் வந்தாலும் போதுமானதாய் இருந்தது. சாப்பாடு முடிந்ததும் ஹாலிலேயே எல்லோருக்கும் பாய் போட்டு விடுவார்கள். எல்லோருடைய சாமான்களும் ஒரே அறையில் வைத்துக் கொள்வார்கள்.

இப்போது அப்படி இல்லையே? ஒவ்வொரு அறையிலும் கட்டில் பீரோக்கள், டிராயிங் ரூமில் சோப்பாக்கள், டைனிங் ரூமில் உணவு மேஜை நாற்காலிகள், பிரிஜ், எந்த பொருளாவது இடத்தை விட்டு நகருமா? பின்னே புதிதாக வருபவர்களுக்கு இடம் எங்கிருந்து வரும்? எல்லோருக்கும் வசதிகள் பழகிப் போய் விட்டன. சுயநலம் பெருகி ஒத்துப் போகும் சுபாவம் குறைந்து விட்டது. குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் மட்டும்தான் என்ற போக்கு வந்துவிட்டது. உயிரில்லாத கம்ப்யூட்டர்தான் உலகம், அதுதான் சந்தோஷம் என்பது போல் வாழ்ந்து வருகிறார்கள் இந்தத் தலைமுறையின் இளசுகள்.” பெருமூச்சு விட்டுக் கொண்டாள் சுமித்ரா. சிறுவயது நிகழ்வுகளைப் பற்றி ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

******

தினமும் இரவில் ஒரு மணி வரையில் படித்துவிட்டு, பிறகு நெட்டில் சாட்டிங் செய்யும் தீபா அன்று ஏனோ கோபம் கொண்டு விட்டவள் போல் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு பத்து மணிக்கெல்லாம் தூங்கப் போய்விட்டாள். சாப்பிடும் போது மாலதி கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாலும் தீபா உரையாடலில் பங்கு பெறவில்லை. ஜோக் சொன்ன போது வேண்டா வெறுப்புடன் சிரித்துவிட்டு, பட்டும் படாமலும் இருந்துவிட்டாள். மகளின் நடவடிக்கைக் கண்டு சுமித்ராவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தாலும் ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசிவிட்டால், நாத்தனாரின் முன்னால் மானம் கப்பலேறி விடும் என்று மௌனமாக சகித்துக் கொண்டாள். ஓரிருமுறை கண்களை உருட்டி தன் கோபத்தைக் காட்டிக் கொள்ள முயன்றாள். தீபா அதைப் பார்த்தும் பார்க்காதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டாள். மகன் ராகுல் மட்டும் “அத்தை.. அத்தை” என்று வாய் நிறைய கூப்பிட்ட படி அமெரிக்கா விசேஷங்களை தூண்டித் துருவி கேட்டுக் கொண்டிருந்தான்.

அன்று மாலதி, சுமித்ரா ஷாப்பிங் போய்விட்டு இருட்டிய பிறகு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். தீபாவின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வாங்கிய பொருட்களை உள்ளே வைத்துவிட்டு வருவதற்காக மாலதி உள்ளே சென்றாள். அறையில் தீபா இருக்கவில்லை. கம்ப்யூட்டர் ஆன் செய்யப்பட்டு இருந்தது. பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம். கம்ப்யூட்டர் திரையில் ஏதோ எழுத்துக்கள்! யாருடனோ சாட்டிங் செய்து கொண்டே பாதியில் பாத்ரூமுக்குப் போய் விட்டாள் போலும் என்று நினைத்துக் கொண்டே யதேச்சையாக ஸ்க்ரீன் பக்கம் பார்த்தாள்.

“சாரி ராகுல். நேற்று முழுவதும் உன்னுடன் பேச முடியவில்லை. எனக்குத் தெரியும் நீ எனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிக் கொண்டு இருந்திருப்பாய் என்று.

என்ன செய்யட்டும்? எங்க வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்து என் அறையில் திண்ணகமாக உடகார்ந்து விட்டாள். என்னைப் பொறுத்தவரையில் அந்த கெஸ்ட் ஒரு பேய்! கொஞ்சம்கூட பிரைவசி இல்லாமல் போய் விட்டது. இப்போதுதான் வந்தேன். உனக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நீ கிடைக்கவில்லை. சீக்கிரம் பதில் கொடு. உனக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். திரும்பவும் அந்த பேய் வந்து விட்டால் நாம் சாட் செய்ய முடியாது.”

ஆங்கிலத்தில் இருந்த உரையாடலைப் படித்த மாலதி திகைத்துப் போனாள்.  இப்போதைக்கு தாம் வரமாட்டோம் என்று நினைத்தாள் போலும். ராகுலிடமிருந்து பதில் வரும் முன் பாத்ரூமுக்குச் சென்றுவிட்டாள்.

மாலதி திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த போதே எப்போது வந்தாளோ தெரியாது, தன்னுடைய மெயிலை மாலதி படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு பெரிய குரலில் “ஆண்ட்டீ!” என்று கத்திவிட்டு உடனே கம்ப்யூட்டரை அணைத்துவிட்டாள். “ஆண்ட்டீ! வாட் தி ஹெல் ஆர் யூ டூயிங்? இன்னொருத்தரின் மெயிலை படிக்கிறீங்களா? ரியல்லி யூ ஆர்…” ஆவேசத்தில் முகம் சிவந்து விட்டது. வார்த்தைகள் தடுமாறின. “உங்களுக்கு கொஞ்சம்கூட மேனர்ஸ் இல்லை.” அருவருத்துக் கொள்வது போல் சொன்னாள்.

அந்தக் கோபத்திற்கும், அவள் சொன்ன வார்த்தைகளுக்கும் மாலதி திக்பிரமை அடைந்து விட்டாள். “சும்மாதான் பார்த்தேன். இப்பொழுதுதான் வந்தேன்.”  விளக்கம் சொல்லுவது போல் முணுமுணுத்தாள்.

“சும்மாத்தான் பார்த்தீங்களா? பொய் சொல்லாதீங்க. நீங்க படித்தது எனக்கு தெரியும்” தீவிரமான குரலில் சொன்னாள்.

மாலதி சுதாரித்துக் கொண்டு “எதற்காக அவ்வளவு கோபம்? சாமான்கள் வைப்போம் என்று அறைக்குள் வந்த போது கம்ப்யூட்டர் ஆன் செய்திருப்பதைப் பார்த்து சும்மா பார்த்தேன், அவ்வளவுதான்” மேலும் ஏதோ சொல்லப் போகும் போது சத்தம் கேட்டு சுமித்ரா அறைக்குள் வந்தாள்.

“என்ன நடந்தது? எதற்காக இந்த கூச்சல்?” மகளைக் கோபமாக பார்த்துக் கொண்டே கேட்டாள். தீபா கடுத்த முகத்துடன் அத்தையின் பக்கம் பார்த்தாள்.

“ஒன்றும் இல்லை அண்ணி. அவள் எழுதிய மெயிலை நான் படித்து விட்டேன் என்று கோபம். நான் உள்ளே வரும் போது அவள் பாத்ரூமில் இருந்தாள் ஸ்க்ரீன் மீது எழுத்துக்கள் தென்பட்டதும் சும்மா பார்த்தேன். அதற்கு அவள் ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் குதிக்கிறாள்.” நடந்ததை அவமானமாக எடுத்துக் கொள்ளாமல் சின்னப் பெண்ணுடன் தனக்கு போட்டி என்ன என்பது போல் நகைச்சுவையுடன் சொன்னாள்.

சுமித்ரா மகளை புத்தி இல்லையா என்பது போல் பார்த்தாள். “பார்த்தால் என்னவாம்? அறைக்கு வந்தவர்கள் கண்களை மூடிக் கொண்டு இருப்பார்களா? வரவர உன் வாய்க்கு ஒரு எல்லை இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. பெரியவர்கள் சின்னவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் சத்தம் போடுவதாவது?”

“அறைக்குள் வந்தது பரவாயில்லை. இன்னொருத்தரின் மெயிலை பார்ப்பானேன்?” ரோஷத்துடன் கேட்டாள்.

“அது இல்லை அண்ணி. அவளுடைய வருத்தம். நான் அவளுடைய அறையை ஆக்கிரமித்துக் கொண்ட பேய் என்று தன்னுடைய பாய்பிரண்டிடம் சொல்லி இருக்கிறாள். அதை நான் பார்த்துவிட்டேன் என்ற கோபம் அவளுக்கு.” சிரித்தாள் மாலதி.

“பார்த்தீங்களா. சும்மா பார்த்தேன் என்று சொன்னது பொய். கடிதத்தைப் படித்திருக்கீங்க.மேலும் அமெரிக்காவில் இருக்கீங்க.” துச்சமாய் பார்த்துக் கொண்டே சொன்னாள் தீபா. மாலதியின் முகம் கறுத்து விட்டது.

“ஏன்? என்னவாச்சு?” அப்போதுதான் ஆபீசிலிருந்து வந்த ஹரிகிருஷ்ணா உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

“உங்க செல்ல மகளின் விவகாரம் நாளுக்கு நாள் முற்றிக் கொண்டு வருகிறது. வாயை கொஞ்சம் அடக்கச் சொல்லுங்கள். பெரியவர் சின்னவர் என்று இல்லாமல் உங்க தங்கையை வாய்க்கு வந்தபடி பேசுகிறாள். உங்களைத்தான் சொல்லணும். கம்ப்யூட்டர், இன்டர்நெட் என்று என்று எல்லா வசதிகளையும் பண்ணிக் கொடுத்து குழந்தைகளைக் கெடுத்து வைத்திருகீங்க.” அஸ்திரத்தை கணவன் மீது திருப்பிவிட்டாள்.

“என்னதான் நடந்தது?” பொறுமையின்றி கேட்டார். சுமித்ரா நடந்ததைச் சொன்னாள். நான்கு வருடங்கள் கழித்து வீட்டுக்கு விருந்தாளியாய் வந்த தங்கையிடம் மகள் அவ்வளவு திமிராக பேசிவிட்டாள் என்று தெரிந்ததும் ஹரிகிருஷ்ணாவின் முகம் ஜிவுஜிவு என்று சிவந்து விட்டது. மகளைத் தீவிரமாய் பார்த்தார்.

“அவளுடைய மேனர்ஸ் இருக்கட்டும். வீட்டுக்கு வந்த உறவினரை, வயதில் உன்னைவிட பெரியவளிடம் அவமானமாய் பேசிய உன் மேனர்ஸ் என்ன? முதலில் அத்தையிடம் மன்னிப்பு கேள்.” கடுமையாய் சொன்னார்.

தந்தையின் முகத்தில் அவ்வளவு கோபம் என்றுமே பார்த்திராத தீபா மிரண்டு போய் விட்டாள். இருந்தாலும் பிடிவாதமாய் “முதலில் அவங்களை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள் என்னுடயை கடிதத்தைப் படித்ததற்கு” என்றாள்

மகளை மேலும் கோபமாய் பார்த்துவிட்டு “நீ முதலில் மன்னிப்பு கேள்” ஆள்காட்டி விரலை உயர்த்திக் கொண்டே சொன்னார் ஹரிகிருஷ்ணா. “அவள் என்ன செய்தாலும் அதை குறை சொல்லும் உரிமை உனக்கு இல்லை. அவளிடம் இந்த மாதிரி பேசுவது முறையும் இல்லை. அவள் என்னுடைய தங்கை. இந்த வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளி. இன்னும் இரண்டு நிமிடங்களில் நீ அவளிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்த கம்ப்யூட்டரை தூக்கி போட்டு விடுவேன். சொன்னபடி செய்தும் காட்டுவேன்” என்றார் குரலை உயர்த்தி.

“விடுங்கள் அண்ணா! சின்னப பெண்! ஏதோ தெரியாமல்..” என்று மாலதி சமாதானப்படுத்த முயன்றாள்.

“நீ சும்மா இரு மாலதி. சமீபகாலமாய் அவளுக்குக் வாய்த் துடுக்குத்தனம்  அதிகமாகி விட்டது. என்ன செய்தாலும் அப்பா கண்டுகொள்ள மாட்டார் என்று மேலும் துளிர் விட்டுப் போய் விட்டது.. என்னைக் கேட்டால் இப்படிப் பட்டவர்களுக்கு நாலு அடி கொடுத்தால் தான் புத்தி வரும்.” சுமித்ராவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை.

“ஊம். அத்தைக்கு சாரி சொல்லு. இன்று முதல் நீ ஹாலில் படுத்துக் கொள் அத்தை இங்கே இருக்கும் வரையில்..”

தந்தையின் முகத்தில் அவ்வளவு கோபம் என்றுமே பார்த்திராத தீபாவின் கண்களில் நீர் சுழன்றது. “ஆமாம். நான் சொன்னதுதான் உங்களுக்கு தவறு என்று தோன்றுகிறது. அவங்க செய்தது மட்டும்..”

“முதலில் மன்னிப்புக் கேள்.” கர்ஜித்தார் ஹரிகிருஷ்ணா. தீபாவின் முகம் கறுத்து விட்டது. தரையை பார்த்தபடி “சாரி” என்று மாலதியைப் பார்த்து சொல்லிவிட்டு செருப்பு போட்டுக் கொண்டு வேகமாய் வீட்டை விட்டு  வெளியேறிவிட்டாள்.

“எதுக்கு வந்த ரகளை அண்ணா? இந்தக் காலத்து குழந்தைகள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள். பெற்றோர்கள் சொன்ன பேச்சை கேட்பதில்லை. அமெரிக்காவில் தான் அப்படி என்று நினைத்தால் இங்கேயும் அப்படி மாறிக் கொண்டு வருகிறார்கள். குரலை உயர்த்தி எதுவும் சொல்ல பயம், ஏதாவது செய்து கொண்டு விடுவார்களோ என்று. இந்த இருட்டில் பெண்பிள்ளை வெளியே போய்விட்டாள்.” நொந்துகொண்டாள் மாலதி.

“ஒன்றும் ஆகாது. பெண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளைப் போல் இருக்கிறார்களா இந்தக் காலத்தில்? ஏதோ இருப்பது ஒன்றோ இரண்டோ. ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் ப்ரோபஷனல் கோர்சுகளில் சேர்த்துவிட்டு, பொருளாதார ரீதியாய் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று எல்லா வசதிகளையும் செய்துக் கொடுத்தால் ரொம்பவும் துள்ளுகிறார்கள். பெரியவர்கள் என்ற மரியாதையை கூட மறந்து விட்டால் எப்படி? அவளே திரும்பி வருவாள் கோபம் குறைந்ததும்.” ஹரிகிருஷ்ணா உள்ளே போய்விட்டார்.

“சாரி அண்ணி. என்னால்தான் இந்த ரகளை நடந்து விட்டது. ஏதோ பேய் என்று எழுதி இருந்ததைப் பார்த்து சிரித்துக் கொண்டேனே தவிர இவ்வளவு ரகளை செய்வாள் என்று நினைக்கவில்லை.”

“மாலதி! இன்டர்நெட் என்று வந்த பிறகு நல்லது நடக்கும் என்று நினைத்தால் கெடுதலும் சேர்ந்து கொண்டு விட்டது. படிப்பு ஒரு பக்கம் என்றால் இன்டர்நெட் பழக்கத்திற்கு அடிமை இன்னொரு பக்கம்.”

ஒரு மணி நேரம் கழித்து எங்கேயோ சுற்றிவிட்டு அழுது வடியும் முகத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்த தீபாவிடம் யாரும் பேச்சுக் கொடுக்கவில்லை.சாப்பிட வரச் சொல்லி அழைத்த போது வராமல் அறையிலேயே இருந்து கொண்டாள். பத்து மணி ஆனதும் தலையணையைக் கொண்டு வந்து ஹால் சோபாவில் படுத்துக் கொண்டாள். மாலதி தடுத்த போதும் காதில் வாங்கவில்லை.

****

இது நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. தீபா கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்துவிட்டு எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்கா சென்று கொண்டிருந்தாள்.

“அத்தை ஏர்போர்ட்டுக்கு வருவாள். அவள் வரும் வரையில் அங்கேயே இரு. பதற்றம் அடையாதே. எல்லாம் அவளே பார்த்துக் கொள்வதாய் சொல்லி இருக்கிறாள்.” ஹரிகிருஷ்ணா தனியாய் மேல்நாடு சென்று கொண்டிருக்கும் மகளுக்கு தைரியம் சொன்னார். பாரமான இதயத்துடன் மகளுக்கு விடை கொடுத்தார்கள் சுமித்ராவும், ஹரிகிருஷ்ணாவும்.

விமானத்தின் ஏறிய பிறகு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் தீபா.. அமெரிக்கா பயணம் இருக்குமோ இருக்காதோ என்று ரொம்ப கவலைப் பட்டாள். எயிட்(AID) கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதாம். அவ்வளவு தூரம் போய் அவஸ்தைப் படுவானேன். இங்கேயே நல்ல வேலை கிடைக்கிறது. அமெரிக்கா போய் படிக்கவில்லை என்றால் ஒன்றும் குடி மூழ்கிப் போகாது என்று ஹரிகிருஷ்ணா முதலில் மறுத்துவிட்டார். தீபா கம்ப்யூட்டர் சயின்சில் சேரும் போது நல்ல டிமாண்ட் இருந்தது. அவள் படிப்பு முடியும் போது நிலைமை மாறிவிட்டிருந்தது. செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்குப் பிறகு எத்தனையோ பேர் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுக்கு வேலை போய்விட்டதுடன், யூனிவர்ஸ்டியில் எயிட் கிடைப்பது சிரமம் ஆகிவிட்டது. இந்த நிலையில் ஹரிகிருஷ்ணா மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். முதல் செமெஸ்டர் பீசு, விமானப் பயண டிக்கெட், மற்ற செலவுகளுக்கு மூன்று லட்சம் வரையில் கொடுக்க முடியும். பின்னால் எயிட் கிடைக்கவில்லை என்றால்?

“பரவாயில்லை. எப்படியாவது மேனேஜ் செய்து கொள்கிறேன். அங்கே இருக்கும் என் சீனியர்களிடம் பேசிவிட்டேன். நிச்சயம் உதவி கிடைக்கும் என்றார்கள். இல்லாவிட்டாலும் அங்கே போன பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்.” தீபா கெஞ்சினாள்.

தன்னுடைய அமெரிக்கா கனவு பலிக்காமல் போய்விடுமோ என்ற கவலை அவளுக்கு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாலதி “கவலைப்படவேண்டாம். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அவளுக்கு எயிட் கிடைக்காத பட்சத்தில் நான் செலவு செய்கிறேன். பின்னால் கொடுத்தால் போதும். தீபாவை அனுப்புங்கள்” என்று தைரியம் சொன்னாள். இரண்டு மூன்று யூனிவர்சிடீயில் சீட் கிடைத்தாலும் தனக்கு அருகாமையில் இருக்கும் அரிஜோனா யூனிவர்சிடீயில் சேரச் சொல்லி அறிவுரை வழங்கினாள். விடுமுறையில் வந்து போக வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில். பத்து நாட்களுக்கு முன்னாலேயே அனுப்பி வைத்தால் சுற்றுச் சூழல் பழகும் என்று சொன்னதால் கல்லூரி திறப்பதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே கிளம்பினாள் தீபா.

“பார்த்தாயா அத்தையின் பெருந்தன்மையை! பழைய விஷயங்களை நினைக்காமல் உனக்கு உதவி செய்வதற்கு தானாகவே முன் வந்திருக்கிறாள். யாருடன் எப்போ தேவை ஏற்படுமோ தெரியாது. மனிதப் பிறவி எடுத்த பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி தேவைப் படாமல் இருக்காது.” சுமித்ரா மகளின் காதில் முணுமுணுத்தாள். தீபாவின் முகம் கொஞ்சம் சுருங்கி விட்டது. இந்த நான்கு வருடங்களில் தீபா மனரீதியாக கொஞ்சம் பக்குவம் அடைந்திருந்தாலும் இருந்தாலும், இன்னும் கொஞ்சம் பணிவும், பண்பும் வரவேண்டும் என்பது சுமித்ராவின் கருத்து.

“வேலை கிடைத்ததுமே அத்தையின் கடனை முதலில் தீர்த்து விடுகிறேன், ஒருக்கால் எனக்கு எயிட் கிடைக்க வில்லை என்றால்.” இறுமாப்புடன் சொன்னாள் தீபா.

“அதுசரி. வேலை விஷயம் இருக்கட்டும். முதலில் இரண்டு வருடங்கள் படிக்க வேண்டியிருக்கும். அதை மறந்து விடாதே. அந்தக் கடனை தீர்க்க வேண்டும் என்றால் மூன்று நான்கு வருடங்களாவது ஆகும். அதுவரையில் தன்னுடயை பணம் முடங்கிப் போகும் என்று தெரிந்து இருந்தாலும் அத்தை ஏன் உதவி செய்ய முன் வருகிறாள்? அண்ணன் மகள் என்பதால். அதை முதலில் புரிந்துகொள்.” சுமித்ரா மெல்லிய குரலில் கடிந்து கொண்டாள்.

*******

“ஹலோ தீபா. வெல்கம் டு  யு.எஸ்.” மாலதி விமான நிலையத்திற்கு வந்து அண்ணன் மகளை வரவேற்றபடி அணைத்துக் கொண்டாள்.

“ஹாய் ஆண்ட்டீ!” இந்த முறை தீபா மனப்பூர்வமாக சொன்னாள்.

“ஹாய்.. ஐ ஆம் ஹரிதா. என்னை அடையாளம் தெரியவில்லையா?” பின்னால் இருந்து தோளில் கையைப் பதித்தாள் ஹரிதா.

“ஹரிதா! அதாவது உங்க மகள்தானே அத்தை? பத்து வயதில் பார்த்திருக்கிறேன். போன முறை உங்களுடன் இந்தியாவுக்கு வரவில்லை இல்லையா? ரொம்ப உயரமாகி விட்டாள்” என்றாள் மலர்ந்த முகத்துடன். தன் வயதை ஒற்றை பெண் துணை இருக்கிறாள் என்று சந்தோஷமாக இருந்தது.

அமெரிக்காவில் வேகமாக பயணிக்கும் கார்களை, நான்கு வழிப் பாதையை தீபா வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஹரிதா காரில் வரும் போது கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாள். பழகிய கொஞ்ச நேரத்திலேயே ஹரிதா நட்புணர்வு கொண்டவள் என்றும்,. கலகலப்பாக பேசுபவள் என்றும் புரிந்து விட்டது.

வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் மாலதி மகளை அழைத்து “ஹரிதா! தீபாவின் சூட்கேஸ்களை உன் அறையில் வைத்துவிடு. தீபா! நீங்க இரண்டு பேரும் ஒரே அறையை ஷேர் பண்ணிக்கொள்ள வேண்டியிருக்கும்” என்றாள்.

தீபா சங்கடத்துடன் ஹரிதாவின் பக்கம் பார்த்தாள். “ஹரிதாவுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கக் கூடும். அவளுக்கு இடைஞ்சல்..”

“நாட் எட் ஆல். எனக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. வா.” பெரிய பெரிய சூட்கேசுகளை தரதரவென்று இழுத்துக் கொண்டு அறைக்குள் போனாள் ஹரிதா. பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு தீபா பின்னால் நடந்தாள்.

“இடைஞ்சல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரண்டு பேரும் அட்ஜெஸ்ட் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான். இந்த வீட்டில் இருப்பது மூன்று அறைகள்தான். விக்கிக்கு ஒரு அறை. எங்களுக்கு ஒரு அறை” என்று மாலதி அவளுக்கு வார்ட ரோப் இருக்கும் இடத்தைக் காட்டிவிட்டு “உன் சாமான்களை இதில் வைத்துக் கொள். குளித்துவிட்டு வந்தாய் என்றால் சாப்பிடுவிடலாம்” என்றாள் மாலதி.

ஹரிதாவின் அறை பெரியதாகவே இருந்தது. அட்டாச்ட் பாத்ரூம் வசதிகள் கொண்ட நவீன பங்களா டைப் வீடு அது. இந்தியாவிலேயே எல்லா வசதிகளும் இருக்கும் போது அமெரிக்காவில் இருப்பதில் வியப்பு என்ன  என்று நினைத்துக் கொண்டாள் தீபா.

தீபா பெட்டிகளை திறந்து தந்தை வாங்கிய பரிசுப் பொருட்களை, தாய் தயாரித்த இனிப்பு வகைகளை, ஊறுகாய் பாட்டில்களை எடுத்துக் கொடுத்தாள்.

ஹரிதா பேசிக்கொண்டே தீபாவின் உடைகளை அலமாரியில் அடுக்கி வைத்து விட்டு காலி சூட்கேசுகளை அதற்கான இடத்தில் வைத்துவிட்டாள்.புத்திசாலித்தனத்துடன் ஸ்மார்ட் ஆக இருக்கும் ஹரிதாவை வியப்புடன் பார்த்தாள் தீபா.

இருந்த பத்து நாட்களில் ஹரிதா தீபாவை அழைத்துக் கொண்டு ஊரில் இருக்கும் ஷாப்பிங் மால்கள், கடைகள் எல்லா இடங்களுக்கும் சுற்றி காட்டினாள். மாலதி ஒருநாள் தீபாவை அழைத்துக் கொண்டு யுனிவர்சிட்டிக்கு போய் பேப்பர்களை சப்மிட் செய்ய வைத்து, கட்ட வேண்டிய பணத்தை கட்டி எல்லா வேலைகளையும் முடித்தாள். இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சீனியர் மாணவிகளிடம் தீபா தங்குவதற்கு அபார்ட்மெண்ட் பற்றி விசாரித்தாள். ஏற்கனவே இந்தியாவிலிருந்து வந்த இரண்டு மாணவிகள் சீனியர்களுடன் சேர்ந்து இருப்பதைத் தெரிந்து கொண்டு அவர்களுடன் பேசி தீபாவும் அவர்களுடன் சேர்ந்து இருப்பதற்கு ஏற்பாடு செய்தாள். தீபாவும் இன்னொரு பெண்ணும் ஒரு அறையை பகிர்ந்துக் கொள்ள வேண்டும். காமன் டிராயிங் ரூம், கிச்சன், இரண்டு பாத்ரூம்கள் கொண்ட பிளாட் அது. நான்கு பேரும் சேர்ந்து சமையல் மற்ற, வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். பிரிஜ், குக்கிங்ரேஞ்ச் அபார்ட்மென்ட்லேயே இருக்கும். பேஸ்மென்டில்வாஷிங் மிஷன்கள் இருக்கும். அவரவர்களுக்கு வேண்டிய போது போய் தோய்த்துக் கொள்ளலாம். எல்லா விவரங்களையும் சேகரித்துக் கொண்டு தீபாவுக்குத் தெரிவித்தாள் மாலதி. இந்தியாவிலிருந்து வந்த மாணவிகளுடன் சேர்ந்து இருக்கப் போகிறோம் என்றதுமே தீபாவுக்கு பாதி கவலை தீர்ந்து விட்டது. அண்ணன் மகளைக் கொண்டு வங்கியில் கணக்கு திறக்கச் செய்து செலவுகளுக்கு டாலர்கள் போட்டுகையில் செக் புக் கொடுத்தாள். இதையெல்லாம் பார்த்த தீபா ‘அத்தை மட்டும் இல்லை என்றால் எவ்வளவு கஷ்டப்பட்டுப் போயிருப்போம்’ என்று நினைக்காத நேரம் இல்லை.

யூனிவர்சிட்டி திறந்த பிறகு திரும்பவும் காரில் சாமான்களுடன் அழைத்து வந்து அபார்ட்மெண்டில் கொண்டு விட்டு, சீனியர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தகுந்த அறிவுரைகளை வழங்கிவிட்டுப் போனாள் மாலதி. தீபா கூச்சப்பட்டுக் கொண்டே அத்தைக்கு நன்றியைச் சொன்னாள்.

“டோன்ட் பி சில்லி. அண்ணன் மகளுக்கு இந்த அளவுக்குக் கூட செய்ய மாட்டேனா என்ன?” என்றாள் மாலதி அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது போல்.

புதிய சூழ்நிலை, புதிய இடம், வேற்று மொழி, புது முகங்கள், மாறுப்பட்ட கலாச்சாரம் இவற்றுக்கு நடுவில் மாலதி செய்த உதவி குறைவானது ஒன்றும் இல்லை. சீனியர் மாணவிகளும் அவளுடைய கூச்சத்தை போக்கி படிக்க வேண்டிய முறைகளை, நூலகத்திலிருந்து புத்தகங்கள் பெறுவது, வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது எல்லாம் சொல்லிக் கொடுத்து, அவளையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டார்கள்.

தீபா கொஞ்சம் செட்டில் ஆகும் வரையில் மாலதி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போன் செய்து குசலம் விசாரித்தாள். ஒரு மாதம் போவதற்குள் தீபா படிப்பில் ஆழ்ந்துவிட்டாள். இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் லீவு கிடைத்தால் அத்தையின் வீட்டுக்குப் போய் வந்தாள்.

****

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு தீபா போயிருந்த போது அங்கே மார்கரெட் என்ற பெண், ஹரிதாவின் சிநேகிதி இருந்தாள். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வந்திருப்பதாய் மார்கரெட்டை அறிமுகப் படுத்தி வைத்தாள் ஹரிதா.

அந்த விடுமுறையில் மூன்று பேரும் சேர்ந்து ஹரிதாவின் காரில் ஊர் சுற்றினார்கள். பிக்னிக்குகள், ஹோட்டல்கள், சுற்றுப் பயணங்கள் என்று நிறைய இடங்களுக்கு போய் வந்தார்கள். மார்கரெட் நல்ல உயரம். எடுப்பான மூக்கு, நீல நிற விழிகள். அழகான அந்த முகத்தில், எவ்வளவுதான் சிரித்தபடி வளைய வந்தாலும், அந்த கண்களில் நிழலாடும் வேதனையின் சாயல்கள் யாருடைய பார்வையிலிருந்தும் தப்பாது.

“அத்தை! மார்கரெட் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இங்கே வந்திருக்கிறாள். பெற்றோரிடம் போக வில்லையா? அவளுக்கு யாருமே இல்லையா?” ஆர்வம் தாங்க முடியாமல் தீபா மாலதியிடம் கேட்டுவிட்டாள்.

சமையல் அறையில் தோசை வார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. “இல்லாமல் என்ன? எல்லோரும் இருக்கிறார்கள். தாய் தந்தை இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு மறுமணம் செய்து கொண்டு விட்டார்கள். தாயிடம் மாற்றான் தந்தை, தந்தையிடம் மாற்றான் தாய்! வயசுக்கு வந்த பெண். புதிய இடத்தில் புதிய சூழ்நிலையில் அவளால் ஒன்ற முடியவில்லை. சின்ன வயதாக இருந்தால் எப்படியாவது அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு இருப்பாளாய் இருக்கும். எல்லோரும் இருந்தாலும் தனியள் ஆகிவிட்டாள். புவர் கர்ல்! மேகி என்றால் எங்கள் எல்லோருக்கும் பிரியம். ரொம்ப நல்ல பெண். லீவு விட்டால் ஹரிதாவுடன் நம் வீட்டிலேயே கழிப்பாள்” என்றாள் மாலதி.

‘தீபா! இங்கே இருப்பவர்களுக்கும் நம் மக்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கவனித்தாயா? எவ்வளவு கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் பெற்றோர்கள் குழந்தைகளை மனதில் கொண்டு அவர்களுக்காக எத்தனையோ விட்டுக் கொடுப்பார்கள். இங்கே அவரவர்களின் சுகம் அவரவர்களுக்கு. இன்னொருதருக்காக வாழ்கையில் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள், நம் மக்களைப் போல்.”

தீபா யோசனையில் ஆழ்ந்தாள். உண்மைதான். ஆனால் எந்த முறையில் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கிறது?  எந்த வாழ்க்கை முறை நல்லது என்ற குழப்பம் வந்தது.

கிறிஸ்துமஸ் அன்று மேகியுடன் தீபா, ஹரிதா சர்ச்சுக்கு போய் வந்தார்கள். மாலதி எல்லோருக்கும் சின்னச் சின்ன பரிசுகளை வாங்கிக் கொடுத்தாள். மேகியின் விழிகளில் நீர் சுழன்றது. “தாங்க்ஸ் ஆண்ட்டீ!” என்று மாலதியை அணைத்துக் கொண்டாள். மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். மார்கரெட் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டாள்.

“உண்மையிலேயே ஹரிதாவின் நட்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்தான். உங்கள் இருவரையும் பார்க்கும் போது எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. உங்கள் குடும்பத்தை சந்தித்து இருக்கவில்லை என்றால் எனக்கு உறவுகளின் மதிப்பு, அவர்களுடைய அன்பு, பாசப் பிணைப்பு எப்படி இருக்கும் என்று தெரிய வாய்ப்பு இல்லை. கசின்ஸ் என்ற வார்த்தைக்கு பொருள் தெரிந்திருக்காது. உண்மையிலேயே இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒருவரிடம் மற்றவர்  பிரியம், பாசம் வைத்திருப்பார்கள். அக்கா தங்கை, அண்ணன் தம்பி, கசின்ஸ், அங்கிள், தாத்தா, பாட்டி என்று உறவு முறையில் அழைத்துக் கொண்டு பரஸ்பரம் அன்பு செலுத்துவார்கள். உதவி செய்து கொள்வார்கள். மாலதி ஆண்ட்டீ அண்ணன் மகளுக்காக எத்தனை உதவி செய்கிறாள்? அப்பா அம்மா பெற்றுப் போட்டு விட்டு உங்கள் பாடு உங்களுடையது என்று விட்டு விடாமல் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, கல்யாணம் செய்து வைத்து, பிள்ளைப்பேறு செய்து, பேரன் பேத்தியுடன் விளையாடிக் கொண்டு, அவர்களுடைய விளையாட்டுகளை, மழலை மொழியை ரசித்துக் கொண்டு, ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வந்து போய்க் கொண்டு… எத்தனை உயர்வான பந்தங்கள் உங்களுடையவை! எங்கள் பெற்றோர்கள் சிறகுகள் முளைத்ததும் தாய் பறவை குஞ்சுகளை கூட்டிலிருந்து தள்ளிவிடுவது போல் நாங்கள் கொஞ்சம் வளர்ந்ததுமே எங்களைப் பற்றி லட்சியம் செய்வதை விட்டு விடுவார்கள். நாங்கள் படித்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். படிக்க வில்லை என்றாலும் கவலைப்பட மாட்டார்கள். யாருடன் சுற்றினாலும் லட்சியம் இல்லை. யாரைக் கல்யாணம் செய்து கொண்டாலும் எங்களுடைய விருப்பத்திற்கு விட்டு விடுவார்கள். எதிலேயும் தலையிட மாட்டார்கள். குடித்தனம் செய்தாலும், குழந்தையை பெற்றுக் கொண்டாலும் நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். குழந்தையை வளர்ப்பதிலும் எங்களுக்கு யாருடைய உதவியும் கிடைக்காது. ஹரிதா! உண்மையிலேயே கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் அடுத்த பிறவியில் என்னை இந்தியாவில் பிறக்கும்படியாய் செய் என்று வேண்டிக் கொள்வேன்.” உணர்ச்சி வசபட்டதில் அவள் குரல் கம்மி விட்டது.

“மேகி! பண்டிகை நாள் அதுவுமா கண் கலங்கலாமா? உனக்கு யாருமே இல்லை என்று ஏன் நினைக்கிறாய்? நான் இருக்கிறேன்” என்று ஹரிதா மேகியை அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

“எனக்குத் தெரியும். நீ எனக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு என்று. நீ மட்டும் இல்லை என்றால் என்னவாகி இருப்பேனோ?” என்றாள் மேகி.

“ஒன்று கேட்டால் தவறாக நினைக்க மாட்டாயே மேகி? உங்கள் குடும்பங்களில் இதுபோல் உறவினர்களை சந்திப்பது இருக்காதா? உறவினர் வீட்டுக்குப் போக மாட்டீர்களா? பிரதர், சிஸ்டர் அங்கிள், ஆண்ட்டீ என்று எல்லோரும் ஒன்று சேர மாட்டீர்களா? சும்மா தெரிந்து கொள்வோம் என்றுதான் கேட்கிறேன்” என்றாள் தீபா.

“எங்களுக்கு குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் மட்டும்தான். மற்ற உறவுகளும் இருக்கும். ஆனால் இப்படி வந்து போவது இருக்காது. எங்களுடைய கம்யூனிகேஷன் எல்லாம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து மடல்களை அனுப்புவது, விஷ் பண்ணுவதுடன் சரி. யார் வீட்டுக்காவது போக வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி பெற்றுக் கொண்டு போக வேண்டும். அவர்கள் ஃப்ரீயாக இருக்கும் போது லஞ்ச், டின்னர் என்று அழைப்பார்கள். பெரும்பாலும் ஏதாவது ஹோட்டலுக்கு அழைத்துப் போவார்கள். உங்களைப் போல் யார் எப்போ வந்தாலும் எந்த இல்லத்தரசியும் சமைத்துப் போட மாட்டாள். பிறந்தநாள், மற்ற பண்டிகைகளுக்கு சின்னச் சின்ன பரிசுகளை ஒருவருக்கொருவர் அளித்துக் கொள்வோம். கல்யாணம் என்றால் சர்ச்சுக்குப் போய் கலந்துகொண்டு லஞ்ச் சாப்பிட்டு விட்டு வர வேண்டியதுதான்.” விளக்கமாக சொன்னாள் மார்கரெட்.

“உன்னுடைய பெற்றோர் விவாகரத்து பெற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று சொன்னாய். பின்னே உன்னுடைய பொறுப்பு யாருடையது? உன்னுடைய படிப்பு இன்னும் இருக்கிறது இல்லையா? விடுமுறை வந்தால் யாரிடம் போவாய்?” ஆர்வத்துடன் கேட்டாள் தீபா.

“மம்மி, டாடி டைவோர்ஸ் ஆன பிறகு எனக்கு என்று ஒரு வீடு இல்லை தீபா. விடுமுறை வந்தால் அம்மா வரச்சொல்லி அழைப்பாள். ஆனால் அங்கே போனால் புதிய சூழ்நிலை, புதிய பழக்கங்கள், புது அப்பா! ஒரு முறை போன போது எனக்கு சங்கடமாக, மூச்சுத் திணறுவது போல் இருந்தது. அம்மாவின் புதுக் கணவன் எனக்கு அப்பா எப்படி ஆக முடியும்? அதுவும் நான் இவ்வளவு பெரியவளாக வளர்ந்த பிறகு? அதான் எங்கேயும் போக மாட்டேன்.”

“பின்னே உன் படிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு?”

“டைவோர்ஸ் ஆன பிறகு என் பராமரிப்பு செலவு அப்பாவுடையது. மாதா மாதம் பணம் அனுப்புவார். நடுநடுவில் போன் செய்வார். இங்கே வந்தால் நேரில் சந்திப்பார். அவ்வளவுதான்.”

மார்கரெட் பேசியதைக் கேட்ட பிறகு அந்த நிலைமையை நினைத்துப் பார்க்கவும் பயமாக இருந்தது தீபாவுக்கு. எவ்வளவு இயலாமையான சூழ்நிலை! இந்த விஷயத்தில் உண்மையிலேயே தாம் கொடுத்து வைத்தவர்கள். எவ்வளவு நிம்மதியான வாழ்க்கை! தாய் தந்தை கண்ணின் இமையைப் போல் குழந்தைகளை காப்பார்கள். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து படிக்க வைப்பார்கள். நல்ல வரன் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பார்கள். பண்டிகை, விழா என்று வீட்டுக்கு அழைத்து தம்மால் முடிந்ததைக் கொடுபார்கள். சொத்து சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தவிப்பார்கள்.

இவர்களானால் இறகுகள் முளைத்ததுமே கூட்டிலிருந்து தள்ளி விடுவது போல் வெளியேற்றி விடுகிறார்கள். வேலை பார்ப்பாயோ, படிப்பாயோ, யாருடனாவது ஊரைச் சுற்றுவாயோ, யாரைக் கல்யாணம் செய்து கொள்வாயோ உன் விருப்பம் என்று பொருட்படுத்த மாட்டார்கள். அதுவே நம் நாடாக இருந்தால் குழந்தைகள் சரியான வழியில் திசை திருப்ப வேண்டும் என்று எவ்வளவு தவிப்பார்கள்? எந்த நாதியற்றவனையோ கல்யாணம் செய்து கொண்டுவிடக் கூடாது என்று எவ்வளவு கவலைப் படுவார்கள்?

தன் எண்ணங்களில் வந்த மாற்றத்தைக் கண்டு தீபாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்னால் வெளிநாட்டு கலாசாரத்தை நினைத்து எவ்வளவு சுதந்திரம் அவர்களுக்கு என்று வியந்திருக்கிறாள். நம் நாட்டில்தான் அங்கே போகாதே இதைச் செய்யாதே என்று விவரம் தெரிந்த பிறகும் கட்டுப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று அடிக்கடி அத்ருப்தி அடைந்திருக்கிறாள். அமெரிக்கா வந்த பிறகு யோசித்துப் பார்க்கும் போது நம் நாட்டு கட்டுப்பாடுகளே நல்லது என்ற எண்ணம் மேலோங்கியது.

இதைப்பற்றி அத்தையிடம் பிரஸ்தாபிக்காமல் அவளால் இருக்க முடியவில்லை.

“போகட்டும். இப்போதாவது நீ புரிந்து கொண்டாய், நம் நாட்டு சென்டிமென்டுகள் எவ்வளவு உயர்வானவை, நம் குடும்ப அமைப்பு எவ்வளவு பலமானது என்று. மனிதர்களுக்கு இடையே போக்கு வரத்து இருப்பது உறவுகளை மேம்படுத்தும். நெருக்கத்தை ஏற்படுத்தும். மனிதன் சென்டிமேன்டுகளுக்கு அடிமை. அது மட்டும் இல்லை என்றால் அவனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? ஏதாவது ஆபத்து வந்தால் உடனே கைகொடுக்க முன் வருவது நம் மக்கள்தான். சின்ன வயதில் தாய் தந்தை, பெரியவர்கள் ஆனபிறகு உடன் பிறந்தவர்கள், வயதான  காலத்தில் நம் குழந்தைகள். இப்படி ஒவ்வொரு கட்டத்திலேயும் நமக்கு ஒரு துணை, உதவிக்கு ஆள் இருக்கிறார்கள் என்ற உணர்வு எவ்வளவு ஆறுதலாய் இருக்கும் தெரியுமா?

முந்தைய காலத்தை விட இந்த காலத்தில் உறவினரின் போக்கு வரத்து, நெருக்கம் கொஞ்சம் குறைந்து விட்டது உண்மைதான். பொருளாதார சூழ்நிலை, நகரத்து நெருக்கடி, இடப் பற்றாக்குறை,, வேலைக்கு போகும் இல்லத்தரசிகள் எல்லாம்தான் இதற்குக் காரணம். அப்படியும் நாம் இந்த அளவுக்கு உறவுகளை விட்டுவிடாமல் கொண்டாடுகிறோம் என்றால் நம் இந்தியர்களுக்கு இருக்கும் பந்துப்ரீதி. நம் நாட்டில் குடும்ப அமைப்பு இன்னும் பலமாக இருக்கிறது என்றால் கணவன் மனைவி குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், சிக்கல்கள் உருவானாலும் திருமண பந்தத்தை மதித்து சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைப்பதால்தான்.

தீபா! பெற்றுவிட்டார்கள் என்பதால் தாய் தந்தை தங்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கித் தரணும் என்ற எண்ணம் இந்த காலத்து இளம் தலைமுறையினரிடம் வலுபெற்று வருகிறது. ஓரிரு குழந்தைகள் தான் என்பதால் அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்து நன்றாக படிக்க வைத்து, அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்ல பாதையை அமைத்துத் தருவோம் என்ற பெற்றோரின் அன்பை, தியாகத்தை புரிந்துகொள்ள வேண்டும். உரிமைகள் வேண்டும் என்றால் பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கஷ்டப்பட்டு உங்களை முன்னுக்குக் கொண்டு வந்த பெற்றோர்கள் முதியோர் இல்லங்களுக்கு இலக்காகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை உங்களுடையது. வெளிநாட்டில் இருப்பது போலவே இளம் தலைமுறையினரிடம் குடும்பம் என்றால் கணவன், மனைவி குழந்தைகள் மட்டும்தான் என்ற சுயநலம் பெருகிவிட்டது.

யாருமே எங்களுக்குத் தேவையில்லை என்று நினைத்தால் பந்தங்கள் நசிந்து போய் விடும். உறவுகள் பிளவுப் பட்டுவிடும். குடும்ப அமைப்பு சிதைந்து போய் விடும். சமுதாயத்தின் தோற்றமே மாறிப் போய்விடும்.

தீபா! இந்த நாட்டில் இளம் தலைமுறை வழித் தவறிப் போவதற்குக் காரணம் தாம் யாருக்கும் தேவையில்லை, என்ற பற்றற்றத்தன்மை! அன்பு செலுத்துபவர்கள் இல்லாமல் ஏற்படும் விரக்தி! இந்த நிலைமை நம் குழந்தைகளுக்கு வரக்கூடாது என்றால் மனிதர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை என்ற பாலம் இருக்க வேண்டும். கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் எல்லோரும் ஒருவேளையாவது சேர்ந்து உணவு அருந்த வேண்டும். நான் என் குழந்தைகளுக்கு முதலிலிருந்தே இதையெல்லாம் கற்றுக் கொடுத்தேன். அதனால்தான் அவர்கள் உறவினர் வந்தால் உயிருக்கும் மேலாய் பழகுவார்கள்.

மனிதப் பிறவி எடுத்த பிறகு கம்யூனிகேஷன் இருக்க வேண்டும். தனியாய் மூடிய அறையில் உட்கார்ந்துக் கொண்டு கம்யூட்டரில் சாட்டிங், ஈமெயில் அனுப்பிக் கொண்டு, இன்டர்நெட்டில் சர்பிங் செய்து கொண்டு, டி.வி. பார்த்துக் கொண்டு தனிமை வாழ்க்கைக்கு பழகிவிட்டது இந்த இளம் தலைமுறை. இது நல்ல வளர்ச்சி இல்லை. இதுவும் ஒரு வைரஸ் தான். எயிட்ஸ் எப்படி உடல் முழுவது பரவி அதன் செயல்பாடுகளை பாதிக்கிறதோ அதுபோல் இந்த தனிமை என்ற வைரஸ் மனிதனின் உணர்வுகளை நசிக்கச் செய்து விடுகிறது. கம்ப்யூட்டர் உன் தனிமையை தற்காலிகமாய் போக்குமே தவிர உன் வேதனையை, வருத்தங்களை, சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளாது. உனக்கு உதவி தேவையாய் இருக்கும்போது கைகொடுக்காது. “நான் உனக்குத் துணை இருப்பேன்” என்ற தைரியம் சொல்லும் நபர் நமக்கு வேண்டும். எனக்காக அக்கறை கொள்பவர்கள், வருத்தப் படுபவர்கள் இருக்கிறார்கள் என்ற ஆறுதல் தேவை. அது பெற்றோர், கணவன், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். குடும்ப அமைப்பை சிதைத்து விடும் இந்த வைரஸ்லிருந்து மக்களைக் காப்பாற்றி உறவுகளுக்கு திரும்பவும் உயிர் கொடுங்கள். குடும்ப அமைப்பை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் தலைமுறையிடம்தான் இருக்கிறது.”

மாலதி சொன்ன வார்த்தைகளை தீபா மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாள்.

“அத்தை! நீங்க சொன்ன வார்த்தைகளில் இருக்கும் உண்மை எனக்கு அமெரிக்கா வந்த பிறகு புரிந்து விட்டது. நீங்க மட்டும் இல்லை என்றால் நான் என்னாவாகி இருப்பேனோ என்றும் புரிந்தது.” அத்தையை இறுக்க அணைத்துக் கொண்டாள் தீபா.“

Series Navigationமலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்திண்ணையில் எழுத்துக்கள்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *