ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.

author
1
0 minutes, 7 seconds Read
This entry is part 26 of 34 in the series 28அக்டோபர் 2012

ஃபெர்யல் அலி கவ்ஹர்
முன்பொரு காலத்தில், அச்சம் நம் கண் இமைகளில் புண்களாக அழுத்தாதிருந்தபோது, இந்த சாலையில் சாக்கலேட் ஹீரோக்கள், சர்க்கரை பாகு ஹீரோயின்களிடம் காதலுக்காக இறைஞ்சி கொண்டிருந்தார்கள். ஸ்வாத்துக்கு போகும் சாலை மருங்கில் இருக்கும் கம்பீரமான பைன் மரங்களின் நடுவேயும், போப்லார் மரங்களின் நடங்கேயும் ஓடிப்பிடித்து, தங்களது அழியாத காதல்களை பாடல்களாக கூவிக்கொண்டிருந்தார்கள்.
காலப்போக்கில், சமவெளியின் கடுமையான வெயிலிடமிருந்து தப்ப முயன்ற ஏராளமான பயணிகளை இந்த சாலை தாங்கியிருந்திருக்கிறது. பள்ளத்தாக்கை ஆக்கிரமித்து வெற்றிகொள்ள விரும்பியவர்களது பயணத்தையும் அந்த மக்களை வெற்றிகொள்ள விரும்பியவர்களுடைய பயணத்தையும் பார்த்திருக்கிறது.

உயர்ந்த மலைகளுக்கு நடுவே இருக்கும் குறுகிய பாதைகளின் வழியே சென்று மழைக்காலத்தில் பௌத்த மடாலயங்களில் தங்கி தங்களது ஆன்மீக குருவான புத்தரின் தர்மத்துக்கு தங்களை மறு அர்ப்பணம் செய்து கொண்ட பௌத்த துறவிகளின் சமாதான செய்தியையும் பொறுத்தலையும் கொண்டதாக இந்த முறை இல்லை
இது நடந்தது 2000 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது இந்த பள்ளத்தாக்கு உத்தியானம் (தோட்டம்) என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டது.
1920இல், ஸர் ஆரெல் ஸ்டெய்ன் என்ற அறிஞர், ஆய்வாளர், அகழ்வாராய்ச்சியாளர், பயணி இந்த பேரழகு அரசாளும் ராஜ்யத்தை பற்றி எழுதினார். “பனியால் மூடப்பட்ட மலைஉச்சிகளில் உறைந்த ஏரிகளிலிருந்து துள்ளிக்குதித்து வரும் தூய ஆறுகளும், மீன்கள் துள்ளி விளையாடும் குளங்களும், செழிப்பான புல்தரைகளும், உலகத்து அனைத்து பூ வகைகளும் வந்துவிட்டனவோ என்று நினைக்க வைக்கும் எண்ணற்ற காட்டு மலர்களுமாக உத்தியானம் பூமியின் உண்மையான சுவர்க்க பூமி போலவே தோன்றியது. தூர தூர தேசங்களில் வசிப்பவர்களும் கருணையே வடிவான புத்தரின் மறைந்திருக்கும் இந்த பூத்தோட்டமென்னும் மாய உலகை பற்றி பேசினார்கள் என்பது ஆச்சரியமானதாக இல்லை. ”
இன்று அந்த சுவர்க்கபூமி, கட்டுப்பாடற்ற நகரமயமாததால் சிதறி புண்ணாக காட்சியளிக்கிறது. புராதன நரகங்களின் சிதிலங்கள் இன்னும் ஆராயப்படாமல், அதன் வரலாற்று ரகசியங்கள் வெளிப்படாமல் இருக்கும் பூமியிலிருந்து அசிங்கமான கட்டிடங்கள் எழுந்திருக்கின்றன.

மக்கள் வாழும் இடங்களிலிருக்கும் அனைத்து மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டு இன்னும் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட இடம் அமைக்கப்படுகின்றன. தெருக்களெங்கும் குப்பைகள் கொட்டப்பட்டு பசியுடன் ஊளையிடும் நாய்கள் அதனுள் நுழைந்து தேடுகின்றன.
பட்கேலாவிலிருந்து லண்டாகி வழியாக பரிகோட் செல்லும் பாதையில் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். பரிகோட் முன்பு பஜிரா என்று கிரேக்க காலத்தில் அழைக்கப்பட்டிருந்தது. இந்த சாலையே பள்ளத்தாக்கின் இருதயத்திற்கு செல்லும் முக்கிய சாலை. ஆயிரக்கணக்கானதாக இல்லையென்றாலும், நூற்றுக்கணக்கான ஸ்தூபிகள், மடாலயங்கள், விஹாரங்கள், கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுக்கள் ஆகியவை புராதன உத்தியானத்துக்கு அடையாளம் கூறின.
கடந்த வருடங்களில், ஏராளமான இந்த இடங்கள் சிதைக்கப்பட்டன. இவற்றின் உள்ளே இருந்த புதையல்களுக்காக திருடப்பட்டன. புத்தர் சிலைகள், புத்தராகவும் போதிசத்வராகவும் இருந்த புத்தரின் சிலைகள், இந்து தெய்வங்களான கணேசர், சிவன் சிலைகள், ஸ்தூபிகளின் அடியிலும் படிக்கட்டுகளிலும் அழகுற உருவாக்கப்பட்டிருந்த ஜாதகக்கதைகளை சொல்லும் சிலைகள், ஓவியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.

கடத்தல்காரர்களின் பேராசைக்கு தப்பிய அரும்பொருட்கள் இந்த வழியே சென்றவர்களது அறியாமைக்கு பலியாயின. இவர்கள் இந்த விக்கிரகங்களின் மீது கல்லெறிந்தார்கள். ”நம்பிக்கையாளர்கள்” அடுத்தவர்களின் “நம்பிக்கையின்மை” மீது பெரும் நம்பிக்கையுடன் சகிப்புத்தன்மையில்லாத வெறுப்பில் நிலைகொள்கிறார்கள்
காலேகை என்னுமிடத்தில், ஸ்வாத் ஆறு மென்மையுடன் வளைந்து செல்கிறது. இது முன்பு ஸுவஸ்து என்று அழைக்கப்பட்டிருந்தது. இங்கிருக்கும் குடைவரை கல் குகை இந்த பள்ளத்தாக்கு குறைந்தது 3000 வருடங்களாக மக்கள் வாழ்ந்துவந்திருப்பதற்கு சாட்சியம் சொல்லுகிறது. உடைந்த பானை துண்டுகளும், கல் ஆயுதங்களும் இந்த கல் குகையின் உள்ளே கிடக்கின்றன. இந்த குகையை கிமு 4000க்கு இந்த குகையின் தோற்றத்தை சொல்லுகின்றன. இதன் கீழே கம்பீரமாக தியானம் செய்யும் புத்தர் காட்சி தருகிறார். இந்த புத்தரின் பெயரே த்யானி என்று வழங்கப்படுகிறது.
இந்த சிற்பத்துக்கு மேலே, சிறிய குகை இருக்கிறது. இது ”இந்து வீடு”(Hindu Ghar) என்று அழைக்கப்படுகிறது. சாலையின் அருகே 60 படிக்கட்டுகள் ஏறி இந்த இடத்தை அடையலாம். இங்கே சூரியனின் விக்கிரகம், தாடியுடனும், பின்னே ஒளிவட்டத்துடனும், ஆறு சிங்கங்கள் தாங்கும் ஒரு மேடையில் வலது புறம் இரண்டு உருவங்களும் இடதுபுறம் மூன்று உருவங்களுடனும் இருக்கிறது. இதுவும் உடைப்பட்டிருக்கிறது.

ஏழாம் நூற்றாண்டில் (துர்கி ஷாஹி காலம்) உருவாக்கப்பட்டதாக கணக்கிடப்படுகிற இந்த சூரிய விக்கிரகம் கனிஷ்கர் இந்த நாட்டை ஆண்டபோது அணிந்திருந்த உடைகளை கொண்டதாக இருக்கிறது.

 

இந்த சாலை வழியாக மன்யார், டிண்டோடாக் வழியாக வரலாறும் முரண்நகையும் செழித்திருக்கும் உதேகிராமத்துக்கு சென்றோம். அங்கு சமீபத்தில் ஹசாரா பல்கலைக்கழகத்தை சேர்ந்த எம்.பில் மாணவர்கள் நடத்திய அகழ்வாராய்வில் வரலாற்றுக்கு முந்திய கல்லறைகளில் முழுமையாக இருக்கும் கல்லறை பானைகளும் எலும்புக்கூடுகளும் கிடைத்துள்ளதாக என்னுடைய கார் ஓட்டினர் சொன்னார்.
அங்கேயிருந்த ஒரு புராதன புத்த மடாலயத்தை இடித்து அதன் அடித்தளங்கள் மீது கஜினியின் சுல்தான் முகம்மது இங்கேதான் மசூதி கட்டினார். 1985இல் இத்தாலிய ஆய்வாளரான உம்பர்ட்டோ ஸ்கேரட்டோவால் கண்டறியப்பட்ட இந்த மசூதியில் இன்னமும் தொழுகை நடக்கிறது.
இந்த பகுதியில் இருந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஒழித்துக் கட்டியபின்னால், இந்த புராதன மடாலயத்தை(மசூதியை) சுற்றுலா பயணிகள் பார்க்க வசதியாக சிமெண்ட் பாதையும் ஒரு சிறிய பாலமும் இங்கே போடப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானின் மூன்றாவது மிகப்பழைய மசூதியான இந்த 10ஆம் நூற்றாண்டு மசூதிக்கு மேலே இந்து ராஜா கிராவின் கோட்டையின் விளிம்புகளை பார்க்க முடிந்தது.

அந்த நிலப்பகுதியை தூரத்திலிருந்து பார்க்கும்போது எல்லையற்ற ஒரு விஷயத்தை பார்க்கும் உணர்வு தோன்றுவதை தவிர்க்கவியலாது. எண்ணற்ற ஏராளமான வழிகளில் தெய்வீகத்தை மனிதர்கள் வணங்கியிருக்கிறார்கள். மற்ற நம்பிக்கைகளோடு எண்ணற்ற வழிகளில் இணைந்து வாழக்கூடியதில் அத்தனை நம்பிக்கைகளும் ஏறத்தாழ இதே கேள்விகளுக்கான பதில்களையே தேடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் யார், எதற்காக இங்கே இருக்கிறோம், யார் நம்மை உருவாக்கியது, நாம் இறந்தபின்னால் என்ன நடக்கும்?

சிறிய பீச் மர தோட்டத்தின் வழியே நான் ஏறி, நான் இருக்கும் அந்த நிலத்திலேயே வாழ்ந்து இறந்து கல்லாக ஆகிப்போன ஒருவரது எலும்புக்கூடுகளின் மீதங்களை பார்த்தேன்.
இந்த வயதான மனிதர், ஒரு குழந்தையின் எலும்புகளோடு புதைக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு இந்த மலைகள் தெரியும். இந்த ஆற்றின் வழியே ஓடும் நீரைக் குடித்து, இந்த தோட்டங்களில் அளவற்று விளையும் பழங்களை உண்டிருக்கிறார். நாம் எல்லோரும் ஒரே மனிதர்கள்தான் என்ற என் நம்பிக்கையை இவரும் உறுதிப்படுத்துகிறார்.

நாம் அனைவரும் மண்ணிலும் புழுதியிலும் பிறக்கிறோம், இந்த பூமிக்கு மீண்டும் மீண்டும் திரும்புகிறோம். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான இடத்தில் வாழ்கிறோம்.
அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த கல்லறை பானைகள் எலும்புக்கூட்டினருகே குவிந்து கிடந்ததை பார்த்து, இவற்றை வடிவமைத்த கரங்களையும், மண்ணும் நீரும் கலந்து பானைகளாக உருவானபோது பாடப்பட்ட பாடல்களையும், அந்த குயவரின் உடலை காத்து நின்ற உடைகளையும், அந்த குழந்தை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த குழந்தையை அரவணைத்து கிடந்த கல் பலகையில் அந்த குழந்தை படுக்க வைப்பதற்கு முன்னால் அது கண்ட கனவுகளை பற்றியும் யோசித்தேன்.

இங்கே வேலை செய்யும் இத்தாலிய, பாகிஸ்தானிய நிபுணர்களை பொறுத்த மட்டில், இந்த காலம் பொது வருட ஆரம்பத்திற்கு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தியது என்று இந்த பானைகளை சொல்கிறார்கள்.
மரண சடங்கின்போது யார் தலைமை தாங்கினார்கள், மரணத்துக்கு பிறகு வாழ்வு உண்டு என்று உறுதிப்படுத்தி யார் இந்த சடங்குகளை செய்தார்கள்? அந்த குழந்தையின் தாயிடம் யார் என்ன வார்த்தைகளை சொன்னார்கள்? இறந்து போனவரின் மனைவியிடமும் குழந்தைகளிடமும் என்ன ஆறுதல் வார்த்தைகளை சொன்னார்கள்? அது கொண்டாட்டமாக இருந்ததா அல்லது துக்க நிகழ்வாக இருந்ததா?
மரணித்தவர்களை சரியான வரிசையில் அடுக்கி, எதிர்கொண்ட பயணத்துக்கு அவர்களுக்கு உணவும் பானைகளையும் வைத்து, அவர்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு ரகசியமாக வைத்த பெரிய கல் பலகைகளால் வைத்தவர்கள் யார்?
உதேகிராமத்தில் வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்பினாலும், எதிரே சாலை எனக்காக காத்திருக்கிறது, என்னை அழைக்கிறது. பயங்கரவாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே நடந்த கடுமையான போருக்கு பின்னர், பல வருடங்கள் கழித்து திடீரென்று ஏன் எதற்கு என்ற விளக்கமில்லாமல், ராணுவம் உள்ளே நுழைந்து அமைதிய நிலை நாட்டிய பலோகிராமம், ஃபிஸாகாத் ஆகிய நகரங்களை தாண்டி செல்லவேண்டும்.

இங்கே உடைந்து இறந்து போன உடலங்களாக கிடக்கும் வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், பாலங்கள் ஆகியவை முல்லா பஸ்லுல்லாவின் தீப்பொறி பறக்கும் பேச்சுக்களால் உந்தப்பட்டு பயங்கரவாதிகள் ஸ்வாத் பள்ளத்தாக்கின் பல ஆயிரமாண்டு காலமாக நின்ற அமைதியான இறைவணக்கம், ஆன்மீக மற்றும் முற்போக்கு கல்வி, அதன் எண்ணற்ற பழத்தோட்டங்கள், அழகாய் வளைந்து செல்லும் ஆறு, அதன் மென்மையாக புல்வெளிகள், அவற்றின் மீது பயிர் செய்யப்பட்டு பக்தூன், தோர்வால், உஷாகு, குஜ்ஜார், கோஹிஸ்தானி என்று எண்ணற்ற இன மக்களுக்கு உணவு கொடுத்த நிலம் என்று அனைத்தின் மீதும் கொண்ட வெறுப்பை கட்டவிழ்த்துவிட்டார்கள்.

ஜெஹனாபாத்தில் உள்ள சிறு கிராமத்துக்கு செல்லும் வழியில் மங்களூரில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மண்ட என்ற ஆஸ்திரியர்களால் கட்டப்பட்ட நவீன கல்லூரி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு சிதிலமாகி அனாதரவாக கிடப்பதை பார்த்தேன்.
இப்போது அதை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இளம் ராணுவ ஆபீஸர்கள் என்னுடன் அளவளாவி அன்புடன் கொடுத்த தேநீரையும் அருந்திவிட்டு செங்குத்தாக இருக்கும் மலையில் ஏற ஆரம்பித்தேன்.
அங்கிருந்து, எதிர்ப்புறத்தில் காலமும் நீரும் கருப்பு கரைகளை உருவாக்கிவைத்திருக்கும் பெரிய பாறைகளை அடுக்கி வைத்திருந்த பரப்பின் மீது பாறை புடைப்பு சிற்பமாக பிரம்மாண்டமாக இருக்கும் புத்தரின் அழகிய காட்சியின் மீது என் கண்கள் பதிந்தன. இங்கேதான் நான் அடுத்த பதினைந்து நாட்கள் தங்கியிருந்து எவ்வாறு இங்கே அகழ்வாராய்ச்சி பாதுகாப்பு முறை செய்யப்படுகின்றது என்பதை ஆவணப்படுத்தவேண்டும்.

புராதனமான கல் சுவர் தாங்கிப்பிடித்திருக்கும் நெருக்கமான பழத்தோட்டத்தின் வழியே நீண்ட தொலைவு ஏற வேண்டும். இங்கே நின்று தனிமையை கேட்கிறேன். பறவைகளின் அழைப்பும், வெட்டுக்கிளிகளின் கவிதைகளும் சேர்ந்து அமைதியான ஒரு பாடல் ஒலிக்கிறது.

எங்கோ ஒரு குழந்தை அழைக்கிறது. ஒரு நாய் பதிலிறுக்கிறது. எல்லையற்ற நிம்மதியான பேரமைதி ஒரு பனிப்புகை போல கவிந்து என்னை மூடுகிறது.
என்னால் பார்க்கவோ, தொடவோ முடியாத ஏதோ ஒன்று இங்கே இருக்கிறது. இந்த இடம் மாபெரும் புனிதத்தலம் என்றும் இங்கே பிரார்த்தனைகள் சொல்லப்பட்டன என்றும், மனித ஆசை மறைந்து, இருப்பதே துன்பப்படத்தான் என்றும், துயரின்முடிவு ஆசையின் இறப்பே என்றும் எனக்கு சொல்கிறது.

என்னை மென்மையாக இழுத்து, கடந்த காலத்தின் மௌனமான ரகசியங்களை கிசுகிசுப்பாக, கேட்கவும், புரிந்துகொள்ளவும், போற்றவும் முயலும் இன்னொரு காலத்தின் இந்த உணர்வு போய்விடக்கூடாதென விரும்பினேன்
பெரும் தயக்கத்துடன் அங்கிருந்து விலகினேன். எதிரே இருக்கும் வேலைகள் அதிகமானவை. சூரியன் மறைந்து பள்ளத்தாக்கை பெரும் இருட்டில் ஆழ்த்துகிறது.
அந்த பாதையிலேயே செல்லும்போது அங்கே ஒரு சிறிய குக்கிராமத்தில் ஒரு நாயும் ஒரு குழந்தையும் என்னை தங்களில் ஒன்றாய் வரவேற்கின்றனர். பஷ்டோ மொழியில் திக்கி திக்கி புத்தர் சிலை எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.
அந்த சிறுவன் என் கையை பிடித்து மலை உச்சிக்கு மற்றொருகையை நீட்டி காட்டுகிறான்.

“அதுவா” அவன் கேட்கிறான். “காபிர்கள் செதுக்கிய புத்தரா?”
நான் அந்த குழந்தையை பார்க்கிறேன். ஆறு ஏழு வயது இருக்கும். அவனது செருப்பு அவனுக்கு பெரியதாக இருக்கிறது. சட்டை மிகச்சிறியதாக இருக்கிறது. முகத்தில் அழுக்கு படிந்திருக்கிறது. இல்லாததையெல்லாம் ஈடுகட்டுவது போல அவனது முகத்தில் குறுநகை இருக்கிறது. நாயின் கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றை ஒரு சொடுக்கு போட்டு இழுத்து என்னை ஒரு குறுகிய பாதையில் இட்டுச்செல்கிறான். காலருகே எதையோ கொத்தி தின்னும் கோழிகள் சிதறுகின்றன.
“வாருங்கள்” அவன் சொல்கிறான். “நான் முகமில்லாத புத்தரிடம் கூட்டிச்செல்கிறேன். இந்த காபிர் புத்தரிடம்”

இந்த புத்தர் புடைப்பு சிற்பம் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும். அஸ்தனாவில் புத்தர் உட்கார்ந்திருக்கிறார். அவரது கால்கள் மடங்கியிருக்கின்றன. அவரது கைகள் அவரது தொடைகளில் ஓய்வெடுக்கின்றன. அமைதியும் மௌனமும் அவரது துணிகளின் மடிப்புகளில் உறைந்திருக்கின்றன.

உண்மையில் அவருக்கு முகமில்லை. பயங்கரவாதிகள் போரிட்டதில் அவை உடைந்து சிதறிவிட்டன. அவரது முகத்தில் பாக்கி இருப்பதெல்லாம் ஒரு காதும் அவரது வாயும் தான். வெறுப்பின் ஆழமும், வன்முறையையும் கண்டுகொள்ளாமல், மெல்லிய புன்னகை அவரது இதழ்களில் தவழுகிறது
2007இல்தீவிரவாதிகளால் வன்முறையின் உச்சத்தில் இங்கே கிரீன் சௌக் எனப்படும் பச்சை சதுக்கத்தில் 50 ஆண்களும் பெண்களும் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு அது கூனி சௌக் அல்லது ரத்த சதுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
தாடிகளை சிரைத்த நாவிதர்கள், இசையை விற்க முனைந்த சிடி கடை சொந்தக்காரர்கள், பாடவும் ஆடவும் விழைந்த பெண்கள், பயமின்றி வாழ விரும்பிய சாதாரண மக்கள் அனைவருமே இந்த அன்புக்குறிய ஆனால், சிதைக்கப்பட்ட நிலத்தின் ஒத்திசைவு, அழகு அனைத்தையும் தங்கள் வெறுப்பின் மூலம் அழித்துவிட விரும்பிய பாம்புகள் கொட்டிய விஷத்துக்கு பலியானார்கள்.
அதே விஷமிருகமே இன்று மலாலா என்ற ஒரு சிறுமியின் உயிரையும் எடுத்துவிட முனைந்தது. பகிரங்கமாக சுட்டுக்கொல்லுவதால் ரத்த வெறிக்கு இரை கிடைத்தாலும், ஜஹனாபாத்தில் புத்தரது சிலையின் பேரழகும் இன்னொரு குறியாக ஆனது.
“யார் செய்தது என்று எங்களுக்கு தெரியாது” என்று முப்பது மீட்டர் உயரமுள்ள புடைப்பு சிற்பத்தின் கீழ் நிற்கும் ஒரு இளைஞன் என்னிடம் கூறுகிறான். அவன் அந்த சிலையையோ என்னையோ பார்க்கவில்லை. கட்டுப்பெட்டித்தனமான கலாச்சாரத்தில் ஆண்கள் தங்களுக்கு அல்லாத பெண்களை பார்க்ககூடாது என்பதனை மேற்கொண்டு அவ்வாறு பார்க்காமல் இருந்திருக்கலாம்.
புத்தரது புடைப்பு சிற்பத்தின் தோள்களிலும், உஷ்னிஷா எனப்படும் அவரது தலை மீது கிரீடம் போல இருக்கும் முடியிலும் ஓட்டை போட்டது யார்? இந்த ஓட்டைகளில் வெடிமருந்துகள் திணிக்கப்பட்டு வெடிக்கப்பட்டன. ஸ்வாத் ஆற்றின் அக்கரையிலிருந்து தொடுக்கப்பட்ட ராக்கெட்டுகள் அந்த சிலையை அழிக்க முடியாமல் போனதால் இப்படி முயற்சி செய்யப்பட்டன.
அவர்கள் நள்ளிரவில் வந்தார்கள். அவர்களை நாங்கள் பார்க்கவில்லை” என்று இளைஞன் கூறிக்கொண்டே ஆற்றின் அப்புறம் பார்த்தான்.

இடையே இருந்த மௌனத்தை கலைக்காமல், அவனது சிந்தனையோட்டத்தில் கலந்து வானமும் பூமியும் இணையுமிடத்தில் அங்கங்கு பச்சை மரங்களும், ஆப்ரிகாட் மரங்களின் ரோஜாநிற மலர்களையும் பார்த்தோம்.
இத்தனை அழகுக்கும் மத்தியில் மன்னிக்கமுடியாத குற்றம் இழைக்கப்பட்டது, மனிதத்துக்கு எதிரான குற்றம். மனித அனுபவத்தின் எல்லையற்ற பன்மைத்தன்மைக்கு எதிராக குற்றம். இன்று அந்த வன்முறைச்செயல், கரங்களில் குணப்படுத்தும் மாயவித்தையைகொண்ட மனிதர்களால், கைகளில் மனித வைராக்கியத்தின் கதகதப்பை கொண்டவர்களால் சரிசெய்யப்படப்போகிறது.

அந்த குழுவுக்கு ஒரு அயல்நாட்டுக்காரரே தலைமை தாங்கினார். அவரது பெயரையும் அவரது தேசத்தையும் நான் இங்கே சொல்லப்போவதில்லை. அவ்வாறு சொல்வதனால், அவரது குழு குறிவைக்கப்படலாம். புராதன பாரம்பரியத்தை பாதுகாப்பவர், அவற்றை மீட்டெடுப்பவர் என்று சொல்வதே போதுமானது. அவர் முன்னால், பாமியான் புத்தர் சிலைகளை சுற்றியுள்ள ஓவியங்களை மீட்டெடுக்கும் பணியிலிருந்தவர்.

30 மீட்டர் உயர சட்டங்களின் மீது ஏறி அவர் வேலை செய்வதை பார்க்கும்போது அவர் மிகவும் கடினமான சூழ்நிலையில் வேலை செய்கிறார் என்பது தெளிவானது. ஆரம்பத்தில் அவற்றில் ஏறி குறிப்புகளை எடுத்ததும், இப்போது அந்த புடைப்பு சிற்பத்தின் மேலே வளர்ந்திருக்கும் பச்சை தாவரங்களையும், புழுதியையும், வெடிமருந்து மீதங்களையும் இப்போது நீக்கிக்கொண்டிருக்கிறார்.

அந்த புடைப்பு சிற்பத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் முகத்தின் மேல்பாகத்தை சிதைத்ததால் அதன் பகுதிகள் காணாமல் போய்விட்டன.
அதன் மீது வெடிக்கப்பட்ட குண்டுகள் அந்த சுவற்றில் இடிபாடுகளையும் நுண்ணிய இடிபாடுகளையும் உருவாக்கியிருக்கிறது. அந்த வெடிப்புகளை சரி செய்வதும், மேலும் வெடிப்புகள் உருவாகாமல் தடுப்பதுமே அவரதுவேலை.
அந்த வெடிப்புகளில் வளரும் நுண்ணிய கிருமிகளும், அதன் வளர்ச்சியும் அந்த பரப்பு மேலும் அழியும் என்பதற்கு காரணம்.
அந்த புடைப்பு சிற்பத்தை மென்மையான தூரிகைகளால் சுத்தம் செய்து, அதன் மீது பசைபோட்டு ஒட்டி விழப்போகும் போல இருக்கும் பகுதிகளை பாதுகாப்பாக்குகிறார்.
அந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர்கள் துணை செய்ய, அந்த உடைப்புகளும் வெடிப்புகளும் இந்த பாதுகாப்பு வேலையின் பத்தாவது நாளில் நிரம்புகின்றன.

இரண்டு காமிராமேன்கள் அந்த முழு வேலையையும் படமெடுத்தார்கள். மூன்றாவது கேமிரா, டைம்லாப்ஸ் முறையில் முழு வேலையையும் தானியங்கியாக அந்த குழு வேலை செய்வதையும், மேகங்கள் பரந்த வானத்தில் கலைந்து செல்வதையும், அன்புடன் குணப்படுத்தும் வேலையையும் பதிவு செய்கிறது.

 

அந்த முழு வேலையையும் ஆச்சரியத்துடனும் நன்றியுடனும் அருகாமையில் பார்த்தேன். அந்த வன்முறையால், ரத்தம் பெருக்காமல் இருந்திருந்தாலும் நிச்சயமாக ஆழமான காயத்தை உருவாக்கியது. வெடிப்புகளிலும் உடைப்புகளிலும் ஊசி மூலம் பசையை வைப்பதை பார்க்கும்போது, நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு மருத்துவம் செய்யும் மருத்துவரையே அவர் எனக்கு நினைவூட்டினார்.

இறுதியாக உடைப்புகளும் வெடிப்புகளும் காணாமல் போன பகுதிகளும் அவர் கையால் பிளாஸ்டரும் மைக்ரோ ஜல்லியும் சேர்ந்து உருகொள்வதை பார்க்கும்போது கண்ணுக்குத்தெரியாத ஆன்மாவில் புதையுண்டு இருக்கும் உருவம் தனது கர்ப்பத்திலிருந்து வெளிப்படுவதை பார்ப்பது போலிருந்தது.
இது பதினைந்தாவது நாள். குழுவினர் அந்த புடைப்பு சிற்பத்தின் கீழே பாறைகளில் உட்கார்ந்திருந்தார்கள். தங்களது மகத்தான வேலையை தூரத்திலிருந்து பார்த்தார்கள். அது மனித ஆன்மாவின் நம்பிக்கையின் உடையாத தன்மையை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

 

பாறையிலிருந்து இறங்கி அவரது கேமிரா குழுவுடன் நடந்து சென்று மறைந்தபோது அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. “ அமைதி, நிச்சலமான தன்மை, சக்தி, தாகம், திருப்தி.. இது போன்று ஒரு மீட்டெடுக்கும் வேலையை உலகத்தில் எந்த மூலையில் செய்து முடித்தாலும் இந்த உணர்வுகள்தான் வருகின்றன”

அந்த மூவரின் பின்னால், ஸுவாஸ்து ஆறு மென்மையாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சூரியன் மறைய ஆரம்பிக்கிறது. அதன் பொன்னிற ஒளி அந்த புடைப்பு சிற்பத்தின் மீது படிகிறது. ஏதோ பிரபஞ்சமே அதன் நட்சத்திரங்களும், கிரகங்களும் அவற்றில் வாழும் எண்ணற்ற உயிர்களும் நாங்கள் சந்தித்த சவாலையும் அதன் வெற்றியையும் கொண்டாட விரும்புவது போல அந்த ஒளி படிகிறது. கடந்த காலத்தில் சந்தித்த சவால், எதிர்காலத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அச்சமும்வெறுப்பும் இல்லாத, அன்பும், அமைதியும் கொண்ட வாழ்வு வாழ பாதையை காட்டும் ஒளியாகவும் அது தோன்றுகிறது.

 

Published in The Express Tribune, Sunday Magazine, October 21st, 2012.

http://tribune.com.pk/story/452802/the-road-to-swat-what-hatred-destroyed-humanity-has-tried-to-rebuild/

Series Navigation“தீபாவளி…… தீரா வலி….. !”லூப்பர் ( ஆங்கிலம் )
author

Similar Posts

Comments

  1. Avatar
    தங்கமணி says:

    கட்டுரையும் அதனை ஒட்டிய படங்களும் அருமை.

    கட்டுரையாளரும் கட்டுரையை வெளியிட்ட பாகிஸ்தான் பத்திரிக்கையும் பாகிஸ்தானில் மனிதம் இன்னும் இறக்கவில்லை என்று காட்டுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *