ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்

This entry is part 13 of 13 in the series 10 அக்டோபர் 2021

 

 


குரு அரவிந்தன்
 
‘இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து’ என்று எப்படிக் கடற்பயணிகள் இலங்கைத்தீவை வர்ணித்தார்களோ அதேபோலத்தான் சுற்றுலாப் பயணிகள் ‘பசுபிக்சமுத்திரத்தின் பரடைஸ்’ என்று இந்தத் தீவுகளை அழைக்கிறார்கள். இந்த ஹவாய் தீவுகள் எரிமலைக் குளம்புகளால் உருவானவை என்பதை நீங்கள் நம்பமறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. சுமார் 2000 மைல்கள் சுற்றாடலில் எந்த நிலப்பரப்பும் இல்லாத ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் 50 வது மாகாணமாக ஆகஸ்ட் மாதம் 1959 ஆண்டு பிரகடனப் படுத்தப்பட்டது. சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக போலிநேஷன் (Polynesian) என்று சொல்லப்படுகின்ற குடும்ப அமைப்பு இங்கே முதலில் உருவானது. முக்கியமாக  Samoa, Cook Islands, New Zealand,  Easter Island, Hawaii, Tonga, Tuvalu, Wallis and Futuna, Fiji  போன்ற இடங்களில் இருந்து கடலில் திசைமாறி வந்து, திரும்பிச் செல்ல வழியில்லாமல் குடியேறியவர்களே இங்குள்ள பழங்குடி மக்களாவார். இங்குள்ள தீவுகளில் சுமார் எட்டுத் தீவுகளே ஓரளவு பெரிய தீவுகளாக, மனிதர் வாழக்கூடியதாக இருக்கின்றன.
 
1778 ஆம் ஆண்டு ஐரோப்பியரான கப்டன் ஜேம்ஸ் குக் என்ற கடற்பயணிதான் முதன் முதலாக இத்தீவுகளில் கால்பதித்தார். புகழ்பெற்ற பேர்ள்ஹாபர் (Pearl Harbour), உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகள் (Valcano Park), தொலைநோக்கி மையம் (Mauna Kea Summit) இந்துக்கோயில், டோல் அன்னாசிப்பழத் தொழிற்சாலை போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆவலை நிறைவேற்ற பாம்புகளே இல்லாத ஹவாய்க்குப் பயணமானேன். ஹவாயில் உள்ள விமான நிலையத்தை டானியல் கே. இனோஜி சர்வதேச விமான நிலையம் (Daniel K. Inouye International Airport) என்று அழைக்கிறார்கள். சுமார் 22 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இந்த விமானநிலையத்திற்கூடாக வருடாவருடம் பயணிக்கிறார்கள். விமானத்தை விட்டு வெளியே வந்ததும் ஹவாயின் பாரம்பரிய உடையணிந்த, கழுத்திலே பூமாலை அணிந்து, தலையிலே ஒற்றைப்பூ சூடியிருந்த இளம் பெண்கள் எங்களை வரவேற்றார்கள். காதில் விழுந்த முதல் வார்த்தை ‘அலோகா’ என்பதாகும். ‘அலோகா’ ((Aloha) என்றால் வணக்கம், சென்ற இடமெல்லாம் அலோகா சொன்ன போது, எனக்கு ‘அரோகரா’ என்பது போலக் கேட்டது. ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று அதைப்பற்றிப் பின்பு ஆராய்ந்து பார்த்த போது, எங்கள் பண்பாட்டிற்கும் அதற்கும் ஒருவித தொடர்பு இருப்பதை அறிய முடிந்தது.
 
அங்கே உள்ள ஒரு வீதிக்குப் ‘பழனி வீதி’ என்ற பெயரும் உண்டு. நேப்பாளிகளின் சைவஉணவகத்து வாசலில் சிவனின் பதாதை ஒன்று மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருங்காட்சியகத்திற்குச் சென்ற போது, அவர்கள் பாதுகாப்பு வேலி போட்டிருந்த ஓரிடத்தில் சிவலிங்கம் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட கருங்கல்லைக் கண்டேன். அதில் மூன்று வீபூதிக் குறிகள் இல்லாததுதான் ஒரு குறையாக இருந்தது. பிறிதொருநாள் அவர்களுடைய கலாச்சார விழா நடக்கும் இடத்திற்குச் சென்ற போது மாவிட்டபுரம் மாவைக் கந்தனின் கோபுரம் போன்ற அமைப்பை கொண்ட சுமார் 40 அடி உயரமான ஒரு கோபுரத்தை தடிகளாலும் ஓலைகளாலும் உயரமாக அமைத்திருந்தார்கள். பிஜி நாட்டில் இருக்கும் இந்துக் கோபுரத்தின் அமைப்பு அது என்பதை அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன். பிஜி நாட்டில் இருந்து இங்கு வந்து குடியேறிய பழங்குடி மக்கள் பலர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். பிஜி தீவுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் கரும்புத் தோட்டத்திற்குப் பணிபுரியச் சென்றதும், பாரதியார் அதைப்பற்றிப் பாடியதும் நினைவில் வந்தது. அவர்களின் வழித்தோன்றல்களும் ஹவாயின் பழங்குடி மக்களாக இருக்கிறார்கள்.
 
இவர்கள் ‘பல்லே’ என்ற பெண் நெருப்புத் தெய்வத்தை வணங்குவதாக எங்களைத் தன்னுடைய வண்டியில் வழிபாட்டு தலத்திற்கு அழைத்துச் சென்ற ஹினா என்ற பட்டதாரிப் பெண் குறிப்பிட்டார். வாசலில் இரண்டு பந்தங்கள் குறுக்கே வைக்கப்பட்டிருந்தன. பூசாரியோ அல்லது அவரால் அனுமதிக்கப்பட்டவரோ தான் பாடலைப் பாடிப் பந்தத்தை நிமிர்த்தி வைத்துவிட்டு உள்ளே செல்ல முடியும். அந்தப் பெண் கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு ஒரு பாடலைப் பாடினார். நாங்கள் வழிபாட்டுத் தலங்களில் தேவாரம் பாடுவது போல அந்தப் பாடலும், நிகழ்வும் இருந்தது. அவர்கள் வழிபடும் தெய்வங்களின் விக்கிரகங்கள் சற்று உயரமான பீடத்தில் வைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட அய்யனார், கருப்பண்ணசாமி போன்ற உருவ அமைப்புகளைப் போன்று மரத்தினால் செய்யப்பட்ட சில கிராமத்து தெய்வங்களைக் காணமுடிந்தது. அதற்குக் கிட்டவாக பூசாரியின் குடிசை ஒன்று இருந்தது. சற்றுத் தள்ளி அவர்களின் பாரம்பரிய ‘பறைகள்’ ஒரு குடிசையில் வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் சித்திரைக் கஞ்சிக்கு எங்கள் கோயில்களில் அடிக்கும் மேளங்கள் போல இருந்தன. வழிபாட்டுத்தல பூசைக்காகவோ அல்லது அவசர தேவைகளுக்காகவோ இந்தப் பறைகளை அடித்துப் பொதுமக்களை அங்கே வரச்செய்வதாகவும் ஹினா குறிப்பிட்டார். எங்களைப் போலவே, உருவ வழிபாடு அவர்களிடமும் இருப்பதை அவதானித்தேன்.
 
ஹவாயில் பெண்கள் இடது காதுக்குப் பின்னால், தலையில் பூவைச் செருகியிருந்தால் திருமணமானவர் என்றும் வலது காதுக்குப் பின்னால் பூச்செருகியிருந்தால் திருமணமாகாதவர் என்றும், எம்மவர் குங்குமப் பொட்டு வைப்பதுபோல, அடையாளப் படுத்தினார்கள். அனேகமான பெண்கள் அழகாகக் கொண்டை போட்டு, வெள்ளைநிற அலரிப்பூவையும், சிலர் ஓக்கிட், அல்லது செவ்வரத்தம் பூவையோ முடியில் செருகி இருந்தார்கள். இதில் வேடிக்கை என்வென்றால் அவர்களில் சிலர் முடியில் இரண்டு பக்கமும் பூ வைத்திருந்ததுதான். வலது பக்கம் இடது பக்கம் என்று விபரமாகச் சொன்னவர்கள் இரண்டு பக்கமும் பூ வைத்தால் என்ன அர்த்தம் என்று சொல்லவேயில்லை.
 
‘தழையணி அல்குள் தாங்கல் செல்லா நுழைசிறு நுசப்பிற் கெவ்வ மாக அம்மெல் ஆக நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின’
 
நடன நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்ற போது, சங்க இலக்கியப் பாடல் ஒன்று நினைவில் வந்தது. அவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளான தழை உடைகளை அணிந்தே நடனமாடினர். சிலர் இலைகுழைகளில் செய்த தழையணி பாவாடைகளையும், சிலர் நாணல் புல், வைக்கோல் போன்றவற்றில் செய்த பாவாடையும் அணிந்திருந்தனர். தமிழர்களின் பாரம்பரிய கோலாட்ட நடனத்தைப் போல தழையணி அணிந்த பெண்கள் கையிலே உள்ள கோலாட்டக் கோல்களைப் பலவிதமாக அடித்து சுற்றிச் சுற்றி ஆடுவதைக் ஹவாயில் காணமுடிந்தது. அவர்கள் இந்த நாட்டார் கலையான நடனங்களை ஆடிக்காட்டிய போது என்னால் நம்பமுடியாமல் இருந்தது. இதுவரை கற்பனையில் இருந்த சங்ககாலக் காட்சிகளை நிஜமாகவே கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது போல இருந்தது. இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் சென்று ஹவாய் தீவுகளில் 2500 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர்களின் பாரம்பரிய தழையுடை அணிந்த கோலாட்ட நடனத்தைக் காண்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்தும் பார்த்ததில்லை.
 
இன்னுமொரு தீவான ‘காவாய்’ இந்துக்களின் பிரபலமான சிவன் கோயிலும், சைவ சித்தாந்த மன்றமும் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த யோகசுவமியின் சீடரான சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் தான் இங்கே கோயில் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். பூங்காவில் உருட்திராட்ச மரங்கள் இருக்கின்றன. வெளியே உள்ள உணவகங்களில் சைவச்சாப்பாடு எடுப்பது கஷ்டமானது. நாங்கள்தான் கொண்டு செல்ல வேண்டும். 562 சதுரமைல் பரப்புள்ள இந்தத் தீவுக்கும் விமானத்தில்தான் பயணிக்க வேண்டும். அழகான நிறங்களில் காட்டுக்கோழிகள் எங்கும் காணப்பட்டன. பாம்பு, கீரி, மரநாய், கழுகு போன்ற எதிரிகளே இல்லாததால், சுதந்திமாகத் திரிந்தன.
 
 
 
 
 
 
 
 
Series Navigationகறிவேப்பிலைகள்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *