ஹிப்பி

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 11 in the series 4 ஜூலை 2021

 

வேல்விழி மோகன்

                                                                          

 

                              தாத்தாவுக்கு தொண்ணூத்து மூணு வயசுலதான் சாவு வந்தது.. படுக்கையிலேயே போய்ட்டாரு.. கொஞ்சமா மூத்தரம் போயிருந்தாரு,, சிரிச்ச மாதிரி உதடுகள்.. அந்த தெத்துப்பல்லு தெரிஞ்சது.. கண்ணாடிய கழட்டி வழக்கம்போல தலமாட்டுல வச்சிருந்தாரு.. வேட்டி பின்னாடி லேசா நனைஞ்சிருந்தது.. கி.ராஜநாராயணன் புத்தகத்த பாதி திருப்பி வச்சிருந்தாரு இடுப்பு பக்கம்.. கை.. காலேல்லாம் பஞ்சு மாதிரி அவ்வளவு மெதுவா இருந்தது.. முதல்ல பாத்தது ஹிப்பி.. அவன்தான் சந்தேகமா கட்டுலு மேல ஏறி  காலால தொட்டு தொட்டு பாத்திருக்கான்.. அப்பறம் மேல ஏறி நெத்தில மோந்து பாத்திருக்கான்.. கீழ குதிச்சு முன்ன.. பின்ன வந்திருக்கான்.. அப்பறம்தான் கத்தியிருக்கான்..

      “லொள்… லோள்.. “

      அப்பா அவன மிதிக்க வேகமா உள்ள போயிருக்காரு.. அவன் அவரு கைல கெடைக்கலை.. கட்டுலுக்கு கீழ போய்ட்டு “உர்ர்…ர்ர்.. உர்ர்ர்ர்ர…” ன்னு அடிக்குரல்ல மூச்சு வாங்கியிருக்கான்.. அவனுக்கு அவர பாத்தா பயம்.. அடிச்சுப்போடுவாரு.. ஒரு குச்சி இதுக்குன்னே வச்சிருக்காரு.. அந்த குச்சிய தேடிட்டு ரூம விட்டு வெளிய வரும்போதுதான் அவருக்கு சந்தேகம் வந்திருக்குது.. ஏதோ வாசன.. மறுபடியும் உள்ள போயிருக்காரு.. ஹிப்பி கட்டுல மேல ஏறி தாத்தா மேல ஒரு கால வச்சுக்கிட்டு அவரு முகத்தையே பாத்துக்கிட்டு இருந்திருக்கான்.. அப்பாவ பாத்தும் அசையல.. ஒரு மாதிரி கீச்சுக்குரல்ல தாத்தாவோட நெஞ்சு மேல வச்சிருந்த காலால தடவியிருக்கான்.. அப்பாவுக்கு அப்பதான் வாசன புரிஞ்சிருக்குது..

      இது நடந்தது இன்னிக்கு விடிகாலைல நாலு மணியிருக்கும்..  வீரம்மாதான் அழுதுக்கிட்டே இருக்கா.. வெளிய பந்தல் போட்டு.. மெயின் ரோட்ல பேனர கட்டி வச்சு.. வெளியூருக்கெல்லாம் தகவல் சொல்லி.. பலகக்காரன் வந்து டமுக்கு.. டமுக்கு.. ன்னு அடிச்சுட்டு.. எல்லாம் அது பாட்டுக்கு போய்ட்டிருக்குது.. தண்ணி.. டீ.. ன்னு கொஞ்சம் ஆசுவாசமா ஆனப்போ கூட ஒரு அழுகை குரல் கேட்டுக்கிட்டேயிருந்தது..

      வீரம்மா குரல்.. கூட ஹிப்பி..

      அவளோட அப்பா ரண்டு முற வந்து சொல்லிட்டு போயிட்டாரு.. “போதும்மா.. உடம்பு கெட்டுப்போயிடும்.. தாத்தாவுக்கு வயசாயிடுச்சுல்ல.. “

      உகும்.. அழுக நிக்கல.. “டீய கொடு.. தண்ணிய கொடு..” என்றார்கள்.. உகும்.. அப்படியே திரும்ப போயிடுச்சு.. வீரம்மாவுக்கு தெரியும்.. தாத்தாவுக்கு வயசாயிடுச்சுன்னு.. ஆனா சாவை எதிர்பாக்கல.. வீட்ல அப்பா.. அண்ணன்.. அண்ணி.. ஏன்.. ஹிப்பிக்கு கூட தெரிஞ்சிருக்கலாம்.. தாத்தாவுக்கு போற வயசாயிடுச்சுன்னு.. இவதான் அந்த எதிர்பார்ப்புக்கு தயாராகல.. அவளுக்கு தாத்தாவ பாக்கற அந்த நிமிழத்துல இருக்கற மாதிரி எப்பவும் இருப்பாருன்னு நினைப்பு..  அந்த வீட்ல தாத்தாவுக்கு அவள புடிக்கும்.. அவளுக்கு தாத்தாவ புடிக்கும்.. நடுவுல ஹிப்பிய அவங்க ரண்டு பேருக்கும் பிடிக்கும்..

      ஹிப்பிய வீட்டுக் கூட்டிக்கிட்டு வந்ததே தாத்தாதான்.. ரண்டு வருஷத்துக்கு முன்னாடி.. எங்கேயோ கடைல வடை சாப்பிட்டுக்கிட்டிருந்தப்போ இது பக்கத்துல வந்து நின்னு அவர பாத்திருக்குது.. பப்பி குட்டி.. வெள்ளை நிறம்.. முன்னாடி தலைல நிறைய முடி.. ஏகப்பட்ட அழுக்கு.. ஓனர தேடியிருக்காரு.. “கழுத்துல கயிறு காணலையே,,”ன்னு  உத்து உத்து பாத்திருக்காரு.. டீக்காரன் “அது அப்படிதாங்க.. எப்பாச்சும் வரும்.. போகும்.. எதுவும் சாப்பிடாது.. டீய மட்டும் குடிக்கும்..”னு அதுக்குன்னே வச்சிருக்கிற டப்பால ஊத்தி வச்சிருக்கான்.. அது சூட்டையெல்லாம் கவனிக்காம நக்கி.. நக்கி குடிச்சத பாத்து “அனாத நாயா..? “ன்னு கேட்டிருக்கார்..

      “தெரியலீங்க.. தனியா வரும்.. போகும்..”

      “கூட வருமா. ? யாரும் ஏதும் சொல்லமாட்டாங்களே..”

      “வளக்கறதுக்கா..? தெரியலிங்க.. கடிச்சுட போகுது.. “

      அவர் அதை தொட்டு.. பேசி.. இரண்டு கைகளையும் நீட்டியபோது வந்து ஒட்டிக்கொண்டதாம்.. அப்பா அத வீட்ல விடலை.. தெருவுல ரண்டு நாள் இருந்தது.. தாத்தா நைட்ல அடிக்கடி போய் பாக்கறத பாத்துட்டு காம்பவுண்டுக்குள்ள முருங்க மரத்த ஒட்டி கட்டிக்க சொன்னாரு..

      ஹிப்பின்னு தாத்தாதான் மொதல்ல பேர வச்சாரு.. வீரம்மாவுக்கு அந்த நாயோட பழகும்போதெல்லாம் அம்மா ஞாபகம் வரும்.. ஏன்னு தெரியல.. அப்பாக்கிட்ட சொன்னா அவரு சிரிச்சாரு.. “உங்கம்மா நாயா..?” ன்னு கேட்டாரு.. அப்படி அவரு பேசினது புடிக்கல.. தாத்தாக்கிட்ட சொன்னப்போ “விட்டுத் தள்ளு.. அவன் அப்படித்தான்.. பொண்டாட்டிக்கிட்ட பாசம் இல்லாதவன்.. நாயின்னுதான் அவள திட்டுவான்.. பொறம்போக்கு பய.. உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லாதப்ப உம் பாட்டிதாம்மா பாத்துக்கிட்டா.. எங்களால முடிஞ்சது.. அவ செத்தப்போ ஊரே இவன காரித்துப்புச்சு.. இதயம் இல்லாதவன்னு.. பாட்டி போனப்போ நமக்கு இனிமே யாரு இருக்கான்னு தோணுச்சு.. அப்போ நீ   பிளஸ்டூ எக்ஸாமுக்கு படிச்சிட்டிருந்தெ.. பாட்டி பொணம் வெளிய இருக்குது.. ஊதுபத்தி புகை நாத்தம்.. எனக்கு அது புடிக்கல.. எழுந்திருச்சு வீட்டுக்குள்ள வந்து நீ படுத்துட்டிருந்த எடத்துக்கு வந்தேன்.. உன்னைய பாத்த பெறகுதான் ஒரு தெம்பு வந்தது..  மறுபடியும் பாட்டிக்கட்ட போயி உக்காந்துக்கிட்டேன்.. இப்ப உறுத்தல் இல்ல.. அந்த புகை வாசனைதான் எனக்கு அதுக்கப்புறம் கஷ்டமா இருந்தது.. அத அப்புறப்படுத்த சொன்னேன்.. எடுத்துக்கிட்டு போயிட்டாங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தன் மறுபடியும் கொண்டாந்தான்.. வச்சுட்டு என்னைய பாத்தான்.. “இதெல்லாம் இல்லின்னா எப்புடிங்க.. நம்ம வழக்கமுங்க இது.. “ன்னு சொல்லிட்டு போயிட்டான்.. எல்லாரும் வழக்கத்துல வாழறாங்க.. துப்புனா துப்புறாங்க.. நக்கறத கூட அப்படித்தான் செய்யறாங்க.. குழிக்கிட்ட போகும்போது முன்னாடி பத்துப்பேரு டேன்ஸ் ஆடினாங்க.. அவங்க யாருன்னே தெரியல.. கூலிக்கு வந்தவங்களா இருக்கலாம்.. ஊதுபத்தி நாத்தம் புடிக்காத மாதிரி போகும்போது பட்டாசு நாத்தம் புடிக்கல.. அங்கங்க நிறுத்தி.. நிறுத்தி.. பட்டாசு வெடிச்சு.. போற வர்றவங்க அதுக்கு பயந்து ஓரமா போயி இடிச்சுக்கிட்டு..  பாட்டி சாவுக்கு போகாம வேற யாரோ சாவுக்கு போற மாதிரியிருந்தது.. யாரு வாழ்க்கையும் அவங்கவங்க கைல இருக்கற மாதிரி தெரியல.. சொல்லி வச்ச மாதிரி இயங்கறாங்க.. வெறும் உடல்கள்.. உடல்கள் போகுது..  நடக்குது.. தூங்குது.. “

      “தாத்தா.. எப்பவும் படிச்சுட்டே இருக்கீங்களே.. புதுமைப்பித்தன்.. மௌனி.. சுந்தர ராமசாமி.. ன்னு.. ஏன் தாத்தா டிவி பாக்கறதல..?”

      “அதுல என்னம்மா இருக்குது.. வெறும் கலரு மட்டும்தான்..”

      “நியூசு.. நல்ல படம்.. பிபிசி டாகுமென்டரி..  விளையாட்டு.. இதெல்லாம்..?”

      “பத்துல ஒன்னா இருக்கும்.. அந்த ஒன்ன தேடனும்.. ரண்டாவது படிக்கற மாதிரி வராது.. அது ஒரு போத.. டிவி பாக்கும்போது அந்த போத கெடைக்காது.. இன்னும் சொல்லப் போனா கண்கள பாதுகாத்துக்கலாம் பாரு.. “

      தாத்தா அப்படித்தான்.. அவரு தனியா தெரிவாரு.. பச்ச தண்ணிலதான் குளிப்பாரு.. பொம்பளைங்களாண்ட பேசமாட்டாரு.. நடந்தேதான் போவாரு எங்கேயும்.. கல்யாணத்துக்கு போனா மொய் எழுதமாட்டாரு.. வாழ்த்து சொல்லிட்டு வந்துடுவாரு.. கோவிலுக்குள்ள போகமாட்டாரு..  கடவுள் நம்பிக்க இல்லாதவரு.. டௌன் பஸ்ல ஏறி உக்காந்துட்டு பத்துருபா கொடுத்து டிக்கட்டு வாங்குவாரு..

      “எங்க போறீங்க..?”

      “பத்துருபாய்க்கு எங்க நிக்குமோ.. அங்க..”

      இறங்கி குளம்.. குட்டை.. ஆறு.. ஏதாச்சும் இருக்கான்னு விசாரிப்பாரு.. அந்தப் பக்கம் போயி உக்காந்திட்டு விவசாயம் செய்யறத கவனிப்பாரு.. ஏர் ஓட்டுறத.. நிலத்துல புழுக்கள் நெளியறத வேடிக்க பாப்பாரு.. முக்கியமா மீன் புடிக்கறது அவருக்கு ரொம்ப புடிக்கும்.. அது அவரோட பொழுது போக்குன்னு சொல்ல முடியாது.. வாழ்க்கைன்னு கூட சொல்லலாம்.. “ஒரு சில சமயங்கள்ள ஒரு சந்தோழம் கெடைக்குமில்லையா.. உலகத்தையே ஜெயிச்சுட்ட மாதிரி.. ஒண்ணுமே இருக்காது.. பசி.. பட்டினி. பணப்பிரச்சன.. குடும்ப பிரச்சன.. ஆனா மனசுக்குள்ள சந்தோழம் இருக்கும்..”

      “தண்ணி கிண்ணி அடிச்சா வரும்.. போலி சந்தோழம்.”“

      “இல்லம்மா.. அது உடம்பை ஏமாத்திக்கறது.. இது வேற.. எல்லாரையும் கட்டிப்புடிச்சுக்கனமுன்னு தோணும்.. வெயில் தெரியாது.. யாறாச்சும் திட்டினா சிரிப்பா வரும்.. அந்த மாதிரி.. “

      “யாருக்கு தாத்தா..?”

      “மீன் புடிக்கறவங்களுக்குதான்..”

      “எப்படி தாத்தா..?

“மீன் புடிக்கும்போது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். சின்னதா..? பெருசா.?. கெண்டையா..? கெட்லாவா..ன்னு..? கெடைக்கலைன்னா மறுபடி தூண்டில போடுவோம். மறுபடியும் காத்திருப்போம்.. அதுதான் ஒரு சந்தோசத்த..சஸ்பென்ஸ கொடுக்கும்…. கெடைச்ச பிறகு..? .. மீனோட துள்ளல்..  நழுவிட்ட போறத கப்புன்னு அமுத்தி புடிக்கறது.. பெருசா இருந்தா இரட்டிப்பு சந்தோழம்.. பாம்பு மீன கைல புடிக்க முடியாது.. அதுக்கு சேத்தோட அள்ளனும்.. கெளுத்திக்கு சேத்துலதான் வாசம்.. ரண்டு கையாளேயும் மண்ணோட அள்ளி போடும்போது தல மட்டும் வெளியே தெரியும்.. கோழிய அடிக்கும்போது பச்சாதாபம் வருமா.. ?”

“தெரியலியே..”

“வரலாம்.. ஆனா மீன் மேல வராது.. அது ஒரு சாபம்.. ஒரே ஒரு முற பெரிய கெண்ட கெடச்சது..  நம்ம ஆத்துப் பக்கம்.. புடிச்ச பிறகு துள்ளிக்கிட்டே இருந்தது… மீன புடிச்ச பெறகு கொஞ்ச நேரம் ஆட்டம் போடும்.. அதுக்கப்புறம் அடங்கிடும்.. ஆனா இது துள்ளி.. துள்ளி.. அங்க.. இங்க..ன்னு ஆட்டம் போட்டுக்கிட்டே இருந்தது.. அப்படி ஒரு மீன நான் பாத்ததே இல்லை.. பதனஞ்சு.. இருபது.. நிமிழம் போயிருக்கும்..  அப்பவும் அதே மாதிரி.. அப்பதான் அது மேல ஒரு இது வந்தது..”

“எது..?”

“ஒரு .. ம்.. ம்.. ஒரு கவனிப்பு.. காருண்யம்னு சொல்லுவாங்களே..”

“கருணை.. ?”

“இருக்கலாம்.. தெரியல.. ஆனா அந்த மீனு என்னைய திரும்ப வச்சது.. என்னடான்னு உத்து.. உத்து.. பாத்தேன்.. டக்குன்னு அத தூக்கி ஆத்துல வீசிட்டேன்.. வீசும்போது எது என்னைய ஒரு பார்வ பாத்த மாதிரியிருந்தது..”

“ஏதும் பேசலையா..?”

“கிண்டலா.. உயிரினங்களுக்கு அந்த புத்தி உண்டு.. நமக்கு புரியாது.. பாதுகாப்புக்குதான் நம்மள விட்டு ஓடுதுங்க.. நாய்ங்கதான் வேகமா நம்ம காலை வந்து சுத்திக்கும்.. அது மனுசனோட இருக்கறது.. குருவிங்களுக்கு கூட அந்த புத்தி உண்டு.. இல்லன்னா வீட்டுக்குள்ள கூடு கட்டுமா..? நம்மள நம்பிதானே கட்டுது.. நாம அதுக்கு பாதுகாப்பு கொடுத்தோமா.. நம்மள விட்டு வேகமா விலகிப்போன உயிரினங்கள்ள அதுவும் ஒன்னு.. மனுசனுக்கு அழிக்கற புத்தி.. சைன்ஸ நம்பமாட்டான்.. ஆனா ஜோஸியத்த நம்புவான்.. பக்கத்து வீட்டுக்கு உதவமாட்டான்.. ஆனா மல மேல ஏறி கோவில்ல உண்டியல்ல காசு போட்டு வருவான்.. இந்த முரண்தான் மனுசன்.. ஸ்கூலு.. அறிவியலு.. இதெல்லாம் மனுசனோட முரனை மாத்தலை.. முரன்பாட்டோட அவன் இருக்கறதும்.. அறிவியல் அவன வேடிக்க பாக்கறதும்.. இப்படித்தான் நூற்றாண்டுகள் போயிட்டிருக்குது.. சுயபுத்தி ரத்தத்துல இருக்கனும்.. நமக்கு வலி வரலைன்னா பொம்மையா இருக்கோமுன்னு அர்த்தம்.. யாரு வேணுமுன்னாலும் நமக்கு சாவி கொடுக்கலாம்.. இருபது.. முப்பது குழந்தைகள சாகடிச்சுட்டு போர் சமாதானம் பேசற நாடுகள் எல்லாமே எல்லா மதங்களையும் சார்ந்துதான் இருக்குது.. மதத்து பின்னாடிதானே போறாங்க.. அப்பறம் ஏன் ரத்தம் பாக்கறாங்க..?”

“நீங்க எந்த மதம் தாத்தா..?”

“சும்மா கேக்கறியா..?”

“அப்பா சொன்னாரு.. தாத்தா ஒரு லூசுன்னு..”

“ஏன்..?”

“கடவுள நம்பறதில்லையாமே.. அதனால..”

“அவன் பத்தோட பதினொன்னு.. அதனால அப்படித்தான் பேசியாகனும்.. நான்தான் சொன்னேனே.. எல்லாருமே பொம்மைங்கன்னு.. அவன் லூசுன்னு சொன்னது பொம்மையா இல்லாதவங்கள.. ஏன்னா அந்த கூட்டம் சின்னது.. அதுவே பெரிய கூட்டமாயிருந்தா ஆமா.. கடவுள் இல்லைதா..ன்னு வந்து நிப்பான்.. நகலெடுக்கிற புத்தி.. அதுக்கு பின்னாடி இருக்கறது சார்ந்திருக்கிற இயல்பு.. அப்பறம் சுயுபுத்திய தொலைச்சுட்டு நிக்கறது.. இதுக்கும் காரணம்  இருக்குது.. நம்மள ஒதுக்கி வச்சிருவாங்களோன்னு பயம்.. கோழத்தனம்.. குடும்ப நோய்.. புத்திய அடகு வச்சுட்டு அதுக்கு பின்னாடி மறைஞ்சுக்கறது.. குடும்பஸ்தனுங்க பெரும்பாலும் நல்லவங்களாவே காட்டிக்குவானுங்க.. அதுக்கு காரணம் இந்த நடிப்புதான்.. ஆனா அங்கதான் தப்பும்,, வன்முறையும் தொடங்குது..”

தாத்தா இப்படி நிறைய பேசுவாரு.. ஒரு சிலது புரியும்.. சிலது புரியாது.. அவரோட அலமாரில நிறைய புத்தகம் இருக்குது.. வழவழன்னு பெருசா.. சின்னதா.. பெரும்பாலும் படிச்சுட்டுதான் இருப்பாரு.. படுத்துட்டோ.. உக்காந்துட்டோ.. சும்மாயிருந்தா தூங்குவாரு.. ஹிப்பி வந்த பிறகு அதோட பழகறது அதிகமாயிடுச்சு.. வீட்டுக்குள்ள விடாத இருந்தவங்க அவரோட பிடிவாதத்த பாத்து ஹிப்பிய வீட்டுக்குள்ள விட்டாங்க.. ஹிப்பி புத்திசாலி.. வெளியே போயிடுவான் சில சமயம்.. வீட்டுக்கு பின்னாடி புதரு மாதிரி இருக்குது.. அங்க போயிட்டு வருவான்.. தாத்தாவோட ரூம்ல மட்டும்தான் இருப்பான்.. அண்ணிக்கு அவன ஆகாது..  சாப்பாடு போடறது.. தண்ணி காட்டறது.. குளிப்பாட்டறது.. எல்லாமே தாத்தாதான்.. மீன் புடிக்க போகும்போது இவன கூட்டிக்கிட்டு போவாரு.. சாப்பிடும்போது முள்ளு இல்லாம தருவாரு.. சமீபத்தல “இவனுக்கு ஒரு ஜோடிய ஏற்பாடு செய்யனும்..”னு சொல்லிட்டிருந்தாரு..  அதுக்குள்ள இப்படி..

      தாத்தா மேல ஊதுபத்தி புகை பறக்குது.. வளையம்.. வளையமா.. வீரம்மா இப்ப வந்த டீயையும் வேணாமுன்னு சொல்லிட்டா.. ஹிப்பி அப்படியே கண்ணசந்து படுத்துட்டான்..

      அண்ணன்காரன் வர்றான்.. அவன் கோவமா இருக்கறதா காட்டிக்கறதுக்காக..”உள்ளாற வா..” ன்னு காதுக்கு பக்கம் கடுகடுன்னு சொல்றான்..

      ஹிப்பிக்கு அது புடிக்காம  “உர்ர்ர்…ர்ர்..ரு”..ன்னு உறும அவனைய வேகமா எட்டி உதைச்சுட்டான்..

0000

      வீரம்மா அவன தடுக்க போனா.. ஆனா அதுக்குள்ள ஹிப்பி அடி வாங்கிட்டு ஒரு மாதிரி கத்திக்கிட்டே அவ காலை வந்து சுத்திக்கிட்டான்.. அவன் குரல்ல வலி இருந்தது.. காலை புடிச்சிட்டு அவளோட முகத்த பாத்தான்..  ஒரு கால் நடுங்கிட்டிருந்தது.. இவ ஆத்திரமா.. “என்னாச்சு உனக்கு..?”ன்னு கேட்டா அண்ணன்கிட்ட..

அதுக்குள்ள ஹிப்பி மேல இன்னொரு உத.. அவன் சட்டுன்னு அவகிட்டேயிருந்து உதறிட்டு வேற பக்கம் போயிட்டான்.. கேட்டை தாண்டி தெருவுல ஓடுறான்.. “புடிங்க.. புடிங்க..”ன்னு பின்னாடியே ஓடினா.. ஆனா அவன் ரொம்ப தூரத்துக்கு ஓடிட்டான்.. அவன் கத்தன சத்தம் வேற மாதிரி இருந்தது.. குறுக்கால ஒரு சந்துல நுழைஞ்சத பாத்தா.. பின்னாடியே ஓடினா..

“விடாத அவன..”ன்னு தாத்தா காதுல சொல்றாரு.. பின்னாடியே இன்னும் ரண்டு பேரு ஓடறாங்க.. சந்துல போயி பாத்தா இல்ல.. அங்கிருந்து மெயின் ரோடுக்கு சந்து சந்தா பிரியும்.. அடுத்த சந்துக்கு போனா.. அங்கேயும் காணோம்.. ஒரு குப்பத்தொட்டி.. ஒரு சைக்கிளு நிக்குது.. ஒரு பூன குறுக்கால போகுது.. அந்த மரத்து மேல காக்காயிங்க பறக்குது.. பின்னாடியே வந்தவங்க அவள இழுத்துக்கிட்டு போறாங்க..”என்ன இப்படி.. தாத்தா பொணம் அங்க இருக்குது.. நாயி பின்னாடி வந்துக்கிட்டு.. “ ன்னு சிரிக்கறாங்க..

“எங்கேயோ அது கத்தற சத்தம் கேக்குது.. விடுங்க.. விடுங்க..” ன்னு சொல்லியும் கேக்கல..

வீட்டுக்கிட்ட வந்தப்போ தாத்தாவ தூக்கறதுக்கு தயாராயிட்டாங்க.. எல்லாரும் எழுந்து நின்னுருக்காங்க.. பலக சத்தம்.. “டமுக்கு.. டமுக்கு.. “

அவர குளிப்பாட்டறாங்க.. அவ நேரா போயி அண்ணன் முன்னாடி நின்னா.. “எதுக்குய்யா அவன உதைச்ச.. ?”

அவள் அப்படி பேசனது கிடையாது.. நான்கு பேர் சுற்றிக்கொண்டார்கள்.. அண்ணி பக்கத்துல வந்தா.. “அவன் என்ன செஞ்சான்.. நான் என்ன செஞ்சேன்..?” ன்னு கேட்டா..

அண்ணன்காரனுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. ஆனா அவ மரியாத இல்லாம பேசினது புடிக்கல..  முகத்த திருப்பிக்கிட்டு தாத்தாவுக்கு துணி மாத்தற மாதிரி குனிஞ்சுக்கிட்டான். அப்பதான் தாத்தா முன்னாடி இருக்கறது இவளுக்கு தெரிஞ்சது.. அண்ணி அவள ஆறுதலா தொட்டு “நீ எதுவும் சாப்பிடல.. அதுதான் அவருக்கு கோவம்.. “னு சொன்னா..

“அதுக்கு ஹிப்பி என்ன பண்ணான்.. “ ஆத்திரமாக கேட்டாள்.. அப்பா பக்கத்தில் வந்து “சும்மாயிரும்மா.. அப்பறம் பேசிக்கலாம்.. நாயிக்காக இப்படியா.. கொஞ்சம் ஓரமா கூட்டிக்கிட்டு போம்மா அவள..” என்றார் அண்ணியிடம்

“வாம்மா.. “ என்றாள் அண்ணி.. தாத்தாவுக்கு உடை மாற்றி பொட்டு வைத்து வாயில் என்னவோ திணித்து..

“சாகும்போது எப்படி செத்தேனோ அதே மாதிரி குழிக்கு போயிடனும்மா.. ஒடம்ப பாடா படுத்திடுவாங்க..”

“நிறுத்துங்க.. “ என்றாள்.. கூட்டம் நிமிர்ந்து பார்த்தது..  “அதென்ன வாயில..?”

“துணிம்மா.. நீ எதுக்கு கேக்கற..? ஓரமா போயி நில்லு..”,, அப்பா

“அதெல்லாம் எடுங்க.. வேணாம்.. எங்க தாத்தா சொல்லியிருக்காரு.. சம்பிரதாயமெல்லாம் வேணாம்.. பலக வேணாம்.. பட்டாசு வேணாம்.. மாலை.. ஊதுபத்தி.. மந்தரம் எதுவும் வேணாம்..

கூட்டத்தில் ஒருவன் ..”சாஸ்தரம் பாக்கலைன்னா எப்படி..?”

“அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம்..”

அப்பா அருகில் வந்து அவளது முதுகை பிடித்து வெளியே இழுத்தார்.. “என்ன நினைச்சுட்டு பேசறே.. “ கத்தினார்..

“தாத்தா சொல்லியிருக்காரு..”

“எங்கிட்ட சொன்னாரா.. அவருக்கு நான்தான் பையன்.. நீ இல்ல.. கொள்ளி வைக்கப்போறது நான்தான்.. நீதான் செய்யனமுன்னா தாராளமா செஞ்சுக்க.. டேய்.. இந்த பக்கம் வந்திடு..” அண்ணன்காரன் ஒதுங்கி நின்றான்.. கூட்டம் அப்பால் போனது.. தாத்தா தனியாக தெரிந்தார்.. அவள் பின்னாடி திரும்பி தெருவை பார்த்தாள்.. தாத்தாவின் கண்கள் உள்ளே போயிருந்தது.. தொப்பலாக நனைந்திருந்தார்.. கைகளை ஒன்று சேர்த்து மஞ்சள் துணியில் கட்டியிருந்தார்கள்.. கால்களிலும்.. வயிறு லேசாக மேலே வந்திருந்தது.. காதுகளில் தண்ணீர் இறங்கி ரோமங்களை நனைத்திருந்தது.. தாடையில் ஊர்ந்த ஈ.. இடுப்புக்கு கீழே புது வேட்டியில் அங்கங்கே குங்கும கரைசல்.. அமைதி.. கிசுகிசுப்பான குரல்கள்.. வெயில் தாத்தாவின் நெற்றியில் விழுந்து இங்கும் அங்கும் நகர்ந்தது..

அண்ணன்காரன் அவளை எரிச்சலுடன் பார்த்தான்.. அப்பா தலையில் கை வைத்துக்கொண்டு அந்த இடத்திலேயே உட்கார்ந்துக் கொண்டார்.. தாத்தாவுக்கு ஊற்றிய தண்ணி அவளது காலுக்கு கீழே வட்டம் போட்டு நழுவியது.. பெண்கள் பக்கமிருந்து இவளை திட்டுவது கேட்டது..

“இவ என்ன இப்படி பேசறா.. பைத்தியமாட்டம்..”

எங்கேயோ ஹிப்பியின் குரல்.. சட்டென்று திரும்பி தெருவுக்கு வந்தாள்.. ஹிப்பியின் குரல்தான்.. அதே பரிதாபமான பலவீனமான இழுத்து.. இழுத்து ஊளையிடும் குரல்.. ஆனால் அந்த தெருவில் அது இல்லை.. அருகிலிருந்த ஒரு ஆள் “அது வந்து.. வந்து பாத்துட்டு போயிடுதும்மா.. பின்னாடியே போனா ஓடிடுது.. புடிக்க முடியல.. “.. என்றான்.. அவள் முன்னோக்கி நடந்தாள்.. அப்பா அண்ணனை பார்த்தார்.. அண்ணன் தாத்தாவை நெருங்கினான்.. “பேத்திக்கு தாத்தா மேல பாசம்.. அதுதான் இப்படி.. “ ஒரு ஆள் அப்பாவிடம் சமாதானம் சொன்னான்..”

“ஆக வேண்டியத பாருங்க.. எங்க போனா இப்ப அவ..?”

“நாய தேடிட்டு..”

“எல்லாம் முடியட்டும்.. அத ஒழிச்சு கட்டிட்டுதான் மறுவேல..”

பாங்கா ஊதினார்கள்.. “ஊஊஊஊஊ…..ஊஊஊஊஊ….”

டிங்.. டிங்.. டிங்.. டிங்..

“பலகய அடிக்க சொல்லுப்பா.. “

டமுக்கு…டமுக்கு.. டன்டனக்கு.. டமுக்கு..டமுக்கு..

                        0000

ஊர்வலம் அண்ணா சிலையை தாண்டி.. இரும்புக் கடைகளை தாண்டி.. ராகவன் தியேட்டர் பக்கம் திரும்பி .. ஆட்டோ ஸ்டேண்ட் வந்தபோது வீரம்மா சோர்ந்து போயிருந்தாள்.. அவள் அண்ணி பக்கத்தில் வந்து..”அதா.. அங்க உக்காரலாம்  கொஞ்ச நேரம்.. “ என்றாள்.. பட்டாசு வெடித்தார்கள்.. இரண்டு ஆட்டோக்கள் காத்திருந்து சென்றது.. ஒரு ஆட்டோவின் முதுகில் பேனரில் தாத்தா சிரித்தபடி இருந்தார்.. வெண்புகை அந்த இடத்தில் கலைய இரண்டு நிமிடங்கள் ஆனது.. பலகை சத்தம் ரிதம் மாறியது… டுடுங்… டுடுங்..

கடை மாடிகளில் ஒன்றிரண்டு பேர் எட்டிப்பார்த்தார்கள்.. தரையில் சிதறியிருந்த பூக்கள்.. வாசனை.. மீண்டும் பட்டாசு வெடித்தார்கள்…

பாங்காவின் “உஉஉஉ….ஊஊஊஊஊ……”

ஒரு பஸ் காத்திருந்தது.. பெண்கள் நின்றார்கள்.. அண்ணி அவள் கையை பிடித்துக்கொண்டாள்.. முன்னாடி மலர் வளையங்களால் சுற்றப்பட்ட பாடை நகர்ந்தது.. ஒரு சில பெண்கள் “ராசா.. மகராசனா போ ராசா.. “ என்றார்கள்.. வாயை பொத்திக்கொண்டு ஓரமாக ஒதுங்கினார்கள்.. வீரம்மா நகர முற்பட்டாள்.. அண்ணி பிடித்துக்கொண்டாள்..

கொஞ்சம் முன்னாடி நகர்ந்து சைக்கிள் கடை பக்கம் இடதுபுறம் திரும்பினால் சுடுகாடு.. வெயில் பலகை அடிப்பவர்களின் முதுகில் இறங்கி கைகளை நனைத்தது.. திருப்பத்தில் நிறுத்துவிடுவார்கள்.. கடைசி அடி.. துடுங்.. துடுங்.. துடுங்..

“என்னைய விடு..” வீரம்மா திமிறிக்கொண்டு விடுபட்டு இன்னும் இரண்டு பெண்கள் எட்டிப் பிடித்தும் உதறிக்கொண்டு நடந்தாள்..

டிங்… டிங்.. டிங்.. உஉஉஉஉஉஉ…..ஊஊஊஊஊஊஊ

கூட்டத்துக்கு இடதுபுறம் நடந்து வளைந்து கடந்து தாத்தாவின் அருகில் வந்தாள்.. அவள் அண்ணன் நெருங்கி வந்து தடுத்தான்..

“இங்கெல்லாம் வரக்கூடாது.. போ.. போ..”

“நான் வருவேன்.. “

“நீயென்ன பைத்தமா..?”

“ஆமா..”

அப்பா அருகில் வந்து “என்னடா..?”

“சுடுகாட்டுக்கு வர்றாளாம்..”

அவர் கண்களால் சுட்டெறித்தார்.. கைகளை பற்றினார்.. அவள் உதறி முன்னேறி தாத்தாவை நெருங்கி  பாடை தூக்குபவர்களின் அருகே போனாள்..

“ஏம்மா.. இங்கெல்லாம் வரக்கூடாதும்மா.. “

“எங்க தாத்தா.. நான் வருவேன்..”

“உங்க தாத்தா சொன்னாரா..?”

“ஆமா.. கடைசி வரைக்கும் வாம்மான்னாரு..”

அப்பா நெருங்க ஒரு ஆள்..”ஏங்க .. விட்டுடுங்க.. பொம்பளைங்க வரக்கூடாதுன்னு இருக்கா.. வீட்ல பேசிக்கோங்க எல்லாத்தையும்.. “

“கல்யாணம் ஆகாத பொண்ணுய்யா..”

“தைரியமா இருக்குதுங்க.. விட்டுடுங்க..”

“வா உன்னைய .. வீட்ல பேசிக்கறேன்..”அப்பா கருவிக்கொண்டு முன்னாடி போனார்.. அவளுக்கு ஏதும் ஏறவில்லை.. கண்ணீர் கரைந்து உப்பு கரித்தது.. வெயில் முதுகில் சுட்டது.. அவளை தாண்டியவர்கள் அவளை திரும்பி பார்த்தார்கள்.. அவளை சுற்றி ஒரு வட்டம் தானாக அமைந்தது..  காதுகளில் குரல்கள்..

“டமுக்கு.. டமுக்கு..”

“டிங்.. டிங்.. டிங்.. ஊஊஊஊஊ “

பட்….பட்…பட்…. பட்… பட்..

ஒரு ஆளு..”ஏம்மா.. என்னாச்சும்மா அந்த நாயி..?”

மௌனமாக நகர்ந்தாள்.. திருப்பத்தை தாண்டி வேப்ப மரம்.. தண்ணீர் குழாய்.. உடைந்து போயிருந்த கேட்.. சில அடிகளுக்கு காம்பவுண்ட் சுவரில் ஆம்புலன்ஸ் வண்டி எண்கள்.. மரத்தை தாண்டி இடதுபுறம் குழிகள்.. பக்கம் பக்கமாக.. அடையாளம் இன்றி.. வெறும் மண் குவியலோடு.. நிறைய குவியல் காணாமல் போய் வானம் பார்த்தது.. வீரம்மாவுக்கு ஒதுங்கினார்கள்.. நடந்து போன இடத்தில் தண்ணீர் தேங்கி புழுதி.. சேறு.. ஆங்காங்க மனித மலம்.. ஏழெட்டு நாய்கள் சற்று தூரத்தில் சண்டை போட்டுக்கொண்டிருந்தது..  நிறைய கிழிந்த பாய்கள்.. புடவைகள்.. இரண்டு பக்கமும் முள்செடிகள்.. பிறகுதான் தெரிந்தது அவளுக்கு.. குழிகளின் மீதுதான் நடக்கிறார்கள்.. இவளும் நடக்கிறாள்… ஒன்றிரண்டில் மட்டும் கல் வைத்து பெயர் எழுதியிருந்தார்கள்..

கண்ணன்.. பிறப்பு..1988.. இறப்பு.. 2019

பிரபு.. ஆசிரியர்..

கண்ணம்மா.. பிடி டிரான்ஸ்போர்ட்..

ஒரு இடத்தில் இறக்கினார்கள்.. சுற்றிலும் நிற்பதற்கு இடமில்லை.. வேறு குழிகள்.. அதன் மேலேயே நின்றார்கள்..

“தள்ளுங்க.. தள்ளுங்க..” என்றாள்..

தள்ளினார்கள்.. அவள் நின்றிருந்த இடமும் ஒரு குழிதான்.. யாரோ.?. அழுகை வரும் போலிருந்தது… நாய்கள் சத்தம்.. மலர்களுக்கு நடுவில் தெரிந்த தாத்தாவின் தலை.. கால்கள்.. இன்னும் கொஞ்ச நேரம்.. அப்பறம்..?.. அடுத்த வருஷம் தாத்தாவின் மீது யாறாவது நிக்கலாம்.. முகத்தை மூடிக்கொண்டாள்.. அழுதாள்.. தாத்தாவின் வாசனை.. குரல்.. அந்த சிரிப்பு.. இதெல்லாம் இனி இருக்காது.. குழியை சுற்றி வந்தார் அப்பா.. பானையை உடைத்தார்கள்..

“எல்லாமே வழிவழியா வர்றது.. அர்த்தம் தெரியாம..”

“நமக்கும் அப்படித்தானே தாத்தா..”

“ஆமா.. நம்ம சுத்தி மனிதர்கள விட வரைமுறைகள்தான் அதிகம்..”

தாத்தாவை குழியில் இறக்கினார்கள்.. தாத்தாவின் கண்களை மட்டுமே பார்த்தாள்.. கண்கள் மீது மண்துளி விழுந்தது.. தலை மீது.. நெஞ்சு மீது.. கால்கள் மீது..

“சாவுன்னா பயமா இருக்குது தாத்தா..”

“எனக்கில்லை..”

“அவ்வளவுதானா தாத்தா.. ?”

“அவ்வளவுதான்.. எல்லாம் இருட்டு.. பந்த பாசத்துக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி..”

தாத்தாவின் கண்கள் தெரியவில்லை.. வேட்டியின் ஒரு பகுதி மட்டும் தெரிந்தது.. “மண்ண போடும்மா..” என்றது ஒரு பெருசு

தாத்தா தெரியவில்லை.. “போங்க.. போங்க..” என்றார்கள்.. எல்லாரும் சுமாராக கலைய ஆரம்பித்தார்கள்.. ஓரமாக நின்றிருந்தவர்கள் காணாமல் போயிருந்தார்கள்.. சட்டென்று அந்த இடத்தில் ஒரு வெறுமை.. வேகவேகமாக தள்ளப்படும் மண்.. அப்புறப்படுத்தப்படும் பூக்கள்.. நடந்து போகும் செருப்புகளின் ஓசை.. நாய்களின் சத்தம்.. அதே முள் தடம்.. திரும்பி நடந்தாள்.. முடியாமல் திரும்பியும் பார்க்க முடியாமல் நின்று நிதானித்தாள்..

“போறேன் தாத்தா..”

“போய்தான் ஆகனும்.. போ.. போ..ஹிப்பிய விட்டுடாத”

      மல நாற்றம்.. விழுந்துக்கிடக்கும் செருப்புகள்.. காய்ந்து போயிருந்த புற்கள்.. எரிந்த மரத்துண்டுகள்.. நேற்றோ அதற்கு முன்னரோ புதைத்திருந்த இன்னொரு குழி.. வாடியிருந்த பூக்கள்.. சிதம்பரம்.. ஓய்வுபெற்ற எஸ்.ஐ..

      தாத்தாவுக்கும் வைக்கனும்.. குடை கட்டனும்.. சிமெண்ட் போடனும்.. யாரோ கையை நீட்டினார்கள்.. கவனிக்கவில்லை.. ஒரு ஆள் வேப்ப மரத்தடியில் பீர் பாட்டிலை திறந்துக்கொண்டிந்தான்.. தரையில் விழுந்திருந்து வேப்பம் பூக்கள்.. வேப்பம்பூ வாசனை..

      “ரோட்ல உக்காந்திட்டு போங்கப்பா..”

      தாத்தா சிரித்தார்.. “எல்லாம் அடகு புத்தி..”

      ரோடிலிருந்து தாத்தாவை திரும்பி பார்த்தாள்.. இரண்டு பேர் மண்ணை குவியல் பண்ணி மாலைகளை அடுக்கிக்கொண்டிருந்தார்கள்.. சற்று தள்ளி பின்புறம் கருவேல செடிகளுக்கு நடுவில் தாத்தாவின் குழியை பார்த்தவாறு ஹிப்பி நின்றிருந்தான்..

                              0000

 

        

                        ===============

  

 


“    

Series Navigationவாழ நினைத்தால் வாழலாம்…ஓட்டம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    jananesan says:

    எல்லாரும் அவரவர் வழக்கத்திலதான் வாழ்றாங்க -நல்ல வரி.இந்தக் கதையின் சாரமும்ம் இதுதான்.வாழ்த்துகள் வேல்விழி.

  2. Avatar
    balaiyer says:

    At this corona age, a story like this!!!. it is all our bad times. some people think that they are thinking differently and thus these are the creations! Good luck to readers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *