135 தொடுவானம் – மருந்தியல்

தொடுவானம்

டாக்டர் ஜி. ஜான்சன்

135. மருந்தியல்

நான்காம் வருடத்தில் இன்னொரு பாடம் மருந்தியல் ( Pharmacology ). மருத்துவப் படிப்பில் இது மிகவும் முக்கியப் பிரிவாகும். நோயின் தன்மையைக் கண்டறிந்தால் மட்டும் போதாது. அதைக் குணப்படுத்துவது இன்றியமையாதது. அதற்கு சரியான மருந்துகள் தந்தாகவேண்டும். அப்போதுதான் நோய் குணமாகும். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
எவ்வளவுதான் சிறப்பாக ஒரு மருத்துவர் நோயின் உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் வல்லுனராக இருந்தாலும், அதை அவர் சரியான மருந்துகள் மூலம் குணமாக்கினால்தான் அவருக்குச் சிறப்பு.
நமது நாட்டில் பண்டைய வைத்தியர்கள் உடற்கூறு தெரியாமலும், உடலியல் தெரியாமலும், பலதரப்பட்ட நோய்களை அனுபவம் மூலமாக பல்வேறு மூலிகைகளைக் கொண்டு குணமாகியுள்ளது வரலாறு. அவர்கள் எவ்வித ஆராய்ச்சியும் செய்யாமல் வெறும் அனுபவம் மூலமாகவே இத்தகைய மூலிகைகளைத் தந்து நோய்களைக் குணப்படுத்தயுள்ளனர். அதே மூலிகைகள் பலவற்றை மேல்நாட்டவர் தெரிந்துகொண்டு அவற்றை முறையாக ஆராய்ந்து அவற்றின் தன்மையை உணர்ந்தபின் அவற்றிலிருந்து நவீன மருந்துகளை உற்பத்திச் செய்து பயன்படுத்தலாயினர். அவற்றைக் காலங்காலமாகப் பயன்படுத்திய நம் நாட்டு வைத்தியர்கள் அவ்வாறு செய்வதற்கு வசதி இல்லாத காரணத்தினால் அவர்களுடைய மருந்துகளுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல் போனதால் அவை அதிகமாகப் பயன் படாமல் போய்விட்டது. அதனால் இன்று மேல்நாட்டு மருந்துகள் போன்று ஆயுர்வேத மருந்துகள் உலகளாவிய நிலையில் பயன்படாமல் முடங்கியுள்ளன. இப்போதாவது இது குறித்த விழிப்புணர்வு உண்டாகி நம் நாட்டு மருந்துகள் ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே!
மருந்தியல் அறிவியல்பூர்வமானது. மருந்தியல் மருத்துவத்தின் ஒரு பிரிவாகும். அது மருந்துகளின் செயல்பாட்டைக் கற்பதாகும்.மருந்து என்பது செயற்கையாகவோ,மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது உடலிலிருந்து எடுத்ததாகவோ இருக்கலாம். மருந்துகள் உடலியல் மாற்றங்களை செல்களில், திசுக்களில் அல்லது உடல் உறுப்புகளில் உண்டாக்குபவை. மருந்தியல் உயிரினத்துக்கும் இரசாயனத்திற்கும் உண்டாகும் மாற்றங்களை பற்றியதாகும்.
மருந்தியல் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அவை பார்மகோடைனமிக்ஸ் ( Pharmacodynamics ) பார்மக்கோகைனட்டிக்ஸ் ( Pharmacokinetics .என்பவை. ( இவற்றை தமிழ் படுத்துவது சிரமம் ).
பார்மக்கோடைனமிக்ஸ் என்பது மருந்துகள் உயிரினங்களின் மீது உண்டாக்கும் செயல்பாட்டைப் பற்றியது. பார்மக்கோகைனட்டிக்ஸ் என்பது மருந்துகள் உடலினுள் சென்றதும் அதை ஜீரணிப்பதும், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செலுத்துவதும், அதை பயன்படுத்துவதும், மீதமுள்ளதை வெளியேற்றுவதும் பற்றியதாகும்.பற்றியதாகும்.
துவக்க கால மருந்தியலாளர்கள் இயற்கையில் உள்ள தாவர வகைகளிலிருந்து மருந்துகள் தயாரிப்பதில்தான் கவனம் செலுத்தினர். 19 ஆம் நூற்றாண்டில்தான் மருந்தியல் உயிரியல் மருத்துவ ( Biomedical ) அறிவியல் துறையாக மாறியது. அதன்பின்பு அனைத்து மருந்துகளும் முறையான அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு நோய்களைக் குணமாக்கும் தன்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
மருந்துகளை நாம் உட்கொண்டதும் அவை ஐந்து வகையில் மாற்றப்படுகின்றன .
1. வெளியேறுதல் ( Liberation ) – மாத்திரை வடிவில் உள்ள மருந்து உடைக்கப்பட்டு பொடியாகி நீரில் கலந்து குழம்பாகிறது.
2. உட்கவரல் ( Absorption ) மருந்துகள் மூன்று விதமாக உடலினுள் செல்கிறது. அவை தோல் வழியாக, குடல் வழியாக, வாய் ஜவ்வுப் பகுதி வழியாக எனலாம்.
3. பரவல் ( Distribution ) – மருந்துகள் உடலின் பாகங்களுக்குப் பரவுதல்.
4. வளர்சிதை மாற்றம் ( Metabolism ) – மருந்துகள் இரசாயனமாக மாற்றம் .கண்டு .பயன்படுதல். மருந்தில் நச்சுத்தன்மை உள்ளதா என்பது பற்றியது.
5. கழிவு நீக்கல் ( Excretion ) – மருந்துகள் பயன்பட்டபின்பு கழிவுகளாக பித்தம், சிறுநீர், வியர்வை, தோல், சுவாசம் மூலமாக வெளியேறுகின்றன.
மருந்துகள் பயன்படுத்த வருமுன் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த மருந்துகள் குறிப்பிட்ட நோயை குணமாக்கவல்லது என்பதை நிச்சயப்படுத்தவேண்டும். அந்த மருந்துகள் பாதுகாப்பானவை என்பதும் நிச்சயப்படுத்தவேண்டும்.இதற்கு மிருகங்கள் மீது அந்த மருந்துகள் பயன்படுத்தி அதன்பின் மனிதர்மேலும் பயன்படுத்தி பாதுகாப்பானைவை என்பது நிச்சயப்படுத்தவேண்டும்.
மருந்தியல் பாடம் கல்லூரி வகுப்பறையில் நடந்தது. அதை நடத்தியவர் டாக்டர் பால் ஸ்டீபன் என்பவர். அவர் அழகான ஆங்கிலத்தில் பாடங்கள் எடுப்பார்.
மருந்துகளின் பெயர்கள், அவற்றின் இராசயனத் தன்மைகள், அவற்றின் நச்சுத் தன்மைகள், அவை குணப்படுத்தும் நோய்கள் முதலியவற்றை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. இதை ஓராண்டு பயிலவேண்டும்.சற்று கடினம்தான். வேறு வழியில்லை. சிரமப்பட்டு மருந்தியல் பாடங்களைக் கற்றேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationதிருநம்பிகள்