இருக்கும்வரை காற்று கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத்
ஏ.எம். தாஜ் அவர்கள் இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளராவார். இவர் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு எழுத்தாளனாக, ஒரு பாடகனாக, ஒலி ஒளி அறிவிப்பாளனாக, ஒரு சட்டத்தரணியாக பல துறைகளிலும் கால் பதித்திருக்கிறார்.
இவரது கன்னிக் கவிதை நூலே ஷஇருக்கும் வரை காற்று| ஆகும். அழகிய அட்டைப்படத்துடனும், அழகிய வடிவமைப்புடனும் மிகவும் கச்சிதமாய் சிறியதும் பெரியதுமான 43 கவிதைகளை உள்ளடக்கியதாக 80 பக்கங்களில் கவிஞர் மு.மேத்தாவின் வாழ்த்துரையுடன் வெளிவந்து இருக்கிறது இவரது கவிதை நூல்.
வேதாந்தி என்ற புனைப் பெயரில் எழுதி வரும் கவிஞர் சேகு இஸ்ஸதீனின் முன்னுரை இந்த நூலுக்கு கனதியை சேர்க்கின்றது. சேகு இஸ்ஸதீன் அவர்கள் தனதுரையில்
சமூக விடுதலைக்கான ஒரு சத்தியப் போராட்டத்தில் எனது தேர்ப்பாகர்களில்  ஒருத்தனாய் இருந்து எனது களைப்பைக் கலைத்து சலிப்பை ஆசுவாசப்படுத்தி வெற்றிகளைத் தேடித் தந்த ஒரு வித்துவக் கலைஞன்தான் தாஜ். மென்மையான அவனது உள்ளத்தைப் போர்த்திய மேலங்கியில் முஸ்லிம் சமூக உரிமைப் போராட்டத்துக்கான உணர்வுக் குண்டுகளைச் சுமந்து திரிந்தவன் அவன். மனித நேயம் அவனது மதம், ஜீவகாருண்யம் அவனது மார்க்கம், சமூக விடுதலை அவனது கொள்கை, சமத்துவம் அவனது கோட்பாடு, சகோதரத்துவம் அவனது பயிற்சிப் பாசறை என்று கவிஞர் ஏயெம் தாஜைப் பற்றி சொல்கிறார்.
விரக்தியின் விளிம்பில் இருப்பவர்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். அவர்களின் துயர் எத்தனைக் காலம் ஆனாலும் மறைந்துவிடப் போவதில்லை. உலகெங்கிலும் மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பது வாடிக்கையாகிப்போன சமாச்சாரம். அதை உவமானமாக்கொண்டு ஒரு ஆண் பெண்ணிடம் அவளது இதயத்தை பெறுவது கஷ்டம் என்பதை விரக்தி என்ற கவிதையில் (பக்கம் 28) பின்வருமாறு சொல்கிறான்.
இழந்த மண்ணை
போராடிப் பெறுவதற்கு
பலஸ்தீனமா
உன் இதயம்?
தவிப்பு (பக்கம் 40) என்ற கவிதை நிவாரணம் வழங்குவதைப் பற்றி நச்சென்று பேசுகிறது. அரசு வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்காக நிவாரணம் வழங்குகிறது. தண்ணீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது சரியாக இருக்கலாம். ஆனால் கண்ணீர் வெள்ளத்தில் மிதப்பவர்களுக்கு?
அரசு
வெள்ள நிவாரணம்
கொடுக்கப் போகிறதாம்
கண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கும்
நமக்குமா?
பல்கலைக்கழகங்களில் நடக்கும் ரெக்கிங் பற்றி வளாகத்தில் ஒரு போர்க்காலம் என்ற கவிதை பேசுகிறது. பகிடிவதை சரியா, பிழையா என்ற விவாதங்களுக்கு அப்பால் பகிடிவதை செய்யப்படுவதையும் இரசிக்கும் விதமாக கவிஞர் தாஜ் அவரது கவிதையில் (பக்கம் 51) பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
விற்பனைக்கு வரும்
பூக்களெல்லாம்
ஒரு தோட்டத்தில்
பூத்ததில்லை..
அதனால்
கோபப் படாதீர்கள்
சந்தைப்படுத்தலுக்கு
தயார் செய்கிறோம்..
மரங்களில் மோதி
காற்றின் சிறகுகள்
உடைந்ததுமில்லை..
முகில்கள் மூடி
ஒரு பௌர்ணமி இரவு
மறைந்ததுமில்லை..
ஆகையால் அஞ்சி ஓடாதீர்
மரணத்தைப் போல்
ரெக்கிங் நிலையானது!
சத்திய விசாரணை (பக்கம் 53) என்ற கவிதை தனிமையை பாடி நிற்கிறது. வாழ்வு இருட்டாகிப்போன பின் அதில் வெளிச்சம் ஊற்ற யாரிருப்பார் என்று கவிஞர் பின்வருமாறு அங்கலாய்க்கிறார்.
உறைந்து கிடக்கும்
வாழ்வின் ஒரு பகுதியும்
காய்ந்து கிடக்கும் மீதியும்
நிரந்தரமாயின்
மூச்செடுக்க முடியாத அழுத்தம்
எனக்குள் அடங்கிப் போக
என்கூட யாரிருப்பார்?
விடிவுகளில்லாத
இரவின் விழிகளுக்குள்
சூரியனை உடைத்து ஊற்ற
என்னோடு யார் வருவார்?
ஒரு அழகான பெண்ணின் கண் வீச்சில் இன்னும் சிக்காத ஆண் அவளைப் பற்றி எறிகணை (பக்கம் 65) என்ற கவிதையில் பின்வருமாறு கூறுகிறான்.
உன்
கூர்மையான பார்வையால்
என்னை வேட்டையாட வந்தாய்!
உன் குறியில்
அதிகம் தப்பிப் பிழைத்தவன்
இனியும் என்னை
அப்படிச் செய்ய வேண்டாம்!
உயிர்கொல்லும்
உன் விழிகளின் சுற்றிவளைப்பில்
இன்னும் சிக்காத கைதி நான்!
வாழ்க்கையின் தத்துவத்தை நமக்குணர்த்தும் கவிதையாக வாழ்க்கை (பக்கம் 79) என்ற கவிதையைக் கொள்ளலாம். அடுத்த நொடி உயிருடன் இருப்போமா என்பது யாருக்கும் தெரியாது. வாழ்கின்ற சொற்ப காலத்தில் எத்தனைப் பேரை வீழ்த்தியிருப்போம்? அடுத்த வேளை உணவை உண்ண நம்முடலில் உயிர் இருக்குமா? சில வரிகள் இவ்வாறு…
அந்தக் கடைசிச் சொல்
என்னவென்று தெரியாது
இரணமும் தண்ணீரும்
இன்னும் எவ்வளவென்று தெரியாது
தாயோடுதான் வந்தோம்
யாரோடு போவோம்?
நூலாசிரியர் கவிஞர் ஏயெம் தாஜுக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் காத்திரமான பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!
நூலின் பெயர்; – இருக்கும்வரை காற்று (கவிதைகள்)
நூலாசிரியர் – ஏயெம் தாஜ்
தொலைபேசி – 0777780807
மின்னஞ்சல் – யஅவாயதரநெளூபஅயடை.உழஅ
விலை – 300 ரூபாய்