ஜாக்கி சான் 17. குருவின் இளவல்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 17 of 24 in the series 24 நவம்பர் 2013

Jackie-Chan-jackie-chan-5468506-553-800உணவிற்குப் பின் இரவு வகுப்பிற்கு ஆசிரியர் வராததால், குரு யூ தன் பயிற்சி வகுப்பை நடத்தத் தீர்மானித்தார். மதியம் முழுவதும் உண்பதும் பேசுவதுமாகக் கழித்த மாணவர்களை அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தீவிரப் பயிற்சி வகுப்பாக அது அமைந்தது.

சீன நாடகத்தில் சில நேரங்களில் ஆடாமல் அசையாமல் சிலை போல் நிற்க வேண்டும். அதற்காக பயிற்சி செய்வது மிகவும் கடினம். குருவும் யூன் லுங்கும் இரும்புக் கரங்களால் அதைச் செய்யத் தூண்டும் போது கொடுமையிலும் கொடுமை.

குரு அனைத்து மாணவர்களும் எப்படி நிற்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். யூன் லுங், “இதோ ஆரம்பிக்கலாம்.. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.. குத்து, உதை, திரும்பு, குத்து, உதை..” என்று கட்டளையிட்டான். இதைச் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென “நில்லுங்கள்” என்று குரு கத்தினார். ஒரு கால் மேலே இருக்க மாணவர்களனைவரும் அப்படியே நின்றனர். ஒற்றைக் காலில் ஒரு நிமிடம் வரையிலும் ஆடாமல் அசையாமல் அனைவரும் நின்றனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, “சரி போதும்” என்று சொன்ன குரு தொடர்ந்து, “யூன் லோவைத் தவிர” என்று முடித்தார்.

மாணவர்கள் அனைவரும் ஆயசத்துடன் அப்படியே மூச்சு வாங்க கால்களைக் கீழே வைத்தனர்.

சான் பற்களைக் கடித்துக் கொண்டே அப்படியே நிற்க முயன்றான். இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. குரு அப்படியே எந்ந உணர்ச்சியும் காட்டாமல், சானின் இயலாமைப் பார்வையைக் கண்டார். பிறகு யூன் லுங்கை “தேநீPர் கொண்டு வா” என்றார். அவன் வேண்டுமென்றே மெதுவாக சமையலறைக்குச் சென்று தேநீரைக் கொண்டு வந்தான். தேநீரை ஜாடியிலிருந்து மெல்ல கோப்பையில் விட்டுக் குடித்தார். எப்போது விடுதலை கிட்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்த சான் குருவின் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருந்தான். நிதானமாக அதைக் குடித்தார். சானுக்குக் கத்த வேண்டும் போலிருந்தது.

“இப்போது நீ எனக்கு தத்துப்பிள்ளை என்பதால், நீ மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டே, திரும்பவும் கோப்பையில் தேநீரை விட்டு நிரப்பினார்.

“உன்னுடைய சகோதர சகோதரிகள் பயிற்சி செய்யும் போது நீ இரண்டு மடங்கு பாடுபட வேண்டும். எதையெல்லாம் அவர்கள் பயில்கிறார்களோ, அதை நீ இரண்டு மடங்கு மேலாகப் பயில வேண்டும். எதை என் மகனிடம் எதிர்பார்க்கிறேனோ, அதை நீ செய்து காட்டி எனக்குப் பெருமை சேர்க்க வேண்டும்” என்றார்.

பிறகு அப்படியே குனிந்து, கோப்பையைச் சானின் தூக்கியிருந்த காலின் மேல் வைத்தார்.

“நீ அதைச் சிறிது சிந்தினாலும் தண்டனை பெறுவாய்..” என்றார். “அத்துடன் நீ தண்டனை பெறும் போது மற்றவர்கள் பெறுவதை விட இரண்டு மடங்கு பெறுவாய்..” என்று குரு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பக்கத்தில் நின்றிருந்த யூன் லுங் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. குருவின் மகனுக்கு நல்ல சலுகை என்று எண்ணிக் கொண்டான்.

தேநீர் கோப்பை அவர் எதிர்பார்த்தது போல் கீழே விழுந்தது.

குரு அவனை மிகவும் ஏமாற்றத்துடன் பார்த்து, பிரம்கை கொண்டு அடித்து முட்டிக் கால் போடுமாறு பணித்தார். காலைக் கீழே வைக்க முடிந்ததே என்று சான் ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

அன்றிலிருந்து நடப்பது அனைத்தும் சானுக்கு மேலும் மேலும் கஷ்டத்தையே தந்தன. ஒரு முறை யூன் குவாய் கைகளைக் கொண்டு தலைகீழாய் நிற்கும் பயிற்சியைச் செய்யும் போது சுவரில் ஓய்வுக்காக கால்களை வைத்ததால் அவனுக்கு இரண்டு பிரம்படிகள் கிடைத்தன.

பிறகு குரு சானுக்கு அருகே வந்தார். சான் கஷ்டப்பட்டு சரியாக நேராக நின்ற போதும், நான்கு பிரம்படிகள் கொடுத்தார்.

“நீ என்னுடைய பிள்ளை என்பதால், அவனது தோல்வி உன்னுடைய தோல்வி. அவனது தண்டனை உன்னுடைய தண்டனை. நீ தான் எல்லோருக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும்..” என்றாரே பார்க்கலாம். இதைக் கேட்ட யூன் லுங் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டான். குரு அவனரருகேச் சென்று ஓங்கி அறைந்தார். பிறகு சானுக்கும் இரண்டு அறைகள் விட்டார்.

“யூன் லோ.. பார்த்தாயா.. இனிமேல் எப்போதெல்லாம் தண்டைனை தரப்படுகிறதோ, அப்போதெல்லாம் நீயும் தண்டிக்கப்படுவாய். அதுவும் இரண்டு மடங்காக. உனக்கு பொறுப்பின் பெருமையை நான் கற்றுத் தர வேண்டுமல்லவா? நீ உன் சகோதர சகோதரிகளின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வது போல், அவர்கள் வலியிலும் பங்கு கொள்ள வேண்டும். எல்லோரும் ஓய்வு எடுங்கள்” என்றார் குரு.

ஆனால் சான் அது தனக்கு மட்டும் கிடையாது என்பதைத் தௌளத் தெளிவாகப் புரிந்து கொண்டு தலைகீழாய் நின்ற வண்ணமே இருந்தான்.

கழகத்தில் குருவின் பிள்ளையாய், இளவரசானாக வளைய வரும் வாய்ப்பு கிட்டியதற்கு தனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று தன்னையே நொந்து கொண்டான்.

குருவின் தத்துப்பிள்ளையாக மாறிய பின், கழகத்தில் ஏதேனும் தவறு செய்ய கூட்டு முயற்சி எடுத்தால், அதைச் செய்ய சான் அழைக்கப்பட்டான். சானுக்குப் பின் வந்து சேர்ந்த சிறுவன் யூன் பியாவுக்கு திடீரென வயற்று வலி ஏற்பட்டது. அதைப் போக்க புகைப்பிடிப்பது நல்லது என்று ஒருவன் யோசனை சொல்ல, குரு இல்லாத சாரணத்தால், சிகரெட் எடுத்து வர சான் அனுப்பப்பட்டான்.

குருவின் அறைக்குச் சென்று பாதி பயன்படுத்தி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பெட்டியிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டான். திடீரென இப்படி எடுத்தால் குருவுக்கு தெரிந்துவிடுமே என்ற எண்ணம் தோன்ற, அதை அப்படியே பெட்டியில் போட்டுவிட்டு, முழுசாக இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தான்.

யூன் பியாவுக்கு புகைக்க கொடுத்த பின்னர், மீதமிருந்தவற்றை திருப்பிக் கொண்டு போய் வைக்காமல் என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு, ஆளுக்கொன்றாக எடுத்து ஊதித் தள்ளினர். புகை வாசம் தெரியாமல் இருக்க இடத்தைச் சுத்தம் செய்தனர். இரவு குரு வந்த பின் எப்போதும் போல உறங்கச் சென்றனர்.

இரவு மூன்று மணிக்கு அனைவரும் எழுப்பப்பட்டனர். அவசரமாக திருப்பி வைக்கும் போது தவறான பக்கமாக வைத்ததால், மாணவர்கள் அதைத் தொட்டது குருவிற்கு தெரிந்து விட்டது. உடனே விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்கள் வரிசையாக நின்றனர். ஒவ்வொருவருக்கும் “யார் செய்தது?” என்று கேள்வி கேட்கப்பட்டு, பதில் வராத காரணத்தால் பிரம்படி கொடுக்கப்பட்டது. யாரும் நடந்த உண்மையைக் கூறவில்லை. அடி வாங்க பயந்த ஒரு பெண் மட்டும் சானைக் காட்டிக் கொடுத்தாள். சானுக்கு ஐந்து பிரம்படிகள் கிடைத்தன. அத்துடன் குரு அவனிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்.

—-

Series Navigationநீங்காத நினைவுகள் – 24தாகூரின் கீதப் பாமாலை – 90 தென்றல் நாட்டியங்கள் .. !
author

Similar Posts

Comments

Leave a Reply to தெ.கு.தீரன்சாமி,மாநிலத்தலைவர்,கொங்குதமிழர்கட்சி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *