மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 30

This entry is part 36 of 43 in the series 17 ஜூன் 2012

« . நீ தெரிவிப்பது உண்மையெனில் வெங்கடாம்பாள் தமது மகனென்று விஜயநகர பேரரசுக்கு வாரிசாக அறிவித்திருக்க்கிற சிக்கம நாயக்கன் என்பவன், உண்மையில் அந்தணர் குழந்தையல்ல, செண்பகத்தின் மகன் »

33. சித்ராங்கி கண்விழித்தபோது பொழுது நன்றாக புலர்ந்திருந்தது. விடிந்து இருநாழிகை கழிந்தபிறகும் உறங்கியதை நினைக்க வெட்கமாக இருந்தது. அலுப்பாக உணர்ந்தாள் இருபதுவயதை இன்னும் முழுதாகக்கூடக் கடக்கவில்லை, வாழ்க்கை கசந்துவிட்டது. புறக்கடைக்குச்சென்று பல் துலக்கி காலைக்கடன்களை முடித்து உள்ளே வந்தாள். எண்ணெய் குப்பி¨யை எடுத்தாள். உள்ளே ஒன்றுமில்லை. கவிழ்த்து உள்ளங்கையில் வடிந்ததை தலையில் வைத்தாள். பிடறியில் கைகொடுத்து தலைமயிரை அளைந்தாள். அவற்றை முன்னால் போட்டு பின்னிமுடித்து பின்புறம் தள்ளினாள். ஆடியில் முகத்தைப்பார்த்தபோது முதன் முறையாக காலம் தன்னை மென்றிருப்பதைப்போலிருந்தது: விழிகளில் பிரகாசமில்லை, சரீரத்தில் முன்பிருந்த மினுமினுப்பு குறைந்திருக்கக் கண்டாள், சோகை பீடித்திருந்தது, கைகளை தடவுகிறபோது செதிள்கள் உதிர்ந்தன, தலையில் ஊரல் எடுக்கிறது. எறும்புகள் ஓடின, தலை சீவினால் மயிர் கொத்தாக வருகிறது. நாயக்கர் தயவால் கிடைத்த இல்லமும் காரை உதிர ஆரம்பித்திருக்கிறது. வெளிச்சுவற்றின் வெடிப்பில் ஆலொன்று முளைத்து வேரோடியிருப்பதைக் கண்டாள். சிற்சில ஓட்டைகளில் அரசுகூட முளைத்து தளிர் விட்டிருந்தது. கொடிவர்க்கங்கள் கூட படர்ந்திருந்தன. சிட்டுக்குருவிகள் பிற்பகலில் வாசல்வரை வருகின்றன. உத்திரத்தில் அவை கூடுகட்டவும் ஆரம்பித்திருந்தன.

தெருவாசலில் நிற்கிற வேம்புவாக பிறந்திருந்தால் வயிற்றுக்கவலையின்றி, மனச் சங்கடங்களின்றி, பிறர் தயவின்றி வாழ்ந்து விறகாக முடியலாம். மானுடப் பிறவியெடுத்ததன் பலன் சார்ந்து வாழவேண்டியிருக்கிறது. ஏழைக்குடியில் பிறந்த பெண்களுக்குக்கூட இன்னாருக்கு தங்கை, அவருக்குப் பெண்சாதி, இவனுக்குத் தாய் என்கிற சம்பத்துகள் வாய்க்கின்றன. பொதுமகளாகப் பிறந்தால் அதற்கெல்லாம் ஏது கொடுப்பினை? இவளை என்னவென்று அழைத்திருக்கிறார்கள். தாசி வடிவுடையாள் பேர்த்தி, வேசி மீனாம்பாள் குமாரத்தி, சிதம்பரம் சபேச தீட்சதரின் கூத்தி. கொழுநனை எதிர்பார்க்கும் பத்தினிப்பெண்ணல்ல, பெருந்தனக்காரர்களை எதிர்பார்க்கும் தேவடியாள். வாசலில் பல்லக்கு இறக்கப்படுகிறதா? கூண்டு வண்டி நிற்கிறதா? பெருத்த சரீரத்துடன் சந்தானம் ஜவ்வாது மணக்க பணமும் பொன்னும் வாசற் கதவைத் தட்டுகிறதாவென எதிர்பார்க்கும் பரத்தை.

உறவுகளாக மீனாம்பாளை அடுத்து சுவர்களும் தூண்களும் உத்திரங்களும்; ஜெகதீசனும்; சிற்சில நேரங்களில் கார்மேகமும் இருக்கிறார்கள். அவர்களோடு உரையாடுகிறபோது மனதிலிருப்பதை பழுத்த இலைகளை உதிர்ப்பதுபோல அதிக சிரமின்றி உதிர்க்க முடிகிறது. எதிர்வார்த்தைகளில்லை, பொத்தாம் பொதுவானதொரு மௌனம். மீந்தப்போதுகளில் உலவும் துறிஞ்சல்களை வேடிக்கை பார்த்தபடி மிதமான இருட்டுக்குள் ஓடுடைந்த கூரை கசியவிடும் சூரிய வெப்பத்தின் தணுப்பில் அறைக்குள் அடைத்து கதவை அடைத்துக்கொள்வாள். வீட்டில் ஓயாமல் ஒலிக்கும் குரல், மீனாம்பாளுடையது. அதற்குப் பல தொனிகளுண்டு: இருமல், புலம்பல், முனகல், ஒப்பாரி. தாய்க்கும் மகளுக்கும் தற்போது அடிக்கடி சண்டை வருகிறது. ‘பகவான் ஏன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான்’ என்பாள் மீனாம்பாள். “எனக்கென்ன தெரியும். வேண்டுமென்றால் சொல் அரளிக்கொட்டையை கொண்டுவருகிறேன். சேர்ந்தே சாகலாம்”, என்று மகளிடமிருந்து பதில் வரும். பிறகு தாயும் மகளும் ஆளுக்கொருபக்கம் உத்திரத்தை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.

நேற்றிரவு தாயுடன் சண்டையிட்டுக்கொண்டதில் ஜெகதீசனை அறவே மறந்துபோனாள். அவனுக்குச் சோறு போடாதது நினைவுக்கு வந்தது. ஏதோ வெகுநாட்களாக அவனைக் காணாதவள்போல பதற்றத்துடன் கதவிரண்டையும் விரியத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள். திண்ணை காலியாக இருந்தது. எப்போதும் ஒரு சிப்பத்தைக் தலைமாட்டில் வைத்துக்கொண்டு தூங்குவான். அதைக்கூட காணோம். இதுதான் முதன் முறையல்ல. அவப்போது திடீர் திடீரென்று எழுந்து போய்விடுவான். இரண்டொரு மணி நேரத்திற்குப் பிறகு திரும்பவும் வருவான். சத்தமின்றி படுத்திருப்பான். எட்டிப்பார்த்தால் சிரிப்பான். ஒரு முறை இரண்டு நாட்கள் காணாதிருந்தான். இனி அவன் வரப்போவதில்லையென்றே தாயும் மகளும் நினைத்தார்கள். மறுநாள்காலை திண்ணையில் எப்போதும்போல சாதுவாகப் படுத்திருந்தான். இன்றும் அதுபோலவே நடக்குமென நினைத்தாள். ஒரு கதவை மாத்திரம் சார்த்தி தாழ்ப்பாள் போட்டவள் மற்றக்கதவை திறந்திருக்கும்படி செய்துவிட்டு உள்ளேவந்தாள். தெருவாசலில் மனிதர் அரவம் கேட்டது. தாழ்வாரத்தின் தூணைப்பிடித்தபடி எட்டிபார்த்தாள். கார்மேகம். கடந்த ஒரு மாதமாக எட்டிப்பார்க்காதவன் இன்றுதான் வந்திருந்தான்.

– வாங்க வாங்க.. ஏதேது இப்போதுதான் உங்களுக்கு வழி தெரிந்ததா.

– இதென்ன வருகிறபோதே இப்படியொரு கேள்வி, உள்ளே வரலாமா கூடாதா?

சித்ராங்கி மௌனமாக முன்னே நடக்க, கார்மேகம் அவளைத் தொடர்ந்தான். அவள் ஒரு முக்காலியை எடுத்துப்போட உட்கார்ந்தான். அவள் அமைதியாக இருந்தாள். நிலவிய அமைதியைச் சங்கடமாக உணர்ந்தவன்போல, வாய்திறந்தான்.

– அம்மா இல்லையா?

– இல்லாமலென்ன? எப்போதும்போல படுத்துக்கொண்டிருக்கிறார்கள். மிக தாமதமாக பதில் வந்தது.

– நந்த கோபால்பிள்ளை அலுவலாக தேவனாம்பட்டணம்வரை போயிருந்தேன்.

– கிடைமடக்கும் தொழிலை மறந்து நாளாயிற்று போலிருக்கிறது.

– அதிலென்ன தவறு, நந்தகோபால் பிள்ளை என்னை அவருக்குத் துணையாக வைத்துக்கொண்டிருக்கிறார். அதற்குரிய ஊதியமும் கிடைக்கிறது. உனக்குத்தான் குலத்தொழிலைவிட பிரியமில்லை போலிருக்கிறது.

விழிகளில் நீர் கோர்த்தது. சட்டென்று தலையைக் குனிந்துகொண்டாள். புறங்கையால் கண்களைத் துடைத்தாள். கார்மேகம் சங்கடப்பட்டான். அவள் தலையை உயர்த்தியபோது அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க அஞ்சியவனாய் தலையைத் திருப்பிக்கொண்டான்.

– எங்களுக்கும் வயிறென்று ஒன்றிருக்கிறதே. சாக ஆசைதான் அதற்கும் மனோதைரியம் வேண்டுமே. திண்ணையில் என்னை நம்பி மூன்றாவதாக ஓர் உயிர் இருக்கிறது. அவர் செத்தொழிந்தால் நாளைக்கே என்வாழ்நாளை முடித்துக்கொள்வேன். நாங்கள் வசிப்பது பொதுமகளிர்க்கான தளிச்சேரி. இங்கே உத்தமிகூட தேவடியாள்தான். உங்களுக்கு ஐந்து மனைவிமார்களிடம் படுக்கிற நாயக்கரும் அறுபதினாயிரம் மனைவிமார்ககளுடன் கனவுலகில் வாழ்ந்த தசரதனும் மகா புருஷர்கள். எங்களைப்போன்ற பாவப்பட்ட ஜென்மங்கள் உயிரோடிருந்து அப்படி எதைத்தான் சாதிக்கப்போகிறோம், சொல்லுங்கள்.

– கோபித்துக்கொள்ளாதே சித்ராங்கி. எதையோ கேட்கநினைத்து கேள்வி திசைமாறிவிட்டது.

– உங்கள் அம்மா வந்திருந்தார்.

– ஏதாவது புலம்பியிருப்பாளே!

– அவருடைய அண்ணன் மகள் ஆண்டுகள் பலவாக உங்களுக்கென்று காத்திருக்கையில், எதற்காக நந்தகோபால்பிள்ளை குமாரத்தியை நீங்கள் விவாகம் செய்துகொள்ள வேணுமென்று கேட்கிறாள். நான் உங்களுக்கு புத்தி சொல்லவேணுமாம்.

– இதென்ன புது கதையாக இருக்கிறது. பிரதானியார் இல்லத்திற்குப் பல முறை சென்றிருக்கிறேன். அவர்கள் இல்லத்தில் விவாகத்திற்கு பெண்ணொருத்தியிருக்கிறாள் என்கிற பிரக்ஞைகூட எனக்கிருந்ததில்லை. அவரோ, அந்தவீட்டு அம்மாளோ என்னிடம் அதுபற்றி பிரஸ்தாபித்ததுமில்லை. அம்மா ஏதாவது உளறுவாள்.

– உம்மிடம் பிரஸ்தாபிக்கவில்லை, ஆனால் உமது பெற்றோர்களைக் கண்டு அவர்கள் பேசியிருக்கிறார்கள். நான் கேட்கிறேன் நாளைக்கு பிரதானி நிர்ப்பந்தித்தால் என்ன முடிவெடுப்பாய்.

– ஏன் திடீரென்று இப்படியொரு கேள்வி. என் திருமணவிஷயத்தில் அப்படியென்ன உனக்கு அக்கறை.

– இவ்வளவு நாட்களாக எங்கள் குடும்பத்திற்கு எவ்வித பிரதிபலனுமின்றி உதவிவருகிறாயே அதனாற் கேட்டேன். பரத்தையொருத்திக்கு வேண்டுபோதெல்லாம் பொருளவிசெய்தால் ஊர் உலகம் அதை எப்படி பார்க்குமென்று உண்மையில் உமக்குத் தெரியாதா? உமது தாயாருக்கேகூட அப்படியொரு ஐயமிருக்கிறது.

– எனக்கு புரியவில்லை.

– அந்த விபரமெல்லாம் உனக்கெதற்கு. எல்லாமென் யூகம். அவள் சொல்வதுபோல உன் தாய் மாமன் மகளையேனும் விவாகம் செய்துகொள்.

– எனக்கு நீ யோசனை சொல்வதிருக்கட்டும். ஜெகதீசனை என்ன செய்யப்போகிறாய்? இந் நிலமையில் அவனையும் சேர்த்து சுமக்கத்தான் வேண்டுமா?

– உங்களுக்கும் அவர் வேண்டாதப்பொருளாக ஆகிவிட்டாரா என்ன? அம்மா வேண்டாம் என்கிறாள். செண்பகம் கூடாதென்கிறாள். நீர் மட்டுமே எனக்கு ஆதரவாக இருக்கிறீர்களென நினைத்தேன். நீங்களும் அவரை வேண்டாமென்கிறீர்கள். இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். இன்னொரு முறை அப்படிக் கூறாதீர்கள்.

– இல்லை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடிக்காதது எதையும் நீ செய்யக்கூடாதென்று எதிர்பார்க்கிறேன்

– எந்த உரிமையில் இப்படி பேசுகிறீர்கள். சற்றுமுன்னர்தான் குலத்தொழிலைவிட எனக்குப்பிரியமில்லை என்றீர்கள். இப்போது ஜெகதீசனை உடனே துரத்தியாகவேண்டும் என்கிறீர்கள். ஓ புரிகிறது. எங்கள் வயிற்றுக்கு சோறிடுகிறீர்களில்லையா, அந்த உரிமையில் கேட்கறீர்களென வைத்துக்கொள்ளலாமா? ஏறக்குறைய பத்தாண்டுகள் இந்த குடும்பத்திற்கு உதவிவருகிறீர்கள். ஜெகதீசன் எங்களில்லத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருக்கிறார். அப்போதெல்லாம் அவர் எங்களில்லத்தில் இருப்பது உமக்கு சங்கடத்தைத் தரவில்லை. ஆனால் இப்போது தருகிறது அதாவது நீங்கள் ஆட்டிடையர் என்ற ஸ்தானத்திலிருந்து பிரதானியார் நந்தகோபால் பிள்ளைக்கு வேண்டியவர் என்ற ஸ்தானத்தை எட்டியதும், நீங்கள் வந்துபோகிற வேசி வீட்டில் இன்னொரு ஆடவனைக் காண்பது தங்கள் அந்தஸ்துக்கு சரியல்ல. அப்படித்தானே?

– நன்றாக கற்பனை செய்கிறாய். செண்பகத்தைப்போலவே நீயும் கவிதை எழுதலாம். கிருஷ்ணப்ப நாயக்கர் செண்பகத்தைக் கொண்டாட அவள் எழுதும் கிருஷ்ணமணி தீபிகை காரணமென்கிறார்கள். உனக்குள்ள இத்திறமை நாயக்கருக்குத் தெரியவந்தால் உன்னைகூட செண்பகம் இடத்திற் வைத்துக் கொண்டாடுவார். உனக்கு செய்கிற உதவியைக் கருத்திற்கொண்டு ஏதாவது உன்னிடத்தில் எதிர்பார்த்திருக்கிறேனா?

– அப்படிக்கேட்டிருந்தால் தவறேயில்லை. நியாயமுங்கூட. ஆனால் நீ வந்துபோகிற வேசி வீட்டில் மற்றொரு ஆடவனிருப்பதால் உமது கௌரவத்திற்கு இழுக்கென்று நினைக்க ஆரம்பித்திருக்கிறாய் பார் இதுதான் கேவலம். உன் கையாலாகாத்தனத்தை கௌரவத்தால் மூடி மறைக்கப் பார்க்கிறாய் அவ்வளவுதான் சொல்வேன். இப்போது கூட நான் தயார். செய்த உதவிக்கு, உன்னோடு படுக்க எனக்குத் தயக்கமில்லை. ஆனால் ஜெகதீசனையும் என்னையும் மட்டும் பிரித்துவிடாதே.

– யாரு? அங்கே என்ன சப்தம்? – அறையிலிருந்து வந்த குரல் கேட்டது-மீனாம்பாள்

சித்ராங்கி எழுந்துகொண்டாள். அருகிலிருந்த தூணோரம் போய்நின்றாள். அதைக்கட்டிக்கொண்டு விம்மினாள், வெடித்து அழுதாள். கார்மேகம் சிறிது நேரம் கைகைளைப் பிசைந்துகொண்டு நின்றான். பிறகு விடுவிடுவென்று தெருவாசலை நோக்கி நடந்தான்.
(தொடரும்)

Series Navigationபாரதியின் பகவத் கீதையும் விநாயகர் நான்மணி மாலையும்சில விருதுகள்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *