மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37

This entry is part 9 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

எரிக் நோவா

44. வெள்ளித்தகடுபோல பிரகாசித்த நீரில் தூரத்தில் இரண்டொரு படகுகள் தெரிந்தன. அவை நிற்கின்றனவா போகின்றனவாவென்று சொல்வது கடினம். ஒரு படகுக்கு மேலே கூட்டமாகக் சாம்பல்நிறக் கடற் காகங்கள். அவை எழுப்புபிய ஒலிகள் காற்றில் கலந்திருந்தன. பறவைகளில் ஒன்றிரண்டு படகைத் தொடுவதுபோல சறுக்கிப் பாய்ந்தன. பின்னர் விரட்டப் பட்டவைபோல மேலே ஏறவும் செய்தன. எந்திரப்படகொன்று வடக்கிலிருந்து தெற்காக கரைக்கு வெகு அருகில் கடந்துபோனது. அதிலிருந்த ஒருவன் கைகளை அசைத்தான். பதிலுக்கு நானும் கை அசைக்கலாமாவென்று உயர்த்தியபொழுது எனக்கெதிரே நீரில் கால் நனைத்துக்கொண்டிருந்த மொத்த குடும்பமும் கை அசைத்தது, உடல் மொழிக்கு ஒத்திசைப்பதுபோல ஹோவென்றனர். கணவனாக இருக்கவேண்டும், வெள்ளை முழுக்கைச்சட்டையை கைமூட்டுக்குமேலே மடித்திருந்தான், அவன் தோளை உரசியபடி அவன் மனவி. பின்புறம், மிகக்குறைந்த வயதுடைய பெண்ணென்றது. இடுப்பில் குழந்தை. அதன் கையில் வண்ணக்கலவையில் ஒரு காற்றாடி. இங்கிருந்து பார்க்கையில் சுழலாமல் காற்றாடி நிற்பது போலிருந்தது. பாவாடை சட்டையில் இரண்டு சிறுமிகள். அவர்கள் கால்கள் வெறுமனே இருந்தன. எல்லோரும் மொட்டைபோட்டிருந்தார்கள். தங்கள் ஆடை நீரில் நனைந்துவிடக்கூடாதென்பதில் அக்கறைகொண்டவர்களைப் போல எல்லோர் கைகளும் கீழாடைகளிலிருந்தன. அலை பிரிந்து கரையைத்தொட்டு பரவித் திரும்புகிறபோதெல்லாம் அதற்கு எதிர்வினை ஆற்றுவதுபோல குதிகாலை உதறி வைக்கிறார்கள். மற்ற கைகளை சங்கிலிபோல பிணைத்திருந்தார்கள். எங்கள் நாட்டிலும் இதுபோல நீரில் காலை நனைத்து சந்தோஷப்படும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அங்கே அது அதிசய சம்பவம். இங்கே எல்லோருமே மணலில் இறங்கி மெனக்கெட்டு நடந்து நனைத்துகொண்டு, தலையில் நீரைத் தெளித்துக்கொண்டு திரும்புகிறார்கள். பிறப்பு, மொழி, பண்பாட்டின் அடிப்படையில் எதிரே இருப்பவனின் வாழ்க்கை அறத்தை மதிப்பீடு செய்யக்கூடாதுதான். மொழியியல் மாணவனான எனக்கு மக்களின் பண்பாட்டை அவரவர் மண்சார்ந்தும் மரபுகள் சார்ந்து அவதானிக்கவேண்டுமென்று போதிக்கப்பட்டிருக்கிறது.

பாரீஸ் சொர்போன் பல்கலைகழக மாணவன், குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் கீழை தேசங்கள் குறித்த ஆராய்ச்சி மாணவன். பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவிற்கு விஜயம் செய்த சேசுசபையினரின் நாட்குறிப்புகளின் அடிப்படையில் இந்தியாவை ஆய்வு செய்வதற்காக வந்திருக்கிறேன். ஒரு பனுவலின் நம்பகத்தன்மையை அதேகாலகட்டத்தில் எழுதபட்ட பிற நூல்களின் துணைகொண்டு நிறுவவேண்டும். குறிப்பாக பிமெண்ட்டா என்ற போர்ச்சுகீசிய மதகுருவின் குறிப்பில் முரண்கள் இருக்கின்றனவா, இருந்தால் என்னகாரணம்? இனம், மதம், மொழி ஆகியவற்றில் உள்ளூர் மக்களிடமிருந்து வேறுபட்டிருந்த சேசுசபையினரால் சொல்லப்பட்டிருக்கிற அபிப்ராயங்கள், பதிவு செய்த கதைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு நாட்டின் வரலாற்றை தீர்மானிக்க இயலுமா? அவற்றை உறுதிபடுத்த வேறு ஆதாரங்கள் இருக்கின்றனவா? என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு பதில் வேண்டும்.

கடுமையான வெயிலை சகித்துக்கொண்டிருந்தேன். நீரில் காலை நனைத்துக்கொண்டிருந்த குடும்பம் கரை ஏறவிரும்பியதுபோல மணலில் அழுந்த கால்களை ஊன்றி மேலே வந்துகொண்டிருந்தபோது எனது பார்வை பக்கத்தில் திரும்பியது. குளிர்பானகடைக்கார் ஒருவர் ஒரு எலுமிச்சையை இரண்டாக அறுத்து சாற்றைக் கண்ணாடி குவளையொன்றில் பிழிந்தார். குடிக்கிறாயா? என்பதுபோல சைகையில் கேட்டார். நான் வேண்டாமென்று தலை அசைக்கிறேன்.

ஒருவாரத்திற்கு முன்புவரை அருகில் லால்பகதூர் சாஸ்திரி வீதியில் தங்கியிருந்தபோது தினந்தோறும் காலை வேளைகளில் கடற்கரைக்கு வரும் வழக்கமிருந்தது. ஆரோவில் சென்றபோது அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. இன்னும் ஆறுமாதகாலம் புதுச்சேரியில் தங்கவேண்டும். சென்ற ஒருவாரத்திம் மட்டும் குறைந்தபட்சம் எங்கள் நாட்டைச்சேர்ந்த ஆண்கள் பெண்களென்று இருபது பேருடன் பேசியிருப்பேன். சின்னசின்னகுறைகள் தவிர்த்து மற்றபடி புதுச்சேரி வாழ்க்கைப் பிடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். என்னால் அப்படி சொல்ல முடியாது. அதிலும் சந்திக்கிறவர்களிடமெல்லாம் சீக்கிரம் பிரான்சு திரும்பினால் தேவலாமென்று பிலம்பிக்கொண்டிருக்கிறேன்.

இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லையா? சம்பவம் நடந்து பத்து நாட்கள் ஆகின்றன. லாபகதூர் சாஸ்திரி வீதிக்கருகே தங்கியிருந்தபோது ஒருநாள் காலை எட்டு மணி அளவில் மேற்கத்தியர்கள் அதிகம் புழங்குகிற ரொட்டிக்கடைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தேன். ‘போன்ழூர் முஸே’ என்று ஒரு பெண்குரல் என் முதுகிற்குப் பின்புறமிருந்து வந்தது. என்னதான் புதுச்சேரி பிரெஞ்சு பண்பாட்டிலிருந்து விடுபடவில்லையெனச் சொல்லிக்கொண்டாலும், அந்நேரத்தில் அந்த இடத்தில் எனக்கென்னவோ அக்குரல் பொருத்தமின்றி ஒலிப்பதுபோலவிருந்தது. திரும்பிப்பார்த்தபோது சுரிதார் உடையில் இருபது வயது சொல்லக்கூடிய பெண்.

மறுபடியும் போன்ழூர் முஸே என்றழைத்தாள். இம்முறை குரல் மிகவும் நெருக்கத்தில் கேட்டது. திரும்பினேன். எனக்கு முன்னும் பின்னும் என்னைக்கடந்தும் வாகனங்களும் மனிதர்களும் போவதும் வருவதுமாக இருந்தார்கள். எதிரே தெரிந்த தேநீர் கடையில் நான்குபேர். அவர்களில் இருவர் இடுப்பில் கைவத்து உரையாட மற்ற இருவரும் என்னைப்பார்க்கிறார்கள். தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தவன் குவளையை எதிரேவைத்துவிட்டு என்னை சாடையாக அவதானிக்கிறான்.

– என்னை அழைக்கவில்லையே? -அப்பெண்ணிடம் கேட்டேன்.

– உங்களைத்தான் அழைத்தேன். தலை மேலும் கீழும் ஆடியது.

இதற்குள் என்னை நெருங்கியிருந்தாள். மூச்சிரைத்தது. ஏன் ஓடிவந்தாயா?

– ஆமாம் சார். அப்புறம் உங்களை பிடிக்க முடியாதில்லையா?

மேற்கொண்டு தொடரும் முன்பாக எங்கள் உரையாடல் பிரெஞ்சில் நடந்ததென்பதை உங்களுக்கு மறக்காமல் தெரிவிக்கவேண்டும். ஒன்றிரண்டு சொற்களுக்கு தடுமாறினாலும் சமாளித்தாள்.

– ஆச்சரியமாக இருக்கிறதா? இரண்டு நாட்களாக உங்களோடு பேசவேண்டுமென படாத பாடு. இன்றைக்குத்தான் முடிந்தது.

– ஏன் என்ன விஷயம். இதற்கு முன் உங்களை நான் பார்த்ததில்லையே.

– சிறிது புரியும்படி எனது நிலமையைச் சொல்கிறேன். பள்ளியில் கொஞ்சம் பிரெஞ்சு படித்திருக்கிறேன். உங்களைப்போல பிரான்சிலிருந்து வருபவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு இரண்டு மூன்று நாட்கள் அவர்களோடு இருந்தால், பிரெஞ்சு மொழியை நன்றாக பேச வருமென்று எனக்குப் பிரெஞ்சு கற்றுக்கொடுத்தவர் கூறினார். நீங்களால் சம்மதித்தால் ஒன்றிரண்டு நாட்கள் உங்களோடு இருக்க முடியும். என்ன சொல்கிறீர்கள்.

தயக்கமின்றி நேரிடையாக அவள் போட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டேன். மொழிமீதிருந்த ஆர்வமும் அவளுடைய வெளிப்படையான பேச்சும் பிடித்திருந்தது, உதவலாமேயென நினைத்தேன். அன்றே நான் எங்கு போனாலும் உடன் வந்தாள். காலை மற்றும் பிற்பகல் உணவை என்னுடன் சேர்ந்து சாப்பிட்டாள். இரவு உணவை வேண்டாமென்று மறுத்து, தன் தாயின் கண்டிப்புபற்றி நிறைய பேசினாள். மறுகாள் காலையும் வந்தாள். அன்றும் என்னுடன் இருந்தாள். எனக்கும் உள்ளூர் தமிழ்ப்பெண் பேச்சுத் துணைக்கு கிடைத்தாளே என்ற சந்தோஷம். பேரம் பேசினாள். ஆட்டோ காரர்களிடம் சண்டையிட்டாள். ஏமாறாதீர்கள். கவனமாக இருக்கவேண்டுமென்றாள். நான் கேட்க மறந்தால் கூட செலவு செய்ததுபோக எனது பணத்தை கறாராகத் திருப்பிக்கொடுத்தாள். கிடுகிடுவென்று அப்பெண்ணின் மரியாதை கூடியது. ஒவ்வொருநாளும் இது தொடர்ந்தது ஆறு நாட்கள் முடிந்திருந்தன ஏழாம் நாள் காலையில் ஓவென தெருவில்வைத்து என்னிடம் அழுதாள். பயந்துபோனேன். பொது இடத்தில் அழக்கூடாதென சமாதானங்கூறி அவளை எனது அறைக்கு அழைத்துச்சென்று நடந்தவற்றை விசாரித்தேன்.

– சார் எங்க அம்மாவிற்குத் தெரிந்துவிட்டது. நம் இருவரையும் சேர்த்துவைத்து என் அண்ணன் பார்த்திருக்கிறான். அவர்கள் குடும்பத்தின் மானமே என்னால் போய்விட்டதென்கிறார்கள். நமக்குள் ஒன்றும் நடக்கவில்லையென்றாலுங்கூட நம்ப மாட்டேன் என்கிறார்கள். ஊர் உலகமெல்லாம் பார்த்திருக்கும் இனி உன்னை யார் சீந்துவார்கள் என்கிறாள். எனக்குக்குழப்பமாக இருக்கிறது. உங்களை நம்பி அம்மாவிற்கு வார்த்தைக்கொடுத்துவிட்டுவந்தேன். எனக்கு அவள் தற்கொலை எண்ணத்தை மாற்ற வேறுவழி தெரியவில்லை.

– என்ன சொன்ன? -பதற்றத்துடன் கேட்டேன்.

– நீங்கள் சம்மதித்தால் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்டேன். உங்களைக் கேட்காமல் அப்படியொரு கேள்வியைக்கேட்டிருக்கக்கூடாது. எனக்கு அம்மாவின் உயிரைக்காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. அம்மா ஏதேனும் செய்துகொண்டால், என் சகோதரன் உங்களிடம்தான் வருவான். அவனுக்கு மோசமான சிநேகிதர்கள் நிறையபேருண்டு. அவனால் உங்களுக்கு ஏதேனும் நேருமோ என்றும் பயம்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

எனக்குக்குழப்பமாக இருந்தது. ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதில் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா? இதே புதுச்சேரியில் பல இளைஞர்கள் பல யுவதிகளோடு பேசிக்கொள்வதை பார்த்திருக்கிறேன். தவிர இதில் என்குற்றம் எதுவுமில்லையே. நீ உன் தாயிடத்திலும் சகோதரனிடத்திலும் நடந்ததைக் கூறினாயா? எனக்கேட்டேன். கூறிப்பார்த்துவிட்டாளாம் திருமணத்தைத்தவிர வேறு தீர்வில்லை என்றாள். இரண்டு நாள் தவணை கேட்டிருக்கிறேன். இரண்டொரு நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் ஹரிணியின் கைத்தொலைபேசி எண்னைக் கொடுத்தார்கள்.
—-

ஹரிணி

45. கிர்..கிர்… கிர்..கிர்..

மாடியிலிருந்த எனது குடியிருப்பில் அழைப்புமணி விருப்பமிருந்தால் ஒலிக்கும், இல்லையெனில் இல்லை. இரண்டு நாட்களாக வேலை செய்வதில்லை. வீட்டுக்குடையவளிடம், கவனிக்கும்படி கூறியிருந்தேன். பழுதுபார்த்திருக்கவேண்டும். தொடையை கிள்ளிய குழந்தையைபோல அலறியது. பதறியபடி எழுந்து உட்கார்ந்தேன். ச்சே! விடியும் வரை உறங்கும் பழக்கத்தைத் தொலைச்சாகணும். அவனை வரச்சொல்லிட்டு, இப்படியா தூங்கிக்கொண்டிருப்பது!. போர்வையை விலக்கிய எனது கை படுக்கையருகிலிருந்த சிறு மேசையைத்தேடிஅலைந்தது. மேசைவிளக்கின் அடிப்பகுதியை விரல்கள் சுற்றிவந்தன. தேடியது கிடைத்ததும், ஆள்காட்டிவிரலால் அழுந்தத் தட்டினேன். பொத்தான் ஒருமுறை உதறிக்கொண்டு மேலெழவும் அறையில் தொங்கிக்கொண்டிருந்த மின்சார விளக்கு பிரகாசிக்கவும் சரியாக இருந்தது. மேசைவிளக்கருகே அவிழ்த்துவைத்திருந்த வாட்சை எடுத்து மணியைப்பார்த்தேன் மணி காலை எட்டு.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…..

– ப்ளீஸ் கொஞ்சம் பொறுங்க. இரண்டு நிமிடத்தில் இறங்கிடுவேன்

மாடியிலிருந்த அறையிலிருந்துகொண்டு சத்தம்போட்டது தெருவாசலில் எனக்காகக் காத்திருக்கிற நபருக்குக் கேட்காதென்று தெரியும். போர்வையைச் சுருட்டிக் காலடியில் தள்ளினேன். அவசரமாக கட்டிலுக்கடியில் தலைமாடு கால்மாடாகக் கிடந்த இரப்பர் செருப்புகளை மாட்டிக்கொண்டு ஒப்பனை அறைக்குள் நுழைந்தேன். மின் விளக்கைத் தட்டினேன். கண்ணாடியில் மின்விளக்கோடு முகமும் தெரிந்தது. சுண்டுவிரலால் கண் இரப்பைகளில் ஒழுங்கற்று கசிந்திருந்த மையை ஒற்றி எடுத்தேன். தலைமயிரைப் பின்புறம் தள்ளிச்சீவி ஒரு முறை சிலுப்ப முன் நெற்றி, தலையின் வலப்பக்கம், பின்கழுத்தென பதவிசாய் நான் எதிர்பார்த்ததுபோல அமர்ந்தது. சிவப்பில் வெள்ளை புட்டாபோட்ட போல்க்கா சட்டை, எதிர்பார்த்ததைவிட நன்றாக பொருந்தியது. வாங்கியதிலிருந்துபோடவில்லை. இந்தியா வெப்பத்திற்கு உதவுமென பெட்டியில் எடுத்துவைத்ததில் பிழையில்லை. இரண்டு முறை தோள்களைத் திருப்பி ஒருக்களித்து நின்ற நிலையில் என்னை நானே ஒப்பிட்டு பார்த்து, காதோரங்களில் பக்கத்திற்கொன்றாக தலைமுடி பிடிப்பிகளைக்கொண்டு பிரிந்து விழுந்த மயிர்களை அடக்கிவைத்து கதவைத் திறக்கும் வேளை ஞாபகம் வர ஹாலிவுட் சூயிங்கமொன்றை பிரித்து வாயிலிட்டு அசைபோட்டபடி இறங்கினேன்.

கதவைத் திறந்த வேகத்தில் பின்புறம் மூடினேன், பூட்டினேன். இழுத்துப்பார்த்தேன். திருப்தியில் தடதடவென படிகளில் இறங்கினாள். மனது படிகளை எண்ணிமுடித்திருந்தது. கூடத்தில் காலைவைத்தபோது வேலைக்காரி தண்ணீர் விட்டு கழுவிக்கொண்டிருந்தாள். துடைப்பம் விழுந்து எழுந்திருக்கிறபோதெல்லாம் ஓடிப்பரவும் அழுக்கு நீரில் சலக்சலக்கென்று சப்தம். பெருக்கிக்கொண்டிருந்த வேலைக்கார பெண்மணி நிறுத்திவிட்டு என்னைப்பார்த்தாள். ஓரிரு நொடிகள் அங்கே நிசப்தம். இந்நிசப்தத்தை அசாதரணமாக உணர்ந்தவள்போல வீட்டுக்குடையவள் சமயலறையிலிருந்து எட்டிப்பார்த்தாள். ” ஒன்று மில்லை, இன்றைக்கு அமாவாசை இல்லையா? அதுதான் வீட்டைக்கழுவுகிறாள், என்றாள். எனக்கு இந்த விளக்கம் அநாவசியம் போல தோன்றியது. வேலைக்கார அம்மாள் வீட்டுகுடையவளின் விளக்கம்போதுமா என்பதைபோல என்னை ஒருமுறை பார்த்தாள். அடித்துடைப்பத்தை உள்ளங்கையில் அநிச்சையாக குத்தி ஒழுங்குபடுத்திக்கொண்டு, கொண்டை ஊசிபோல வளைந்தாள்; தண்ணீரை அடித்துத் தள்ளினாள். வீட்டுக்கார அம்மாளிடம் ‘நான் புறப்படுகிறேன்’ என்பதை சைகையால் உணர்த்தினேன். அவள் பார்வையில் அச்சைகையை ஏற்றுக்கொண்டதற்கான அறிகுறிகளில்லை மாறாக தெருவாசலில் பதிந்திருந்தது. கால்களை நிதானமாகத் தரையில் வைத்து நடையைக் கடந்து தெருவாசலுக்கு வந்தால். அவன் தெருக்கதவின் பின்னால் பதுங்கியிருப்பதுபோல நின்றிருந்தான்.

– வணக்கம், ஹரிணி- ஹரிணி தேவசகாயம், என்றபடி கையை நீட்டினேன்.

– வணக்கம். எரிக் நோவா. உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, என்றான்

இருவரும் கைகுலுக்கிக்கொண்டோம்.

– பேசிக்கொண்டே போகலாம். எப்படி வந்தீர்கள்? -என்றேன்

– டூ வீலரில். பார்வை தெருப்பக்கமிருந்தது, தொடர்ந்து எங்கே போகலாம்? என்றான்.

அவன் வாகனத்தைப் பார்த்தேன். ராயல் என்பீல்டு புல்லட். இரண்டாம் உலகப்போர் திரைப்படங்களில் வரும் வாகனங்களைப்போலிருந்தது. சாம்பல் நிறம். சக்கரமும் மட்கார்டுகளும் செம்மண் கட்டியிருந்தன.

– எங்கே தங்கியிருக்கிறீர்கள் ஆரோவில்லா? என்றேன்

– நீங்கள் நினைப்பது சரி. ஆனாலிது ஒரு தற்காலிகமான ஏற்பாடு. கூடிய சீக்கிரம் இடத்தை மாற்றியாகணும். நண்பர்களிடம் சொல்லிவைத்திருக்கிறேன். எங்கே போய் பேசலாம்.

– ‘ஹாட் பிரெட் போகலாம். எனக்குப்பசி நேற்றிரவு ஒழுங்காக சாப்பிடலை.

– எனக்கும் சௌகரியம். மேற்கத்திய வாழ்க்கைக்குப் பழகியவர்களுக்கு பேசவும் சாப்பிடவும் உகந்த இடம்.

நிறுத்திவைத்திருந்த வாகனத்தை முன்னே தள்ளி இருக்கையில் அமர்ந்தேன். நீண்டிருந்த அந்த இருக்கையின் பின்பகுதியில் காலை இருபுறமும் தொங்கவிட்டு உட்கார்ந்தேன். ஒரு கையை அவன் தோளில் போட்டதும், வாகனம் குலுங்கிக்கொண்டு ஓடியது. காற்றில் சலசலத்த போல்க்கா சட்டையை அடக்கிவைப்பது முடிகிற காரியமாக இல்லை.

வேணுகோபாலுடைய தாத்தா கொடுத்திருந்த செஞ்சி நாவலை நேற்றிரவுதான் வாசித்து முடித்திருந்தேன். மறுநாள் பெரிதாக எதுவும் வேலைகள் இல்லாதததால் செஞ்சிக்குச் செல்ல திட்டமிருந்தது. கிழவர் சடகோபனிடம் சிலகேள்விகளுக்கு விடை தேவைபட்டது. துறுவ வேண்டும். வேணுவின் தங்கையையும் பார்க்கவேண்டும். பெண்ணின் பேச்சும், துடுக்குத்தனமும் எனக்குப் பிடித்திருந்தன. செஞ்சியையும் அப்பெண்னையும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் எரிக் நோவா என்பவனிடமிருந்து கைத்தொலைபேசிக்கு அழைப்பு. மிக நெருக்கமானவர்களைத் தவிர பொதுவாக யாரிடமும் கைத்தொலைபேசி எண்ணைக் கொடுப்பதில்லை. அப்படியே கொடுக்க நேர்ந்தாலும் வேறு எவரிடத்திலும் தரக்கூடாதென எச்சரிப்பதுண்டு. இவனுக்கு எப்படி கிடைத்திருக்குமென்று சந்தேகித்ததை உணர்ந்தவன்போல அவன் பதிலிருந்தது. பாரீஸிலிருந்து வந்திருக்கிறேன். ஒரு சின்ன பிரச்சினை. இங்குள்ள நண்பர்களிடம் உரையாடிய பொழுது உங்கள் எண்ணைக் கொடுத்தார்கள், உங்களால்தான் முடியும் என்கிறார்கள். என்றான்

– என்னால் தீரக்கூடிய பிரச்சினையா ஆச்சரியமாக இருக்கிறது.

– நேரில் சொல்கிறேன். உங்களுக்கு தொந்தரவு எதுவுமில்லையெனில் நாளை காலை எட்டுமணிக்கு உங்கள் முகவரிக்கு வருவேன்? என்றான்

– அதற்கென்ன வாருங்கள். என அவனுக்குப் பதிலிறுத்துவிட்டு, தொடர்பைத் துண்டித்துவிட்டேன். .

‘ஹாட் பிரெட்’ ரொட்டிக்கடை நேரு வீதியின் முடிவிலிருந்தது. வாகனத்தை நிறுத்திவிட்டு நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்தபோது ஐரோப்பியர்கள் நான்கைந்துபேர் மேசைகளில் அமர்ந்திருந்தார்கள். இந்தியக் குடும்பமொன்றையும் காணமுடிந்தது. காலியாகவிருந்த மேசையொன்றை பிடித்து இருவரும் அமர்தோம்.

– வேண்டியதைச் சென்று எடுத்துவரலாமே, – என்றேன்.

– என்னவேண்டும் சொல்லுங்கள். நானே எடுத்துவருகிறேன்.- என்றான்.

– எனக்கு இரண்டு க்ருவாசானும் காப்பியும் போதும்.

சிறிது நேரத்தில் இரண்டு தட்டுகளுடன் திரும்பிவந்தான். அவளைபோலவே இரண்டு க்ருவாசான் தட்டில் வைத்திருந்தான். ஒரு தட்டை மேசையில் வைத்துவிட்டு:

– காப்பிக்குச் சொல்லியிருக்கிறேன். கொண்டுவருவார்கள் – எனச்சொல்லிவிட்டு அமர்ந்தான்.

லால்பகதூர் சாஸ்திரி வீதிக்கருகே தங்கியிருந்தபோது, ஒரு பெண் தேடிவந்து தன்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டதையும் அதனால் அவனுக்கு ஏற்பட்ட இக்கட்டையும் விளக்கினான்.

(தொடரும்)

———————————————————

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -20எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *