தூக்கு

This entry is part 5 of 23 in the series 16 ஜூன் 2013

 

                 டாக்டர் ஜி.ஜான்சன்

 

சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றபோது மக்கள் கொண்டாடினர். அதன் முதன் முதல் அமைச்சர் டேவிட் மார்ஷல் .அவர் ஒரு யூதர். பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர். ஆனால் அவர் நீண்ட நாட்கள் பதவியில் இல்லை. ஆங்கிலேயர்களிடமிருந்து முழு சுதந்திரம் பெற்றுத் தருவதாக சொல்லி லண்டன் சென்றவர் அதில் தோல்வியுற்றதால் பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.

அவரைத் தொடர்ந்து லிம் இயூ ஹாக் முதல் அமைச்சர் ஆனார்.

அப்போது தொழித் சங்கங்களில் பலம் அதிகமிருந்தது. இவை கம்யூனிஸ்டுகளின் கைவசம் இருந்தன. இதனால் அடிக்கடி வேலை நிறுத்தம் நடை பெறலாயிட்ட்று.. அதில் குறிப்பாக ஹாக் லீ பஸ் கம்பனியின் வேலைநிறுத்தம் சிங்கப்பூரையே ஸ்தம்பிக்க வைத்து பெரும் சிரமத்தை உண்டுபண்ணியது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் மாண்டனர்.

இதை மக்கள் செயல் கட்சி தனக்கு சாதகமாகப் பண்படுத்திக் கொண்டது. அடுத்து நடந்த தேர்தலில் லிம் இயூ ஹாக் தொல்வியுற்றார். மக்கள் செயல் கட்சி அமோக ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

அத்துடன் ஆங்கிலேயர்கள் சிங்கப்பூருக்கு முழு சுதந்திரம் தந்துவிட்டனர். சிங்கப்பூரின் முதல் பிரதமராக லீ குவான் இயூ பொறுப்பேற்றார்.

ஆனால் அவருக்கு கம்யூனிஸ்டுகளும் தொழிற்ச் சங்கங்களும் தேர்தலின்போது பெரும் ஆதரவு தந்திருந்தனர். அதனால் அவர்கள் அரசாங்கத்தை தங்களின் கைப் பொம்மையாக ஆட்டிப் படைக்க எண்ணினர் .

அவர்களின் ஆசை நிராசையானது!

வெற்றி பெற்ற மறுநாளே அனைத்து கம்யூனிஸ்டு தோழர்களையும் இரவோடு இரவாக சுற்றி வளைத்து சாங்கி சிறைக்கு அனுப்பிவிட்டார் பிரதமர் லீ குவான் இயூ.

           அதுமட்டுமல்ல!

சிங்கப்பூரின் எல்லா பகுதிகளிலும் குண்டர் கும்பல்கள் பெருகியிருந்தன. அவற்றில் 08 என்றும் 24 என்றும் பெயர் கொண்டவை பயங்கரமானவை. இவர்கள் ஆயுதங்கள் ஏந்தி அடிக்கடி ஒருவரையொருவர் வெட்டிக்கொல்வர்.. இவர்களை காவலர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

எங்கள் பகுதியிலும் இந்த இரு கோஷ்டிகளின் அட்டூழியம் அதிகம் இருந்தது .இதில் நிறைய தமிழ் இளைஞர்கள் சேர்ந்திருந்தனர்.அவர்களில் பலரை எனக்குத் தெரியும். அவர்கள் அனைவரும் கையிலோ அல்லது நெஞ்சிலோ பச்சை குத்தியிருப்பார்கள்.

இவர்கள் நினைத்த நேரத்தில் ஒன்றாக வெளியே வருவர். பகிரங்கமாக கடைகளினுள் நுழைந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வர். யாராவது எதிர்த்து குரல் கொடுத்தால் கழுத்தில் வெட்டு விழும்!

இவர்கள் வீடுகளுக்கும் வந்து , ” பாதுகாப்புப்  பணம் “: வசூல் செய்வார்கள். வேறு பகுதி குண்டர்கள் நம்மை தாக்காமல் இருக்க இவர்கள் பாடுபடுவதால் இந்த வசூலாம்! கொடுக்க மறுத்தால் எந்த நேரத்திலும் வெட்டு படலாம். இதனால் எதற்கு இந்த வீண் வம்பு என்ற நிலையில் வர்கள் கேட்கும் பணத்தைத் தந்து விடுவர்.

தேர்தல் நேரத்தில் இவர்களும் பிரதமரின் மக்கள் செயல் கட்சிக்கு உதவினர். இவர்களை புதிய பிரதமருக்கு நன்கு அடையாளம் தெரியும்.

புதிய பிரதமர் பதவி ஏற்ற மறு நிமிடம், அனைத்து குண்டர்களையும் சுற்றி வளைத்து சிறையில் அடைத்தார். பச்சை குத்தியுள்ளவர் அனைவரும் பிடிபட்டனர்.

பலர் இதிலிருந்து தப்ப அசிட் ஊற்றி பச்சைகளை அழித்து தழும்புகளுடன் காணப்பட்டனர்.

இது என்ன , சரித்திரம் போல் உள்ளதே என்று நீங்கள் எண்ணுவது எனக்குத் தெரிகிறது.இது நான் சொல்லப் போகும் கதைக்குப் பின்னணியாகும்.

சிங்கப்பூரில் ஹென்டர்சன் மலை என்றால் குண்டர் கும்பலுக்கு பெயர் போன பகுதியாகும். அது 1960 முதல் 1964 வரையிலான காலகட்டம். நான் மலையின் மீது கம்பத்தில் குடியிருந்தேன். அது பலகைச் சுவரும் தகரக் கூரையும் கொண்ட நீண்ட வீடு. அதில் அப்பாவும் நானும் ஒரு அறையில் குடியிருந்தோம்.. அடுத்த அறையில் ஸ்டீபன் குடியிருந்தார். அவருடன் ஒரு சீனப் பெண்ணும் கூட இருந்தாள் . அவள் அவரின் மனைவி அல்ல. அவளை அவர் ” வைத்திருக்கிறார் ” என்றுதான் எல்லாரும் கூறினார்.

அவர் பார்ப்பதற்கு நல்ல நிறத்துடன் இருப்பார். அவர் உடல் முழுதும் பச்சை குத்தி இருப்பார். சுமாரான உயரத்துடன் நல்ல உடல் கட்டுடன் திகழ்ந்தார். அவரும் அந்த இளம் சீனப் பெண்ணும் எப்போதும் அறையில் அடைப்பட்டே கிடப்பர். இரவில் அவர் வெளியில் சென்று வருவதுண்டு. வேலை ஏதும் அவர் செய்யவில்லை. அவர் 24 எண் பெயர் கொண்ட குண்டர் கோஷ்டியில் தலைவர் .

அவர் என்னிடம் நன்றாகப் பேசுவார். அவரைத் தேடி வேறு சகாக்கள்வருவார்கள்.அப்போது புகைத்துக்கொண்டும் ,குடித்துக் கொண்டும் காசு வைத்து சீட்டு ஆடுவார்கள். சில வேளையில் காவல் துறையினரும் அவரைத் தேடி வருவர். அடிக்கடி பிடிபட்டு ” உள்ளே ” சென்று திரும்புவது அவருக்கு வாடிக்கை.

மலையின் இறக்கத்தில்தான் பாரதிதாசன் தமிழ்ப் பள்ளி இருந்தது. அதில்தான் அப்பா ஆசிரியராகப் பணியாற்றினார்.

பள்ளியின் எதிரே வீதிக்கு அப்பால் நகரசபை ஊழியர்களின் குடியிருப்பு வீடுகள் வரிசை வரிசையாக இருந்தன.அங்குதான் பொன்னம்பலம் குடியிருந்தான்.

.       பொன்னம்பலம் என் தந்தையின் மாணவன்..ஆனால் ஒழுங்காகக் கல்வியைத் தொடர முடியாமல் பாதியில் வெளியேறியவன். குண்டர் கோஷ்டியில் சேர்ந்ததோடு இன்னும் சில தமிழ் இளைஞர்களையும் சேர்த்துக் கொண்டவன். இவனையும் இவனோடு சேர்ந்தவர்களையும் கண்டால் மக்கள் பயப்படுவார்கள்.

பொன்னம்பலம் நல்லவன். நல்ல திடகாத்திரமான, கம்பீரமான உடல் அமைப்பு ஊடையவன்.

குண்டர் கோஷ்டியில் சேர்ந்துவிட்டால் அதிலிருந்து வெளியேறுவது சிரமம். அவர்களின் இரகசியம் வெளியாகிவிடும் என்ற ஐயம் எழும். அதனால் வெளியேறுபவனை உடன் தீர்த்துக் கட்டிவிடுவர்.

பிரதமரின் அதிரடி குண்டர் சட்டத்தில் எங்கள் வட்டாராம், பக்கத்தில் இருந்த ஹேவ்லக் ரோடு பகுதி,, ரெட் ஹில் பகுதி ஆகிய இடங்களில் குண்டர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதில் ஸ்டீபன் , பொன்னம்பலம் உட்பட பல தமிழ் இளைஞர்கள் மாட்டிக் கொண்டனர். இரவோடு இரவாக இவர்கள் அனைவரும் கைதாகினர்.

கைதான அனைவரும் அவசரகாலச் சட்டத்தின் 55ஆம் பிரிவின்படி, விசாரணை ஏதுமின்றி , கால வரையறையின்றி சாங்கி சிறையில் அடைக்கப் படுவர் . ஒருவேளை வாழ்நாள் முழுதும்கூட சிறையிலேயே கழிக்க நேரலாம்.

பிரதமரின் அரசியல் ஆதரவாளர்கள் சோசியலிஸ்ட் எண்ணம் கொண்டவர்கள். இளைஞர்களான இவர்களை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைப்பதற்கு பதிலாக இவர்களை சீர்திருத்தலாம் என்று முடிவு செய்தனர். இவர்களின் பரிந்துரையை பிரதமரும் ஏற்றார்.

இது ஒரு புரட்சிகரமான புதிய முயற்சியாகவே அப்போது கருதப்பட்டது. இதன் மூலமாக குண்டர் கோஷ்டிகளில் சேர்ந்துள்ள இளைஞர்கள் திருந்தி தண்டனை காலம் முடிந்ததும் நல்லவர்களாக திரும்ப முடியும் என்று எண்ணினர் .

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதி கடலில் மூன்று தனித் தனி தீவுகள் பிரிட்டிஷ் இராணுவப் பயிற்சிக்காகப் பயன்பட்டு வந்தன. அவற்றில் பூலாவ் சென்னாங் ( புலாவ் = தீவு , சென்னாங் = இலகு ) எனும் தீவு இந்த புது சீர்திருத்த சிறை முறைக்காத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது காடுகள் நிறைத்த தீவுதான். அவ்வப்பொது இராணுவத்தினர் குண்டு வீசி பழக அதைப் பயன் படுத்தினர்.

இந்தப்  பரிசோதனை முறையை திட்டமிட்டு செயலில் கொண்டுவந்தவர் டேனியல் ஸ்டான்லி டட்டன் ( Daniel Stanley Dutton ) என்பவர். இவர் ஐயர்லாந்து நாட்டவர். சிறை கண்காணிப்பாளர் ( Jail Superinthendent ). நெடிய உயரமான இவரைக் கண்டு குண்டர்கள் அஞ்சியதொடு மதிக்கவும் செய்தனர்.

இவர் சாங்கி சிறைச்சாலையில் குண்டர்களுடன் நேரத்தைச் செலவிட்டதால் அவர்களை நல்வழிப் படுத்துவது எவ்வாறு என்பதில் கவனம் செலுத்தினார். குண்டர்களையும் நல்ல குடிமகன்களாக மாற்றலாம் என்பதை வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டார்.

” முறையான வாய்ப்பும் கடின உழைப்பும் தரப்பட்டால் , சட்டத்தை மதிக்காத முரடனும்கூட ஒழுங்கான சமுதாய அமைப்பில் திரும்ப, தானாகவே தன்னுடைய வழியைக் கண்டு பிடிக்க முடியும். ” ( Every violent lawless men could find their own way back to decent society given a proper chance and hard work .” ) என்பதில் திட நம்பிக்கைக் கொண்டவர்.

முதல் கட்டமாக பல குண்டர்களுடன் பூலாவ் சென்னாங் தீவுக்குள் நுழைந்தார். அதுவரை அங்கு மனிதர்கள் வாழ்ந்ததில்லை. அங்கே காட்டை அழித்து ஒரு புதிய குடியிருப்பை அவர்கள் உருவாக்கினர். வீதிகள் , குடிநீர், மின்சாரம், தொழிற்சாலை, தங்குமிடம், சிற்றுண்டிச்சாலை, திரையரங்கம், சமூக நல மன்றம் என அனைத்தையும் அந்தக் கைதிகளே உருவாக்கினர்..

இரும்பு கம்பிகள் வேலி இல்லாத சிறை ( A prison without bars ) என்று அது புகழ் பெற்றது!

அதற்கு பூலாவ் சென்னாங் புனர்வாழ்வு குடியிருப்பு ( Pulau Senang Rehabilitation Settlement ) என்றும் பெயரிடப்பட்டது.

அதன் செயல் முறை வருமாறு:

சாங்கி சிறையில் ஓராண்டு கழித்தபின் , கைதிகளுக்கு ஒரு சலுகை வழங்கப்படும். அவர்கள் விரும்பினால் பூலாவ் சென்னாங் சென்று புனர்வாழ்வு பெறலாம். வேண்டாம் என்றால் சாங்கி சிறையிலேயே இருக்கலாம். ஆனால் அங்கிருந்தால் விடுதலைக்கு வாழ்நாளில் வாய்ப்பின்றியும் போகலாம். ஆனால் புனர்வாழ்வு குடியிருப்புக்குச் சென்றால், அங்கு ஒரு தொழிலைக் கற்றபின், நன்னடத்தையின் மூலமாக விடுதலையும் பெற்று வீடு திரும்பி சமுதாயத்துடன் மீண்டும் சேரலாம். இதை முழுக்க முழுக்க முடிவு செய்பவர் டேனியல் ஸ்டான்லி டட்டன் மட்டுமே.

தண்ணீர்க் குழாய்கள் அமைத்து சரி பார்ப்பது, தச்சு வேலை , முடி வெட்டுவது, விவசாயம் போன்ற தொழில்கள் துவக்கத்தில் கற்றுத் தரப்பட்டன.கைதிகளும் இதுபோன்ற புதிய தொழில்களை உற்சாகத்துடன் கற்றுக் கொண்டனர்.

தீவில் முழு சுதந்திரத்துடன் அவர்கள் வாழ நேர்ந்ததால், சிறைவாசம் அனுபவிப்பது போன்ற எண்ணம்கூட இல்லாமல் போனது. இரவில் சிறை அறையில் அடைத்து வைப்பதும் அங்கு இல்லை. சுற்றிலும் கடல் சூழ தனிமைத் தீவில் வாழும் எண்ணமே மேலோங்கியது. அதோடு காவலரின் அடக்குமுறையும் அங்கு இல்லை. அவர்களுடன் அங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்த காவலர்களும் அவர்களுடன் நட்பு முறையில் பழகவும் தொடங்கி விட்டனர்.

இந்த புனர்வாழ்வுத் திட்டம் நல்ல வெற்றி கண்டது. மூன்று ஆண்டுகளில் 400 கைதிகள் நல்வாழ்வு பெற்று விடுதலையும் அடைத்து சிங்கப்பூருக்கு திரும்பினர்.   ஆங்கில காவலர்கள் கைதிகளுடன் நட்பு பாராட்டி அன்பாக பழகியதால், ஆயுதங்கள் ஏந்தாமல்கூட அவர்களைக் கண்காணிக்கலாயினர்.

இதையே சாதகமாகப் பயன்படுத்தி தப்பித்துச் செல்ல கைதிகள் திட்டம் தீட்டினர். அவர்கள் கைகளில் அரிவாள், சுத்தியல், ரம்பம் கடப்பாரை, மண்வெட்டி போன்ற ” ஆயுதங்கள் ” இருந்தன.. வேலைகள் செய்ய இவை தரப்பட்டிருந்தன. இத்தகைய ஆயுதங்கள் அவர்களின் கைவசம் போதுமானதாக இருந்தன.

அவர்களின் திட்டம் இதுதான்:

திடீர் தாக்குதல் நடத்துவது. காவலர்களைக் கொல்வது. அவர்களின் படகுகளில் ஏறி இந்தோனேசியாவுக்குத் தப்பிச் செல்வது.பூலாவ் செனாங் புனர்வாழ்வு குடியிருப்பை அழித்துவிட்டு டட்டனையும் கொன்று விட்டால், புதிய குடியிருப்பை மீண்டும் உருவாக்க முடியாது. அவர்களை வேறு சிறைகளிலும் வைக்க மாட்டார்கள். சிங்கப்பூரின் சிறைகள் யாவும் குண்டர்களால் நிரம்பிவிட்டன . அதனால் அவர்களை வேறு வழியின்றி விடுவிப்பார்கள்.

1963 ஆம் வருடம் ஜூலை மாதம் 12ஆம் நாளன்று அந்த திடீர் தாக்குதல் நடந்தது! ஆங்கில காவலர்கள் அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

சிறை கண்காணிப்பாளர் டேனியல் ஸ்டேன்லி டட்டன் வெட்டுப்பட்டதோடு அவரின் கண்களுக்குள் விரலை விட்டு விழிகளை வெளியே பிடுங்கினார். அவரின் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டது அவரை அவ்வாறு சித்திரவதைச் செய்து கொன்று எரித்தனர். அவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு ஆங்கில காவலர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.அதோடு பூலாவ் செனாங் தீவில் அவர்கள் உருவாக்கிய வீடுகள் , தொழிற்ச்சாலைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கினர் .

அனால் சிங்கப்பூருக்கு ஒயர்லெஸ் மூலம் தகவல் தரப்பட்டுவிட்டது. அங்கிருந்து உடன் கூர்க்கா படைப்பிரிவினர் விசைப் படகுகளில் விரைந்து வந்தனர்.

கைதிகளில் சிலர் அங்கிருந்த காவலரின் படகுகளில் தப்பிக்க முயன்றனர். அனால் அவை சுங்கப் படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.

தரை இறங்கிய கூர்க்காப் படையினர் கைதிகளை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டனர்.

மொத்தம் 58 கைதிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் அரசுக்கு சாதகமாக சாட்சி சொன்னதால் விடுவிக்கப்பட்டனர் . அவர்களில் என் பக்கத்து வீட்டு ஸ்டீபனும் ஒருவர்.

பூலாவ் செனாங் தீவில் காவலர்கள் துப்பாக்கிகள், எறிகுண்டுகள் போன்ற ஆயுதங்களை வைத்திருப்பது தடை செய்யப்பட்டிருந்தது. கைதிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், தீவில் ஆயுதங்கள் வைத்திருந்தால் அவற்றை கைதிகள் கைப்பற்றலாம் என்ற எச்சரிக்கை நடவடிக்கை அது. அதோடு கைதிகளுக்கு தீவில் முழு சுதந்திரம் தந்து அவர்கள் மீது அன்பு செலுத்துவதின் மூலமாக அவர்களைத் திருத்தலாம் என்று திடமாக நம்பியவர் டேனியல் ஸ்டான்லி டட்டன் . இவை தவறான முடிவுகள் என்று பின்பு கருதப்பட்டது. இவர்கள் அனைவரும் சாதாரண கைதிகள் அல்ல – குண்டர்கள் !

மொத்தம் 58 கைதிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் அரசுக்கு சாதகமாக சாட்சி சொன்னதால் விடுவிக்கப்பட்டனர் . அவர்களில் என் பக்கத்து வீட்டு ஸ்டீபனும் ஒருவர்.

நீண்ட விசாரனையின் பின்பு 18 கைதிகள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் எங்கள் பகுதியின் பொன்னம்பலமும்,இன்னும் இரண்டு தமிழ் இளைஞர்கள் அடங்கினர்.

பிரிட்டன் உட்பட பல உலக நாடுகள் மனிதாபமான முறையில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க கோரிக்கை விடுத்தன.

ஒரே நாளில் இந்த 18 பேர்களும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் புகைப் படத்துடன் இந்த பரபரப்பான செய்தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் ( Straits Times ) பத்திரிகையில் வெளிவந்தது.

அன்று மாலையில் பொன்னம்பலத்தின் உடலும், வேறு இரண்டு தமிழ் இளைஞர்களின் உடல்களும் பொன்னம்பலத்தின் வீட்டில் ஒப்ப்படைக்கப்பட்டன.

எங்கள் வட்டாரத் தமிழர்கள் அங்கு கூடி அவர்களுக்கு மரியாதைகள் செய்து உடல்களை தகனம் செய்தனர்.

தூக்கு போடும் சமையம் அங்கிருந்த ஒரு காவலர் வேறொரு கைதிடம் சொன்ன செய்தி படித்து நான் வியப்பில் ஆழ்ந்தேன் .

அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு ஒவ்வொருவராக தூக்கிலிடப்பட்டனர்..அப்போது ஒவ்வொருவராக தூக்கில் தொங்க போனபோது, மற்றவர்கள் கைதட்டி கரகோஷம் செய்து ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தனராம்!

( முடிந்தது )

Series Navigationநீங்காத நினைவுகள் – 7செங்குருவி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  செல்வம் கொழித்த இத்தனைச் சிறிய சிங்கப்பூரில் எத்தனை எத்தனைப் பயங்கரப் படு கொலைகள் நடந்துள்ளன ? பார்த்தால் அமைதி நிலவும் விடுதலைத் தீவுபோல் வெளியே தெரிகிறது. அதன் சமீபத்திய வரலாற்றில் இப்படி மனிதக் குருதி ஆறாக ஓடி இருந்துள்ளதே !!!
  சி. ஜெயபாரதன்.

 2. Avatar
  Dr.G.Johnson says:

  தூக்கு படித்து கருத்து தெரிவித்த நண்பர் சி .ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றி.],,டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *