திண்ணையின் இலக்கியத் தடம் -5

This entry is part 19 of 31 in the series 20 அக்டோபர் 2013

சத்யானந்தன்

மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சி.க. இந்திய அரசு இதில் தனி ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது காஷ்மீரில் தனி நாடு கோருவோருக்கு வலு சேர்த்துவிடும் என்று கருதுகிறது. காஷ்மீரில் நடப்பது நில ஆக்கிரமிப்பு. பங்களாதேஷில் நடந்ததோ வேறு. உருது பேசும் பாகிஸ்தான் உருது பேசும் பீகாரிகளைத் துணைக் கொண்டு வங்க மொழி பேசும் பங்களாதேஷ் மக்களைக் கொன்று குவித்தது. இலங்கை விஷயமும் அதே போன்றதே. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200050711&edition_id=20000507&format=html>)

கதைகள்: மாளிகை வாசம் – பகுதி 2- எம்.வி. வெங்கட்ராம் , சித்ரா தேவி – கே ஆர் அய்யங்கார்.
கவிதைகள்: சன்னல் – வ.ஐ.ச. ஜெயபாலன், வேண்டாம் வரதட்சணை – சி.ஜெயபாரதன்
சமையற் குறிப்புகள்: பருப்புக் குழம்பு, புளிப்புக் கூட்டு

*********************
மே 14, 2000 இதழ்: “டெர்ரரிஸ்ட்” என்னும் திரைப் படத்தை யமுனா ராஜேந்திரன் ” விமர்சிக்கிறார். “தி டெர்ரஸிட்: பய்ங்கரவாதி: சந்தோஷ் சிவன்”- ஒரு பெண் விடுதலைப் புலி அவரது கிராமத்திலிருக்கும் ஒரு அனாதையாக்கப் பட்ட சிறுவன் என்னும் முக்கிய கதாபாத்திரங்களை மையப் படுத்தி எடுக்கப் பட்ட படம். இது அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கு (ஆதி சங்கரர் வழியில்) மாற வேண்டும் என்று போராளிகளுக்கு போதிக்கிறது. ராணுவ அத்துமீறல்கள் பற்றி இந்தப் படம் ஏன் மௌனிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி Casualities of War, Lion’s Den ஆகிய படங்களில் இருந்த நேர்மை இதில் இல்லை என்கிறார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200051411&edition_id=20000514&format=html)

எழுத்தாளர், புத்தக விற்பனையாளர் என நம்மால் மிகவும் நேசிக்கப் படும் திலீப் குமார் அசோக மித்திரனின் “விமோசனம்” என்னும் கதையை விமர்சிக்கிறார். ஒரு கணவனும் மனைவியும் ஒரு மகானை தரிசிகிறார்கள். அந்த மகானிடம் தான் கூற நினைத்தவற்றைக் கூற முடியாமற் போன மனைவி தனியே வீடு திரும்புகிறாள். ஓரிரு நாட்களில் வருவான் என்று எதிர்பார்த்த கணவன வரவே இல்லை வீட்டுக்கு. அவர்களது அன்னியோன்னியம் எந்தப் புள்ளியில் இருந்தது அது எந்த வித்தில் கலைந்தது என்பது பற்றிய ஒரு விவாதத்தை நம்முள் தூண்டும் படைப்பு இது என்கிறார் திலீப் குமார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60005141&edition_id=20000514&format=html)

“கனவுக்கு மீண்டும் உரிமை கொண்டாடுவது பற்றி” – அதானு ராயின் கட்டுரை. இது ஆஸ்திரேலியாவில் வெள்ளையர்களால் சுரண்டப் பட்டும் தமது பழங்குடி இன அடையாளங்களை இழக்கும் படி கட்டாயப் படுத்தப் பட்ட ஆதிவாசிகள் பற்றிய கட்டுரை. 1988ல் ஆஸ்திரேலியா தனது 200வது பிறந்த நாளைக் கொண்டாடும் போது அதில் பழங்குடியினருக்குக் கொண்டாடிக் கொள்ள எதுவுமே இல்லை. அவர்கள் தம் அடையாளங்களை இழந்தது மட்டுமல்லாமல் குடியுரிமை கேட்டுப் போராட வந்தது என்கிறது கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200051411&edition_id=20000514&format=html)

நாடகம் – வெறிச்சென்று ஒரு வீதி – அரேபிய நாடகம் – தௌஃபீக் அல் ஹகீம்,
கதைகள் – மாளிகை வாசம் – எம்.வி. வெங்கட்ராம் – பகுதி 3
கவிதைகள்-இதோ ஒரு வார்த்தை – ருத்ரா, எனக்குள் பெய்யும் மழை – கிஸ்வர் நஹீத்
*********************
மே 18, 2000 இதழ்: Survey of Tamil Internet Use என்னும் ஒரு கேள்விப் படிவம் costarica.net என்னும் அமைப்பின் சார்பில் வெளியிடப் பட்டுள்ளது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20005183&edition_id=20000518&format=html)
கவிதை: கொற்கை அம்மா: வ.ஐ.ச.ஜெயபாலன்
*********************

மே 21, 2000 இதழ்:
ஐம்பது சதவீதத்துக்கு அதிகமாவதா?: வேலைகளில் முன்னுரிமை – சின்னக்கருப்பன் – உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை 50% உச்சவரம்புடன் செயற்படும் என்றும், கடந்த காலம் காலியாக விடப்பட்டவற்றுக்கு இது செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியது. இதை ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைகள் எதிர்மறையாக நோக்கியதை சி.க. சாடுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200052111&edition_id=20000521&format=html)

The colonial Poison:Power, Knowledge and Penology in 19th Century India என்னும் ஆராய்ச்சி நூலின் அடிப்படையில் ரவிக்குமார், தலித் 1997 ஏப்ரல் இதழில் எழுதிய “பிர்ட்டிஷ் ஆட்சியில் சிறைச்சாலையும் ஜாதியும்” என்னும் கட்டுரை. சிறைக்குள்ளே தனியே சமைத்து, தனியே உண்ணும் உரிமைகளைக் மேல் ஜாதிக் கைதிகள் பெற்றிருந்தனர். மற்றும் 1847ல் அனைவரும் சேர்ந்துண்ண வேண்டும் என்று கொள்கையளவில் முடிவானாலும் பின்னர் அது நிறைவேற வெகுகாலமாகியது. நாடு கடத்துவதில் மட்டும் மத உணர்வுகளை பிரிட்டிஷ் அரசு ஏற்கவில்லை. மேல் ஜாதிக்காரர்களுக்கு அவர்கள் விருப்பப் பட்ட வேலையும், கீழ் ஜாதிக்காரருக்கோ குலத்தொழில் என்று கட்டாயமும் ஏற்படுத்தப்பட்டது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200052112&edition_id=20000521&format=html )
கதைகள்: வீட்டுக்கார சொர்ணத்தாச்சி – வண்ணநிலவன், பாண்டி விளையாட்டு – அசோகமித்திரன்
கவிதை: சி.ஜெயபாரதன் கவிதைகள், கோகுலக் கண்ணன் கவிதைகள்
****************************
மே 28, 2000 இதழ்:

கட்டுரை- புரட்சியாளர்கள் மனித உரிமையாளர்கள் கலைஞர்கள்:
மிக நீண்ட கட்டுரை ஐந்து பகுதிகளாலானது:

I. மரண தண்டனைக்கு எதிராக எழுப்பப் படும் மனித உரிமைகள் குறித்த கருத்துக்கள் மூன்றுவிதமான கருத்தாக்கங்களில் உள்ளன:

1.மூன்றாம் உலகின் மனித உரிமைகள் என்னும் கருத்தாக்கம்
2.விடுதலைப் போராட்டம் சார்ந்த மனித உரிமைகள் என்னும் கருத்தாக்கம்
3.கிழக்கத்திய கலாசாரம் சார்ந்த மனித உரிமைகள் என்னும் கருத்தாக்கம்

II.தனிநபர் உரிமைகள் என்னும் போது அதை இரு வித்தியாசமான வகைகளில் பார்க்கலாம்:

1.தனிநபர் சுதந்திரம் என்னும் மதிப்பீடு: நல்ல சமூகத்தில் பொருட்படுத்தப் படுகிற ஒருவர்க்கு தனிநபர் சுதந்திரம் முக்கியம்; அஃது உறுதி செய்யப்பட வேண்டும்.
2.சுதந்திரத்தில் சமத்துவம்: அனைவருமே பொருட்படுத்தப் பட வேண்டும். பரஸ்பரம் பகிர்தலின் அடிப்படையில் தனிநபர் சுதந்திரம் உத்திரவாதப் படுத்தப் பட வேண்டும்.

III. சோஷலிஸத்தை ஸ்வீகரிப்பது என்பது கனவுலக ராஜ்ஜியத்தை ஸ்வீகரிக்காமல் சாத்தியமில்லை. இறுதியில் அனைத்துக் கருத்தியல்களுமே கனவுலக ராஜ்ஜியங்கள் தான். சோஷலிஸமும் அத்தகைய கனவுல்காகத்தான் இருக்க வேண்டும். நிலவிய சோஷலிஸமானது இத்தைகைய கனவுமயமான அறவியல்புகளை நடைமுறையாகக் கொண்டிராமலே சோஷலிஸத்தை உருவாக்க நினைத்தது. ஆகவே அழிந்தது.

IV. மரண தண்டனை என்பதை எந்த அரசுமோ குழுவுமோ அரசியல் கட்சியுமோ எந்த மனிதனுக்கும் விதிக்கக் கூடாது. குற்றம் சாட்டப் பட்டிருக்கிறவர் அவர் சார்ந்த ஜாதி, இனமரவு, வம்சம், தேசம், வர்க்கம், பால் போன்றவைகளைக் கடந்து இக்கொள்கை அமலாக்கப் பட வேண்டும்.

V. இன்றைய உலகில் இன அழிப்பு என்பது அரசியல் பிரச் சனையாகப் பார்க்கப் படுவதை விட மனித உரிமைப் பிரச்சனையாகவே பார்க்கப் படுகிறது. இன விடுதலைப் போராட்டங்களை மேற்கொள்கிறவர்கள் இதை இப்போது ஆக்கபூர்வமாகக் கையாள்கிறார்கள் என்பதற்கான நடைமுறை உதாரணமாகவே குர்திஸ் போராளி ஒச்சலானுடையதும் கிழக்கு திமோர் போராளி ஸனானாவுடையதும், அமர்தியா சென், நோம் சாம்ஸ்க்கி, ஜான் பில்ஜர் போன்ற மனித உரிமையாளர்களதும், ஹெரால்ட் பின்டர், டோரியோ போன்ற கலைஞர்களுடையதுமான அணுகுமுறைகள் அமைகின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200052811&edition_id=20000528&format=html)

கட்டுரை: உலகமயமாதலின் கொடூர முகம் – அரவிந்த் கணேசன் – உலகமயமாக்கம் வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களை வளரும் நாடுகளின் உழைப்பைப் பயன்படுத்தி வளர்க்கவே பயன்படுகிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200052813&edition_id=20000528&format=html)

ஆஸ்த்மா நோய்- டாக்டர் ஸரஸ்வதி
ஆஸ்த்மா நோய் வம்சாவளியாக வருகிறதா, இல்லை சுற்றுப் புறச் சூழல் காரணமாக மட்டும் தான் வருகிறதா என்று எந்த ஒரு காரணத்தையும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

தமிழ் சினிமா – என்.வி.சுப்பாராவ் – Consumer Association of Penang /87 என்னும் அமைப்பு வெளியிட்ட “தமிழ் சினிமா” என்னும் நூல் பற்றிய கட்டுரை. இந்நூல் சினிமா சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியது. இளைஞர் சமுதாயம் ரசிகர் மன்றம் என்று அமைத்து ஒரு ஆளுமையை வழிபடுவதன் உளவியல் காரணங்களையும் அலசுகிறது.

கதைகள்- கணவன், மகன், மகள் – அசோகமித்திரன்; முடிவை நோக்கி – சி.ஜெயபாரதன்.
கவிதைகள் – நேற்றும் இன்றும் – பசுபதி, ஏழையும் இறைவனும் – வ.ஐ.ச. ஜெயபாலன்

**********************
ஜூன் 04, 2000 இதழ்:

நூல் மதிப்புரை: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ – சூரியராஜன் – நாவலை அதன் கதை சொல்லும் முறை மற்றும் பாத்திரச் சித்தரிப்பு அடிப்படையில் அலசி, அசோகமித்திரனின் திறமையைப் பாராட்டி, நாவல் சினிமா உலகத்தை முழுமையாக விண்டு காட்டவில்லை என்கிறார் சூரியராஜன். (குறிப்பு: அசோகமித்திரன் தன் பதிவுகளைப் பற்றி விளக்கம் எதுவும் தந்து முன்னுரை எழுத மாட்டார். ஆனால் கரைந்த நிழல்கள் இருப்பியல் (Existentialism) என்னும் தத்துவத்துடன் பொருந்துவது என்று கோடி காட்டியிருப்பார். தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் இது ஒன்று. நூல் மதிப்புரையில் இது விட்டுப் போயிருக்கிறது) -(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60006041&edition_id=20000604&format=html)
கவிதைகள் -கோகுலக் கண்ணன்
*************************
ஜூன் 6, 2000 இதழ்

கதைகள்
சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் – ஆதவன்
ஒரு பனை வளைகிறது – சி.ஜெயபாரதன்

*************************
ஜூன் 11 இதழ்

நேர்காணல் – சமரசம் இதழில் வெளிவந்த கவிஞர் அபியுடனான நேர்காணல்- லாசராவின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் அபி என்னும் ஹபிபுல்லா. அவர் லாசரா பற்றி நேர்காணலில் ” எழுத்தை மனோதத்துவப் பாதையில் ரொம்ப தூரம் கொண்டு சென்று ஆழ்ந்த உள்ளுணர்வு, தரிசன நிலைகளில் திளைக்கச் செய்தவர்” என்று குறிப்பிடுகிறார். பாரதிக்குப் பின் நிறையவே இருக்கிறார்கள் என்று கருதும் அவர் புதுமைப் பித்தன், மௌனி, லாசரா மற்றும் ஜெயகாந்தனின் வசன நடையை கவிதைகளின் நீட்சியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறார். அபியின் கவிதையில் ஒரு பகுதி:

உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்
தொடர
நிழல் வீழ்த்தாமல்
நடமாடியது

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60006111&edition_id=20000611&format=html)
******************
திரை விமர்சனம்: யமுனா ராஜேந்திரன்: “கோவிந்த் நிகலானி மகாஸ்வேதாதேவியின் நக்சலிஸம் பற்றிய மீள்பார்வை: 1084 ஆம் இலக்கத்தின் அன்னை” . முதலில் யமுனா ராஜேந்திரன் தனது கருத்துக்களை அல்லது விமர்சனங்களை எடுத்துரைக்கும் ஓட்டம் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஒரு உரையாடலின் வேகமும் ஒரு பிரதியின் ஆழமும் இரண்டுமே இருக்கும் கலவை. இதற்காக அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.

1084ஆம் இலக்கத்தின் அன்னை என்னும் திரைப்படம் ஒரு வங்காள இளைஞன் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டு அவனது சவத்துக்கு 1084 என்னும் இலக்கம் அளிக்கப்பட்டு அதை அவனது அம்மா மட்டும் சென்று எடுத்து வருமளவு அப்பாவும் சகோதர சகோதரியரும் அவனை மரணத்துக்குப் பின்னும் நிராகரிக்கும் சோகத்தில் தொடங்குகிறது. இறுதியாக, மகன் மனித உரிமைகளை நிலை நாட்டப் பாடு பட்டான் என்னும் புரிதல் ஏற்பட்டுத் தாயும் அவனது லட்சியப் பாதையில் பயணிக்க முயலுகிறார். மனித உரிமைகள் பற்றி மகா ஸ்வேதா தேவியின் படைப்புகள் பற்றி நாம் கட்டுரையில் மேலான புரிதலுக்கு அழைத்துச் செல்லப் படுகிறோம். மனித உரிமைகள் பற்றிய முக்கியமான படங்களாக ய.ரா. குறிப்பிடுபவை – The licence of Wall, What happened to my son, Missing. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600061115&edition_id=20000611&format=html)

*************************

ஜூன் 13, 2000
கணினிக் கட்டுரைகள் – 2 : மா.பரமேஸ்வரன் – LAN, WAN, Internet என இணைய வழிப் பணிகள் ஒரு நிறுவனத்துக்கு உள்ளே, இன்னும் விரிந்து மற்றும் வலைத் தளங்கள் வரையான பயன்பாடு பற்றிய ஒரு விளக்கக் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400061312&edition_id=20000613&format=html)

***************************
ஜூன் 18 இதழ் : கட்டுரை : இறந்த கிரிக்கெட் எப்போது உயிர் பெறும்? – சின்னக் கருப்பன் – கிரிக்கெட் வீரர்கள் நேர்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக விசாரணை நடைபெற்ற போது எழுதப்பட்ட கட்டுரை. இந்திய கிரிக்கெட்டில் எல்லா மாநிலங்களுக்கும் சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்று வாதாடுகிறார் சி.க. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200061811&edition_id=20000618&format=html )

______________
பெர்டோல்ட் ப்ரெக்டின் ஒரு பயணத்தின் கதை – புத்தக மதிப்புரை – வெளி ரங்கராஜன் – ப்ரெக்டின் Exception and Rule என்னும் நாடகத்தின் Peformance Script ஐ சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டிருப்பதை ஒட்டி எழுதப் பட்ட கட்டுரை. Peformance Script என்று நாடகத்தில் தனியாக ஒன்று உண்டு என்பது ஒரு புதிய விஷயமாக நாம் தெரிந்து கொள்கிறோம். ப்ரெடிக்ட் நாடகத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெ.ரா. நாம் நாட்டுப்புறக் கலைகளைக் கைவிட்டு பிரிட்டிஷாரின் ப்ரொசீனிய நாடக அமைப்பை எடுத்துக் கொண்டோம் என்கிறார். பிரெடிக்டின் ஆதார பிரதி Peformance Scriptல் நீர்த்து விட்டதாகப் படுகிறது. ஆதாரப் பிரதியை சேர்த்து வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகிறார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60006181&edition_id=20000618&format=html)

****************

தமிழுக்கு ஞானபீடப் பரிசு – வெளி ரங்கராஜன் – தமிழ் இலக்கியச் சூழலைக் கூர்மையாக விமர்சித்து எழுதிய இந்தக் கட்டுரைக்காக வெ.ர. வை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழில் நிலவும் நோய்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறார். அவர் முன் வைக்கும் ஆணித்தரமான கருத்துக்கள்:

வர்த்தக எழுத்தாளர்களையும், பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் ஞானபீட அமைப்பு விருதுக்கான நூல்களைத் தேர்வு செய்யும் படி செய்கிறது. இவர்களுக்கு இலக்கிய வாசிப்பு , நவீன இலக்கியம் இவற்றில் அதிகப் பரிச்சயமே கிடையாது. அதனால் தான் அகிலனுக்கு ஞான பீட விருது கிடைத்தது. அந்த கால கட்டத்தில் அமரராகி இருந்த மௌனி, குபரா, புதுமைப் பித்தன், கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி இவர்களில் ஒருவருக்கோ அல்லது ஆதவன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சம்பத், ப.சிங்காரம், ஆர்.ஷண்முக சுந்தரம், ஜானகிராமன் இவர்களில் ஒருவருக்குப் பரிசை அளித்திருக்க முடியும். மேம்போக்காக எழுதிப் பிரபலம் ஆனவர்களே கவனம் பெறுகிறார்கள் தமிழில். ஆனால் கன்னடத்தில் ஒரு கிரிஷ் கர்னாடோ அல்லது மலையாளத்தில் எம்டி வாசுதேவன் நாயரோ கவனம் பெறுகிறார்கள். அவர்கள் ஞானபீடம் பெற்றதில் சரியான தேர்வு இருக்கிறது. தமிழில் தமிழறஞராகக் கருதப் படுவர்களின் வாசிப்பே ஆழமற்றது. அதனால் தான் சிசு செல்லப்பாவின் சுதந்திர தாகம் நாவல் தமிழக் நூலகத்துறையால் நிராகரிக்கப் பட்டது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600061814&edition_id=20000618&format=html)

***************
நான்கு வெகுஜனப் படங்கள்: ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘வல்லரசு’, ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’, ‘குஷி’ – பாவம் யமுனா ராஜேந்திரன் நான்கு வணிகப் படங்களைப் பொறுமையாக விமர்சித்திருக்கிறார். இறுதியில் குஷி தேவலாம் என்று முடிக்கிறார். உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்தில் பூடகமாக மத வெறி செய்தியாகி இருக்கிறது என்பது அவர் கருத்து. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600061815&edition_id=20000618&format=html)

கட்டுரை: வரமா சாபமா? – மரபு மாற்றப் பட்ட உணவுப் பொருட்கள்- வெங்கட் ரமணன். மரபணு மாற்ற முறையில் உள்ள ஆபத்துக்களை விவரமாகக் கூறும் கட்டுரை. இயற்கையாய் உள்ள வண்டினங்களின் மகரந்தம் மாற்றும் பணி, நல்ல களைக்கொல்லிகளும் அழிக்கப் பட்டு விளைநிலங்களுக்கு ஆபத்து எனப் பலவற்றை எடுத்துக் காட்டுகிறார். இந்த வகை விவசாயத்தை ஊக்குவிப்பதே பல பயிர்களுக்குக் காப்புரிமை பெற்று அதன் மூலம் வளரும் நாட்டு விவசாயத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர பன்னாட்டு நிறுவங்கள் விரும்புவதே என்பதையும் தெளிவு படுத்துகிறார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400061812&edition_id=20000618&format=html)
கட்டுரை: கணினிக் கட்டுரைகள் – 3- மா. பரமேஸ்வரன் – Modem தொடர்பான தொழில் நுட்பம் பற்றிய கட்டுரை (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400061811&edition_id=20000618&format=html)

கதைகள்: அழகு – அசோகமித்திரன், சிகப்பாக, உயரமாக, மீசை வெச்சுக்காமல் -3- ஆதவன்
கவிதைகள்: என்று திரும்பி வருவாய் நீ என்னிடம் ?- முடவன் குட்டி , காற்றின் விரல்கள் – கோகுலக் கண்ணன்

*****************************
ஜூன் 20, 2000 இதழ்: கட்டுரை: இந்தியனாக இருப்பது குற்றமா? -சின்னக் கருப்பன் – சி.க. அவர்கள் எழுதியுள்ள கட்டுரைகளில் இது முக்கியமானதும் மிகவும் கூர்மையானதுமாகும். பிஜி தீவுகளில் நடந்த தேர்தலில் ஒரு இந்தியர் அதிபராக உருவாகும் நிலை ஏற்பட்ட போது பல பழங்குடியினர் போராடி அவர் பதவி ஏற்க இயலாத நிலை ஏற்பட்டது. ஆங்கிலேயர் இந்தியாவில், ஆப்பிரிக்காவில், ஆஸ்திரேலியாவில் செய்த மிகப் பெரிய சுரண்டல்களை, பழங்குடியினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறார். பிஜி தீவுகளில் ஆங்கிலேயர் அடிமை செய்தது இந்திய வம்சாவளியினரையும் சேர்த்துத்தான் என்று சுட்டிக் காட்டுகிறார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் இருண்ட காலத்தை பிஜி போராட்டம் நினைவு படுத்துகிறது. ஆனால் யாருமே அதைப் பற்றி மூச்சுக் கூட விட வில்லையே என்ற கேள்வியுடன் கட்டுரை முடிகிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200062015&edition_id=20000620&format=html )

**************************

ஜூன் 25 இதழ்: கட்டுரை : அவசர நிலை 25 ஆண்டுகள் – சின்ன கருப்பன் – அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்ட காலத்தை நினைவு கூறும் கட்டுரை. ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் கலைஞர் உண்மையிலேயே எதேச்சதிகாரத்தை எதிர்ப்பவர் கிடையாது என்னும் கருத்தை முன்வைக்கும் சிக, வினோபா பாவே ஜோதி பாசு ஆகிய தலைவர்கள் இவர்களை ஒப்பிட உயர்ந்தவர்கள் என்கிறார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60006251&edition_id=20000625&format=html )

————

கட்டுரை: எங்கே படைப்பாளி? : ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ்: (இந்த அற்புதமான கட்டுரையை மொழிபெயர்த்தவர் பெயர் ஏனோ இல்லை) – கலைக்குள் படைப்பாளியின் இருப்பும், படைப்பாளியைத் தாண்டி படைப்பின் இருப்பும் பற்றிய கட்டுரை. இதன் சுருக்கத்தை எழுதுவது சாத்தியமேயில்லை. ஒரு பகுதி அப்படியே – ” நெறிமுறை சார்ந்த / குடும்பம் சார்ந்த / குழு சார்ந்த உலகம் ஒரு புறம். ஒரு தனியாளின் ஆன்மீக உலகம் இன்னொரு புறம். எண்ணிக்கையில் அதிகமான ‘விதிகளின்’ உலகம் ஒரு புறம். விதிகளைப் புறம் தள்ளும் தனி மனித வேட்கை இன்னொரு புறம். இந்த இரு முரண்பட்ட உலகங்களுக்கிடையேயான போராட்டம் தான் விரட்டிக் கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையிலும் சரி எழுத்திலும் சரி. கனவே போல் ‘தான்’ கரைந்து, தூக்கம் கலைந்த அரை விழிப்பில், ஒரு தற்சார்பு அற்ற ஆளுமை எழுந்து, (கும்பல் நியதி சார்ந்த உலகு மீது) விசாரணைகளைத் தொடங்குகிறது. (என்னைப் பொறுத்த வரை இந்தத் துரத்தல் இளமைப் பருவம் தாண்டிய உடனேயே தொடங்கி விட்டது) (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200062515&edition_id=20000625&format=html )

_______________

கட்டுரை: நாட்டுப்புற நாடகம் என்னுடைய பார்வையில்: கன்னடத்தின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமையான சந்திரசேகர கம்பாரின் கட்டுரையை வெளி ரெங்கராஜன் மொழிபெயர்த்திருக்கிறார். செறிவான இந்தக் கட்டுரையின் சுருக்கத்தை வரைவது எளிதல்ல. கட்டுரையின் ஒரு பகுதி:

“நாட்டுப்புற நாடகம் இதனால், நடனம், நாடகத் தன்மை, கதை சொல்லுதல் , பாடல், பாலியல் தன்மை, மரணம், மதம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகர்கள் மட்டுமல்லாமல் நாடகம் பார்க்கும் பார்வையாளர்களும் வெளி உலகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள். பார்வையாளர்கள் நாட்டுப்புற நாடகத்தில் இவ்வாறு பங்கேற்கிறார்கள். உண்மையில் நடிகர்களும் பார்வையார்களும் இறுதியில் நாடகம் என்னும் வடிவில் இறுதியில் மதச் சடங்காகிப் போகிற காரியத்தில் இணைந்த பங்கேற்பாளராகிறார்கள். நீண்ட பயாலதா நாடகம் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து நடிகர்களும், பார்வையாளர்களும் விடியற்காலையில் கோயிலுக்குப் போவதுடன் முடிகிறது”
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60006252&edition_id=20000625&format=html)

______________________

கணினிக் கட்டுரைகள் 4- மா.பரமேஸ்வரன்- இணையம் எவ்வாறு அமெரிக்கப் பாதுகாப்புத்துறையால் உருவாக்கப் பட்டது என்று விளக்கும் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400062512&edition_id=20000625&format=html)

கதைகள் : ஒரு குறை – ஒரு நிறைவு – அனுஷா , (அ)லட்சியம் – நீல.பத்மனாபன், கவிதைகள் : பூஜைக்கு வந்த மலர் – சிவகாசி திலகபாமா, ஆலமரம் – பாவண்ணன்

(திண்ணை வாசிப்பு தொடரும்)

Series Navigationஎன்ன இது மாற்றமோ ..?குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *