குழியில் விழுந்த யானை

This entry is part 17 of 26 in the series 27 அக்டோபர் 2013

………
ருத்ரா
=============

அந்தக்குழியில் விழுந்த யானை
தவிக்கிறது.
உருள்கிறது..புரள்கிறது.
தும்பிக்கையை
வானம் நீட்டுக்கிறது.

பார்த்துக்கொண்டே இருந்து
மயங்கி இந்தக் குழியில் விழக்
காரணமான அந்த நிலவை நோக்கி
நீட்டுகிறது.

அருகில் உள்ள திராட்சைக்கொடியின்
கருங்கண் கொத்துகள் போன்ற‌
கனிக்கொத்துகளையும்
அந்த நிலவின் கண்களாக‌
எண்ணிக்கனவுகளோடு
தும்பிக்கை நீட்டுகிறது.
பிளிறுகிறது.
அருகே அடர்ந்த காடே
கிடு கிடுக்கிறது.
இருப்பினும்
குழியில் விழுந்தது விழுந்தது தான்.

விண்மீன்கள்
ஒளிக்கொசுகள் போல்
சீண்டுகின்றன..சிமிட்டுகின்றன.
வண்டுகள் ரீங்கரிக்கின்றன.

அருகில்
சிங்கம் புலிகள் ஏதும் இல்லை.
இருப்பினும்
அந்த “அம்புலி”
ஏன் என்னை அப்படி
உறுமி உறுமி
உரித்துத்தின்கிறது?

இனிமையான இசைக்கடலான‌
அந்த பாலமுரளிக்கிருஷ்ணாவின்
ராகங்கள்
நீட்டி
சுருட்டி
குழைந்து
நெளிந்து
உள்ளம் துவைக்கிறது.
ஓசையின் இன்பம்
கள் மழை பொழிந்தாற்போல்
இருப்பினும்
இக்குழியில் விழுந்தது விழுந்தது தான்.

கனவுகாய்ச்சி மரமான இந்த‌
மரத்தில் மறைந்த‌
மரத்தை மறைத்த‌
இம்மனத்தின் மாமதயானையை
மனந்தடுமாறி
இக்குழியில் வீழ்த்திய‌
வெள்ளி நிலவே
அந்த மேகத்தலையணைக்குள்
முகம் புதைத்து போதும்
வெளியே வா..

“…க்ளுக்..க்ளுக்….”.கென்று
இன்னோரு சிரிப்பா?
போதும் பெண்ணே!
இன்னும் ஒரு படுகுழியா
உன் கன்னத்தில்..?

=======ருத்ரா

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழைதீபாவளி நினைவு
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *