ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”

This entry is part 2 of 22 in the series 2 பெப்ருவரி 2014

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 3

 

தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர்,

ஹைதராபாத்

எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் :

குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes),  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet),  சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi )  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET  இல் தொடர்களாக வந்துள்ளன.

விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி,  மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

குறுநாவல்  எழுதியவர்:  ஜோதிர்லதா கிரிஜா.
வெளியான வருடம்:  1970.
நாவலின் பெயர் : மாறாத மனிதர்கள்.

நான்கு குறுநாவல்களை உள்ளடக்கிய  “மாறாத மனிதர்கள் ”  என்ற நாவல், ஆண்களின் பலவிதமான மன உணர்வுகளை அழகாக எடுத்தாண்டிருக்கிறார் கதாசிரியர்.

1.வித்தியாசமான ஆண்கள்
2.மாறாத மனிதர்கள்
3 எனக்கு நீ உனக்கு நான்
4.அம்மாவும் வேண்டாம் அப்பாவும் வேண்டாம்.

இந்த நான்கு கதைகளும்  சுடர் விட ஆரம்பித்து  வருடங்கள் பலவாகி விட்டாலும்  இன்னும் சிறுகதை உலகில் பிரகாசித்து ஒளிர்ந்து கொண்டிருப்பது கண்கூடு.

அதிக அளவில் பெண்ணியத்தைப் பற்றியே புதினங்கள் படைத்திருக்கும் கதாசிரியர், “வித்தியாசமான ஆண்கள் என்ற கதையில் மிகவும் வித்தியாசமாக ஆண்களின் மன உணர்வுகளை, மன ஓட்டங்களை, எதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.
காலங்கள் மாறலாம். என்றாலும் குடும்பத்தில் நடக்கும் சில நிகழ்வுகளைக் காலம் ஒரு போதும் மாற்றுவதில்லை. ஆதலால்,
எந்தக் காலத்திற்கும் ஏற்ற வகையில் கதையை மிகவும் கண்ணியமான முறையில் தனக்கே உரிய பாணியில் புனைவதில் அவர்களுக்கான ‘தனி இடத்தைக்’ காண முடிகிறது.

வித்தியாசமான ஆண்கள்:

கதைச்சுருக்கம்:

திருமணம் ஆகி மூன்றே மாதங்கள் முடிந்திருக்கும் நிலையில், ராதிகா தனது கணவனின் சம்பளம் எவ்வளவு என்று அறிந்து கொள்ளும் ஆவலில், கணவன் ரகுவிடம், “உங்களுக்கு என்ன சம்பளம்?” என்று கேட்கிறாள்.

“வெளித் தோற்றம் ஏமாற்றும்” என்கிற பழமொழி இருப்பதால், பெண்ணைப் பெற்றவர் என்பதால், ராதிகாவின் தந்தை ,பெண் பார்த்து முடிந்த ஒரு வாரத்தில் ரகு ஆபீசுக்கு வராத ஒரு நாளில்,அவனது ஆபீசுக்கு செல்கிறார். அவனது நண்பன் மூலமாக ரகுவைப் பற்றி விசாரித்து சம்பள விவரங்களைத்  தெரிந்து கொள்கிறார். இந்த விஷயம் ராதிகாவிற்குத் தெரிந்திருந்தும் எதற்காக மீண்டும் தெரியாதது போலக் கேட்கிறாள்?  என்று ரகு நினைத்தாலும், வீணான வாக்குவாதத்தை மேலும் வளர விடாமல், தனது சம்பளம் நாலாயிரத்து அறுநூறு என்றும் அவளிடம் சொல்கிறான்.

இதைக் கேட்டு திருப்தி அடைந்த ராதிகா, வீட்டுச் சமாச்சாரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளும் எண்ணத்துடன், ரகுவின் அண்ணன்கள் இருவரின் சம்பளத்தைப் பற்றியும் கேட்கிறாள். அப்போது தான், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் ராதிகாவும் இரண்டாம் அண்ணி சரோஜாவும் தோட்டத்துப் பக்கம் வெகு நேரம் எதையோ பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்த ரகு, அன்று இரண்டு பேர்களும் படித்தவர்கள் அதனால் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும் என்று நினைத்ததும், ஆனால் அதில் ஏதோ உள்நோக்கம்  இருந்தே தீர வேண்டும் என்ற சிந்தனையுடன், பெரியண்ணனுக்கு ரெண்டாயிரம் சம்பளமும், சின்ன அண்ணனுக்கு மூவாயிரத்துச் சொச்சமும் வருவதாகச் சொல்கிறான்.

அந்தக் குடும்பத்தில் மாமியார் இல்லை. மாமனார் மட்டும் தான். அவர் தான் அந்தக் குடும்பத்தின் வரவு செலவுகளையும் பார்ப்பவர்.

ராதிகா இதைப் பற்றியெல்லாம் ரகுவிடம் வெளிப்படையாகப் பேசுவதில் ரகுவின் மனதுக்குள் பல்வேறு சந்தேகங்கள் வந்தாலும், அதை அவள் புரிந்து கொண்ட விதத்தில்…தாங்கள் இருவரும் “தஞ்சாவூர் எத்தன், மதுரை எத்தன்” போன்றவர்கள் என்பதாய் இருவருக்குமே அந்தக் கணத்தில் ஒரே மாதிரியான எண்ணத்தால் மௌனமானார்கள். அந்த மௌனத்தை, ராதிகா, நீ அப்ளை பண்ணி இருந்த கம்பெனிக்கு ஏதும் பதில் வந்ததா? என்று கேட்டு ரகு தான் கலைத்தான்.

இது வரை இல்லை என்றும், அந்தக் கம்பெனியில் வேலை கிடைத்தால் எடுத்த எடுப்பில் ரெண்டாயிரம் சம்பளம் என்றும், வேலைக்குச் செல்வதில் ரகுவிற்கு ஏதும் ஆட்சேபணை இருக்குமோ என்று ராதிகா கேட்கிறாள்.

படித்த படிப்பு வீணாகாமல் இருக்க நீ வேலைக்குப் போக நினைத்தால் அதைத் தடுக்க மாட்டேன் என்று ரகு சொன்னதும், ராதிகா பெருமையுடன், ” சில ஆம்பளைங்க பெண்டாட்டியை வேலைக்கு அனுப்பி நிறைய வசதிகளை அனுபவிக்கணும்னு ஆசைப்படறாங்க. அவங்களுக்கு மத்தியில நீங்க வித்தியாசமான ஆளுதான்” ஆனா….இப்படியே எப்பவும் ஒரு கூட்டுக் குடும்பம் ஒரே மாதிரி நடந்துட்டு இருக்கும்னு சொல்ல முடியாதுங்க” என்றும் தனிக்குடித்தனதுக்கு அடிபோடுகிறாள்.

ரகு சட்டென்று புரிந்து கொண்டவனாக, ராதிகா சொல்ல வருவதை மேற்கொண்டு  கேட்கிறான்.

“விலை வாசி நாளுக்கு நாள் விஷமா ஏறிகிட்டு இருக்கு, அதனால நானும் சம்பாதிச்சா நாலு காசு சேர்த்து வச்சு சொந்தமா வீடு கிட்ட, நாளைக்கு நமக்குன்னு பொண்ணு பொறந்தா அதைக் கட்டிக் குடுக்க, இப்படி எத்தனயோ செலவுகள் இருப்பதாகவும், இப்போது கணக்கு வழக்கை உங்கப்பா தானே வெச்சுக்கிட்டு இருக்காரு. அத்தோட நீங்க மூணு பேரும் சம்பளப் பணத்தை மொத்தமா அப்படியே அப்பாகிட்ட கொடுத்துடுறீங்க, அவரு எதுனாச்சும் மிச்சம் பிடித்துச் சேர்த்து வைக்கிறாரா, இல்லாட்டி எல்லாமே குடும்பத்துக்குச் செலவழிஞ்சு போயிடுதான்னு” சந்தேகமாகக்  கேட்கிறாள் ராதிகா.

யாரோ உலுக்கி விட்டாற்போல எழுந்து உட்கார்ந்த ரகு, மனைவி ராதிகாவை ஆழமாகப் பார்த்து,நீங்கல்லாம் இந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கிறதுக்கு முந்தி நாங்க என்ன செய்துகிட்டு இருந்தோமோ, அதையேதான் என்னிக்கும் செய்வோம். எங்க காப்பி செலவுக்குப் போக மீதிப் பணத்தைத் தான் நாங்க குடும்ப செலவுக்கு அப்பாக்கிட்டத் தருகிறோம்.நமக்கு என்ன மாதிரிப் பணத் தேவை வந்தாலும் அவருகிட்ட போய்க் கேக்கலாம், கண்டிப்பா உதவுவாரு என்றும் சமாதானமாகச் சொல்லுகிறான் ரகு.

அந்த வீட்டில் பெரியவருக்கும் பெரிய மகனுக்கும் அண்ணிக்கும் இருக்கும் மதிப்பையும், மரியாதையையும் உணர்ந்து கொண்ட ராதிகா தயவு செஞ்சு என்னைச் சரியாப் புரிஞ்சுக்கோங்க, உங்கப்பா மேலே உங்களுக்கு இருக்கும் மரியாதையை நான் கனவுல கூடக் கலைக்க மாட்டேன் என்று சொல்லி ,அப்போதைக்கு வாயை மூடிக் கொள்கிறாள்.

ஆனாலும் ரகுவின் மனது அவள் சொன்னதில் சமாதானமாகாமல்,எப்படியும் இன்னொரு நாள் அவளிடமிருந்தே விஷயம் வெளி வரத்தான் போகிறது, அதுவரை காத்திருப்பது என்ற தீர்மானத்தில் அப்போதைக்கு அமைதியாகிறான்.

இந்நிலையில், இரண்டாவது அண்ணி சரோஜா, தனது குழந்தைகளுடன் ‘தசரா விடுமுறைக்காக’ , அவளது தாய் வீட்டுக்குச் செல்கிறாள்.அங்கு அவளது தோழி வசுமதியைச் சந்தித்துப் பேசுகிறாள். சரோஜாவிடம், அவளது அம்மா பேச்சுவாக்கில் அவளது புகுந்த வீட்டின் நிலைமை பற்றி விசாரிக்கிறாள்.

சரோஜாவும், அந்த வீட்டுல சண்டை வர வாய்ப்பேயில்லை . இவரோட அண்ணி கிட்டத் தட்ட ஒரு அம்மா மாதிரிப் பார்த்துக்கறாங்க. படிக்காதவங்க தான், வேலைக்குப் போகாதவங்க தான் இருந்தாலும் வீட்டில் எல்லா வேலைகளையும் அவங்களே தான் செய்கிறாங்க என்றதும், அப்போ உனக்கு அந்த நரகத்திலேர்ந்து விடுதலையே இல்லியா? என்று கேட்டு தனிக்குடித்தனத்தில் இருக்கும் சுதந்திரம் கூட்டுக் குடும்பத்தில் இருக்க முடியாது என்று சொல்லி மகளைக் குழப்புகிறாள்.

சரோஜாவும், அந்த வீட்டில் எல்லாம் ஆம்பளைங்க இஷ்டம் தான். அவங்க மூணு பேரும் ராமன், லட்சுமணன், பரதன் மாதிரி என்று சொல்கிறாள்.

சரோஜாவின் அம்மா சவுந்தரம்மாள் , அப்போ உங்க மாமன்னர் தசரதனாக்கும் …! நீயும், ராதிகாவும் சீதையும், ஊர்மிளாவுமாக்கும் என்று கேலி செய்கிறாள். மேலும், உன்னைவிட அந்தச் சின்ன மருமகள் ராதிகா கெட்டிக்காரி..வந்ததும் காரியத்தை சாதித்துக் கொள்ளும் சமர்த்து அவளுக்குத் தான் இருக்கு என்றும், உங்க வீட்டுக்காரரோட அண்ணிக்கு தாமசமா குழந்தை,அதுவும் பொண்ணு.பிறந்திருக்கு, அது கலியாண வயசு வர்றப்ப உங்க பெரிய மச்சினரு கண்ணை மூடினாலும் ஆச்சரியப் பட்றதுக்கில்லை ,  சின்னவளுக்கும் குழந்தை பொறந்திச்சின்னா நிறைய வம்பெல்லாம் வரும்….நீ வேணாப் பாரு, என்று மேலும் மகளைக் குழப்பிவிட்டு தனிக்குடித்தனம் பண்ணச் சொல்லித் தூண்டி விடுகிறாள்.
அவர்கள் நல்லவர்கள் தான் என்று சரோஜா எதிர்வாதம் செய்த போதும், இப்படியே எப்பவும் இருக்காது, நாளைக்குச் சண்டை போட்டு ரசா பாசமா பிரிஞ்சு போறதைவிட நல்ல உறவில் இருக்கிறப்பவே சுமுகமாப் பிரிஞ்சு வாழறது தான் நல்லது இது என்னோட சொந்த அனுபவத்தில் சொல்றேன் என்றெல்லாம் மகளிடம் சொல்லிக் கொடுக்கிறாள்.

சரோஜாவும் கூடவே, சின்னவருக்குத் தான் எங்க வீட்டுக்காரரையும் விட அதிக சம்பளம், பெரியவருக்கு ரொம்ப கம்மி சம்பளம். அதையெல்லாம் நானும் யோசிச்சுப் பார்த்தேன். சமயம் வரட்டும் என்கிறாள். எங்க பெரிய அண்ணி ரொம்ப நல்லவங்க, அதான்…என்கிறாள்.

உங்க பெரிய அண்ணி பொம்பளை பிள்ளையைப் பெத்து வெச்சிருக்கா, நாளைக்கு நாலு காசு வேணுமே, புருசங்காரன் கூட கொஞ்ச சம்பளம் தான் வாங்குறான், அதான் அவ ரொம்ப சாமர்த்தியமா சாது வேசங்கட்டிக்கிட்டு இருக்குறா. என்றும் மகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள்.

சரோஜாவுக்கே தனது அம்மாவின் மீது எரிச்சல் வருகிறது.

0  0   0  0   0   0

ரகுவின் அம்மா இறந்த போது, அப்பா அந்தக் கவலையில் இருந்தாலும் கடைசிப் பெண் குழந்தைகள் இரண்டு பேரை மட்டுமே கவனித்து வந்தார். அப்போது மூத்த அண்ணன்  லட்சுமணன் பத்தாவது தான் தேறி இருந்தான். மேலே படிக்க வசதி இல்லாததால் பணக்காரர் ஒருவரிடம் கணக்கெழுதும் வேலை பார்த்து வந்தான்.தன் காலுக்குச் செருப்புக் கூட இல்லாமல், வெய்யிலில் ரோட்டில் குதித்துக் குதித்து நடந்து போய் வேலை செய்வதைப் பார்த்த  நிகழ்ச்சியை தம்பி ரகுவும், சரவணனும் சுற்றுலாப் பேருந்திலிருந்து கண்டதை  நினைவு கூர்ந்தால் கண்கள் கலங்கும் ரகுவுக்கும் சரவணனுக்கும்.

வீட்டு வேலைகளை அப்பாவும், லட்சுமணன் அண்ணனும் மாற்றி மாற்றி செய்தார்கள்.மொத்தத்தில் ஊரே கண் படும்படி தான் அவர்கள் குடும்பம் இருந்தது.நாட்கள் நகரந்தன. கஷ்டப் பட்டு தம்பிகளையும் கல்லூரியில் படிக்கச் வைத்து, தங்கையைக்  படிக்க வைத்துக் கல்யாணம் செய்து கொடுத்து, தானும் தட்டெழுத்து கற்றுக் கொண்டு வேறு வேலைகள் செய்து ஏழைமையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கினான் மூத்த அண்ணன்.

அம்மா இறந்ததிலிருந்து தம்பிகளுக்காகவும், தங்கைகளுக்காகவும் கஷ்டப்பட்டு செய்த தியாகங்களும் துன்பங்களும் யாருக்காக? என்று எண்ணும் போது சரவணனுக்கு மனம் கலங்கும். இப்படிப்பட்ட அண்ணனை விட்டுவிட்டுத் தனியாகப் போய் விடலாம் என்று சொன்ன தன் மனைவி சரோஜாவை எண்ணி “என்ன பெண்கள் இவர்கள்?” என்று ஆத்திரமடைந்தான். அப்பா தான் தங்கை ரஞ்சிதத்தின் கல்யாணம் ஆனவுடன், அண்ணனை இணங்க வைத்து சமயத்தில் சாவித்திரியை கல்யாணம் செய்து வைத்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அத்தோடு நல்லவேளை வர அடுத்தடுத்து எல்லாருக்குமே கல்யாணம் நடந்து முடிந்தது. சரவணன் சரோஜாவுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் ஆகிவிட்டது.

அம்மாவுக்கும் ஒரு படி மேலாக சாவித்திரி அண்ணி. வீட்டில் அத்தனை வேலைகளையும் முகம் கோணாமல் செய்வாள். சரோஜாவோ, ராதிகாவோ ஒரு உதவியும் செய்யாவிட்டாலும் அதைப் பெரிது படுத்தாமல் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடிப்பாள்.
சரோஜா வேலைக்குப் போவதால், குழந்தைகளையும் அண்ணி தான் பார்த்துக் கொள்வாள்.

லட்சுமண அண்ணன் செய்த தியாகங்களை தம்பிகள் மறக்காமல் அவ்வபோது நினைத்துக் கொண்டு தங்களுக்குள் அவ்வபோது பேசிக் கொள்வார்கள்.

இவ்வாறிருக்க, ராதிகா அவளது தோழி ரம்யாவுடன் சினிமா பார்த்து விட்டு வரும்போது இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.ரம்யா தனது மாமியாரைப் பற்றியும் அவர் அவளது குழந்தையைப் பார்த்துக் கொள்வதால் சேர்ந்து இருப்பதாகவும், அப்படியும் அவர் தெனமும் சொல்லிச் சொல்லிக் காண்பிப்பதால் மனசுக்குக் கஷ்டமாக இருப்பதால், குழந்தை வளர்ந்ததும் தனிக்குடித்தனம் தனது அக்கா வீட்டுப் பக்கமாக வீடு பார்த்துக் கொண்டு போயிடலாம்னு இருக்கேன் என்றும் சொல்கிறாள்.

தனிக்குடித்தனத்தை ஓரளவு நியாயப்படுத்திக் கொள்வதற்கு ரம்யாவுக்கு இருந்த காரணங்களில் ஒன்று கூடத்  தனக்கு இல்லாத நிலையை எண்ணிப் பார்த்த ராதிகாவுக்கு சுருக்கென்று இருந்தாலும், தனியாக இருப்பது தான் சுகம் என்றெண்ணி, தன் கணவனின் சம்பளம் முழுதும் அந்தக் குடும்பத்துக்கு செல்வாவதைக் காரணமாக எடுத்துக் கொண்டு, எப்படியாவது தானும் தனிக்குடித்தனம் போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதை எப்படி செயலாக்குவது என்று மேலும் குழம்பினாள்.

சினிமா விட்டு வீடு வந்த ராதிகாவுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, அவள் மனுப் போட்டிருந்த கம்பெனியிலிருந்து நேர்முகத்திற்கு அழைத்துக் கடிதம் வந்திருந்தது. அந்த வேலை தனக்குத் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தாள் ராதிகா. பொழுது விடிந்தால் நேர்முகம். அந்த விஷயத்தை அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தாள் ராதிகா.

ரகு தன் மனைவி ராதிகாவிடம், அண்ணிக்கு உடம்பு சுகமில்லை, அதனால் நீயும் சீக்கிரம் எழுந்து சமையலில்  கூட மாட உதவி செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல்கிறான். அதற்கு அவள் சமையல்கட்டுல போய் நின்னு வேலை செய்துவிட்டு இண்டர்வியூ போக முடியாது என்று காரணம் சொல்கிறாள்.

ரகுவுக்குக் கோபம் வருகிறது. அப்போ….வேலை கிடைச்சாலும் நீ இதே கதையைத் தானே சொல்லுவே.? பாவம் எங்க அண்ணிக்கு என்னிக்குமே இந்த வேலையிலேர்ந்து விமோச்சனமே  இல்லாமே போயிடப் போகுது. சரோஜாவும், நீயும் ஆபீசுக்குக் கிளம்பினா அண்ணி பாடு திண்டாட்டம் தான். அது பத்தாதுன்னு சரோஜா அண்ணியின் ரெண்டு பிள்ளைங்களை வேற பாத்துக்கணும். அப்பறம் நமக்குக் குழந்தை பொறந்தா அதையும் பார்த்துக்கணும். மனுசங்க சாதுவா இருந்தாலும் மத்தவங்க ஏமாத்தப் பார்க்கறாங்க..வேலைக்குப் போகாத நாள்லயே அண்ணிக்கு உதவி செய்யாத நீங்க ரெண்டு பேரும் வேலை கிடைத்ததும் ஒரு விரலைக் கூட அசைக்கப் போறதில்லை…மொத்தத்துல நல்லவங்களும், வாயில்லாப் பூச்சிகளும் நிரந்தரமா கஷ்டப் பட்டுக்கிட்டே இருக்க வேண்டியது தான் அதுக்காகத் தான் சொல்றேன் என்கிறான்.

இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடக்கிறது. அண்ணி மீது அவன் கொண்டிருக்கும் பாசத்தைக் கண்டு ராதிகாவுக்கு தாங்க முடியாத வியப்பு ஏற்பட்டது. கூடவே அவன் சொன்னதைக் கேட்க ஆத்திரமும் வந்தது.

அண்ணன் லட்சுமணன் தன் மனைவி சாவித்திரியிடம், அவளுக்கு வேலை அதிகமாகிக் கொண்டே வருகிறதே என்ற கரிசனத்தில்,நல்லவளா இருக்கறது வேற, ஏமாளியா இருக்கறது வேற சாவித்திரி, அவங்ககிட்ட கொஞ்சமாவது நீ வேலை வாங்கணும்.இப்படியே பழக்கிட்டியானா பின்னால உனக்குத் தான் ரொம்பக் கஷ்டம். இப்படியே நீ எத்தினி நாளைக்குத் தாக்குப் பிடிப்பே..நீ சீக்காளியா விழுந்தா எல்லாரும் உன்னைக் கை கழுவிடுவாங்க என்று சொல்லிக் கொண்டிருந்ததை தண்ணீர் குடிப்பதற்காக அடுக்களைக்கு வந்த சரவணன் காது கொடுத்துக் கேட்டுவிட்டான்.

அவர்கள் பேசியதைக் அவர்களுக்குத் தெரியாமல் கேட்டுவிட்ட சரவணனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. சரோஜாவின் மீது எரிச்சல் வந்தது. “இந்தப் பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?” என்று தோன்றியது. தன மனைவி வீட்டு வேலைகளில் பங்கேற்காமல் அண்ணியை ஏமாற்றி வந்துள்ளதைக் கவனிக்கத் தவறிய தன மீது அவனுக்குச் சினம் மூண்டது. சம்பாதிப்பதோடு ஓர் ஆணின் வேலை முடிந்து விடக் கூடாது. வீட்டில் என்ன நடக்கிறது, யாரு ஏமாற்றுகிறார்கள், யார் கொடுமைப் படுத்துகிறார்கள், யார் இளித்த வாயாய் அடங்கி அடிமாடுகளாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட ஆண்பிள்ளை கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பச் சண்டைகளில் நியாயம் யார் பக்கம் என்பதைத் தீர்மானித்துத் தீர்ப்பளிக்கும் தகுதி, நாளைக்கு வழக்கு அவனிடம் வரும்போது அவனுக்கு இல்லாது போய்விடும்.! இப்படியெல்லாம் அவனுக்குத் தோன்றியது.

அடுத்த நாள், சரவணனும், ரகுவும் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும் போது , தம் மனைவிகள் இரண்டு பேரும் பேசி வச்சுக்கிட்டுத்தான் தனித்தனியா நம்மள ஆழம் பார்த்திருக்காங்க. என்ன ஆனாலும் பரவாயில்லை. நாம இதற்கு இடமே கொடுக்கக் கூடாது. உறுதியா இருக்கணும். வயசான காலத்தில் அப்பாவுக்கு நாம தனியாப் போனா மனசுக்குக் கஷ்டமா இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

சரோஜாவும் தன் தாய் வீட்டிலிருந்து திரும்பி வந்ததும், வீட்டின் பின் புறத்தில், தோட்டத்தில் ராதிகாவை சந்தித்துக் கிணற்று மேடையில் உட்கார்ந்து தங்களின் தனிக்குடித்தனத் திட்டத்தை ஒத்திப் போடுவதைப் பற்றிப் பேசினார்கள். சரோஜாவின் தோழி வசுமதி சொன்ன சில விஷயங்கள் தான் அதற்குக் காரணம் என்றும் ராதிகாவிடம் சொன்னாள் சரோஜா.

இப்போது ஒரு அஞ்சாறு வருஷம் தனிக்குடித்தனத்தைப் பற்றி பேச்சு எடுக்க வேண்டாம். குழந்தைகளை அண்ணி வளர்த்துப் பெரிசாக்கட்டும், அதன் பிறகு மெல்ல முதலில் நான் கழண்டுகிறேன். பிறகு நீயும் வெளிய வந்துடு. குழந்தைகளை வளர்த்து ஆளாக்க அண்ணி வேணும். அதனால் இப்ப அவசரப்படக்கூடாது. இப்பக் கூட்டாவே இருந்துடலாம். ஆனால் இந்த வீட்டில் மூணு பேரு சம்பளத்தையும் வாங்கி மாமா முடிஞ்சுக்கிடுறாரு .என்றெல்லாம் தாறுமாறாக பேசிக் கொண்டிருந்து விட்டு எழுந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

ஒரு வாரம் கழிந்தது…

மாமனார் வேணுகோபாலன் பிள்ளைகளையும்,மருமகள் மூவரையும் “ஒரு விஷயம் பேசணும். எல்லாரும் வாங்க” என்று அழைத்ததும், வியப்புடன் அனைவரும் அவர் முன் சென்று அமர்ந்தனர்.

பெத்த அப்பன் மேல அளவு கடந்த மரியாதை வெச்சு சம்பளம் மொத்தத்தையும் என்கிட்டே கொணாந்து குடுத்துடறீங்க..! ராதிகா இப்பதான் வேலைக்குப் போகப் போவுது. அத்தோட சம்பளத்தை நான் விரலால கூடத் தொட்றதா இல்லே…அது அவ பாடு…ரகு பாடு…!
உங்க மூணு பேரு சம்பளமும் ஆளாளுக்கு வித்தியாசப் பட்டாலும், லட்சுமணனை குறைச்ச சம்பளக்காரன்னு என்னால நினைக்க முடியல.அவன் இந்தக் குடும்பத்துக்காக பட்டிருக்குற பாடு, படிக்கிற ஆசையைத் தியாகம் பண்ணினது, காலந்தாழ்த்திக் கலியாணம் கட்டிகிட்டது இதெல்லாம் சரோஜாவுக்கும், ராதிகாவுக்கும் பெரிசா தெரியல்லேன்னா அது அவங்க தப்பில்லே! இதுவரைக்கும் நீங்க கொடுத்த பணத்தை எடுத்துக் குடும்பத்துக்குச் செலவு பண்றேன்.கணக்கைத் தனித் தனியா எழுதி வெச்சுருக்கேன்.அப்பத்தான் தனித் தனிக் குடும்பப் பணம் எவ்வளவுன்னு என்னால சரியா கணிக்க முடியும். அதனால குழந்தைங்க செலவு எதுவும் ராதிகா ரகு இவங்க மேல விழறதுக்கு வாய்ப்பே இல்லே..!

என்னப்பா….இது? என்னென்னமோ சொல்றீங்க என்று கேட்ட மகன்களைக் கை உயர்த்தி கட்டுப்படுத்திவிட்டு பெரியவர் மேலே பேசினார்.

குடும்பத்துல எந்தப் பகைக்கும் காரணம் என்ன தெரியுமோ? பணந்தான்…! அந்தப் பண விஷயத்துல மத்தவங்க நம்மள ஏமாத்துறாங்களோ அப்படிங்கற ஒரு சின்ன சந்தேகம் வந்தாக் கூடப் போதும், அண்ணன் தம்பிகளுக்குள்ள மனத்தாங்கல், பிளவு, அப்பாலப் பிரிவு எல்லாம் வந்துடும். இப்படிச் சொல்லிக் கொண்டே போனார். மேலும் அண்ணனைப் பற்றிப் பேசும் போது சொன்னார்..தம்பி பொஞ்சாதிங்களை அனுசரிச்சுப் போகணும்னு சொல்லி சத்தியமே வாங்கிட்டுத் தான் லட்சுமணன் சாவித்திரிக்குத் தாலி கட்டினான்.

தம்பிகள் இருவரும் வியப்படைந்து அண்ணனை எறிட்டார்கள் . லட்சுமணன் முகம் சிவந்து தலை குனிந்தான்.

எல்லாரும் மெளனமாக அவரையே பார்த்தார்கள்.

கூட்டுக் குடும்பங்கிறது ஒரு ஏமாத்து வேலை. ஏமாளியா இருக்கிறவங்க அடங்கிப் போற வரைக்கும் அது வெற்றிகரமா நடக்கும். என்னிக்கு அவங்க பொறுமை காத்துல பறக்குதோ, அன்னிக்கு அது உடைஞ்சிடும். அதனால அப்படி ஆகிறதுக்கு முந்தியே பிரிஞ்சிட்றது தான் நல்லது. கூட்டுக் குடும்பம்கிறது சிலர் அடங்கியும் சிலர் அதிகாரம் பண்ணிட்டும் இருக்கிற ஒரு அமைப்பு. அதனால லட்சுமணா நீ தனியாப் போய்டறது நல்லதுப்பா…என்கிறார்.

என்னப்பா இது? தலை கீழா இருக்கு….பிள்ளைங்க தனியாப் போறேன்னு கிளம்பறதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்க என்னடான்னா நீங்களே….மேலே பேச முடியாமல் லட்சுமணனுக்கு தொண்டை வலித்தது.

 

அப்பா நீங்கப்பா? எங்களோட வந்துடுங்க” என்றான் லட்சுமணன்.

 

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் உன்னோடதாண்டா இருப்பேன்”..என்கிறார் பெரியவர்.

சாவித்திரி இப்ப இந்த வீட்டில் சமையல்காரி மாதிரி இருந்துக்கிட்டு இருக்கா…காலப்போக்குல ஒரு கொத்தடிமை ஆயிடுவாளோன்னு பயப்படறேன்.எனக்குன்னு ஒரு நியாயம் இருக்கும்மா.என்று மேலும் பேசியவர், சரோஜா..ராதிகா..! என்னையத்  தப்பா எடுத்துக்கிடாதீங்க. நல்லதுக்குத்தான் சொல்றேன். தனியா இருந்தாத் தான் மத்தவங்க அருமை புரியும்.என்று சொல்லிக் கொண்டே அவர்களது சேமிப்பு பாஸ் புகைக் கொடுக்கிறார். இனிமேல்பட்டு அவங்கவங்க பாட்டை அவங்கவுங்க பார்த்துக்கிடுங்க… என்று முடிக்கிறார்.

அப்ப ….இந்த வீட்டை வாடகைக்கு விடப் போறீங்களாப்பா ?” என்கிறான் ரகு.

“ஆமாம்…” என்றவர், அம்மா சரோஜா, ராதிகா! மாமாவைத் தப்பாப் புரிஞ்சுக்காதீங்க என்றபடி எழுந்து கொண்டார்.

அன்று கிணற்றடியில் இளைய மருமகள்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கிணற்றின் மறுபக்கம் மறைவாகக் காற்று வாங்கியபடி உட்கார்ந்திருந்த போது கேட்க நேர்ந்தது நினைவுக்கு வரவும், அவர் சிரித்துக் கொண்டே தமது அறைக்குச் சென்றார்.

தனிக்குடித்தன ஆசை கொண்டு உறவுகளின் மேன்மையை உணராத பெண்களுக்கு ஒரு பாடமாக இந்தக் குறுநாவல் காணப்படுகிறது.

கதை முழுதும் அருமையான வசனங்கள், விறுவிறுப்பான நடை.! ஆண்களின் மன உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டப் பட்ட குறுநாவல்.

நன்றி.

 

Series Navigationமருமகளின் மர்மம் – 14பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்‘ஒப்பனைகள் கலைவதற்கே’ நாவல்தொடுவானம் – 1நவீன எழுத்தாளனின் சமூகஅக்கரைஒரு நிஷ்காம கர்மிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 44ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – 20 குரு க்ஷேத்திரம். பீஷ்மரின் வீழ்ச்சிமருத்துவக் கட்டுரை உணவுக்குழாய் புற்றுநோய்நீங்காத நினைவுகள் 32புன்னகை எனும் பூ மொட்டுதிண்ணையின் இலக்கியத் தடம் -20தினம் என் பயணங்கள் – 3பெண்களின் விஸ்வரூபம் – வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படிகாலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஜெயந்தி ஷங்கர் அவர்களே. நீங்கள் எழுதிய ஜோதிர்லதா கிரிஜாவின் ” வித்தியாசமான ஆண்கள் ” நாவலின் கதைச் சுருக்கம் சற்று நீளமாக இருந்தாலும் , படிக்க அருமையாக உள்ளது. ஒரு நாவலையே படித்து முடித்த உணர்வு உண்டானது. கூட்டுக் குடும்பம் எப்படியெல்லாம் உடையக்கூடும் என்பது சிறப்பான வகையில் ஆண்களை வைத்தே கூறப்பட்டுள்ளது. வாழ்த்துகள். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *