தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014



(முன்குறிப்பு: முக்கியமான, சிறுவர்களுக்கான உலகத் திரைப்படங்களைப் பார்த்து, ஆங்கில சப்-டைட்டிலை தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க வேண்டும், சிறுவர்களுக்கான சில சினிமா நூல்களை மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்துக் கொடுக்க ஆர்வம் இருக்கும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள். 9578780400)

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ இந்த வருடம் முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டையும், வெவ்வேறு பருவத்தினருக்கான திரைப்பட ரசனை வளர்க்கும் ஆண்டாக கொண்டாடவிருக்கிறது. அதன் படி இந்த ஆண்டு (2014) சிறுவர்களுக்கான திரைப்பட ரசனையை வளர்க்கும் ஆண்டாக கொண்டாடவிருக்கிறது. பத்து வயது முதல், பதினேழு வரையிலான சிறுவர்களுக்கு திரைப்படம் சார்ந்து ரசனை வளர்க்க இந்த ஆண்டு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. பாலு மகேந்திராவின் ஆசைப்படி, திரைப்பட ரசனையை பள்ளிகளில் பாடமாக வைப்பதில் இருக்கும் பிரச்சனை, அதிலும் தேர்வு வைப்பார்கள், தேர்ச்சி வேண்டும் என்பார்கள். சிறுவர்கள் இப்படியான படங்களை பார்த்து, அதை தேர்வு எழுத வேண்டும் என்கிற விதிமுறைக்குள் நுழையும்போது, அனிச்சையாகவே திரைப்பட ரசனை மீதும் ஒருவித வெறுப்பு ஏற்படும். மாறாக, திரைப்பட ரசனை என்பது, சிறுவர்களுக்குள் இயல்பாக துளிர்விட வேண்டும், விளையாட்டின் மீது தன்னியல்பாக ஏற்படும் ஆர்வத்தை போல, நல்ல திரைப்படங்கள் மீதும் தன்னியல்பாக ஆர்வம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குள் திரைப்பட ரசனையை வளர்ப்பதும், காட்சி பிம்பங்களின் தாக்கத்தை பற்றி அவர்களை அறிய செய்வதும் சுலபமான ஒன்றாக இருக்க முடியும்.

மேலும், தமிழ் திரைப்படங்களை மட்டுமே பார்த்து இருபது-இருபத்தியைந்து வயது வரை வளர்ந்துவிட்ட பிறகு, அவர்களுக்கு திரைப்பட ரசனையை வளர்ப்பது அத்தனை எளிதல்ல, அதற்குள் அவர்கள் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த வெகுஜன ரசனைக்குள் தங்களை இரண்டறக் கலக்க செய்துவிடுவார்கள். தமிழ்நாட்டில் இரண்டு வயதுக் குழந்தை கூட திரைப்படங்களையோ, திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சியையோ பார்க்காமல் வளர்வதற்கான எந்த சூழலும் இல்லை, இந்நிலையில் இருபது ஆண்டுகள் இப்படியான மோசமான படங்களை பார்த்து, அதனூடாகவே தன்னை கட்டமைத்துக் கொள்ளும் இளைய தலைமுறை, பல்வேறு விதங்களில் இந்த மோசமான சினிமாவின் பிரதிநிதிகளாகவே மாறிவிடுகிறார்கள். இவர்களை இருபத்தியைந்து வயதிற்கு மேல் நல்லத் திரைப்படங்களை நோக்கி திருப்புவது என்பது அத்தனை எளிதானது அல்ல, எனவே பத்து வயதில் இருந்தே சிறுவர்களுக்கு நல்ல திரைப்படம் என்றால் என்ன? திரைப்படங்களை எப்படி பார்க்க வேண்டும்? திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? காட்சி பிம்பங்களின் வழியே ஒரு கதையை சொல்வது எப்படி? ஒரு அனுபவத்தை கொடுப்பது எப்படி? சமூகத்தை சீரமைக்க/சீரழிக்க சினிமா எப்படி ஒரு காரணியாக செயபடுகிறது என்பதுப் போன்ற பல்வேறு விசயங்களை எளிதாக கற்றுக்கொடுப்பதன் வாயிலாக அவர்களை இளம்பருவத்திலேயே நல்ல திரைப்பட ரசனை நோக்கி, திருப்பிவிட முடியும் என்று உறுதியாக நான் நன்புகிறேன்.

இதற்காக தமிழ் ஸ்டுடியோ இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை, கருத்துப் பட்டறைகளை, திரைப்பட உருவாக்க முறைகளை சிறுவர்களுக்காக நடத்தவிருக்கிறது. இதன் முக்கியமான ஒரு பகுதி, மே மாதம் தமிழ் ஸ்டுடியோ நடத்தவிருக்கும் சிறுவர்களுக்கான திரைப்பட விழா. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியான சிறந்த திரைப்படங்களை, தமிழ் சப்-டைட்டில் உடன் இந்த திரைப்பட விழாவில் திரையிடவிருக்கிறோம். தவிர, சிறுவர்களுக்கு திரைப்பட ரசனைப் பற்றிய வகுப்பு, அவர்களுக்கு இயல்பாகவே நல்லத் திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட சில திரைப்பட விளையாட்டு நிகழ்வுகள் என பல்வேறு விஷயங்கள் இந்த திரைப்பட விழாவின் வாயிலாக நடக்கவிருக்கிறது.

முக்கியமான, சிறுவர்களுக்கான உலகத் திரைப்படங்களைப் பார்த்து, ஆங்கில சப்-டைட்டிலை தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க வேண்டும், சிறுவர்களுக்கான சில சினிமா நூல்களை மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்துக் கொடுக்க ஆர்வம் இருக்கும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள். 9578780400

மாற்றத்தை நோக்கி நகர விரும்பும் அத்தனை நண்பர்களும், இந்த சிறுவர் திரை-ஆண்டை தமிழ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து கொண்டாட தயாராக இருங்கள். குறைந்தபட்சம், உங்கள் வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்காவது நல்ல திரைப்பட ரசனை உருவாக வழிகாட்டியாக இருங்கள். சினிமா சமூகத்தை சீரழிக்கிறது, சினிமா ஒரு மோசமான ஊடகம், சினிமாவால் எவ்வித பயனும் இல்லை, சினிமா பார்த்தால் குழந்தைகள் கெட்டுப் போய்விடுவார்கள், என்று சினிமாவை அறவே ஒதுக்காமல், அப்படியான மோசமான பொதுப்புத்தியை ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல சினிமா பற்றி புரிந்துக் கொண்டு, அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்துக் கொண்டு, உங்கள் குழந்தைகளை, நல்ல சினிமா ரசனை நோக்கி திருப்ப முயலுங்கள். தமிழ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து இந்த சிறுவர் திரை-ஆண்டை கொண்டாடுங்கள்.

(பின்குறிப்பு: தங்களால் இயலாது என்றாலும், நண்பர்கள் இந்த அறிவிப்பை தங்கள் நண்பர்களுக்கு மத்தியில் எடுத்து சொல்லி, அவர்களை உதவ செய்யலாம். அல்லது இதை எல்லோர் மத்தியிலும் எடுத்து செல்ல ஒரு ஊடகக் கருவியாக செயல்படலாம். இந்த திரைப்பட விழாவில், சிறுவர்களுக்கு வழிகாட்டியாக, தன்னார்வலராகவும் செயல்படமால். தொடர்புக்கு. 9578780400)

Series Navigationமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்மருமகளின் மர்மம் 18நீங்காத நினைவுகள் – 36கொலுஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *