நீங்காத நினைவுகள் – 44

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா

சில ஆண்டுகளுக்கு முன்னால், பிரபல எழுத்தாளரும் (தற்போது ஓய்வு பெற்றுள்ள) அன்றைத் தமிழகக் காவல்துறை உயர் அலுவலருமான ஒருவர் போரில் வெற்றி பெறும் ராணுவத்தினர் தோற்ற நாட்டின் பெண்களை வன்னுகர்வு செய்வது பற்றித் தமிழகத்தின் வார இதழ் ஒன்றில் ஒரு கேள்வியை எழுப்பி யிருந்தார். அவரது கேள்விக்கு அதன் தலைமை உதவி ஆசிரியர் கீழ்க்கண்டவாறு பதில் அளித்திருந்தார்:
“முதல் வேலையாக (தோற்ற) அந்நாட்டுப் பெண்களைப் பாலியல் பலாத்காரத்துக்கு (வெற்றி பெற்ற நாட்டு) ஆண்கள் உட்படுத்துவது ஏன்? காரணம், செக்ஸ் அல்ல. வன்முறைப் பிரயோகம் என்பது உங்களுக்குத் தெரியும். ஓர் அரசனையோ, சாமான்ய மனிதனையோ உச்சகட்ட அவமானத்துக்கு உட்படுத்த அது ஒரு வழி.” – இவ்வாறு அவர் பதில் சொல்லியிருந்தார். இதனை நாம் ஒப்புக்கொள்ளவில்லை.
என்னால் முழுவதுமாக ஒப்புக்கொள்ள முடியாத அவரது கூற்றுக்கு இவ்வாறு பதில் அளித்தேன். (ஆனால், அதை அவர் வெளியிடவில்லை.)
பாலியல் வன்னுகர்வு, உடல் சார்ந்த பிற கொடுமைகள் போன்றவை வன்முறையின் வெளிப்பாடுதான். ஆனால், பாலியல் வன்னுகர்வைப் பொறுத்த மட்டில், அது வன்முறையின் வெளிப்பாடு மட்டுமே ஒரு போதும் ஆகாது. பிடித்தம் அற்ற ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்துவது என்கிற ஒன்று மட்டுமே வன்முறையின் வெளிப்பாடு. ஆனால், அவ்வன்முறையின் அடிப்படை ஆண்களின் உடல் சார்ந்த காமவெறியே யாகும். எதிரியோ ஏற்கெனவே தோற்றாகிவிட்டது. அவன் எதிராளியின் கைப்பிடிக்கு வந்தாகிவிட்டது. அதன் பின் பெண்களின்பாற்பட்ட கட்டாய உடலுறவு எதற்காக? பட்டாளத்தில் உள்ள ஆண்களின் இந்த வெறிக்கு ஒரு தலையாய காரணம் அவர்கள் தங்கள் மனைவியரை விட்டுப் பிரிந்து போர்ப்படையில் நெடுங்காலமாகப் “பட்டினி”யாக இருந்து வருவதும் ஒன்று. வெற்றியும் பெற்று விட்ட பிற்பாடு, தங்களைக் கேட்பாரில்லை என்கிற வசதி எரிகிற தீயில் மேலும் எண்ணெய்யை வார்க்கிறது.
சின்னஞ்சிறு குழந்தைகளைக்கூட விட்டு வைக்காத ஆண்கள் இளைஞர்களில் தொடங்கிக் கிழவர்கள் வரை இருந்து வருகிறார்கள். இதற்குக் காரணம் வன்முறையா என்ன! ஒருபோதும் வன்முறை காரணமன்று. ஆண் பிறவியின் இயல்பே அதுதான். அவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கும் மேல் எப்போதும் விகார எண்ணங்களில் திளைத்துக்கொண்டிருப்பவர்களே. கேள்வி கேட்பாரற்ற வசதியான நிலை உருவானதும் படை வீரர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு அப்பாவிப் பெண்களைப் பாலியல் வன்னுகர்வு செய்யத் தலைப்படுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.
அவர்களின் பிறவித்தன்மையே அப்படி இருப்பதால்தான், பெண்குழந்தைகளை அவற்றின் தாய்மார்கள், “ஆம்பளைப் பசங்களோட சேர்ந்தா காது அறுந்துடும், மூக்கு அறுந்துடும்” என்றெல்லாம் பயமுறுத்தி அவர்களை ஆண்களுடன் பழக விடாமல் வளர்க்கிறார்கள். சிறு வயது ஆண்களே இந்த லட்சணம் என்றால் இளைஞர்களையும் வயோதிகர்களையும் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை யெல்லாம் கண்டுகொள்ளுவது எளிதன்று என்கிற நிலையில் தாய்மார்களின் ஜாக்கிரதை உணர்வு அப்படித்தான் இருக்கும். சின்னஞ்சிறுமியரிடம் கூடத் தவறாக ஆண்கள் நடப்பதற்கு உளவியல் ரீதியாய்க் காரணம் கற்பிக்கும் மனத்தத்துவவாதிகள் உண்டு. சிரிப்புத்தான் வருகிறது. மனத்தத்துவமாவது, மண்ணாங்கட்டியாவது! அவர்களின் பிறவி இயல்பே அதுதான். சிறு குழந்தைகளிடம் அதை எளிதாய்ச் சாதித்துவிடலாம் என்பதே காரணம்.
ஆக, வெற்றிகொண்ட நாட்டு ஆண்கள் பாலியல் வெறியால் எதிரி நாட்டுப் பெண்களை இவ்வாறு கட்டாய வன்னுகர்வில் ஈடுபடுத்துகிறார்களே யல்லாது, வெறும் பழி வாங்கும் உணர்வினால் அன்று.”
இவ்வாற நான் எழுதியதின் சுருக்கத்தையேனும் தம் கேள்வி-பதில் பகுதியிலாவது அவர் வெளியிட்டிருக்கலாம். செய்யவில்லை. சில ஆசிரியர்கள்தான் மாறுபட்ட கருத்துகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, வாசகர்களின் எண்ணங்களையும் வெளியிடுகிறார்கள். இதுவே சரியான அணுகுமுறையாகும் என்று தோன்றுகிறது. இவ்வாறு வெளியிடும் போது, ‘இது இவ்வாசகரின் கருத்து. நம் கருத்து அன்று’ என்று குறிப்பிடும் பெருந்தன்மை சில ஆசிரியர்களுக்குத்தான் உள்ளது.
சின்னஞ் சிறுமியரையும் கூட விட்டுவைக்காத வெறியர்களுக்கு, ‘அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஒரு மன நோய்’ என்று தமிழகத்தின் மாபெரும் கவிஞர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் வக்காலத்து வாங்கியுள்ளார்! இவர்தம் பெண் குழந்தைகள் இப்படி நாசம் செய்யப்பட்டு உயிரையும் இழக்க நேர்ந்தால், அப்போதும் இப்படிப் பேசுவார்களா இவர்கள்? மாட்டார்களன்றோ!
நம் நாட்டில் அன்று வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணங்களால் வாலிபக் கணவன்மார்களின் துர்ச்செயலின் விளைவாக உயிரை இழந்த குழந்தைகள் இலட்சக்கணக்கில் இருந்து வந்துள்ளனராம். தொலைக்காட்சியில் பெண்ணுரிமை இயக்கத்தைச் சேர்ந்த வாசுகி அவர்கள் இது பற்றிய தொடர் நிகழ்ச்சி ஒன்றைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய ஞாபகம் வருகிறது.
சின்னஞ்சிறு வயதிலிருந்தே பால் பேதம் பற்றிப் பேசாமல் சிறுவர்-சிறுமியரைப் பழக விடுவதே இதற்குத் தீர்வு என்று சில மனத்தத்துவவாதிகள் உளறிக் கொண்டு இருக்கிறார்கள். வீட்டிலேயே உள்ள வில்லன்களிடமிருந்து, அவர்களைக் கவனத்துடன் கண்காணிப்பதன் மூலம், பெண் குழந்தைகளைக் காப்பாற்றத் தாய்மார்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இதென்ன பிதற்றல் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஒன்றுவிட்ட சகோதர்களில் தொடங்கித் தாய்மாமன், சிற்றப்பன், பெரியப்பன் போன்றவர்களையே கண்காணித்தாக வேண்டிய நிலையில் பல குடும்பங்கள் இருக்கின்றன. சில குடும்பங்களில் பெற்ற அப்பன்களும் தாத்தாக்களுமே கூட வில்லன்களாக இருக்கிறார்கள்.
பெண்களுக்குத் தனிப் பள்ளிகள் என்பது முட்டாள்தனமான ஏற்பாடு என்று என் எழுத்தாள நண்பர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் என்னோடு வாதித்தார். இதில் ஓரளவு மனத்தத்துவம் இருப்பினும், உடலின்பாற்பட்ட தத்துவமே அதிகம் இருப்பதால் இது போன்ற ஆபத்து (risk) நிறைந்த நடவடிக்கைகளை நாம் எடுக்கக்கூடாது என்பதே நம் கருத்து. பெண்கள் பயிலும் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களும், ஆண்கள் பயிலும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களும் பணியில் அமர்த்தப்படக் கூடாது என்று தமிழக முதல்வர் சட்டமியற்றியுள்ளது முற்றும் சரியே ஆகும். கள்ளமே இல்லாத, கடவுளுக்கு நிகரான ஆசிரியர்கள் உள்ளார்கள் என்பதும் உண்மையே. ஆயினும், எந்தப் புற்றில் பாம்பு இருக்கும், எதில் எறும்பு இருக்கும் என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பது அறிவீனமல்லவா! அதனால்தான் நம் பெரியவர்கள் ஆண்களோடு பழகக்கூடாது என்று பெண்களைக் கட்டுப்படுத்தி வந்துள்ளார்கள்.
விவரம் தெரிந்த பெண்கள் அவ்வாறு பழகும்போது, அவர்களை ஓர் எல்லையில் வைக்க வேண்டும். குறிப்பிட்ட தொலைவில் வைக்க வேண்டும். ‘இவளிடம் நாம் தவறாக நடக்கக் கூடாது, நடக்கவும் முடியாது’ என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம், “வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது” என்பார்களே, அதைப் பெண்கள் செய்யவேண்டும். செய்தால் ஆண்-பெண் நட்பு ஆண்டுக் கணக்கில் தொடரும். நல்ல ஆண்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களின் இயல்பான பலவீனத்தைத் தூண்டி அவர்களையும் கெடுத்து விடாமல் இருப்பதும் அவர்களுடன் பழகும் பெண்களின் கையில்தான் இருக்கிறது என்பதையும் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். கட்டுப்பாடும், கண்டிப்பும், கம்பீரமும் நிறைந்த பெண்கள் தங்களுடன் பழகும் ஆண்களை ஒரு போதும் தடுமாற வைப்பதில்லை, தாங்களும் தடுமாறுவதில்லை.
வெற்றி பெறும் படைவீரர்கள் தோற்ற நாட்டுப் பெண்களை நாசம் செய்வது பற்றி எழுதுகையில் பாகிஸ்தான் – பங்களாதேஷ் போரின் போது பாகிஸ்தானிய வீரர்கள் பற்றிப் போருக்குப் பின் இந்திராகாந்தியின் தயவால் பிரதமரான ஷேக் முஜிபுர் ரஹ்மான், கீழ்க்கண்டபடி பேசிக் கண்ணீர் உகுத்த செய்தி நாளிதழ்களில் வந்தது: “பாகிஸ்தானிய வீரர்கள் பல பெண்களை வன்னுகர்வு செய்துள்ளார்கள். முஸ்லிம் பெண்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை!” என்று வருந்திக் கண்ணீர் சிந்தியுள்ளார்! – (“The Pakistan military men had raped thousands of Bangladesh women. The pity is they didn’t spare even the Muslim women!” – Saying thus, Sheik Mujibur Rahman broke down.)
மதவெறியும் சேர்ந்து கொள்ளும் போது, இவர்களின் ஏற்கெனவே உள்ள மோசமான மனப்பான்மை இன்னும் எவ்வளவு கீழ்த்தரத்துக்கு வீழ்ச்சியடைகிறது, பார்த்தீர்களா? இவற்றை யெல்லாம் மனத்தத்துவ அடிப்படையில் அணுகுவது எத்தகைய மடத்தனம்! ஆண்கள் தாங்கள் செய்கிற தவறுகளுக்கெல்லாம் ஒரு நொண்டிச் சமாதானம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதுதானே மனத்தத்துவம் மண்ணாங்கட்டித் தத்துவம் என்றெல்லாம் அவர்கள் திசை திருப்பி அதை நியாயப் படுத்துவதன் அடிப்படை?
இதே நேரத்தில் பங்களாதேஷ்-பாகிஸ்தான் போரின் போது நம் இந்தியப் படைவீரர் – ஒரு சீக்கியர் – நடந்துகொண்ட விதம் பற்றிய செய்தியையும் மறக்க முடியவில்லை. பங்களாதேஷைச் சேர்ந்த ஓர் இளம் பெண் முழு நிர்வாணத்துடன் கூசிக்குறுகியவாறு தெருப் பள்ளம் ஒன்றில் கிடந்ததைக் காணச் சகிக்காமல் அந்தச் சீக்கிய வீரர் தம் நீண்ட தலைப்பாகையைக் கழற்றி அவளிடம் கொடுத்து அவள் மானத்தைக் காத்துக்கொள்ளச் சொன்ன செய்திதான் அது. அத்தி பூத்தாற்போன்ற அரிதான இந்தச் செய்தி எவ்வளவு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறது! அந்த சீக்கியர் பற்றி நினைக்கும் போது கண்கள் பனிக்கின்றனவே! பெரும்பாலான ஆண்கள் இந்தச் சீக்கியரின் தரத்துக்கு உயர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆண்களின் தரத்தை மேம்படுத்துவதை விடுத்து அவர்களின் நடவடிக்கைகளுக்கெல்லாம் மனத்தத்துவச் சாயம் பூசுதல் சரியா?
………

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *