எழுத்தாள இரட்டையர்கள்

This entry is part 21 of 25 in the series 15 மார்ச் 2015

– நாகரத்தினம் கிருஷ்ணா

Ambai liஅம்பை சிறுகதைகளைப் பிரெஞ்சு மொழிபெயர்பாளர் டொமினிக் வித்தாலியொ என்ற பெண்மணியுடன் இணைந்து மொழி பெயர்த்த அனுபவம் காலச்சுவடு பதிப்பகத்தால் நிகழ்ந்தது. ஒரு பக்கம் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட, பல இந்திய படைப்புகளை (குறிப்பாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்) மொழிபெரத்திருந்த பிரெஞ்சுப் பெண்மணி; இன்னொருபக்கம் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட, பிரெஞ்சு மொழியிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கும் தமிழன். மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொண்டது அம்பை சிறுகதைகள். ஒரு படைப்பாளியுமாகவும் இருப்பதால், அம்பை சிறுகதைகளை நன்கு உள்வாங்கிக்கொண்டு, மொழிபெயர்ப்புக்கென்று வகுத்துக்கொண்ட எனது நியாயங்களின் அடிப்படையில், எனக்குத் தெரிந்த பிரெஞ்சில் மூல மொழியின் தொனியும் பொருளும் சிதைக்கப்படாமல் பிரெஞ்சுக்குக் கொண்டுபோனேன். பிரெஞ்சு பெண்மணி தனது பண்பாட்டுப்பின்புலத்தில் அதற்கு மேலும் மெருகூட்டினார். உரிய சொற்களில், உரிய வாக்கியமைப்பில் அதனைக் கொண்டுவந்தார். இருவரும் விவாதித்தே தொடக்கத்திலிருந்து இறுதிவரை பயணித்தோம். பிரெஞ்சு வாசிப்பில் மூல ஆசிரியரின் குரல் பிசிறின்றி ஒலிக்க, இருவரின் பணியிலும் பரஸ்பர நம்பிக்கை வைத்துப் பணிசெய்தோம்.

காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார், அவரிடம் தொலைபேசியில் பேச நேர்ந்தபோது ” Zumla ‘ பதிப்பகம் அமபை சிறுகதை நூல் பற்றி பேசினார்கள். நூல் நன்றாக வந்திருக்கிறதென்று இணையதளத்தில் செய்திருந்த விளம்பரத்தைக் காட்டினார்கள், உங்கள் பெயர் முதலில் இருந்தது” எனக்குச் சந்தோஷம் என்றார். அம்பை சிறுகதைகளை வெளியிட்ட பிரெஞ்சு பதிப்பகம் எனது பெயரை முதலில் போடுவதற்கு என்ன காரணமென்பது தெரியாது, ஒருவேளைத் தற்செயலாககூட நிகழ்ந்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்பெயர் விஷயம் பிரச்சினையாகப் பட்டது. பிரெஞ்சு பெண்மணி எப்படி எடுத்துக்கொள்வாரோ என நினைத்தேன். அவரைத் தொலைபேசியில் பிடித்து விஷயத்தைச் சொன்னபோது அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். “அது பிரச்சினையே இல்லை கிருஷ்ணா” எனப் பேசினார். இருந்தபோதும் எனக்கு உடன்பாடில்லை, அவர் பெயர்தான் முதலில் இடம்பெறவேண்டும் அதுதான் முறை என வாதிட்டு சம்மதிக்க வைத்தேன். பதிப்பகமும் ஏற்று, முதலில் அவர் பெயரையும் பின்னர் எனது பெயரையும் போட்டுப் புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். எனக்கும் இவ்விஷயத்தில் ஒரு நிறைவு. ஒரு பணியில் இருவர் சேர்ந்து செயல்படுகிறபோது இதுபோன்ற கொடுக்கல் வாங்கல்களைக் கடைபிடித்தாகவேண்டுமென நினைக்கிறேன். இருவரின் உழைப்பு உரிய பயன்பாட்டினை அளித்திட பரஸ்பர புரிதல்கள் இன்றியமையாதவை. தொடக்கத்திலிருந்தே எனது அபிப்ராயங்களை பெண்மணியும், அவரதுடைய கருத்துக்களை நானும் காதுகொடுத்துக் கேட்டோம். இருவருமே அதனதன் தகமைக்கேறப ‘சரி’ அல்லது ‘சரி அல்ல’ என்ற முடிவுக்கு வந்தோம். மறுப்புக்கு மாத்திரம் காரணத்தை முன்வைப்பதில்லை, ஏன் உடன்படுகிறேன் என்பதையும் தெளிவாக விளக்கி மின்னஞ்சல் எழுதுவேன். இது மொழிபெயர்ப்பு அளவில் மற்றொருவருடன் சேர்ந்து பணியாற்றியதில் எனக்கேற்பட்ட அனுபவம்.

இரட்டையர்களாக சேர்ந்து பணிபுரிவதை, நாதஸ்வரக் கலைஞர்களிடம் முதலில் கண்டிருக்கிறேன். ஒற்றை ஆளாக வாசிக்கிறபோது இல்லாத மிடுக்கு அவர்கள் இரட்டையர்களாகப் பேருந்தில் வந்திறங்குகிறபோது களைகட்டிவிடும். கர்னாடக இசைகச்சேரிகளில் பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் என்ற அடைமொழியுடன் பிரபலமான இசைகலைஞர்களைச் சந்தித்திருக்கிறோம். திரைத்துரையில் இந்தியிலும் தமிழிலும் இரட்டையர்கள் இசை அமைப்பாளர்களாகச் சாதனைப் படைத்திருக்கிறார்கள். சேர்ந்து பணியாற்றிய இயக்குனர்களும், நடிகர்களும் உண்டு. லாரல்-ஹார்டி கூட்டணிபோல தமிழில் கவுணமணி- செந்திலும் வெற்றிபெற்ற இரட்டையர்கள். இரட்டையர்களாக பணிபுரிந்த இவர்களால் தனி ஆளாக ஒளிர முடிவதில்லை. ஒரு நிறுவனத்தில் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இணைந்து தொடர்ந்து வெற்றிகரமான, இலாபம் ஈட்டும் ஸ்தாபனமாக அதனை நடத்திக்காட்ட முடியும். அதற்கு உதவியாக சட்டங்களும் விதிமுறைகளும் இருக்கின்றன. மொழிபெயர்ப்பிலும் சாத்தியமாகலாம். ஆனால் வரம்பற்ற சிந்தனைச் சுதந்திரத்தை வலியுறுத்தும் படைப்புலகில் சாத்தியமா? எழுத்தாளன் இயற்கையாகவே சிந்தனைச் சுதந்திரத்தை வற்புறுத்துகிறவன். தனிமையை நாடுபவன். இங்கே இரட்டையர்களாக இயங்கும் எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த இரட்டையர்களாக பிரே-ரமேஷ் சாதனை படைத்தார்கள். ஆனால் பெரும்பாலோருக்கு அது இயலாத செயல், இணைந்துப் பணியாற்தினாலும் எப்போது வேண்டுமானாலும் அந்த இருவர் கூட்டணி உடையக்கூடிய நிலமை. படைக்கும் படைப்பு தங்கள் தனித்தன்மையை முன்னிலைப்படுத்துவதில்லை என்றோ, இருவரில் ஒருவர் என்னால்தான் மற்றவருக்கு அடையாளம் கிடைக்கிறது எனும் எண்ணத்திற்கு இடம் கொடுக்க ஆரம்பித்தாலோ கூட்டணி முறிந்துவிடுகிறது, கூட்டணி மட்டுமல்ல அவர்களுடைய வெகுநாளைய நட்பும் முடிவுக்கு வந்துவிடுகிறது.

இரட்டையர் கூட்டணி வெற்றிகரமாக செயல்பட பிறகூட்டணிகளைபோலவே இணைப்பைப் பிணைத்திருக்கும் ‘நம்பிக்கை’ கயிறு வலுவுடன் இருக்கவேண்டும். இந்த நம்பிக்கை மற்ற நண்பரின் அல்லது நண்பியின் வேலைத்திட்டம், எழுத்தாற்றல், வினைத்திறன் ஆகியவற்றில் முழுமையாக நம்பிக்கையை ( அவரிடம் நாம் எதிர்பார்ப்பதை) வைப்பது. பணியை இருவருமாக பகிர்ந்து நிறைவேற்றல் என்பது பிறவற்றில் சாத்தியம் ஆனால் எழுத்தில் அவரவர் ஞானத்திற்கேற்ப கூடுதலாகவோ குறைவாகவோ பகிர்ந்துகொள்ளலாம், மொழி பெயர்ப்பில் சேர்ந்து பணியாற்றுகிறபோது இது போன்ற மனநிலையைத் தேர்வுசெய்தேன், படைப்புக்கு இது சரிவருமா என்று தெரியவில்லை. வரவேண்டும். அடுத்ததாக மேலே கூறியதுபோன்று எனது மொழி பெயர்ப்பு அனுபவத்தில் புரிந்துகொண்டது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. நான் எழுதுவதுதான் சரி இருவரில் ஒருவர் பிடிவாதம் காட்டினாலும் முடிந்தது உறவு.

ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு எழுத்தில் கூட்டணி அமைத்துக்கொண்டால் வெற்றிக்கூட்டணியாக வலம் வர முடியும் எனச் சொல்கிறார்கள் மர்சியா முல்லெரும் (Marcia Muller), பில் புரோன்ஸினி (Bill Pronzini) என்பவரும். இருவருமே எழுதிக்குவித்த அமெரிக்கர்கள், பல பதிப்புகள் கண்டு பணமும் சம்பாதித்தவர்கள்; அவர்கள் எழுத்து Roman noir என பிரெஞ்சு படைப்புலகம் தீர்மானித்திருக்கிற பிரிவுக்குள் வருகிறது. தமிழில் அவற்றை ‘கறுப்பு புனைகதை’ என அழைக்கலாம். எழுத்தில் அகதா கிறிஸ்டியும் திரைப்படத்தில் ஹிட்ஸ்காக்கும் பிழிந்த சாறு. வெற்றிகரமான இரட்டையர்கள் என அழைக்கலாமா, அவர்களுக்குள் அத்தனை ஆழமான புரிதல் இருந்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக நமக்குக் கிடைக்கும் பதில் அவர்கள் இருவரும் கண்வன் மனைவி என்ற உண்மை. இருவருமே தனித்தனியாகச் சாதித்தவர்கள். கணவர் மர்மக்கதை மன்னர் என்றால் அவருக்கு மூன்றாவது மனைவியாக ஜோடி சேர்ந்த (?) மர்சியா மர்மக்கதை அரசி .இவர்கள் எழுத்திற்கு இலக்கிய தகுதிகள் இல்லை என்கிறார்கள், எனினும், இரட்டையராக எழுதிச் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் நமக்கு முக்கியம்.

அவர்களின் கருத்துப்படி “ஒருவர் தனித்து புனைவையோ புனைவு அல்லாத ஒன்றையோ எழுதும்போது பெறாத வெற்றியை, இருவர் சேர்ந்து சிறப்பாகச் செயபட்டால் பெற முடியுமாம். அப்படைப்பை ஒருவரின் எழுத்தென்றோ அல்லது குரலென்றோ சொல்லக்கூடாதாம், இருவரின் சிந்தனையிலும் எடுத்துரைப்பு உத்தியிலும் கலந்து உருவானதாம். தவிர தம்பதிகள் கூறும் மற்றொரு கருத்தும் இங்கே கவனத்திற்கொள்ளத் தக்கது. “இருவரும் சேர்ந்து ஆளுக்குப்பாதியாக பங்களிப்பைச் செகிறார்கள் என்ற வெகுசனக் கருத்திற்கு மாறாக இரு மடங்கு பங்களிப்பை” அளிப்பதாகத் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இருவர் சேர்ந்து எழுதுவதில் எனக்குத் தெரிந்த பெரிய நன்மை தனிமைச் சிறையிலிருந்து எழுத்தாளன் பெறும் விடுதலை.

பேச்சாற்றல் கொண்ட பாரீஸ் தமிழ் நண்பர் ஒருவர், ” எழுத வேண்டுமென்று நினைப்பதாகவும் ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை” எனப் புலம்பிக்கொண்டிருப்பார். ஒரு முறை எனது வீட்டிற்கு வந்திருந்தபோது சென்னையில் அவருடைய நண்பர் ஒருவர் புத்தகம் போட்டதாகவும் அவருக்குப் போதிய நேரமில்லாததால் வேறொருவரைக்கொண்டு முடித்ததாகவும் அப்படி யாராவது இருந்தால் நானும் என்ன செலவாகுமோ அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன், அப்படி யாராவது இருக்கிறார்களா?” எனக்கேட்டார். உங்கள் நண்பரையே கேளுங்கள் அவர் ஏற்பாடு செய்வார் எனக்கூறி அனுப்பிவைத்தேன். அவர் ஆசைப்பட்டதில் தவறில்லை. அநேகப் பிரபலங்களின் நூல்கள் இவ்வகையில்தான் வருகின்றன. சில பத்திரிகையாளர்கள், இரண்டாம் நிலை எழுத்தார்கள் மேற்குலகில் இதற்கெனவே இருக்கிறார்கள். அவர்களிடம் தங்கள் அனுபவங்கள், வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றைபற்றிய குறிப்புகளைத் தந்து பிரபலங்கள் தங்களைப்பற்றி எழுதவைத்து அதில் தங்கள் பெயரையும் போட்டுக்கொள்வதுண்டு. வயிற்றுக்காக புகழ்ந்து பாடிய புலவர்களைப் பெற்றிருக்கும் நமக்கும் அதில் வியக்கவோ அதிர்ச்சிகொள்ளவோ நியாயங்கள் இல்லை. சங்ககாலத்திலும் சரி அதற்குப் பின்பும் சரி, பாடப்பட்டவர்களுக்குப் பிறர் எழுதியதை தனது பெயரில் வெளியிடும் ஆசை இல்லாதிருந்திருக்கலாம், அரசவை நடுவே அரங்கேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அப்பாடல்களுக்கு இருந்ததால் எழுதியவனைத் தவிர வேறொருவர் சொந்தங்கொண்டாட முடியாதச் சூழ்நிலை அப்போது இருந்திருக்கக்கூடும். ஆனால் தற்போது திரை மறைவாக எதையும் செய்யலாம். அரசியல், பணம், இலக்கியம் ஏதோ ஒன்றினால் அதிகார பலத்தைக் கைவரப்பெற்றிருந்து, அறம்பற்றிய உணர்வு மரத்துப்போயிருந்தால் இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியும் எழுத்தாளராகலாம். இதைத்தான் Gost writing என மேற்கத்திய நாடுகளில் அழைக்கிறார்கள். இங்கேயும் எழுத்தில் இருவர் பங்கேற்கிறார்கள். ஒருவர் எழுதுபவராகவும் மற்றவர் எழுதாதவராகவும் இருக்கிறார். அதாவது ஒருவர் எழுத்தாளர் மற்றவர் எழுத்தாளராக இயங்காதவர். இங்கே இந்த இரண்டாமவர் எழுத்தாளராக இயங்காதுபோனாலும், விநோதமான அனுபவங்களுக்குச் சொந்தகாரராக இருக்கக்கூடும், அவ்வனுபவம் முற்றிலும் வித்தியாசமானதொரு புனைகதையை, சுயவரலாற்றை எழுத மற்ற்வருக்கு உதவக்கூடும். சமூகத்தில் பிரபலங்களில் பலர் ( ஒன்றிரண்டு விழுக்காட்டினரைத் தவிர ) – எழுத்தாளராக அவதாரமெடுக்கும் ரகசியம் இது.

ஆனால் தன்னால் எழுத முடியும் ஆனால் உந்துதல் இல்லை, உற்சாகப்படுத்த ஆளில்லை. பக்கத்துவீட்டுக் குடும்பசண்டை எனக்குத் தொந்திரவாக இருக்கிறது, ஓட்டலில் ரூம் போட்டுக்கொடுக்க பதிப்பாளர் முன் வரமாட்டேன் என்கிறார் இப்படிக் காரணத்தைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள், இதே மனநிலையிலுள்ள வேறொரு நண்பரை அணுகாமல் கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவரோடு சேர்ந்து எழுத உட்காரலாம். ஆணா¡க இருந்தால் பெண்ணொருத்தியுடனும், பெண்ணாக இருந்தால் ஆண் ஒருவனுடனும் (காதல் செய்து ஓய்ந்த நேரங்களில்) எழுத உட்கார்ந்தால் கூடுதல் பலன் கிடைக்க வாய்ப்புண்டு, மர்சியா முல்லெர், பில் புரோன்ஸினி அமெரிக்க தம்பதிகள்போல வெற்றி பெறலாம். இருவர் அனுபவம், இருவர் அறிவு அவரவர் கற்பனத் திறன், எடுத்துரைப்பு உத்தி இரண்டுமிங்கே இணைகின்றன. கோஸ்ட் ரைட்டிங்கில், கோஸ்ட்டாக இருப்பவர் பெயர் இடம் பெற சாத்தியமில்லை, ஆனாக் இரு எழுத்தாளர்கள் இணைகிறபோது, இருவர் பெயரும் நூலில் இடம்பெற வாய்ப்புண்டு. —

Series Navigationபுள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலிவேடந்தாங்கல்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *