இரண்டு இறுதிச் சடங்குகள்

author
1
0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

பெலிக்ஸ் மேக்ஸிமஸ்

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் வாழத்தகுந்த கிரகம் என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக முன்னால் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் சில்லாங்கிற்கு செல்கிறார். சுமார் 5.40 மணியளவில் சில்லாங்கை வந்தடைகிறார். அங்கு அவருக்கு எப்பொழுதும் போல் ராஜ மரியாதை வழங்கப்படுகிறது. சிறிது நேரம் ஓய்வு எடுத்து பின் ‘வாழத்தகுந்த கிரகம்’ என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்துகிறார். யாரும் எதிர் பாராத விதமாக ஐந்து நிமிடத்தில் அப்துல் கலாம் அவர்கள் சரிந்து விழுகிறார். வேகமாக விரைந்து, அவரை இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் அருகிலுள்ள பெத்தானியா மருத்துவமனையில் சுமார் 7 மணி அளவில் கொண்டு சேர்க்கிறார்கள். அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவிக்கிறார். கலாமின் உடல் அன்றிரவு இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதிகாலை 5.30 மணியளவில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் குவாஹட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து தனி விமானம் மூலம் அவரது உடல் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அதே வேளையில், நாக்பூரில் அதிகாலை 3.40 மணியளவில் முதன் முறையாக, முன்னெப்போதும் இல்லாத வகையில், நீதிமன்ற அறை எண் நான்கில், தொண்ணூறு நிமிடங்களாக நடைபெற்ற வாதம் அதிகாலை அளவில் முடிவிற்கு வருகிறது. மரண தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வைப்பது நீதியை கேலிக் கூத்தாக்கி இருக்கும் என்று நீதிபதி மிஸ்ரா தீர்ப்பு வழங்குகிறார். இதன் மூலம் யாகூப் மேமனின் மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிடுகிறது. அன்று அதிகாலை நாம் தூக்கிலிடப்படுவது உறுதி என்பது யாகூப் மேமனுக்கு தெரிந்திருக்கும்.

யாகூப் மேமனை தூக்கிலிடுவதை நிறுத்துங்கள். அவருக்கு மரண தண்டனை விதிப்பது அநீதியானது. நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கின்றோம். ஒரே நாளில் இரு துயரங்களை இந்த தேசம் தாங்காது. இந்த இரண்டு நாட்களில் சமூக வலைதளங்களிலும், ஃபஸ்ட் போஸ்ட், டெய்லி ஓ போன்ற மின்னிதழ் களிலும் இது போன்ற பதிவுகளை பார்க்க முடிகிறது. ஒரே நாளில் இரு துயரங்களா ? எவ்வாறு காலாமுடன் யாகூப் மேமனை ஒப்பிட முடியும். மாணவர்களுக்காக வாழ்ந்தவரை பல நூறு மக்கள் மடிய காரணமாக இருந்த நபருடன் ஒப்பிடுவதன் மூலம் மாமனிதர் அப்துல் கலாமை நாம் இழிவு படுத்துகிறோம்.

mumbai92 இந்தியா ஒரு அமைதி பூங்கா. அன்று வரையிலும் இந்தியாவில் அப்படி ஒரு அசம்பாவிதம் அரங்கேறியது கிடையாது. உலகம் தீவிரவாதம் என்றும், அதை எதிர்க்க நாம் ஒன்று கூட வேண்டும் என்றும் பேசிக்கொண்டிருந்த பொழுது அதை பற்றி எந்த பட்டறிவும் இல்லாமல் நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம். நமக்கு மதக் கலவரங்களை பற்றி தெரியும் ஆனால் தீவிரவாதம் என்ற பதம் புதிராகவும், பழக்கப்படாததாகவும் இருந்தது. ஆனால் இவை எல்லாம் 1993ம் ஆண்டு மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணி வரை மட்டுமே. அன்று வெள்ளிக்கிழமை மார்ச் 12ம் தேதி 1993, மதியம் 1.30 மணியளவில் பாம்பாய்(மும்பை) பங்குச் சந்தையில் படு பயங்கரமான வெடிச் சப்தம் கேட்டது. சப்தம் கேட்டு நிருபர்களும், காவலர்களும் அங்கே விரைகிறார்கள். உண்மையில், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஏனென்றால் அதுவரையில் அப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்தது கிடையாது. அதுவரையில் இரவு நேரங்களில் கருப்பு வெள்ளை டாக்சிகளின் அழகை ரசித்து கொண்டிருந்தவர்களுக்கும், கிரிக்கெட் மைதானத்தை மட்டும் அறிந்தவர்களுக்கும், பாலிவுட்டின் குளிரில் மிதந்தவர்களுக்கும் தெரிந்த அந்த அழகான பம்பாய் நகரம் முதல் முறையாக தீவிரவாத தாக்குதலின் வண்ணம் பூசப்பட்டது.

பம்பாய் பங்குச் சந்தையின் (முதல்) தாக்குதலின் தொடர்ச்சியாக ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மார்க்கெட்கள், அலுவலகங்கள், விமான நிலையம், என பதிமூன்று இடங்களில் தொடர்ச்சியாக சுமார் 2 மணி நேர இடைவேளையில் குண்டுகள் வெடித்து சிதறியது.

அமைதியை மட்டும் சுவாசித்துக் கொண்டிருந்த ஒரு பெரு நகரம், காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதையும், பீதிக்கு உள்ளாக்கப்பட்டதையும் நம்மாள் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடியாது.
பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ எஸ் ஐ தான் இதற்கு வித்திட்டது என்று நம்ப படுகிறது. சூத்திரதாரியான தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளான டைகர் மேமன், ஆயுப் மேமன், யாகூப் மேமன் ஆகிய மூவரும் இணைந்து தாவூத்தின் ஆளுமைக்கு கீழ் அரங்கேற்றிய கொடூரச் செயல் இது.

இதில் மொத்தம் 257 பேர் கொல்லப்பட்டார்கள். 700 பேர் படுகாயமடைந்தார்கள். இது ஒரு குற்றமா, இப்படி ஒரு சாதாரண செயலை புரிந்த அப்பாவி தியாகி யாகூப் மேமன் 1994ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பதிமூன்று வருடங்கள் சிறையில் பொழுதை கழித்த அவருக்கு 2007ம் ஆண்டு, அந்த அப்பாவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2105 ஜூலை 30 அதிகாலை 6.35 மணி அளவில் யோகேஷ் தேசாயின் மேற்பார்வையில் யாகூப் மேமன் சாகும் வரை தூக்கிலடப்பட்டார்.

அய்யஹோ கண்ணீர் இல்லையா, கம்பலை இல்லையா, நான் என்ன செய்வேன் ஒரு அப்பாவி தூக்கிலிடப்பட்டார், என் இரத்தம் கொதிக்கிறது. அவர் ஒரு சிறுபான்மையினர் என்பதால் தூக்கிலிடப் பட்டாரா. தூக்கு தண்டனை நமக்கு தேவையா, ஐரோப்பாவை பாருங்கள் அவர்கள் மரண தண்டனைக்கு எதிராக உள்ளார்கள். நாமும் ஐரோப்பியர் போல் மாற வேண்டாம ! என்றெல்லாம் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தோழர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

ஒரே நாளில் இரு துயரம் இந்தியாவில் அரங்கேறி உள்ளது. மோடியின் ராஜதந்திரத்தை பார்த்தீர்களா, கலாமின் இறப்பில் ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தையும் திசை திருப்பிவிட்டு யாகூப் மேமனை தூக்கிலிட்டு ஒட்டு மொத்த சிறுபான்மையினருக்கு அநீதி விளைவித்துவிட்டார், என்பது போன்ற பேச்சுகளே சமீபமாக பரவலாக கேட்க முடிகிறது. அப்துல் கலாமையும், யாகூப் மேமனையும் ஓப்பிடுவது வேதனையளிக்கிறது. இருவரும் இஸ்லாமியர் என்பதால் இந்த ஒப்பீடா ? அல்லது இருவரும் ஒரே நாளில் இறந்ததால் இந்த ஒப்பீடா ?. எதுவாக இருப்பினும் இது மிகவும் கீழ் தரமாக ஒப்பீடு.

நீங்கள் எளிதில் உணர்ச்சி வயப்படுகிற நபராக இருக்கலாம். உங்களுக்கு வரலாறு தெரியாமலிருக்கலாம் அதற்காக ஒரு பயங்கரவாதியையை இஸ்லாமியன் என்ற போர்வை போர்த்தி உங்கள் மதத்தை நீங்களே இழிவுபடுத்த வேண்டாம் தோழமைகளே. 1962ல் பிறந்த யாகூப் மேமன், 1993ல் நிகழ்ந்த பாம்பாய் குண்டு வெடிப்பில் பங்கு பெரும் பொழுது அவர் ஒன்றும் குழந்தையல்ல. அவருக்கு தான் என்ன செய்கின்றோம் என்று நன்றாக தெரிந்திருக்கும். அந்த முப்பது வயது இளைஞன் பல உயிர்களின் இழப்பிற்கு நாம் காரணமாக போகிறோம் என்பது அவனுக்கு நன்றாக தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் தோழர் என்றும் அப்பாவி என்றும் அழைப்பது எந்த விதத்தில் நியாயம். உங்களது தோழமைகளில் ஒருவரோ, குடும்பத்தில் ஒருவரோ பாம்பாய் குண்டு வெடிப்பில் இறந்திருக்க வாய்ப்பில்லை. ஆதனால் தான் நமக்கு அதன் கொடூரம் புரியவில்லை. இன்று அதை பற்றி காரசாரமாக உரையாடும் பல இளைஞர்கள் அன்று குழந்தைகளாக இருந்திருப்பர்.

அதற்கு முன் இந்தியாவில் கலவரங்களை பார்த்திருக்கின்றோம். ஆனால் பயங்கரவாத செயல் அதுதான் முதல் முறை. தயவு செய்து பயங்கரவாத செயலையும் கலவரத்தையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க வேண்டாம். இரண்டிலும் பாதிப்பு இருக்கிறது. ஆனால் பயங்கரவாத செயல் மிகவும் தெளிவாக திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. அப்படி என்றால் கலவரங்கள் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப் படுவதில்லையா, அது தற்செயலானதா என்று கேட்காதீர்கள். அன்று நிகழ்ந்தது, நாம் அதுவரை கண்டிராத தருணம்.

பம்பாய் குண்டு வெடிப்பு இந்துகள், இஸ்லாமியர் இடையே ஒரு பெரிய பிழவை ஏற்படுத்தியது. பின் அயோத்தி நிகழ்வின் பழிக்கு பழி செயலாக மக்கள் இதனை பார்த்தார்கள். அது அவ்வாறுதான் என்று கொள்ளவும்.
இச்சம்பவம் இந்தியாவில் மட்டும் இந்து, இஸ்லாமியர் இடையே பிரிவு ஏற்படுத்தவில்லை, டி கம்பெனி என்று அழைக்கப்படும் தாவுத் இப்ராகிம் மற்றும் அவனது சகாக்களுக்கு உள்ளேயும் பிரிவு அடைய செய்தது. இந்துக்களான சோட்டா ராஜனும், சாது செட்டியும் இச் சம்பவத்திற்கு பின் தான் அவனை விட்டு பிரிந்து சென்றார்கள்.

அன்று 1993ம் ஆண்டு மார்ச் 12ல் பம்பாயில், மாஹிமில் மீனவர் குடியிருப்பிலும், பிளாசா சினிமாவிலும், ஜாவேரி மற்றும் கதா பஜாரிலும், தங்கும் விடுதிகளான ஜுகு செந்தார், சீ ராக்கிலும், அரசு அலுவலகங்களான ஏர் இந்தியா கட்டிடத்திலும், கடவுச்சீட்டு அலுவலகத்திலும், பங்கு சந்தையின் அருகிலும், சாகர் விமான நிலையத்திலும், வொர்லியிலும், என பதிமூன்று இடங்களில் குண்டு வெடிக்கப்பட்டது. இங்கெல்லாம் ஒரு இஸ்லாமியர் கூட இருந்திருக்க மாட்டாரா. இது தெரியாமல் யாகூப் மேமன் இங்கு வந்து குண்டு வைத்தாரா.

உலகிலேயே அதிகமாக இஸ்லாமியர் வாழும் நாடு இந்தியா (பாகிஸ்தான் அல்ல), அப்படி இருக்கையில் இவ்விடங்களுக்கு எந்த இஸ்லாமியனும் வந்து செல்ல மாட்டானா. இஸ்லாமியன் பற்றி கவலைபடாமல் கொடும் பாவ செயல் புரிந்த யாகூப் மேமனை உங்களால் எவ்வாறு ஒரு சராசரி இஸ்லாமியனாக பார்க்க முடிகிறது. இருப்பினும் குழப்பங்கள் பல இருக்கிறது. யாகூப் மேமன் மட்டும் எவ்வாறு சிக்கினார். இதில் தொடர்புடைய மற்றவர்கள் எங்கே. சூத்திரதாரியான தாவுத் இப்ராகிமும், டைகர் மேமனும், ஆயுப் மேமனும் எவ்வாறு தலைமறைவானார்கள். குண்டு வெடிப்பிற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு 1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் சார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கொடியை எந்திப் பிடித்து கர்ஜித்த தாவூத் இப்ராகிமும், பட்டயக் கணக்காளர்ரான யாகூப் மேமனும் திடீரென எவ்வாறு தீவிரவாதியானார்கள். உண்மையில் 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த கொடுஞ் சம்பவமான பாப்ரி மசூதி இடிப்பிற்கு பழிவாங்கும் நோக்கில் பால் தாக்கரேவிற்கும், இந்துத்துவா அமைப்பிற்கும் அவனால் (தாவூத்) நேரடியாக விடப்பட்ட சவாலை யாகூப் மேமன், டைகர் மேமன், ஆயுப் மேமன் மூவரும் முடித்துக் காட்டினார்கள். பம்பாய் குண்டு வெடிப்பில் மொத்தமாக ஆயிரம் கிலோ RDX வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. அப்பொழுது RDX என்றால் என்ன என்று பலருக்கு தெரியாது. ஊடகங்களுக்கு கூட அதை பற்றி எந்த அறிமுகமும் இல்லை. ராஜ்தீப் சர்தேசாய் RDX என்றால் என்ன என்று காவல்துறை ஆணையரிடம் கேட்கிறார். இந்த மாதிரி ஒரு சூழலில் ஒரு தேசம் ஒரு கோரச் சம்பவத்தை அனுகியது.

எவ்வாறு ஆயிரம் கிலோ RDX வெடி மருந்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலுள்ள ஐ எஸ் ஐக்கு உட்பட்ட வாஹ் நாவல் தொழிற்சாலையிலிருந்து இந்திய கடல் வழியே கடத்தி கொண்டுவர முடிந்தது. அது வரை சுங்க அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். இதில் சம்பத்தப்பட்ட காவலர்களான சுங்கத்துறை உதவி ஆணையாளரான ஆர். கே சிங் ஒன்பது வருடம் கடுங்காவல் தண்டனை பெற்றிருக்கிறார். சுங்க கண்காணிப்பாளரான முகம்மது சுல்தான் சையது ஏழு வருடம் கடுங்காவல் தண்டனை பெற்றிருக்கிறார். சுங்க ஆய்வாளரான ஜெய்வந்த் குரவ் எட்டு வருட கடுங்காவல் தண்டனையும், சுங்க கண்காணிப்பாளரான எஸ் எஸ் தல்வாதேக்கருக்கு எட்டு வருட கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் துணை ஆய்வாளரான விஜய் பாடிலுக்கு ஆயுள் தண்டனையும், காவலர்கள் அசோக் முலேஸ்வர், பி எம் மஹாதிக், ரமேஷ், மாலி மற்றும் திமிஷ்கு பல்ஷிகர் ஆகிய நான்கு பேருக்கும் ஆறு ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அன்றைய தேதியில் 8 லட்ச ரூபாய் வரையிலும் லஞ்சம் வாங்கிக் கொண்டு பொருள்களை சோதிக்காமல் விட்டவர்கள். ஆனால் குண்டு வெடிப்பிற்கு பின் இன்று வரையிலும் சூத்திரதாரியான தாவூத் மற்றும் அவனது கூட்டாளிகளான டைகர் மேமன், ஆயூப் மேமனை பிடிப்பதற்கு என்ன வகையான முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பது புலப்படாத புதிர். இவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டியவர்களே.

தூக்கிலிடப்படும் முன்னர் தன் கடைசி ஆசையாக யாகூப் மேமன், தன் மகளிடம் பேச வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது, இறுதியாக யாகூப் மேமன் தன் மகளிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். என்ன நினைத்திருப்பாள் தன் தந்தையை பற்றி அந்த இருபத்திரண்டு வயது நிரம்பிய யுவதி. ஆம் இருபத்திரண்டு வருடங்களுக்கு பிறகு பம்பாய் குண்டு வெடிப்பிற்கு காரண தாரரான தன் தந்தை யாகூப் தூக்கிலிடப்பட்டார் என்ற நிகழ்வை அவள் எவ்வாறு அணுகி இருப்பாள்.

மாஹிம், தர்காவிற்கு பதிலாக, சந்தன்வாடியில் உள்ள பெரிய கப்ரிஸ்தானில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாஹிமிலும் குண்டு வெடித்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவரது உடல் அல் ஹுசையினி கட்டிடத்திற்கு அருகே இருக்கும் பிஸ்மில்லா மன்ஜிலில் வசிக்கும் அவரது சகோதரரான சுலேமானிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைதியான முறையில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
யாகூப் மேமனின் உடலை புகைப்படம் எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ அனுமதி மறுத்துவிட்டார் துனை ஆணையர் தனன்ஜெய் குல்கர்னி. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான் என்றார் அவர். அதை வைத்து சிலர் சமூக வலைதளங்களில் அனுதாபம் தேடுகிறேன் என்ற பேர்வழியில் பிதற்றலாக எதையாவது செய்வார்கள். ஏனென்றால் நான் சம உடமைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவன், போராளி என்று பிரகடனப்படுத்துவதில் நாம் கெட்டிக்காரர்கள். வரலாறை பற்றி நமக்கு கவலையில்லை தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை.

2007ம் ஆண்டில் யாகூப் மேமன் தீர்ப்பு வந்த சமயத்தில், தீர்பை நம்ப முடியாமல் மிகை உணர்ச்சிக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளி போல் காணப்படுகிறார் என்று 2007ம் ஆண்டுகளில் ஊடகங்கள் வெளியிட்டன. உங்களுடைய விசுவாசம் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கப்படும் பொழுதும், உங்களுடைய தேசப்பற்றை தொடர்ந்து சிலர் சந்தேகிக்கும் பொழுதும், உங்களது பணி இடத்தில் பாரபட்சமாக நடத்தப்படும் பொழுதும் நீங்கள் கோவம் கொள்ளத்தான் செய்வீர்கள்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் உளவியல் ரீதியான வடுக்களால் இணைக்கப்பட்டு கிளர்ந்தெழுவார்கள் என்பதற்கு பம்பாய் குண்டு வெடிப்பு ஒரு சான்று. ஆனால் உண்மையில் அவர்கள் ராஜ் தாக்கரேவிற்கு எதிராகவும் ஹிந்துத்துவ அமைப்பிற்கு எதிராகவும் தான் போராடி இருக்க வேண்டும். அப்பாவி மக்கள் என்ன செய்தார்கள். அப்பாவி மக்கள் இறக்க காரணமாக இருந்த யாகூப் மேமனை சில இலக்கியவாதிகள் கூட அப்பாவி என்று அழைப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. நீங்கள் உங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள எங்களை முட்டாளாக்க வேண்டாம். என்னதான் இருந்தாலும் மரண தண்டனை முறையாகாது என்றால், இவர்களை போன்றோர்க்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்று மரண தண்டனையை எதிர்க்கும் தோழர்கள் தான் கூற வேண்டும்.

– பெலிக்ஸ் மேக்ஸிமஸ்

Series Navigationஇசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்
author

Similar Posts

Comments

  1. Avatar
    paandiyan says:

    அப்பாவி மக்களை கொள்ளாதீர்கள் என்று யாரும் பயங்கரவாதிகளைக்கு அறிக்கை விடுவது இல்லையே.. என் அது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *