‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 2 of 7 in the series 23 பெப்ருவரி 2020

1.முட்டாள்பெட்டியின் மூளை

TELE FACTORYயில் டஜன்கணக்காகத் தயாரிக்கப்படும்

மாமியார்களின்
முறைத்த கண்கள்;

முறம்போன்ற தடிமனான நகைகள்
எங்குபார்த்தாலும் ஒட்டுத்துணிகளும்

பட்டுக்குஞ்சலங்களும்
கட்டுக்கடங்காத நிறச்சேர்க்கைகளுமாய்

அவர்கள் படுக்கையிலும் அணிந்திருக்கும்

கெட்டிச் சரிகைப் பட்டுப்புடவைகள்
மூச்சுவிடாமல் அவர்கள் வெளித்தள்ளும்

 சாபங்கள்
காச்சுமூச்சென்ற அவர்களின் பேச்சுக்கள்

பழமொழிகள்
ஃபிலாஸஃபிகள் பிக்கல்பிடுங்கல்கள்

‘பப்ளிமாஸ்’ முகங்கள்
புஸுபுஸு சிகையலங்காரங்கள்;
மேலும் மேலும் மேலும் மேலும் என நீளும்
அவர்களின் ஆர்வக் கிசுகிசுக்கள்; அவதூறுகள்
அழுகைகள்; அசிங்கம்பிடித்த சதித்திட்டங்களை
சகிக்கவும் ரசிக்கவும் எதிர்பார்க்கவும் ஓ போடவும்
‘நாமின் நானும் நானின் நாமுமாய்

ப்ரோக்ராம்’ செய்யப்பட்டுவிட்டதில்
லாபம் முன்னூறு மடங்காகிவிட்ட

முட்டாள்பெட்டித் தொழிற்சாலையின் கிளைகள்
மூலைமுடுக்கெங்கும் முளைக்க
24 X7 முடுக்கிவிடப்படும் இயந்திரங்கள்

வெளித்தள்ளத் தொடங்குகின்றன
மூன்று வயது மாமியார்களையும்
முன்னூறு வயது மருமகள்களையும்
அவர்களின் மூவாயிரம் வழித்தோன்றல்களையும்.

  •  

2.கலைக்கொலைகளும் பிறழ்சாட்சிகளும்

‘அன்பே உருவான அவளைக் கொன்றுவிடலாம்’ என்றான் ஒருவன்
‘அவளை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கி தற்கொலை செய்துகொள்ளச் செய்வது மேல்’ என்றான் இன்னொருவன்.
ஆம் என்று ஆமோதித்தாள் சக பெண்ணின் வலியறிந்த பாவத்தில் ஒருத்தி, சிரித்தபடி.
‘அறிந்து ஓடோடிவரும் அவளது அம்மா இந்த நாட்டுப்புறப்பாடலைப் பாடி ஒப்பாரி வைக்கட்டும்’ என்றார் அங்கிருந்த தமிழறிஞர் ஒருவர்.
அப்போது சமீபத்தில் பிரபலமாகியிருக்கும் திரைப்படப் பாடலைசன்னமாகப் பின்னணியில் ஒலிக்கச்செய்யலாம் என்றார் ஐந்தாமவர்.
அந்தப் பெண்ணின் உதட்டோரத்திலிருந்து ரத்தம் வழிந்தால் பார்க்க நன்றாயிருக்கும் என்றார் மேசையின் இடப்பக்க ஓரம் அமர்ந்திருந்தவர்.
உதட்டோரமா அல்லது முழங்காலின் கீழிருந்து வழிவதுபோலவா என்று கண்களால் குறிப்புணர்த்தி புருவத்தை உயர்த்தியபடி கேட்டார்
அவர்களில் மூத்தவர்.
அவ்வப்போது அங்கிருந்த நான்கைந்து தட்டுகளிலிருந்த ’சிப்ஸ்’ஸை ஆளுக்கொரு கை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார்கள்.
அடுத்திருந்த சிற்றுண்டிவிடுதியிலிருந்து சற்றைக்கொருதரம் சூடாக காப்பி வர
அது வேண்டாமென்போருக்கு குளிர்சாதனப்பெட்டியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது லிம்க்கா, ஸ்ப்ரைட், செவன் அப், கொக்கோகோலா பெப்ஸி ஆவின் பாதாம் பால் அவை போல்
பிற வேறு.
புதிதாக அந்தத் தொலைக்காட்சி சேனலின் ‘கதைக்குழுவில் வேலைக்குச் சேர்ந்தவனாய் கால்கடுக்க ஜன்னலோரம் நின்றிருந்தவன்
கண்களில் துளிர்த்த நீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டான்;
அவனறியாத அந்தப் பெண்ணிடம் மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

  •  
Series Navigationடியோ ச்யூ ராமாயிஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *