அதிசயங்கள்

This entry is part 2 of 14 in the series 28 ஜூன் 2020

1950 களில் பிறந்தவர்க்கெல்லாம் தெரியும். அது இந்தியாவில் காலணா அரையணா இருந்த காலம்.  காலணாவில் ‘பொத்தக்காசு காலணா’ என்று ஒன்று உண்டு. அறந்தாங்கி குட்டக்குளம் கரையில் இருக்கும் பெண்கள் துவக்கப் பள்ளியில்தான் நான் பத்தில் ஒருவனாகப் படித்தேன். அத்தா தினமும் காலணா தருவார். பொத்தக்காசு தந்தாத்தான் வாங்குவேன். அதெ சுண்டுவிரல்ல மோதிரமா மாட்டிக்கிட்டு பள்ளிக்கூடம் போவேன்.அப்போதெல்லாம் நானும்  என் பெரியத்தா மகள் மும்தாஜும் சேர்ந்துதான் எப்போதும் போவோம். வருவோம். அந்தக் காலணாவை உதட்டுக்கும் பல்லுக்கும் இடையே வைத்து விசிலடிக்கும் ஒரு கலை மும்தாஜுக்கு இருந்துச்சு. எனக்கு சொல்லித் தந்துச்சு. எனக்குக் காத்துதான் வருது சத்தமே வரல. அன்று எங்கள் வீட்டுக் கூடத்துல ரொம்ப நேரம் அது சொல்லித் தர நான் ரொம்ப முயற்சி செஞ்சேன்.

ஊஹூம். ‘நல்லா அழுத்தி வை. ஒதட்டெ இறுக்கு. பொத்து. ‘

நான் அழுத்தினேன். அந்தக் காசு நழுவி தொண்டக்குழிக்குப் போய்விட்டது. அதுக்குப் பெறகு நடந்ததெல்லாம் மும்தாஜ்தான் அன்னிக்கு சாயங்காலம் எனக்குச் சொன்னிச்சு. அந்தப் பொத்தக் காசு தொண்டக்குழிலெ நின்னுடுச்சாம். வாயில வெள்ளயாய் நொரெ வந்துச்சாம்.  கருப்பு முழி தெரியலயாம். கைகால்களெ உதறினேனாம். அப்ப என் அத்தம்மா வந்து கழுத்தெ மல்லாக்க புடுச்சு சுண்டு வெரலெ என் வாய்க்குள்ளெ ஆழமாய் விட்டு இழுத்ததுல அந்தக் காசு அத்தம்மாவின் சுண்டுவிரல்ல மாட்டிக்கிட்டு வெளியே வந்துருச்சாம். அந்தக் காசுல நெறய ரத்தம் ஒட்டிக்கிட்டு இருந்துச்சாம். ஒரு மாதமா எனக்கு தொண்ட வலி இருந்துச்சு. அங்கெ அத்தம்மா வர சில வினாடி லேட்டாயிருந்தாலும் நா செத்துப்போயிருப்பேனாம். இதுல என்ன அதிசயம்னா என் அத்தம்மாவின் சுண்டு விரல்லெ பொத்தக்காசு போகாது. நொழச்சுக் காட்டினார். நகக்கண்ணே போகல. வெரலின் அரக் கணு எப்புடிப் போகும். அத்தம்மா எடுக்கும்போது அந்தப் பொத்தக்காசு வெரல்லெ போயிருந்துச்சு. எப்புடிப் போனுச்சுன்னு அத்தம்மா அடிக்கடி ஆச்சரியா எல்லார்ட்டயும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

மூணாம் கிளாஸ் படிக்கும் போது தனம் டீச்சரிடம் டியூஷன் படித்தேன். என்னோடு கலாவும் சரோஜாவும் படிச்சாங்க. தனம் டீச்சருக்கு டிபி இருந்துச்சு. வீட்ல அவரு கணவர் ஆனந்தராஜ்தான் டியூஷன் சொல்லித்தருவார். அவர் துப்பாக்கியால் வேட்டையாடுவார். நாங்கள் டியூஷன் படிக்கும் ஹாலில் கைக்கு எட்டாத தூரத்தில் அதெ மாட்டிவச்சிருப்பார். நாங்க அன்னிக்கு டியூஷனுக்குப் போகும்போது வீட்ல யாருமே இல்ல. டீச்சருக்கு அதிகமா இருமுனுச்சாம் சார் கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரி பொயிட்டாராம். பக்கத்து வீட்டு ஆயா சொன்னுச்சு ‘ஒங்கள ஐயா வீட்ல இருந்து படிக்கச் சொன்னாரு. இப்ப வந்துருவாராம்.’ நாங்கள் மூணு பேரும் ஹால்லெ உக்காந்து படிச்சோம். அந்தக் கலா சரியான வாலு. எந்த நேரத்தில என்ன செய்யும்னே தெரியாது. சார் டேபிள் மேல சேரப்போட்டு அந்தத் துப்பாக்கிய எடுத்துடுச்சு. என் நெத்தில வச்சு ‘நா சுட்றதுமாரி சுடுவேனா. நீ சாவுரமாரி நடிப்பியாம்’ என்று சொல்லி அந்தத் துப்பாக்கி குழாய என் நெத்தில வச்சிருச்சு. அந்த ட்ரிக்கர அதால அழுத்த முடியல. எனக்கு உச்சா வந்திருச்சு. ‘உச்சா போயிட்டு வரேன்னு’ நா ஓடிட்டேன். அந்தத் துப்பாக்கிய சரோஜாவின் நெத்தல வச்சு அந்த டிரிக்கர அழுத்துறமாரி அழுத்துச்சு. ‘டமார்’ நா திரும்ப வந்தப்ப குண்டு சரோஜாவின் கழுத்துல பாஞ்சு ரத்தம் ஊத்துச்சு. ஏகப்பட்ட அரக்கால் டவுசர் போலிஸ்காரங்க வந்துட்டாங்க. நூறு வீட்டுக் கூட்டம் கூடிடுச்சு. என் அத்தா சைக்கிள மாங்கு மாங்குன்னு  மிதிச்சுக்கிட்டு வந்து என்னெத் தூக்கி தோள்ல சாத்திக்கிட்டாரு. சரோஜாவெ ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போனாங்க. அத்தா ‘என்ன நடந்துச்சுன்னு’ எனக்கிட்ட கேட்டாரு. நா மூச்செ இழுத்து இழுத்து ஒரு கத மாரிப் பேசுறது அத்தாவுக்கும் பிடிக்கும். ரசிப்பார். அதே மாரி நா முச்செ இழுத்தேன். பேச்சு வரல. நாக்கு வளையவே இல்ல. எனக்கு பேச்சு நின்னுபோயிடுச்சு. வாய் திக்க ஆரம்பிச்சிருச்சு. வெக்கப்பட்டு யார்ட்டயும் பேசவே மாட்டேன். எஸ்ஸெஸ்ஸெல்சி படுச்சி முடிக்கிற வரயில என்னால சரளமா பேசவே முடியல. அப்புறம் எப்புடிப் பேசினேன். ஒரு காலேஜ் பேராசிரியரா எப்புடி வேல பாத்தேன் என்கிறதெல்லாம் இன்னிக்கு வரக்கும் ஆச்சரியமாத்தான் இருக்கு. என் நெத்தில வக்கிம்போது அந்த ட்டிக்கரெ கலாவால ஏன் அழுத்த முடியல. அழுத்தியிருந்தா என்ன ஆயிருக்கும். நெனச்சால மறுபடியும் எனக்கு நாக்கு வெரச்சுரும். அதுனால அத நா நெனக்கவே பயந்தேன். ஆனாலும் அந்த ஆச்சரியத்துக்கு இன்னிக்கு வரக்கும் எனக்கு வெடெ தெரியல.

உயர்நிலை இரண்டில் படிக்கிறேன். அறந்தாங்கில சங்கூதுர எடத்துக்குப் பக்கத்துலதான் எங்க பள்ளிக்கூடம். அப்போது வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா. திருவிழா வந்துருச்சின்னா ராத்திரி முழுசும் கரகாட்டம், மயிலாட்டம் எல்லாம் நடக்கும் சாமி ஊர்வலம் முடிய விடிஞ்சுரும். நாங்க ஒரு கோஷ்டியா திருவிழாவுக்குப் போவோம். அந்தக் கோயிலின் சுற்றுச்சுவரின் ஓரத்தில ஒரு தென்ன மரம் இருந்துச்சு. அதுல ஒரு கீத்து சுவரோட உச்சியெ தொட்டுக்கிட்டு இருந்துச்சு. நாங்க அந்தச்சுவத்தில ஏறி அந்தக் கீத்து மட்டயெப் புடுச்சி ஊஞ்சலாடினோம். வெளியே அப்புடியா தொங்கிவந்து மீண்டும் சுவத்தில காலெ ஊன்றிக் கிருவோம். மாறி மாறி ஆடினோம். என் முறை மீண்டும் வந்துச்சு. அப்போ பத்மநாபன் வந்து எங்களோட சேந்தான். ‘நா இப்பத்தான் வந்தேன் இப்ப நா ஆட்றேன்டா’ என்றான். ‘இது என்னோட முறையிடா’ என்றேன். ‘நீதான் ரெண்டுதடவ ஆடிட்டியே. எனக்கப்புறம் நீ ஆடு’ என்றான். குடுத்துட்டேன். அந்த மட்டயப் புடுச்சுக்கிட்டு காலெ தரையிலேருந்து ரெண்டடி ஒசத்தி தொங்கிக் கொண்டு வரும்போது மட்டெ புடுங்கிக்கிட்டு கீழே விழுந்தான். எல்லாரும் சுவத்திலேருந்து குதிச்சோம். அசையாமெ கெடந்தான். மூச்சுவிட முடியலேன்னு சொன்னது ஞாபகம் இருக்கு. பெரிய கூட்டம். ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போனாங்க. இடுப்பெலும்பு ஒடஞ்சிடுச்சாம். அப்புறம் திருச்சிக்குப் போயி எல்லா வைத்தியமும் பண்ணி நாலு மாசம் கழிச்சுத்தான் பள்ளிக்கூடம் வந்தான். அவனோட வலதுகாலு நாலு அங்குலம் குட்டையாயிடுச்சு. அந்தக் காலத் தாங்கியேதான் நடந்தான். வெயிட் பூரா அந்தக் கால்ல எறங்குனதுனால இடதுகால் சூம்பிடுச்சு. எல்லாரும் அவனெ நொண்டி பத்மான்னுதான் அடையாளம் சொன்னோம். ஏன்னா எங்க க்ளாஸ்ல ரெண்டு பத்மநாபன். அன்னிக்கு தென்னமட்டயெ அவனுக்குக் குடுக்காமெ நா ஆடியிருந்தா அந்த நொண்டிப் பட்டம் எனக்குத்தான் வந்துருக்கும். இன்னிக்கு வரக்கும் இது எனக்கு ஆச்சிரியமாத்தான் இருக்கு. எப்புடி எப்புடியோ தப்பிக்கிறேன். இப்புடியெல்லாம் அதிசயமா தப்பிக்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கணும்.  அது என்னான்னு எனக்குப் புரியல.

புகுமுக வகுப்பு என்கிற பியுசி படிக்க நா தஞ்சாவூர் சரபோசி கல்லூரில சேந்தேன். மாணவர்களுக்கான ஒரு விடுதி இருந்துச்சு அதுல ரெண்டாம் மாடில 34ஆம் அறைதான் என்னோடது. நான்கு பேர் அதுல இருப்போம். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை எப்புடிச் செய்யுறதுன்னு புறப்பாடம் ஒன்னு நடந்துச்சு. அதுல சேந்த பத்துப்பேர்ல நானும் ஒருத்தன். ஒவ்வொரு புதன் கிழமையும் சாயந்தரம் அஞ்சுமணிலேருந்து ஆறரை வரை அந்த வகுப்பு நடக்கும். அதுல பெயிண்டிங் நா செய்வேன். அன்றுமட்டும் வகுப்பெ காலைல எட்டுலேருந்து ஒம்போதரெ வரக்கும்னு மாத்தியிருந்தாரு. நா அறையில பாயெ விரிச்சு தரையிலதான் படுப்பேன். காலைலே எந்திருச்சி அந்தப் பாயிலே உக்காந்துதான் வீட்டுப்பாடமெல்லாம் செய்வேன். அன்னிக்கு சீக்கிரமாவே எந்திருச்சி எல்லாத்தயும் முடிச்சிட்டு சரியா 8.20க்கு அறையிலேருந்து வெளியாயிட்டேன். மாடிப்படி எறங்கும்போது யாரோ ரூம்குள்ள வேட்டு வச்சதுமாரி ஒரு சத்தம். ரெண்டாம் மாடிலேருந்து எல்லாரும் திடுதிடுன்னு ஓடிவந்தாங்க. நானும்தான். ஆம். அந்த 34 ஆம் எண் அறையிலேருந்துதான் அந்த சத்தம். அந்தக் கட்ட்டத்தின் மேல்தளத்தில ஓரடி இடெவெளில மரங்கள அடுக்கி அதுக்கு மேல கான்கிரீட்டோ செங்கல் தளமோதான் போட்டிருந்தாங்க. சரியா என் பாய்க்கு மேலேயிருந்த அந்த மரம் என் பாய்க்கு மேலே விழுந்துகிடந்துச்சு. அந்த மரத்தெ ஒரு ஆளால அசெக்க முடியாது ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி விழுந்துருந்தா என் தலைலதான் விழுந்திருக்கும் நெனச்சுப் பாத்தாலெ நாக்கு வெரச்சுடுது. மறுபடியும் திக்குவாய் வந்துருமோன்னு பயந்தேன். ஒம்மேல அருள்வாக்கு இருக்குடான்னா ஒரு பையன். நான் நம்பினேன். எப்போதும்போல சாயங்காலம் அந்த வகுப்பு இருந்துச்சுன்னா ஒம்பது மணிவரக்கும் அந்தப் பாயிலதான் ஒக்காந்திருப்பேன். ஏன் 8.30க்கு வைத்தார். ஏன் 8.20க்கு வெளியானேன். ஆமா கூட்டிக் கழிச்சுப் பாத்தா அவன் சொன்ன அருள்வாக்குதானோ? ஆறுதலா இருந்துச்சு. இப்போவரைக்கும் அது ஆச்சிரியமாத்தான் இருக்குது.

எம்மெஸ்ஸியெல்லாம் படுச்சு எனக்கு கல்லூரில இயற்பியல் விளக்குநர் வேலெக்கி இன்டர்வியூ வந்துச்சு. அப்போ தமிழ்நாடு ப்ப்பளிக் சர்வீஸ் கமிஷன்ல நேர்முகத்தேர்வு இருந்துச்சு. அது முடித்தால்தான் வேலெ. அப்போ என் சர்டிபிகேட்டையெல்லாம் ஓர் ஜேம்ஸ்பாண்ட் பெட்டிலெ வச்ச்சுக்கிட்டு ஒரு தோள்பையில ரெண்டு நாளைக்கான உடுப்புகளெ எடுத்துக்கிட்டு அறந்தாங்கிலேருந்து சாயங்காலம் திருச்சிக்கு கெளம்பினேன். திருச்சிலேருந்து மெட்ராஸுக்கு (இப்போ சென்னை) ஸ்டேட் பஸ் என்று ஒரு பஸ் போகும். அந்த பஸ் பத்து மணிக்குத்தான் புறப்படுமாம். ஏழு மணிக்கே போய் நான் வரிசையில் முதல் ஆளாய் நின்றேன். டிக்கெட் வாங்கினேன். பதினாறு ரூபாய். 9.45. அந்த பஸ்ஸின் கண்டக்டர் வந்தார். மனுஷன் அங்கமுத்துக்கு ஆம்பிள வேஷம் போட்டதுமாரி இருந்தார். நெத்தில விபூதிப் பரப்பில் குங்குமப் பொட்டு. பெரிய மீசெ. ‘டிக்கட் வாங்குனவங்கெல்லாம் வண்டில ஏறுங்க’ ன்னார். அவர்ட்ட போனேன். அப்ப எம் எஸ்ஸி முடுச்சு 25 வயசு ஆயிருந்துச்சு. அடுத்த நாள்தான் எனக்கு இன்டர்வியூ. சென்னையில் நான் எம்.எஸ்ஸி படிக்கும்போது தங்கியிருந்த லாட்ஜிலதான் தங்கணும். அதிகாலை போனால்தான் ஏதாவது ஒரு ரூமுலெ எடம் கெடெக்கும். அந்த கண்டக்டர் கிட்ட போயி ‘இந்த பஸ்ஸு எத்தினி மணிக்கு மெட்ராஸ் போய்ச் சேரும்’ னு கேட்டேன். ‘ஏண்டா முண்டம் அபசகுணம் புடுச்சமாரி  எத்தினி மணிக்கு போய்ச் சேரும்னு கேக்றே. அறிவு இருந்தா கேப்பியா. அப்புடி சந்தேகமா இருந்தா ஏண்டா டிக்கெட் வாங்கினே?’ அந்த ‘டா’ நான் சந்திக்காதது. அந்த  ‘முண்டம்’ நான் கேள்விப்படாதது. பெருத்த அவமானமாப் போயிருச்சு. பக்கத்தில ரெண்டு காலேஜ் பொண்ணுக என்னப் பாத்து பாத்து சிரிச்சாங்க. அவங்க பக்கம் திரும்பவே வெக்கமா இருந்துச்சு. நா கேட்டதுல என்ன தப்புன்னு எனக்குப் புரியவே இல்ல. ஒடம்பு முழுக்க ஷாக் வச்சதுமாரி இருந்துச்சு.  அவர்ட்டேயே கேட்டேன். ‘ நா கேட்டதுல……’ என்று ஆரம்பித்தேன். ‘நிப்பாட்றா அதுக்கு மேல பேசாதெ. வண்டில ஏறு’ ன்னார்.  மெட்ராஸுக்கு போற இன்னொருத்தரு சொன்னாரு. ‘எப்பப் போய் சேரும்னு’ கேக்கவே கூடாதாம். அப்புடிக்கேட்டா ஆக்ஸிடன்ட் ஆயிருமாம். ரன்னிங் டைம் எவ்வளவுன்னு கேக்கலாமாம். அதெல்லாம் எனக்குத் தெரியாது. அதுனால கொஞ்சம் சமாதானமா ஆயிட்டேன். அந்தக் கண்டக்டர் கேட்டார் ‘ஆமா எதுக்காக இப்ப மெட்ராஸ் போறெ?’. அவர் கேட்டதுக்கு அமைதியாவே பதில் சொன்னேன். ‘காலேஜ் லெக்சரர் வேலக்கு போறேன். நாளக்கி இன்டர்வியூ’ ஆனாலும் ஒரு எம். எஸ்ஸி படுச்ச வாலிபனெ அப்புடி ஒருமைல பேசுனதெ நெனச்சா ஆத்திரம் ஆத்திரமாத்தான் வந்துச்சு. அதுக்காக நா கோவிச்சுக்கிட்டு போகவும் முடியாது. பதினாறு ரூபாய் பெரிய காசு. அப்புடியே போனாலும் அடுத்த பஸ் இல்லெ. அந்தக் கண்டக்டர்கிட்ட சமாதானமாத்தான் பேசனும்.  வண்டில இருந்த அடுத்தவர்ட கேட்டேன். ‘ரன்னிங் டைம் எவ்வளவு’ . காலைல அஞ்சுமணிக்கு போயிடும் தம்பீ. போயிடும்னுதான் சொல்லனுமாம். போய்ச் சேரும்னு சொல்லக்கூடாதாம். அவர் புத்தி சொன்னார்.

அப்போதெல்லாம் இந்த ஸ்டேட் பஸ்கள் வழியில மாமண்டூர் என்ற எடத்தில நிக்கும் எல்லாரும் எறங்கி காபி, டீ சாப்பிடலாம். கழிவறை போகலாம். பத்து நிமிடம் நிற்கும். அப்படித்தான் அந்த பஸ்ஸும் நின்னுச்சு. எறங்கி அந்தக் கடையெல்லாம் ஒரு நோட்டம் விட்டாலும் கண் அந்த பஸ்ஸிலேயே இருந்துச்சு. கழிவறை போனேன். என் கைக்குட்டை கீழே விழுந்துருச்சு. எடுத்து அலசி எடுத்துட்டு வந்தேன். என் பஸ்ஸக் காணோம். ‘இப்பத்தான் போனுச்சு’ ன்னார் ஒருத்தர். அடப்பாவி அந்தக் கண்டக்டர் வேணும்னே செஞ்சிட்டான். என் வேலெ. என் சர்டிபிகேட், என் இன்டர்வியூ எல்லாக் கேள்வியும் என் நெஞ்சில குண்டுகளாய் இறங்கிடுச்சு. அப்போ ஒரு ஸ்டேட் பஸ்ல வாங்கின டிக்கட்டெ காமிச்சா இன்னொரு பஸ்ல போகலாம்.  அப்போ தஞ்சாவூர்லேருந்து மெட்ராஸ் போற பஸ் ஒன்னு வந்துச்சு. அந்தக் கண்டக்டர்ட விஷயத்தச் சொன்னேன். அந்த பஸ்ல ஏறி பயணத்தெ தொடர்ந்தேன். பூக்கடெ போலிஸ் ஸ்டேஷன் பக்கத்திலதான் அந்த பஸ் ஸ்டாண்டு. பேருந்து நிலையம் வந்ததும் ஓடும்போதே எறங்கி அந்த திருச்சி வண்டியெ தேடினேன். அந்த 1174 வண்டி அங்கெதான் நின்னுக்கிட்டிருந்துச்சு. ஏறினேன். என் இடம் காலியா இருந்துச்சு. எறங்கி அந்த கண்டக்டரெ தேடினேன். அவர் அந்த பஸ்ஸுக்குத்தான் வந்துக்கிட்டிருந்தார். ‘வண்டி எடுத்த்துக்கப்புறந்தான் நீ வண்டில ஏறலேன்னு தெரிஞ்சுச்சு. பாவம் இன்டர்வியூவுக்கு போறே. உன் பேக்கெ எடுத்து டிரைவர் சீட்டுக்குக் கீழெ வச்சிருக்கேன். நல்லபடியா இன்டர்வியூ முடிச்சு வேலைல சேந்துடு. பாவம் என் மகன் மாரி இருக்கே’ ன்னாரு. அடப்பாவி. இப்புடி ஒரு மொகமும் ஒனக்குள்ளெ இருக்கா? நல்ல வேளெ. அவரெ நா ஏடாகூடமா ஏதும் பேசாமெ இருந்ததும் நல்லதாப்போச்சு. அவருக்கு நன்றி சொல்லி கட்டிப் புடுச்சேன். பாதி ஒடம்பெக்கூட என்னால கட்டிப்பிடிக்க முடியலெ. என் வாழ்க்கையில அவருதான் எனக்கு பெரிய பாடம் கத்துத் தந்த குரு. பலாச்சொளெ முள்ளத்தானெ போத்திக்கிட்டிருக்கு. ஆளப்பாத்தோ பேச்செக் கேட்டோ யாரையும் எடெ போடக்கூடாது. எல்லாரையுமே நல்லவராப் பாக்க கத்துக்கணும். என் பெட்டியையும் பையையும் பார்த்த போது என் இருதயம் வெளியே கெடப்பது மாரி இருந்துச்சு. எடுத்து பொருத்திக் கொண்டேன். அந்தக் கண்டக்டரின் உதவியால்தான் பேராசியிரா உயர்ந்தேன். நான் வண்டிலெ இல்லென்னு தெரிஞ்சதும் அந்தப் பெட்டியெ ஒடனே பத்திரப்படுத்திட்டாரு. உண்மையிலே இதெல்லாம் ஆச்சரியமில்லாமெ வெறென்ன?

சிங்கப்பூர் வந்ததும் ரெண்டு வருஷம் கிங் ஜார்ஜ் அவென்யூவுல வாடகெ வீட்ல இருந்தேன். அதே ப்ளாக்லெ நிஜாம் னு ஒருத்தர்  இருந்தார். பணமாற்று வியாபாரம் செய்கிறார். மிக நெருக்கமான நண்பராயிட்டார். முஸ்தபா சென்டருக்கு பக்கத்திலதான் அவர் கடெ. ஊர் முக்கலாம்பட்டியாம். ‘முக்கலாம்பட்டிலெ எனக்கு ஒறவுக்காரங்க இருக்காங்க. சின்னத்தா ங்கிறவருதான் என் அம்மாவோடெ தம்பி. மாமு. அவரெத் தெரியுமா?’ என்றேன். அவருதான் சிங்கப்பூர் வர்றதுக்கு ஒதவி செஞ்சாராம். எனக்கு அவர்  உறவுன்னு தெரிஞ்சதும் ரொம்ப நெருக்கமாயிட்டார். ஒரு நாள் காலை 5 மணியிருக்கும். என் தொலைபேசி அடிச்சிச்சு. நிஜாம்தான் பேசுறார். ‘யாருங்கன்னு’ மனைவி கேட்டாங்க. நிஜாமுன்னு சொன்னேன். ‘என்னண்ணே என்ன பண்றீங்க? ஒரு முக்கியமான சேதி. ஒடனே வீட்டுக்கு வாங்க’ ன்னார். காலைல 5 மணிக்கு முக்கியமான சேதியா? என் மனைவிக்கிட்டெ சொல்லிட்டு ஒடனே போனேன். எங்க வீடு நாலாம் மாடி. அவர் வீடு ஆறாம் மாடி. படிலேயே ஏறி ஓடினேன்.

அவர் விட்ல ஏகப்பட்ட கூட்டம். எனக்கு ஒன்னுமே புரியலெ. நிஜாமின் தம்பி அங்கெ நின்னு அழுதுக்கிட்டிருந்தார். ‘அண்ணே’ ன்னு என்னெக் கட்டிப்புடிச்சு கதறினார். ‘என்ன நடந்துச்சு? ஏன் இவ்வளவு கூட்டம்?’ என்றேன். ‘அண்ணே ஒங்களுக்குத் தெரியாதா? தெரிஞ்சுதான் வர்றீங்கன்னு நெனெச்சேன்.’ ‘எனக்கு ஒன்னுமே தெரியாது தம்பீ’ ன்னேன். ‘ராத்திரி 12 மணிக்கு ரெண்டுபேரு கடெக்குள்ளெ புகுந்து நிஜாமண்ணனெ கத்தியாலெ குத்திக் கொன்னுட்டானுங்கண்ணே’ கதறினார். 12 மணிக்கு எறந்தவரு 5 மணிக்கு என்னோடெ எப்புடிப் பேசினார்? ஓர் ஆச்சரியம் எனக்குள் விஸ்வரூபம் எடுத்திடுச்சு. அதற்கிடையில் என் மனைவியும் அங்கே வந்துட்டாங்க. எனக்கிட்டெ அவரு பேசுனதுக்கு என் மனைவிதான் சாட்சி. என் ஃபோன்ல அவரோட நம்பர் அப்புடியே இருக்கு. ‘எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க’ என்றார் என் மனைவி. எல்லா அதிசயத்தெயும் விட இதுதான் என் வாழ்க்கையிலெ நடந்த மிகப் பெரிய அதிசயம்.

யூசுப் ராவுத்தர் ரஜித்  

Series Navigationகிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்மறதி
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *