ஒரு கதை ஒரு கருத்து…. அசோகமித்திரனின் ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை’

author
1 minute, 14 seconds Read
This entry is part 16 of 17 in the series 27 செப்டம்பர் 2020
அழகியசிங்கர்


    இக் கதை மிகக் குறைவான பக்கங்களில் முடிந்து விடுகிறது. இந்தக் கதை எப்படி ஆரம்பிக்கிறது என்றால் தன்னுடைய பையன் கோபுவிற்குப் பாட்டுச் சொல்ல விரும்புகிறாள் இந்திரா.
    பையன் கோபுவிற்கு அதில் விருப்பம் இல்லை.  அவன் கராத்தே வகுப்பில் சேர துடியாய்த் துடிக்கிறான்.
    இந்திரா சொல்கிறாள் :  “நீயும் இரண்டு பாட்டுப் பாடணும்தான்.  பாட்டாக் கத்துக்கலேன்னாலும் லகுவா ரெண்டு பஜனை பாட்டாவது கத்துக்கலாம்,”என்கிறாள்.   
    அப்போதுதான் கோபு கராத்தே வகுப்பில் சேர விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.
    “அதெல்லாம் நம்பளுக்கு சரிப்பட்டு வராது,” என்கிறாள்.
    அவனும், பாட்டு கற்றுக்கொள்ள முடியாது என்கிற தன் மறுப்பைத் தீர்மானமாகச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.
    இந்தக் கதையின் நிகழ்காலம் இது.  இந்தக் கதையை இப்படி ஆரம்பித்துவிட்டு, இந்திராவின் பழைய கால நினைவுக்குள் கதையை ஓட்டிச் செல்கிறார் கதாசிரியர்.
    அவள் வீணை கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசைப் படுகிறாள். அம்மாவை நச்சரித்து சம்மதம் பெறுகிறாள்.  ஆனால் அவள் அப்பா தடுத்து விடுகிறார்.  üபாட்டும் வேண்டாம், கூத்தும் வேண்டாம்,ý என்கிறார்.  அந்தத் துக்கம் இந்திராவுக்குத் தீராமல் பல நாட்கள் இருந்தது.  நாள் கணக்கில் இந்திரா இரவு படுக்கப் போகும்போது அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதிருக்கிறாள்.
    வீளை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் இருந்த சமயத்திலொரு பெரிய விஷயம் நடந்து விடுகிறது.
    அசோகமித்திரன் ஒரு நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பரபரப்பு இல்லாமல் கூட்டிக்கொண்டு போகிறார்.  எளிய நடை.  படிப்பவரைச் சிரமப்படுத்தாமல் நம்மைக் கூட்டிக்கொண்டு போகிறார்.  இந்திராவுக்கு ரங்கன், வரது என்று இரண்டு மூத்த சகோதரர்கள் உண்டு.  அதன்பின் ஒரு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள்.
    சங்கரன் என்ற புதிய நண்பர் ரங்கன், வரதுவுடன் சேர்க்கிறான்.
    இவர்கள் அந்த வீட்டில் உள்ள ஊஞ்சலில் வேகமாக ஆடிக்கொண்டு உரக்க விவாதம் நடத்துவார்கள்.  எதைப் பற்றி?
    அதிகம் பருமன் யார்?  பத்மினியா? சாவித்திரியா?
    பைத்தியம் போல் நடித்து நடனமாடுவதில் சிவாஜி மேலா எம்ஜிஆர் மேலா?
    தங்கவேலுக்குச் சரியான ஜோடி முத்துலட்சுமியா, சரோஜாவா?
    அவர்களுக்கு உரிய வேலை கிடைத்தாலும், இதைத் தவிர அவர்கள்  பேசுவது இல்லை.
    உண்மையில் ரங்கன் தலையீட்டால்தான் தான் வீணைக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை உணர்கிறாள் இந்திரா. அப்பாவின் மனதை அவன் களைத்துவிட்டான்.
    சங்கரன் அவர்கள் நண்பன் ஊஞ்சலில் நடுவில் உட்கார ஆரம்பித்தான்.
    எல்லாவற்றையும் ஆழமாகச் சிந்திப்பவன் அவன்.  சிவாஜி தங்கவேலு விஷயங்களைக் கூட சங்கரன் மிக ஆழமாக அலசுவான்.
    சென்னையிலிருந்துகொண்டு வருடம் ஒருமுறையாவது மியூசம் சென்று பார்த்து வராமலிருப்பது பெரிய இழப்பு என்பான். எந்த மகாமனிதனுக்கும் ஆதார சக்தியாக ஒரு உருவம் இருக்குமென்றும் அது காந்திக்கு இந்திய மக்களாகவும், நேருவுக்கு இந்திய நாடாகவும் இருக்க வேண்டும் என்பான்.
    வீணை ராமச்சந்திரன் அவ்வளவு பெரிய கலைஞன் இல்லையோ என்று ஒருமுறை சந்தேகப்பட்டுச் சொன்னான்.
    இந்தச் சமயத்தில்தான் இந்திரா குறுக்கிட்டு,   “நீங்க எப்படி இதுமாதிரி சொல்லலாம்.  அவர் தெய்வம் மாதிரி வாசிக்கிறார் ,”  என்றாள். 
    அதற்குப் பதில் சொல்லும் விதமாக, “அவர் வீணையை இம்சிக்கிற மாதிரி தோன்றும்,” என்றான் சங்கரன்.
    இந்தக் கருத்தை ஆமோதிக்கும்படியான சம்பவம் நடந்தது. வீணை ராமச்சந்திரன் வாசித்த ஒரு கச்சேரியில் வீணை ஒரு கன்றுக்குட்டியாய் மாறின மாதிரியும், ராமச்சந்திரன் அதை மீட்டிய விதத்தில் அதன் கழுத்தெல்லாம் ஒரே இரத்தக் களரியாக்கப் பயங்கரமாகக் காட்சி அளித்ததாகத் தோன்றியது இந்திராவுக்கு.
    வேறொரு கணத்தில் இந்திராவின் வயது கூடியதுபோல் தோன்றியது.
    அவளைச் சந்திக்கும்போது,   ‘நீ இல்லாம என்னாலே இருக்க முடியாது,’ என்றான்.  அத்துடன் அவர்கள் வீட்டுக்குச் சங்கரன் வருவது அவர்களுடைய அண்ணன்களுக்காக மட்டுமல்ல என்று தோன்றியது அவளுக்கு.
    ஐந்தாறு நாட்களுக்குப்பின் சங்கரன் அவர்கள் வீட்டிற்கு வருவது சுத்தமாக நின்றுவிட்டது. 
    ஏன் வரவில்லை என்று தெரியவில்லை? அவன் நினைவு வந்தால் இந்திராவுக்குத் துக்கமாக இருக்கும்.
    இதெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.  இப்போதோ மூத்த பையனைப் பாட்டு சொல்லிக்கொள்ளும்படி வற்புறுத்துகிறாள்.  ஆனால் அவனோ கராத்தே என்கிறான்.  ஒவ்வொருவருக்கும் காரணங்கள்தான் வேறு.
    திடீரென்று இந்திராவுக்கு எத்தனையோ ஆண்டுகள் மறந்து போயிருந்த சங்கரனைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.  அவன் எங்கே கிடைப்பான்? வீணை கச்சேரிகளுக்குப் போனால் கிடைப்பானா?  மியூசியம் போனால் கிடைப்பானா?  .
    அவர்கள் குடும்பத்தில் இந்திராவின் குடும்பம் மட்டும்தான் சென்னையில் இருக்கிறது.  கிராமத்தில் அவள் அப்பா அம்மா இருக்கிறார்கள். தங்கை முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டு விட்டாள்.
    அவள் ஏதோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று சங்கரன் அவள் கண்களுக்குத் தட்டுப்படுகிறான்.
    “நீ கொஞ்சம் மாறியிருக்கிறாய்,” என்கிறான் இந்திராவைப் பார்த்து.

    “நீ அப்படியேதான் இறுக்கே,” என்கிறாள் இந்திரா.
    “உன் பாட்டெல்லாம் எப்படி? உன் வீணை ராமச்சந்திரன் சக்கைப் போடு போடுகிறாரே?”
    “ஆமாம்.  என் பாட்டு எப்பவோ நின்றுப் போச்சு,” என்கிறாள் இந்திரா.
    “உனக்கு எத்தனைக் குழந்தைகள்?”
    “இரண்டு பிள்ளைகள்.  ஒருத்தனும் பாட்டுக்கிட்டே போக மாட்டேங்கறாங்க.  உனக்கு?”
    “எனக்கா?  ஒரே ஒரு பையன்.  நாம் சம்பந்தம் பண்ணிக்கக் கூட முடியாது.”
    இப்போதுதான் இந்தக் கதையின் இன்னொரு க்ளூ கிடைக்கிறது. சங்கரன் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வந்தவன் ஏன் வருவதை நிறுத்திவிட்டான் என்பதைச் சொல்கிறான்.
    “உங்கிட்டே சொன்னதை நாலு நாளைக்கப்பறம் ரங்கன் கிட்டே சொன்னேன்” என்கிறான்.
    இங்கே அசோகமித்திரன் ஒரு வரி எழுதுகிறார்.
    இந்திராவுக்கு ஒரு மூச்சு தவறியது.  எவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கின்றன. இந்திராவுக்கு நம்ப முடியவில்லை.  ரங்கன் இவ்வளவு அழுத்தக்காரனா?
    “அம்மாவையும் பெண்ணையும் நான் ஏன் பிரிக்கணும்னு நான் தூரப்போய்விட்டேன்,” என்கிறான்.
    இந்த இடத்தில் கதாசிரியர் இந்தக் கதைக்குள் வருகிறார்.
    சங்கரன் அந்த இடத்தை விட்டுப் போகிறான். அவன் கதவு தாண்டிய உடனேயே கோபு உள்ளே வந்தான்.
    இந்திரா அவசரமாகச் சொன்னாள். “கோபு, ஓடிப்போய் அந்த மாமாவை அழைச்சிண்டு வா, சீக்கிரம்.”
    “யாரை அம்மா?” என்கிறான் கோபு.
    “அதான் இப்ப வெளியே போனாரோ அவரைத்தான்.”
    கோபு வெளியே ஓடினான்.  அவன் கண்ணிற்கு யாரும் தென்படவில்லை. 
    ‘அவன் போய்விட்டான்.  அவன் போய்விட்டான்’ என்று இந்திரா புலம்ப ஆரம்பித்தாள்.
    “நீ யாரைச் சொல்றே?” என்று கோபு கேட்கிறான்.
    “சங்கரன்,” என்கிறாள்.
    கோபு உதட்டைப் பிதுக்குகிறான்.  அவனைப் பொறுத்தவரைச் சங்கரன் என்றாலும் சர்தார் சிங் என்றாலும் ஒன்றுதான்.
    இந்திராவுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது.  தான் சங்கரனுடன் பேசியது நிஜமில்லை என்று படுகிறது.
    கதை முடிவில் முத்தாய்ப்பாகக் கதை ஆசிரியர் ஒரு செய்தி சொல்கிறார்.  üஆனால் சங்கரன் போய்ப் பல ஆண்டுகள் ஆகின்றன என்று இந்திராவுக்குத் தெரியாதுý என்று.
    இந்தக் கதை வினோதத் தன்மை கொண்டது.  இந்திராவின் ஏமாற்றம் ஆரம்பத்திலிருந்து தொடங்கி விடுகிறது.  வீணைக் கற்றுக்கொள்ளவில்லை என்ற ஏமாற்றம், பின்னர் அவன் பையன் அவள் விரும்பினாலும் பாட்டு கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்ற ஏமாற்றம். தான் விரும்பியவனை தன் மனதுக்கு ஏற்றபடி திருமணம் செய்துகொள்ள முடியவில்லை என்ற இன்னொரு ஏமாற்றம்.
    இப்படி நிறைவேறாத ஆசைதான் இந்தக் கதையின் இந்தக் கதையின் முக்கியம்சம். 
    சிறப்பான அமானுஷ்ய கதையாக அசோகமித்திரன் இதை எழுதி உள்ளார்.
   
   
   
   
   

Series Navigationஎஸ் பி பாலசுப்ரமணியம்பாலா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *