தன்னதி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 18 in the series 19 டிசம்பர் 2021
தன்னதி
ம இராமச்சந்திரன்
 
அடியில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்க்கொடியென
எனக்குள் ஓசையோடு மௌனத்தில் கரைந்து யாருக்கும் உணர்த்த விரும்பாமல் 
என்னையும் மீறி
என்னையும் நீராட்டி 
தூய்மைப் படுத்திக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கிறது 
நதி ஒன்று
 
பறவைகளின் ஓசையில்
காற்றின் வேகத்தில்
கதிர்களின் சுடுதலில்
ஏதோ ஒரு பொழுதில்
ஈரச் சுவட்டின் குளுமையில்
உனது தரிசனம்
 
ஆதி தாயின் நீர்மையின்
ஒரு துளியென
காதுகளில் கேட்கும் நீரோசை
உயிரின் ரகசியத்தை உணர்த்தியும்
உணர முடியாமல் 
மௌனித்துப்
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
நூற்றாண்டு மரத்தையும்
நேற்றுத் துளிர்த்த செடியையும்
 
—-
 
 
பெருவெளி
 
எதையும் பின்பற்ற மறுத்துக் கடக்கிறேன்
எல்லாவற்றையும் செறித்து, 
 
முன்னுதாரணங்கள் மலிந்து
முண்டியடித்துக்
காட்சிப் பிழையாகின்றன.
 
முன்னத்தி இல்லாமல்  ஏற்றுக்கொள்ளப்படாத எதுவும் 
எதனுடைய தொடர்ச்சி 
நீயென்று 
கேட்கப்படும் ஒவ்வொரு முறையும் 
தொட்டாச் சிணுங்கியென 
ஒடுங்குகிறேன்
 
சற்று நேரத்தில்
அடையாளப்படுத்தலின் மறுப்பில் எதிர்பார்ப்பிற்குள்
அங்கீகாரத்திற்குள் 
நஞ்சுத்துளி
 
மரணமும் புதிதல்ல
வாழ்தலும் புதிதல்ல
ஜீரணித்துத் துள்ளியோடும் எனக்குக் 
கால்கள் இல்லை 
மொழியும் இல்லை
ஏகாந்தப் பெருவெளியில் 
தென்பட வாய்ப்புண்டு 
பெரு வெளியாய் நீயானால்!
 
 
      –  ம இராமச்சந்திரன்
Series Navigationபிரமிடுகள் எகிப்து நூலகங்கள்எங்கே பச்சை எரிசக்தி ?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *