2022 ஆண்டின் சிறந்த தொகுப்பாக நான் கருதுகிறேன் – எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்

author
1 minute, 39 seconds Read
This entry is part 13 of 14 in the series 4 செப்டம்பர் 2022

 


 

அழகியசிங்கர் 

 

 

இந்தக் கவிதைத் தொகுதியை எட்டுப் பகுதிகளாகப் பிரித்திருக்கிறார் எம்.டி.எம்.

 

  1. கண்ணிமையின் அசைவுகள் .  2 மருள் மாற்றங்கள் பகுதி 3. நீ நான் நிலம் 4. பித்து பிறை பிதா 5. கர்ம வினை 6. புத்துயிர்ப்பு 7. சிதறல்கள் குறுங்கவிதைகள் 8.நகரம்.  எட்டாவது பகுதியில் அதிகமான கவிதைகள்.

 

ஏன் இப்படி தொகுதி பிரித்திருக்கிறார் என்று தெரியவில்லை? ஆனால் எல்லாக் கவிதைகளும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளதாகவும், தொடர் அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் உள்ளது.

குறுங்கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் 55 கவிதைகள் எழுதி இருக்கிறார்.

 

இத் தொகுப்பின் ஒரு பகுதிதான் குறுங்கவிதைகள்.  அதைக் கவிதைத் தொகுதியில்  பிரித்துக் காட்டியிருக்கிறார்.  

 

முழுத் தொகுப்பு ஞானக்கூத்தன் கவிதைகளில் அதை இவ்வாறு பிரித்துப் பிரசுரம் செய்யவில்லை.

இக் கவிதைகளைப் படிக்கும் போது சடாரென்று மனதில் பொறி மாதிரி எண்ணம் தோன்றி மறைந்து விடுகிறது.

 

ஞானக்கூத்தனின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.

 

பூச்சி

 

கம்பளிப் பூச்சி கம்பளிப் பூச்சி

எங்கே போறே நீ

வழியில் ஒருத்தன் தண்ணீர் கொட்டிட்டான்

கம்பளி மாத்தப் போறேன்.

 

எம்.டி.எம் குறுங்கவிதை ஒன்றைப் பார்ப்போம்.

 

சுழல் நாள்காலியில் சுழன்றபடி 

கடகடவென்று சிரித்து

கடைசிக் காட்சியில் தன்னை வெளிக்காட்டுவது

எப்போதுமே 

ஒரு வேதாந்தி

 

ஞானக்கூத்தன் கவிதை

 

எண்ணி எண்ணி

 

மழை நின்றது மழை நீர்

சொட்டிக்கொண்டிருந்தது

கயிற்றின் வழியே இறங்கித் துளித் துளியாக

யாரோ கணக்கெடுப்பது போல

ஒன்றன்பின் ஒன்றாக.

 

எம்.டி.எம் கவிதை

 

கடலடைய

ஓரடியே இருக்க

முட்டையிலிருந்து அப்போதுதான் வெளிவந்த

ஆமைக்குஞ்சுகள

தத்தித் தத்தி செல்கையில்

கடல் பருந்துகள் 

அவற்றைக்

கவ்விச் சென்றன”

 

நகுலனின் ஒரு கவிதை

 

?

கவிதை?

யாருக்கு வேண்டும்?

கதை?

ஏன் எழுத வேண்டும்?

காதல் 

கவைக்குதவாது

தெய்வம்?

என்றும் போல் இன்றும்

எல்லாவற்றிற்கும் செல்லாமல்

நிற்கும் சாட்சி

 

எம்.டி.எம் கவிதை

 

ஜீன்ஸ் அணிந்த புத்தன்

எல்லாவற்றையும் பார்த்து

அதிசயிக்கச் சொன்னான்

ஜீன்ஸையே எல்லோரும் பார்த்து அதிசயித்தார்கள். 

 

தேவதச்சனின்  

 

என் வீடு என்ற கவிதை

 

மொட்டை மாடியிலிருந்து 

விருட்டென்று எழுந்து பறந்து செல்கிறது காகம்

அது விட்டுச் சென்ற 

என் வீட்டில் 

குக்கர் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது

 

எம்.டி.எம் கவிதை 

 

வரைந்தால் 

யானை சிறியதாகி விடுகிறது

ஈக்குஞ்சு பெரிதாகி விடுகிறது

 

பிரமிள் கவிதை

 

கவிதை – 

இறக்கத் துடிக்கும் வாலா?

உயிரோடு மீண்ட உடலா?

 

இப்படி ஏகப்பட்ட குறுங்கவிதைகளை  வெளிப்படுத்திக் கொண்டு போகலாம்.  இது ஹைக்கூ என்று சொல்கிற வகையில்லை.  எம்.டி.எம் தனியாக இதை அவர் புத்தகத்தில் தனிப்பகுதியாக  வெளிப்படுத்துகிறார். 

 

இக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது இன்னும் அதிகமாகக் கவிதைகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

 

கசடதபற இதழ் அக்டோபர் 1972ல் நீலமணி எழுதிய கவிதை ஒன்று

 

                    காபரேக் காரியைக்

                    கட்டிக்கொண்டேன்

                    மியூசிக் இன்றி 

                    அவிழ்க்க மறுக்கிறாள்.

 

கல்யாண்ஜி, கலாப்ரியா, ஆத்மா நாம் முதலிய கவிஞர்களும் அதிகமாகக் குறுங்கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் அவர்களுடைய கவிதைத் தொகுதிகளில் அவற்றைச்  சிறப்பாக அடையாளப்படுத்தப் படவில்லை. ஆனால் எம்.டி.எம் அதைச் சிறந்த முறையில் இந்தத் தொகுப்பில் அடையாளப் படுத்துகிறார்.

 

பகுதி 4ல் பித்து பிறை பிதா என்ற தலைப்பின் அப்பாவை ஞாபகப்படுத்தித் தொடர் கவிதைகளாக எழுதி உள்ளார்.

 

‘ந்தையின் தகனத்துக்கு’  என்று ஒரு கவிதை வருகிறது.

 

இக் கவிதையில் தந்தையை இழந்த சோகத்தை உணர்ச்சிகரமான கவிதையாக மாற்றவில்லை. அறிவுத்தளத்தில் எழுதப்படுகிற கவிதையாக மாறி விடுகிறது.

 

          சாயங்காலத்தின் நிரந்தர கருணை

          உனக்கும் எனக்கும் மட்டுமானதல்ல

          அனைவரக்குமானதென

          பெருகும் கண்ணீர்

          தெளிவாக்குகிறது.

 

என்கிறார்.  

 

          ‘கூட்டத்தில் ஒரு பகுதி’ என்ற கவிதையில் அப்பாவைப் பற்றி ஞானக்கூத்தன் இப்படி எழுதுகிறார்

 

          நாள்தோறும் அல்லது

          நாள் விட்டொருநாள் முகத்தை

          மழிக்கும் வழக்கம்

          எங்கள் அப்பாவுக்கில்லை

 

          மூன்றாம் பிறையைத் தாடியாய்ப்

          பொருந்திய சிவனைப் போல

          அப்பா தெரிந்தார்

 

இக் கவிதையிலும் உணர்ச்சி வேகம் சிறிதும் இல்லை. எம்.டி.எம் கவிதைகளைப் படிக்கப் படிக்கத்தான் இன்னும் புரியத் தொடங்கும்.  எந்தவித முகச் சுளிப்பும், அலுப்பும் இல்லாமல் எம்.டி.எம் கவிதைகளைப் படித்துக்கொண்டே இருக்கலாமென்று தோன்றுகிறது.

 

2022 ஆம் ஆண்டு பரிசுக்குரிய கவிதைப் புத்தகம் ஒன்றைக் குறிப்பிடுங்கள் என்று யாராவது கேட்டால் நான் ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ என்ற தொகுப்பைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டேன். 

Series Navigationமகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடுதொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *