லா.ச.ரா.

0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 10 in the series 22 மே 2022


====ருத்ரா

பேனாவை
அப்படித்தான் சொன்னார்கள்.
அடுத்த பக்கம்
கண்டுபிடிக்க முடியாத‌
குகைவழிப்பாதை என்று.

நீண்ட புழுக்கூடு.
சிங்குலாரியின் முதல் மைல் கல்
கண்ணில் பட்டதும்
அப்படித்தான்
படக்கென்று
அடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்
கால் வைத்து விடலாமாம்.

ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,
ஸ்டீஃப‌ன்ஹாக்கிங்…பட்டியல் நீளும்.
அதிலும்
மேக்ஸ் ப்ளாங்க்
அந்த‌ “மாறிலி” எனும்
சோழியை குலுக்கி
தூர‌ உய‌ரே எறிந்து விட்டார்.

முத‌ல் வெடிப்பின்
மூக்குமுனையைக்கூட‌
உடைத்துக்கொண்டு
உள்ளே
போய்க்கொண்டிருக்க‌வேண்டிய‌து தான்.

க‌ணித‌ ச‌ம‌ன்பாடுக‌ளின் சுர‌ங்க‌ம்
வ‌ர்க்க‌மும் வ‌ர்க்க‌மூல‌மும்
டெல்டாவும் லேம்ப்டாவும்
வ‌ழி நெடுக‌ நிர‌டும்.

க‌ருந்துளைக்கும்
உண்டு
தொப்பூள் கொடித்துளை.

அந்த‌ புழுத்துளைக்குள்
போனால்
அதி ந‌வீன‌ க‌ணித‌ப்பேராசிரிய‌ர்
எட்வ‌ர்டு மிட்ட‌னும்
அங்கு தான்
ப‌க‌ ப‌க‌ வென‌ சிரிக்கிறார்.

போக‌ட்டும்
விஞ்ஞானிக‌ளின் மூச்சுக‌ளின்
விழுதுக‌ளின் ஊஞ்ச‌ல்பிடியை
விட்டுவிட்டால்…
“தொபுக் க‌டீர்” தான்.

இந்த பிரபஞ்ச விஞ்ஞானத்தையும் கூட‌
பாய் விரித்து
இவர் எழுத்துக்களில்
பஞ்சடைத்து தலையணையாக்கி
படுக்கிடக்கலாம் சுகமாக!

வெர்ம் ஹோலை வெர்டு ஹோல்
ஆக்கிய விஞ்ஞானி
லா.ச.ரா…

இப்படியொரு
குழல்வழியை
எழுத்துக்குள் அமைத்து
பயணம் போவோம்.

அப்போது நாம்
பார்ப்பது
அறிவது
உணர்வது
உள் கசிவது
எல்லாமே

லா.ச.ரா
லா.ச.ரா
லா.ச.ரா…தான்உயிரெழுத்தைப்பிய்த்து
உயிர் தேடும்
இன்னொரு எழுத்து.
காட்சி விவ‌ரிப்புக‌ள்
வெற்றிலை எச்சில் துப்பிய‌து போல்
காகித‌ம் எல்லாம்
சிவ‌க்கவைத்து க‌றையாக்கும்.

இத‌ய‌ நாள‌ங்க‌ளையே
பூணூல் போட்டுக்கொண்ட‌
பிர‌ம்ம‌ எழுத்துக்க‌ள்
பிண்ட‌ம் பிடித்துப்போடும்.

காத‌லும் இருக்கும்.
க‌ருமாதியும் இருக்கும்.
நேர‌ப்பிஞ்சுக‌ளை
வெள்ள‌ரிப்பிஞ்சுக‌ள் போல்
ந‌றுக் மொறுக் என்று
தின்கிற‌
உள்ள‌த்தின்
உள்ளொலி
எல்லா எழுத்திலும்
சுவை கூட்டிப்போகும்.

அம்மாவின் முலைப்பாலில்
அட‌ர்த்தியான‌ நெருப்பு எரியும்.
வீட்டுக்கு வீடு
கோட‌ரி தூக்கிக்கொண்டிருக்கும்
ப‌ர‌சுராம‌ ந‌மைச்ச‌ல்க‌ள்
பாஷ்ய‌ங்க‌ளாக‌ போய்விட்ட‌
ப‌டிம‌ங்க‌ளின்
அடிவ‌யிற்றையே கிள்ளி வ‌ருடும்
கூரிய‌ எழுத்துக்க‌ள்
ரோஜாக்களின்”மீமாம்ச‌ங்க‌ளில்”
புதைத்து வைத்திருக்கும்
க‌ழும‌ர‌ங்க‌ள்.

லா.ச‌… ரா
த‌மிழை “லேச‌ர்”ஆக்கிய‌வ‌ர்.
மெய்யெழுத்துத்த‌லையின்
புள்ளியில் கூட‌
ஒரு க‌ரு உட்கார்ந்திருக்கும்.
ச‌ர்ப்பமாய் விரியும் ஒரு ப‌ட‌ம்
ஊடு ந‌டுகையாய்
ந‌டுங்க‌ வைக்கும்.

“ஜ‌ன‌னி”
“அம்பை”
“சிந்தாந‌தி”
……
இவ‌ர் எழுத்துக‌ள்
ஏதோ
எத‌ற்குமே புரியாத‌
ஒரு
லாவாக்குழ‌ம்பில்
ஜாங்கிரி பிழிந்த‌து போல்..
எரித்துக்கொண்டே
இனிக்கும்.
த‌மிழை உறிஞ்சி உறிஞ்சி
உயிர்ப்பின்
ஊற்றை க‌ண்டுபிடித்த‌
எழுத்துக்க‌ளில்
சிந்துவெளி இழையின்
மின்னல் நுனி
துடித்துக்கொண்டிருப்பது போல்
உணர்ந்திடுகின்றோம்.

முழுக்க‌ முழுக்க‌
லா.ச‌.ரா எழுத்து ஒன்றையே
“பொன்னியுன் செல்வ‌ன்” சைசுக்கு
வீங்க‌ வைத்து
பொங்கி வைத்து
ஒரு “நாவ‌ல்” தின்றால்
எப்ப‌டியிருக்கும்?

குழ‌ந்தைக‌ள் “சுட்டி”ப்பானையில்
ச‌மைக்குமே
அப்படி சமைத்து
சாப்பிட‌ ஆசை
“லா.சா.ரா”வை!

=====================================================ருத்ரா
 13 ஆகஸ்டு 2012ல் எழுதுயது

Series Navigationஇரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்பயணம் – 4
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *