தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 5 of 9 in the series 10 ஜூலை 2022

 

 

                           வளவ. துரையன்

 

 

                  கூழ் அடுதலும் இடுதலும்

 

காளியிடம் பேய்கள் தம் பசித்துன்பத்தைச் சொல்லி அழக் காளி பேய்களுடன் களம் சென்று அவை உணவு பெறச் செய்ததை விளக்கும் பகுதி இது.

=====================================================================================           

            எண்ணுதற் கரிய கூளிபுடை சூழ விடையோன்

                  யாகசாலை புகவான் மிசை எழுந்தருளி எம்

            கண்ணுதற் கடவுள் வென்றகளம் என்று முடியக்

                  கட்டுரைப்பது எனநின்றிறைவி கண்டருளியே.            728

 

[விடையோன்=சிவபெருமான்; கண்ணுதற் கடவுள் நெற்றிக் கண்ணுடைய பரமன்; கட்டுரைப்பது=விளக்கி முடிப்பது]

 

எண்ண முடியாத பேய்கள் உடன் வர, வீரபத்திரர் வெற்றிகண்ட வேள்விக் கூடத்தைக் காண வானில் எழுந்தருளிய காளி, வேள்விக் கூடத்தைக் கண்டு ”நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் உளக்குறிப்பின்படி போர்செய்து வெற்றி பெற்ற இடம் இது; இதன் பெருமையை எவ்வாறு உரைக்கமுடியும்” என வியந்து நின்றாள்.

=====================================================================================

            ’சுமக்கும் நாகம் நமது ஆதலின் அதற்கு இனிமுதல்

                  சுரர் பிணத்தொகை சுமப்பது அரிதாகும் அவைகொண்டு

            எமக்கு நீர்க்கடிது கூழ் அடுமின்” என்றலும் மகிழ்ந்து

                  யாளி ஊர்தி முதுகூளிகள் எனப்பலவுமே.                  729

 

[நாகம்=ஆதிசேடனாகிய பாம்பு; சுரர்=தேவர்; அடுமின்=சமையுங்கள்; யாளி=சிங்கம் போன்ற விலங்கு; ஊர்தி=வாகனம்]

 

”இந்த மன்ணுலகைச் சுமக்கும் ஆதிசேடன் நமக்கு ஓர் அணிகலன்; ஆதலினால் மலைபோலக் குவிந்திருக்கும் தேவர்களின் பிணங்களைச் சுமப்பது அதற்குத் துன்பம் தருவதாகும். எனவே அத்தேவர்களின் உடல்களைக் கொண்டு எனக்குக் கூழ் சமையுங்கள்” என்று தேவி கூற, யாளி வாகனம் உடைய வனதுர்க்கை முதலான பேய்க்கூட்டங்கள் மகிழ்ச்சி அடைந்தன.

=====================================================================================

                  மலைகளுள் மறுஏ றுண்ட

                        மலைகளும் வான யானத்

                  தலைகளும் அடுப்புக் கொள்ளீர்

                        கடுப்பில் அத்தாழி ஏற்றீர்.                      730

 

[மறு=குற்றம்; ஏறுண்ட=இடி தாகி இறந்த; வான்யானை=ஐராவதம்; கொள்ளீர்=கொள்க; கடுப்பில்=விரைவாக; தாழி=பெரிய பானை]

 

கூழ் சமைக்க மலைகளில் உயர்வு கொண்ட திருக்கயிலையையும், பொன் மேருவையும் விட்டுவிட்டு மற்ற களங்கம் உடைய மலைகளிலே இறந்து கிடக்கின்ற ஐராவதம் முதலான யானைகளின் தலைகளையே அடுப்பாகக் கொண்டு, விரைவாக இறந்துபட்ட யானைகளின் வயிறுகளையே தாழியாக அந்த அடுப்பில் ஏற்றுங்கள்.

=====================================================================================     

                 

                  

                   அழிந்தன கற்பந் தோறும்

                        தொடுத்தன நகுசி ரத்தில்

                  கழிந்தன கபால மாலைக்

                        குருதியில் கழுவிக் கொள்ளீர்.                    731

 

[கற்பம்=ஊழி; நகு=விளங்கும்; சிரம்=தலை; கபாலம்=மண்டை ஓடு; குருதி=இரத்தம்]

 

ஊழிகள் தோறும் உயிரற்று வீழ்ந்த தேவர்களின் தலைகள் மற்றும் மண்டை ஓடுகள் பல மாலையாய் நம் மீது திகழ்கின்றன. அவற்றில் இருந்து ஒழுகும் இரத்தத்தைக் கொண்டு தாழியையும் மற்ற இடுபொருள்களையும் கழுவிக் கொள்க.

=====================================================================================

                  இரவிகள் பல்லும் தத்தம்

                        ஈரறு தேரில் அவ்ஏழ்

                  புரவிகள் பல்லும் குத்தித்

                        துகளறப் புடைத்துக் கொள்ளீர்.                     732

 

[இரவி=சூரியன்; புரவி=குதிரை; துகள்=தூசி கொள்ளுர்=கொள்ளீர்]

 

கூழிடும் பானையில் அரிசியாக, வீரபத்திரரால் உதிர்க்கப்பட்டுக் கிடக்கின்ற சூரியர்களின் பற்களுடன், அவர்களின் தேரை இழுத்து வந்து இறந்து கிடக்கும் குதிரைகள் ஏழின் பற்களையும் குத்திப் புடைத்துத் தூசியின்றி எடுத்துக் கொள்வீர்.

=====================================================================================

                  வானவர் பல்லும் வானோர்

                        மன்னவர் பல்லும் எல்லாத்

                  தானவர் பல்லும் தீட்டி

                        அரிசியாகச் சமைத்துக் கொள்ளீர்.                  733

 

[வானவர்=தேவர்; தானவர்=அசுரர்]

 

தேவர்கள் மற்றும் அவர்களுக்குத் தலைவராக வந்தவர்கள், எல்லா அசுரர்கள் பற்களையும் எடுத்துக் குத்தித் தீட்டிச் சமைக்க அரிசியாகக் கொள்க.

===================================================================================

                  செருமுடி சுரேச ரோடு

                        த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த

                  பெருமுடி உடல்க ளாகப்

                        பிறங்கிய அரிசி பெய்யீர்.                      734

 

[செருமுடி=போரில் அழிந்த; சுரேசர்=தேவர்; பெருமுடி=தலை சூடிய பெரிய மணிமகுடம்; பிறங்கிய =விளங்குகிற]

 

போரில் இறந்துபட்ட தேவர்கள் தலைவர், உலகளந்த திரிவிக்கிரமர்கள் வீழ்ந்துபட, விழுந்த அவர்களின் பெரிய மணிமுடிகளை உரலாகக் கொண்டு அதிலே குத்திய அரிசியை இடுங்கள்.

=====================================================================================

                  அசலமே அனைய திக்கில்

                        ஆனைக்கோ டனைத்தும் பொற்பூண்

                  முசலமே ஆக முப்பத்

                        திரண்டையும் முறித்துக் கொள்ளீர்.                735

 

அசலம்=மலை; அனைய=போன்ற; கோடு=தந்தம்; முசலம்=உலக்கை; பொற்பூண்=தந்தங்களில் பூணப்பட்ட பூணாரம்]

 

மலைபோன்ற எட்டுத் திக்கில் இருந்த திசை யானைகளின் பொற்பூண் அணியப்பெற்ற முப்பத்தி இரண்டு தந்தங்களையுமே உலக்கைகளாகக் கொள்ளுங்கள்.

=====================================================================================

                   

                   எத்திசை யானை ஈரெண்

                        செவிகளும் சுளகாய்  ஈண்டக்

                  குத்திய அரிசி எல்லாம்

                        முரிஅறக் கொழிக்க வாரீர்.                         736     

 

[ஈரெண்=இரண்டு எட்டு; சுளகு=முறம்; முரி=நொய்; அற=போக; கொழிக்க=கொழித்தெடுக்க]

 

எட்டுத்திசை யானைகளின் பதினாறு காதுகளையுமே முறமாக இங்கமைய, குத்திய அரிசியை எல்லாம் அவற்றில் இட்டு நொய்யரிசி போகத் தெளித்துக் கொள்ள வருக.

=====================================================================================

                  இற்றைநாள் அமரர் சோரி

                        திணுங்கியது இன்னம் பெய்ய

                  அற்றைநாள் குருதி பெய்த

                        முகில்களை அழைத்துக் கொள்வீர்.             737

 

[சோரி=ரத்தம்; திணுங்கியது=உறைந்து போனது;

 

தேவர்கள் உடலிலிருந்து வடிந்த இரத்தம் உறைந்து போய்விட்டது. எனவே அது பயன்படாது. இந்திரன் மழைபெய்விக்க சில இரத்த மழை மேகங்கள் வைத்திருப்பான். அவற்றை அழைத்து இரத்த மழைபெய்யச் செய்து அதையே உலை நீராக்கிக் கொள்ளுங்கள்.

====================================================================================

                  தனித்தனி வயிறு வீங்கக்

                        குடித்துடல் தடித்தீர் நீரும்

                  இனித்தனித் திங்கும் எங்கும்

                        பிணமலை அருவி பெய்யீர்.                       738

 

[வீங்க=பெருக்க; தடித்தல்=குண்டாதல்; பெய்யீர்= பெய்ய விடுங்கள்]

 

நீங்கள் இரத்தம் குடித்தே வயிறு வீங்கி இருக்கின்றீர்கள். இனி இரத்தம் குடிக்க வேண்டாம். பிணமலைகளிலிருந்து வடியும் இரத்தத்தை அருவி போலப் பாய விடுங்கள்

===================================================================================

                  தாங்குகைக்கு உரிய யானைத்

                        தடவரை அருவி சோரி

                  வாங்குகைத் துருத்தி கொண்டுஅம்

                        மிடாக்களில் சொரிய வாரீர்.                    739

      

 

[தாங்குகை=துதிக்கை; தடவரை அருவி=பெரிய மலை வீழ் அருவி; சோரி=இரத்தம்; வாங்குகை=பிடிக்கும்; திருத்தி=தூம்பு; மிடா=தாழி]

 

மலை அருவி போல் பாயும் இரத்த ஒழுக்கை, செத்துக் கிடக்கும் திசையானைகளின் தும்பிக்கைகளைத் துடுப்பாகக் கொண்டு, தாழிகளில் ஊற்றி நிரப்ப வாருங்கள்.

=====================================================================================

                  துளிபடு கடா யானைக்கைத்

                        துணிபடு சோரி வாரி

                  முளிபடும் உடம்பின் முன்னைப்

                        பொரிவுஅற மூழ்கி ஏறீர்.                         740

 

[துளிபடு=இறந்துபட்ட; கை=துதிக்கை; துணிபடு=வெட்டப்பட்ட; சோரி=இரத்தம்; வாரி=கடல்; முளி=வெப்பம்; பொரிவு=சூடு; அற=நீங்க; ஏறீர்=ஏறுவீர்]

 

யானைகளின் வெட்டுப்பட்ட துதிக்கைத் துருத்திகளினால், வாரி எடுத்த இரத்தக் கடலுள் உங்கள் உடல் வெப்பச் சூடு தணிய மூழ்கி எழுவீராக.

====================================================================================

                  

             

                 

                 தேன்இணர் அலங்கல் மௌளித்

                          தேவர் தானவர் உடம்பில்

                  தூநிண வெள்ளைக் கோவை

                        எடுத்தெடுத்து அரையில் சுற்றீர்.                    741

 

[தேன்=தேனுண்ட வண்டு; இணர்=பூங்கொத்து; மௌலி=தலை; தானவர்=அசுரர்; தூ=தூய; நிணம்=கொழுப்பு[ கோவை=குடல் அரை=இடை]

 

தேனுண்ட வண்டுகள் மொய்க்கும் பூங்கொத்துள்ள மாலைகள் சூடிய முடி அணிந்த தேவர்கள், அசுரர்கள் உயிரிழந்த உடலில் உள்ள குடலை உருவி, இடையில் மாலையாய்ச் சுற்றிக் கொள்ளுங்கள்.

=====================================================================================

                  சுருதியும் தவிர யாகம்

                        தொடங்கிய சுரேசர் தங்கள்

                  குருதியின் குழம்பு கொண்டு

                        குங்குமச் செச்சை கொட்டீர்                      742

 

[சுருதி=வேதம்; தவிர=தவிர்த்து; செச்சை=சிவப்பு]

 

வேத விதிமுறைகளுக்கு மாறாகத் தக்கனின் யாகத்தைத் தொடங்கி வைத்த தேவர்களின் இரத்தக் குழம்பை எடுத்துக் கலவையாக உடலில் பூசிக் கொள்ளுங்கள்.

=====================================================================================

                  குடர்முடி செறியக் கட்டிக்

                        கோவையாய்ச் சேர்த்துத் தேவர்

                  சுடர்முடி கடக சூத்ரம்

                        உடம்பெலாம் தொடக்கிக் கொள்வீர்.              743

 

[செறிய=நெருங்க; கடக சூத்ரம்=வளையல் கோக்கும் கயிறு] 

 

தேவர்களின் தலை முடியிலிருந்த மணிமகுடங்களையும், அதில் உள்ள வளையங்களையும், அவர்களின் குடல்களைக் கொண்டே மாலையாகக் கட்டி உடம்பெல்லாம் அணிந்து கொள்ளுங்கள்.

=====================================================================================          

                  யாம்இனி உண்ணும் கூழிற்கு

                        ஈரலை இட்டு வைத்துத்

                  தாமரை மொட்டில் செய்த

                        தனிப்பெரும் சூட்டுக் கட்டீர்.                       744

 

[சுட்டு=தலைமாலை; கட்டீர்=அணிவீர்]

 

இனி நாம் பருக உள்ள கூழுக்கு இறந்தவர்களின் ஈரலைத் தொடுகறியாகக் கொள்ளுங்கள். அவர்கள் அணிந்திருந்த தாமரை மலர் மாலைகளைத் தோளில் அணிந்து கொள்ளுங்கள்.

=====================================================================================     

                 

                        அரசுள அநந்த கோடி

                             அசோகுள அமரர் இட்ட

                        முரசுள முகுந்தன் மூங்கில்

                             சார்ங்கம் உண்டு அவற்றின் மூட்டீர்.          745              

[அநந்தம்=அநேகம்; முகுந்தன்=திருமால்; மூங்கில்=சார்ங்கம் எனும் மூங்கில் வில்]

 

அரச மரங்கள் அநேகம் கோடிகள் உள்ளன. அசோகமரங்களும் உள்ளன தேவர்கள் விட்டுவிட்ட முரசுகளையும், திருமாலின் சார்ங்கம் எனும் வில்லையும் எடுத்து அம்மரங்களில் மோதி முழங்குங்கள்

                        

                        எள்ளிவாய் மடங்கிக் கைகள்

                             இழந்துஎரி கரிந்து போன

                        கொள்ளிவாய்ப் பேயை மாட்டி

                            அவற்றிலே கொளுத்திக் கொள்வீர்.             746

 

[எள்ளி=இகழ்ந்து; வாய்மடிந்து=வாய்கிழிப்பட்டு; எரி=அக்கினி; கொள்ளிவாய்=கொள்ளிக்கட்டை]

 

”சிவபெருமானை இகழ்ந்து பேசியதால் பிரமன் எரிந்து கொள்ளிக் கட்டையாகக் கிடக்கிறான். அவனிடம் ஒரு கொள்ளிக்கட்டையைக் காட்டிப் பற்ற வைத்துத் தீ உண்டாக்கிக் கொள்க” என்று ஒரு பேய் சொல்லிற்று.

=====================================================================================                         இருந்து அலை உலைகள் எல்லாம்

                              பொங்கின துங்க யானைப்

                        பெருந்தலை வாரி வைத்த

                              அரிசிகள் பெய்ய வாரீர்.                   747

 

[துங்க=பெரிய; பெய்ய=இடுதற்கு]

 

நெருப்பு மூட்டியதும் உலைத்தாழி கொதித்தது. பெரிய யானைத் தந்தங்களைக் கொண்டு குத்திக் காதுகளால் புடைத்து எடுத்த அரிசியை உலைத் தாழியிலே இடலாம் வாருங்கள்.

=====================================================================================     

                        எருவையும் பருந்தும் ஓச்சித்

                             தக்கனார் யாக சாலைச்

                        சுருவையும் தோளும் கொண்டு

                            துடுப்பெனத் துழாவிக் கொள்வீர்.              748

 

[எருவை=கழுகு; ஓச்சி=விரட்டி; சுருவை=அகப்பை; துழாவ=கிண்டிவிட; கொள்ளீர்= கொள்வீர்கள்]

 

கூழை உண்ன வரும் பருந்தையும், கழுகுகளையும் விரட்டி அடியுங்கள்; தக்கன் வேள்விக் கூடத்தில் ஓமகுண்டத்தில் நெய் விட வைத்திருக்கும் அகப்பையையும், இறந்துபட்ட தேவர்களின் தோள்களையும், கூழ் துழாவத் துடுப்பாகக் கொள்வீர்களாக.

=====================================================================================                 

                  மாறின மடுத்த செந்தீ

                        மலைச் சிறகு அடுத்துப் பற்றி

                  ஏறின மிடாக்கள் வெந்து

                        சமைந்தன இழியப் பற்றீர்.                       749

 

[மடுத்த=முட்டிய; மாறின=அணைந்துவிட்டது; மிடா=தாழி; சமைந்தன=வெந்த கூழை; இழிய=கீழ் இறக்க]

 

அடுப்பில் நெருப்பு அனைந்து விட்டது. கூழ் வெந்துவிட்ட் து. தாழிகளை அடுப்பில் இருந்து இறக்க, மலைச் சிறகுகளை வெட்டி எடுத்து அதைக் கைப்பிடித் துணியாகப் பற்றிக் கீழே இறக்கி வையுங்கள்.

=====================================================================================

                  சேத்தனது ஊர்தி கொண்டான்

                        திருநெற்றிக் கண்ணில் வெந்து

                  பூத்தன மலைகள் வாங்கிப்

                        புண்டரம் புடையில் தீட்டீர்.                     750

 

[சே=காளை; திரு=அழகிய; பூத்தன=வெந்து நீறான மலைகள்; புண்டரம்=திருநீற்றுப்பட்டை; புடை=பக்கம்]

 

தாழிகளின் வெளிப்பக்கத்தில், வீரபத்திரரின் நெற்றிக்கண் நெருப்பால் வெந்த மலைகளின் சாம்பலை எடுத்துத் திருநீற்றுப் பட்டையாகத் தீட்டுங்கள்.

=====================================================================================

Series Navigationபூமி தொழும்பிறந்த நாள்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *