ஆர்.வி கதைகள்….

author
2 minutes, 56 seconds Read
This entry is part 4 of 7 in the series 6 நவம்பர் 2022

 

            அழகியசிங்கர்

            ஒரு வாரம் கதைகளைப் பற்றி உரையாடுவோம்.  இன்னொரு வாரம் கவிதைகளைப் படிப்போம்.  கடந்த பல மாதங்களாக நிகழ்ச்சிகளை இப்படித்தான் நடத்திக்கொண்டு  வருகிறேன்.

            மற்றவர்களுக்கு எப்படியோ, இதைச் சாக்காக வைத்துக்கொண்டு நான் இரண்டு கதைஞர்களின் ஆறு கதைகளை வாசித்து விடுகிறேன்.

            உண்மையில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளையும் படித்து கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.

            73 கதைஞர்களின் கதைகளை வாசித்து விட்டேன். என் வயதொத்தவர்களுக்கெல்லாம் ஒரு பிரச்சினை.  கதைகளைப் படித்து முடித்தபின் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது.

            அதனால்தான் நான் படிக்கிற கதைகளையெல்லாம் கதைச் சுருக்கம் எழுதி விடுகிறேன்.  அப்படி எழுதுவதால் ஒரு கதையை இரண்டு அல்லது மூன்று முறை படிக்க வேண்டும். மேலும் சின்ன குறிப்பு மாதிரி எழுத வேண்டும்.  இதனால் கதைகள் ஓரளவு ஞாபகத்தில் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டாலும் கூட குறிப்புகளைப் படித்தால் ஞாபகத்திற்கு வந்துவிடும்.

            இந்த இடத்தில் இரண்டு பேர்கள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.  ஒருவர் சி.சு செல்லப்பா.  இவர் தன் கதைகளைப்படித்து கின்ன குறிப்புகள் எழுதி புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்.  அவர் குருநாதர் பி.எஸ்.ராமையாவின் கதைகளைப் படித்து சுருக்கமான வடிவத்தில் கதைகளைக் குறிப்பிட்டு அது எது மாதிரியான கதை என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

            ஒரு கதை சாதாரண கதையாக இருந்தால் சாதாரண கதை என்று சொல்லி  விடுகிறார்.  இதுமாதிரி 300 கதைகளுக்கு மேல் எழுதி அதை ராமையாவின் சிறுகதை பாணி என்று புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்.  எனக்கு அதைப் பார்த்தவுடன்தான் இதுமாதிரி நாமும் செய்து பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

            நாம் கதைகளை மட்டும் படிக்க வேண்டும். அதை அலசக் கூடாது. இதுமாதிரி கதைகள் பெரிய பத்திரிகைகளில் வரும் கதைகள் சிறுபத்திரிகைகளில் வரும் கதைகள் என்று பிரிக்கக் கூடாது.  ஒரு கதையை எப்படி நாம் பார்க்கிறோம் என்பது முக்கியம்.

            ஜே.வி.நாதன் என்ற எழுத்தாளர் 500 கதைகள் எழுதியிருக்கிறார்.  இன்னும் கூட எழுதிக்கொண்டு வருகிறார்.  அவர் கதைகள் எழுதி அனுப்பினால் போதும், குமுதம், ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் உடனே பிரசுரம் செய்து விடுகிறார்கள்.

            தீபாவளி மலர்களில் கதைகள் எழுதும் அதிர்ஷ்டமான எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள்.  எந்த வாய்ப்பும் தராமல் விரட்டி அடிக்கப்படுகிற எழுத்தாளர்களும் உண்டு.

            இப்போது கதைகள் படிக்கிற ஆர்வம் பெரும்பாலோருக்குக் குறைந்து விடுகிறது.  தீபாவளி மலரில் வந்தால் என்ன? யாரும் அவற்றைப் படிக்கப் போவதில்லை. 

            ஆடியோவில் பதிவு செய்கிற கதைகளையும் விரல் விட்டு எண்ணக்கூடிய வாசகர்கள்தான் கேட்பார்கள்.

            சி.சு செல்லப்பா முயற்சியை நான் மேற்கொண்டு ஆர்வி கதைகளை எடுத்து இங்கு முன் சுருக்கம் தயாரித்துள்ளேன். ஞாபகமாக கதைகளைப் பற்றி என் எண்ணத்தையும் பதிவு செய்துள்ளேன் 

            ஆர்.வி என்கிற பழம்பெரும் எழுத்தாளரின் மூன்று  கதைகளை எடுத்துக் கையாண்டுள்ளேன்.

            ஆர்வியைப் பற்றிக் குறிப்பையும் இங்குத் தர விரும்புகிறேன்.  சுமார் 30  நாவல்கள், 8 குறுநாவல்கள், 500க்கும் மேற்பட்ட  கதைகள்,

சிறுவர்களுக்காக 50 நூல்கள் எழுதியிருக்கிறார். ஏகப்பட்ட விருதுகள் வாங்கி உள்ளார்.  இன்று யாரும் ஆர்.வியைப் பற்றிப் பேசுவதில்லை. இதுதான் இறுதியில் எல்லா எழுத்தாளர்களுக்கும் நடக்கும்.

 

            முதல் கதை ‘உப்புமா ராவ்’.

           

            என்ன நேரமானாலும் புஜங்க ராயர் உப்புமா மட்டும் சூடு ஆறாது.  தினமும் உப்புமா ராவ் ரயில்வே பிளாட்பாரத்தில் கீழ்க்கோடி அரச மரத்தடியில் குடிகொண்டிருந்த அனுமார் சன்னதிக்கு முன்னால் உட்கார்ந்திருப்பார்.  சரியாக நூற்றெட்டு உப்புமா பொட்டலங்களை வண்டி வந்தவுடன் விற்றுவிடுவார். வண்டியில் வருபவர்களுக்கு அவருடைய உப்புமா பிரபலமானது.

            பிளாட்பாரத்தில் கீழ்க்கோடியில் உள்ள அனுமாரை அங்கிருந்து நீக்க வேண்டுமென்று ரயில்வே நிர்வாகம் நினைக்கிறது.  அதை நடத்தவிடாமல் அந்தோணிசாமி தன் வேலையை விட்டுவிட்டுப் போராடி ஜெயிக்கிறான்.  

            பூஜரங்கராயருக்கு அவன் மீது தனி அக்கறை உண்டு. தினமும் ஒரு சின்ன தொகையை அந்தோணி சாமிக்குத் தெரியாமல் அவன் மனைவியிடம் ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்து காத்துக்கொண்டிருக்கும் அவளிடம் கொடுப்பர் .

            ஒருநாள் அந்தோணிசாமியும் வரவில்லை அவன் மனைவியும் வெளியே காத்திருக்கவில்லை.  ஏதோ நடந்திருக்கிறது  என்று ஒரு குதிரை வண்டியில் அந்தோணிசாமி வீட்டிற்குச் செல்கிறார்.  அவனுக்கு உடம்பு சரியில்ûல் அவர் வந்த வண்டியிலேயே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று அந்தோணி சாமியைக் காப்பாற்றுகிறார்.

            ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கதை.

 

            இரண்டாவது கதை ‘பூனை’

 

            பூனை வயிறு நிரம்பியதும் வாயை நக்கிக் கொண்டு அந்த இடத்திலேயே நிற்காமல் போய்விடும்.

            தியாகராஜனும் அப்படித்தான்.  மாமா வீட்டில் ஒட்டிக்கொண்டு படிக்கிறான்.  மாமா வீட்டில் எந்த ஆதரவுமில்லை. அவர்களும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்.  கதைசொல்லி  அவன் அவன் நிலையை உணர்ந்து உதவி செய்கிறான். மதியம் அவன்தான் சாப்பாடு கொண்டு வருவான்.  தியாகராஜன் அவனைக்  கேட்காமலே  டிபன் எடுத்துச்  சாப்பிட்டு  கதைசொல்லி சாப்பிட ,மீதி வைத்துவிடுவான். இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள் 

 

பூனைக்கு வளர்த்த மனிதர்களைப் பற்றி அக்கறை இல்லை.  

 

            ஒரு முறை கதைசொல்லி  கை விரித்து விடுகிறான்.  வேறு வழி இல்லாமல் தியாகராஜன். கதைசொல்லியை விட்டுவிட்டு வேறு யார் தயவையோ நாடுகிறான்.  தியாகராஜனின் சுயநலத்தைப் பூனையுடன் ஒப்பிட்டு கதையை முடிக்கிறார். 

            ஒருவருக்குத் தொடர்ந்து உதவி செய்தால் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.  ஆனால் தியாகராஜனோ வேறு மாதிரி இருக்கிறான்.  இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள் என்று ஆர்.வி தன் கதை மூலம் காட்டுகிறார் என்று தோன்றுகிறது.

 

            மூன்றாவது கதை ‘மாயா.’

 

            மாயா என்ற பெண்ணின் கதை. விபரீதமான காதல் கதை.  மாயா மாலிசாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.  மாலி ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை இழந்தவர்.  தனி மனிதனாக வாழ்க்கை நடத்துபவர்.   மாயாவுக்கு அவர் மீது ஈர்ப்பு.  அவள் சென்னையில் ஒரு வேலையை ஏற்றுக்கொள்வதற்காக வருகிறாள். அப்போது மாலி சாரைப் பார்க்கிறாள்.  மாலிசாருக்கு ஆச்சரியம்.  சின்ன வயதில் அவளைப் பார்த்தது.  இப்போதோ மடமடவென்று வளர்ந்து விட்டாள்.  அவர் தனியாகத்தான் இருக்கிறார் என்பதை அறிந்து அவருடன் தங்குகிறாள்.  மாலி அவளுடன் உறவு கொள்ள எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை.  ஆனால் அவள் விரும்பியே அவரைத் தொடும்படி தூண்டுகிறாள்.  பின் வெட்கத்தைவிட்டு அவருடன் ஐக்கியமாகிறாள்.  இவள் குளிக்கும்போது தன்னைத் தவிர யாருமில்லை  என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, மாலி பாத்ரூமிலிருந்து  வெளிப்படுகிறார்.  கதை அப்படித்தான் ஆரம்பிக்கிறது. தன்னை விட 15 வயது ஆணை ஒரு பெண் விரும்புகிற கதை. 

            ஆர்வி  கதையை ஆரம்பிக்கும் போது இப்படி ஆரம்பிக்கிறார். ‘ஒருவரும் இல்லாத வீட்டில், தன்னந்தனியாகக் குளியல் அறையில் நுழைந்து, இஷ்டத்துக்குக் குளிக்கிற சுகத்துக்கு ஈடு, இணை ஏதாவது உண்டா?’

 

            இம்மாதிரியும் நடக்கும் என்பதுதான் கதை.

 

            இந்த மூன்று கதைகளைப் படித்து எழுதி உள்ளேன்.  என் நண்பர் ஐராவதம் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து விமர்சனம் எழுதச் சொன்னால், புத்தகத்தைப் படித்து புத்தகத்திலிருந்து விமர்சனம் எழுதி விடுவார்.  உதாரணமாக 17 ஆம் பக்கத்தில் ஆசிரியர் இப்படி எழுதி உள்ளார் என்று எதாவது ஒரு பாராவை புத்தகத்திலிருந்து குறிப்பிடுவார்.  பிறகு 39 பக்கத்தில் இப்படி எழுதப் பட்டது என்று குறிப்பிடுவார்.  இப்படியே புத்தகம் முழுவதும் படித்து சொல்லி  விடுவார்.  அவர் குறிப்பிடும் பாரா கீழே ஒரு கமண்ட் இருக்கும். 

 

            எனக்கு அவர் புத்தகம் விமர்சனம் செய்யும் முறை சரியா என்பது இன்னும் தெரியவில்லை.

                       ——

Series Navigationஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’பிள்ளை கனியமுதே
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *