நாவல்  தினை       அத்தியாயம்  இருபத்துநான்கு பொ.யு 1900   

This entry is part 6 of 6 in the series 23 ஜூலை 2023

 

’உங்கள் காலப்படகில் ஏற்பட்ட பழுது நீக்குதல் இதுவரை எண்பது விழுக்காடு முடிந்துள்ளது. செலவான பொதுக் காலம் நான்கு மணி நேரம். இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களில் பணி முழுக்க நிறைவேறும்.  இனி அனுப்பப் போகும் வருடம் மாதம் நாள் மணி நிமிடம் வினாடிக்கு உங்கள் கடியாரங்கள் மற்றும் கணினிகளில் காலத்தை நகல் செய்து  கொள்வது அவசியம்’. 

படகின் சுவர் அதிர்ந்து தகவல் உரைத்து ஓய்ந்தது.

’என் கணக்குப்படி ஆறு தனித்தனி நாட்கள் பழுது திருத்தச் செலவாகி உள்ளன. ஆனால் அதைச் சொல்ல முடியாது. அரசுத் தரப்பில் நான்கு மணிநேரம் ஆனதாகச் சொன்னால் நான்கு மணி மட்டும் தான். இது பகல் என்று ராத்திரியை அரசாங்க ஆணை குறிப்பிட்டால், இரவு, பகல் ஆகிவிடும்’. 

குயிலி வானம்பாடியின் மனதோடு பேசினாள்.

கர்ப்பூரய்யன் வீட்டு விவகாரங்களை இன்றோடு முடித்துக் கொள்ளலாமா- வானம்பாடி பேச்சுக் குரலில் கேட்டாள். 

உறங்கி விழித்திருந்த நீலன் வைத்தியர் ”பாவம் அந்தப் பெண்   ஏன் பாடுபடவேண்டும்” என்று பொதுவாகப் பேசினார். ”அந்தப் பெண் என்றால் எந்தப் பெண் அண்ணாரே” எனக் குயிலி கேட்க ”ரெண்டு பேரும்தான்” என்றார் அவர். 

“ஒரு மகிழ்ச்சியான செய்தி. காலப்படகின் உணவு, உடை ஏற்படுத்தித்தரும் அமைப்பு செவ்வனே செயல்படத் தொடங்கிவிட்டது. நான் காலையில் ஒரு இலட்டு உருண்டை நுண்துகள்களிலிருந்து உருவாக்கி வரவழைத்துத் தின்றேன். அருமையான நிறம், வடிவம், பதம். சுவை தான் கொஞ்சம் கம்மி”. குயிலி சொன்னாள். 

குயிலியின் விரலைச் சுவைத்து இனிக்கிறதென்றாள் வானம்பாடி. நீலன் வைத்தியரின் மேல்துண்டில் குயிலி எச்சிலான தன் விரலைத் துடைக்க, ”அம்மாடி நாற்பத்து நூறாண்டில் எச்சில் பத்து பார்க்கிறதே இல்லாமல் போச்சே” என்று கையை விளையாட்டாக ஓங்கினார். 

சிரிப்பும் கொம்மாளியுமாக காலம், நீளம், அகலம், உயரம் தொடர்பான அந்தக் கூறுகள் சற்று மாற்றப்பட பூவுலகுவெளி உற்சாகத்தில் திளைத்தது. சுவையான இலட்டுவம் முதல் கோரிக்கைப்படி உருவானது.

கர்ப்பூரய்யன் வீட்டின் நான்கு பரிமாணங்களையும் கூடச் சற்றே கூறுகள் மாற்றி அலகிட்டார்கள் இரு பெண்களும்.

அங்கேயும் இரண்டு பெண்கள். வேறு இரண்டு பேர். கபிதாளும் பூரணியும். இருவருமே அழுது கொண்டிருந்தார்கள். ஒரே நேரத்தில் நிறுத்தினார்கள்.  

கபிதாள் சொன்னாள் –

பூரணி, நீ சமர்த்துப் பொண்ணு தானே. நீ என்ன பண்றே. சூடா புதுப்பால் காப்பி ஒரு டோஸ் தர்றேன். குடிச்சுட்டு குளி. சருவப்பானையிலே வெதுவெதுன்னு வெந்நீர் போட்டுத் தரேன். 

தினசரி தலை குளிப்பியோன்னா? அரப்புப்பொடி சீவில்லிப்புத்தூர் வாசனைப்பொடி ரெண்டும் வாங்கி வச்சிருக்கு. மொறுமொறுன்னு தேச்சுக் குளி. 

மாத்துப்புடவை கொண்டு வந்திருக்கே இல்லே. இல்லேன்னாலும் பாதகமில்லே. என் மாம்பழப் புதுப்பட்டுப் புடவை தர்றேன். சில்க் இல்லே. அது மாதிரி. 

புதுசா ஜம்பர் நாலு தச்சு வச்சிருக்கேன். துணி வாங்கிக் கொடுத்தேன். கோடியாத்து ராயர்மாமி ரொம்ப நேர்த்தியா வெட்டி ஜம்பர் தச்சுக் கொடுத்திருக்கா. 

நீயும் நானும். பக்கத்துலே வா நீயும் நானும் இந்த விஷயத்துலே காமதேனு தான். அம்பாள் நமக்கு தாராளமா வாரி வழங்கியிருக்காளே மாரிடத்துலே. 

எனக்கு தச்சதை நீ போட்டுண்டு போ. சரியா இருக்கும். அப்புறம் புதுசா வாங்கியானதும் எனக்குத் திரும்பக் கொடுத்துடு. ஞாபகம் இருந்தா.

 இட்டலி, தேங்காய்ச் சட்னி பண்ணியிருக்கேன். சாப்பிட்டு இன்னொரு வாய் பில்டர் காப்பி குடிச்சுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ, இல்லே எங்கேயாவது போகணும், யாரையாவது பார்க்கணும்னா அதைச் செய். 

ஒரு வாரம் பத்து நாள் இங்கே இருந்துக்கோ. ஆட்சேபணை இல்லே. அப்புறம் நேரே சவாரியை விட்டுடு. சரியா? 

நான் எங்காத்துக்காரர்னு ரெண்டு பேர், ரெண்டே பேர் குடும்பம் நடத்தறதா தாலி கட்டி என்னைக் கூட்டிண்டு வந்ததிலேருந்து ஏற்பாடு ரெண்டு பேருக்குத்தான். ரெண்டுன்னு சொன்னேனா, இன்னொண்ணு வந்துண்டிருக்கு. அதை அப்புறம் சொல்றேன். எப்படி இருந்தாலும் நீ மூணாவதா நாலாவதா எல்லாம் இங்கே வர முடியாதேடி பொண்ணே.  

நைச்சியமாக பூரணியை ஒரு வாரம் பத்து நாளில் வெளியே அனுப்ப கபிதாள் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க, கர்ப்பூரமய்யன் ஒரு டபரா டம்ளரில் காப்பி எடுத்து வந்து பூரணிக்குக் கொடுத்துவிட்டுச் சொன்னான் –

இந்தா குடி பூரணி. மீதி எல்லாம் அவ சொன்னபடி. ஆனா எங்கேயும் வெளியே போகவேணாம். நான் பத்து மணிக்கு ரிக்கார்ட் தர்ற மியூசிக் கம்பெனிக்கு, ப்ராட்வேயிலே இருக்கு அது, அங்கே கூட்டிண்டு போறேன். நன்னா நடக்கும் எல்லாம். 

அவன் கபியைப் பார்த்துச் சொன்னது இது – 

கபி, கண்ணைத் தொடச்சிண்டு இன்னொரு ஏடு இட்லி பண்ணிடு. நீ நினைக்கறபடி எல்லாம் இல்லே. பூரணிக்கு இன்னிக்கு ப்ளேட் போடப்போறா. எல்லாம் சரியா ஜெயமா வரணும்னு வேண்டிக்கோ. 

அவள் பதில் சொல்வதற்குள் குற்றாலத் துண்டை நீட்டினான் பூரணியிடம். 

வெந்நீர் எதுக்கு? கிணற்று ஜலம் ஜில்லுனு இருக்கு. ரெண்டு வாளி இரச்சு பக்கெட்டுலே ஊத்தறேன் வா. 

அய்யோ நீங்க எதுக்கு நான் ஸ்நானம் பண்ண ஜலம் பண்ணித் தரணும். 

அவள் பதற்றத்தைப் பார்த்து கபிதாள் சிரித்தாள் – 

போறும்டி அம்மா பிராமணாளாத்து பேச்சை தப்பும் தவறுமா பேச வேண்டாம் கேட்டியா. 

கபிதாள் உள்ளே சமையல்கட்டில் சின்ன விறகு அடுப்பில் கர்ப்பூரத்துக்குச் சுடவைத்த வெந்நீரை பழந்துணி போட்டுக் கைசுடாமல் தூக்கிக்கொண்டு கொல்லைக்குப் போனாள். கூடவே தரையில் கால் பாவாமல் பூரணியும். 

என்ன அழுத்தமடி. சொல்லச் சொல்ல கேட்கமாட்டியா? அவர் என்ன உன்னை வச்சுண்டிருக்காரா? அவர் சொன்னா கொல்லைக்கு ஓடறே சிங்காரமா சிரிச்சிண்டு. நீ என்ன தே. அந்த வார்த்தையைச் சொல்லக்கூட வாய் நடுங்கறது. போடியம்மா. முறைக்கறார் அய்யர். 

உனக்கு கழுவிவிட்டு, பல் தேச்சுவிட்டு, குளிச்சுவிட ரெடியா இருக்கார் எங்காத்துக்காரர். நேபாள மகாராணி பிரேதம் மாதிரி அப்படியே கிட. எல்லா சிஷ்ருசையும் பண்ணிவிடுவார். எனக்கு ஜ்வரம் வந்தபோது கரிசனமா பார்த்துண்டார். இப்போ உனக்கு சகல விதத்திலேயும் அதுக்கு மேலே சேவை சாதிக்கப் போறாராமா? 

கபிதாள் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே போனாள். பூரணி குளித்துத் தலையாற்றிக்கொண்டு சமையல்கட்டில் போய் நின்றாள். 

இது பூஜை அலமாரி இருக்கப்பட்ட கிச்சன். பக்கத்துலே வராதே. 

சொல்லியபடி கபிதாள் ஏற இறங்க அவளைப் பார்த்துவிட்டு ஹாலுக்குப் போய் மர அலமாரியைத் திறந்து எடுத்து வந்து பூரணியிடம் நீட்டியது ஒரு பட்டு ஜம்பரை. 

நீலப் பொடவைக்கு சிவப்பு ரவிக்கை எப்படி சரியா வரும்? இது பாரு கிளிப்பச்சை கொஞ்சறது. எடுத்துக்கோ. போட்டுண்டு போய்ட்டு வாடியம்மா. ராயர்மாமி கிட்டே தைக்கப் போடறபோது உனக்கும் போடறேன். எப்படியாவது உன்கிட்டே அனுப்பிவைக்கறேன். 

இப்போ அவர் சொல்றதை எல்லாம் நம்பிண்டு இருக்காதே. ஆம்பளைகள் எல்லாரும் ஒரே மாதிரி தான். உன்னோட தேக சம்பந்தம் வச்சுண்டாரோ இல்லியோ தெரியாது. அவா நாய் மாதிரி பின்னாலேயே வர்றது அதுக்குத்தான். 

நான் போட்டுக்கோன்னு உனக்கு ஜம்பர் கொடுத்தா அவர் அவுத்துடுன்னு நீ போட்டுண்டதை எடுப்பார். அதான் சிநேகிதத்துக்கும் பொண்ணுவாடை பிடிச்சுண்டு அலையறதுக்கும் வித்யாசம்.

 அவரை நம்பாம நான் சிறுவாடு சேத்து வச்ச பத்து ரூபா இருக்கு. பத்து ரூபாய் முழுசையும் தர்றேன். வாங்கிண்டு உங்க அம்மா அப்பா கிட்டேயே சமர்த்தா, நல்ல பொண்ணாத் திரும்பப் போயிடு. 

அப்பா அம்மா இருக்காளோ? இருப்பா இருப்பா. அப்பா கண்டிப்பு இருக்கப்பட்ட குடும்பம் இல்லையோ. எப்படியோ போகட்டும். என்னமோ உன்னைப் பார்க்கப் பார்க்க அக்கா தங்கை வாத்சல்யம் கூடிண்டே போறது. 

பூரணி, நாலு இட்லிதான் இருக்கு. வீணாக்காம   சாப்பிடு. சட்னி காரமா? இரு ஒரு ஸ்பூன் நெய் குத்தறேன். குரல் இப்படியே பளிச்சுனு வச்சுக்கோ. பாட்டு கேட்க சுநாதமாக இருக்கணும். அப்புறம் ஸ்பஷ்டமா உச்சரிக்கணும். தொண்டை கட்டாமல் பார்த்துக்கணும்.

பூஜை அலமாரிப் பக்கமே வந்து பாடு. கிருஷ்ணனுக்கு உன்னையும் உன் பாட்டையும் கட்டாயம் பிடிக்கும். என்னைத்தான் பிடிக்குமோ தெரியலே. 

எதுக்கு தொத்துக்குட்டி மாதிரி என் பின்னாலேயே வர்றே? சாதம் வடிக்கணும். வெளியிலே கூட்டிண்டு போறாராமே. உன்னைத்தான். சாதம், வாழைக்காய் கறி, சாம்பார் பண்ணிடறேன். காப்பி அடுத்த டோஸ் ஹாலுக்குக் கொண்டுவரேன். 

இன்னும் முப்பது நிமிஷத்துலே ப்ராட்வேக்கு கிளம்பலாம். 

இடுப்பில் குற்றாலத் துண்டைக் கட்டிக் கொண்டு மற்றபடி நக்னனாக வந்து சொன்னான் கர்ப்பூரமய்யன். சரி என்று தலையாட்டுவதற்குள் பூரணிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

கபிதாள் சமையல் அறையிலிருந்து குழம்புக்குக் கடுகு உளுத்தம்பருப்பு  தாளிக்க எடுத்த கரண்டியோடு பூரணி பக்கம் வந்தாள்.

சரியான நெஞ்சழுத்தமடி. இங்கே ஒருத்தி பைத்தாரியா வாய் ஓயாமல் பேசிண்டே இருக்கா போடி சரிதான்னு டூர் விட்டாச்சு. நம்மாத்து மனுஷன் கண்ட கருமாந்திர வாடை எல்லாம் முகர்ந்து சொர்க்கம் அதுதான்னு பின்னாலே ஓடினா அவ கூட வராமல் என்ன பண்ணுவா. ப்ராட்வேக்கு கூட்டிண்டு போறாராமா? இந்த பிராமணன் என்னை கூப்பிடு தூரத்திலே கோவிலுக்குக்கூட கூட்டிண்டு போனதில்லே.

போ போ எங்கே போவே. நீ மட்டுமில்லே, அந்த பொசை கட்ட அய்யன் கூட இங்கே தான் ராத்திரி ஒதுங்க வருவான். அப்போ வச்சுக்கறேன்.

 ரிகார்ட் தரணுமா? எப்படியும் ஒரு வாரமாயிடுமே. மெஷின் வச்சு தொண்டையை நெரிச்சு பாட்டு வரவழைக்கறாளாம். 

ஒரு வாரம் பத்து நாள் ஒரு பொருட்டு இல்லே. நீ எங்காத்துலே தங்கிக்கோ. அதுக்கு அப்புறமும் இருப்பேன்னா சங்கடம் தான்.

 சொன்னேனா. எனக்கு வேறே. பக்கத்திலே வாடி. வெக்கமா இருக்கு. மூணு மாசம் பிரசவம் உறுதியாயிருக்கு. அடுத்த வருஷம் நீ பாடிப் பணம் சம்பாதிச்சு   வீடு, கார் எல்லாம் வாங்கி அமோகமா இருக்கறச்சே இங்கே வந்தா பாப்பா தொட்டில்லே தூங்கிண்டிருக்கும் நீ எடுத்தா முகத்திலே மூச்சா போய்வைக்கும். அம்மா சிநேகிதி ஆச்சே.

 நீ சிநேகிதி தான். சக்களத்தி இல்லே. 

இன்னிக்கு புதனோடு அடுத்த புதன் எட்டு நாள். இரு. ரிகார்ட் வேலை முடிச்சுக்கோ. வீடு பாத்து குடி போய்க்கோ. போகவர இரு. ஆனா இங்கேயே இருக்கறது சரிப்படாது. 

கபிதாள் வாய் ஓயாமல் பேசியதை ஒரு ஐந்து பத்து நிமிடம் நிறுத்தி இட்டலி தின்றாள். 

சட்னி காரம் தான்.  மூக்கை உறிஞ்சிக் கொண்டு பூரணியும் கர்ப்பூரமும் விழுத்துப் போட்ட   துணிகளைத் துவைக்கக் கிணற்றடி துவைக்கும் கல்லுக்கு எடுத்துப் போனாள் கபிதாள். 

வெய்யில் ஏறுவதற்குள் ப்ராட்வே போகலாம் என்று பூரணியைக் கூட்டிக்கொண்டு ட்ராம் பிடிக்க வேகமாக திருவல்லிக்கேணி டெர்மினஸுக்கு நடந்தான் கர்ப்பூரமய்யன். 

பூரணி ரெண்டு பக்கமும் விரியும் மதராஸ் பட்டணத்தின் வசீகரம் எல்லாம் பார்த்தபடி, பரபரப்பையும் சகலவிதமான சத்தத்தையும் அனுபவித்தபடி மெதுவாக நடந்தாள். 

அவள் மனமெல்லாம் சொந்த ஊரில் சொந்த வீட்டில் இருந்தது. தயா மாதிரி ஒரு தம்பி கிடைக்கக் கொடுத்து வைக்கவேண்டும்.

நேற்று   பாசஞ்சரில் பட்டணம் வர எல்லா உதவியும் அவன் தான் செய்தான். 

ராத்திரி ஒன்பது மணிக்கு ரயில். நாய்க்குரைப்பு ஓய்ந்த கிராமத் தெருவில் சாய வேட்டியும் முண்டாசுமாக இரண்டு தெலுங்கு பேசும் பிரதேசத்து நாட்டு யாத்ரீகர்கள் அவசரமாக ரயிலைப் பிடிக்க ஓட்டமும் நடையுமாக ஓடினார்கள். 

ஒரு யாத்ரிகன் தலையில் பச்சை நிற ட்ரங்க் பெட்டியைச் சுமந்திருந்தான். ரயில்வே ஸ்டேஷன் போய்ச் சேரும் முன்பு அதில் ஒரு யாத்ரிகன் வேலிகாத்தான் புதர் மறைவில் ஜாக்கிரதையாகப் போய் வேட்டி சட்டையைக் களைந்து புடவை ஜம்பர் உடுத்திய பூரணி ஆனாள். 

பார்த்துப் போய்ட்டு பத்திரமா வா அக்கா. 

தயா கண்ணில் பெருக்கிட்ட கண்ணீரை அடக்க முயன்று தோற்றபோது ரயில் வந்து நின்றது. அவன் சாப்பிட்டானோ?

நேற்றுப் பகலில் அம்மா பூரணிக்குப் பிடிக்கும் என்று நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு செய்திருந்தாள். ராகிக் களியும் கருவாடுமாக பசியாறக் கூப்பிட்டபோது பூரணி களியை மட்டும் சாப்பிட்டு கருவாட்டை முற்றுமாக விலக்கினாள். 

அம்மா இந்த கருவாடு கண்றாவி எல்லாம் இனிமே வேணாம் எனக்கு. இதைத் தின்னுட்டு பாடினா குரல் கம்மிப் போவுது. சுத்தபத்தமா மிளகுக் குழம்பு, வத்தல்குழம்பு இப்படி பண்ணிக் கொடேன். 

அம்மா அவளை புதுசாக வேறே உலகத்துக்குப் போய்வந்த மாதிரி ஆச்சரியமாகப் பார்த்துவிட்டுப் போனாள். ராத்திரி சாப்பாட்டுக்கு பூரணி சொன்னபடி சாயந்திரமே ஒரே ஒரு ஊத்தப்பம் வெங்காயம் கூடப் போடாமல் செய்து கொடுத்தாள். 

ரெண்டு சுடறேண்டி என்று அம்மா வாத்சல்யத்தோடு சொல்ல, ரெண்டு வேணாம், ஒண்ணே ஒண்ணு வார்த்தா போறும் என்று மறுத்து விட்டாள். வார்க்கிறதும் போறும் வார்த்தைப் பிரயோகமும் தானே பேச்சில் ஏறிவிட்டது.

அம்மா அழுதிருப்பாள். பூரணியை ஓடுகாலி-யில் ஆரம்பித்து அப்பா புத்தி அப்படியே இருக்கு என்று பூரணி அறியாத அவள் அப்பாரை நினைவு கூர்ந்து இரண்டு பேருக்கும் வசவு பகிர்ந்திருப்பாள். 

என் குழந்தே தனியா எங்கேடி போயிட்டே. உலகம் கெட்டுக் கிடக்கு. பத்திரமா வந்து சேரு. எப்போ வருவேடி? அழுதிருப்பாள்.

ரஞ்சிதம் சித்தி அவளை கடைத்தெரு அழ பெரி சுப்பிரமணியன் செட்டியாருக்கு கூத்தியாளாக ஆக்க திட்டமிட்டது தோல்வியில் முடிந்ததை எண்ணியும் அழுதிருப்பாள். 

அறுபது வயது கரடி போல கையில் பொசுபொசு முடியோடு  நிஜார் தெரிய வேட்டி மடித்துக் கட்டி நடக்கிற அழ பெரிக்கு தொடுப்பானால் பலசரக்குக்கு மாதாமாதம் கவலையில்லை என்று மாதா போட்ட திட்டம் அது. ரஞ்சிதம் உதவியில்.

என்றாலும் அம்மா சர்வாதிகாரம் பண்ணக் கூடியவள் இல்லை. செட்டியார் தொடுப்பு வேணாமா சரி, கருவாட்டுக் குழம்பு செய்யணுமா வச்சுத்தரேன். அது வேணாமா? ஊத்தப்பம் சுடட்டா? வார்க்கணுமா? சரி. எங்கேடி போய்ட்டே கண்ணு. அம்மா அழுவாள்.

இனிமேல் அம்மாவை, தயாவை எப்போது பார்க்கப் போகிறேனோ. அவள் நினைக்கும்போதே துக்கம் குமுறி மேலே  வந்து குமிழிட்டது.

முன்னால் போன கர்ப்பூரய்யன் திரும்பிப் பார்த்துப் பின்னால் வந்து அவள் கையைப் பற்றி சீக்கிரம் வா என்று அழைத்துப் போக, ஆணும் பெண்ணும் கையோடு கை சேர்த்து நடக்கும் உலக அதிசயத்தைக் கண்ணுற்ற பட்டணவாசிகள் ஊரு கெட்டுப் போச்சு, கலி வந்தாச்சு, பாந்தமா ரொம்ப நல்லா இருக்குது இந்த ஜதை, கல்யாணம் ஆச்சோ என்னவோ எனப் பல வகையிலும் கருத்து தெரிவிக்கவில்லை. இது பட்டிணமாச்சே. இவர்கள் ட்ராம் ஏறி ப்ராட்வேக்கு வந்து சேர்ந்தார்கள். 

பெரிய கட்டிடத்தின் தரைப் பகுதியில் ரோல்ட் கோல்ட் நகைக்கடையும், மிட்டாய்க்கடையும், பாத்திரக்கடையும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்க, பகவத் ரெகார்டிங் கம்பெனி மேலே முதல் மாடியில் இருப்பதாக அம்புக்குறி போட்ட அறிவிப்புப் பலகை சொன்னது. 

வாதாபி கணபதிம் தெரியுமா குட்டிக்கு? குட்டி. சந்தனப் பொட்டும் தாடியுமாக பட்டை ப்ரேம் மூக்குக் கண்ணாடியோடு பகவத் ரிகார்டிங்கில் காத்திருந்தவனைப் பார்த்ததுமே மலையாளி என்று தெரிந்து விட்டது.  

இப்போது பதினெட்டு வயசுக்காரி பூரணி குட்டியாக கர்ப்பூரமய்யன் அவள் மதுரைக்காரி என்பதை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னதோடு வாதாபி கணபதிம் மட்டுமில்லை, சாமஜ வர கமனாவும் கரதலப்பாடம் என்றும் இன்னம் நாட்டையில் கணபதி வழிபாட்டுப் பாடல்வரை தெரியும் என்று பூரணியைக் கைகாட்ட அவள் ஹிந்தோளத்தைக் கம்பீரமான யானை நடையாக்கினாள்.   

ஃபோனோகிராம் மின்சார உயிர் பெற்று உய்யென்று விசிலடித்தது. நன்கானி என்று உள்ளே பார்த்துக் கூப்பிட்டார் குட்டியைப் பாடத் தயாராக இருக்கச் சொன்ன கருணாகரன். கண்ணாடிச் சுவர் ஒன்று புலப்பட திரை ஓன்று ஓரமாக இழுக்கப்பட்டது.  சுவருக்கு அந்தப்பக்கம் ஃபுல் சூட் அணிந்த குள்ளமான ஒருத்தர் சுவிட்சைப் போட, வாக்ஸ் மாடல் ஆன் என்று அங்கே இருந்து சத்தமாகச் சொன்னது கேட்டது. 

பூரணிக்கு முன்னால் நாய்க்குடைக் காளான் போல் ஒரு பித்தளை நந்தியாவட்டைப் பூ, பூரணி நல்லா அந்தக் காளான் பூ உள்ளே முகவாய்க்கட்டை இருக்கணும். அங்கே இருட்டுக்குளே பார்த்துக்கிட்டு முடிஞ்ச அளவு சத்தமா மன்னார் வந்தாரே பாண்டிய மன்னார் வந்தாரே பாடு இது டெஸ்ட் தான் ஆனாலும் மெழுகு சிலிண்டர்லே ரிகார்ட் ஆவார் நீ பாடிக் கூப்பிட்ட மன்னார். வி கோ த்ரி டூ ஒன் கோ.   

பாடி முடித்து பதிவு ரொம்ப பிரமாதமாகப் பாடியிருக்காள் பூரணி என்று கை உயர்த்தினார்கள் கம்பெனியார்.   

நன்கானி எனப்பட்ட ஊசிக் கோடுகள் நிறைந்த கால்சராயும் கோட்டும் அணிந்த கனவான் கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கம் அடுத்த இரண்டு மணி நேரம் மெனக்கெட,  இஞ்சி தேநீர்,  சுக்கு காஃபி, பக்கோடா, பிஸ்கட், கடலை என்று தீனி வந்த மணியமாக இருந்தது.

  திடீரென்று உள்ளே இருந்து கணீரென்று பூரணி முதலில் பாடிய சாமஜ வர கமனாவும் மன்னார் வந்தாரேயும் ஒலிக்க நன்கானி வெளியே வந்து பூரணி கன்னத்தில் முத்தமிட்டு நீ என் பேத்தி வயசு நல்லா இரும்மா அவ மாதிரி அல்பாயுசிலே போயிடாதே என்று உத்தரவிட்டு விட்டு மறுபடி கண்ணாடிச் சுவர்கள் அமைந்த அவருடைய  பாதுகாப்பான கோட்டைக்குள் போய்விட்டார். 

அடுத்து மடமடவென்று பல பாடகிகளும் பாடகர்களும் பாடிப் பிரபலமாக்கிய பாடல்களும் பூரணி குரலில் சுழலும் மெழுகு உருளையில் அதிர்ந்து கோடு கிறுக்கிப் போக, அழுத்தமாகப் பதிந்தன.

 மொத்தம் பத்து பாட்டு இன்றும் நாளையும் ஐந்து ஐந்தாகப் பதிவாக முடிவானது. 

கருணாகரன் ஒரு வெள்ளித் தட்டில் இருநூற்று ஒரு ரூபாயும் வெற்றிலை பாக்கும், ரொம்பக் கனிந்த மலைவாழைப் பழமும் வைத்து பூரணியிடம் கொடுத்து எடுத்துக்கோ குட்டி இது யட்வான்ஸ் என்றார்.

அட்வான்ஸ் தர்றார் எடுத்துக்கோ என்றான் கர்ப்பூரமய்யன் சந்தோஷத்தோடு. இது இங்கே பாடறதுக்கு அட்வான்ஸ் மட்டுமில்லை. வேறே எந்தக் கம்பெனியிலேயும் பாடக் கூடாது. அதுக்கான தடையும் தான். நன்கானி வெளியே வந்தபடி சொன்னார்.

ராத்திரி ஏழு மணிக்கு பகவத் ரிகார்டிங் கம்பெனியின் இருண்ட மாடிப் படியில் இறங்க பூரணி தடுமாற, அவள் கையை இறுகப் பற்றியபடி கர்ப்பூரய்யன் சொன்னான் – கதர்க்கொடி கப்பல் கோணுதே இல்லே நாளைக்கு ரிகார்டிங்க்லே சரியா பாடணும் கதர்க்கொடி கப்பல் காணுதே. 

இருட்டில் அவளை முத்தமிட்டான். பூரணி அவன் கையைப் பற்ற சுவாசம் முட்ட இறுக்கி அணைத்து விலக்கி நடந்தான் கர்ப்பூரய்யன். 

பாம்பே இனிப்புக்கடையில் அரை வீசை ஹல்வாவும் காரசேவுவும் பக்கத்தில் பத்து முழம் மல்லிகைப் பூவும் வாங்கிக் கொண்டாள் பூரணி. ஒரு ரவிக்கைத்துணி கபிதாள் அக்காவுக்கு வாங்கிடலாம் என்று உற்சாகமாக காத்தாயி சில்க்ஸ் படியேறினாள் பூரணி. குட்டிக்கு நாளெ மேடிச்சுத் தராம் என்றான் கர்ப்பூரமய்யன்.

 குட்டிக்கு இப்போ வேணும்.   பிடிவாதம் பிடித்தாள் பூரணி. நாளைக்கு வாங்கலாமடி. கர்ப்பூரய்யன் அவள் பக்கம் நெருங்கி நடந்தபடி சொன்னான். வாங்கலாமடி. வாங்க லா மடி. அவள் பிரித்து மனதில் சொல்லிச் சிரித்தாள்.

குட்டி எந்தினு புஞ்சிரிக்குன்னது?

அவள் ஒன்றுமில்லை என்றபடி நடந்தாள்.

இந்தப் பத்துப் பாட்டும் அடுத்த மாசம் விற்பனைக்கு வரும்போது பூர்ணா தாஸ். என்ன பார்க்கிறே நீ தான். பூர்ணா தாஸ் பாட்டு பத்தி மெட்றாஸ் ப்ரசிடெண்ஸியே பேசப் போறது. 

அவன் தெருவில் போன சாரட் வண்டியின் மங்கலான பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் தொலைவில் கண்நட்டுச் சொன்னான்.  மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த ட்ராமைக் கைகாட்ட, ஆச்சரியகரமாக அது நின்றது. 

கல்பூரம் இங்கே என்னடா பண்றே? 

ட்ராம் கண்டக்டர் பச்சை என்ற பச்சையப்பன் நிறுத்தி ஏற்றிக் கொண்டு போனான். திருவல்லிக்கேணியில் பத்து பேரில் எட்டுப்பேர் கர்ப்பூரத்துக்கு சிநேகிதம். சிநேகிதன் என்பதால் மட்டுமில்லை, கர்ப்பூரய்யனோடு அழகான இளம் பெண் ஒருத்தி கூட வருவது சம்பந்தமான தகவல் எல்லாம் பச்சைக்கு வேண்டியிருந்தது. 

அக்கா மகள் ஹைதராபாத்திலே இருந்து வந்திருக்கா என்று கர்ப்பூரம் சொல்ல, அவன் ஒரு சிரிப்பு மூலம் எவ்வளவு நம்பினான் என்று தெரியப்படுத்தி, எம்டன் என்று பேச்சை மாற்றினான். 

ஒன்பதரை மணிக்கு வீட்டு வாசலேறும்போது உள்ளே ஊஞ்சலில் படுத்தபடி நித்திரை போயிருந்த கபிதாள் கனவில் குயிலியையும், வானம்பாடியையும் சந்தித்ததாக நினைத்தபடிக்கு அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள். 

நீலன் வைத்தியர் என்ற அந்த மூத்த வைத்தியக் கவிஞரோடும் உரையாடுவதாகக் கனவு கண்டதாக அவள் நினைத்தது கனவில்லை என்று அவளுக்குப் புரியாது. 

வானம்பாடி, கபிதாளை விளையாட்டாக  அவர்களின் நாற்பரிமாணக் கூறுகளுக்குப் பொருத்தி பிரக்ஞை தெளிவித்ததை குயிலி  கண்டித்தாள்.

  ஏண்டி கழுதே, இந்தப் பொண்ணு ஏற்கனவே பலகீனமாக இருக்கப்பட்டவள்.      நம்ம கூறுகளுக்கு மாத்தி என்ன விளையாட்டு?  

அங்கே பாரு கபிதாள் எழுந்து வரா. வானம்பாடி சொன்னபடி ஊஞ்சலில் உட்கார, கபிதாள் வா பொண்ணே இப்பத்தான் வழி தெரிஞ்சுதா என்று அவளோடு கை பின்னிக் கொண்டு கேட்டாள்.

குயிலி அவசரமாக  கபிதாள் மனதில் சொன்னாள் –

பூரணி கிட்டே  ஜாக்கிரதையா இரு. வராந்தா தேள் புதைபூமி பற்றியும். எல்லாத் தேளும்  அங்கே இருக்கு. சிகப்பு. கருப்பு தேள். சிநேகிதத் தேள்னு ஒண்ணு இல்லே. சந்தர்ப்பம் கிடைச்சா எல்லாம் கொட்டும். 

பூரணி அப்படித்தான். உனக்கு நல்லது நேர்வா எப்பவும். நாளைக்கே கர்ப்பூரய்யன் அக்குள் வியர்வை இவ தோள்லே படற மாதிரி நின்னா அவனோட ரமிக்காமல் இருக்க மாட்டா. 

இங்கே ரெண்டு பேரும் விலகி விலகி நின்னு பேசறா சரி வேறே எங்கேயாவது சேர்ந்து  இருந்தது தெரியுமோ. 

பூரணி இனி பாடற ஒவ்வொரு வரியும் அவளுக்குக் காசு கொண்டு வரும். இந்தக் காசு மழை முடியற வரை கர்ப்பூரமய்யனை உபயோகிச்சுப்பா. உன்னையும் தான்.

எல்லோரும் தேள்தான். அழகான தேள்னு இருக்கா என்ன? கொட்டாத தேள்தான் இருக்கா?

முழுக்கப் பேசி மூச்சு வாங்கி நிறுத்தினாள் குயிலி. கபிதாள் விசும்பினாள்.

 சரியாகச் சொல்றே குயிலி. இந்த மனுஷனுக்கு போதம் கெட்டுப் போச்சு. அவளோடயே அலைஞ்சு திரியறார். தேக சம்பந்தம் இருக்கா  தெரியலே. 

அவ மூலம் சாதிச்சுக் காட்டணும்னு பேராசை எங்களவருக்கு. நான் இனிமே பாடி பெயர் வாங்கி ப்ளேட் கட்டு பண்ணறதுக்கு ஐம்பது வருஷமாயிடும். நானும் கிழவியாயிடுவேன்.  

அவள் அப்பாவியாகச் சொல்ல, அப்படி இல்லே கபி, என்ன இருந்தாலும் அவள் பொண்ணு, அவர் ஆண். பக்கத்துலே பக்கத்துலே வச்சுண்டு பாகவதம் படிச்சாலும் ஒரு நிமிஷத்திலே அது சிருங்கார சதகமாயிடும் பார்த்துக்கோ. 

சரியாகச் சொன்னே குயிலி சரியாத்தான் சொன்னே.ஆமா நான் இப்போ கனவு கண்டுண்டிருக்கேனா இல்லே நிஜமா உங்களோட பேசறேனா? 

குயிலி அவளை வழக்கமான பரிமாணங்களுக்கு மாற்ற கபிதாள் எழுந்து உட்கார்ந்தாள். மெல்ல ஊஞ்சலை ஆட்டியபடி பாகவதம் படிச்சாலும் என்று பாதி சொல்லி நிறுத்திப் பூர்த்தி செய்ய சொல்லைத் தேடினாள். 

பகவத் ரிகார்டிங்தான் கபி, அங்கே தான் பாட்டு பதிவு எல்லாம் என்று தொடர்ந்தாள் பூரணி. அடுத்த நிமிடம் அங்கே அலாதியான அமைதி சூழ்ந்தது.

காலையிலே இருந்து ராத்திரி வரைக்கும் இவளோட அலைய முடியறது. ஞாபகம் இருக்கோ இன்னிக்கு காரடையான் நோம்பு?

 ஏது ஆத்துக்காரி தனியா இருக்கா. டைபாய்ட்லே கிடந்த உடம்பு. சரடு எடுத்துக் கொடுக்கணும், நோம்பு அடை பண்ண இட்லி கொப்பரையிலே பரத்த வைக்கோல் தேடி வாங்கிண்டு வந்து தரணும். இப்படி ஒரு கரிசனம் கிடையாதா? 

சொப்பனத்துலே வந்தாலும் சரியாகத்தான் சொன்னா. உங்ககிட்டே அதிஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். வந்ததும் ஊஞ்சல்லே உட்காரணுமா? 

கை கால் அலம்பிண்டு வாடி. நீங்களும்தான். நோம்பு அடை, வெண்ணெய் எல்லாம் பண்ணி வச்சிருக்கேன். அம்மிணிக் கொழக்கட்டையும் குட்டி குட்டியா பண்ணியிருக்கேன். சாப்பிடுவியோடி?

குட்டி எல்லாம் தின்னும் என்று வாய்வரை வந்ததை நிறுத்திக்கொண்டான் கர்ப்பூரமய்யன்.  

 இல்லே வெளியிலே காசிப்பாட்டி ஓட்டலா என்னமோ எங்க உத்தமதானபுரம் மாமா சொல்வாரே அங்கே போய்க் கொட்டிண்டு வந்துட்டேளா ரெண்டு பேரும். 

 ஹரிக்கேன் விளக்கை எடுத்துண்டு போடி கொல்லைக்கு. நீ வேணாம். கீழே போட்டுடுவே. அய்யர்வாள், ஏன்னா அவளுக்கு கொல்லைக்குப்  போக வழிகாட்டுங்கோ.  அப்படி பிருஷ்டத்தை தாங்கி கொல்லைக்கு கொண்டு போய்விட்டு எல்லாம் உபசாரம் பண்ணனும்னு இருக்கு. நீ அழறியா சிரிக்கறியாடி? 

என்னடா இவ ஒரு நிமிஷம் மல்லிப்பூ மாதிரி மெத்துனு வாசனையா இருக்கா. அடுத்த நிமிஷம் கருந்தேள் மாதிரி விழுந்து கொட்டறா. இவ எப்படியானவள்னு யோசிக்கறியா? நான் என்ன பண்ண? 

மனசுலே ஒண்ணுமில்லே. நாக்குலே தேவலோகத்துலே இருந்து யாராவது வந்தா வார்த்தை நல்லதா வரும். ராட்சசி வந்துட்டா விழுந்து புடுங்கிடுறதுதான். நீ லட்சியம் பண்ணாதே. 

பண்ணினா இம்புட்டு தூரம் வந்திருப்பியா தனியா என்ன? ராத்திரி பதினோறு மணிக்கு அம்பாரமா சமையல் பாத்திரம் கிடக்கு. தேய்ச்சுட்டு வரேன் என்று கபிதாள் உட்கார, கர்ப்பூரமய்யன் அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி படுக்கை அறையில் விட்டுச் சொன்னான் –

 பாத்திரம் எல்லாம் நாளைக்கு தேய்க்கலாம் நான் செஞ்சு தரேன். மலைப்பனி படிஞ்சு மீண்ட சரீரம். உறங்குடி. 

அடுத்த பத்தாம் நிமிடத்தில் அவள் அசந்து உறங்க கற்பூரமய்யன் வீட்டில் பக்கத்து வீட்டுப் பசு தர்மம் எட்டிப் பார்த்தது. 

மெல்ல ஹாலுக்கு வந்து பூரணி அருகில் படுத்துக் கொண்டான். அரை மணி நேரத்தில் கபிதாள் தண்ணீர் குடிக்க சமையல்கட்டுக்குப் போகும்போது அவர்கள் மும்முரமாக முயங்கி இருந்ததைக் கண்டு தனக்குள் சிரித்தபடி படுக்கை அறைக்குள் நுழைந்தாள். 

பத்து நிமிடம் படுத்து ஹால் ஓரமாக வாசல் திண்ணைக்குப் போய் ஓடுகள் பிரிந்திருந்த இடத்தில் கைவிடப் போனாள். குயிலி அவளுக்கு அமைத்து வைத்திருந்த அபாய அறிவிப்பு மணி மெல்ல அதிர வானம்பாடியும் அவளும் எழுந்து கூறு திருத்தி கபிதாளின் உலகில் வந்தார்கள். 

அவர்கள் கண்ணில் முதலில் பட்டது –

கர்ப்பூரமய்யனும் பூரணியும் அணைத்தபடி உறவில் ஈடுபட்டுச் சுகித்த மான்கள் போல அசந்து உறங்கிக் கிடந்தார்கள்.  பூரணி பக்கத்தில் கிடந்த போர்வையை எடுத்து இருவரையும் போர்த்தினாள் கபிதாள்.  

கபிதாள் படுக்கை அறைக்கு மெல்லத் திரும்பி கனவு தொடர்வதாக நினைத்து நனவும் கனவுமாகப் பின்னியிருக்கக் கிடந்தாள். தேள்களின் உலகும் அதே நாற்பரிமாணக் கூறுகளில் தான் என்று குயிலி சொன்னது புரியாமல் அசை போட்டபடி செருப்பைத் தேடி எடுத்து அணிந்து கொண்டு நீலன் வைத்தியரும் அவர்களோடு நடந்தார். 

தேள் வளைக்குள் இருந்த தேள்களை எல்லாம் வெளியே வரச் சொன்னாள் குயிலி. வந்தவை மொத்தம் 17. செந்தேள் 9. கருந்தேள் 8. உள்ளே இன்னும் இருப்பவை செந்தேள்களுக்கும் கருந்தேள்களுக்கும் ஏற்பட்ட போரில் காயமடைந்தவை 3 – இவை வர்ண பேதமின்றி கணக்கில் வராதவையாகக் கருதப்படும். கொடுக்கை அவசரமாக அசைத்து ஒரு செந்தேள் குயிலிக்குப் பதில் சொல்லியது. 

அப்படி என்றால் இந்தப் பதினேழு தேள்களும் ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் சேர்ந்தும் ஒரு உறுதிமொழி தரவேண்டும். கபிதாள் என்ற இந்த ஸ்திரியை உயிர் நீங்கும்படி கொட்டாமல் இருக்க உறுதிமொழி. 

வானம்பாடி குயிலியோடு மனதில் பேசினாள் – 

நீ அறியாதவள் அல்ல. காலக்கோட்டை மாற்றி கபியின் உயிரை நீட்டிப்பது செய்யக்கூடாதது. நாம் வெறும் பார்வையாளர்கள். 

அது எப்படி நாம் ஒன்றும் செய்யக் கூடாது? கண்ணுக்கு முன் ஒரு பரிதாபமான நிகழ்ச்சி நடக்கும்போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா என்று கேட்டார் புதியதாக உரையாடலில் கலந்து கொண்டு நீலன் வைத்தியர். 

அண்ணாரே நீர் ஒன்றும் பேசாமல் இரும். இது உமக்கு அப்புறம் சாவகாசமாக விளக்குகிறேன். இதெல்லாம் நடந்து விட்டது. நாம் அந்தக் காலத்துக்குப் போயிருக்கிறோம். அவ்வளவுதான். 

வானம்பாடி சொல்ல தேள்கள் குயிலியிடம் வாக்குறுதி கொடுத்தன – 

இந்தப் பெண் கபிதாளை நாங்கள் உயிரிழக்கச் செய்ய மாட்டோம்.

 குயிலி வானம்பாடியை எப்படி நான் ஜெயித்தேன் பார் என்று மனதில் பெருமை பாராட்டிவிட்டு  போகலாம் வா என்றாள். 

பத்தே நிமிடம் தான்.கபிதா முழு விழிப்போடு தேள்வளைக்கு அருகில் நின்று உள்ளே கைவிடப் போனாள். வேண்டாம் என்று தோன்றியது. ஒரு காப்பி குடித்து விட்டு யோசிக்கலாம். 

கர்ப்பூரமய்யன் கூடத்தில் நின்றபடி நான் தூக்கத்திலே நடக்கறேன். கக்கூஸ் போகணும்னு ஹாலுக்கு வந்துட்டேன் என்று முணுமுணுத்தபடி பின்னால் நடந்தான்.

 பூரணி அவசரமாக எழுந்து நின்று கபிதாளைப் பார்க்க, வா ஒரு காப்பி குடிக்கலாம் என்று அவளை அழைத்தபடி சமையல்கட்டுக்குப் போனாள் கபிதாள். உடல் அசுத்தமாக இருக்க, குளிக்காமல் எப்படி காப்பி குடிக்க?  

அக்கா நான் சுத்தமா இல்லே. குளிச்சுட்டு வரேன் என்றபடி பின்னால் கிணற்றடிக்கு ஓடினாள். கிணற்றில் சாடினாள் பூரணி.

காப்பி குடித்து விட்டுத் தேள்வளையில் கைவிட்டாள் கபிதாள். கணக்கில் வராத, தேள் யுத்தத்தில் காயம் பட்ட மூன்று மூத்த தேள்களும் போகம் அனுபவிக்கும் சுகத்தோடு அவள் புறங்கையில் கொட்டின. அவள் இறந்து போனாள். வயிற்றிலிருந்த கருவும் அசைவு நீங்கியது.

 கர்ப்பூரமய்யனைக் காணவில்லை அந்த இரவு விடிந்தது முதல். குயிலியும் வானம்பாடியும் கூறு மாற்றுதல் தவறு காரணமோ என்னமோ அவன் கண்ணில் பட்டார்கள்.

குயிலியம்மா, வானப்பாடீ கபியை ஒருத்தரும் பூரணாவை இன்னொருத்தரும் காப்பாத்துங்க; இல்லே சேர்ந்து அவங்களைப் பிழைக்க வையுங்க. உங்களாலே முடியும். காப்பாத்துங்க ப்ளீஸ்.

நீலன் வைத்தியர் காலப்படகில் ஏறியபோது கூடவே அவனும் சாடி உள்ளே புகுந்தான். அலகு மாற்றப்பட்டு காலப்படகுப் பயணியரோடு அவனும் தெரியாத காலத்துக்குப் புறப்பட்டான். படகு சீராக இயங்கத் தொடங்கியது.                                         தொடரும்            

Series Navigationவலசையில் அழுகை
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *