நாவல்  தினை       அத்தியாயம் முப்பத்தொன்பது  பொ.யு 5000

This entry is part 1 of 3 in the series 12 நவம்பர் 2023

  

நீலன் வைத்தியர் நடு ராத்திரிக்கு எழுந்தார். பேய் உறங்கும் நேரம் அது. 

இவர் அசல் நீலன். காஸ்மாஸ் பிரபஞ்சத்தின் அங்கமான நம் புவியுலகின்  ஒரே நீலன் வைத்தியர் இவர்தான். இவரை போலி செய்து அண்மையில் இறந்துபோனவர் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்து பிரதி நீலன். கசாப்புக் கடைக்காரராக இங்கே வந்து ராசியான வைத்தியராகப் பரபரப்பாக நடமாடுகிறவர் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து பிரதி நீலன். 

ஆல்ட் க்யூ பிரதி நீலனுக்கு, அசல் நீலன் உயிரோடு இருப்பது தெரியாது. அவருக்கு மட்டுமில்லை. பெருந்தேளரசனுக்கும் கர்ப்பூரத்துக்கும் கூட. 

இந்த ரெண்டு பேரும் மற்ற பிரபஞ்சங்களில் இன்னும் பிறக்கவில்லை.  

நீலன் வைத்தியர், அதாவது அசல் நீலன், நார்த்தங்காய்ச் சாறில் இஞ்சி பிழிந்து வெல்லம் கலந்து வைத்திருந்த காய்கறி ரசத்தைக் குடுவையோடு எடுத்தார். அது சஞ்சீவனி இல்லை.அவரை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பானம். 

குளிரக்குளிர குளிர்ந்த சுனை நீர் கலந்தோ, ஒரு நிமிடம் அடுப்பில் ஏற்றிச் சூடு படுத்தியோ அதைப் பருகலாம். இப்போது உறக்கத்தையும் வென்று இரவு முழுவதும் கண்ணுறங்காமல் சஞ்சீவனியை சோதனை செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார். 

சஞ்சீவனிக்கு மாற்று மருந்தை முதலில் தேவைக்கு அதிகமாகவே              உண்டாக்கி வைத்திருப்பது கணிசமாக இருக்கிறதா என்று பார்த்தார். இன்னும் ஒரு வாரத்துக்கு வரும் மாற்று மருந்து கைவசம் உண்டு என்று கண்டு திருப்தியடைந்தார்.

 அவருடைய சோதனை எலிகள் எதுவும் கிடையாது. நேரடியாக மனித குல ஆண்கள் மற்றும் பெண்கள் சஞ்சீவனியை உருவாக்க  உருவாக்கப் பருகி அவரவர் உடலில், நினைப்பில், மனதில் என்ன தோன்றுகிறது என்பதைப் பாதுகாப்பாகப் பதிந்து வைக்க வேண்டும். 

போன முறை நீலன் வைத்தியர் சஞ்சீவனி உண்டாக்கி அதை சோதனை செய்யக் குறைந்தது முப்பது பேர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டார்கள். நல்ல சாப்பாடு, உறக்கம், சும்மா கிடத்தல், மருந்து குடிக்கத் தவிர வேறே வேலை இல்லை இப்படி எல்லாம் நன்றாக நடந்துவர பத்துபேர் மருந்து அதிகமாகிப் போயோ என்னவோ பறக்க ஆரம்பித்து விட்டார்கள். 

எல்லோருக்கும் கிடைக்கிற நல்லதிருஷ்டமா என்ன பறப்பது? நடப்பவர்கள் மேலும் ஓடும் வாகனங்கள் மேலும் மோதாமல் காற்று சுத்தமாக இருக்கும் வெளியில் மனதில் நேரிசை வெண்பா யாப்பின்படி புனைந்துகொண்டு பறந்து போக எத்தனை பேருக்கு வாய்க்கும்? 

பறந்து பறந்து காணாமல் ஒன்றும்  போகவில்லை அவர்கள். சிறு பறத்தல், இறங்குதல், உண்ணுதல், சஞ்சீவனி குடித்தல் கூடவே தெருவில் கண்டோர் மரியாதையோடு நின்று வழிபட்டு அகல, சகலப் பெருமையோடும் பறப்பது. எத்தனை பேருக்கு வாய்க்கும் இது?

பறந்தார்கள் என்று சேதி கேட்டதுமே சஞ்சீவனி சிசீ என்று அத்தனை நாள் உழைப்பையும் புறங்கையால் தள்ளிவிட்டார்கள். அப்போது கிளம்பியதுதான் இந்தப் பெண்களோடு காலப் பயணம். 

நீலன் அண்ணாரே, தெம்பாக ஆளுக்கொரு கோப்பை காப்பி குடித்து விட்டு சுறுசுறுப்பாகத் தொடங்குவோமா என்று தலையைச் சொரிந்தபடி விசாரித்தாள் குயிலி. எந்த நூற்றாண்டிலும் தலை சொரிந்து துயில் எழாத பெண்மணியுண்டோ என நீலன் தனக்குள் வியந்தார். 

காப்பியா, அதெல்லாம் நீ கொடுத்தியே என்று ஒரு கோப்பை பருகிவிட்டு தலை சுற்றிக் கிடந்தேனே, அதற்கு அப்புறம் காப்பியைத் தொடக்கூடாது என்று தீர்மானம் செய்துவிட்டேன். உன்னோடு இருந்து ஏதாவது பருகி ஆகவேண்டும் என்றால் தேநீர் ஒரு கோப்பை அருந்த நான் தயார். 

நீர் கொதிக்க வைக்கப்பட்டது. இஞ்சியும் ஏலக்காயும் சேர்த்து கலுவத்தில் இடிக்கப்பட்டது. கலுவத்துக்கு மருந்து இடிப்பது தவிர இப்படி தேநீருக்கு இஞ்சியும் சுக்கும் இடிப்பதும் பெரும்பயன் தான். வைத்தியர் வீடு என்பதால் கலுவம் இருக்கிறது. வைத்தியர் அல்லாதவர்கள் கலுவத்துக்கு எங்கே போவார்கள்?  நல்ல இஞ்சி சேர்த்த தேநீர் வேண்டுமென்றால் கலுவம் வாங்கித்தான் ஆக வேண்டும் அவர்களும். 

ஏலம், இஞ்சி இடித்தது வென்னீரில் சேர்க்கப்பட்டு தேயிலையோடு கொதிக்க வைத்து வடிகட்டப்பட்டது. பசுவின் பால் வேண்டுமே என்று சொல்லியபடி வானம்பாடி சமையலறைக்குள் தலை சொறிந்தபடி வந்தாள். அவள் கன்னத்தில் வருடிய குயிலிக்கு பசுக் கன்றுக்குட்டி போல கன்னம் காட்டியபடி வானம்பாடி நின்றிருக்க, எடி கழுதே, உன் கிட்டே இருந்துதான் தேளரசிலே ஆண்பெண் பேதமில்லாமல் எல்லோருக்கும் தலையில் ஈறும் பேனும் பரவி, தலையைத் தட்டினால் உதுருது என்று வானம்பாடி கன்னத்தில் ஊர்ந்த பேனை விரலில் எடுத்து சுவரில் நசுக்கி கை அலம்பி வந்தாள் குயிலி. 

செக் லிஸ்ட் சரி பார்த்து விடலாமா? குயிலி கேட்டாள். சரி என்று தலையாட்டினார் நீலன்.

குயிலி தன் உள்ளங்கையில் பதித்த பயோ கம்ப்யூட்டரில் பார்த்து ஒவ்வொன்றாகக் கேட்க, நீலன் ஆமென்று பதில் சொன்னார் –

இட்லி சட்னி காப்பி டீ வாழைப்பழம் இஞ்சிச்சாறு கரிங்ஙாலி வெள்ளம் புளியிஞ்சி அலாரம் என்று ஒரு பட்டியல் – 

எல்லாவற்றுக்கும் இருக்கிறது என்று மறுமொழி சொன்னார் நீலன். அது முடிந்து அடுத்த பட்டியலில் வந்த மருந்து விளைவுகள்- உறக்கம் கண் உறங்காமை பசி பசிக்கு இனிப்பு புளிப்பு உரைப்பு துவர்ப்பு உண்ணுதல் பசியின்மை உடல்விழைதல் பறத்தல் கால் மரத்தல் இருளில் பார்த்தல் நீந்துதல் குரல் இழத்தல் உரக்கப் பேசுதல் நகைத்தல் எரிந்து விழுவது கூறில்லாத அன்பு காட்டுதல் முரட்டுத்தனம் செய்யுள் உரையாடல் வேறு மொழி உரையாடல் கூறியது கூறல் என்றும் இன்னமும் அந்தப் பட்டியலில் நிகழ்வுகள்  பட்டியலிடப்பட்டிருந்தன. 

பட்டியலை நீலன் மற்றும் வானம்பாடியின் உள்ளங்கைக்கு பிரதி செய்த குயிலி தொடங்கலாமா என்று கேட்டாள். கடவுள் வணக்கம் செய்து விட்டுத் தொடங்கலாமென்று கண்மூடிப் பிரார்த்தித்திருந்தார் நீலன். 

அந்த இரண்டு பெண்களும் அவருக்கு மரியாதை காட்டக் கண் மூடி நின்றிருந்தார்கள். குயிலி, வானம்பாடி முதல் பெரியபடி சஞ்சீவனி காய்ச்சி சமையலறையில் வச்சிருக்கு போய் எடுத்து வாங்க என்று குரலில் இன்னும் வழிபாட்டுத் தன்மை மிச்சமிருக்கத் தழைந்து சொன்னார் நீலன். 

குயிலியும் வானம்பாடியும் சமையலறை சென்று சஞ்சீவனி நிரப்பிய பளபளவென்று துலக்கப்பட்ட ஸ்டெயின்லெஸ் பாத்திரங்களை ஜாக்கிரதையாக சிறு ட்ராலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். 

அவர்களுக்காக இரண்டு நாற்காலிகள் போட்டு வைக்கப் பட்டிருந்தன. குயிலிக்கும் வானம்பாடிக்கும் ஆளுக்கொரு சிறு குவளை சாதாரணமான வெப்பத்தில் இருந்த சஞ்சீவனி நல்கினார் நீலன். 

பானகம் போல இளம் சிறப்பு  நிறத்தில் குவளைகளில் நுரைத்துக் கொண்டிருந்தது சஞ்சீவனி. ஆளுக்கு ஒரு மடக்கு பருகியதும் இரண்டு பேரும் ஐந்து நிமிடம் மௌனமாக இருந்தார்கள். 

அப்போது வாசலில் சத்தம். மின்சார மணி ஒலிக்காமல் மென்மையாகக் கதவை யாரோ தட்டினார்கள். 

குயிலி போய்க் கதவைத் திறக்க குழலன் நின்று கொண்டிருந்தான். 

உனக்கு எதுக்கு கதவைத் தட்டறதும் காலிங் பெல் அடிக்கறதும். ஷேப் ஷிப்டர். சுவரைக்கூட ஊடுருவி உள்ளே வந்துடுவே என்று குயிலி அவனுக்குக் கை குலுக்கக் கை கொடுத்தபடி கேட்டாள். 

ஏற்கனவே நீலன் பெரிசு, உள்ளங்கை பயோ கம்ப்யூட்டர், தலை தனி உடல் தனி இருப்பு இப்படிப் பார்த்து மிரண்டிருக்கார். இப்போ சுவரைப் பிளந்துக்கிட்டு சிம்மம் வெளிவருகிற மாதிரி   வேறே வரணும்னா அவர் பத்திரமாக வீடு திரும்ப வேணாமா? 

கேட்டபடியே தடதடவென்று உள்ளே போனவன் நீலன் வைத்தியர் காலைத் தொட்டு வணங்கித் தன் கண்ணில் ஒற்றிக்கொண்டான். குயிலியும் வானம்பாடியும் ஒருவரை ஒருவர் பார்த்து பொருள் பொதிந்த சிரிப்பைப் பரமாறிக் கொண்டிருந்தார்கள். 

என்ன அசல் சஞ்சீவனி டெஸ்டிங்கா? அடக்கமாக அழகாக நேர்த்தியாக இங்கே அசல் வைத்தியர் அசல் சஞ்சீவனி அசல் சோதனை. அங்கே நகல் வைத்தியர், நான் சொல்லி அவர் எதையோ செய்ய எதுவோ வேறே மாதிரி சமாசாரம் வந்து சேரலாச்சு போ. இருபதாம் நூற்றாண்டில் திடீர்னு வயாக்ரா நீல மாத்திரை, நீலன் இல்லே, நீல ப்லூ கேப்ஸ்யுல் உருவாக்கி உலகமே குறி விடர்த்தி அலைந்தது நினைவு வருது. நடக்கட்டும் எப்படி போகுதுன்னு பார்க்கலாம் 

சொல்லியபடி உட்கார்ந்தான் குழலன். 

என்னை விட்டுடுங்கப்பா. கொண்டு போய் என் காலத்துலே விட்டுடுங்க. அப்புறம் இந்தப் பக்கமே வர மாட்டேன். 

நீலன் குரல் தழுதழுக்கக் கிட்டத்தட்டக் கெஞ்ச ஆரம்பித்தார். 

நீலன் ஐயா அடுத்த வாரம் இந்த சஞ்சீவனி பரிசோதனை முடிஞ்சதும் நீங்களும் ஊரைப் பார்க்கக் கிளம்ப வேண்டியதுதான் என்றபடி குயிலியைப் பார்த்தான். 

சரி உங்களுக்கு இந்த ரெண்டு பிசாசும் பொண்ணுங்க டெஸ்ட் பண்றது எல்லாம் சரிதான். ஆம்பளை டிக்கெட் யார் வாங்குவாங்க? 

நானே அப்புறம் உக்கார்ந்து சோதனை செய்வேன் என்றார் நீலன் வைத்தியர். 

வேண்டாம் நீங்க பறந்துட்டா? 

நான் சஞ்சீவனி குடிச்சிருக்கேன். அதிக சிறுநீர் கழிச்சது தவிர வேறே ஒண்ணும் குறிப்பிட்டுச் சொல்லுவதாக நடக்கலே என்றார் நீலன். மலச்சிக்கல் ஏற்பட்டது என்றும் நினைவு வந்தது. அசங்கியமானது என்று சொல்லத் தவிர்த்து விட்டார் அவர். 

அப்போ நீங்க என் சோதனைக்கு மருந்து தரணும் பாரபட்சமில்லாத பரிசோதனை உங்களுக்கு கிடைக்கும். அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குயிலி  குழலனை நெருங்கி நின்று சிரித்தாள். வானம்பாடி உள்ளிருந்து வந்து குயிலியை இழுத்து நீ வாடி என் ராஜாத்தி என்று அணைத்துக் கொண்டாள். 

ஆக தெரிந்தோ தெரியாமலோ சகல இன சஞ்சீவனியின் முக்கிய குணாதிசயம் அசல் சஞ்சீவனியில் ஏற்கனவே உண்டு என்று புரிகிறது என்றான் குயிலியின் கையை விலக்கிக்கொண்டு குழலன். 

நீலன் உடனே மாற்று மருந்தான அசஞ்சீவினி ஆளுக்கு ஒரு சிறு கரண்டி புகட்ட அவர்கள் இயல்பானார்கள். என்றால் அவர்கள் சேர்ந்து கூவினார்கள் – அண்ணாரே ரொம்ப பசிக்கிறது. சோறு தாருங்கள். 

குழலன் சமையலறையில் எட்டிப் பார்த்து நீலரைப் பார்த்துச் சிரித்தான். ஒரு இருபது பேர் சௌகரியமாக உண்பதற்கான அரிசிச் சோறும் புளிக்குழம்பும் இங்கே ரெண்டே பேருக்கு சாப்பிட வைத்துக் காலியாகப் போகிறது என்றபடி வெளியே வந்து அசஞ்சீவனி என்ற மாற்று மருந்தை குயிலிக்கும் வானம்பாடிக்கும் ஆளுக்கொரு மிடறு புகட்டினார். 

நான் சோறுதான் உண்பேன் என்று அடம் பிடிக்கலானாள் குயிலி. வானம்பாடி தரையில் உருண்டு சோறும் லட்டும் என்ற வினோதக் கலவையைக் கேட்டு அழுதாள். 

குழலன் நீலன் கையில் பிரதிபலித்த பட்டியலில் சஞ்சீவனி விளைவு பகுதியை ஊரித் திறந்து சஞ்சீவனி பருகினால் வயது கூடுகிறதா வயது குறைகிறதா என்ற இரண்டு கேள்விகளைச் சேர்த்தான். 

குறைகிறது என்ற கேள்விக்கு ஆம் என்று மறுமொழி இறுத்து நீலனின் உள்ளங்கை பயோ கம்ப்யூட்டரில் பதிந்தான் அவன். 

நீலன் அண்ணார் பயோ கம்ப்யூட்டர் பழகிட்டார். திரும்ப சங்ககாலத்துக்குப் போய் ஓலைச் சுவடியோட போராடறது கஷ்டம் தான். பேசாமல் இங்கேயே இருந்துடலாமே என்றான். 

வானம்பாடி குழலனின் கையைப் பற்றிக்கொண்டு கமர்கட் தின்னலாமா என்று கண்சிமிட்டினாள். வாங்கி வச்சிருக்கேனே என்று நீலன் அலமாரியில் இருந்து எடுத்த்துதர வானம்பாடி கை தரை கழுத்தெல்லாம் எச்சிலாக்கிக் கொண்டு கமர்கெட் உண்டபடி சிரித்தாள். குழலனைப் பார்த்தார் வைத்தியர் நீலன். 

வேறென்ன, அசஞ்சீவினிதான். நீலன் குழலனையே அரை தேக்கரண்டி புகட்டச் சொன்னார். அப்படியே நீங்களும் ஒரு தேக்கரண்டி சஞ்சீவனி பருகுங்கள் என்றார். 

இருபதாம் நூற்றாண்டு தொலைக்காட்சி விளம்பரங்களில் தாயன்போடு வைடமின் டானிக்கள் விளம்பரப்படுத்தப்பட்ட மாதிரி. 

நீலனிடம் குழலன் சொன்னான் –ரெண்டாயிரம் ஆண்டுக்கு ஒரு தடவை நம் கிரகம் பழையதாகிறது புதியதாகிறது. 

அது இருக்கட்டும் இங்கே பாருங்க அண்ணாரே. பின்னால் குழலியின் குரல். அவள் பறந்து கொண்டிருந்தாள். நீலன் கண்ணை மூடிக் கொண்டிருந்தார். அவரது விழிகளிலிருந்து கரகரவென்று கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. 

இந்த முறையும் நான் சஞ்சீவனி மருந்தாக்கத்தில் தோற்றுத்தான் போனேன் என்றார் குழலனிடம். 

நான் இறங்கிப் போய் யார் கண்ணிலும் படாமல் அலைந்து திரிந்து அப்படியே காலம் முடித்துக் கொள்கிறேன். குயிலி வாசல் கதவைத் திற அம்மா. 

குயிலி தரையில் குதித்து நீலரை இறுகக் கட்டிக் கொண்டாள்.

 அண்ணாரே உம்மைப் பகடி செய்யத்தான் பறந்தேன். இந்த ஆற்றல் தற்காலிகமாக எனக்கும் வானம்பாடிக்கும் பெருந்தேளர்  எம்மைத் துகளாக்கி, மரபணு மாற்றம் செய்து பறக்க வைத்தது நாங்கள் இருவரும் உம்மை அழைத்துப்போக வந்ததற்கு சற்று முன் தான். (மேலும்)

 குறிஞ்சி நிலம் காண வந்தபோது சீனராக வந்தவர் மேல் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை எப்படியும் யாரென்று  கண்டுபிடிக்க என்னைத் தாசி நாறும்வல்லிக்குத் தோழி ஆக்கினார். (மேலும்)

 இருட்டில் நறும்வல்லி  குழலனோடு உறவு கொள்ள முற்படும் முன்பு அவனுக்கு வலிப்பு வந்து விட்டது. அந்தக் கலவரத்தில் சீனன், சீனனாக வந்த குழலன் தப்பிவிட்டான் (மேலும்)

அடுத்த நாள் குறிஞ்சியில் தேன் தினை உணவில் சீனராக வந்த குழலனுக்கு வேதியியல் பொருளைத் தேளர் சொன்னபடி கலந்தோம் நானும் வானம்பாடியும்.  ஒன்றும் ஆகவில்லை. (மேலும்)

தேளர் எட்டடி பாய்ந்தால் சீனன் பதினாறு அடி பாய்கிறான் மந்திர தந்திரம் தெரிந்த நிஜமான சீனனாகத் தான் இருப்பான் (மேலும்)

அவனால் சீனத்து தேசத்தில் தொல்லை இருக்கலாம் இங்கே அவன் வாலைச் சுருட்டி வைத்துக்கொள்கிறான் என்று தேளர் அவனை கண்காணிப்பில் இருந்து விலக்கினார். (குயிலி உரைத்தது நிறைவு)

ஓ இவ்வளவு எழுதாக் கதையுண்டா என்று சிரித்தான் குழலன். 

அப்புறம் தான் நீ குழலன் என்று பட்டுத்துணி விற்பவனாகவும், பல் மருத்துவனாகவும் வந்து எங்களிடம் பரிச்சயப்படுத்திக் கொண்டாயே. 

வானம்பாடி அவன் கையைப் பற்றி முத்தமிட்டாள். 

அடப்பாவி உங்க சீன விளையாட்டுக்கு என் பல் தான் கிடைத்ததா? சிரித்துக் கொண்டே பிடுங்கி சிரிக்க சிரிக்க நான் காசு கொடுத்து எல்லாப் பல்லையும் வேணுமானாலும் பிடுங்கு சிரித்துக் கொண்டே தருகிறேன் என்று நான் தாராளம் காட்டியது ஏமாந்த காரணத்தாலா? 

நீலன் வாயைத் திறந்து சிரிக்க, பாலம் போட்டு புதுப்பல்லைப் பதித்து விடலாம் நீலரே நீர் உம் காலத்துக்குப் போகும்போது தலையில் வழுக்கை போய் அடர்த்தியான முடி, கண்ணைச் சுற்றிச் சுருக்கம் இல்லாமை, பல் எல்லாம் வெற்றிலைக் கறையின்றி முத்துப் பல் (மேலும்)

குயிலி வானி சற்று அப்படிப் போங்கள். ஆண்களுக்கு மட்டுமான பேச்சு (மேலும்), 

நீலரே குறி இன்னும் நீண்ட பௌருஷம் என்று உம் அரசருக்குக் கூட வாய்க்காத உடம்பு, தெருவுக்கு வராத வளர்ப்பு  சுவானனைப் போல் நீண்ட நேர போகம் வாய்க்கப் பெறுவீர்.  

குழலன் உரைத்தான் நீலனிடம். 

அப்படி இன்னொருத்தனாக நான் போனால் எனக்கே நான் யாரென்று நம்பிக்கை வராது எதிரில் வருகிறவன் எப்படி நம்புவான் வேணாம் இப்படி அரைக் கிழவோனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். 

நீலன் சொல்லியபோதே பெரிய சத்தத்தோடு குழலன் கீழே விழுந்தான். தரையில் அவன் உடல் வால் அறுந்த பல்லி போல் தனியாகத் துடித்துக் கொண்டிருந்தது. அருகில் தலை பதற்றமின்றி நோக்கிக் கொண்டிருந்தது. 

நீலன் அவசரமாக குயிலியிடம் சொன்னார் –அவனுக்கு   இந்த சீசாவில் இருந்து மருந்து எடுத்துக் கொடு என்று ஒரு பச்சை சீசாவை குப்பாயத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

 சஞ்சீவனி முழு வீரியத்தோடு அளிக்கப்பட்ட சில சோதனையாளர்களுக்கு வலிப்பு ஏற்பட வழி உண்டு என்று நான் செய்முறை படிக்கும்போது ஒரு பாதி வரியில் வந்ததைப் படித்த நினைவு இருக்கிறது; அதை நீக்க சஞ்சீவனி, அசஞ்சீவனி கலந்த மாற்று மருந்து இது. 

குழலன், ’குயிலி பார்த்து எனக்கு மருந்து கொடு. தலைக்கு சற்றுத்தள்ளி உடல் துடிக்கிறது’ என்றான். 

வானம்பாடி அவசரமாகக் கோழிப் பறத்தல் பறந்து குழலன் தலையை அவன் உடலை நோக்கி இறுகப் பற்றி இழுக்க அது வழுக்கிக் கொண்டு சுவரில் மோதியது. 

அவன் வலியால் துடித்து வானம்பாடியை மெல்ல உடலைத் தலையை நோக்கி நகர்த்தச் சொன்னான். 

இப்போது உடல் தலைப் பக்கம் நகர மாட்டேன் என்று அடம் பிடித்தது.

 குயிலி வானம்பாடிக்கு உதவிட அவளிடம் பறந்தாள். இரண்டு பேரும் ஒருத்தி குழலன் உடலையும் மற்றவள் அவன் தலையையும் எடுத்துக்கொண்டு நெருங்க கைவிட்டு கையில் பிடித்த தலையோ உடலோ போய்விடக் கூடும் என்று அவசரமாக நெருக்கித் தலையை அவன் உடலை நோக்கி இறுகப் பற்றி இழுக்க அது வழுக்கிக் கொண்டு சுவரில் மோதியது. 

 ஒருத்தி குழலன் உடலையும் மற்றவள் அவன் தலையையும் எடுத்துக்கொண்டு நெருங்க கைவிட்டு கையில் பிடித்த தலையோ உடலோ போய்விடக் கூடும் என்று அவசரமாக நெருக்கித் தலையை  ஒரு வினாடி உடலோடு இறுக்க அவை ஒன்றாயின. 

கவனித்துப் பார்த்த வானம்பாடி ஓவென்று அலறினாள். தலை பின்னால் திரும்பிக் கொண்டிருந்ததே காரணம். 

ஐயோ அப்படியே மாட்டிக் கொள்ளுமே எடுத்து விட்டுத் திரும்பப் பொருத்துங்கள் என்று இலக்கணமாகக் கேவி அழுதான் குழலன். பெருந்துன்பம் நேரும்போது அவன் புத்தியிலும் வாயிலும் வழுவில்லாத இலக்கணம் வந்தமர்ந்து விடும் போல. 

நீலன் வேறே வழியே இல்லை என்றபடி குப்பாயத்தில் இருந்து சஞ்சீவனி – அசஞ்சீவனி கலவை மருந்தை எடுத்து தன் கால்களுக்கு நடுவே அம்மா குழந்தைக்கு இருமல் மருந்து கொடுப்பதுபோல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு குழலன் தலை வேணாம் வேணாம் என்று ஓலமிட மருந்து புகட்டினார். 

கரகரகரவென்று தலை திரும்பி உடலோடு சரியாகப் பொருத்திக் கொண்டதைக் கண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சி. 

தடதடவென்று  வாசல் கதவைத் தட்டும் சத்தம். வாசலில் நின்றிருந்த ரோந்து காவலர்கள் கண்ணில் குழலியும் வானம்பாடியும் மட்டும்தான் தெரிந்தார்கள். 

என்ன ரெண்டு ஆபீசர்களுக்கும் ஓடிப் பிடிச்சு விளையாட நடுராத்திரிக்குத்தான் மூடு வருதா என்று கேட்டவள் மற்றப் பெண் காவலரிடம் போகலாம் என்று கண்காட்டினாள். 

நீலன் அவர்கள் தலை மறைந்ததும் சஞ்சீவனியில் தேவையான மாற்றங்களைச் செய்து முடித்தார். 

என் சகோதரா, சகோதரிகளே சஞ்சீவனி வெற்றிகரமாகப் பருகி ஆயுள் நீண்டவர்களின் சிறு பட்டியல் உங்களிடமிருந்து நீள்கிறது. வேறு யாரெல்லாம் இந்தப் பட்டியலில் உண்டு என்று பின்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். நான் எப்போது என் காலத்துக்குத் திரும்பலாம் என்று சொல்லுங்கள் என்றார். 

இன்னும் இரண்டே நாளில் உங்கள் பயணம் தொடங்கலாம். குழலி தன் கழுத்தைத் தடவியபடி சொன்னாள். தலை அரித்தது. அது இருந்தது.

(தொடரும்)

Series Navigationகனடா ‘கிராமத்து வதனம்’ முன்னெடுத்த நவராத்திரி விழா
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *