ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 8

This entry is part 4 of 6 in the series 17 டிசம்பர் 2023

( 8 )

வணக்கம்ங்கய்யா….-கை கூப்பிச் சொல்லியவாறே ஒருவர் உள்ளே நுழைவதைப் பார்த்து பதில் வணக்கம் சொன்னான் இவன்.

ஐயா…கீழுத்து கிராமத்துலேர்ந்து வர்றேனுங்க…பக்கத்து வெங்கிமலைல ரெண்டு நாளா சரியான மழைங்க…

நின்றுகொண்டே சொன்ன அவரை, முதல்ல உட்காருங்க….என்றான் இவன்.

இருக்கட்டுங்கய்யா…என்றவாறே பேச்சைத் தொடர்ந்தார் அவர்.

இந்த அலுவலகத்திற்கு வந்த நாள் முதல் கவனித்துக் கொண்டுதான் வருகிறான். வருகிறவர்கள் கிராமத்து மக்கள். ரொம்பவும் பயந்தவர்களாயும், மரியாதை கொண்டவர்களாயும், இருக்கிறார்கள். பொது ஜனம் அலுவலகங்களை அணுகும்போது அவர்களுக்கு ஏனிந்தத் தயக்கம்? எதற்காக இந்த பயம்? முதலில் இதைப் போக்க வேண்டும். முறையோடும், தயக்கத்தோடும் விசாரிப்பதிலும்கூட கேட்கலாமோ, கூடாதோ என்பதான அச்சம் நிலவுவதாய்த் தோன்றியது.

மறுபடியும் இவன் வற்புறுத்த, தயக்கத்தோடு நுனியில் அமர்ந்தார் அவர்.

ரெண்டு நாளா பெய்த மழையிலே மண் அரிப்பு அதிகமா ஏற்பட்டுப் போச்சுங்க…

மலைச் சரிவுல மண்ணோட திரண்டு வந்த வெள்ளம் எங்க பயிரையெல்லாம் அழிச்சிடுச்சிங்க…வீடுக இடிஞ்சி போயிடுச்சிங்கய்யா…குடிபடை ரோட்டுல நிக்குதுங்கய்யா…சாவடில ஒண்டியிருக்கு…அய்யாதான் பார்த்து ஏதாச்சும் செய்யணும்ங்கய்யா…-சொல்லியவாறே அவர் நீட்டிய மனுவை வாங்கிப் படித்தான் இவன். வாயால் சொன்னதை எழுத்தாய்க் கொண்டுவர முடியாத அவர்களின் மன ஓலம் – பலரது கையெழுத்தும், கைநாட்டுமாய் அதில் பிரதிபலித்தது. இதே நிலைமையை விவரித்து மாவட்டக் கலெக்டருக்கும் மனுக்கொடுத்திருப்பதாய்ச் சொன்னார் பெரியவர். அவரது முழு முகவரியைக் கேட்டு எழுதிக் கொண்டான் இவன்.

நாளைக்கு அந்த இடத்துக்கு எங்க ஆபீஸ்லேர்ந்து இன்ஜினியர்கள் வருவாங்க…சாவடில இருங்க…இடத்தைப் பார்த்துட்டு வேணுங்கிறதைச் செய்வாங்க…என்றான்.

ரொம்பச் சந்தோஷமுங்க…ஏழைப்பட்ட சனம்…கருணை வச்சு செய்தீங்கன்னா புண்ணியமாப் போகும்… – சொல்லி வணங்கிவிட்டுப் புறப்பட்டார் அவர்.

எவ்வளவு நம்பிக்கையோடு வந்து போகிறார்கள்? – ஏக்கப் பெருமூச்சு கிளர்ந்தது இவனிடம். அந்தச் சேதப் பகுதிகளுக்கு யார் பிரிவு அலுவலர் என்பதைக் குறித்து வைத்துக் கொண்டான் இவன். அவருக்கு ஒரு மேற்குறிப்புக் கடிதத்தை அந்த மனுவின் கீழேயே எழுதினான். அந்த இன்ஜினியரிடம் கொடுத்து கையொப்பம் பெற்றுவரக் கோரினான். நினைத்தபடியே பிரச்னை வரத்தான் செய்தது. அந்த

இன்ஜினியரிடம் கொடுத்து கையொப்பம் பெற்றுவரக் கோரினான். நினைத்தபடியே பிரச்னை வரத்தான் செய்தது. அந்த மனுவை உடனே சம்பந்தப்பட்டவரின் பார்வைக்குக் கொண்டு போக வேண்டியது அவனது கடமை. அதை அவன் செய்தான். ஆனால் நடந்ததா? ஈகோ பிரச்னை எங்கேதான் இல்லை? பரவலாகப் பரந்துபட்டு, செழிப்பாக வளர்ந்து, புதர்மண்டிக் கிடக்கிறது.

ஐயா, அவர் இப்ப இதைப் பார்க்க மாட்டாராம். பாஸ் வந்து அவர் தபால் பார்த்தப்புறம்தான் இவர் பார்ப்பாராம்….

பாஸ்தான் தபால் ஸ்டேஜ்லயே கம்யூனிகேட் பண்ணனும்னு சொல்லியிருக்கார்னு சொல்ல வேண்டிதானே?

சொல்லிட்டேங்கய்யா…அதுக்குள்ளேயும் என்ன அவசரம் பொத்துக்கிட்டு வருதுங்கிறாரு….ரொம்பச் சங்கட்டமா இருக்குங்கய்யா அவுரு பேசுறது…. – சொல்லிவிட்டு மனுவை டேபிள்மீது வைத்துவிட்டு விலகிக் கொண்டார் லட்சுமணன்.

இம்மாதிரிப் பொது மக்களின் மனுக்களுக்கெல்லாம் உடனுக்குடன் நடவடிக்கை தேவை என்று முனைப்பாகச் செயல்பட்டாலும், அதனை உணர்ந்து நிறைவேற்றத் தயாரில்லை. நாளை பதவி உயர்வில் அதிகாரியாக உட்காரப் போகும் எண்ணம்…! அப்பொழுது அலுவலகம் தனக்குக் கீழ்தானே என்கிற கர்வமான நினைப்பு. நாளைக்கு நானும் அப்பாவாகப் போறவன்தானே என்று இன்று தந்தையை முறையற்று எதிர்த்து நிற்க முடியுமா? வீட்டிற்கு அடங்காமல் திரிய முடியுமா? அந்தந்தப் பக்குவம் அந்தந்த வயது நிலையில் கிடைக்கப் பெறும்போது அதற்கான முழுத் தகுதியோடு நிற்க வேண்டாமா? வெறும் கல்வித் தகுதி மட்டுமே இன்றே எல்லாத் தகுதிகளையும் கொடுத்து விடுமா? இன்றைய எனது பதவி இது.. இதற்கான பணி இது. மேலாளர் அனுப்பும் குறிப்புகளை அலுவலரின் சார்பாக ஏற்று, அதன்படி செயல்படுதல்…அவ்வளவுதானே…நான் எது செய்தாலும் அலுவலரின் சார்பாகத்தானே செய்கிறேன்…அதை ஏன் நான் செய்வதாக நினைக்க வேண்டும்? என்னே மனநிலை இது? அலுவலகத்திலிருந்து ஒரு தபால் வருகிறது. அதில் சொல்லியிருப்பது அலுவலரால் சொல்லப்பட்டதாகப் பொருள். அதன்படி செயல்படுதல் என் கடமை என்ற தேர்ந்த தீர்க்கமான மனநிலையை இவர்கள் கற்ற கல்வி கற்றுக் கொடுக்கவில்லையா? ஒரு அலுவலகம் இந்த மாதிரிச் சிந்தனைகளிலே இயங்கினால், அங்கே மக்களுக்கான பணி எப்படி செவ்வனே நிறைவேறும்?

தான் முகாமில் இருப்பதால் செய்ய வேண்டிய அவசர, அவசியப் பணிகள் தடைபட்டுவிடக் கூடாது என்பதால்தானே இந்த அலுவலக நடைமுறை. அதை அதிகாரியின் கட்டளை என்று ஏன் எடுத்துக் கொள்ள மனம் தயங்குகிறது? எல்லோரும் சேர்ந்து அவரவர் பணியைச் சரியாகச் செய்துதானே அலுவலகம் என்கிற தேரை இழுத்துச் செல்ல முடியும்? இதில் நான், நீ என்கிற பிரச்னைகள் எப்படி முளைத்தன? ஏன் முளைத்தன? மனிதர்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் பிரச்னைகள் இப்படித் தோன்றிக்கொண்டேதான் இருக்குமா? அதற்கு ஒரு முடிவே கிடையாதா?

தன் கடமையைப் பொறுப்பாக உணர்ந்தவனுக்கு எந்த ஆணையின்பாற்பட்ட உந்துதலும் தேவையில்லை என்பதுதானே நிஜம். மனசாட்சி ஒன்றே போதுமானது என்று தோன்றியது இவனுக்கு. ஆனாலும் அன்றாட அலுவலக நடைமுறைகளே இப்படிக் கேட்பாரற்று அறுத்துக்கொண்டு போனால்…?

அந்த அலுவலகத்தில் இன்னும் என்னெல்லாம் பிரச்னைகள் முளைக்கக் கூடும் என்பதை பணியாற்றும் அலுவலக தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோரின் நாடி பிடித்துப் பார்த்து, ஒரு புதிய எழுச்சிக்குத் தான் தயாராக வேண்டும் என்பதாக கணேசனின் எண்ணங்கள் ஓட ஆரம்பித்திருந்தன. தன்னால் சமாளிக்க முடியுமா? என்கிற மெல்லிய பய உணர்ச்சி மனதின் மூலையில் தோன்ற ஆரம்பித்திருப்பதை லேசாய் உணர ஆரம்பித்தான் கணேசன்.

ரொம்ப பயங்கரமான ஆபீசாச்சே சார்…பூரா மல முழங்கிகளாச்சே…எவனும் சொன்ன பேச்சுக் கேட்கமாட்டானுங்களே…!உங்களால சமாளிக்க முடியுமா பார்த்துக்குங்க…முடிலன்னா லீவப் போட்ருங்க…நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க சார்…போறதா, வேண்டாமான்னு…? – தன் மீது அக்கறையுள்ள சிலர் கூறிய கருத்தான வார்த்தைகள், இப்போது வலிய ஞாபகத்துக்கு வந்தன.

பதவி உயர்வு வேண்டாம், இருக்கும் கௌரவம் போதும், உள்ளூரிலேயே இருங்க, ஐநூறு, ஆயிரம் குறைந்தாலும் பரவாயில்லை…மன நிம்மதிதான் முக்கியம, காசு பெரிசில்லை…. என்று சுசீலா நிறைய, தன்னிடம் அழுத்தமாக எடுத்துச் சொல்லியும், தான் கேட்காமல் கிளம்பி வந்ததை இப்போது நினைத்துக் கொண்டான் கணேசன்.

கண்ணையும் கருத்தையும் மூடிக் கொண்டு அவள் பேச்சைக் கேட்டிருக்கலாமோ என்ற ஏனோ மனதிற்குத் தோன்றி அவனைக் கலங்கடித்தது.

( முற்றும் )

Series Navigationநாவல்  தினை              அத்தியாயம் நாற்பத்துநாலு பொ.யு 5000அதுவே போதும் 
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *