This entry is part 1 of 2 in the series 25 மே 2025

உப்பு, புளி,மிளகாய்.  (கவிதை)

எஞ்சி நின்ற 

நாலு வார்த்தைகளும் 

வெளியேறிவிட்டன. 

கதவிடுக்கில் 

மாட்டிக்கொண்ட 

வாழ்க்கை 

உப்பு புளி மிளகாய் 

எதார்த்தத்தை 

பதார்த்த மொழியில் பேசின. 

காலாற 

நடந்து சென்று 

காட்டைக்காண முடியவில்லை. 

தொலைந்துப்போன 

வில்லைத்தேடி 

அர்ச்சுனர்களும் 

அழவில்லை. 

ஆகாயத்தை 

அண்ணாந்துப்பார்க்க 

அடுப்பங்கரை விடவில்லை. 

பெருங்காய டப்பாவில் 

எந்த கவிதையை தேட.

ஒளவைக்கு என்னமோ 

அதியமான் கிடைத்தான். 

நெல்லிக்கனி 

கொடுத்தவள் 

முருகனிடம் முறையிட்டாள் 

திரும்பி வா!

தமிழுக்கு உயிர் கொடு. 

கேட்டான் 

வேலவன் 

கிடைத்தது 

அருந்தமிழ் தவம். 

முருக்கப்ப செட்டியாரிடம் 

ஒரு மாத 

மளிகை பாக்கி 

முருகனை காண்பித்து 

சத்தியம் செய்தேன். 

அடுத்த மாதம் 

கதைக்காசு வருமென்று 

சொல்ல ஆரம்பித்தவுடன் 

போனவருடம் வந்த 

என் கதை 

கசங்கிய காகிதத்தில் 

மடித்துக்கொடுத்தார் 

மிளகாய் பொட்டலத்தை. 

குழம்பு 

மணக்க வில்லை. 

கட்டியவள் திட்டினாள் 

ஒன்னுக்கும் உதவா 

“எழுத்துக்காரன்”.

ஒளவையே 

இது தகுமா 

இது முறையா 

சொல் !சொல்!!

எந்த 

காற்சிலம்பை 

உடைப்பேன் 

கண்ணகியின் 

கோபம் தீர. 

  =ஜெயானந்தன்.

Series Navigation  விடை தெரியா வினாக்கள்