This entry is part 2 of 9 in the series 29 ஜூன் 2025

(1)

சிதம்பரம்

தழலாடுகிறது

நடனம்.

தளும்புகிறது 

தீக் குழம்பு.

தீச் செம்மை

தித்திக்கிறது.

அணிந்த சர்ப்பம்

படமெடுக்கிறது.

விரி சடைகள் தீ நாக்குகளாகின்றன.

ஆயிரமாயிரம் சர்ப்பங்களாகி

உன்மத்தம் கொள்கின்றன.

சர்ப்ப மேனி

ஜொலிக்க

சதிராட்டம்.

நிலவு

தெறிக்கிறது.

ஒவ்வொரு 

தீச்

சர்ப்பத்திலும்

ஒளிர்கிறது

அது;

உடுக்கை அடிக்கிறான  ஈசன்.

அண்ட சராசரங்கள் நடுங்குகின்றன.

எல்லை கடந்த வெளி

நிறைகிறது.

துரிதம் கொள்கின்றன்

தீச் சர்ப்பங்கள்.

ஆடு பாம்பே

ஆடென்று

அடிக்கிறது

ஆலய மணி.

திசைகளில் 

ஓசைஅலை பரப்பி

திருப்பி

எதிரொலிக்கிறது.

ஒலியைத்

தீ விழுங்கி

ஊக்கம் கொள்கிறது.

ஈசன்

உடுக்கை அடிக்க  

பேயாடுகிறது

அது.

இடக்

கால் தூக்கி

நாற் கைகள் விரித்து ஆடுகிறான்

ஈசன்.

சர்ப்ப மேனி

சிலிர்க்கிறது 

ஒளி வேர்வை

சிந்தி.

தீ

யொளியும்

தெறிக்கும்

ஒலியும்

வேறல்ல-

ஆலய மணியோசை

குதிக்கிறது.

தீ

கூத்தாடுகிறது.

மணி

யோசை

மன்றாடுகிறது.

தீ

மேல்தாவுகிறது.

ஓசை

உயர உயர்கிறது.

தீ

வெறியாடுகிறது.

ஓசை

இழைகிறது.

தீ

குழைகிறது.

தீ

ஓசை-

ஓசை

தீ-

இரண்டும் இரண்டறக் கலந்து

ஆவேசமுறும் ஏக

ஆன்மாவின்

தீ.

தூக்கிய இடக் காலோடு

திசைகள் தொடும் 

தீச்சடைகளுடன்

நட்டம் பயில்

நடராசத் 

தீ-

தாண்டவத்தில் தகித்து 

விடையேறும் 

மாதொரு பாகத்

தீ-

தீயில் மறைந்து

தெரிவது

என்ன

நிறம்?

தீயின்

கண்டம்

கறுத்ததேன்?

தீச் சர்ப்பத் தழல்களோடு என் ஆவித்

தழல் சேரத் தவிக்கிறேன்.

ஆவி 

தாவி

ஆவியாகிறதா?

என் முகம் சேர்க்கிறாள் 

திரவியம் அவள்- 

ஜனத் திரளில்

முளைத்த

தீச் சோதியாய்.

பர ஜோதி முன்

இக ஜோதியா

இவள்?

சர்ப்பமெடுக்கும்

தீ நடனம்

யார் நடனம்?

தீ

குளிர்ந்து

தெரிவதென்ன?

என்

ஆவி தழுவுவது

யார்?

என்

சதைச் சிதையில் 

நட்டமிடும்

தீயென்ன

தீ?

உயிர் குடைந்து வெளிக் கிளம்பும்

ஊற்றென்ன

ஊற்று?

சூழ்ந்து

சர்ப்பங்களாகிறார்களா  

சுற்றி எல்லோரும்?

தீயும்

ஓசையும் கூடும்

உச்சப் புணர்ச்சியில் 

விளைகிறதா 

ஆன்மாவின் தீ?

உயிர் பற்றியெரியும் 

தணியா

மோகத்

தீ?

ஆனால்

அம்பலத்தாடும் தீ

’இந்தா

பிடி சாம்பலெ’ன்று 

சபிக்கிறதே?

எலும்புகள் சடசடவென நொறுங்குகின்றன.

உணர்கிறேன் என் மூளையில் 

ஈமச் சடங்கினை*-

கரையற்ற

மோகத்

தீக் கடல் வற்றி

தீ

மோனம்

நல்காதா?-

தழலில்

தழலானால் 

மோனமில்லையா?

தீ

போதிக்குமா?

தீ

சக்தியா?

தீ

முக்தியா? 

ஆனந்தத் தீயின் இரகசியமா 

அகிலாண்டத் தாண்டவம்?

ஜனத் திரள் கலைய-

தீயொடுங்கித்

தீபமாய்த்

தனித்து

நிசப்தமாய்

என்

உள்ளொளிரும்

அது

எது?

குறிப்பு:  இங்குஎமிலி டிக்கின்சனின் – I Felt a Funeral in My Brain-என்ற கவிதை குறிப்பிடப்படுகிறது.

(2)

நடுக் கடலில் உடற் தீவு 

(1)

படை திரண்டு 

தூளி பறப்பது போல

பொழிந்து மழையிறங்கும்.

அலைகளில் 

மனம் தளும்பிக் கொண்டே இருக்கும் கடலை

மருவும் மழை இடைவெளியின்றி.

துள்ளி மீன்கள் 

வீழும் மழைத் தாரைகளை 

விழுங்கும்.

மேலெழுந்து 

உடன்

விருட்டென்று 

கடலுக்குள் தாவும்.

கடலை விழுங்கி

அலைகளைத் துப்பும்

(2)

மழை

வலுக்கும்.

விடாத மழையைத் 

தீக்கொளுத்திப் போடப் பார்க்கும்

விழி வெட்டும் மின்னல்.

முள்ளம் பன்றியாய் 

மழைத் தாரைகளில் குத்திட்டு

கடல் சிலிர்க்கும்.

மூச்சு வாங்கும் 

மூளும் ஊளைக் காற்றில்.

இலை போல

என் படகு 

அலைகள் மோதி 

ஆடும்.

மேனி சூழும்

மழை. 

நடுக்கடலில் என்

உடற் தீவு-

உயிர் நடுங்கும்

கொந்தளிக்கும் அலைகளைப் 

பற்றிக் கொண்டு

கரையேற முடியாமல்

நான்.

(3)

தெரிவதென்ன தொலைவில் ?

பேய்த் தீவா? 

மருங்கு சேர 

மயானப் பொட்டலாய்

மர்மம் கொள்கிறதே.

யுக யுகாந்திரங்களின் 

மயான அமைதி இறுகி

சூறைக்  காற்றில் ஓலமிடுகிறதே .

கழுவேறிய உயிர்களின் கனவுகள் 

திசையெல்லாம் அனாதை நாய்களாய்த் 

திரிகின்றனவே.

பெய்யும் பெருமழை

பாழ் நிரம்பவா?

அழிவின் 

தணியாத தாகம்

தீர்க்கவா?

(4)

ஓயும் போதே 

மழைப்பேச்சு

ஓயும்.

ஓய்ந்திருக்கும் 

வானிற்கும் மண்ணிற்குமிடையே

மழைப்பேச்சு சற்று.

பெருந்துயர் மனதிலிருந்து

நீங்குவது போல்

பேய்த்தீவிலிருந்து நீங்கும் 

என் படகு.

அவிழ்த்து விட்டதா

கடல்?

அலை நாய்கள் விடாமல்  

பின் துரத்தும்

தீவு தூர தூர விலகிப் போயினும்

ஆவேசம் குறையாது.

இறுதியில்

இக்கரை சேர 

முதலில் உயிர் சேரும்;

பின் உயிர் சேரும் 

உடல்.

உயிர்ப்படகு மிதக்கின்ற

உடற்தீவாய் 

என்னை நான்

உணர்கிறேன் – 

கரை மீண்டும் 

யான்.

குறிப்பு:  அந்தமான் தீவில் நேர்ந்த அனுபவத்தின் உந்துதலில் எழுதியது

கு. அழகர்சாமி

Series Navigation  குயிலே நீ கூவாதே!       ஒரு பெண்ணும், சில ஆண்களும்