This entry is part 4 of 8 in the series 7 டிசம்பர் 2025

குதிரை வண்டிக்காரன் 

அப்பாவை பார்த்து விட்டான். 

மூட்டை முடிச்சு பாத்திரங்களோடு 

இடுப்பில் ஐந்தாவது பிள்ளையோடு

அம்மா!

அம்மாவின்

சுண்டு விரலை பிடித்தவன் நான். 

குதிரை கணைத்தது. 

இருடா, இருடா 

ராவ்ஜி வந்திருக்கார் 

எல்லாம் ஏறிட்டாங்களா 

எனக்கேட்டான் அப்பாவிடம் 

குதிரை வண்டிக்காரர். 

எப்பவும் போல் 

புன்னகை புரிந்தார் அப்பா.

பாரம் சுமக்க முடியாமல் 

வண்டி ஒரு பக்கம் சாய்ந்துக்கொண்டே இருந்துது. 

வண்டியின் 

அடுத்த பக்கமாக ஏறி, 

சாட்டையை சொடுக்கினார் 

குதிரை வண்டிக்காரர். 

அப்பா வண்டியில் ஏறாமல் 

வண்டியோடு ஓடிவந்தார். 

ஐந்து பெற்றதற்கு 

இதுதான் பலன் என்று 

வியர்வை சிந்தினார். 

வண்டி 

மேம்பாலம் ஏறி 

ரெட்ட மஸ்தான் தாண்டும்போது

அம்மா கன்னத்தில் போட்டுக்கொண்டாள். 

அண்ணா சிலைத்தாண்டி 

பெரிய கோவில் கோபுரம் தெரிந்தது. 

அப்பா,

“சிவாய நம ஓம் “என்றார். 

சோழன் சிலை தாண்டி 

வண்டி

திலகர் திடலை கடந்தது. 

பெரிய பந்தல் வேலை பரந்துவிரிந்தது. 

நாளை வரப்போகும் 

அண்ணா 

போஸ்டர் 

சுவரெங்கும் மின்னியது. 

சிவகங்கா பூங்காமுனை 

டீக்கடையில் அருகில் 

போட் மெயிலில் வந்த தினசரிகளை 

வகை பிரித்துக்கொண்டிருந்தார் 

கோபால்சாமி. 

சங்கர நாராயணன் கோயில் 

விளக்கு திருப்பத்தில் 

வண்டி திரும்பி 

சக்கா நாய்க்கன் தெருவில் நுழைந்து

வீட்டருகே சென்றவுடன் 

நுரைத்தள்ளி குதிரை நின்றது. 

வேட்டியை தூக்கி 

வியர்வையை துடைத்துக்கொண்டு 

அப்பா 

ஐந்து ரூபாயை

வண்டிக்காரிடம் கொடுத்தார்.

வண்டிக்காரர் திருப்பி

எட்டாணவை அப்பாவிடம் 

கொடுத்துவிட்டார். 

ஏன் என கேட்டதில் 

குதிரையின் வலி தெரிந்து 

குதிரையோடு ஓடிவந்த நீங்க

நல்லா இருக்கணும் சாமி என்றார். 

களைத்த

அப்பாவும் 

நுரைத்தள்ளிய குதிரையும் 

ஓரக்கண்ணால்

 பார்த்துக் கொண்டனர் ஒருவருக்கொருவர். 

ஜெயானந்தன்.

Series Navigationபெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் அத்தியாயம் – 5 தொடர்ச்சிமழை புராணம் -10