This entry is part 3 of 8 in the series 7 டிசம்பர் 2025

THE CONQUEST OF HAPPINESS

By 

BERTRAND RUSSEL

தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்

அத்தியாயம் 5:

சோர்வு

(*சென்ற இதழ் தொடர்ச்சி)

கவலையின் உளவியல் என்பது எந்த வகையிலும் சுலபமான ஒன்றல்ல.  நான் ஏற்கனவே மன ஒழுங்கு குறித்துப் பேசியிருந்தேன். அதாவது, விஷயங்களை சரியான நேரத்தில் சிந்தித்தல். இதற்கு அதனுடையதேயான முக்கியத்துவம் இருக்கிறது. முதலில், இது குறைந்த அலவு சிந்தித்தலிலேயே ஒரு நாளின் வேலையைச் செய்துமுடிக்க வழிவகுக்கிறது. இரண்டாவது, இது தூக்கமின்மையைக் குணப்படுத்த வழிசெய்கிறது. மூன்றாவதாக, இது முடிவெடுத்தலில் ஆற்றலையும் விவேகத்தையும் வளர்க்கிறது. ஆனால், இவ்வகையான வழிமுறைகள் ஆழ் மனதையோ, நனவிலி மனதையோ தொடுவதில்லை.  இரண்டாவது, இது தூக்கமின் மையைக் குணப்படுத்த வழிசெய்கிறது. மூன்றாவதாக, இது முடிவெடுத்தலில் ஆற்றலையும் விவேகத்தையும் வளர்க்கிறது.வுகளில் செயல்திறன் மற்றும் ஞானத்தை ஊக்குவிக்கிறது. ஆனால் இந்த வகையான முறைகள் ஆழ்மனதையோ அல்லது நனவிலி மனதையோ தொடுவதில்லை, மேலும், பிரச்ச்னை மிகவும் ஹ்டீவிரமானதாக இருந்தால், எந்த வழிமுறையும், அந்த வழிமுறை பிரக்ஞை மட்டத்திற்கு அடியில் ஊடுருவிச் சென்றாலொழிய அதனால் நேரிய பயனிருக்காது. நனவிலி மனம் பிரக்ஞையின் மீது செலுத்தும் தாக்கம், ஆதிக்கம் குறித்தெல்லாம் உளவியலாலர்கள் நிறைய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நனவிலி மனதின் மேல் பிரக்ஞை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மிக மிகக் குறைவாகவே உளவியலாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. . 

எனினும், மன சுகாதாரம் என்பதில் பின்னது அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது. தர்க்கபூர்வமான உறுதிப்பாடுகள் நனவிலி வெளியில் செயல்பட வேண்டுமென்றால். இதைப் புரிந்துகொள்ளவேண்டியது இன்றியமையாதது. கவலை என்ற விஷயத்தில் இது மிகவும் பொருந்தும். அத்தகையதொரு துரதிர்ஷ்டம் நடந்தால் அது அவ்வளவு பயங்கரமானதாக இருக்காது என்று ஒருவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது சுலபம். ஆனால் இதுவொரு பிரக்ஞாபூர்வமான உறுதியான எண்ணமாக இருக்கும்வரை அது இரவின் கண்காணிப்புகளில் செயல்படாது, அல்லது அது பீதிக்கனவுகள் தோன்றுவதைத் தவிர்க்கும்.

என்னுடைய நம்பிக்கை என்னவென்ரால், ஒரு பிரக்ஞாபூர்வமான எண்ணத்தை, போதுமான அளவு வீரியத்தோடும், தீவிரத்தன்மையோடும்,  நனவிலி மனதுக்குள் ஊன்ற முடியும். நனவிலி மனதின் பெரும்பான்மைப் பகுதியில் இடம்பெறுவன ஒரு சமயம் நம்மிடத்தில் மிக வலுவாய், உணர்வுபூர்வமாய் பிரக்ஞாபூர்வமாய் இருந்து தற்போது புதையுண்டுவிட்ட எண்ணங்களே. அத்தகைய எண்ணங்களைப் புதைப்பது வேண்டுமென்றே செய்யப்படலாம். இந்த வழியில் நனவிலி மனம் நிறைய பயனுள்ள வேலைகளைச் செய்யும்படி வழிநடத்தப்பட முடியும். உதாரணமாக, ஒரு கடினமான கருப்பொருளில் எழுதவேண்டுமென்றால் அதற்கான சிறந்த திட்டம் அதை பற்றி மிகத் தீவிரமாக, எனக்கு சாத்தியமான உச்சபட்ச தீவிரத்தன்மையோடு சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் சிந்தித்துக்கொண்டிருப்பது, அப்படி சிந்தித்து அதன் முடிவில் அதை எழுதும் பணி வெளியே தெரியாத அளவு உருப்பெறவேண்டும் என்று கட்டளையிடுவதுதான் தான் என்று நான் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். 

சில மாதங்களுக்குப் பிறகு நான் அந்தக் கருப்பொருளுக்குப் பிரக்ஞாபூர்வமாகத் திரும்புவேன். அந்த வேலை நிறைவுபெற்றிருப்பதை உணர்வேன். இந்த உத்தியை நான் கண்டறிவதற்கு முன்பாக, இடைப்பட்ட மாதங்களில் நான் மிகவும் கவலையோடிருப்பேன். எழுதவேண்டிய விஷயத்தில் நான் எந்த முன்னேற்றமும் அடையவில்லையே என்று மிகவும் கவலைப்படுவேன். அந்தக் கவலை சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு சீக்கிரமே தீர்வையெட்ட எந்தவகையிலும் உதவாது.;. அந்த இடைப்பட்ட மாதங்கள் வீண்விரயமாகிவிடும், ஆனால், இப்போது என்னால் அவற்றை என்னுடைய பிற தேடல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். .கவலைகள் தொடர்பாய் நான் மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்குப் பலவகையிலும் ஒத்த வேறொரு வழியையும் நாம் மேற்கொள்ளலாம். ஏதாவதொரு துரதிருஷ்டம் அச்சுறுத்தும்போது உச்சபட்ச மோசமாக என்ன நடக்கும் என்பதை தீவிரமாக, நிதானமாக யோசியுங்கள். அப்படி நேருக்கு நேரே இந்த சாத்தியமாகக்கூடிய துரதிருஷ்டத்தைப் பார்த்தபிறகு, இது அப்படியொன்றும் படுபயங்கரமான பேரழிவு இல்லை என்று எண்ணிக்கொள்வதற்கான வலுவான காரணங்களை உங்களுக்கு நீங்களே தரவும். அத்தகைய காரணங்கள் எப்போதுமே இருக்கும் – அதாவது, உச்சபட்ச மோசமாக ஒருவருக்கு நடக்கக்கூடிய எதுவுமே பிரபஞ்ச அளவில் எந்தவொரு முக்கியத்துவமும் வாய்ந்ததாக இருப்பதில்லை. அப்படி உச்சபட்ச மோசமான சாத்தியப்பாட்டை சிறிதுநேரம் பார்த்தபிறகு. உங்களுக்கு நீங்களே உறுதியோடு திட்டவட்டமாக, “அட, பார்க்கப்போனால்ம் அது அப்படியொன்றும் பெரிதாகப் பொருட்படுத்தத் தக்கதல்ல” என்று சொல்லிக்கொண்டால், உங்களுடைய கவலை அசாதாரணமான அளவு மங்கிவிடுவதை உங்களால் உணர முடியும். இந்த வழிமுறையை ஒரு சில தடவைகள் சொல்லிக்கொள்வது அவசியமாக இருக்கக்கூடும், ஆனால், முடிவில், அந்த மோசமான சாத்தியப்பாட்டை நேரடியாக முகத்துக்கு நேராக இந்ன்று பார்ப்பதை எந்தவிதத்திலும் நீங்கள் தவிர்க்காதிருந்திருப்பின், உங்களுடைய கவலை முற்றிலுமாக மறைந்து அந்த இடத்தில் ஒருவிதக் களிப்பும் கிளர்ச்சியும் வந்துசேர்ந்திருப்பதையும் உங்களால் உணரமுடியும்.

இது பயத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு பொதுவான செயல்நுட்பத்தின் ஒரு பகுதியாகும். கவலை என்பது ஒருவகை அச்சம். எல்லாவகையான அச்சமும் சோர்வை ஏற்படுத்துகிறது. அச்சத்தை உணராமலிருக்கக் கற்றுக்கொண்டுவிட்ட மனிதன் தினசரி வாழ்வு வரவாக்கும் சோர்வு பெருமளவு குறைந்துவிட்டதை உணர்வான் நாம் நேருக்கு நேர் சந்திக்க அஞ்சும்படியான ஓர் ஆபத்து இருக்கும் போதுதான் . பயம் என்பது அதன் மிகவும் அழிவாக்கத்தன்மையோடு ஏற்படுகிறது. சில எதிர்பாராத தருணங்களில் படுமோசமான எண்ணங்கள் நம் மனதுக்குள் சரேலெனப் பாய்ந்து நுழைகின்றன. அவை என்ன என்பது சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்தது. ஆனால், ஏறத்தாழ எல்லோருக்குமே சில பயங்கள் உள்ளார்ந்து இருக்கும். ஒரு மனிதருக்கு அது புற்றுநோயாக இருக்கலாம். இன்னொருவருக்கு அது நிதிசார் சரிவாக இருக்கலாம், மூன்றாமவருக்கு அது இழிவுண்டாக்குவதான ஒரு ரகசியத்தை அறிந்துகொள்வதாக இருக்கலாம். நான்காமவர் பொறாமையில் பிறக்கும் சந்தேகங்களால் அலைக்கழிக்கப்படுபவராக இருக்கலாம், ஐந்தாமவர் இரவுகளில், தனது இளம் வயதில் தனக்கு நரகத்தின் நெருப்புக்குழிகள் குறித்துச் சொல்லப்பட்ட கதைகள் உண்மையாக இருக்கக்கூடும் என்ற நினைப்பால் இரவில் அலைக்கழிக்கப் படுபவராக இருக்கலாம்.

ஒருக்கால் இந்த மனிதர்கள் தங்களுடைய அச்சத்தைக் கையாள்வதில் தவறான உத்தியைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கக்கூடும்.’ அவர்களை ஆட்டுவிக்கும் அந்த பயம் அவர்கள் மனதில் நினைக்கப்படும்போதெல்லாம் அவர்கள் ஏறு எதையாவது நினைக்க முயற்சி செய்கிறார்கள்; வேலை செய்வதிலோ, பொழுதுபோக்கி மகிழ்வதிலோ, வேறு எதிலாவதோ அவர்கள் தங்களுடைய கவனத்தையும் எண்ணங்களையும் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு பயமும் அதைப் பார்க்காதிருப்பதன் மூலம் மேலும் மோசமடைகிறது; தீவிரமடைகிறது. ஒருவர் தனது எண்ணத்தை ஒரு விஷயத்திடமிருந்து அப்பால் திருப்பிக்கொள்ளப் பிரயத்தனப்படுவது உண்மையில், அவர் எந்த அவலமான, மோசமான காட்சியிலிருந்து கண்களை அப்பால் திருப்பிக்கொள்கிறாரோ அந்த பயங்கரத்திற்குத் தரப்படும் பாராட்டாகும்; எந்தவொரு பயத்திற்கும், எல்லா பயங்களுக்கும் சரியான வழிமுறை என்பது அந்த பயத்தைத் தர்க்கபூர்வமாகவும், அமைதியாகவும், ஆனால் அதி கவனத்தோடும், அந்த பயம் நமக்கு முழுக்கப் பரிச்சயமானதாகப் பழகிப்போகும் வரை, சிந்தித்துப்பார்ப்பது. முடிவில், அந்த பரிச்சயத்தன்மை என்பது அந்த பயத்தின் பயங்கரங்களை கூர்மழுங்கச்செய்துவிடும்’ அந்த மொத்த விஷயமுமே அலுப்பூட்டுவதாக மாறிவுடும். நம்முடைய எண்ணங்கள் அவற்றை விட்டு அப்பால் திரும்பிவிடும். – முன்பு போல் ,அப்படியாகவேண்டும் என்று நாம் முனைப்பாக முயற்சி மேற்கொள்வதால் அல்ல. மாறாக, அந்த விஷயத்தில் நமக்கு ஆர்வம் குறைந்துவிடுவதால். நீங்கள் எதைப் பற்றியும் அது என்ன விஷயமாக இருந்தாலும் சரி, கவலைப்பட்டுக்கொண்டேயிருக்கத் தலைப்பட்டால், அத்தகையதொரு போக்கு உங்களிடமிருப்பதை உணர்ந்தால், அதற்கான சரியான செயல்திட்டம் கவலையளிக்கும் அந்த விஷயத்தை நீங்கள் இயல்பாக எண்ணத் தலைப்படுவதைக் காட்டிலும் அதிகமான அளவு எண்ணிப்பாருங்கள். அந்த பயம் குறித்து உங்களிடமுள்ள சாவனைய ஈர்ப்பு முற்றிலுமாக மங்கி மறையும் வரை அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

 நவீன ஒழுக்க நெறி மிகவும் பழுதுபட்டதாக இருக்கும் விஷயங்களில் ஒன்று இந்த அச்சம் என்ற ஒன்று. உடல்ரீதியான துணிச்சல், குறிப்பாக போரில், ஆண்களிடம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது உண்மையே, ஆனால், வேறுவிதமான துணிச்சல்கள் அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவதில்லை. பெண்களிடம் எந்தவகையான துணிச்சலும் எதிர்ப்பார்க்கப்படுவதில்லை. தைரியசாலிப் பெண்ணை ஆண்கள் விரும்பவேண்டும் என்றால் அவள் தனது துணிச்சலை மறைக்க வேண்டியதாகிறது. உடல்ரீதியான ஆபத்தைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் தைரியமாக உள்ள ஆணும்கூட மோசமானவனாகவே பார்க்கப்படுகிறான். உதாரணமாக, வெகுஜன அபிப்பிராயத்தைப் பொருட்படுத்தாமலிருப்பது ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது. வெகுஜன மேலாதிக்கத்தை எதிர்க்கத் துணியும் ஆணைத் தண்டிக்க பொது சமூகம் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறது. இவையெல்லாமே அது அவசியமாக இருக்கவேண்டிய நிலைக்கு நேர் எதிர் நிலை.

ஆண்களோ, பெண்களோ அவர்களிடம் உள்ள எல்லாவகையான தைரியமும். ஒரு படைவீரனின் தைரியம் பாராட்டப்படுவதே போல் பாராட்டப்படவேண்டும்.. இளைஞர்களிடையே காணப்படும் தைரியம் சார் பொதுத்தன்மை, ஒரேமாதிரித்தன்மை , பொது சமூகம் எவ்வகையான தைரியத்தைக் கோருகிறதோ அது  குறித்து முன்வைக்க்கப்படும் பொதுக்கருத்திற்கு எதிர்வினையாகவே தயாரிக்கப்படுவதாகலாம் என்பதற்கான ஒரு நிரூபணம். அதிகத் துணிச்சல் இருந்தால் அங்கே கவலை குறைவாக இருக்கும்,, எனவே, சோர்வு குறைவாக இருக்கும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் துன்புறும் நரம்புசார் சோர்வுகளின் மிகப் பெரும்பாலானவை, பயங்களினால் – பிரக்ஞாபூர்வமானவையும், நனவிலி மனம் சார்ந்ததுவையும் – ஏற்படுபவை.,

சோர்வு ஏற்பட மிகப்பல நேரங்களில் காரணமாவது ஆர்வப் பரவசத்திற்கான ஆவல்; பெருவிருப்பு. ஒரு மனிதன் தனது ஓய்வுநேரத்தை தூக்கத்தில் செலவழித்தால் அவனுடைய உடல் நலம் சிறப்பாக இருக்க முடியும். ஆனால், அவனுடைய பணிநேரம் ஒரேமாதிரியாக இருந்தால் அவன் தனது வேலைநேரம் முடிந்தபின் ஆனந்தம் அனுபவித்து மகிழ்வடையவேண்டிய தேவையை உணர்வான். இதில் பிரச்சனை என்னவென்றால், மிக எளிதாக அடையக்கூடிய இன்பங்கள், குதூகலங்கள் உச்சபட்சமாக மேலோட்டமான ஈர்ப்புத்தன்மை வாய்ந்தவை. நரம்புகளைக் களைத்துப்போகச் செய்பவை. ஆர்வப் பரவசத்திற்கான ஆர்வமும் விருப்பமும் ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்று ஒருவித முறுக்கிவிடப்பட்ட மனநிலையின் அல்லது உள்ளார்ந்த ஒருவித அதிருப்தியின் அறிகுறியாக அமைகிறது. ஒரு மகிழ்ச்சிகரமான மணவாழ்வின் ஆரம்பநாட்களில் பெரும்பாலான ஆண்கள் வேறு ஆனந்தக் கிளர்ச்சிக்கான தேவையை உணர்வதில்லை, ஆனால், நவீன உலகில் திருமணம் என்பது மிகவும் ஒத்திப்போடப்பட்டு மிகத் தாமதமாக  பொருளாதார ரீதியாக சாத்தியமாகக்கூடிய ஒன்றாக மாறும்போது ஆர்வக்கிளர்ச்சி என்பது மனிதனின் ஒரு பழக்கமாகவே மாறிவிடுகிறது. குறுகிய காலத்திற்கு மட்டுமே அதை விட்டு விலகியிருப்பது சாத்தியப்படுகிறது. இப்போது திருமண நிகழ்வுக்கு ஆகும் பொருளாதாரச் சுமை இல்லாமலே ஆண்கள் இருபத்தியோரு வயதில் திருமணம் செய்துகொள்ளலாம் என்றிருந்தால் பல ஆண்கள் தங்கள் பணியைப் போல் அத்தனை சோர்வுண்டாக்கும் இன்பக்கிளர்ச்சிகளைக் கோரும் வழியைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள். இது சாத்தியமாக்கப்படவேண்டும் என்று குறிப்புணர்த்துவது ஒழுக்கக்கேடானது – நீதிபதி லிண்ட்ஸே (LINDSEY)யின் விதியிலிருந்து – அவர் நீண்டதொரு மதிப்பார்ந்த பணிக்காலத்தைக் கடந்துமுடித்திருக்கிறார் என்றாலும் பெரியவர்களின் மதவெறியினால் ஏற்படும் அவலங்களிலிருந்து இளைய தலைமுறையினரைக் காப்பாற்றவேண்டும் என்று அவர் விரும்பிய ஒரே குற்றத்திற்காக அவதூறுக்காளானார் – இதை நம்மால் கண்டறிய முடியும். எப்படியும், தற்சமயம், இந்த விஷயம் பற்றி நான் மேலும் பேசப்போவதில்லை. ஏனெனில், இது பொறாமை என்ர தலைப்பின் கீழ் வருகிறது. பொறாமை குறித்து இனி வரும் அத்தியாயத்தில் நாம் கவனம் செலுத்துவோம்.

எந்த சட்டங்களின், அமைப்புகளின் கீழ் வாழ்கிறாரோ அவற்றை மாற்ற முடியாத, திருத்தியமைக்க முடியாத நிலையில் உள்ள தனிநபரைப் பொறுத்தவரை ஒடுக்குமுறையைக் கையாளும் ஒழுக்கவியலாளர்களால் உருவாக்கப்பட்டு வளர்த்துவிடப்படும் சந்தர்ப்பசூழலைக் கையாள்வது மிகவும் கடினமான காரியம். அதிக அளவு திருப்தியளிக்கும் ஆனந்தங்களை அடைய வழியில்லாதபோது ஒரு மனிதனுக்கு இந்தவிதமான இன்பக்கிளர்ச்சியில்லாமல் வாழ்க்கையை சகித்துக்கொள்ளவியலாது என்றபோதும், இன்பக்கிளர்ச்சிகள் என்பவை மகிழ்ச்சிக்கான பாதையல்ல என்பதை உணர்ந்துகொள்வது நன்மைபயக்கும் விஷயம். இத்தகைய சூழலில் விவேகமுள்ள மனிதன் செய்யக்கூடியது தன்னைத்தான் கட்டுப்படுத்திக்கொள்வது. தன்னுடைய உடல்நலனை பாதித்து தனது வேலையில் குறுக்கிடுவதாய் அமையும் அளவு சோர்வூட்டும் இன்பங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ளாமலிருப்பது.தான்.

இளைய தலைமுறையினரின் பிரச்சனைகளுக்கான முழுமொத்த நிவாரணம் பொது சமூக ஒழுக்கநெறிகளில் மாற்றம் ஏற்படுவதில் இருக்கிறது.  இடைப்பட்ட காலத்தில் ஒரு மனிதன் தான் மணம் செய்துகொள்ளத் தகுதியானவன் என்ற நிலை கண்டிப்பாக ஏற்படும், அந்த சமயத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை அசாத்தியமானதாக்குவதாய் அதற்கு முந்திய அவனது வாழ்க்கைமுறை அமைந்திருக்கலாகாது என்பதை சிந்தித்துப் புரிந்துகொள்வதுதான் அவனுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் தனது வாழ்க்கைமுறையினால் நைந்து நலிந்த நரம்புகள் வழியாகவும், மென்மையான இன்பங்களைத் துய்க்க முடியாமல் போவதாலும் அத்தகையதொரு நிலைமை, மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அனுபவிக்க முடியாத அவலநிலை, எளிதில் ஏற்பட வழியுண்டு.

நரம்புசார் சோர்வின் மிக மோசமான அம்சங்களில் ஒன்று அது மனிதனுக்கும் வெளியுலகுக்கும் இடையிலான ஒருவகைத் திரையாய் செயல்படுகிறது. பதிவுகள் கம்மிய குரலில் அல்லது குரலெழும்பாத நிலையில் அவனை வந்தடைகின்றன. அவன் சகமனிதர்களை கவனிப்பதே அற்ப தந்திரங்களினால் அல்லது பழக்கவழக்கங் களினால் எரிச்சலுறுவதற்காக மட்டுமே என்றாகிறது; அவன் தனது உணவிலோ, சூரியவொளியிலோ இன்பங்காண்பதில்லை. ஆனால் ஒரு சில பொருட்கள் மீதே அவனது முழுகவனமும் ஒருவித பதற்றத்தோடு குவிகிறது. மற்ற எதையுமே அவன் பொருட்படுத்துவதில்லை.இந்தவிதமான மனப்போக்கு அவனை ஓய்வெடுக்கவே அனுமதிப்பதில்லை, எனவே, சோர்வு தொடர்ச்சியாக அதிகமாகிக் கொண்டே போய், ஒரு கட்டத்தில் மருத்துவ சிகிச்சை இன்றியமையாததாகிறது. இவையெல்லாமே அடிப்படையில் இதற்கு முந்தைய அத்தியாயத்தில் நாம் பேசிய புவியுடனான அந்தத் தொடர்பைப் பறிகொடுத்ததற்கான ஓர் அபராதமாகும். ஆனால், இந்தத் தொடர்பை  நவீன நகர்ப்புறப்பகுதிகளின் மக்கட்தொகைப் பெருக்கத்தில், நெரிசலில் எப்படிப் பேணிப் பராமரிக்க முடியும். இதை எண்ணிப்பார்ப்பது மிகவும் கடினம். என்றாலும், இங்கும் நாம் பெரிய, சமூகஞ்சார் கேள்விகளின் எல்லைக்கோடுகளில் நாம் இருப்பதைக் கண்டறிய முடியும். இந்த நூலில் அந்தக் கேள்விகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வது என் நோக்கமல்ல.

*

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்அப்பாவின் குதிரை