‘தேவவிரதன்’
நகர்ப்புற சந்தடிகளிலிருந்து விலகி, விலகி வெகு தூரத்தில் இருந்தது என்ற அழகான ‘வானப்ரஸ்தம்’ என்ற முதியோர் இல்லம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் ராஜபாட்டையில் ஓர் திருப்பமும் அதில் இன்னொரு அரை மணி நேர தொடர் பயணமும் (காரில்தான்) அந்த அழகான இல்லம் அமைந்திருக்கும் பகுதி.
அசோக மரங்கள் உயர்ந்த நீண்ட பாதையில் சென்றால் அந்த அழகான இல்லம் மிகுந்த கம்பீரத்துடன் நின்று கொண்டிருக்கும். ஆறு மாடிகள் கொண்ட கட்டிடம்தான். அதே அச்சாக இந்த கட்டிடத்திற்கு எதிரில் சற்று பக்கவாட்டத்தில் இன்னொரு கட்டிடம். அது இன்னும் முடிவு பெறவில்லை அத்தனை வீடுகளும் முன்பதிவு ஆனவை. விலை கிட்டத்தட்ட 90 லட்சம் வரையில். அலங்கார வசதிகளுக்கு ஏற்ப செலவுகள் மாறுபடும்.
இரண்டு கட்டிடங்களுக்கும் முகப்பில் அதன் பெயர்கள் ஓர் அழகிய வளைவில் காணப்பட்டது. ‘அஸ்வினி’, ‘பரணி’ என்று.
கார் வளைந்து சென்று ‘அஸ்வினி’ என்ற கட்டிடத்தின் விசாலமான முன் வாசலில் காரில் இருந்து இறங்கிய தருண்குமாரை ஓர் இளைஞன் மலர்ந்த முகத்துடன் வரவேற்றான். அவனைத் தொடர்ந்து ஒயிலாக, சிவந்த மேனியளாய், மிக நாகரிகமாக ஆழ்ந்த நீல நிறத்தில் சேலையும், அதே நிறத்தில் ‘ஸ்லீவ்லெஸ்’ ஜாக்கெட்டும் அணிந்த ஓர் பெண் கருப்பு கண்ணாடியை கழற்றியபடி இறங்கினாள்.
‘குட் மார்னிங்,’ என்று வரவேற்ற அந்த இளைஞன் ‘ஐ’ம் ரமேஷ்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். ‘ ஹை ‘ என்றபடி கை குலுக்கிய தருணைத் தொடர்ந்து ‘லதா,’ என்று அந்த அழகியும் கை குலுக்கினாள்.
‘உங்கள் சூட் கேஸுகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று சொன்ன ரமேஷ் நீங்கள் உங்களுக்கான ‘கெஸ்ட் ஹவுஸு’க்கு சென்று ‘பிரெஷ் அப்’ செய்து கொள்ளுங்கள். நான் வந்து உங்களை உங்கள் பெற்றோர் இருக்கும் ‘பென்ட்ஹவுஸு’க்கு அழைத்து செல்கிறேன்.’ என்றான்.
‘கிரேட்’ என்றபடி சுற்றிலும் பார்வையை சுழலவிட்ட தருண் ‘அருமையான இடம்’ என்று ஆங்கிலத்தில் கூறினான். தொடர்ந்து ‘அம்பிகா வந்தாச்சா ?’ என்று ஆங்கிலத்தில் கேட்டான். ‘ ஓ, அவர்கள் நேற்று இரவே வந்து விட்டார்கள், அவரும் அவர் கணவரும் இன்னொரு ‘கெஸ்ட் ஹவுசி’ல் இருக்கிறார்கள். நீங்கள் டின்னரின் போது சந்திக்கலாம். உங்கள் பெற்றோர்களும் அங்கு வருவார்கள்.’ என்றான் புன்னகையுடன்.
‘வாவ்.. இந்தியா மிகவும் முன்னேறி விட்டது,’ என்று ஆங்கிலத்தில் சொன்னபடி தருண், லதா அவனை பின் தொடர்ந்தனர்.
கதை மேலே நகர்வதற்கு முன் ஓர் சிறு அறிமுகம்.
சிவசங்கரன்- கமலம் தம்பதிகளின் மகன் மற்றும் மகள்தான் தருண் குமாரும், அம்பிகாவும். சிவசங்கரன் மத்திய அரசாங்கத்தை சேர்ந்த ஓர் பிரபலமான ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற பிரபல விஞ்ஞானி. அம்பிகா முதல். அவளும் ரசாயன துறையில் டாக்டர் பட்டம் பெற்று அமெரிக்காவின் பர்து கலாசாலையில் பணியாற்றுபவள். மிக நல்ல பெயர் மற்றும் வேலை. அவள் கணவன் தினேஷ் வடஇந்தியாவைச் சேர்ந்தவன். அவன் கணினி துறையில் பெரிய ஆள். அவனும் பர்துவிற்கு அருகில் உள்ள வேறொரு மாநிலத்தில் பெரிய வேலையில் இருப்பவன். இருவரும் தனித்தனியாக இருந்தாலும், அவ்வப்போது வார இறுதி, நீண்ட விடுமுறை நாட்களில் சந்தித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு ஒரு மகன் மட்டுமே. அவனுக்கு வயது பதினாலு ஆகிறது. அவன் குழந்தையாக இருந்தபோது பிரசவம் பார்க்க கமலம் சென்றாள்; பின்னர் சிவசங்கரனும் சென்று ஆறு மாதங்கள் பெண்ணுடன், பேரன் மருமகன் என்று ஆனந்தமாகக் கழித்தனர்.
அதன் பின் சிவசங்கரனின் உயர் பதவி அழுத்தங்களால் அவரால் அடிக்கடி செல்ல முடியவில்லை. பல நாடுகளுக்கு விஜயம் செய்ய வேண்டி இருந்த நேரத்தில் ஓரிரு முறை மகள் வீட்டிற்கும் ஓர் விருந்தாளி போல் சென்று வந்திருக்கிறார். கமலத்தையும் ஒரு முறை அழைத்துச் சென்றார். அவ்வளவே.
மகன் தருண் குமார் இன்றைய, மன்னிக்கவும், நேற்றைய இளைஞர்களை போல் பொறி இயல் பட்டம் பெற்று கொஞ்ச நாள், ‘இன்போசிஸ்’, சிறிது காலம் ‘ஷெல்’, என்று பணியாற்றிவிட்டு யு. எஸ் பறந்து விட்டான். அவன் திருமணம் காதல் திருமணம் என்று சொன்னான். பெரிய ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லை. இவர்களும் போகவில்லை. ஏனெனில், இவர்களுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை; காரணம், லதா அமெரிக்காவில் இந்திய அப்பாவுக்கும், அமெரிக்க அம்மாவுக்கும் பிறந்த பெண்.
தொலை தொடர்பு, காணொளி தொடர்பு என்று பட்டும் படாமலும் இருக்க பழகிக் கொண்டுவிட்டனர் இரு தரப்பினரும்.
இரவு விருந்தின் போதுதான் சிவசங்கரன், கமலம் இருவரும் அம்பிகா, அவள் கணவர் தினேஷ், மகன் தருண், அவன் மனைவி லதா ஆகியோரை சந்தித்தனர். மகள் அம்பிகாவும் அவள் கணவன் தினேஷும் மூத்தவர்களை காலை தொட்டு வணங்கினர். லதா தருணை கேள்விக்குறி தோன்றிய முகத்துடன் பார்த்தாள்; அவன் முக ஜாடையை புரிந்துகொண்டு அவனுடன் தானும் மேம்போக்காக காலைத் தொட்டு வணங்கினாள். ‘ஷி ஈஸ் பிரெட்டி,’ என்றார் சிவசங்கரன். பின் நால்வரும் விசாலமான, மற்றும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட டைனிங் ஹாலில் அமர்ந்தனர்.
‘ஹவ் ஆர் யு?’ என்ற பல கேள்விகளுக்கு ‘ஓ..கிரேட் , பைன்,’ போன்ற உற்சாக வார்த்தைகளுக்கு பிறகு உணவு பரிமாறப் பட்டது. தென் இந்திய, வட இந்திய வகை வகையான உணவுகள் மிகத் தேர்ந்த சமையல் வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பிடித்த வகையில் தரப்பட்டது.
பேச்சு பெரும்பாலும் அவரவர் வேலையின் சிறப்புகள் பற்றியும், சென்று வந்த நாடுகள் பற்றியுமே சுற்றி வந்தது.
‘டாட்…எனக்கு மூன்று நாட்கள் மட்டும்தான் இருக்க முடியும், அதே போல் லதாவுக்கு போன உடனே யு.கே போக வேண்டும். வேலை விஷயங்கள் தான்,’ என்றான் தருண்.
‘எஸ். எனக்கும் இரண்டு நாட்கள்தான் உள்ளன. நான் யு எஸ் போனதுமே நான் திரும்ப சிட்னி போக வேண்டும்,’ என்றாள் அம்பிகா.
‘ஓ மை காட், நீங்கள் இருவரும் இவ்வளவு ‘டைட் ஷெட்யூல்’ இருந்தும் எங்களை பார்க்க நேரம் ஒதுக்கி மூன்று நாட்கள் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது,’ என்றார் சிவசங்கரன். கமலம் வெறுமே புன்னகை செய்தாள். இவர்களில் லதா அதிக பேசவில்லை. புன்னகையை மட்டுமே அவ்வப்போது ஒவ்வொருவருக்கும் தந்து கொண்டிருந்தாள்.
மூன்று நாட்களில், ஒரு நாள் மஹாபலிபுரம், இன்னொரு நாள் காஞ்சிபுரம் காமாக்ஷி கோவில் விஜயம் மூன்று தனித்தனி கார்களில் என்று முடிவு ஆனது.
நேரத்தை பெற்றோர், பிள்ளைகள் எல்லோருமே அளந்து செலவு செய்தனர். ‘ நீங்கள் மீண்டும் ஒரு முறை யு எஸ் வர வேண்டும்’ என்ற உபச்சாரத்துடன் மூன்று நாட்கள் கழிந்தன.
பல நாட்கள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் போல் ஒருவரை ஒருவர் தழுவி விடை பெற்றனர்.
***
பிள்ளைகளுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று நாட்கள் தொடர்ந்து இருந்து மகிழ்ந்தபின், அவர்கள் புறப்பட்டு சென்று அவர்களிடம் இருந்து யு எஸ். சென்று சேர்ந்து விட்டோம் என்ற செய்தி வந்த பின் ஓர் இரவு உணவுக்குப் பின் தங்களின் விசாலமான அந்த முதியோர் இல்லத்தின் படுக்கை அறையில் இருந்த சிவசங்கரன் மனைவி கமலத்தை பார்த்துக் கேட்டார்.
‘என்ன கமலம்.. உனக்கு மகிழ்ச்சிதானே? பெண்ணையும், பிள்ளையையும் ரொம்ப வருஷங்கள் கழித்து பார்த்ததில்?’ அவர் முகத்தில் புன்னகை இருந்தது.
‘ஆம். அதில் என்ன சந்தேகம்? ரொம்ப சந்தோஷம்தான்,’ என்றாள் கமலம்.
‘ஒன்று கவனித்தாயா?’ என்றார் மெதுவாக மேலே பார்த்தபடி.
‘என்ன?’ என்பது போல் அவரை பார்த்தாள் கமலம்.
‘நம் பிள்ளைகள் நன்றாக நடிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். புரிந்ததா?’ என்றார். கமலம் திடுக்கிட்டவளாய் அவர் முகத்தை பார்த்தாள்.
‘நடிக்கவா?’
‘ஆமாம்.’
‘என்ன நடிப்பு?’
‘புருஷனும் மனைவியும் ரொம்ப காதலுடன் ஒற்றுமையாக இருப்பது போல.’
கமலத்திற்கு பேச்சு வரவில்லை.
‘என்ன உளறுகிறீர்கள்? நடிப்பா? எதற்கு? அதுவும் அப்பா அம்மாவிடம்?’
சிவசங்கரன் அவள் முகத்தை பார்த்து விட்டு பெருமூச்செறிந்தார்.
சராசரி தமிழ் பெண்ணின் முகம். முன் தலை நரை. குறைந்து போன முடி. சுருக்கங்கள் காட்டும் முகம். நெற்றியில் குங்குமம், மேலே விபூதி, வகுட்டில் குங்குமம்….அமைதி தவழும் சாந்த சொரூபி. ஓர் பழைய கால பட்டு புடவை. காதிலும் மூக்கிலும் செல்வத்தை பறை சற்றும் வைர அணிகள். தங்க நகைகள்…
இவளுக்கு எப்படி புரிய வைக்க?
‘இங்கு வந்து உட்கார்,’ என்று கட்டிலை காட்டினார்.
கமலம் பேசாமல் வந்து அமர்ந்தாள்.
‘எனக்கு உலகம் முழுக்க எனது தொழில் ரீதியாக தொடர்பு இருக்கிறது என்று உனக்கு தெரியுமில்லையா?’
‘ஆமாம். அதற்கென்ன?’
‘நான் மற்ற பெற்றோரை போல் பிள்ளைகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பவன் இல்லை. நான் தொழில் ரீதியாக ஓர் விஞ்ஞானி. எதையும் ஆராய்ந்து பார்த்து உறுதி செய்து கொள்பவன்.’
‘அதற்காக?’
சிவசங்கரன் பெருமூச்செறிந்தார். ‘வெளி நாட்டில் உள்ள என் நண்பர்கள், தொடர்புகள் மூலம் நான் இவர்களை பற்றி விசாரித்தபடிதான் இருக்கிறேன். அவர்கள் மூலம் எனக்கு வந்த செய்திகளின் ஆதாரங்களின் பேரில்தான் இவர்கள் நடிக்கிறார்கள், என்று சொல்கிறேன்.’
கமலம் விழித்தாள். ‘அப்ப உங்க பசங்களை நீங்களே வேவு பாத்தீங்களா?’ என்றாள் கோபமாக.
சிவசங்கரன் அவளை உற்றுப்பார்த்தார். ‘நம் பசங்களை பற்றி நான் உண்மை தெரிந்து கொள்ளச் செய்யும் செயல் வேவு என்று எனக்குத் தோன்றவில்லை.’
‘என்னவோ பேசறீங்க? சரி. இப்ப நீங்க என்னதான் சொல்ல வரீங்க?’
‘நம்ம பசங்க நம்ம கிட்டயே நடிச்சுட்டு போய்ட்டாங்க என்கிறேன்.’
‘எது நடிப்பு?’
‘அம்பிகா இப்போ தினேஷுடன் இல்லை…அவளும், பிள்ளையும் தனியா இருக்காங்க.’
‘என்ன காரணம்?’
‘மனப்பொருத்தம் இல்லை..பிரிந்து விட்டார்கள்..’
‘ஒரு பிள்ளை பிறந்த பிறகா?’
‘ஆமாம்.’
‘என்ன காரணம்?’
‘தினேஷுக்கு வேறொரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு!’
‘என்னது?’
‘ஆமாம். அவன் அம்பிகாவை விட்டு ‘டிவோர்ஸ்’ பெற்றுக்கொண்டு நாலு வருஷம் ஆகிறது.’
‘டிவோர்ஸ்?’
‘ஆமாம்.’
‘அவர்கள் இருவரும் இப்போ வெவ்வேறு இடத்தில் இருக்கிறார்கள்.’
கமலம் பேசவில்லை.
‘ஏன் நம்ம கிட்ட சொல்லலை?’
‘சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்பே? புத்திமதிதானே? அதெல்லாம் கேக்கற நிலையில அவங்க இல்ல இப்போ.’
‘அம்பிகா அவள் வேலைல இருக்கா இல்லையா?’
‘ஓ …இருக்கா…அதிலே அவளுக்கு நல்ல பேர்தான்.’
கமலம் பேசவில்லை. சிறிய மௌனத்திற்கு பின் கேட்டாள்.
‘சரி. தருண் என்ன பொய் சொன்னான்?’
‘அவன் கூட வந்தது அவன் பொண்டாட்டி இல்ல.’
‘என்னது?’
கமலத்தின் குரல் நடுங்கியது.
‘பின்ன யார்?’
‘அவனோட ஒரு நெருங்கிய தோழி.’
‘அப்ப என்ன? பிடிச்சா அவளையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே?’
சிவசங்கரன் கமலத்தை கூர்ந்து பார்த்தார்.
‘பிடிச்சாத்தானே?’
‘ஏன்? அந்த பொண்ணு நல்லாத்தானே இருக்கா?’
‘ஆமாம்.’
‘பின்ன என்ன பிரச்சனை?’
‘அவனுக்கு பிடிக்க வேண்டாமா?’
கமலம் விழித்தாள். ‘ஏன் பிடிக்கலை?’
சிவசங்கரன் அவளை கூர்ந்து பார்த்தார்.
‘அவனுக்கு பெண்கள் மீது ஈர்ப்பு கிடையாது?’
‘அப்படீன்னா?’
‘அவனுக்கு ஆண்களைத்தான் பிடிக்கும்.’
கமலத்திற்கு மின் அதிர்ச்சி அவளைத் தாக்கியது போல் இருந்தது.
‘என்னங்க இது?’
‘ஆமாம்…அவன் பிறவி அப்படி…குற்றம் யார் மீதும் இல்லை. இயற்கையின் மீதுதான். அவனை அப்படி உருவாக்கிய கடவுள்தான் காரணம்.’
கமலம் தாங்கமுடியாமல் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.
சிவசங்கரன் அவளை சற்று நேரம் அழ விட்டார்.
பின் சொன்னார். ‘அவரவர் வாழ்க்கை, அவரவர் உரிமை. அந்த காலத்தில் சமூக நிர்ப்பந்தங்கள் பலரது தனி வாழ்க்கையை வேறு விதமாக தாக்கியது. இந்தக் காலம் வேறு விதமாக அவர்களை அழைத்துச் செல்கிறது. அவ்வளவுதான். இதில் நியாயம் வழங்க உனக்கோ எனக்கோ என்ன உரிமை இருக்கிறது? ‘மாருக்கு மிஞ்சினால் மாமன், தோளுக்கு மிஞ்சினால் தோழன்’ என்பது நம் முதுமொழி தானே? அதை நினைத்துப்பார். நம்மை அவர்கள் இன்னும் மனதில் வைத்து வந்து நம் மனம் நோகாமல் பார்த்து விட்டு சென்றுருக்கிறார்களே? அதை நினைத்து சந்தோஷப்படு. திருப்தி படு. இனி உலகம் இப்படித்தான் மாறிக்கொண்டே இருக்கும். என் வழிதான் சரி, உன் வழி தவறு என்று சொல்ல முடியாது. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு. அவ்வளவுதான்.’ என்றார் மெதுவாக ஆனால் உறுதியாக.
அவர் குரல் கூடச் சற்று கரகரத்து அழுகை தோன்றியது போல் கமலத்திற்கு தோன்றியது. ஒன்றும் பேசாமல், சற்றே நடுங்கு அவர் கைகளை பற்றிக் கொண்டாள் கமலம்.