This entry is part 9 of 9 in the series 28 டிசம்பர் 2025

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்

பீரெவி தை ஹரிஃபான் பிகேஷிட் யாரே மாரா

செல்லுங்கள் நண்பர்களே எனது அன்பானவனை மீளுங்கள்

கொண்டு வாருங்கள் அந்த தப்பியோடிய விக்கிரகத்தை

இனிய கானத்தோடும் தங்கச் சாக்குக்களையும் சொல்லி

கொண்டு வாருங்கள் அந்த அழகிய நிலா முகத்தை.

அவனது சூரிய வெளிச்ச முகம் பல விளக்குகளையே கொல்லும்போது

அததகைய அவன் பிரகாசத்தின் முன் அழகுக்கு எங்கே மகிமை?

  • பாரசீகக் கவிஞர் ரூமி

முதலாளி ரபீக், தக்கார் மாகாணம், ஆப்கானிஸ்தான்

இன்று இந்த வீட்டில், பாரசீகப் புலவர் ரூமியின் பாடலுக்கு, ரூபாப் இசைக்கருவியை, இசைத்துக்கொண்டிருந்தது அந்த பச்சா பாசிப் பையன் நபீல் அல்ல. நான்தான்.

நானும் ரூபாப் இசைக்கக் கற்றுக்கொண்டு இருக்கிறேன். நபீலுக்கும் ரூபாப் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தவன் நான்தான். எங்கள் இருவருக்குமே ஒரே குரு தான்.

ஆனால், எங்கள் குரு எப்போதும் நபீலின் திறமையை மட்டுமே வியந்து போற்றுவார். ஒரு பச்சா பாசிப் பையனை இந்த அளவிற்கு ஒரு கஜல் கலைஞராக வளர்த்து இருக்கிறேன் என்பதில், அவன் முதலாளி ஆகிய எனக்குப் பெருமைதான்.

நான் இசுலாமிய இசையின் ரசிகன். அதுவும், அந்த இசுலாமிய இசை, ஒரு கஜல் பாடல் என்றால், அந்த கஜல் பாடலைக் கேட்டே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் ஒரு தீவிரமான கஜல் ரசிகன்.

நான், இசுலாம் மீது பெருமதிப்புக் கொண்டவன். ஐந்து நேரம் நான் தொழுகிறவன். ஆப்கானிஸ்தானில் வசிக்கும் உஸ்பெக்கிஸ்தான் வழிவந்த தலைமுறையினரில், எங்கள் உஸ்பெக் குடும்பம், என்றென்றும் ஒரு கொடையாளிக் குடும்பம்தான். நானும் ஒரு பெரிய கொடையாளிதான். ஆனால், அது குறித்து இங்கே பேச விரும்பவில்லை.

எனக்கு வயது அறுபது, நான் ஒரு உஸ்பெக் பழமைவாதி. வளரும் உலகத்தின் எவ்வளவோ புதுமைகளை நானும் விரும்பினாலும், செக்ஸ் விசயத்தில் நான் ஒரு உஸ்பெக் பழமைவாதிதான்.

உஸ்பெக் கலாச்சாரத்தில், வசதி இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். அப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி வேண்டாம் என்றால், ஒரு பச்சாபாசியைப் பிடித்துக்கொள்ள வேண்டியதுதான். மிச்சமுள்ள செக்ஸ் வாழ்க்கையை ஓட்டவேண்டியதுதான்.

இந்த நாட்டில், ஆட்சிக்கு வருகிற ஒருவன், ‘பச்சாபாசி வேண்டாம்’ என்பான். ஆட்சி மாறினால், இன்னொருவன் ‘பரவாயில்லை.. பச்சாபாசி இருந்துவிட்டுப் போகட்டும்’ என்பான். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், “பச்சாபாசி என்பது ஒரு பணக்கார அடையாளம்.. பணக்காரப் பெருமை” என்ற பழமைவாதம் ஒழியும் வரை, இந்த பச்சாபாசி ஆட்டம் இருக்கத்தான் செய்யும்.

நான் ஒரு கலாரசிகன். எனது மனைவி அழகானவள்தான். மிகவும் அன்பானவள்தான். ஆனால், அவளுக்கு ஏனோ, செக்ஸில் பெரிய நாட்டமில்லை. அவளது அந்த உடலுணர்வை நான் மதிக்கிறேன்.

ஆனால், எனது தினவெடுத்த உடம்புக்கும், என் மனைவியால் நிறைவேற்றிக்கொள்ள முடியாத செக்ஸ் ஆசைக்கும், எனக்கு நிச்சயம் இன்னொரு பெண் வேண்டும். நான் முற்றும் துறந்த முனிவர் அல்ல.

ஆனால், எனது மனைவியின் அன்பிற்கு முன்னால், இன்னொரு பெண்ணை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியவில்லை.

என்னோடு வாழ்வில் பயணிக்கும் எனது இன்னொரு நண்பன்தான், முதன்முதலில் இந்த பச்சாபாசிக்கு என்னைக் கூட்டிப்போனான். அங்கே போய்ப் பார்த்தபோதுதான் எனக்குப் புரிந்தது. எனது பல பணக்கார உஸ்பெக் உறவினர்களும், இந்த பச்சாபாசிக்கு தீவிர ரசிகர்கள் என்று.  

எனக்கு சிறுவர்களோடு உடலுறவு கொள்ள நிச்சயம் விருப்பம் இல்லை. ஆனால் அந்த பச்சாபாசிக் கூடத்தில், பருவமடைந்த பதின்மவயது வாலிபர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் நபீல்.

செக்கச்சிவந்த நிறம் உடையவன் நபீல். ஆனால் அவனுக்கு பெண் போல ஆட அவ்வளவு தெரியாது. பெண் உடை போட்டு வந்தாலும், நபீல் பார்ப்பதற்கு பெண் போல அவ்வளவு தோன்றமாட்டான்.

இந்த ஒரே காரணத்திற்காக, எனது நிறைய நண்பர்கள், அவனை நாட மாட்டார்கள். எப்போதாவதுதான் நபீலுக்கு சில வாடிக்கையாளர்கள்.

ஆனால் நபீல் போல பாடுவதற்கு அந்த பச்சாபாசி விபச்சாரக் கூடத்தில் யாரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படி உருகி உருகிப்பாடுவான்.

விபச்சாரமே என்றாலும், சுத்தத்தை விரும்பும் நான், யாரும் தேர்ந்தெடுக்க விரும்பாத நபீலைத் தேர்ந்தெடுத்தேன். அப்போது, அவனுக்கு வயது பதினாறு. கூடவே அவனின் அந்தப் பாடல் திறமை, “எனக்கேற்றவன் இவன்தான்” என்று என்னை நினைக்கத் தூண்டியது.

எங்கள் கலாச்சாரத்தில், பதினாறு வயதடைந்த பருவ மங்கையை, கல்யாணம் செய்து கொள்ளுதல் என்பது அனுமதிக்கப்பட்ட விசயம்தான். நபீலுக்கும் வயது அதே பதினாறுதான் என்று எனக்கு நானே ஒரு நொண்டிசாக்கைத் தேடிக்கொண்டேன்.

நிறையப் பணம் கொடுத்து நபீலை விலைக்கு வாங்கி, ஒரு தனி வீட்டில் தங்கவைத்தேன். வெறும் விபச்சாரி என்றே அவனைக் கருதாமல், அவனுக்கு நல்ல உணவு, நல்ல உடை, நல்ல கல்வி, நல்ல கஜல் இசை படிக்க ஏற்பாடு என்று வாரி வழங்கினேன். எனது இந்த கவனிப்பு, நபீலை எனது விசுவாசி ஆக்கியது.

“நபீல் நீ என் முன்னால் பெண் உடை அணிய வேண்டாம். பெண் போல நடனம் ஆட வேண்டாம். ஆனால் எனது படுக்கை அறையில் மட்டும், நீ எனக்கு ஒரு பெண் போல நடந்துகொண்டு, என்னை திருப்திப் படுத்தினால் போதும்” என்று நான் சொன்னபோது, “சரிங்க முதலாளி” என்று உடனே தலையாட்டினான்.

“மீசையை மட்டும் எடுத்துவிடு” என்று நான் சொன்ன நாளில் இருந்து தினம் அவன் சவரம் செய்துகொள்வான்.

ஆறு வருடம் கழித்து, போன வாரம்தான், எனது கிராமத்திற்கே கூட்டி வந்து இங்கே தங்க வைத்து இருக்கிறேன்.

இப்போது அவனுக்கு வயது இருபத்தி இரண்டு. இந்த ஐந்து வருடத்தில், படுக்கையறையில் அவன் என்றும் இயங்கியது இல்லை. நான்தான் இயங்குவேன். அவனையும் இயக்குவேன்.

நான் என்ன சொல்கிறேனோ, அதைத் தட்டாமல் செய்து, என்னை சந்தோசப்படுத்துவதிலேயே குறி ஆக இருப்பான். அவனால், எனது மனைவி தராத பல செக்ஸ் சந்தோசத்தை என்னால் அடைய முடிந்தது.

ஆனால் நேற்று நடந்தது அதுவல்ல. நேற்று படுக்கையில் நான் கீழே. அவன் மேலே.  எனக்கு முதன்முதலில் அது ஆச்சரியம் ஆக இருந்தது.

நபீல் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான், நேற்றைய அவனது கடுமையான போதையில் இருந்து இன்னும் அவன் மீளவில்லை போலும். நான் அறியாமலேயே, நேற்று அவன், எவ்வளவு இன்னும் குடித்தானோ?

எனக்குக் கொஞ்சம் காலாற வெளியே நடந்துவிட்டு வரவேண்டும் போலத் தோன்றியது. நான் ரூபாபைக் கீழே வைத்து விட்டு வெளியே நடக்கத் துவங்கினேன். எனக்குள் பல சிந்தனைகள். 

நான் என்னை, ஆண்மை நிறைந்த ஆண் என்றுதான் சொல்லிக்கொள்கிறேன். ஒரு பெண்ணுக்கு மாற்றாகத்தான் நான் ஒரு பச்சாபாசியை வைத்துக்கொண்டு இருக்கிறேன். இவ்வளவு வருடங்களும், அந்த பச்சாபாசிப் பையன் மீது நான்தான் இயங்கினேன்.

அப்போதெல்லாம், அந்தப் பையன், எனக்கு சந்தோசங்களை அள்ளிக் கொடுத்ததாக நான்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், நேற்று நடந்தது அப்படியில்லை.

நேற்று அந்தப் பையன் என் மேல் ஏறிப் படுத்தபோது அவனை நான் நெட்டித் தள்ளியது உண்மைதான். ஆனால், ஆனால் நேரம் செல்லச்செல்ல, அவன் என் மேல் இருந்து கீழே இறங்காது என் மேல் இயங்கிய போது, நான்… நான் ஒரு வித சந்தோசத்தையே அனுபவித்தது போல இருந்தது.

அப்படியென்றால், எனக்குள்ளும் கொஞ்சம் பெண்மை இருக்கிறதா? ஆணுக்குள்ளும் பெண்மை இருக்கிறது… பென்மைக்குள்ளும் ஆண்மை இருக்கிறது என்று சொல்லுகிறார்களே அது உண்மையா?

எனது உஸ்பெக் சொந்தங்களில் பலர் இந்த பச்சாபாசி பழக்கம் உள்ளவர்கள்தான். அவர்களது பச்சாபாசிப் பையன்கள் பலருக்கு இப்போது நாற்பது வயது ஆகிறது. இருந்தும், அவர்களை கூடவே வைத்துக்கொண்டு, அந்த பச்சாபாசி ஆண்களுக்கு ஏதாவது பணியாள் வேலை கொடுத்து, வெளியே தெரியாமல் அவர்களோடு உறவு கொள்கிறார்கள்.

அப்படி நாற்பது வயதைக்கடந்த அந்த எல்லா பச்சாபாசிகளும், பெண்மை உடையவர்கள் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. அப்படி என்றால், எனது உஸ்பெக் சொந்தங்கள், தங்கள் வயது கூடக்கூட, நேற்று நபீல் என்னைப் பெண் ஆக்கியது போல, தங்களை ஆக்கிக்கொள்ள, அனுமதி கொடுக்கிறார்களா? அப்படி நடந்து கொள்வது  வெளியே தெரிந்தால், தங்கள் தன்மானத்திற்கு இழுக்கு என்று, வெளியே, உண்மையைச் சொல்லாமல் விட்டு விடுகிறார்களா?

எனக்குள் குழப்பம் கூடிப்போனது. அந்தக் குழப்பத்துடன் ரொம்பநேரம் நடந்து, பின்னர் வீடு திரும்பினேன். கூடத்தில், நபீல் குளித்து முடித்து இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.

என்னைப் பார்த்ததும் “ஐயா என்னை மன்னியுங்கள் நேற்று….” என்று சொல்லிக்கொண்டே என் கால்களில் விழுந்தான்.

நான் அவனைத் தூக்கி நிறுத்தி, அருகில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தேன்.

“உன்னை ஏன் நான் மன்னிக்க வேண்டும்? நேற்றைய உனது உணர்வுகள் நியாயமான உறவுகள்.” என்றேன். அவன், நான் சொல்வது புரியாமல் என்னைப் பார்த்தான். நான் தொடர்ந்தேன்.

“அறியாத சிறுவர்களாகவே எல்லா பச்சாபாசிப்பையன்களும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். எல்லாத் தொழிலாளர்கள் போலவே, இந்தச் சிறுவர்களும் அந்தத் தொழிலுக்கு ஏற்ப பழக்கப்படுத்தப்படுகிறார்கள் ஆனால் ஒரு பெருங்குறை..” நான் ஒரு பெருமூச்சு விட்டுத் தொடர்ந்தேன்.

“ஆனால் யாருமே அந்த சிறுவர்களின் விருப்பத்தையோ, அவர்களது செக்ஸ் விருப்பத்தையோ கண்டுகொள்வதேயில்லை. இந்த விஷயத்தில் நான் உட்பட ஒரு குற்றவாளிதான்.” சொல்லிக்கொண்டே நான் அவன் தோள்களைப் பிடித்துக்கொண்டேன்.

“நபீல்.. நேற்று நீ எனக்கு பாடம் சொல்லித்தந்து இருக்கிறாய். உனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதுதான் என்னைப் போன்ற பெரிய மனிதனின் பண்பாக இருக்கவேண்டும். எனவே, நாம் இனி பிரிந்து விடுவோம்”

எனது இந்த பிரிவு வார்த்தைகளை நபீல் எதிர்பார்க்கவில்லை போலும். அவன் விசும்பி விசும்பி அழுதான்.

“ஐயா.. என் போல உங்களுக்கு பணிவிடை செய்ய ஆள் யார் இருக்கிறார்கள்?” அவன் கேட்ட கேள்வியில், அவனது வேலைக்கார விசுவாசம் தெரிந்தது.

“நான் அறுபது வயதைத் தாண்டிவிட்டேன். நேற்று நடந்த நிகழ்வில், நான் தளர்ந்து போன விசயமும் எனக்குத் தெரிந்து போனது. உன்னை வைத்துக்கொண்டு, நான் இனி ஒரு பெண்ணாக வாழ எல்லாம் எனக்குத் துளியளவும் விருப்பம் இல்லை. நான் என்றென்றும் ஆண்தான்” நான் எனது மீசையைத் தடவிக்கொண்டே பேசினேன்.

“உனக்கு குல்பாரி மீது அதிக ஆசையா? நேற்று குல்பாரி… குல்பாரி என்று உளறிக்கொண்டே இருந்தாயே?” நான் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன், அடுக்களையில் இருந்து பாத்திரம் தரையில் விழும் சத்தம் கேட்டது.

“யாரங்கே… வெளியே வாங்க” என்றவுடன், குல்பாரிதான் பயந்துகொண்டே வெளியே வந்தாள். நான் வீட்டை விட்டு, இன்று வெளியே நடக்கப்போன போது, இவள் உள்ளே வந்து இருக்கவேண்டும்.

“நாங்க இருவரும் பேசிக்கொண்டு இருந்தது அனைத்தையும் நீ கேட்டாயா?” எனது அதட்டல் குரலுக்கு, பயந்துபோன குல்பாரி, தலையைத் தலையை ஆட்டினாள்.

“குல்பாரி, உனக்கு நபீலைப் பிடித்து இருக்கிறதா?” அதற்கும் அவள், ஆம் என்று தலையாட்டினாள்.

எனக்கு சிரிப்பு வந்தது. உள்ளறைக்குப் போய் ஒரு பணக்கட்டை எடுத்துவந்து, நபீலிடம் கொடுத்தேன்.

“இருவருமே போய் வாருங்கள். எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள்.”

நான் உறுதியோடு சொன்னேன். “நபீல் உன் நினைவில் இருந்து விடுபட்டு, எனது மனைவியிடமும், குழந்தையோடும், எனது முழு அன்பைக் காட்ட ஆசைப்படுகிறேன்.. எனவே ஒரு போதும் இங்கே திரும்பி வந்து விடாதே”

நான், சொல்லிமுடித்து திரும்பிப் பார்க்காமல் வாசலை நோக்கி வெளியே நடந்தேன்.

காலையில் கனத்து இருந்த இதயம் இப்போது இலகுவாகிப் போனது. நான் சந்தோசமாக வெளியே நடந்து கொண்டு இருந்தேன்.

திருமதி ஆயிசா பேகம், தக்கார் மாகாணம், ஆப்கானிஸ்தான்

ரபீக் மாமா இன்னும் வீடு வந்து சேரவில்லை. நபீலும், மாமாவும் இருக்கும் அந்த வீட்டிற்குச் சென்ற குல்பாரியும் இன்னும் வீடு திரும்பவில்லை. அந்த வீட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கிறதோ? எனக்கு பதட்டமாக இருந்தது.

நான் எனக்குத் தன்னம்பிக்கை தரும்படி இறைவனை வேண்டினேன். என்ன ஓர் ஆச்சரியம்… அப்பாவிடம் கடிதம் கொடுக்கச் சென்று இருந்த வேலைக்காரன், அவர் கொடுத்த பதில் கடிதத்துடன், என் முன்னால் வந்து நின்றான்.

“என்ன நாசர்… உடனே திரும்பிவிட்டாயே.. அப்பா வீட்டிலேயே ரெண்டு நாள் தங்கி வரவேண்டியதுதானே? நான் இப்படிச் சொன்னதுமே, நாசர் சிரித்தான்.

“நானும் அப்படி நினைச்சுக்கிட்டேதான் அங்கே போனேனம்மா. அங்க உங்க அம்மா செய்யுற சாப்பாடு மாதிரி எங்கேயம்மா கிடைக்கும்?”

நான் சிரித்தேன். “அப்புறம் என்ன நடந்தது?”

“உங்க அப்பா வழக்கம் போல, உங்க கடிதத்ததை வாங்குன உடனே படிச்சு முடிச்சுட்டாரு. ஆனா, எப்பவும் உடனே பதில் கடிதம் எழுத உட்கார மாட்டாரு.. ஆனால் இந்த முறை உடனே உட்கார்ந்து ரொம்ப நேரம் கடிதம் எழுதுனாரு. உடனே என்னிடம் பதில் கடிதத்தைக் கொடுத்து, ‘போற வழியிலே சாப்பிட்டுக்கோ’ என்று கொஞ்சம் பணமும் கொடுத்து, போய்ட்டு வான்னு அனுப்பிட்டாரும்மா” என்று நாசர் சொன்னவுடன், எனது கண்கள் குளமானது.

மகளின் தவிப்பு என்ன என்று அந்த தந்தைக்குத் தெரியாதா? நான் மனம் கலங்கி எழுதியதைப் பார்த்து அவர் உடனே பதறி இருப்பார்.

“சரி நாசர்.. நீ போய் ஒய்வு எடு.. அப்புறம் மற்ற தோட்ட வேலைகள் பார்” என்றேன். அவன் போய்விட்டான். நான் கடிதத்தைப் பிரித்து படிக்கலானேன்.

அன்புள்ள எனது செல்ல மகளுக்கு,

அப்பா எழுதிக்கொண்டது. எல்லாம் வல்ல இறைவன் உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசிர்வதிக்கட்டும். பேரன் ஹபீசிற்கு எனது முத்தங்கள்.

என்னையும் எனது கல்வித் தொண்டுகளையும் புகழ்ந்து எழுதி இருந்தாய். அம்மா… நன்றிகள். ஆனால், நான் ஆப்கானிஸ்தான் கல்வி முன்னேற்றத்துக்கு இன்னும் நிறையச் செய்ய வேண்டும் அம்மா. ஆனால், எனக்கோ 75 வயதாகிவிட்டது. என்ன செய்வது?

இங்கே காபூல் பல்கலைக்கழகத்தில்தான் நான் பட்டம் பெற்றேன். உனக்குத் தெரியுமா அம்மா. நான் காபூல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலங்களில், அங்கே எப்போதும் மாணவர் போராட்டம்தான்.

ஒரு புறம் இசுலாமிய மாணவர் யூனியன்கள், இன்னொரு புறம் சோவியத் ஆதரவு கம்யூனிஸ்ட் மாணவர் யூனியன்கள். இரண்டிலும் சேராது நடுநிலை வகித்த என்னைப்போன்ற கல்லூரி மாணவர்கள். எப்போதும் ஏதாவது போராட்டம். அடிதடி தகராறு. அத்தனையும் கடந்து போக வேண்டி இருக்கும். அப்படி எல்லாம் கஷ்டப்பட்டுத்தான், நான் பட்டம் பெற்றேன்.

கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் இருந்தவரை, பள்ளி ஆரம்பக்கல்வி, மற்றும் உயர்நிலைக் கல்வி என்ற இரண்டுமே, நல்லபடியாகவே போய்க்கொண்டு இருந்தது. நிறையப் பெண்கள் கல்லூரி வரை போய் கல்வி கற்றார்கள். கலவி, மற்றும் வேலை வாய்ப்பில், பெண்கள் ஆண்களுக்கு சமமாக இருந்தார்கள்.

ஆனால், முஜாஹிதீன் ஆட்சியைப் பிடித்த போதே, பெண்கல்வி அங்கே ஆட்டம் காண ஆரம்பித்தது என்பதே உண்மை. முஜாஹிதீன்களுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ஒரு போர் நடந்த்து.

பின்னர், முஜாஹிதீன்களுக்கு இடையேயே, இரு பிரிவாகி, ஒரு ஆட்சிப் பிடிப்பு கலவரம் நடந்தது. அப்புறம் முஜாஹிதீன்களுக்கும் தலிபான்களுக்கும் இடையே போர் நடந்தது. அப்புறம் தலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு போர். ஐயகோ… இத்தனை போரிலும் அதிகம் பாதிக்கப்பட்டது ஆப்கானியப் பெண்கள்தான்.

பெண்களின் படிப்பு இப்போது ஆரம்பப் பள்ளிகளோடு நின்று போனது. அப்புறம் எங்கிருந்து பாடம் சொல்லிக்கொடுக்க பெண் ஆசிரியைகள் கிடைப்பார்கள்? பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஆசிரியை கூட இல்லை. அப்புறம் பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து என்ன பயன்?

ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள். அதனால், பள்ளி செல்ல மறுக்கும் பல ஏழை மாணவர்கள். என் மகளே.. இங்கிருந்துதான் பச்சாபாசிப் பையன்கள் ஆரம்பிக்கிறார்கள்.

மகளே… உண்மைதான். நான் நல்லது மட்டுமே உனக்குச் சொல்லிக் கொடுத்தேன். கெட்டது எதுவும் அவ்வளவு உனக்கு நான் சொல்லிக் கொடுக்கவில்லை. அந்தக் கெடுகெட்டவைகளில் ஒன்றுதான் இந்த பச்சாபாசி பழக்கம்.

பச்சாபாசி என்ற வார்த்தை ஆப்கான் வார்த்தையாக இருக்கலாம். ஆனால், இந்த சிறுவர் விபச்சாரம், உலகம் முழுவதிலும் ஏதாவது ஒரு வடிவில், ஏதாவது ஒரு பெயரில் இருந்து கொண்டுதான் இருக்கிறது அம்மா.

மதங்கள் தோன்றாத காலத்து உலகின் பழங்குடிகளில் ஆரம்பித்து, கிரேக்கத்தின் தத்துவ ஞானி சாக்ரட்டிஸ் காலத்தில் முதிர்ந்து. மாவீரன் அலெக்சாண்டர் காலத்தில் பரவிய இந்த சிறுவர் உடலுறவு, துருக்கி, பாரசீகம், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான்,  கஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான் வழியாக, ஆப்கானிஸ்தான் வந்தடைந்த ஒரு கேடுகெட்ட விஷயம்தான் இந்த பச்சாபாசி பழக்கம் அம்மா.

மகளே, இந்த ஐம்பது வயதில், நீ தெரிந்துகொள்ள வேண்டிய விசயம்தான் இது. உலகில் இன்றுவரை அழியாத ஆதி தொழில் என்ன தெரியுமா? விபச்சாரம்தான்.

ஒரு ஆணுக்கு, பெண் செக்ஸ் தேவை என்றால் அங்கே, இயல்பாகவே, பெண்கள் விபச்சாரம் தோன்றி விடுகிறது. ஆனால், நமது மதம், பெண்கள் விபச்சாரத்தை கடுமையாகக் கட்டுப்படுத்துவதால், அது ஆண்கள் விபச்சாரமாக மாறிப் போகிறது.

இப்படித் தோன்றியதுதான் பச்சாபாசி பழக்கம்.  உஸ்பெகிஸ்தான் தஜிகிஸ்தான், கஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை ஆண்டு கொண்டிருந்த பொக்காரா எமிரேட்ஸ் என்ற அரச பரம்பரையே, பொது இடங்கள், விற்பனை அங்காடிகள், மதுக்கூடங்கள் போன்ற இடங்களில் வேலை பார்த்த பெண்களை வீட்டுக்குப் போகச்சொல்லிவிட்டு, ஆண்களை அங்கே, முதன்முதலில் வேலை செய்ய நியமித்தது. இங்கிருந்து ஆரம்பித்ததே பச்சாபாசி விபச்சாரம்.

கவிதைகள் எழுதிய நம் அரபுப் புலவர்கள் மற்றும் பாரசீகப் புலவர்கள் பலருமே, பெண்களை, தங்கள் கவிதைகளில் புகழ ஆசைப்பட்டவர்கள்தான். ஆனால், பல சட்ட திட்டங்களுக்குப் பயந்து, “அன்பே” என்று பொதுவாக விளித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துவிட்டுப் போனார்கள்.

சில புலவர்கள், “அன்பே” என்ற வார்த்தைகளில், ஆண்களையும் வர்ணித்து, தத்தம் தன்பாலின உணர்வை மறைத்துக் கொண்டார்கள்.  இப்படி காமரசம் ததும்பும் கஜல் கவிதைகள், அரபு , பாரசீகம், உருது, சீக்கிய, மற்றும் இந்திய புலவர்களால், நிறைய எழுதப்பட்டன.

இன்று பச்சாபாசி விபச்சாரக் கூடங்களில் பாடப்படும், ஆடப்படும் பெரும்பாலான பாடல்கள், இவை போன்ற காமரசம் ததும்பும் பாடல்களே.

மகளே.. நம் மாப்பிள்ளை நல்லவர்தான். நன்கு படித்தவர்தான். இயற்கையான செக்ஸ் உணர்வு அவரைப் பாடாய்ப் படுத்துகிறது. காலம்தான் இதை குணப்படுத்த முடியும்.

நீயே, நீ எழுதிய கடிதத்தில் ஒத்துக்கொள்கிறாய். உனக்கு செக்ஸ் உணர்வுகள் குறைந்து போனதென்று. அப்படி இருக்க, இயற்கையிலேயே, அதிக செக்ஸ் உணர்வு இருக்கும் மாப்பிள்ளை என்னதான் செய்வார்?

வேறு ஒரு பெண்ணை அவர் கல்யாணம் செய்து கொள்ளலாம். அதற்கு நம் சட்டம் இடம் தருகிறது. ஆனால், இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதில், அவருக்கோ இஷ்டமில்லை. மாப்பிள்ளையின் இந்த உணர்வு, உன் மீது அவர் வைத்துள்ள அதிக அன்பின் காரணமால்தானே அம்மா?

மகளே.. நான் என்னதான் பெண் கல்வி பெறுவதற்கு உழைத்தாலும், நிச்சயம் இந்த ஆப்கானிய சமூகத்தை, பெரிதும் மதிப்பவன்.  சிறுவர் உடலுறவு நிச்சயம் கண்டிக்கத்தக்கது. ஆனால், மாப்பிள்ளைக்கு வேறு வழியில்லை போலும். காலம் நிச்சயம் மாறும். அவர் உன் குடும்பமே கதி என்று வாழும் நாள், மிக விரைவில் வரும்.

எல்லாம் வல்ல இறைவன் அதற்கு உதவி செய்வார் மகளே. அதுவரைப் பொறுத்திரு. எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் நிகழும் என்ற தன்னம்பிக்கையோடு இரு.

அன்புடன்

அப்பா

நான், கடிதத்தைப் படித்து முடித்து, மூடி வைத்தேன். எனது மனம் மிகவும் இளகுவாகி இருந்தது.

வாசலில் ஏதோ நிழலாடியது. நான் திடுக்கிட்டுப் பார்த்தேன். வாசலில் என்னையே பார்த்தவாறு ரபீக் மாமா நின்று கொண்டு இருந்தார். ஒன்றும் என்னிடம் பேசாது படுக்கையறைக்குப் போய் படுத்துக்கொண்டார். நான் பயந்து போய், அவரைப் பின்தொடர்ந்து படுக்கையறையில் நுழைந்து, கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.

நான் படுக்கையில் உட்கார்ந்ததுதான் தாமதம். அவர் எழுந்து எனது நெஞ்சில் படுத்துக்கொண்டார். ஏதோ ஒரு குழந்தை போல மாறி, ஏதோ சொல்லவந்து, அதைச் சொல்ல முடியாமல், விசும்பிய அவரைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

‘ஆயிசா… அந்த பச்சாபாசி நபீலை, என்னை விட்டு நிரந்தரமாக போகச்சொல்லி விட்டேன். அவனும், குல்பாரியும், இங்கே உன்னைத் தேடி வரலாம். அவர்கள் இருவரையும் வாழ்த்தி அனுப்பிவை.

ரபீக் மாமா தூங்கிப் போனார். அவர் சொன்னபடியே இருவரையும் நான் மனதார வாழ்த்தி அனுப்பினேன்.

நானும் குல்பாரிக்கு நகையும் பணமும் கொடுத்து அனுப்பினேன்.

தொடரும்

அழகர்சாமி சக்திவேல்

சிங்கப்பூர்

Series Navigationபெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் – அத்தியாயம் 6