யுவராஜ் சம்பத்
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மிகப்பெரிய உற்பத்திக் கூடமாக விளங்கிய சீனா, கடந்த 25 ஆண்டுகளில் எவ்வாறு உலகத் தரம்வாய்ந்த ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவியது என்பது குறித்த செய்தி சுருக்கமே இந்தக் கட்டுரை.
90-களின் இறுதியில் உலக வர்த்தக அமைப்புகளில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்த்து உலகம் காத்திருந்த காலகட்டத்தில், என் ஏற்றுமதி வியாபாரம் தொடர்பாக மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இயந்திரங்களின் பொருட்காட்சிக்கு நான் சென்றிருந்தேன்.
2000-ஆம் ஆண்டில் இறக்குமதி–ஏற்றுமதி கோட்டாக்கள் (Quotas) நீக்கப்பட்டதை கட்டுப்படுத்திய அமைப்பு உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization – WTO) ஆகும். இதற்கு முன்னர், பல–இழை ஒப்பந்தம் (Multi-Fiber Arrangement – MFA) மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வந்த உடை மற்றும் நூல் பொருட்களின் உலகளாவிய வர்த்தகம், WTO-வின் உடை மற்றும் நூல் பொருட்கள் ஒப்பந்தம் (Agreement on Textiles and Clothing – ATC) கீழ் படிப்படியாக கோட்டாக்கள் நீக்கப்பட்டு, 2005 ஜனவரி 1-ஆம் தேதியுடன் முழுமையாக விடுவிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற உற்சாகத்துடன் சீனா களத்தில் இறங்கியது.
நான் ஒரு இயந்திரத்தின் விலையை கேட்டுப் பார்த்து, அதன் சோதனை ஓட்டத்தை முடித்து, ஒரு குறிப்பிட்ட இயந்திரத்திற்கே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, அங்கு வந்த சீன ஏற்றுமதியாளர்கள் அதே இயந்திரத்தை நூற்றுக்கணக்கில் வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். இதுபோல பல்வேறு துறைகளில் இருந்த வியாபாரிகள் பல்வேறு இயந்திரங்களை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வாங்கினார்கள். உலகமே வியந்து பார்த்த தருணம் அது.
2000 ஜனவரி 1-ஆம் தேதி அமெரிக்காவிற்கு ஆடை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டவுடன், சீனா ஒரே ஆண்டில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உற்பத்திப் பொருட்களை அமெரிக்க சந்தையில் கொட்டியது.
“வெண்கலக் கடையில் யானை புகுந்தது” என்பதுபோல், பெரும் ஆரவாரத்துடன் தொடங்கிய அந்த வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. அதன் விளைவாக, அமெரிக்காவை விட பொருளாதார வலிமை கொண்ட நாடாக சீனா மாறியது. இதைப் பார்த்து உலகம் வியந்தது என்பதைக் காட்டிலும், உலகம் பயந்தது என்பதே சரியாக இருக்கும்.
“என்ன நடக்கிறது? ஏன் இப்படி நடக்கிறது?” என்று பலரும் பேசிக்கொண்டார்களே தவிர, அதைக் குறித்து தீவிரமான சிந்தனையில் ஈடுபடவில்லை. அதன் விளைவையே இப்போது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய உலகப் பொருளாதாரத்தில் சீனா அமெரிக்காவை மிஞ்சியிருக்கிறது என்பதற்கு பல காரணிகள் உள்ளன. பல்வேறு உற்பத்தித் துறைகளில் சீனா முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, தானியங்கி போக்குவரத்து (Autonomous Vehicles), மின்சார வாகனங்கள், புதிய மருந்துகள் ஆகிய துறைகளில் உலகின் முன்னணி நாடாக மாறியுள்ளது.
உலகின் நம்பர் ஒன் மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த டெஸ்லாவை சீனா பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதேபோல் மருந்து உற்பத்தியிலும் சீனா இன்று உலகின் நம்பர் ஒன்றாகத் திகழ்கிறது. அடிப்படை மருந்துகளை மட்டுமே உற்பத்தி செய்த சீனா, இன்றைக்கு புற்றுநோய்க்கான மருந்துகளையும் கண்டுபிடித்துள்ளது. இது 25 ஆண்டுகளாக மேற்கொண்ட உழைப்பின் விளைவு என்பதே உண்மை.
சுயேட்சையான (தானியங்கி) டாக்ஸி துறையில்—அமெரிக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்பான ரோபோ டாக்ஸி (Robo Taxi)—உற்பத்தி, செயல்படுத்தல், நடைமுறைப்படுத்தல் ஆகிய அனைத்திலும் சீனா முன்னணியில் உள்ளது. அமெரிக்க விலையின் மூன்றில் ஒரு பங்கு செலவில் இவற்றை தயாரிப்பதால், ஐரோப்பிய சந்தையில் சீன நிறுவனங்கள் மிக எளிதாக நுழைந்துவிட்டன. விரைவில் உலகம் முழுவதும் இவை அறிமுகமாகும் நிலையில், இந்தப் போட்டியை எவ்வாறு சமாளிப்பது என்பது அமெரிக்காவுக்கு இன்னும் விடை தெரியாத புதிராகவே உள்ளது.
உலகின் மருந்து உற்பத்தியில் சுமார் 70% பங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவுக்கு, இன்று மிகப்பெரிய போட்டியாளராக சீனா உருவாகியுள்ளது. அடிப்படை மருந்துகளிலிருந்து அதிநவீன மருந்துகள் வரை சீன நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. உயிரித் தொழில்நுட்பத்தில் (Biotechnology) கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை சீன நிறுவனங்கள் பெற்றுள்ளன.
உலகின் மூன்றில் ஒரு பங்கு மருத்துவ பரிசோதனைகளை சீனா செய்து முடித்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு இது வெறும் ஐந்து சதவீதமாக இருந்தது என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 300 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ₹27 லட்சம் கோடி) மதிப்பிலான மருந்து காப்புரிமைகள் காலாவதியாகும் நிலையில், உலக மருந்து உற்பத்தியில் சீனாவின் கொடி விண்ணைத் தொடும் என்பது திண்ணம்.
இதுவரை சீனாவின் மருத்துவத் தொழில், பெரும்பாலும் ஜெனரிக் மருந்துகள் உற்பத்தி செய்வதற்கும், உலகின் பெரிய மருந்து நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை வழங்குவதற்கும், கிளினிக்கல் சோதனைகளை நடத்துவதற்குமே அறியப்பட்டது. ஆனால் இப்போது அந்த நிலைமை வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்க நிறுவனங்களை விட குறைந்த வட்டியில் எளிதாகக் கடன் கிடைப்பதும், கடினமான சட்டக் கட்டுப்பாடுகள் இல்லாததும், குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைப்பதும் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இருப்பினும், இந்த உண்மையை அமெரிக்கா இன்னும் முழுமையாக ஜீரணிக்க முடியவில்லை என்பதே நிஜம்.
இந்த வளர்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்தி, அமெரிக்காவை மீண்டும் உலகின் ஏகாதிபத்திய சக்தியாக நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், 2020–25 காலகட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு இறக்குமதி வரிகளை விதித்தார். ஆனால் அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தியது—எரியும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையில் சொரிந்தது போல.
மின்சார வாகனங்கள், மருந்துகள் மட்டுமல்லாமல், காற்றாலை, சூரிய மின் சக்தி, மின்சார வாகனங்களுக்கு தேவையான காந்தங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியைத் தடுக்கப்போவதாக சீனா மிரட்டுகிறது. இதன் மூலம் மேற்கத்திய நாடுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்காவின் NVIDIA முன்னணியில் இருந்தாலும், DeepSeek போன்ற தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி சீனா உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சுமார் 70 முக்கிய தொழில்துறைகளில் சீனா அமெரிக்காவை மிஞ்சி வளர்ந்து வருகிறது. அமெரிக்க சந்தை மூடப்பட்டாலும், பிற நாடுகளுக்குச் சீனா குறைந்த விலையில் பொருட்களை வழங்கிக்கொண்டே இருக்கிறது. ஆப்பிரிக்கா இன்னும் அமெரிக்க பொருட்களுக்கான சந்தையாக முழுமையாக மாறவில்லை.
ரோபோட் (இயந்திர மனிதன்) தயாரிப்பிலும் சீனா முன்னணியில் உள்ளது. சமீபத்திய ரோபோக்கள் கால்பந்து விளையாடுகின்றன, வாள் பயிற்சி செய்கின்றன, ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொள்கின்றன. கூடிய விரைவில் இவை தொழிற்சாலைகளைத் தாண்டி, சிறு குறு தொழில்களையும் பாதிக்கப்போகின்றன.
அதிக உற்பத்தி சீனாவின் உள்நாட்டு சந்தையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியது—வீட்டு விலைகள் சரிந்தன, வேலைவாய்ப்புகள் சில நேரங்களில் பாதிக்கப்பட்டன. ஆனால் மேற்கத்திய நாடுகள் மறந்த ஒன்று என்னவென்றால், சீனா ஒரு ஜனநாயக நாடல்ல. அதிகாரங்கள் ஒரு நபர் அல்லது ஒரு குழுவிடம் குவிந்துள்ளன. அவர்கள் நினைத்தால் பொருளாதாரத்தை எப்படியும் சமாளிக்க முடியும்.
இந்த உண்மையை மறந்த அமெரிக்கா, இன்று கொள்ளிக்கட்டையில் தலையைச் சொரிந்த கதையாக விழித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு எந்த திசையில் போகிறது என்பது மேற்கத்திய நாடுகளின் சீனாவை நோக்கிய பார்வையில் தான் இருக்கிறது—சீனாவின் பார்வையில் அல்ல.
இதை படிக்கும் உங்களுக்கு இப்படிப்பட்ட அபரிமிதமான வளர்ச்சியை பெற்ற சைனா இதன் மூலம் பெற்ற நிதி வருவாயை எப்படி செலவழிக்கிறது என்கிற ஒரு குறிப்பையும் பார்த்தாள் இன்னும் சிறப்பாக இருக்கும்..
Chasing China: Learning to Play by Beijing’s Global Lending Rules” (AidData அறிக்கை, 2025) புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் இதோ:
1. பிரம்மாண்டமான முதலீடு
சீனா 2000 முதல் 2023 வரை சுமார் $2.2 டிரில்லியன் (சுமார் ₹180 லட்சம் கோடி) நிதியை உலக நாடுகளுக்கு கடனாகவும், உதவியாகவும் வழங்கியுள்ளது. இது முந்தைய கணிப்புகளை விட மிக அதிகம்.
2. பணக்கார நாடுகளுக்கு கடன்
சீனா ஏழை நாடுகளுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறது என்ற பிம்பத்தை இந்தப் புத்தகம் உடைக்கிறது. சீனாவின் மொத்த கடனில் 76% உயர் வருமானம் கொண்ட மற்றும் வளர்ந்த நாடுகளுக்கே (உதாரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்) வழங்கப்பட்டுள்ளது.
3. உள்கட்டமைப்பில் இருந்து தொழில்நுட்பத்திற்கு மாற்றம்
முன்பு சாலைகள், துறைமுகங்கள் போன்ற கட்டுமானங்களுக்கு (BRI திட்டம்) நிதி வழங்கிய சீனா, இப்போது AI (செயற்கை நுண்ணறிவு), செமிகண்டக்டர்கள் மற்றும் பசுமை ஆற்றல் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது.
4. உதவி குறைவு, கடன் அதிகம்
சீனா இப்போது மற்ற நாடுகளுக்கு “உதவி” (Grant) செய்வதை நிறுத்திவிட்டு, முழுநேர “வங்கி” போலச் செயல்படுகிறது. சீனா கொடுக்கும் ஒவ்வொரு $1 உதவிக்கும் ஈடாக, $35 கடனாக வழங்குகிறது.
5. ரகசிய ஒப்பந்தங்கள்
சீனாவின் கடன் ஒப்பந்தங்கள் மிகவும் ரகசியமானவை. மற்ற சர்வதேச அமைப்புகளுக்குத் தெரியாமல், ரகசிய விதிமுறைகள் மூலம் நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா முயல்கிறது.
6. உலக விதிகளில் மாற்றம்
சீனாவின் இந்த அசாத்திய வேகத்தைக் கண்டு, அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 (G7) நாடுகளும் இப்போது சீனாவைப் பின்பற்றித் தங்கள் கடன் வழங்கும் முறைகளை மாற்றத் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா சமீபத்தில் எடுத்த சில தவறான முடிவுகள் அதன் நிலையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளன. முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட்ட நிதி உதவிகளை திடீரென நிறுத்தியது. அதன் விளைவாக, உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவை விட்டு வெளியேறினர்.
“சீனா எல்லாவற்றையும் காப்பி அடிக்கிறது” என்று மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால் டென்மார்க்கை தலைமையிடமாகக் கொண்ட Novo Nordisk நிறுவனத்தின் உடல் பருமன் குறைக்கும் மருந்தை அமெரிக்க நிறுவனங்கள் நகலெடுத்து பெரும் லாபம் ஈட்டியுள்ளன. ஆகவே, இது ஒரு உலகளாவிய வியாபார யுக்தியே தவிர வேறொன்றும் இல்லை.
சீனா பல வெளிநாட்டவர்களுக்கு கடினமான நாடு. வேலை அல்லது படிப்புக்காக வந்த பலர் ஆரம்பத்தில் சீனாவை விரும்பினாலும், காலப்போக்கில் அங்கு தங்க முடியாமல் சிரமப்பட்டார்கள். மொழி, பண்பாடு, அரசியல் புரிதல் இல்லாததால் நிறுவனங்கள் சீனர்களையே முன்னுரிமை அளித்து வேலைக்கு எடுத்தன.
1990–2000 காலகட்டத்தில் வந்த வெளிநாட்டவர்கள் ஆரம்பத்தில் மதிக்கப்பட்டனர். ஆனால் பின்னர் அவர்கள் பின்னடைந்தனர். அவர்கள் வீடு வாங்காதபோது, அவர்களிடம் வேலை செய்த சீனர்கள் வீடு வாங்கி செல்வந்தர்களாகி, பதவியிலும் உயர்ந்தார்கள்.
ஒருகாலத்தில் கல்லூரிகளில் “ராஜாக்கள்” போல இருந்த வெளிநாட்டு மாணவர்கள், சீன நண்பர்கள் முன்னேறியபோது பின்னடைந்தார்கள். சிறிய கன்சல்டிங், மீடியா பணிகளிலேயே முடங்கினார்கள். பெரும் செல்வ உருவாக்கக் காலத்தை இழந்தார்கள்.
2012–2017 காலத்தில் பலர் சீனாவை விட்டு சென்றார்கள். தங்கள் தோல்விக்கான கோபத்தை சீன அரசு மற்றும் சீ ஜின்பிங் மீது திருப்பினர். பின்னர் அமெரிக்காவில் think tank, podcast, China-watcher வேலைகள் செய்து, சீனாவைப் பற்றி தொடர்ந்து எதிர்மறையாக பேசத் தொடங்கினார்கள்.
ஒருகாலத்தில் தங்களை வரவேற்ற சீனாவை இன்று அவமதித்து பேசும் இந்தக் கூட்டம், தங்களின் தனிப்பட்ட தோல்விகளை சீனாவை குற்றம் சொல்லி மறைக்கிறது.
A hit product can bring a company to the attention of millions. But lasting success comes from a business model that is difficult to replicate and keeps evolving in a fast-changing world.
“ஒரு ஹிட் தயாரிப்பு உங்கள் நிறுவனத்தை கோடிக்கணக்கானோரின் கவனத்திற்கு கொண்டு வரலாம். ஆனால் உண்மையான நீண்டகால வெற்றி என்பது, நகலெடுக்க முடியாததும், வேகமாக மாறும் உலகில் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் வணிக மாதிரியிலிருந்தே வருகிறது.”
டொனால்ட் டிரம்பின் கடும் வரி விதிப்புகள், சீனாவில் தொழிற்சாலைகள் அமைத்துள்ள நிறுவனங்களை மீண்டும் அமெரிக்காவுக்கு வரவழைக்கும் யுக்தி என கூறப்பட்டது. ஆனால் அது நடக்காது என்பதும், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதும் தொழில்துறையினருக்கு நன்றாகத் தெரியும்.
அதிநவீன பொருட்களை விடுங்கள்—குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை கூட அமெரிக்காவில் உற்பத்தி செய்வது செலவுக்கேற்றதாக இல்லை. அமெரிக்காவில் ஒரு மணி நேர வேலைக்கு 10 டாலர் கூலி; சீனாவில் அதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. “அமெரிக்க தயாரிப்பு” என்று அதிக விலை வைத்தாலும், அதை வாங்குபவர்கள் இல்லை என்பதே நிஜம்.
இதன் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில், “குழந்தைகள் 30 பொம்மைகளுக்கு பதில் மூன்றே வைத்துக் கொண்டு விளையாடட்டும்” என்று அமெரிக்க அதிபர் கூறும் நிலைக்கு விஷயம் சென்றுள்ளது.
கேள்வி இதுதான்—
குழந்தைகள் சீனா பொம்மையா, அமெரிக்க பொம்மையா என்பது அல்ல.
குழந்தைகள் விளையாட வேண்டுமா? மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
அதற்கான அனுமதியை டிரம்ப் தருவாரா என்பதே உண்மையான கேள்வி.
— யுவராஜ் சம்பத்
03.01.2026
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் -அத்தியாயம் 6 – பொறாமை (தொடர்ச்சி)
- அப்பா மாதிரி
- கொள்ளிக்கட்டையால் தலையைச் சொரிந்துகொண்ட அமெரிக்கா…
- சிறை (தமிழ் படம்)
- மழை புராணம்- 14
- பச்சா பாசி – அத்தியாயம் ஏழு
- மக்கள் கலை இலக்கிய விழா