This entry is part 4 of 7 in the series 4 ஜனவரி 2026

பல அழுக்குகளால் மனம் சிறையுண்டு போன, மனித மனங்களிலும் உன்னதம் முகிழும் நேரம் சில உண்டு. பூக்கள் பூக்கும் காலை பொழுதின் அழகைக்காண கண்கோடி வேணடும். 

சூரிய உதயத்தைக்காண ஆயிரம் குதிரைகள் பூட்டிய மன்னவன் தேவையில்லை.திறந்த மனதுடன், உதிக்கின்ற சூரிய ரட்சுமிகளை இதயத்தில் ஏந்தினால் போதும். 

அப்படித்தான் அடிதடி, கலாட்டா, கற்பனைக்கொட்டாத ரத்த ஆறு, குடி, கூட்டுக்கொள்ளை, பால்மணம் மாற குழந்தை கற்பழிப்பு, கலப்பட அரசியல் தில்லு முல்லு, முற்போக்கு பெண் பல ஆண்களுடன் ரத்த கசிவு, போகர் சொல்லாத மன விகாரங்கள் அடங்கிய சமீபத்திய தமிழ் பட தொகுப்பில், கொஞ்ச நாட்களாக தமிழ் படம் செல்கின்றது.  இந்த சந்தர்ப்பத்தில், ” சிறை ” என்ற தமிழ்படம் அமைதியான நம்பிக்கை நதியாக ஓடுகின்றது. 

இந்து-முஸ்லீம் உறவில் இன்று ஏகப்பட்ட புகார்கள், விசாரணைகள், ஆர்ப்பாட்டம், 

மனித மனங்களின் விகாரங்கள் அரசியல் போர்வை போர்த்திய உடலாக நாடெங்கும் கொழுந்து விட்டு எரிகின்றது. 

சிறை என்ற படத்தில், அந்த உறவின் மேன்மையை, தென்றலாக வீசவிட்டு, அதுகூட கையில் துப்பாக்கி ஏந்திய காக்கிச்சட்டையின் உள்ளே ஒரு அன்பான இதயம் இருக்கின்றது என்பதனை காட்டுகின்றது-சிறை. 

காதலுக்கு எந்த மதமும் தடையில்லை. 

தூய அன்பான இரண்டு உள்ளங்களின் சேர்க்கை, ஒரு புதிய வாழ்வின் சாளரங்களை திறந்துவிடும். அப்படித்தான் இந்த படத்தில் ஒரு முஸ்லீம் இளைஞனும், ஒரு இந்து பெண்ணும் மனம் விரும்பி வாழ ஆசைப்பட்டு, காதலில் விழுகின்றனர் .

அந்த காதலை யதார்த்தமான முறையில் காட்சிப்படுத்தியுள்ளனர் .அதற்காக, வெளிநாட்டில் சென்று காதல் காட்சிகளை அமைக்கவில்லை. மீண்டும் பார்வையாளனை மூளைச்சலவை செய்ய வில்லை. 

கதைக்களம், சிவகங்கையில் ஒரு சிறிய கிராமம். அங்கு மதமோ, ஜாதியோ பெரிய தடையாக தெரியவில்லை. 

சகோதரத்துவதோடு பழகுகின்றனர். 

ஏனெனில், அங்கு மதச்சாயம் பூச எந்த அரசியல் தலைகளும் இல்லை.

கட்சி கொடிகளின் சாயங்களே இல்லை. ஆனால் குடியால் துன்பப்படும் அப்பாவி மக்களை காட்டுகின்றனர். 

.

ஆனால், ஆதிக்க சாதி வெறியால் ஒரு மட்டமான எண்ணம் கொண்ட உறவுக்காரனால் , அவர்களின் காதலுக்கு தடை ஏற்படுகின்றது. அவர்களை பிரிக்க 

தடைகளை ஏற்படுத்துகின்றனர். 

அடிதடி சண்டையில் கைகலப்பு ஏற்பட்டு, 

யாரும் எதிர்பாராத சமயத்தில், அந்த காதலை ஏற்படுத்திய ஆதிக்க ஜாதிக்காரர் கீழே விழுந்து, மண்டையில் பிளவு ஏற்பட்டு மரணித்து விடுகின்றார். 

முறையான விசாரணை செய்யாமல் அந்த முஸ்லீம் வாலிபன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றான். 

கதை, இதற்கு பிறகுதான் மெல்ல தேர் ஏறி, ஜனங்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக்கொள்கின்றது. 

கைதிகளை போலீஸ் கையாளும் விதம், லாக்கப் கைதிகளின் விசாரணை, போலீஸ் ஸ்டேசன் உள்விவகாரங்கள், 

போலீஸ் சூடு, மரண கணக்கு விசாரணை, கையூட்டு அவலங்கள் போன்ற காட்சிகளை யதார்த்தமான முறையில் காட்டியுள்ளனர். முஸ்லீம் என்றால் எல்லாமே திவிரவாதிகளா என்ற கேள்வியை ரசிகர்களை கேட்க வைக்கின்றனர். 

கோர்ட் அதன் உட்காட்சிகள்,சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விசாரணைக்காக நீண்ட நாட்களாக காத்துக்கிடக்கும் அப்பாவி கைதிகள், இன்னமும் மனசாட்சியோடு நடக்கும் நீதிபதிகள் 

போன்ற, கருணையற்ற நீதிபதிகள் போன்ற கலப்படமான காட்சிகளும் மனதில் இந்த படத்தை தூக்கி நிறுத்துகிறது. 

கதையமைப்பும், காட்சி படுத்தலும் கச்சிதமாக வடிவமைத்துள்ளனர். 

இரட்டை அர்த்தம் வசனமில்லை. 

திரைக்கதை வெகு நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது. மிருதுவான இசையும், கள்ளங்கபடமற்ற இரண்டு காதல் இதயங்களையும் காட்சிப்படுத்தி, 

படத்தை ஆரோக்கியமான பிரிவில் சேர்த்துள்ளனர். 

வெறுத்துப்போன தமிழ் பட ரசிகர்களுக்கு, “சிறை ” போன்ற படங்கள், மீண்டும் நம்பிக்கை தருகின்றது. 

-ஜெயானந்தன்.

Series Navigationகொள்ளிக்கட்டையால் தலையைச் சொரிந்துகொண்ட அமெரிக்கா…மழை புராணம்- 14