மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்:
(THE CONQUEST OF HAPPINESS)
பாகம் – 1
மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள்
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்!
(BERTRAND RUSSEL)

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்
அத்தியாயம் 6 – பொறாமை
(*சென்ற வாரத் தொடர்ச்சி)
…………………………………………………………………………………………………………………………………………………..
பேரும் புகழும் பெருமையையும் நீங்கள் விரும்பினால் நீங்கள் நெப்போலியன் மீது பொறாமைப்படலாம். ஆனால் நெப்போலியன் ஸீஸரைப் பார்த்துப் பொறாமைப்பட்டார். ஸீஸர் அலெக்ஸாண்டரைப் பார்த்துப் பொறாமைப்பட்டார். அலெக்ஸாந்தருக்கு ஹெர்குலீஸிடம் பொறாமை. ஹெர்குலீஸ் உண்மையில் ஒருபோதும் இருந்ததில்லை. எனவே, வெற்றியடைவதால் மட்டுமே உங்களால் பொறாமையிலிருந்து விடுபட முடியாது. ஏனெனில்., எப்பொழுதுமே உங்களை விட அதிக வெற்றிகரமான யாரேனும் சரித்திரத்திலோ, தொன்மத்திலோ கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால், உங்களுக்குக் கிடைக்கின்ற ஆனந்தங்களால், உங்களால் பொறாமையிலிருந்து விடுபட முடியும். நீங்கள் செய்தாகவேண்டிய வேலைகளைச் செய்வதன் மூலம் உங்களால் பொறாமையிலிருந்து விலக முடியும். உங்களை விட அதிக அதிர்ஷ்டக்காரராக நீங்கள் கற்பனை செய்துகொள்ளும் – அது முழுக்க முழுக்க தவறாகவே இருக்கவும் வழியுண்டு – நபரோடு உங்களை ஒப்புநோக்குவதைத் தவிர்ப்பதன் மூலம் உங்களால் பொறாமையிலிருந்து விடுபட முடியும்.
அநாவசியமான பணிவும், தன்னடக்கமும் பொறாமையோடு பெருமளவில் தொடர்புடையதாகும். தன்னடக்கம் என்பது பெரிய நற்பண்பாகக் கருதப்படுகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் பணிவடக்கம் அதன் அதிகத் தீவிரமான வடிவங்களில் அப்படிப் பார்க்கப்படுவதற்கான தகுதி அதற்கு இருக்கிறதா என்று எனக்கு மிகவும் சந்தேகமாக இருக்கிறது. பணிவடக்கம் நிரம்பிய மனிதர்களுக்கு நிறையவே நம்பிக்கையூட்டல் தேவையான இருக்கிறது. பல நேரங்களில் அவர்கள் தங்களால் செய்ய முடிந்த வேலைகளைச் செய்யத் துணிவதில்லை. பணிவடக்கம் கொண்டவர்கள் தாம் வழக்கமாகத் தொடர்புறவாடுபவர்கள் தம்மைவிட அதிகம் பெயரும் புகழும் கொண்டவர்கள் என்று கருதுவார்கள். இது அவர்களைக் குறிப்பான அளவு பொறாமையடைய வைக்கிறது. அதன் விலைவாய் அவர்கள் மகிழ்ச்சியின்மைக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் ஆளாகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, ஒரு சிறுவன் தன்னை நல்ல ஆள் என்று எண்ணும்படியாக அவனை வளர்ப்பது மிகவும் முக்கியம். எந்த மயிலும் இன்னொரு மயிலின் தோகையைப் பார்த்துப் பொறாமைப்படுவதாக நான் நம்பவில்லை. ஏனெனில், ஒவ்வொரு மயிலும் தன்னுடைய தோகையே உலகில் மிகவும் சிறந்தது என்று திட்டவட்டமாக எண்ணுகிறது. விளைவு, மயில்கள் அமைதியும் சாந்தமும் நிரம்பிய பறவைகளாகத் திகழ்கின்றன. யாரேனும் மயிலிடம் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொள்வது தீய பண்பு என்று கற்றுக்கொடுத்திருப்பார்களேயானால் மயில்களின் வாழ்க்கை எத்தனை மகிழ்ச்சியற்றதாக மாறியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இன்னொரு மயில் தன்னுடைய தோகையை விரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் அது தனக்குத்தானே இவ்வாறு சொல்லிக்கொள்ளும்: “என்னுடைய தோகை அந்த மயிலினுடைய தோகையைக் காட்டிலும் மேலான அழகுடையது என்று நான் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அப்படிச் செய்தால் எனக்குத் தற்பெருமை என்ற்றாகும். ஆனால், என்னுடைய தோகை அந்த மயிலினுடையதை விட அதிக அழகானதாக இருக்கவேண்டும் என்று நான் எத்தனை விரும்புகிறேன் தெரியுமா! வெறுக்கத்தக்க அந்த பறவை தன்னுடைய அபரிமுதமான அழகு குறித்து எத்தனை நம்பிக்கையோடு இருக்கிறது! நான் அதனுடைய சிறகிழைகள் சிலவற்றை வெளியே இழுத்துவிடவா? அப்படிச் செய்தால், பின் அதனோடு என்னை ஒப்பிட்டுப்பார்ப்பது எனக்கு பயம் தராது’. அல்லது, இந்த மயில் அந்த இன்னொரு மயிலுக்கு ஒரு பொறி வைத்து., அது ஒரு கெட்ட மயில், மயிலினத்துக்கு ஒவ்வாத நடத்தையைக் கைக்கொண்ட குற்றம் புரிந்த பறவை என்பதாக நிரூபித்து, மயிலினத்தலைவர்கள் குழுவில் அந்த இன்னொரு மயிலைப் பழித்துரைக்கும். அப்படியே படிப்படியாக, தனித்துவன்மான அளவு அழகான தோகைகள் உள்ள மயில்கள் பெரும்பாலும் எப்போதுமே கெட்டவையாக இருக்கும் என்ற கோட்பாட்டையும், மயில்களின் சாம்ராஜ்யத்தின் விவேகமுள்ள அரசன் ஒரு சில சிறகிழைகளே கொண்ட பணிவடக்கமான எளிய மயிலையே தேடித் தேர்ந்தெடுப்பார் என்ற கோட்பாட்டையும் நிலைநாட்டும். இந்தக் கொள்கை ஏற்கப்படும்படி செய்தபின் இந்த மயில் தனித்துவம் வாய்ந்த அழகிய தோகைகளைக் கொண்ட புள்ளினங்களெல்லாம் சாகடிக்கப்படும்படி செய்யும். முடிவில், உண்மையாகவே அற்புதமான தோகை என்பது கடந்த காலத்தின் மங்கலான நினைவாக மட்டுமே எஞ்சிநிற்கும். ஆனால், ஒவ்வொரு மயிலும் மற்ற எந்த மயிலையும் விட தான் அழகாக இருப்பதாக எண்ணும் இடத்தில் இவ்விதமான அடக்குமுறைக்கெல்லாம் இடமில்லை.
ஒவ்வொரு மயிலும் போட்டியில் முதல் பரிசை வெல்ல விரும்புகிறது. ஏனெனில், அது தனதேயான சிறிய தோகையைப் பெரிதாக மதிக்கிறது. அவை ஒவ்வொன்றும் அப்படித் தங்கள் தோகையை உயர்வாக மதிப்பதால் போட்டியில் முதல் பரிசை வென்றுவிட்டதாக அவை ஒவ்வொன்றும் உறுதியாக நம்புகின்றன.
பொறாமை என்பது போட்டியுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பஹ்டு உண்மையே. நமக்கு எட்டவே எட்டாத தூரத்தில் இருப்பதாக நாம் கருதும் ஒரு பேரதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் பொறாமைப்பட மாட்டோம். சமூகப் படிநிலையடுக்குகள் திட்டவட்டமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் காலகட்டத்தில், அதாவது பணக்காரர் – ஏழை என்ற இருபிரிவுகள் கடவுளால் விதிக்கப்பட்டவை என்று அவர்கள் எண்ணும் வரை – கடைசிப் படியில் இருப்பவர்கள் மேல் உச்சிப் படியில் இருப்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. ஆனால், தங்களை விட அதிக வெற்றிகரமாக உள்ள மற்ற பிச்சைக்காரர்களைப் பார்த்து அவர்கள் பொறாமைப்படுகிறார்கள். நவீன உலகில் சமூக அந்தஸ்தில் நிலவும் நிலையற்ற தன்மையும், மக்களாட்சி, பொதுவுடைமைத் தத்துவம் ஆகியவற்றின் சமத்துவக் கோட்பாடும் பொறாமையின் வீச்சையும் விரிவையும் பெருமளவு அதிகரித்துள்ளன. இவ்வமயம் இது ஒரு கேடு. ஆனால், இன்னும் அதிக நியாயமான சமூக அமைப்பை எட்ட நாம் இதைப் பொறுத்துக்கொண்டாகவேண்டும். ஏற்றத்தாழ்வுகள், சமமின்மை கள், பகுத்தறிவோடு சிந்திக்கப்பட்டு அலசியாராயப்பட்டால், அவை ஏதேனும் மேம்பட்ட தகுதியினால் உண்டானது என்ற காரணத்தில் நிலைகொண்டிருந்தா லொழிய, அவை எப்படிப் பார்க்கப்படவேண்டுமோ அப்படியே, அநீதி என்பதாகவே பார்க்கப்படுகின்றன. அப்படி அவை அநீதி என்று பார்க்கப்படும்போது, அந்த அநீதி அகற்றப்படுவதைத் தவிர அதன் விளைவாக ஏற்படும் பொறாமைக்கு எந்த நிவாரணமும் இல்லை.
ஆக, குறிப்பாக, நாம் வாழும் காலத்தில் பொறாமை என்பது மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள்; அதிக எழ்மையில் உழலும் நாடுகள் தங்களை விட அதிக நிதிவளம் பெற்ற நாடுகளைப் பார்த்துப் பொறாமைப்படுகின்றன. பெண்கள் ஆண்களைப் பார்த்துப் பொறாமைப் படுகிறார்கள். ஒழுக்கமான பெண்கள் ஒழுக்கமற்ற எனில் அதற்காகத் தண்டிக்கப் படாமலிருக்கும் பெண்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். வெவ்வேறு வர்க்கத்தினரிடையே, வெவ்வேறு நாடுகளிடையே, வெவ்வேறு பாலினரிடையே நீதியை நிலைநாட்ட வழிவகுப்பதில் பொறாமை ஒரு முக்கிய காரணம் என்பது உண்மையே. அதே சமயம், பொறாமையின் விளைவாய் உருவாகுமென்று எதிர்பார்க்கப்படக்கூடிய நீதி உச்சபட்ச மோசமான ரகத்தைச் சேர்ந்ததாக இருக்க வழியுண்டு. அதாவது, அதிர்ஷ்டம் படைத்தவர்களின், நல்வாய்ப்பு குறைந்தவர்களின் ஆனந்தங்களை அதிகரிப்பதைக் காட்டிலும் நல்வாய்ப்பு அதிகமாகப் பெற்றிருப்பவர்களின் ஆனந்தங்களைக் குறைப்பதிலேயே அதிகம் குறியாக உள்ள நீதி மனிதர்களின் தனி, அந்தரங்க வாழ்க்கையில் கலவரம் உண்டாக்குவதில் போய் முடியும். தீவிரப் பற்றுகள் பொதுவாழ்விலும் அதேவிதமான விளைவுகளை ஏற்படுத்துவன. பொறாமை போன்றமிகத் தீவிரமான ஒன்றிலிருந்து நலது விளையும் என்று எண்ணலாகாது. எனவே, இலட்சியார்த்தக் காரணங்களால் நம்முடைய சமூகக் கட்டமைப்பில் நேரிய மாற்றங்கள் ஏற்படவேண்டுமென்று விரும்புவோர் சமூக நீதியில் மிகப்பெரிய அளவு முன்னேற்றங்கள் வேண்டுமென்று விரும்புவோர் அத்தகைய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டுவர பொறாமையைத் தவிர வேறு சக்திகளே தூண்டுகோலாக அமையும் என்று நம்பவேண்டியது இன்றியமையாதது.
தீய விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பது. அவற்றில் எந்த ஒன்றும் இன்னொன்றுக்கான காரணமாக அமையக்கூடும். மிகவும் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், சோர்வு அடிக்கடி பொறாமைக்கான காரணமாக அமைகிறது. ஒரு மனிதன் தான் செய்யவேண்டிய வேலைக்குத் தன்னிடம் போதாமையை உனர்வாரெனில் அவர் ஒரு பொதுவான திருப்தியை உணர்கிரார். இந்த அதிருப்தி வேறு யாருடைய வேலை அத்தனை கடுமையான உழைப்பைக் கோருவதாக இல்லாமலிருக்கிறதோ அவரிடம் பொறாமை ஏற்படக் காரணமாகிறது. எனவே, பொறாமையைக் குறைப்பதற்கான வழிகளில் ஒன்று சலிப்பையும் சோர்வையும் குறைப்பது. ஆனால், எல்லாவற்றையும்விட மிக முக்கியமான விஷயம், மனிதனின் உள்ளுணர்வுக்குத் திருப்தியளிக்கக்கூடிய ஒரு வாழ்க்கையைக் கைக்கொள்வது.
தொழில்ரீதி யானதாகத் தோன்றும் பொறாமையுணர்வின் பெரும்பகுதி உண்மையில் பாலியல் சார் தோற்றுவாயைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய திருமண வாழ்க்கை யிலும், குழந்தைகள் விஷயத்திலும் மகிழ்ச்சியாயிருக்கும் ஒருவர் அந்த மனிதர் சரியான வழியென நம்பும் வழியில் ப்ள்ளைகளை வளர்ப்பதற்குப் போதுமான வசதி வாய்ப்புகள் இருந்துவிட்டால், பின், மற்ற ஆண்களிடம் அதிக சொத்து இருக்கிறது, அவர்கள் அதிக வெற்றியாளர்களாயிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மேல் பொறாமைப்படுவதில்லை. மனித மகிழ்ச்சிக்கான அடிப்படைத் தேவைகள் மிகவும் மிகவும் எளியவை. என்பதால் நவநாகரீக மனிதர்கள் தம்மிடம் உண்மையிலேயே போதாமையாக இருப்பது என்ன என்பதை ஒப்புக்கொள்ள முன்வரமாட்டார்கள். இதற்கு முன் நாம் பேசிய பெண்கள், எந்தவொரு பெண் நேர்த்தியாக உடையணிந் திருந்தாலும் அவரைப் பொறாமையாகப் பார்ப்பவர்கள், தங்களுடைய உள்ளுணர் வார்ந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். உள்ளுணர்வார்ந்த மகிழ்ச்சி என்பது ஆங்கிலம் பேசும் உலகில் அரிதான விஷயம். குறிப்பாக, பெண்களிடையே இது அரிதிலும் அரிதான விஷயம். இந்த விஷயத்தில் மனித நாகரீகம் எங்கோ வழிவிலகிப்போய்விட்டதாகவே தெரிகிறது. இங்கே நிலவும் பொறாமையுணர்வு குறையவேண்டுமானால் இப்போது நிலவும் அகச்சூழல், புறச்சூழலை சரிப்படுத்த, இதற்கான நிவாரணம் தேட தகுந்த வழிவகைகள் கண்டறியப்படவேண்டியது அவசியம். அப்படி எந்த வழிவகைகளும் கண்டறியப்படவில்லையென்றால் நன்னுடைய மனித நாகரீகம் வெறுப்பின் உச்சத்தில், அழிவை நோக்கிச் செல்வதான அபாயத்தில் உழன்றுகொண்டிருக்கும்.
பழைய நாட்களில் மனிதர்கள் தம்முடைய அண்டைவீட்டுக்காரர்களிடம் மட்டுமே பொறாமை கொண்டார்கள். ஏனெனில், அவர்களெல்லோருக்குமே வேறு யாரொருவரைப் பற்றியும் எதுவுமே தெரியாது. ஆனால் இன்று, கல்வி மூலமும், அச்சு ஊடகங்கள் மூலமும் அவர்களுக்கு மனித இனத்தின் பெரும்பிரிவுகளைப் பற்றி ஒருவித anstract வழியில் நிறைய தெரிகிறது. அவர்களில் எந்தத் தனிநபரும் இந்த மனிதர்களுக்குப் பரிச்சயமானவர்களாக இல்லை. திரைப்படங்களின் மூலம் பணக்காரர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டதாக எண்ணுகிறர்கள். செய்தித்தாள்கள் மூலம் அந்நிய நாடுகளின் தீய நோக்கங்கள், செயல்கள் குறித்து நிறைய தெரிந்துகொள்கிறார்கள், பிரச்சாரம் மூலம் தங்களுடைய உடலின் தோலை விட வேறு நிறத்தில் இருக்கும் பிறரின் இழிந்த, கொடிய செயல்பாடுகளையெல்லாம் தெரிந்துகொள்கிறார்கள். மஞ்சள் நிற மேனியினர் வெள்ளைநிற மேனியுடையவர் களை வெறுக்கிறார்கள். வெண்மேனியினர் கருமேனியினரை வெறுக்கிறார்கள். இந்த வெறுப்பெல்லாம் பிரச்சாரத்தால் தூண்டப்படுகிறது என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆனால், இது ஒருவித மேலோட்டமான விளக்கமே. பிரச்சாரம் என்பது ஏன் வெறுப்பைத் தூண்டும்போது மட்டுமே அதிக அளவு வெற்றிகரமானதாக அமைகிறது? நட்புணர்வை பிரச்சாரத்தால் ஏன் அந்த அளவுக்கு வெற்றிகரமாகத் தூண்டியெழுப்ப முடியவில்லை?
காரணம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. மனித மனத்தை நவீன மனித நாகரீகம் நட்புணர்வைக் காட்டிலும் வெறுப்புக்கே அதிகமாகத் திருப்பி யிருக்கிறது. வெறுப்பையே எளிதாகக் கைக்கொள்ள வைக்கிறது. மனித மனம் வெறுப்பை வளர்த்துக்கொள்வதற்கே அதிகம் இணக்கமானதாக இருக்கிறது. ஏனென்றால், அது நிறைவின்மையில் அதிருதியில் உழல்கிறது. வாழ்க்கையின் அர்த்தத்தை ஏதோவொரு வகையில் தான் தொலைத்துவிட்டதாக அது மிக ஆழமாக, தன்னுணர்வற்ற நிலையில் என்றும் சொல்லலாம், எண்ணுகிறது. ஒருக்கால் மற்றவர்கள் மனிதனின் இன்பத்திற்காக இயற்கை வழங்கும் விஷயங்களைப் பெற்றுவிட்டிருக்கக்கூடும், ஆனால், தனக்கு மட்டும் அவை கிடைக்கவில்லை என்று எண்ணுகிறது. நவீன மனிதனின் வாழ்க்கையில் உள்ள இன்பங்களின் மொத்த அளவு, மிகவும் பழமையான சமூகங்களில் காணப்பட்டதை விட சந்தேகத்திற்கு இடமின்றி அதிகமாக உள்ளது என்பது உண்மையே. ஆனால், வேறு என்னவாக, வேறு என்னவிதத்தில் மேலாக இருந்திருக்கலாம்’ என்ற பிரக்ஞை இன்னும் கூடுதலாகியிருக்கிறது.
நீங்கள் உங்கள் குழந்தைகளை மிருகக்காட்சிசாலைக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம், மனிதக் குரங்குகள் உடல்ரீதியான சாகசங்களைச் செய்யாத போதும், அல்லது கெட்டியான கொட்டைகளை உடைக்காதபோதும், அவற்றின் கண்களில் ஒரு விசித்திரமான, இறுக்கமான சோகத்தை உங்களால் பார்க்க முடியும். தாம் மனிதர்களாக மாறியிருந்திருக்கவேண்டும், ஆனால் எப்படி அதைச் செய்வது என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்துக்கொள்ள வழியில்லாமல் போயிற்றே என்று வருந்துவதாகவும் நீங்கள் கற்பனைசெய்துகொள்ள முடியும். பரிணாம வளர்ச்சியின் பாதையில் அவை எங்கோ வழிதவறிவிட்டன; அவற்றின் உறவினர்கள் முன்னேறிச் சென்றனர், அவை பின்தங்கிவிட்டன. இத்தகையதொரு இறுக்கமும் துயரமும் நாகரிக மனிதனின் ஆன்மாவிலும் நுழைந்திருப்பதாகத் தெரிகிறது. தன்னை விடச் சிறந்த ஒன்று கையெட்டும் தூரத்தில் இருக்கிறது என்று அவன் அறிந்திருக்கிறான், ஆனாலும் அதை எங்கே தேடுவது, எப்படிக் கண்டெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. விரக்தியில், அவன் தன்னைப்போலவே வழிதொலைத்து அலையும், தன்னைப்போலவே மகிழ்ச்சியற்று உழலும் சக மனிதனுக்கு எதிராகச் சீறுகிறான்.
நாம் பரிணாம வளர்ச்சியில் ஒரு கட்டத்தை அடைந்துள்ளோம், இது இறுதிக் கட்டம் அல்ல. நாம் இதை விரைவாகக் கடந்துசென்றாக வேண்டியது மிகவும் அவசியம். இல்லையென்றால், நம்மில் பெரும்பாலோர் வழியிலேயே அழிந்துபோவோம், மற்றவர்கள் சந்தேகம் மற்றும் அச்சம் நிறைந்த ஒரு காட்டில் தொலைந்துபோவார்கள். எனவே, பொறாமை, அது தீயதாக இருந்தாலும், அதன் விளைவுகள் பயங்கரமான வையாக இருந்தாலும், அது முற்றிலும் சாத்தானுடையது அல்ல. அது பகுதியளவில் ஒருவித வீரநாயக வேதனையின் வெளிப்பாடு. ஒருவேளை இப்போதிருப்பதை விட ஒரு மேலான இளைப்பாறும் இடத்தை நோக்கியோ, அல்லது அழிவை, மரணத்தை நோக்கியோ, இரவில் கண்மூடித்தனமாக நடப்பவர்களின் வேதனை அது. இந்த விரக்தியிலிருந்து சரியான பாதையைக் கண்டறிய, நாகரிக மனிதன், தனது மூளையை விரிவுபடுத்திக்கொண்டதைப் போலவே மனதையும் விரிவுபடுத்திக்கொள்வதையும் அப்படிச் செய்வதில் தான் என்பதைக் கடந்துசென்று பிரபஞ்சத்தின் விடுதலையைக் கையகப்படுத்தவேண்டியதையும் கற்றுத்தேறவேண்டியது மிகவும் அவசியம்.
*
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் -அத்தியாயம் 6 – பொறாமை (தொடர்ச்சி)
- அப்பா மாதிரி
- கொள்ளிக்கட்டையால் தலையைச் சொரிந்துகொண்ட அமெரிக்கா…
- சிறை (தமிழ் படம்)
- மழை புராணம்- 14
- பச்சா பாசி – அத்தியாயம் ஏழு
- மக்கள் கலை இலக்கிய விழா