This entry is part 4 of 13 in the series 18 ஜனவரி 2026

ட்ரம்பின் புத்தாண்டு பரிசு 2026…   

கடந்த பத்து ஆண்டுகளாக உலக வர்த்தகம் பல பெரிய மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அத்தகைய மாற்றங்களுக்கிடையிலும் சீனா தன்னைத் தானே தொடர்ந்து தகவமைத்துக் கொண்டே வந்துள்ளது. உற்பத்தி செலவுகள் உயர்ந்தபோதும், விநியோக சங்கிலிகள் பாதிக்கப்பட்டபோதும், அவற்றை சமாளிக்கத் தேவையான மாற்றங்களை சீனா தன்னிச்சையாக வடிவமைத்துக் கொண்டது.

இந்த வர்த்தகச் சிக்கல்களிலிருந்து இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவின் ஏற்றுமதி சுமார் ஒரு சதவீதம் அளவிற்கு குறைந்ததாகக் கூறப்பட்டாலும், அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து சமாளித்து வருகிறது.

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்ற திருக்குறளுக்கு ஏற்ப, தற்போதைய அமெரிக்க அதிபர் நேர்மையானவரா, அல்லது நெறி தவறி நீதி வழுவி நடந்தவரா என்பதற்கான தீர்ப்பு அடுத்த அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் போதுதான் தெளிவாகும். ஆனால், அவர் பதவியில் இருக்கும் வரையில் இந்த மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், சீனாவும் இந்தியாவும், தனது வணிகங்களை பல்வேறு  புதிய நாடுகளுக்கும்,  மாற்றி எடுத்துச் செல்கிறது.

அமெரிக்க அதிபரின் சமீபத்திய முடிவுகள் ஆடைத் தொழிலையும் அதனைச் சார்ந்த பல துறைகளையும் கடுமையாகப் பாதித்தன. இந்தியாவின் ஆடை ஏற்றுமதியும், ஆபரணங்கள் ஏற்றுமதியும், வெகுவாக பாதிக்கப்பட்டன. அதேபோல் சீனாவிலும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதி சரிந்தது; காலணிகள் வீட்டு உபயோக மரச்சாமான்கள் மருந்து பொருட்கள் போன்றவைகளும் பெரிய சரிவை சந்தித்தன . இதன் எதிர்விளைவாக, சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து வந்த முக்கிய வேளாண் பொருளான சோயாபீன்  இறக்குமதியை முற்றிலுமாக தவிர்த்து பிரேசில் நாட்டு பக்கம் திரும்பியது. இதையடுத்து இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையான வார்த்தைப் போர்களில் ஈடுபடத் தொடங்கின. சீனாவும் தன் பங்கிற்கு முஷ்டியை உயர்த்தி, அமெரிக்காவிற்கு அவசியமான சில முக்கிய பொருட்களின் ஏற்றுமதியை குறைத்தது.

சீனா எவ்வாறு எதிர்கொள்கிறது ?

அமெரிக்க வர்த்தக வரிகளால் சீனாவின் நுகர்வோர் மின்னணுவியல், வாகனத் துறை, ஜவுளி–ஆடைத் துறை மற்றும் அரிய கனிமங்கள் போன்ற முக்கியத் துறைகள் பாதிக்கப்பட்டன. ஸ்மார்ட்போன், செமிகண்டக்டர், மின்சார வாகனங்கள் போன்ற உற்பத்திகளில் செலவுகள் உயர்ந்ததால் Apple, Nvidia, Nike போன்ற நிறுவனங்களும் சுமையை சந்தித்தன. அதே நேரத்தில், உலக தொழில்நுட்பச் சந்தையைப் பாதிக்கும் வகையில், சீனா அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தச் சவால்களை சமாளிக்க, பொருளாதார வளர்ச்சியை 3.5–4% அளவில் தக்கவைக்க சீனா பல யுக்திகளைப் பயன்படுத்துகிறது. உள்கட்டமைப்பு மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளுக்காக பெரிய அளவிலான நிதி ஊக்கத் திட்டங்கள், வட்டி விகிதக் குறைப்பு, அமெரிக்காவைத் தவிர்த்து ASEAN, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற புதிய சந்தைகளில் கவனம், மூன்றாம் நாடுகள் வழியாக ஏற்றுமதி (Transhipment), மேலும் உள்நாட்டு நுகர்வை ஊக்குவிக்கும் கொள்கைகள் ஆகியவை அதில் முக்கியமானவை.

சீனாவிற்கு இது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை இரண்டு உதாரணங்கள் மூலம் விளக்கலாம்.
முதலாவது, இன்றைக்கு நீங்கள் முகநூல் அல்லது எக்ஸ் (X) தளங்களை திறந்தால், ஏதாவது ஒரு சீன நிறுவனத்தின் விளம்பரம் கண்டிப்பாக ஓடிக்கொண்டிருக்கும். அந்த விளம்பரங்கள் பெரும்பாலும் தெற்குத் திசை நாடுகளை குறிவைத்தே வடிவமைக்கப்படுகின்றன.

சீனாவின் டெக்ஸ்டைல் உற்பத்தி தலைநகரம் என அழைக்கப்படும் குவாங்சோ (Guangzhou), டி-ஷர்ட் உற்பத்தி நகரமான சாந்தோ (Shantou),  மற்றும் உள்ளாடை உற்பத்தியின் மையமாகக் கருதப்படும் குராவோ (Gurao) போன்ற நகரங்களிலிருந்து, “ஒரு டாலருக்கு ஒரு ஜோடி காலணிகள்”, “ஒரு டாலருக்கு ஒரு ஜீன்ஸ்”, “ஒரு டாலருக்கு மூன்று உள்ளாடைகள்” போன்ற அதிரடி விளம்பரங்கள் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றன .இதன் மூலம் ஆப்பிரிக்காவில் சீனா தன்னுக்கென ஒரு உறுதியான சந்தையை உருவாக்கிக் கொண்டுள்ளது.

 திருப்பூரில் உள்ள ஒரு சக ஆடை ஏற்றுமதியாளராக, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்பதை நான் நேரடியாக ஆராய்ந்தபோது, அங்கு ஏற்கனவே சீனா தனது உற்பத்திக் கூடங்களை அமைத்து, பல்வேறு நாடுகளுக்கு அங்கிருந்து நேரடியாக ஏற்றுமதி செய்து வருவது தெரிய வந்தது. போன்ற அதற்குத் தேவையான மூலப்பொருட்களையும் சைனா அந்தந்த நாடுகளில் உற்பத்தி செய்கிறது.அது போகவும் தேவையானவற்றை பெல்ட் அண்ட் ரோடு வர்த்தகப் பாதை  மூலமாக குறைந்த செலவில் இறக்குமதியும் செய்து கொள்கிறது  

இதன் விளைவாக, இந்தியா, வங்காளதேசம் போன்ற போட்டியாளர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். அமெரிக்காவுடன் வர்த்தகம் தடைப்பட்டாலும், சீனாவிற்கு பெரிய பாதிப்பு ஏற்படாத சூழலை இது உருவாக்கியுள்ளது. இந்த வகையில், ஏற்றுமதி வளர்ச்சி தடைபடாத அளவிற்கு சீனா முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளது.

இதேபோல், மற்றொரு முக்கியமான வழிமுறையையும் சீனா தற்போது பின்பற்றுகிறது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் சீனர்களை ஒன்றிணைத்து, அவர்கள் தங்களின் வீடுகளிலோ, கார் கேரேஜ்களிலோ அல்லது சிறிய இடங்களிலோ சிறு நிறுவனங்களை தொடங்கச் செய்கிறது. இந்நிறுவனங்கள் இணைய வசதி மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் மொத்தமாக சீனாவிலிருந்து பொருட்களை வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்கின்றன. ஆர்டர் கிடைத்த மூன்றாவது நாளிலேயே அந்தப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி விடுகிறார்கள் . இதன் மூலம் சிறிய நிறுவனங்களை உருவாக்கி, வளர்த்தெடுக்கிறது. இந்த முறை குறிப்பாக இங்கிலாந்து மற்றும் இத்தாலியில் அதிகமாக நடைமுறையில் உள்ளது.

இதன் விளைவாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஐரோப்பாவிற்கு சீனாவின் ஏற்றுமதி சுமார் 20% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் முன்பு 800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருட்களை சுங்கம் இன்றி இறக்குமதி செய்ய அனுமதித்திருந்த சட்டத்தை தற்போதைய அதிபர் மாற்றியுள்ளார். ஆனால் அதே சட்டம் இன்னும் ஐரோப்பாவில் நடைமுறையில் இருப்பதால், அது சீனாவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனங்களான Temu மற்றும் Shein ஆகியவை, அமெரிக்காவை நோக்கியிருந்த தங்களின் பார்வையை முழுமையாக ஐரோப்பாவை நோக்கி திருப்பிவிட்டன. ஐரோப்பிய வாடிக்கையாளர்களை கவர அனைத்து விதமான மார்க்கெட்டிங் உத்திகளையும் இந்நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” போன்ற சலுகைகளால், இந்நிறுவனங்களையும் அவற்றின் தயாரிப்புகளையும் ஐரோப்பியர்கள் நிராகரிக்க முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக, விமானம் வழியாக சரக்குகளை எடுத்துச் செல்லும் கார்கோ சேவை நிறுவனங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், ஐரோப்பாவில் அதிக விலையில் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த பல உள்ளூர் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. போட்டியில் இருந்து மெதுவாக வெளியேறத் தொடங்கியுள்ளன.இந்த நிலையின் தாக்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் வெளிப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

இந்தியா மீது ஏற்பட்ட தாக்கமும் இந்தியாவின் பதிலும் .

சீனாவைப் போலவே, இந்தியாவும் அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதன் காரணமாக, இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டு, ஜவுளி, ரத்தின–ஆபரணங்கள், எஃகு மற்றும் இன்ஜினியரிங் துறைகளில் ஏற்றுமதி சரிவின் அபாயம் ஏற்பட்டது. ஆனால் சீனாவை “ஆதிக்கம் கட்டுப்படுத்தும்” நோக்கில் குறிவைத்த வரிகளுக்கும், இந்தியா மீது விதிக்கப்பட்ட “பரஸ்பர வர்த்தக” அழுத்தத்திற்கும் வேறுபாடு உள்ளது.

500 சதவீத வரி என்பது இந்தியாவின் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது இப்போது.. எந்நேரமும் அது உள்ளே நுழையலாம் என்கிற இந்த தருணத்தில்,இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள, இந்தியா அமெரிக்காவை மட்டும் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, ஐரோப்பா, பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் புதிய  தடை இல்லாத வணிக ஒப்பந்தங்களை விரைவுபடுத்தி வருகிறது. அதேபோல், PLI திட்டங்கள் மூலம் உலக நிறுவனங்களை ஈர்ப்பது, “Make in India” திட்டத்தின் கீழ் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியை உள்நாட்டிலேயே வளர்ப்பது ஆகியவை இந்தியாவின் முக்கியமான சமாளிக்கும் உத்திகளாக உள்ளன.

ட்ரம்ப் விதித்த 50% வரி: இந்திய ஜவுளித் துறையின் நிலை .

2025 ஆகஸ்ட் முதல் அமலுக்கு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 50% வரி, இந்திய ஜவுளித் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக திருப்பூர், ஈரோடு மற்றும் சூரத் போன்ற முக்கிய ஜவுளி மையங்கள் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட இந்த “தண்டனை வரி”, இந்திய துணிகளின் விலையை அமெரிக்க சந்தையில் 30–35% வரை உயர்த்தியுள்ளது. இதனால், வங்காளதேசம், வியட்நாம் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலை உருவாகி, திருப்பூரில் புதிய ஆர்டர்கள் குறைந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்தையும் சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்படும் ஆபத்தையும் எதிர்நோக்கி உள்ளது.

இந்தச் சூழலை சமாளிக்க, இந்திய ஏற்றுமதியாளர்கள் லாபத்தைத் துறந்து 15–25% வரை தள்ளுபடி வழங்கி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்கின்றனர். அதே நேரத்தில், அமெரிக்காவை விடுத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் சந்தைகளை நோக்கி திரும்பி வருகின்றனர். மேலும் தொழில்நுட்ப ஜவுளிகளில் முதலீடு அதிகரித்து வருகிறது. அரசும் பருத்தி இறக்குமதி வரியை தற்காலிகமாக நீக்கி, குறைந்த வட்டி கடன்கள் வழங்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நவம்பர் 2025 தரவுகளின்படி, ஜவுளி ஏற்றுமதி 9.4% உயர்ந்திருந்தாலும், நீண்ட காலத்திற்கு 50% வரியுடன் போட்டியிடுவது சாத்தியமில்லை. இதனால், இந்தியா–அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 அரசு உதவியும்  உண்மை நிலையும்..

அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க, மத்திய–மாநில அரசுகள் பல ஊக்கத் திட்டங்களை அறிவித்துள்ளன. அதில் முக்கியமானது ₹25,000 கோடி மதிப்பிலான ‘ஏற்றுமதி ஊக்குவிப்பு மிஷன் (EPM)’. வட்டி மானியம், MSME-களுக்கு எளிதான கடன், அமெரிக்காவுக்குப் பதிலாக ஐரோப்பா போன்ற சந்தைகளுக்கான ஏற்றுமதி மானியம் ஆகியவை இதில் அடங்கும்.

ஆனால் , இந்தச் சலுகைகள் சிறு–குறு நிறுவனங்களுக்கு பெரிதாகப் போய்ச் சேரவில்லை என்பதே  ஏற்றுமதியாளர்களின்  கருத்து. 50% அமெரிக்க வரிக்கு எதிராக, RoDTEP போன்ற சலுகைகள் வெறும் 2–4% மட்டுமே; இது போட்டியிட போதுமானதல்ல. யானை பசிக்கு சோளப்பொறி போன்றது. PLI திட்டங்களும் பெரும்பாலும் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்து, திருப்பூரின் MSME நிறுவனங்களுக்கு நடைமுறையில் எட்டாக்கனியாக உள்ளன. ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், புதிய கடன் என்பது பலருக்கு மேலும் சுமையாக மாறியுள்ளது..

எது எப்படியோ, இந்த பூனைக்கு மணி கட்டப் போவது யார்? என்பதே இப்போது எழும் முக்கியமான கேள்வி.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்கா மட்டுமே உலகின் ஒரே “சூப்பர் பவர்” ஆக இருந்தது. உலக வர்த்தகம், ராணுவம் மற்றும் முடிவுகளை எடுப்பதில் அமெரிக்காவின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. இதை “அமெரிக்காவின் காலம்” என்று அழைத்தார்கள்

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு நிலைமை மாறியது. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் “America First” கொள்கையைத் தீவிரப்படுத்தி, ஐரோப்பிய நாடுகளுடனான (EU) உறவில் விரிசலை ஏற்படுத்தினார்.இதனால் உலகம் அமெரிக்கா ஒரு பக்கம், சீனா-ரஷ்யா கூட்டணி மற்றொரு பக்கம் என இரண்டு துருவங்களாகப் பிரியத் தொடங்கியது.அமெரிக்கா தங்களைக் கைவிட்டதாகக் கருதிய ஐரோப்பிய நாடுகள், தங்களுக்கென்று தனித்த ஒரு பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பாதையைத் தேடத் தொடங்கின.

அமெரிக்கா விதித்த வர்த்தக வரிகளால் (Tariffs) சீனாவை முழுமையாக வீழ்த்த முடியவில்லை. மாறாக, சீனா தனது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டது. இப்போது அதிகாரம் மூன்று இடங்களுக்குப் பரவியுள்ளது:

முனை 1 (அமெரிக்கா): தற்காப்புப் பொருளாதாரம் மற்றும் ராணுவ பலம்.

முனை 2 (சீனா): உற்பத்தி (Manufacturing) மற்றும் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம்.

முனை 3 (இந்தியா / ஐரோப்பா / Global South): இப்போது இந்தியா ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியில் எந்தப் பக்கமும் சாராமல், உலக நாடுகளுக்கு இடையே ஒரு “பாலமாக” இந்தியா செயல்படுகிறது. அதேபோல் ஐரோப்பாவும் தனித்துச் செயல்படத் தொடங்கியுள்ளது.

இதுதான் இந்த உலகுக்கு திருவாளர்  டொனால்ட் டிரம்ப் அவர்கள் கொடுத்த ஆகச் சிறந்த புத்தாண்டு பரிசாக இருக்க முடியும்..

யுவராஜ் சம்பத்.

11.01.2026..

Series Navigationநந்தியானை சிரித்தது