அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்
எனக்கு பூக்கள் வேண்டாம்,
ஒன்றிணைவு சகாப்தம் வேண்டாம்,
பிரிவின் விடியல் வேண்டாம்.
எனக்கு பூக்கள் வேண்டாம்
ஏனென்றால் நான் மிகவும் அழகான மலர்.
எனக்கு முத்தங்கள் வேண்டாம்
உண்மையான மணிக்கட்டு வேண்டுமென்றால்
நான் ஒரு குதிரை வீரரைப் பிடிக்க வேண்டும் –
திருமண சகாப்தம் வேண்டாம்,
விவாகரத்து விடியல் வேண்டாம்,
விதவை காய்ச்சல் வேண்டாம்.
எனக்கு முத்தங்கள் வேண்டாம்
- குர்திஸ் கஜல் கவிஞர் கஜல் அஹமத்
நபீல், காபூல் மாகாணம், ஆப்கானிஸ்தான்
நான் காபூலின் புறநகரை நோக்கி, எனது விலையுயர்ந்த காரில் போய்க் கொண்டு இருக்கிறேன். அந்தக் காரிலேயே, எனது மெய்க்காப்பாளர்களும், கைகளில் துப்பாக்கிகளோடு பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நான் போகப்போகும் இடத்தை அடைய, இன்னும் எண்பது கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
கஜல் பாட்டு காரில் ஓடிக்கொண்டு இருக்கிறது. என்னை விட, எனது மெய்க்காப்பாளர்கள், “வாவ்.. வாவ்” போட்டு, கஜல் பாட்டை ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
குல்பாரி இறந்து, இந்த மாதத்தோடு, பத்து வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டைக் காலி செய்து விட்டு, வேறு ஒரு சொந்த பங்களாவுக்கு, நான் குடி போய்விட்டேன்.
மாமியிடம் இருந்து, நான் முன்னர் வாடகைக்கு எடுத்து சாப்பாட்டுக் கடை நடத்திக்கொண்டு இருந்த இடத்தை, இப்போது, நானே விலைக்கு வாங்கிவிட்டேன். அங்கேயே ஒரு சாப்பாட்டுக் கடை நடத்துகிறேன்.
காவல் நிலையம் அருகே இருக்கும் அந்தக் கடையையே, எனது பிற, பாவப்பட்ட வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறேன்.
அங்கேயே, எனக்குத் தேவையான காவல் அதிகாரிகளைக் கூப்பிட்டு வைத்து, அவர்களை நன்கு கவனித்து, எனது வேலைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அவர்களிடம் இருந்தே பெற்றுக் கொள்ளுகிறேன்.
விலையுயர்ந்த எனது பங்களாவில், ஐம்பதுக்கும் மேற்பட்ட வேலைக்காரர்கள், தோட்டவேலை செய்பவர்கள், டிரைவர்கள். அவர்கள் கூடவே தங்கி இருக்கும், எனது மெய்காப்பாளர்கள் என இருக்கிறார்கள். அவர்களுக்கு தினம் தினம் சாப்பாடு போட்டு, நன்கு கவனித்துக் கொள்கிறேன்.
எனது பிள்ளைகள் மூன்றையும் துபாய்க்கு அனுப்பி விட்டேன். துபாயில் ஒரு பெரிய பங்களா வீடு வாங்கி இருக்கிறேன். கரீம் அண்ணன்தான், துபாயில் பிள்ளைகளையும், பங்களாவையும் பார்த்துக் கொள்கிறார்.
எனது மகள், துபாயில் பள்ளிக்கூடம் செல்கிறாள். வகுப்பில் அவள்தான் முதல் மதிப்பெண்ணாம். கரீம் அண்ணா, என்னிடம் சொல்லிச் சொல்லிக் களைத்துப் போவார். எனக்கோ அளவு கடந்த பெருமிதம்.
கரீம் அண்ணா பெயரிலேயே, அந்த பங்களாவை வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். கரீம் அண்ணாவோடு சேர்த்து, எனது மூன்று பிள்ளைகளுக்கும், வேறு நாட்டுக் குடியுரிமை வாங்கிக் கொடுத்து இருக்கிறேன்.
ஒன்றல்ல, பத்து பச்சாபாசிகள் கூடங்களை, ஆப்கானிஸ்தானின் பல இடங்களில் நான் இப்போது நடத்தி வருகிறேன்.
சிறுவர்களை நான் பச்சாபாசி வேலைக்கு, கட்டாயமாகச் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால், பதினாறு வயதுக்கு மேற்பட்ட, பதின்ம வயதினரை, அவர்களுக்கு சம்மதம் இருந்தால் மட்டுமே, பச்சாபாசிக் கூடத்தில் சேர்த்துக் கொள்கிறேன்.
பச்சாபாசி பதின்ம வயதினருக்கு, பச்சாபாசி வேலைகளைச் சொல்லித் தருவதோடு, பகல் வேளைகளில், கல்வி சொல்லித்தர ஏற்பாடுகள் செய்து இருக்கிறேன்.
கூடவே, கஜல் பாடல்கள் முறையாகப் பாட, அவர்களுக்கு கற்பிக்க, திறமையான கலைஞர்களை ஏற்பாடு செய்து இருக்கிறேன். சிலருக்கு ரூபாப் இசைக்கருவி கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து இருக்கிறேன்.
கரீம் அண்ணா போன்ற, சில மூன்றாம் பாலின, மாற்றுப் பாலின பச்சாபாசிகள், இந்த பச்சாபாசித் தொழிலை விரும்பிச் செய்கிறார்கள். தங்களுக்கு வயதான போதும், இங்கேயே இருந்து தொழில் செய்கிறார்கள். அவர்களுக்கு நான் எனது பணபலம், படைபலம் கொண்டு, ஆதரவு தருகிறேன்.
இவையெல்லாம் செய்வதால், நான் எனது பச்சாபாசித் தொழிலை, உயர்த்திப் பிடிக்கவில்லை. பச்சாபாசித் தொழில் நியாயமான தொழில் என்று, நான் வாதிடவும் இல்லை.
பச்சாபாசித் தொழில், நிச்சயமாக ஹராம்தான். அது பாவம்தான். அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.
ஆனால், கரீம் அண்ணா சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு நினைவுக்கு அடிக்கடி வருகிறது. நான், வெறும் மாடாக இருந்தபோது, இந்த சமூகத்தால், கல்லால் அடித்துத் துரத்தப்பட்டேன்.
இப்போது, நான் திரும்பிக்கொண்ட மாடு. நான் இப்போது சமூகத்தைத் துரத்துகிறேன். அது என்னைப் பார்த்து தெறித்து ஓடுகிறது.
நான் இப்போது, ஆப்கானிஸ்தானின் பல இடங்களில் ஒபியச் செடிகள் வளர்க்கும் தோட்டங்களுக்கு சொந்தக்காரன். சில என் பினாமிகள் வசம் இருக்கிறது.
உஸ்பெகிஸ்தான், தஜகிஸ்தான், கஜகிஸ்தான், பாகிஸ்தான் என அத்தனை இடங்களிலும் எனக்கு போதைப் பொருள் வாங்கும், வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். தினம் நடக்கும், ஜரூரான வியாபாரத்தால், என் கைவசம் எப்போதும் பணம் குவிந்துகொண்டே போகிறது.
ஆப்கானிஸ்தானின் பெரிய பெரிய காவல் அதிகாரிகள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பல அரசியல்வாதிகளின் நட்பு எனக்கு இருக்கிறது. எனது போதைப்பொருள் கடத்தல் தொழில், அமோகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
நேரடி அரசியலில் நுழைய நான் காத்து இருக்கிறேன். நான் இப்போது வைத்து இருக்கும் பணத்தின் முன்னால், இதுவெல்லாம் சாத்தியம்தான்.
அப்படி அரசியல்வாதி ஆகி, சட்டம் என் கையில் வந்தால், நான் நிச்சயம் பச்சாபாசியை ஒழிப்பேன். எனது கடத்தல் தொழிலை விட்டு விடுவேன்.
மகளிருக்குக் கல்வியைக் கட்டாயம் ஆக்குவேன். மகளிருக்கு தகுந்த உரிமை இல்லாததாலேயே, பச்சாபாசி என்ற இந்த சிறுவர் விபச்சாரம், இவ்வளவு தூரம் புரையோடிக் கிடப்பதாக நான் நம்புகிறேன்.
தீயது செய்யும் உன்னை, இறைவன் விட்டு விடுவாரா? என்று நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். இவ்வளவு கொடியவைகள் செய்யும், நீ பாவி இல்லையா என்று நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள்.
நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். என்னை சிறுவயதிலேயே விபச்சாரத்துக்குள் தள்ளி, என்னைப் பாவியாக்கிய கொடுமையைப் பார்த்துக்கொண்டே இருந்தது யார்? இறைவன்தானே?
அறியாத வயதில், நான் செய்த பாவத்தில் இருந்து மீண்டு, திருந்தி வாழவேண்டும் என்று நான் நினைத்தபோது, “பச்சாபாசி.. பச்சாபாசி” என்று சொல்லிச் சொல்லியே, என்னை ஏழ்மை நிலைக்குத் தள்ளிய இந்த சமூகத்தின் கொடிய செயல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தது யார்? இறைவன்தானே?
காபூல் நகரின் தெருக்களில், ஜன்னலைத் திறந்து வைத்து, பெண்கள் உட்கார்ந்து இருந்தால், அவர்களைச் சுட்டுத்தள்ளும் அவலங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பது யார்? இறைவன்தானே?
ஆஸ்பத்திரிகளில், கர்ப்பிணிப்பெண்கள், டாக்டர்கள் இல்லாமல், கருவில் குழந்தையோடு, செத்துப்போவதைப் பார்த்துக்கொண்டு இருப்பது யார்? இறைவன்தானே?
“இசைப்பது பாவம், பாடுவது பாவம்” என்று எல்லாம் சொல்லி, எத்தனை எத்தனை ஆப்கன் கலைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அந்த அக்கிரமத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பது யார்? இறைவன்தானே?
இதையெல்லாம் செய்வதுதான் இறைவனின் வேலை என்றால், நானே அந்த இறைவனாக இருந்துவிட்டுப் போகிறேன்.
ஒரு நாள் நீ சட்டத்தின் முன்னர் தண்டிக்கப்படுவாய் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அதுதான் எனது இறுதி முடிவென்றால், அதற்கு நான் எப்போதும் தயார் ஆக இருக்கிறேன் என நான் சொல்கிறேன்.
“ஏப்பா உன் நாவலை, இப்படித்தான் முடிக்கனுமா? கொஞ்சம் நல்லபடியாக முடித்தால் என்ன?” என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
இந்த நாட்டின் துப்பாக்கி கலாச்சாரம் மாறட்டும். இந்த நாட்டின் பெண்ணடிமைத்தனம் மாறட்டும். இந்த நாட்டின் சிறுவர் விபச்சாரம் ஒழியட்டும்.
இந்த நாட்டின் போதைக் கடத்தல் ஒழியட்டும். பின் என் நாவலை, நான் நல்லபடியாக முடிக்கிறேன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
இதோ, கார் விரைந்து, சென்று கொண்டு இருக்கிறது. உள்ளே இருக்கும் மெய்க்காப்பாளர்கள், ஏதோ ஒரு நகைச்சுவை துணுக்கு சொல்லிச் சிரிக்கிறார்கள்.
ஆனால், எனது நாயகன் நபீல், இவை எதையும் கண்டு கொள்ளாது அமைதியாக பயணித்துக்கொண்டு இருக்கிறான்.
அவனுக்கென்று ஒரு இலக்கு, நிச்சயம் இருக்கிறது.
முற்றும்
அழகர்சாமி சக்திவேல்
சிங்கப்பூர்