என்.எஸ்.வெங்கட்ராமன்
தேர்தல் அடுத்த சில மாதங்களுக்குள் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக உள்ளன. எதிர் கட்சிகள்
தி மு க அரசின் ஐந்து வருட ஆட்சியில் நடந்த வன்முறை சம்பவங்கள் , வேகமாக பரவி வரும் போதை மற்றும் மது கலாச்சாரம் , குடும்ப ஆட்சி , லஞ்ச லாவண்யம் போன்றவற்றை குறித்து பேசி வரும் நிலையில் , ஆளும் தி மு க அரசு சாதனையாக தொழில் வளர்ச்சி போன்றவற்றை பறைசாற்றி கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் ஏற்பட்ட பல அவலமான சம்பவங்களை மக்கள் மறக்க செய்வதற்காக , கருவூலத்தில் எத்தனை பணம் உள்ளது என்பது குறித்து கண்டு கொள்ளாமல் , மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி கொண்டிருக்கிறது தி மு க அரசு.
வேகமாக அதிகரித்து வரும் சமூக வலை தளங்களினால் மக்களுக்கு ஓரளவு உண்மை நிலை புரிகிறது. இருப்பினும், பண பலம் மற்றும் படை பலம் பெரிதளவில் தேர்தல் காலங்களில் புகுத்த உள்ள நிலையில் , அடுத்த ஆட்சி எந்த கட்சி அமைக்கும் என்பதை குறித்து யாராலும் தெளிவாக கூற முடியவில்லை .
செய்தித்தாள்களிலும், தொலை காட்சிகளிலும் , சமூக வலைதளங்களிலும், தற்போது , அரசியல் கட்சிகளின் பொருளாதார கொள்கை, வளர்ச்சி திட்டங்கள் , ஆக்கபூர்வமான சமுதாய மாற்றங்களுக்கு வழி வகுக்கும் அணுகுமுறை போன்றவற்றை பற்றிய விவாதங்கள் அரிதாகி விட்டன . மாறாக, எந்த கட்சி , எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதே முதன்மை செய்தியாக உள்ளது. ஒரே நேரத்தில், ஏதேனும் ஒரு கட்சி கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேரம் பேசிக்கொண்டிருப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
நேர்மையான ஆட்சி கொடுப்போம் என்று கூறும் சில கட்சிகள் , லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்களை தங்களுடன் சேர்த்து கொள்ள தயங்குவதில்லை.மக்கள் தங்களது இத்தகைய அணுகுமுறை குறித்து என்ன நினைப்பார்கள் என்பது பற்றி கவலைப்படாமல் , அரசியல் கட்சிகளின் பேரம் பேசும் போக்கு , தமிழக தேர்தலை ஒரு சூதாட்ட களமாக மாற்றி உள்ளது என்பது நிதர்சனமாக தெரிகிறது. பொது மக்களும் , தங்களுக்கு சம்பந்தமில்லாத நாடகத்தை பார்ப்பது போல் , இத்தகைய செய்திகளை படித்தும் , பார்த்தும் வருகின்றனர்.
மேலும், தேர்தல் பேரம் நடத்தும்போது தங்களது கட்சி போட்டியிடும் தொகுதிகள் எத்தனை, வெற்றி பெறுவோமோ அல்லது தோல்வி அடைவோமோ என்று தெரியாத நிலையிலும் , ஆட்சியில் பங்கு எத்தனை தேர்தல் செலவிற்கு எத்தனை பணம் கிடைக்கும் என்ற அடிப்படையில், தீவிரமாக பேரத்தில் ஈடுபடும், எல்லா கட்சிகளுக்கும், மக்களின் எதிர்பார்ப்பு குறித்து எந்த விதமான கவலையும் உள்ளதாக தெரியவில்லை. மாறாக , மக்களை அரசியல் கட்சிகள் , ருசித்து விட்டு தூக்கி எறியும் கருவேப்பிலை போல் கருதுகின்றனர் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. தனது தொகுதியில் தான் விரும்பும் கட்சி தனித்து போட்டியிடாமல், தான் விரும்பும் கட்சி கூட்டணி அமைத்துள்ள , தான் விரும்பாத கட்சி போட்டியிடும் நேரத்தில், மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பமடைகின்றனர். இந்த நிலையில், மக்கள் மனசாட்சிக்கு எதிராக வாக்களிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பல தருணங்களில், விருப்பமில்லாத கட்சிக்கு வாக்களிக்கும் நிலை குறித்து வருத்தப்படுகின்றனர். இந்த நிலை தேர்தலையே ஒரு கேலி கூத்தாக மாற்றி விடுகிறது.
கொள்கை பிடிப்பில்லாமல், சந்தர்ப்பவாத அணுகுமுறையுடன் , கட்சிகள் பேரத்தின் அடிப்படையில் கூட்டணி அமைப்பதால் ,தேர்தல் களத்தில் ஜனநாயக சித்தாந்தங்கள் முறியடிக்கப்படுகின்றன. தேர்தல் களம் ஒரு சூதாட்ட களமாக மாறி , கேள்விக்குறியாகி விட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
தேர்தல் மாண்பு குறையாமல் இருக்க வேண்டும் என்றால் , மக்கள் விருப்பமில்லாத கட்சிக்கு, கூட்டணி அமைப்பினால் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தை தவிர்க்கவும், இந்த கூட்டணி அமைக்கும் முறையை தவிர்க்கவும் , தேர்தல் விதிமுறைகளை தக்க ரீதியில் மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இதனை செய்யாவிட்டால், தேர்தல் ஜனநாயகம் ஒரு அலங்கோலமாக தற்போது மாறி உள்ள நிலையை தவிர்க்க முடியாது. தற்போதய இந்த அலங்கோல நிலைக்கு , தமிழகத்தில் நடக்க உள்ள தேர்தல் ஒரு எடுத்து காட்டாக உள்ளது .
என்.எஸ்.வெங்கட்ராமன்
- கொடை
- படைப்பும் படைப்பாளியும்
- மனம் போல் வாழ்வு
- சூதாட்டமாக மாறிய தேர்தல் களம் – மக்கள் வெறும் கருவேப்பிலை தான்
- தீரா காதல்…
- ஒரு வன பரப்பில்,பல மரங்கள் …
- “இந்தியாவின் சரக்கு பெட்டகப் புரட்சி: சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்குமா CMAS திட்டம்?”
- தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு
- ‘அரண்மனை மியூசியம்’ நாவல் வெளியிடப் பட்டது
- மழைபுராணம் – 18
- இடைவெளி….