படைப்பும்படைப்பாளியும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நான் – நான் – நான் – நான் -நான்
என் றான பெருங்குரலில்
கண்ணில் பட்ட கூரை மேலெல்லாம்
கண்றாவியாய்த் தாவி யேறி நின்று
கூவிக்கொண்டேயிருந்தார் அவர்.
மானே தேனே என்று எழுதினால் மட்டுமே
இலக்கிய விமர்சனமாகக் கொண்டவர்.
‘போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே
என்று துதித்தாலோ
அதி பரவசத்தில் அதையே உலகத்தரமான திறனாய்வு
என்று உணர்வுபொங்கப் பதிவிடுவார்.
அப்படி எழுதப்பட்ட ஓரிரண்டை
தன் அடையாள அட்டைகளாக
அச்சிட்டுக்கொண்டார்.
அவரவர் வேலையிலாழ்ந்து
அவசர அவசரமாகச்
சென்றுகொண்டிருந்தவர்களை
நிறுத்தி
’என்னைப் படிக்காத வாசகர்கள்
என்ன வாசகர்கள்
எச்சக்கலைகள்’ என்றார்.
’என் எழுத்தின் எடையே எல்லோரைக்
காட்டிலும் அதிகம்
என்று
எடுத்துச்சொல்லாத விமர்சனமும்
அடித்துச்சொல்லாத திறனாய்வும்
என்ன எழவுக்கு எழுதப்படுகின்றன
அப்படி எழுதுகிறவர்களைக் கழுவேற்றுவேன்’
என்று
நடுத்தெருவில் நின்று
நாராசக் கூப்பாடு போட்டார்.
என்னமோ சொல்லிவிட்டுப்போகட்டும்
பாவம் – அவர் வருத்தம் அவருக்கு
என்று
அனுதாபத்துடன் சிலரும்
அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியாதவர்களாய்
சிலரும்
அவர் என்னமும் சொல்லிவிட்டுப்போகிறார்
நம் வேலையை நாம் பார்ப்போம் என்று
சிலரும்
ஏன் தானோ இவர் இப்படித்தானோ
வென
திரும்பித்திரும்பிப் வேடிக்கை பார்த்தவாறே
சிலரும்
கடந்துபோய்க்கொண்டிருக்க _
காலமும்
காவியமும்
அவ்வண்ணமே
கடந்துபோய்க்கொண்டிருக்க_
இன்னமும் காட்டுக்கத்தலாய்
கூவிக்கொண்டிருப்பவருக்கு
முன்னும் பின்னும்
ஏற்றமிகு எழுத்தாக்கங்களும்
படைப்பாளிகளும்
இன்றும் என்றும்
வந்துபோனவாறே…..
- கொடை
- படைப்பும் படைப்பாளியும்
- மனம் போல் வாழ்வு
- சூதாட்டமாக மாறிய தேர்தல் களம் – மக்கள் வெறும் கருவேப்பிலை தான்
- தீரா காதல்…
- ஒரு வன பரப்பில்,பல மரங்கள் …
- “இந்தியாவின் சரக்கு பெட்டகப் புரட்சி: சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்குமா CMAS திட்டம்?”
- தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு
- ‘அரண்மனை மியூசியம்’ நாவல் வெளியிடப் பட்டது
- மழைபுராணம் – 18
- இடைவெளி….