முனைவர் நா. ஹேமமாலினி,
கௌரவ விரிவுரையாளர்,
தமிழாய்வுத்துறை,
மா. மன்னர் கல்லூரி (தன்)
புதுக்கோட்டை
செல் :6379893995
Email : hemamaliniraja1984@gmail.com
மனம் போல் வாழ்வு
மனிதர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் இருப்பிடமாக இருப்பது மனம் ஆகும். ஒருவருடைய விருப்பங்கள் மற்றும் நோக்கங்கள் மனதில் இருந்தே உருவாகின்றன. மனமே ஒருவரின் வாழ்க்கையை வடிவமைக்கும் அடிப்படை சக்தி. தம்முடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். மனம் போல் வாழ்வு என்று வாழ்த்துவது நம் பண்பாடு, அவ்வகையில் ஆங்கிலக் கவிஞர் ஜேம்ஸ் ஆலன் என்பவரால் எழுதிப் புகழ் பெற்ற As a Manthinketh என்ற நூலினை வ.உ.. சிதம்பரம்பிள்ளை அவர்கள் ”மனம் போல் வாழ்வு” என்று தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார். அவற்றைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
மனம் – பெயர் – பொருள் விளக்கம்
மனம் என்னும் சொல் மன்னுதல் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. அதாவது, ஆன்மாவில் நிலைபெற்று விளங்குவது. ”மனம் என்பது பார்வை, கேட்டல், நுகர்தல், பேசுதல், உணர்தல் என்ற ஐம்புல நுகர்வுகளுடன் சிந்தனை என்ற பகுதியுள் அடங்கிய ஒருவகை நரப்பச் செயல்பாடு” (மனம் ஓர் ஆய்வு – கு.வை. இளங்கோவன், ப., 124) மனித வாழ்விற்கு அடிப்படையாக இருப்பதோடன்றி, மனிதனையே இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலே மனம். (தமிழர் கண்ட மனம் – கரு. நாகராசன், ப., 105) மனம் ஆன்மாவில் நுட்பமாகக் கலந்திருப்பது, பொறிபுலன்களின் துணையோடு இயங்குவது.
எண்ணங்கள்
“மனம் போல வாழ்வு” என்பது நமது முன்னோர் கண்ட பொன்மொழி. மனம் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். தீயது நினைத்தால் தீயது நடக்கும். நினைத்தல் என்பது சூழலின் தூண்டல்களால் அமைகின்றன. தூண்டல்கள் அகத்தூண்டல், புறத்தூண்டல் என இரண்டு வகைப்படும். இதனைக் கருத்திற் கொண்டுதான் மகாத்மா காந்தியடிகள் தனது அலுவலகத்தில், தனது கைகளால் கண்களையும்,காதுகளையும், வாயையும் பொத்திக்கொண்டிருக்கும் மூன்று பொம்மைகளை வைத்திருந்தார் என்பர்.
பொறிபுலன்களால் தூண்டப்பட்டு நாடிநரம்புகளின் வழி மூளைக்குச் செய்திகள் அனுப்பப்படுகின்றன. அதன்பின் மூளையோடு தொடர்புடைய மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. எண்ணங்கள் வலுப்பெறும் நிலையில் செயல்களாக வடிவெடுகின்றன. எண்ணங்களின் கூட்டுத்தொகுப்பு ஆசையாகவும், உழைப்பாகவும் மாறி மேதை தலைவன் என்று ஒளிருவதை உலகில் காண்கிறோம். அத்தகையோரால் உலக சரித்திரமே எழுதப்படுகிறது. ஆம்! எண்ணங்கள் உலகை ஆள்கின்றன. (எண்ணங்கள் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, ப., 25) எந்த அளவிற்கு எண்ணங்களுக்கு வலுவூட்டுகின்றோமோ அந்த அளவிற்கு அவை வெற்றிகளைத் தருகின்றன. இதனை,
எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியர் திண்ணியராகப் பெறின் குறள். எ., 666
என்ற குறளில் வான்புகழ்வள்ளுவர் வகுத்துரைத்துள்ளார்.
உலகில் எதை வேண்டுமானாலும் வசப்படுத்தி விடலாம். மனதை மட்டும் அடக்குவது அவ்வளவு எளிதில் இயலாத காரியம்.
”கந்து உக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்;
ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொ(ள்)ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்
மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்;
சலம் மேல் நடக்கலாம்; கனல் மேல் இருக்கலாம்;
தன் நிகர்இல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம் அரிது, சத்தாகி என்
சித்தமிசை கடிகொணட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே” தாயுமானவர் பாடல் எண். 8
என்பது தாயுமான அடிகளார் அருளிய பாடல்.
தாயுமான அடிகளார், ”சினம் இறக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே” என்று புலம்புகிறார். ”எத்தனை விதங்கள் தான் கற்கினும் கேட்கினும், என் இதயமும் ஒடுங்கவில்லை. யான் என்னும் அகந்தைதான் எள்ளளவும் மாறவில்லை” என்றும் இரங்குகிறார். உள்ளம் எனது வசம் நின்றது இல்லை. என் தொல்லைவினை ஒல்லை விட்டிடவும் இல்லை என்று வருந்தி கந்தகோட்டா முருகனிடம் இரங்குகின்றார் வள்ளல் பெருமான். ”ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ, நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல” இறைவனை வேண்டுகின்றார் தாயுமானவர்.
நினைப்பும் ஒழுக்கமும்
மனம் என்பதும் நினைப்பு என்பதும் ஒரே பொருளைக் கொடுக்கும் சொற்கள். மனம் போல் வாழ்வு என்பது மனிதனது நினைப்புக்குத் தக்கவாறு அவனுடைய வாழ்வு அமைகின்றது என்பதே. மனிதன் எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே ஆகிறான். மனிதன் எவ்வாறு நினைக்கின்றானா அவ்வாறே அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் நிலைமையும் அமைகின்றன. மனிதன் எதை நினைக்கிறானோ அதே ஆகிறான். அவனது நினைப்புகளின் தொகுதியே அவனுடைய ஒழுக்கம்.
பூமியில் மண்ணுன் மறைந்து கிடக்கும் வி;த்தினின்றே மரம் உண்டாகிறது. அதேபோல, மனிதனுடைய அகத்துள் மறைந்து கிடக்கும் நினைப்பினின்றே அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகின்றது. வித்து இல்லாமல் மரம் உண்டாதல் இல்லை. அதுபோல நினைப்பு இல்லாமல் செயல் உண்டாதல் இல்லை. மனதாரச் செய்கின்ற செயல்களைப் போலவே, தாமேயாகவும் சுபாவமாகவும் நிகழ்கின்ற செயல்களும் நினைப்பினின்றே உண்டாகின்றன.
செயல்கள் நினைப்பின் மலர்கள், இன்பமும் துன்பமும் அதன் கனிகள் இவ்வாறாக மனிதன் தனது சொந்த வேளாண்மையின் தித்திப்பும் கசப்புமுள்ள கனிகளை உண்டு பண்ணிக் கொள்கிறான்.
மனமெனும் நினைப்பே நமையாக்கியது;
நினைப்பால் நாம் நம் நிலைமையை உற்றனம்,
ஒருவன் நினைப்புக்குக் கருமறம் பற்றிடின்
எருதுபின் உருளைப்போல் வரும் நளி துன்பமே;
ஒருவன் நினைப்புத் திருஅறம் பற்றிடின்,
தன்னிழல் போல மன்னும் இன்பமே.
(வ.உ.சி மனம்போல் வாழ்வு மொழிபெயர்ப்பு ப., 3)
சுரங்கத்தின்கண் மிக ஆழமாக அறுத்தலாலும், மிகக் கவனத்தோடு தேடுதலாலும் தங்கமும் வைரமும் கிடைக்கின்றன. மனிதன் தனது ஆன்மாவாகிய சுரங்கத்தின் கண் ஆழ்ந்து தேடுவானாயின், தனது ஆன்மாவைப் பற்றிய ஒவ்வோர் உண்மையினையும் காணல் கூடும். மனிதன் தனது நினைப்புகள் தன்னிடத்தும், பிறரிடத்தும், தனது வாழ்க்கையிடத்தும், நிலைமைகளிடத்தும் உண்டுபண்ணும் காரியங்களைக் கண்டு, பொறுமையான அப்பியாசத்தாலும், விசாரணையாலும், காரண காரியங்களைப் பொருத்திப் பார்த்தும்,அறிவும் வலியும் ஞானமுமான தன்னைப்பற்றிய அறிவை அடைவதற்கு மார்க்கமாகப் பிரதிதினமும் நிகழும் ஒவ்வொரு சிறிய சம்பவத்தும் தான் கொள்ளும் அனுபவம் முழுவதையும் உபயோகித்துத் தனது நினைப்புகளை எச்சரிக்கையாகக் காத்துத் தன்வசப்படுத்தித் தக்கவழியில் திருப்பவானாயின், தானே தனது ஒழுக்கத்தை ஆக்குபவன், தானே தனது விதையை விதிப்பவன் என்னும் உண்மைகளை நன்றாக அறிவான். தேடுகிறவன் காண்பான் தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படும் என்னும் உண்மைகள் இவ்விஷயத்திற்கு மிகப் பொருத்தமானவை. இக்கருத்தினை,
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும்
தன்னை நிலைகலங்கிக் கீழிடு வானும்
நிலையினும் மென்மேல் உயர்த்து நிறுப்பானும்
தன்னைத் தலையாகச் செய்வானும் தான் – நாலடியார் பாடல் எண் 248
என்ற பாடலுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
நினைப்பும் நிலைமையும்
ஒரு மனிதனது மனம், விவேகத்துடன் பயிர் செய்யத்தக்க அல்லது காடாகும்படி விட்டுவிடத்தக்க ஒரு தோட்டத்திற்குச் சமானமாகும். பயிர் செய்தாலும் செய்யாவிட்டாலும் தோட்டம் ஒரு வினைவைக் கொடுக்கும்
ஒரு தோட்டக்காரன் தனது நிலத்திலுள்ள புல்பூண்டுகளை நீக்கித் தனக்கு வேண்டும் கனிகளையும், மலர்களையும் கொடுக்கத்தக்க மரங்களையும், செடிகளையும் அதில் வைத்து வளர்த்தல் போல, மனிதன் தமது மனத்திலுள்ள குற்ற நினைப்புகளும், அசுத்த நினைப்புகளுமாகிய புல் பூண்டுகளை நீக்கி, ஆரோக்கியமும், செல்வமும், வலிமையுமாகிய மலர்களையும், இன்பமும், புகழும் முக்தியுமாகிய கனிகளையும் கொடுக்கத்தக்க குற்றமற்ற நினைப்புகளும், பயனுள்ள நினைப்புகளும், சுத்தமான நினைப்புகளுமாகிய செடிகளையும், மரங்களையும் வைத்து வளர்த்துக் கொள்ளலாம். இங்ஙனம் செய்து வருவதால், மனிதன் தனது ஆன்மாவினது தோட்டத்தின் எஜமான் என்றும் தனது வாழ்க்கையின் கர்த்தன் என்றும், விரைவிலோ, தாழ்ப்பிலோ தெரிந்து கொள்வான். அன்றியும் அவன் நினைப்பின் நியதிகளைத் தன்னுள் காண்கிறான். நினைப்புச் சக்திகளும், மனோ அம்சங்களும், தனது ஒழுக்கத்தையும் நிலைமையையும் விதியையும் எங்ஙனம் உருப்படுத்துகின்றன என்பதை நாளுக்கு நாள் நன்றாக அறிகின்றான்.
நினைப்பும் ஒழுக்கமும் ஒன்றே. நல்ல நினைப்புகளும் செயல்களும் ஒரு காலத்திலும் கெட்ட பலன்களைக் கொடுக்க மாட்டா, கெட்ட நினைப்புகளும் செயல்களும் ஒரு காலத்திலும் நல்ல பலன்களைக் கொடுக்க மாட்டா, இவ்வுண்மை ”விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளையாது”. ”எட்டியிலே கட்டி மாம்பழம் பழுக்காது” என்னும் உண்மையை ஒத்ததே. ”தினை விதைத்தவன் தினை அறுப்பான்” வினை விதைத்தவன் வினையறுப்பான் என்ற பழமொழிகள் ஒப்புநோக்கத்தக்கது.
”எந்நிலைமை நீஅடைய எண்ணுவையோ நின்னுள்ளுள்
அந்நிலமை நீ அடைவாய் அப்பொழுதே – தந்நிலைமை
தந்ததென்பர் தோல்வியெலாம் சாரமிலார், நின்றுநகும்
பந்தமில்ஆன் மாஅவரைப் பொறுத்து”
(வ.உ.சி மனம் போல் வாழ்வு மொழிபெயர்ப்பு ப., 13)
3. நினைப்பும் சரீரமும் ஆரோக்கியமும்
மனம் ஆண்டான்; சரீரம் அடிமை. முன் ஆலோசனையோடாவது தன்னியல்பிலாவது மனம் கொள்கின்ற நினைப்புகளை ஒட்டியே சரீரம் நடக்கின்றது. சட்ட விரோதமான நினைப்புகளை சரீரம் பிணியையும் அழிவையும் விரைவில் அடைகின்றது. நல்ல நினைப்புகளாலும், சந்தோஷ நினைப்பகளாலும், சரீரம் யௌவனத்தையும் அழகையும் பெறுகின்றது.
வியாதியும் ஆரோக்கியமும் நிலைமைகளைப் போலவே நினைப்பில் வேரூன்றியிருக்கின்றன. வியாதி நினைப்புகளை வியாதியுள்ள சரீரம் வெளிப்படுததும் அச்ச நினைப்புகள் மனிதனை ஒரு வெடிகுண்டு எவ்வளவு துரிதத்தில் கொல்லுமோ அவ்வளவு துரிதத்தில் கொல்லக் கண்டியிருக்கிறோம். அவ்வளவு வேகமாகக் கொல்லவிட்டாலும், அவை வெடிகுண்டுபோலவே உண்மையாக அநேக மனிதர்களை இடைவிடாது கொன்று விட்டியிருக்கின்றன. வியாதி வருமோ என்று பயப்படுகிறவர்களே வியாதியை அடைகிறவர்கள். மனக்கவலை சரீரம் முழுவதிலும் விரைவில் ஒழுங்கீனத்தை உண்டாக்கி வியாதி வருவதற்கு வழி செய்து வைக்கின்றது. பரிசுத்தமற்ற நினைப்புகளைச் சரீரம் நிறைவேற்றாவிட்டாலும், அவை நரம்புக் கட்டைச் சீக்கிரத்தில் உடைத்துக் கெடுத்துவிடும்.
பலமும் சுத்தமும் சந்தோஷமும் பொருந்திய நினைப்புகள் உய சரீரத்துக்கு ஊக்கத்தையும் ஆரோக்கியத்தையும் அழுகையும் கொடுக்கின்றன. உடல் மெல்லியதும், எப்படி வேண்டினாலும் அப்படி ஆகத்தக்கதுமான ஒரு கருவி. அதில் எந்த நினைப்புகள் வருகின்றனவோ அந்த நினைப்புகளோடு அது இணங்கி நடக்கின்றது. பழக்கங்களாகப் பரிணமித்த நினைப்புகள், தமது நல்ல பலன்களையோ, கெட்ட பலன்களையோ உடலில் உண்டு பண்ணுகின்றன.
அறவினைக்கும் அரும்பொருள் இன்பொடு
பெறுவ தற்கும் பெருங்கல்வி கற்றுயர்
விறலி னுக்கும் நல்லீரம் தனக்குஒண்
துறவினுக்க் துணைமனம் என்பவே
(வ.உ.சி மனம் போல் வாழ்வு மொழிபெயர்ப்பு ப., 16)
4. நினைப்பும் காரியமும்
ஒருவன் ஒரு நியாயமான காரியத்தைத் தன் உள்ளத்தில் குறிப்பிட்டுக் கொண்டு, அதனைச் செய்து முடிக்க முயற்சி செய்ய வேண்டும். அவன் அக்காரியத்தைத் தனது நினைப்புகளைக் கவரும் மத்தியப் பொருளாகக்கொள்ள வேண்டும். அது அவனுடைய அக்கால சுபாவத்திற்கு ஏற்றபடி ஒரு வைதிக காரியமாகவோ, லௌகிக காரியமாகவோ இருக்கலாம். ஆனால் அது எதாயிருப்பினும் அதனிடத்தில் அவனது நினைப்பின் சக்திகளையெல்லாம் உறுதியாக ஒருமுகப்படுத்தல் வேண்டும். அக்காரியத்தைத் தனது பிரதான கடமையாகக் கொண்டு, கணத்தில் அழிந்துபோகும் மனோ விருப்பம், மனோராஜ்ஜியம், மனோபாவனை முதலியவற்றில் தனது நினைப்புகளைத் திரியவிடாமல் அதனைச் செய்து முடித்தற்கு முயலுதல் வேண்டும். இதுதான் தன்னடக்கத்திற்கும் மன ஏகாக்கிரகத்திற்கும் இராஜ பாட்டை, தான் கருதியுள்ள காரியத்தைச் செய்து முடித்தலில் பலமுறை தவறினும் (பலஹீனம் நீங்கிப் பலம் பெறுகிற வரையில் தவறுவது இயல்பே) அவன் அடையும் ஒழுக்கத்தின் பலம் அவனுடைய உண்மையான வெற்றியின் அளவையாக இருக்கும். இது அவன் எதிர்காலத்தில் பெறும் வலிமைக்கும் வெறறிக்கும் ஒரு புதிய அடிப்படையாகும். இதனை,
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து” – குறள் எண். 596
என்ற திருக்குறளின் வாயிலாக வள்ளுவப் பெருந்தகை எடுத்துரைக்கிறார்.
ஒரு பெரிய காரியத்தை உட்கொள்ளவதற்குத் தகுதி இல்லாதவர், தமது கடமையை, அது எவ்வளவு சிறியதாகத் தோன்றினாலும், குறைவின்றிச் செய்து முடிப்பதில் தமது நினைப்புகளையெலலாம் செலுத்த வேண்டும். இவ்வழியாக நினைப்புகளை ஒருமுகப்படுத்தவும், ஊக்கத்தையும் மனவுறுதியையும் வளர்க்கவும் கூடும். இவற்றைச் செய்து முடித்த பின்னர் அவரால் செய்து முடியாத காரியம் ஒன்றுமே இராது.
நல்ல செய்து நாரரை யுயர்த்தவும்
அல்ல செய்தங் களற்றிடை யாழ்ப்பவும்
வல்ல திந்த மனமல தையனே
இல்லையென்ன இயம்பும் மறையெலாம்
(வ.உ.சி மனம் போல் வாழ்வு ப., 19)
5. நினைப்பும் காரிய சித்தியும்
ஒரு மனிதன் செய்து முடிப்பனவும், செய்து முடிக்கத் தவறுவனவும், அவனது நினைப்புகளின் நேரான பலன்கள்
எவ்வகையான காரியசித்தியும். முயற்சியும் முடிவும், நினைப்பின் மகுடமுமாகும். தன்னடக்கம், துணிவு, தூய்மை, நடுவுநிலைமை, நன்றாகச்செலுத்தப்பட்ட நினைப்பு இவற்றின் உதவியால் மனிதன் உயர்கிறான். சிற்றின்ப இச்சை, சோம்பல், அசுத்தம், அநீதி, மனக்குழுப்பம் என்பனவற்றால் மனிதன் தாழ்கிறான்.
ஒரு மனிதன் இவ்வுலகத்தில் மிகவுணர்ந்த ஸ்தானத்திற்கும், ஆன்ம உலகத்தில் மிகவுயர்ந்த பதவிகளுக்கும் உயரலாம். பின்னர் அகங்காரமும், சுயநலமும், அயோக்கியத்தையும் பொருந்திய நினைப்புகளுக்கு இடம் கொடுத்துப் பலஹீனத்திற்கும் தரித்திரத்திற்கும் தாழலாம்.
நியாயமான நினைப்பால் பெற்ற வெற்றிகளை எச்சரிக்கையோடு போற்றிக் காக்க வேண்டும். வெற்றி பெறுகிற சமயத்தில் செய்யாமல் பலர் மறுபடியும் தோல்வியுறுகின்றனர்.
தொழிலுகம், புத்தியுலகம், ஆன்மவுலகம் இவற்றில் எதிலானாலும் பெறுகின்ற சித்திகள், குறித்த வழிகளில் சரியாகச் செலுத்தப்பட்ட நினைப்பின் நேரான பலன்கள், அவையெல்லாம் ஒரே விதியால் ஆளப்படுகின்றன. அவையெல்லாம் ஒரே தன்மையனவாயிருக்கின்றன. வித்தியாசமெல்லாமல் அடையும் பொருளில் உள்ள வித்தியாசமே. சிறிய சித்தி பெற விரும்புகிறவன் சிறிது கஷ்டப்பட வேண்டும். பெரிய சித்தி பெற விரும்புகிறவன் பெரிதும் கஷ்டப்பட வேண்டும். மிக உன்னதமான நிலையை அடைய விரும்புகிறவன் மிகமிக கஷ்டப்பட வேண்டும்.
6. மனோதிருஷ்டிகளும் மனோசிருஷ்டிகளும்
மனோதிருஷ்டியுடையார் உலகத்தின் இரசஷகர் ஆவர். மனோதிருஷ்டியாவது, விழித்துக் கொண்டு பல நல்ல காரியங்களை நினைப்பிற் கண்டு கொண்டிருத்தல், ஸ்தூல உலகம் சூஷ்ம உலகத்தை ஆதாரமாகக் கொண்டிருத்தல் போன்ற, மனிதர் பாவங்களையும் இழிவான செயல்களையும் செய்யும்போதும், கஷ்டங்களை அநுபவிக்கும் போதும், தம்மைச் சேர்ந்த மனோ திருஷ்டியாளரது அழகிய மனோதிருஷ்டிகளால் போஷிக்கப்படுகின்றனர். மனத சமூகம் தனது மனோ திருஷ்டியாளரை மறுத்தல் முடியாது. அவருடைய மனோ சிருஷ்டிகள் மங்கிப் போகவும், அழிந்து போகவும் விடுதல் முடியாது.
மனிதரது சகல காரியங்களிலும் முயற்சிகளும் உண்டு. பலன்களும் உண்டு. முயற்சி எவ்வளவோ, பலனும் அவ்வளவே, காலமொன்றாவது, அதிர்ஷ்டமென்றாவது, ஒன்று இல்லை. சாமர்த்தியங்களும், சக்திகளும் உலகவுடைமைகளும் அறிவுடைமைகளும், மோஷவுடைமைகளும் முயற்சியின் பலன்கள், அவை முற்றுப்பெற்ற நினைப்புகள் செய்து முடித்த காரியங்கள் அனுபவித்த மனோ திருஷ்டிகள்.
உங்கள் மனத்தில் நீங்கள் போற்றிவரும் திருஷ்டியோ உங்கள் ஹிருதயத்தில் நீங்கள் உன்னதமாக வைத்திருக்கும் சிருஷ்டியோ, உங்கள் வாழ்க்கையை ஆக்கிக் கொள்வதற்குக் கருவியாகும். அதுவே நீங்கள் ஆவீர்கள்.
7. சாந்தி
சாந்தி, ஞானத்தின் அழகிய ஆபரணங்களில் ஒன்று. அது தன்னை (உடம்பையும் நினைப்பையும்) அடக்கியாளுதலிலே பொறுமையுடன் நீண்ட காலம் செய்த முயற்சியின் பலன், அதன் உடைமை முதிர்ந்த அநுபவத்தையும் நினைப்பின் செயல்களையும் நியதிகளையும் நன்குணர்ந்த அறிவையும் காட்டும் ஒரு குறி.
அமைதியுள்ள மனிதன், தன்னை அடக்கியாளக் கற்றுக் கொண்டபடியால், மற்றவர்களோடு இணங்கி நடக்கும் வழியை அறிகிறான். அவர்களும் அவனது ஞானாதிக்கத்தை மதித்து, அவனிடமிருந்து சில கற்கலாமென்றும், அவன்மீது நம்பிக்கை வைக்கலாமென்றும் உணர்கிறார்கள். ஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக அமைதியுள்ளவனாகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய காரிய சித்தியும், செல்வாக்கும், நன்மை செய்யும் சக்தியும் அதிகரிக்கின்றன.
நாம் தினத்தோறும் காண்கின்ற மனிதரில் எத்தனை பேர் தமது அருமையான உயிர்களை வருத்துகின்றனர்? எத்தனை பேர் கடுகடுத்த முகமும் வெடுவெடுத்த பேச்சும் கொண்டு இனிமையும் அழகையும் கெடுக்கின்றனர்? எத்தனை பேர் சமாதானத்தை அழித்துப் பகைமையை ஆக்குகின்றனர்? எத்தனை பேர் நிதானமான ஒழுக்கத்தை விடுத்து நீங்காத துன்பத்தை அடைகினறனர்? தன்னை அடக்கியாளும் சக்தி இல்லாமல் தமது வாழ்நாள்களை வீணாக்கித் தமது இன்பங்களைக்கெடுத்துக் கொள்வோர் உலகில் பெரம்பாலரல்லரோ என்பது ஒரு வினா, சான்றாண்மைக்குரிய சிற்பபியல்பான அழகிய சமாதானத்தோடு வாழ்பவர் மிகச் சிலரல்லரோ, இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே விதமாகக் கொள்ளும் சமநிலையான மனத்தையுடையவர் மிகச் சிலரல்லரோ?
திடமும் அமைதியுமுள்ள மனிதனிடத்தல் எல்லோரும் அன்பும் எப்பெழுதும் அன்பும் மதிப்பும் பாராட்டுவார்கள். அவன் பாலைவனத்தில் நிழல்தரும் ஒரு மரத்தை ஒத்தவன். அமைதியான மனத்தையும், இனிமையான வாழ்க்கையும், நிதானமான வாழ்க்கையையும் விரும்பாதவர் எவர்? இந்நற்குணங்கள் வாய்ந்தவர்களுக்கு மழை பெய்தாலும் வெயில் காய்ந்தாலும், வேறு எவ்வித மாறுதல் உண்டானாலும் ஒன்றுமில்லை. ஏனெனில், அவர்களிடத்தில் இனிமையும் நிதானமும் சாந்தமும் எக்காலத்துமுண்டு. நாம் சாந்தி யென்று சொல்லும் ஒழுக்கமானது கல்வியின் கடைசிப் பாடமாகும். அதுவே வாழ்க்கையின் மலரும், ஆன்மாவின் கனியும் ஆகும். அது ஞானத்தைப் போல் அருமையானது. தன்னடக்கமே வலிமை; சரியான நினைப்பே ஆண்மை; அமைதியே ஆற்றல்; உங்கள் ஹிருதயத்தைப் பார்த்து, கவலைகொள்ளாதே, சாந்தியா யிரு என்ற கருத்துக்களை மொழிந்துள்ளார்.
முடிவுகள்
“மனம் போல் வாழ்வு என்பது” வெறும் வார்த்தைகள் அல்ல. அது நம் வாழ்வை நாமே வடிவமைக்கும் சக்தி வாய்ந்த மந்திரம், நேர்மறை சிந்தனைகள், இலட்சியவாதம் மற்றும் சுய கட்டுப்பாட்டின் மூலம், நம் எண்ணங்களைச் செம்மைப்படுத்தி மனதிற்கு ஏற்ற வளமான வாழ்க்கையை நாம் நிச்சயம் அடைய முடியும்.
துணைமை ஆதாரங்கள்
1. மனம் போல் வாழ்வு, (ஜேம்ஸ் ஆலனின் நூல், தமிழில் மொழிபெயர்ப்பு) வ.உ. சிதம்பரம்பிள்ளை, பாரிநிலையம், சென்னை 12ஆம் பதிப்பு.
2. திருக்குறள் பரிமேழகர் உரை, எஸ். கௌமாரீஸ்வரி (பதிப். ஆ.,) சாரதா பதிப்பகம், சென்னை, 11ம் பதிப்பு ஆகஸ்டு 2009
3. மனம் ஓர் ஆய்வு, கு.வை. இளங்கோவன்,
4. தமிழர் கண்ட மனம், கரு. நாகராசன், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
5. நாலடியார், தெளிவுரை, சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு
6. தாயுமான சுவாமிகள் பாடல், இளம்போதரன் பதிப்., ஆ., முல்லை நிலையம். சென்னை.
- கொடை
- படைப்பும் படைப்பாளியும்
- மனம் போல் வாழ்வு
- சூதாட்டமாக மாறிய தேர்தல் களம் – மக்கள் வெறும் கருவேப்பிலை தான்
- தீரா காதல்…
- ஒரு வன பரப்பில்,பல மரங்கள் …
- “இந்தியாவின் சரக்கு பெட்டகப் புரட்சி: சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்குமா CMAS திட்டம்?”
- தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு
- ‘அரண்மனை மியூசியம்’ நாவல் வெளியிடப் பட்டது
- மழைபுராணம் – 18
- இடைவெளி….