This entry is part 8 of 9 in the series 22 பிப்ரவரி 2026

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்

ஒரு பிரகாசமான விடியல் உதயமாகிறது,

பூமி துதியுடன் விழித்தெழுகிறது;

ஓ மிக உயர்ந்த ராஜாவே,

நீர் மரணத்தின் வல்லமையால் வெல்லப்படுகிறீர்

–  பெர்சி டியர்மர்

பழங்குடித் தலைவர், சிம்பாரி இனம், பாப்புவா நியூ கினியா

அந்த பவுர்ணமி இரவிலும், என் இனத்துப் பிள்ளைகள், ஏதோ ஒரு கிறித்தவப் பாடலை, சத்தமாகப் பாடிக்கொண்டு இருப்பது, குடிசைக்குள் இருந்த எனக்குக் காதில் கேட்டது.

எங்கள் குடிசைகளை ஒட்டி இருந்த அந்த பெரிய பூவரசு மரத்தின் மண் மேடையில் இருந்துதான் அந்த சத்தம் வந்து கொண்டு இருந்தது. 

நான் மெதுவாக, குடிசையை விட்டு வெளியே வந்து, அந்த பூவரசு மரத்தை எட்டிப் பார்த்தேன்.

இருளில், எங்களைச் சுற்றியிருந்த மலைகள், பிரமாண்டமாய் எனக்குத் தெரிந்தது. நான், மலைகளுக்கு கீழே இருந்த, அந்தப் பிரமாண்டமான பூவரசு மரத்தை இன்னும் கொஞ்சம் உற்றுக் கவனித்தேன். ஏதோ, ஒரு மயிர்கள் படர்ந்த பெரிய ராட்சசன் போல், அந்த இருளில் எனக்குத் தெரிய, நான் கொஞ்சம் பயந்து போனேன்.

இப்படி எல்லாம், பயப்படுகிறவன் அல்ல நான். உண்மையில் நான், நெஞ்சுரம் நிறைந்தவன். ஆனால் சமீப காலங்களில், இந்த பரந்த மலைகளிலும், காடுகளிலும் ஏற்படும் மாற்றங்கள்… சிம்பாரி இன மலைவாழ் மக்கள் கட்டிக் காத்து வளர்த்த, கலாச்சாரங்களின் சீரழிவு… அதைக் கண்டு கோபமடையும் மாந்தரீக குருவான மசளையான்.. அவனது கோபம்தான், என்னை இப்படி பயத்தில் நடுங்க வைக்கிறது.

நான் இந்த மலைக்காட்டின், சிம்பாரி இனத் தலைவன். எனது சிம்பாரி மலைவாழ் இனம், வீரம் நிறைந்த இனம். 

எத்தனை எத்தனை எதிரிகளை, நாங்கள் விரட்டி அடித்து இருப்போம். இந்த மலைகளிலும், இந்த வனாந்திரங்களிலும், எத்தனை எத்தனை கொடிய விலங்குகளை, நாங்கள் வீரமாக வேட்டையாடி இருப்போம். 

அப்படி வேட்டையாடிய போதெல்லாம், வேட்டையாடிய ஒரு பங்கை நாங்கள் எடுத்துக்கொண்டோம். ஒரு பங்கை கடவுளுக்கு வைத்தோம். மூன்றாம் பங்கை மசளையானுக்குப் படைத்தோம்.

அப்போதெல்லாம் மசளையான் எங்கள் மீது இவ்வளவு கோபம் கொண்டதில்லை. ஆனால் இப்போதோ நிலைமை வேறு. நான் அதிகக் கவலையுடன், அந்த அகன்ற பூவரசு மரத்தைப் பார்த்தேன்.

பூவரசு மரத்தின் கீழ், ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும், தங்களை மறந்து, கிறித்தவப் பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களைச் சுற்றி, மாராக்குப் போட்ட சில வயதான பெண்கள்.

இப்படி எல்லாம் நடந்து கொள்ள, எங்கள் சிம்பாரி இனத்தில், ஒரு போதும் அனுமதி இல்லை. அதுவும், பொதுவெளியில், ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து இருக்க, எங்கள் மலை இனத்தில், ஒரு போதும் அனுமதியில்லை. முக்கியமாக, பெண்கள், மாராக்குப் போடும் வழக்கமே இல்லை.

ஆனால், இங்கே, இந்த கிறித்தவ மடம் வந்ததில் இருந்தே, கொஞ்சம் கொஞ்சமாக, எல்லாம் தலைகீழ் ஆக மாறிக்கொண்டு இருக்கிறது.

நான், இருளில், எங்கள் கிராமத்து நடை பாதைகளை  கவனித்துப் பெருமூச்சு விட்டேன். முன்னர், ஆண்களுக்கு என்று ஒரு நடைபாதை பெண்களுக்கு என்று ஒரு நடைபாதை, என்ற விதிகள் இருக்கும். ஆனால், இப்போது, அப்படியெல்லாம் இல்லை. எல்லாப் பாதைகளிலும், எல்லோரும் நடந்து போய் வருகிறார்கள்.

சில பிள்ளைகள், இப்போது ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆங்கிலம் படிக்கிறார்கள். ஆனால், ஐயகோ… சிம்பாரி மொழி பேசுவதைக் ‘கேவலம்’ என்று ஏன் நினைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதுவே எனது மிகப் பெரிய கவலை.

இப்படி சிம்பாரி இனத்தின் பாரம்பரியம், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போவதுதான், மாந்தரீக குரு மசளையானுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. 

எனக்கு மசளையானின் கோபம் புரிந்து இருக்கிறது. சிம்பாரி இனத்தின் மீதான அவனின் கோபத்தை, ஒரு சிம்பாரித் தலைவனாய், எப்படியாவது போக்கிவிடவேண்டும் என்று, நான் துடியாய்த் துடிக்கிறேன். ஆனாலும் முடியவில்லை.

நான் இப்போது, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன். எனது மூக்கில் நான் மாட்டியிருந்த காட்டுப் பன்றியின் தந்தங்கள், என் மூக்கு துவாரங்களைக் குத்தியது. நான், மூக்கைத் தேய்த்து அதை சரி செய்து கொண்டேன்.

நான் மூக்கு துவாரங்களில் மாட்டி இருக்கும், இந்தக் காட்டுப்பன்றியின் தந்தங்கள் இரண்டும், யாரோ எனக்கு பரிசாகக் கொடுத்தது இல்லை. 

உண்மையில், நானே, தனி ஆளாய்ப் போய், ஒரு காட்டுப்பன்றியை போராடிக் கொன்று, அதன் தந்தங்களை, வீரமாக, எனது மூக்கு துவாரங்களில் மாட்டிக் கொண்டவன். ஆனால், இப்போதுள்ள இளைஞர்களுக்கு, இதில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் இல்லை.

அதற்காக, நான் எங்கள் பாரம்பரியத்தை விட்டு விடுவதாக இல்லை. நான் மட்டும் இல்லை, எனது தம்பி குத்தீட்டி, எனது மாமா மலை இருளன், என, இன்னும் ஐந்நூறு பேர், கிறித்துவ மதத்தில் சேராமல், இன்னும் எங்கள் சிம்பாரி இனக் கலாச்சாரத்தையே, இன்றளவும் கடைபிடித்து வருகிறோம். 

அந்த வகையில், மாந்தரீக குரு மசளையானுக்கு, எங்கள் மீது என்றென்றும் ஒரு தனிப்பட்ட பிரியம்.

இதோ, அடுத்த மாதம், புனிதக்குழல் திருவிழா வருகிறது. வருடா வருடம் நடக்கும் இந்தத் திருவிழா, இந்த சிம்பாரி இன மக்களின் ஆண் பிள்ளைகளுக்கானது. 

இந்த புனிதக்குழல் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறுவயது ஆண் பிள்ளைகள், முன்னர், குறைந்தது ஐந்து வருடங்கள், தங்கள் அம்மாவை விட்டுப் பிரிந்து, மலைக்குடிசைகளில், மற்ற ஆண்களோடு தங்கி வாழ வேண்டும். 

ஆனால், கிறித்துவ மதம், இந்த மலைப்பிரதேசத்திற்குள் வந்த பிறகு, அந்த ஆண் பிள்ளைகள் தனியே வாழும் காலங்கள் எல்லாம் சுருங்கிப் போனது. இப்போது, ஒருநாள் புனிதக்குழல் திருவிழாவோடு சரி. 

இப்போதெல்லாம், விழாவில் கலந்து கொள்ளும் பல சிறுவர்கள், அவரவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டு, விழாவுக்கு வந்து கலந்து கொள்ளுகிறார்கள். பின்னர், அந்த நாளிலேயே, அவரவர் வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். 

கிறித்துவ மதம், உள்ளே வந்த பிறகு, எங்கள் குலவழக்கங்கள் எல்லாமே, வெறும் சம்பிரதாயங்களாக மாறிப் போய்விட்டது. 

இந்த முறை, இப்போதுள்ள ஆண்பிள்ளைகள், இந்த புனிதக்குழல் திருவிழாவில் மனதார கலந்து கொள்ளுவார்களா? எங்கள் குல தெய்வத்தின் கருணையைப் பெறுவார்களா? மாந்தரீக குரு மசளையானின் கோபத்தைத் தனிப்பார்களா? 

எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆனாலும் நான் விடுவதாக இல்லை. “நிச்சயம் புனிதக்குழல் திருவிழாவை, வெற்றிகரமாக நடத்திக் காட்டுவேன்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

இப்போது பூவரசு மரத்தை, இன்னுமொருமுறை பார்த்தேன். இப்போது, பூவரசு மரம் காலியாக இருந்தது. எனது இனத்துப் பிள்ளைகள் எல்லாம் கலைந்து போய் இருந்தார்கள். 

நான் குடிசைக்குள் உள்ளே வந்து படுத்துக் கொண்டேன். விழா நல்ல படியாக, நடந்தேற, இலைத் தோரணங்கள், மூங்கில் கம்புகள், நெருப்புக் குண்டங்கள், பன்றிக் கறிகள், முதுகிலும், மார்பிலும் வீசி, புண்ணாக்குவதற்கு ஏதுவான, பெருங்காஞ்சொறிச் செடிகளின் குச்சிகள்…

பிள்ளைகளின் முகத்தில் தடவ சாம்பல்கள், இளம் பிள்ளைகளின் வில் வித்தைப் போட்டிக்குத் தேவையான, வில் மற்றும் அம்புகள்.. இவை எல்லாமே நான் தயார் செய்தாக வேண்டும். 

“இவற்றை எல்லாம் நான் எப்போது சேகரித்து முடிக்கப் போகிறேன்?  நினைக்கையில், எனக்கு பெருமூச்சு வந்தது.

“விழா நடக்கும் அந்த நீண்ட குடிலை, சுத்தம் செய்ய வேண்டும். காட்டு மழை வந்தால், விழா நடக்கும் குடிலின் கூரை, ஒழுகாமல் இருக்க, கூரையின், உலர்ந்து போன கீற்றுகளை அகற்றி, புதிதாக வேய வேண்டும்.” 

நான், எனது நீண்ட பணிகளை நினைத்துக்கொண்டே தூங்கிப் போனேன்.

ஆனால், எனது தூக்கம், கொஞ்ச நேரம்தான். அதற்குள், “வீல்..” என்று, யாரோ அலறும் சத்தம் கேட்டது. யாரோ சிலர், ஏரியை நோக்கி, வேகமாக ஓடுகிற, காலடிச் சத்தமும் கேட்டது.

கொஞ்ச நேரத்தில், ஏரிக்கு அருகில் இருந்து, “அய்யய்யோ.. அய்யய்யோ காட்டேரி முதலை, யாக்கோபுவைக் கொன்று விட்டதே… யாராவது ஓடி வாங்களேன்” என்ற அலறல் சத்தம் கேட்டது.

எனக்குப் புரிந்து போனது. கூடு விட்டுக் கூடு பாயும், மசளையான்தான், முதலை வடிவில் வந்து, யாக்கோபுவைக் கொன்றுவிட்டான்.

“மாந்த்ரீக மசளையான் எத்தனை எத்தனை பேரைத்தான் இப்படிக் கொல்லுவான்? அவனது கோபத்துக்கு ஆளாகி, எனது சிம்பாரி இன மக்கள், எத்தனை எத்தனை பேர்தான், மாண்டு போவார்கள்?” எனது வேதனை, கூடிக்கொண்டே போனது.

எப்படியும், இந்த இரவில், மசளையானைப் பார்த்துவிட வேண்டும். நான், வேகமான நடையில், ஏரியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

வில்லாளன், ஆங்கிலிக்கன் திருச்சபை, மோர்ஸ் பி, பாபுவா நியூ கினியா

நான் அந்தத் திருச்சபைக்குள் இருந்த மேசைகள் ஒன்றொன்றாய் துடைத்துக் கொண்டு இருந்தேன். ஏற்கனேவே, பாதிரியார் நிற்கும் பீடம், அவர் ஏறி நின்று பேசுகிற சிறு மேடை, அப்பம் வழங்கும் தட்டு, திராட்சைக் குடுவை, தூபம் காட்டும் குப்பி, கண கணவென, ஒலியெழுப்பும் சின்ன வெள்ளி மணி, இப்படி எல்லாவற்றையும் துடைத்து விட்டேன். 

இப்போது கடைசியாய், எல்லாம் வல்ல கர்த்தரை, தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், வந்து உட்காரும், அந்த மேசைகளை, நான் சுத்தமாகத் துடைத்துக் கொண்டு இருந்தேன். 

எங்கள் பாபுவா நியூ கினியாவின், வளர்ந்த வேங்கை மரங்களால் செய்யப்பட்ட அந்த மேசைகளுக்கும் எனக்கும் பத்து வருட பரிச்சயம். 

இந்த தேவாலயத்துக்கு நான் வேலைக்கு வருவதற்கு முன், நானும் இந்த தேவாலயத்தின் தலைமைப் பாதிரியாரான ஜேம்ஸ் பாதரும் சேர்ந்து, பாபுவா நியூ கினியாவின், மலைகளில் ஒன்றான, லாமிங்டன் மலைக்கருகில் இருந்த தேவாலயத்தில் பணி புரிந்து வந்தோம். 

அப்போது எங்கள் இருவருடன், லாமிங்டன் மலையிலேயே, எனது அன்பு தெய்வமான பாதர் ஹென்றியும் எனது உடன்பிறவா அன்பு அண்ணனும், கிறித்துவ போதகரும் ஆன லூசியன் டைப்பியேடியும் எங்களுடன் சேர்ந்து கர்த்தருக்குத் தொண்டாற்றிக் கொண்டு இருந்தார்கள். 

ஆனால், அந்த இருவரும் இன்று எங்களோடு இல்லை. லாமிங்டன் மலையிலும், பூனா கடற்கரையிலும் நடந்த அந்த ஜப்பானிய ராணுவம் செய்த, கிறித்துவப் படுகொலையின் பயங்கரத்தை நினைத்தால், இன்றளவும் எனக்கு ஈரக்குலை நடுங்குகிறது. 

அந்த கொலைகளுக்குப் பின்னரே, நானும், பாதர் ஜேம்சும், இந்த தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு பெருங்கதை.

இந்த சர்ச்சின் ஒரு முக்கிய வேலையாளாக, இந்தப் பத்து வருடங்களில், நான்தான் இந்த மேசைகளைத் துடைக்கிறேன். நான்தான், சர்ச்சின் பெரிய கோவில் மணி அடிக்கிறேன். அடர்ந்த மரங்கள் சுற்றி இருக்கும் எங்கள் சர்ச்சில், கீழே விழும் காய்ந்த இலைகளையும், குச்சிகளையும், கூட்டிப் பெருக்குபவனும் நான்தான்.

இந்த தேவாலயத்துக்குப் பின்னால் இருக்கும், பெரிய மடத்தில்தான் எல்லாப் பாதிரிமார்களும் தங்குகிறார்கள். அங்கேயே பாதிரிமார்கள், தினம் சாப்பிடும், சாப்பாட்டுக் கூடம் இருக்கிறது. பக்கத்தில் ஒரு தேவாலய நூலகம், ஒரு உள்ளரங்க விளையாட்டுக் கூடம், இப்படி எல்லா வசதிகளும் கொண்ட ஒரு தேவாலயம், எங்கள் தேவாலயம்.

இவைகள் எல்லாவற்றையும், சுத்தம் செய்யும் பணி எனக்கு உண்டு. ஆனால், தேவனுக்குச் செய்யும் இந்தத் தொண்டு, என்னை எப்போதும் களைப்படையச் செய்வதில்லை.

இதோ, நான் எல்லா மேசைகளையும் துடைத்து முடித்துவிட்டேன். நான் மேசைகளைத் துடைத்து முடிக்கும் தருவாயில், பாதிரியார் ஜேம்ஸ், சில பதின்ம வயது ஆண் பிள்ளைகளையும், சில பதின்ம வயது பெண்களையும் அழைத்துக்கொண்டு, எனது அருகில் வந்தார்.

“வில்லாளன்.. இவர்கள் சிம்பாரி இனத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கு மலையில் இருந்து, கிறித்துவ பாடம் கற்றுக்கொள்ள, இங்கே வந்து இருக்கிறார்கள். அவர்கள் உட்கார, தகுந்த மேசைகளைக் காட்டு. அப்புறம், இந்த பிரார்த்தனை முடிந்த பிறகு, இவர்கள் நம் சர்ச்சின் பின்னால் தங்கும் அறைகளுக்குப் போய், சுத்தம் செய்து வை. இவர்களுக்கு முடிந்த  உதவி செய். சரியா?” என்றார். 

‘சிம்பாரி இனம்’ என்று பாதிரியார் சொன்னவுடன், நான் ஒரு நிமிடம் அதிர்ச்சியானேன். “என் இனம்.. என் சிம்பாரி இனம்.. நான் பிறந்த சிம்பாரி மலையினம்”

நான் வாய் பேசாது நிற்பதைப் பார்த்த பாதிரியார்.. “என்ன வில்லாளன் நான் சொன்னது புரிந்ததா? “ என்று வினவினார்.

நான், இப்போது, சரி என்று தலையாட்டினேனே ஒழிய, நான் அதிர்ச்சியில், அந்த பதின்ம வயது மாணவ மாணவியரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

பாதிரியார், மேடைப் பீடத்துக்குச் சென்று விட்டார். நான், இன்னும் அந்த சிம்பாரிக் குழந்தைகளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். 

“என் இனம்.. என் இனம்.. எனது சிம்பாரி மலையினம்..” என்று நான் ஒருவித பரவசத்தோடு முணுமுணுத்துக் கொண்டேன். எனது கண்களில் கண்ணீர், என்னையுமறியாமல் கொட்ட முயன்றது. நான் முகத்தைத் திருப்பிக்கொண்டு, எனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டேன்.

சிம்பாரிப் பிள்ளைகளை, ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக, மேசைகளில் உட்கார வைத்தேன். பின்னர் தேவாலயத்தின் முன்னே இருந்த, மணியடிக்கும் இடத்துக்கு வேகமாக வந்தேன்.

என்னால், இன்று மட்டும், பலமாக மணியடிக்க முடியவில்லை. எனது கைகள் நடுங்கியது. “எனது இனமே சிம்பாரி… என் கண்மணியே பூவரசி… எப்படி இருக்கிறாய் பூவரசி.. இப்போது எங்கே இருக்கிறாய் பூவரசி… உனக்கு துரோகம் செய்து, உன்னை அப்படியே விட்டுவிட்டு ஓடி வந்த என்னை மன்னிப்பாயா பூவரசி. உனக்குத் தெரியாமலேயே, வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்து, ஒரு பிள்ளையும் பெற்றுக்கொண்டேன் பூவரசி..”. 

நான் அழுதுகொண்டே, அந்த பெரிய மணி கட்டப்பட்டு இருந்த கயிற்றை இழுத்து, இழுத்து, மணியை, அடித்துக் கொண்டே இருந்தேன். 

“இந்த பிராத்தனை முடிந்த கையோடு, பிள்ளைகளின் அறைகளை சுத்தம் செய்ய வேண்டும். அப்புறம் பாதர் ஜேம்ஸின் அறைக்குப் போய், அவரது கால்களைப் பிடித்துக் கொண்டு, எனது மனபாரம் குறையும் அளவிற்கு, கதறி அழவேண்டும்.” நான் மணியடித்துக்கொண்டே, புலம்பினேன். 

“என் பாவங்களை மன்னியுங்கள் பாதர்… ஒரு பெண்ணுக்கு நான் செய்த துரோகங்களை மன்னியுங்கள் பாதர்” என்று பாதரிடம் மன்றாடிக் கதற வேண்டும்.

நான், அழுது கொண்டே, விடாது மணி அடித்துக்கொண்டு இருந்தேன்.

தொடரும்

அழகர்சாமி சக்திவேல்

சிங்கப்பூர்

Series Navigationமீன் தொட்டிகதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல்