This entry is part 1 of 9 in the series 22 பிப்ரவரி 2026

இளையவன் சிவா 

கரையேறும் அலைகள்

கவிதைத் தொகுப்பு

இரஜகை நிலவன்

வெளியீடு
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மும்பை

முதல் பதிப்பு நவம்பர் 2002

பக்கம் 64

விலை ரூபாய் 55

கவிஞர்களது எண்ணங்கள் எப்போதும் சமூகத்தின் நகர்வுகள் மீதான தாக்கத்தை அவதானித்துக்கொண்டே இருக்கும். வாழ்க்கையின் பரபரப்பையும் அதன் வழியே  மக்களின் அவசரத்தையும் சமூக அவலங்களையும் அவை மக்களிடையே ஏற்படுத்தும் தாக்கத்தையும் மனிதர்களது சிறுமைகளையும் சீர்கேடுகளையும் அரசியல்வாதிகளின் அக்கிரமப் போக்குகளையும் மக்களை ஏமாற்றும் வஞ்சகத்தையும் சூடாகவும் எள்ளல தொனியோடும் கண்டனக் குரலிலும் சுட்டிக்காட்டுவது தற்கால கவிதைகளுக்கு உயிரும் உணர்வும் ஊட்டுகிறது. தான் வாழும் சூழலில் தன்னை பாதிக்கும் வாழ்க்கை நிலைமைகளையும் சூழ்நிலைகளையும் மனித இயல்புகளையும் வேதனையோடும் ஏக்கத்தோடும் பதிவு செய்யும் இந்தக் கவிதைகள் வாழ்வில் மனிதன் கற்றுக் கொள்வது என்ன? என்பதையும் மனிதன் மூலம் மற்ற மனிதன் எதையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்? என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

**பம்பாய்

எங்கும் எதிலும்
நிதானம் இல்லாமல் தேவையில்லாமலும்
தீப்பிடித்த வீட்டிற்குள்
வாழும் மாந்தர் தப்பித்து ஓடுவதற்கான ஆயத்தங்களோடு
எங்கும் எப்போதும்
எல்லாத் திசைகளிலும்
அவசரம் நிறைந்த நகரமிது.

நான் வாழும் நகரம் எப்படி எல்லாம் அவசரத் தன்மையோடு மனிதர்களை கண்டு கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதை இந்த கவிதை குறிப்பிடுகிறது

**பிராணவாயு பிச்சை கேட்கிறது

இயற்கையின் சாவகாச மரணம் பச்சை மரங்களின் சாக்காடு கடலை மூடி இன்னும்
புதிய புதிய கட்டிடங்கள்
—————
ஓசோன் தாண்டி சூரியக்கதிர்கள் பிராணவாயுவை
பிச்சை கேட்கிறது.

  மனிதர்கள் தங்களது பேராசைக்காக இயற்கையை பாழ்படுத்தி உலகத்தில் அத்தனை வளங்களையும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடி கொண்ட தன்னலம் பெருகியதால் ஏற்பட்ட விளைவு வெப்ப நிலை உயர்வு பருவநிலை மாறுபாடுகள் என பல்வேறு இடர்பாடுகள் உயிரினங்களைச் சூழ்ந்து கடும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நமக்கு ஒளியும் வெப்பமும் கொடுக்கும் சூரியனின் கதிர்வீச்சுகள் உயிரினங்களை கடுமையாக தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் சூழலுக்கு நமது பேராசை விட்டுச் சென்று இருக்கிறது

**நாங்கள்

இதோ நிலவிற்கு
விலாசம் சொல்லும்
21 ஆம் நூற்றாண்டில்
இன்னும் இங்கே கைரேகைகளும் ஜோசியங்களும்
பெரு வியாதிக்கு மருந்து தேடி இதயமாற்று சிகிச்சை செய்யும் இந்த விளிம்பில்
இன்னும் மந்திரக் கயிறும் மாந்திரீகங்களும்

ஜெட் விமானத்திற்கு
டிக்கெட் விலை கேட்டு
அலையும் மக்கள் கூட்டத்திலும் நாளைய உலகைப் பற்றி பிரசங்கிக்கும் கிரகங்களின் நாடி பிடிக்கும் தேச ராசிகளின் முழு பக்க விளம்பரம்
எங்கோ உலகம் போய் செவ்வாயில் கால் வைக்கும் காலத்தில்
நாங்கள் நாள் நட்சத்திரம் பார்த்து காதுகுத்து விழா கொண்டாடுகிறோம்.

உலகம் அறிவியலின் துணை கொண்டு எத்தனையோ கருவிகளை கண்டுபிடித்து வேகமான ஓட்டத்திற்கு உதவி செய்து கொண்டே இருக்கின்றன ஆனால் அறிவியல் பார்வையும் அறிவியல் போக்கையும் மறந்துவிட்டு இன்னும் மூடநம்பிக்கைகளின் பின்னால் மனித குலம் சென்று வருவதை இக்கவிதை சுட்டிக்காட்டுகிறது

**அழகு

தொழிலாளர் வர்க்கத்தின் வியர்வை முத்திலும்
கூலி வேலை செய்யும் சித்தாளின் வேகமான நடையிலும்
பாதையோர ஓவியனின் கைவிரல் நடனமாடும் வேகத்திலும்
சுமைதூக்கும் வேலையாளின் கூன் விழுந்த முதுகிலும் நாளைய முடிவிற்கு காத்திருக்கும்
முகத்தின் சுருக்க வரிகளிலும் சிரிக்கும் மழலையின்
எச்சில் சிதறலிலும் கூட
அழகைக் காண்கிறேன்.

எது அழகு? அழகின் இலக்கணம் என்ன? வெறுமனே புற அழகை பார்த்து மயங்கி விடுவதில்லை அழகின் தன்மை. உழைப்பின் வர்க்கத்தை உறுதி செய்யும் மனநிலையும் காணும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மகிழ்விக்கும் தன்மையிலும் ஒளிந்திருக்கும் அழகை இந்த கவிதை அழகாக படம் பிடிக்கிறது

**எதிர்கொள்வோம்

மீனாக நீந்த
பறவையாக பறக்க
பாம்பாக நெளிய
புயலாக சீற
தென்றலாக தவழ
பூக்களை நேசிக்க
முட்களின் வலியுணர
தெரிந்து கொள்
வாழ்க்கையை
நேர்கொள்ளலாம்.

வாழ்க்கை என்பது இன்பங்களால் நிறைந்த பூந்தோட்டம் மட்டுமல்ல துன்பங்கள் நிறைந்த சூழ்ந்த முட்களாலும் வாழ்வை நாம் நகர்த்த வேண்டிய காலம் வரும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவளது பாதைகளுக்குள் ஏற்படும் தடைகளும் இடர்பாடுகளும் அவள் மனதில் நம்பிக்கைகளே அதிலிருந்து மீள்வதற்கு வழி செய்கின்றன மனிதன் எல்லா விதமான உயிரினங்களின் செயல்பாடுகளையும் உணர்ந்து கொண்டு முன்னேறும் போதே அவனது இலக்கு அடைவதற்கு அவையெல்லாம் உதவி செய்கின்றன.

**நாம் இந்தியர்கள்

வேலியைத் தாண்டி
பயிர்களை மேயும் உயிரினங்களை நம்மால் அடித்து விரட்ட முடிந்தது இருப்பினும் சட்டத்தின் வேலியைத் தாண்டி
நம்மை சுரண்டி தங்கள் பையை நிரப்பும் அரசியல்வாதிகளை மலர்ந்த முகத்தோடு எதிர்கொள்ள முடிந்தது ஏனெனில் நாம்
ஜனநாயகம் கொண்டாடும் இந்தியர்கள்.

விடுதலை வாங்கி ஆண்டுகள் 75 தாண்டிவிட்டாலும் இன்னும் நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மனிதர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஒவ்வொரு தனி மனிதனின் பொருளாதார முன்னேற்றமும் ஈடேற முடியாமல் தத்தளிக்கும் சூழலே நிலவுகின்றது. அடிப்படை வசதிகள் இல்லாமல் இத்தனை கோடி பேர் இந்த நாட்டில் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது நம்மை ஆளும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் மீது நமக்கு கோபமும் எரிச்சலும் வருவதை மறைப்பதற்கில்லை.

**நேசம்

மரங்களை மலைகளை நேசிக்கிறீர்கள்
மலர்களை
மலையில் இருந்து விழும் அருவிகளை ரசிக்கிறீர்கள்.
————
பூனைக்குட்டியை
நாயையும்
நேசிக்கிறீர்கள்
அழகுமிகு சோலைகளை மழைச்சாரலையும் ரசிக்கிறீர்கள் மானிட இதயத்தை
மானிடத்தை
ரசிக்கவும் நேசிக்கவும்
ஏன் மறந்து போனீர்கள்?

  மனிதர்கள் வளர்ப்புப் பிராணிகளின் மீது காட்டும் நேசத்தையும் பாசத்தையும் அன்பையும் கருணையும் தன்னைச் சுற்றி உயிர் வாழும் பிற மனிதர்கள் மீது காட்டினால் எவ்வளவோ முன்னேற்றங்களும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் எளிதில் பிறந்த விடும் என்ற பெருங்கனவை இந்த கவிதை வெளிப்படுத்துகிறது..

**தொடுகை

சிறப்பாக குடும்பம் நடக்கும் சிறியதாய் பெரியதாய் பிணக்குகளோடு.
நேற்றைய உரசல்களும் நாளைய கனவுகளும்
அழிந்து போனதால்
அடிக்கடி சொல்லி
சலிக்க வைப்பாள் மனையாள். எப்போது பெரியவளாகி
செலவு வைக்கப் போகிறாளோ என மனபயம்
எழுப்பி விட்டுப் போகும்
பெண் பிள்ளை.
தன் வாகனத்திற்கும் கல்விச்சாலை பயணத்திற்கும் எப்போது அம்மா வழியாக
தூது விடுவான் நாளைய வாரிசு.
அவசரமாக பணிக்கு
ஓடும் போது
அடிவயிற்றில் கத்திக்குத்துகளாய்.

தன் குடும்பத்தை நேசித்து தனக்காக தன்னைத் தொடரும் தன் வாரிசுகளுக்காகவும் தன் மனைவிக்காகவும் ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆண்களுக்கும் இந்த கவிதை சாலச் சிறந்த பொருத்தமாக அமைகிறது. குடும்பத்தின் ஆணிவேராக உழைப்பைச் சுமந்து கொண்டு திரியும் ஒவ்வொரு தந்தைக்கும் தினமும் வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளையும் தன்னை நம்பி இருக்கும் தன் குடும்பத்தினரை காப்பாற்ற அவர்கள் ஓடும் ஓட்டத்தையும் இந்த கவிதை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

அரசியல் சமூகம் பொருளாதாரம் இல்லற அரசியல் இயற்கை நேசம் சாதியின் தாக்கம் மூட நம்பிக்கைகளின் தாக்கம் என் நம்மைச் சுற்றி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் வாழ்வியல் செயல்பாடுகளை தனக்கே உரிய கவிதை மொழியில் ரௌத்ரம் பழக்க எழுதியிருக்கும் இந்தக் கவிதைகள் நமக்குள் நல்ல சிந்தனை அலைகளை கரையேற்றிவிடுகிறது.

இளையவன் சிவா 

Series Navigationமறுவாழ்வு