அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்
ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ
ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ
ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ
தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் – கீர்த்தனை
வில்லாளன், ஆங்கிலிக்கன் திருச்சபை, மோர்ஸ் பி, பாபுவா நியூ கினியா
அந்த பெரிய வேன், பாபுவா நியூ கினியாவின் தலைநகரான, மோர்ஸ் பி துறைமுகத்தில் இருந்து, சிம்பாரி மலை நோக்கி போய்க் கொண்டு இருந்தது.
வேனுக்கு உள்ளே, ஜேம்ஸ் பாதர், சத்தமாக, இயேசுவின் மகிமையை, கீர்த்தனையாகப் பாடிக்கொண்டு இருந்தார். கூடவே, அந்த சிம்பாரி இனப் பிள்ளைகளும், ஜேம்ஸ் பாதரின் பாடலை, கைத்தாளம் போட்டு, திரும்பப் பாடிக்கொண்டே வந்தனர்.
சிம்பாரி மலையில் இருந்து, எங்கள் சர்ச்சுக்கு வந்த, அந்த சிம்பாரி மலைசாதிப் பிள்ளைகளும். எங்களோடு பயணித்தார்கள். அந்த இளம் பிள்ளைகளுக்கு, தங்கள் தாய் தந்தையரைப் பார்க்க, தங்கள் இல்லமான சிம்பாரி மலைக்கு, திரும்பப் போவதில், மிகுந்த சந்தோசம்.
நான் மட்டும், ஆழ்ந்த யோசனையில் இருந்தேன். நான் பிறந்த சிம்பாரி மலைக்குப் போவதில், எனக்கு ஆனந்தம்தான். ஆனால், எனது அன்புப் பூவரசி…
அவள் இப்போது எப்படி இருப்பாளோ? வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டு இருப்பாளோ? அவளை, அப்படியே விட்டு விட்டு, லாமிங்டன் மலைக்கு ஓடி வந்த என்னை இப்போது பார்த்து, காறித் துப்புவாளோ?
எனக்கு எல்லாவற்றையும் நினைக்கையில், வேதனையாக இருந்தது. நான், வேனில், அமைதியாகவே உட்கார்ந்து இருந்தேன். வேன் கரடு முரடான பாதையில் குலுங்கி குலுங்கிப் போனது. அந்தக் குலுங்கல்களுக்கு ஏற்ப, எனது மனமும் குலுங்கியது.
“இப்போது சிம்பாரி மலையில், எங்கள் சாம்பியா இனத்தில், யார் ஊர் நாட்டாமை ஆக இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. பூவரசி, இப்போது என்னைப் பார்த்தவுடன், என்ன செய்யத் துடிப்பாள்? என் பூவரசி, இப்போது என்னைப் பார்த்த உடன், நாட்டாமையை விட்டு ஊரைக் கூட்டி, என்னை தண்டிக்க நினைப்பாளா” எனக்கு அதிகக் கவலையாக இருந்தது.
எனது கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்த, ஒரு சிம்பாரி இளம் பெண், என்னைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்தாள். அவளது அன்பு முகம், என் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் தந்தது.
எனது கவலையைப் போக்கும் விதமாக, அவளது பைபிள் புத்தகத்துக்கு நடுவில், பாடம் செய்து வைத்து இருந்த மந்தாரைப் பூவின் கொத்தை எடுத்து என்னிடம் நீட்டினாள்.
காய்ந்து போய் இருந்த அந்த மந்தாரை மலரை, நான் பார்த்த உடன், எனக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. நான், கண்ணீர் விடுவது, அந்த சிம்பாரி இளம் பெண்ணுக்கு தெரிந்து விடக் கூடாது, என்பதில் கவனமாக இருந்த நான், எனது முகத்தை, வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.
நான் பிறந்த எங்கள் சிம்பாரி இன கிராமத்திற்கும், பூவரசியின் கிராமத்திற்கும், தூரம் கொஞ்சம் அதிகம்தான். மலையோரமாகவே போய், மூங்கில் காடுகளைக் கடந்து போனால், பூவரசி கிராமம் வந்து விடும்.
ஆனால், மூங்கில் காடுகளில் வசிக்கும் அந்த மலைப் பாம்புகள்… எனது அம்மாவிற்கு கொள்ளை பயம்.
பதினொன்று வயது சிறுவன் ஆன என்னை, அந்த மூங்கில் காடுகளுக்கு அனுப்புவதை, எனது அம்மா எப்போதும் தவிர்த்து விடுவாள். அதனாலேயே, அந்த மூங்கில் காடுகளைத் தாண்டி இருந்த, பூவரசியின் கிராமத்துக்கு, ரொம்பநாள், போகாமலேயே இருந்தேன்.
ஆனால், என்னோடு, மரக்குரங்கு விளையாட்டு விளையாடும், எனது வயது நண்பர்கள், பூவரசி வாழும் கிராமம் பற்றியும், அங்கே இருக்கும் அழகிய மந்தாரைப் பூ மரங்கள் பற்றியும், பெருமையாய்ப் பேசுவார்கள்.
அப்படி அவர்கள், பெருமையாய்ப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு, எனக்கும் ஒரு நாள், பூவரசியின் கிராமத்துக்குப் போய், அந்த அழகிய மந்தாரைப் பூ மரங்களைப் பார்க்க, ஆசைமேல் ஆசை வந்துவிட்டது.
எனது நண்பர்களிடம், எனது ஆசையைச் சொன்னால், உடனே அவர்கள், எனது அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விடுவார்கள். எனவே, நான், தன்னந்தனியாக, அந்த கிராமத்துக்கு, அடர்ந்த அந்த மூங்கில் மரங்களைக் கடந்து, ஒரு நாள் போனேன்.
ஆகா.. எத்தனை எத்தனை அழகிய மந்தாரைப் பூ மரங்கள்… சிவப்பு மந்தாரை, நீல மந்தாரை, வெள்ளை மந்தாரை, மஞ்சள் மந்தாரை என, வண்ண வண்ண மலர்கள்..
அடர்ந்த அந்த மந்தாரை வனம், சொர்க்கலோகம் போல எனக்குத் தோன்றியது.
நான் மந்தாரை மரங்களின் நடுவில், எனது மனம் போன போக்கில், ஓடித் திரிந்தேன். அப்போதுதான், பூவரசியை நான் பார்க்க நேர்ந்தது.
மந்தாரை மரங்களையே, பூவரசி, அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். நான் அவள் முகத்தைப் பார்த்தேன். அவளுக்கு சுமார் பத்து வயது இருக்கும்.
அவள் கையில், ஒன்றிரண்டு மந்தாரை மலர்கள்தான் இருந்தது. ஒரு வித ஏக்கத்துடன், அவள் அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருந்த நிலையைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது.
“என்ன வேணும் உனக்கு.. பூ வேணுமா..?” எனது குரலைக் கேட்டு, திடுக்கிட்ட அவள், திடுக்கிட்டுப் போனாள். இருப்பினும், கொஞ்ச நேரம் கழித்து, சுயநிலைக்கு வந்த அவள், என்னைப் பார்த்து, “ஆமாம்” என்றாள்.
அவளது அழகிய, பெரிய கருவிழிகள்.. எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
“ஏன் மரம் ஏறிப் பறிக்க வேண்டியதுதானே?” நான் அவளைச் சீண்டினேன்.
“மரம் கூட நான் ஏறி விடுவேன். ஆனால், மரத்தின் மீது, அங்கும் இங்கும், அலையும், மலை எறும்புகள் மீது எனக்கு கொள்ளை பயம்..” என்று பயந்து கொண்டே பேசினாள் அவள்.
நான் சீண்டுவதை விடவில்லை. “அப்ப கீழே உள்ள, காய்ந்த மலர்களை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்கு நீ போக வேண்டியதுதான்”
எனது சீண்டலுக்கு அவள் கோபப்படவே இல்லை. மாறாய், அப்பாவியாக, “கீழே உள்ள மலர்களை எடுக்கலாம்தான்.. ஆனால். கீழே உள்ள பல மலர்கள், ரொம்பவே காய்ந்து போய்விட்டன… சில காயாத மலர்களும், நேற்று பெய்த மழையில், சேறாகிப் போய் விட்டன” எனச் சொன்னாள்.
எனக்கு அவள் மீது இரக்கம் வந்தது. மரங்களில் ஏறி, சிவப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள் மந்தாரை மலர்கள், என, பலவற்றை பறித்துப் போட்டேன்.
“போதும் போதும்” என அவள் இரைந்தபோது, நான் மரத்தை விட்டுக் கீழே இறங்கினேன்.
இப்போது அவள் பதறினாள். “அய்யோ உன் உடம்பு எல்லாம், அந்த எறும்புகள் கடித்துப் புண்ணாக்கி விட்டன” என்று அவள் பதறியபோதுதான், நான் என் உடம்பைக் கவனித்தேன். எனது, கை, கால் எல்லாம், கொப்புளம் கொப்புளமாய் வீங்கிப் போய் இருந்தது.
“பரவாயில்லை” என்றேன். ஆனால், நான் பேசி முடிப்பதற்குள், அவள், எங்கோ ஓடிப் போய், கொஞ்சம் எண்ணெய் கொண்டு வந்தாள்.
எனது கொப்புளங்களில், அவளே எண்ணெய் தடவியபோது, எனது உடம்புக்குள் ஏதோ ஒரு இன்பம், பரவ ஆரம்பித்ததை, நான் உணர்ந்து கொண்டேன்.
அதன்பிறகு, நாங்கள் இருவரும் மறக்காமல், அந்த மந்தாரை வனத்தில் சந்தித்துக் கொண்டோம். ஒரு முறை அல்ல.. பல முறை.
கூழாங்கல் விளையாட்டு, கண்ணாமூச்சி விளையாட்டு, என பெண்கள் விளையாட்டு அனைத்தையும், அவளோடு சேர்ந்து, நான் ஆண்மையுடன் விளையாடினேன். எனக்கு சந்தோசமான சந்தோசம்.
ஒரு முறை, பெரிய பெரிய அத்திப்பழங்களைச் சேகரித்து, அவைகளை நன்கு காய வைத்தேன். அம்மா சொன்ன, மலைப்பாம்புகள் அச்சுறுத்தல் கதைகளையெல்லாம், ஒதுக்கி வைத்து விட்டு, இரண்டு வலுவான மூங்கில் கழிகளை, மூங்கில் காடுகளில் இருந்து, வெட்டி வந்தேன்.
சின்ன மூங்கில் கழியின், இரு புறமும் சீவி, கூர்மையாக்கி, அவற்றின் இரு முனைகளிலும், காயவைத்த, அந்த அத்திப்பழங்களை மாட்டினேன். அத்திப்பழங்கள், கழியை விட்டு வெளியே போகாது இருக்க, மரத் தக்கைகளை, இரு புறமும் பொருத்தி வைத்தேன்.
அப்புறம், வெட்டி வந்த பெரிய மூங்கில் கழியை, கவை இருப்பது போல் சீவி மாற்றினேன். அந்தக் கவை கொண்டு, நான் செய்த, அத்திமர வண்டியை, உருட்டிக்கொண்டே, பூவரசியைப் பார்க்கப் போனேன்.
பூவரசிக்கு, அந்த அத்திமர வண்டியை, நான் பரிசாகக் கொடுத்தபோது, அவளுக்கு வாயெல்லாம் பல்.
அவள் என்னை பெருமையுடன் பார்த்தாள். கொஞ்ச நேரம் கழித்து வந்து, எனது மடியில் படுத்துக் கொண்டாள்.
எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. நான் சொல்ல வந்த விசயத்தையே, நான் மறந்து போனது எனக்கு இப்பொது எனக்குப் புரிந்தது.
நான், அவள் மடியில் படுத்து இருக்கும்போதே சொன்னேன். “பூவரசி… இன்னும் ஐந்து வருடங்களுக்கு, என்னை நீ பார்க்க முடியாது”
அவள் இன்னும் மயக்கத்தில்தான் இருந்தாள். “ஏன் என்னவாம்?” என்றாள்.
நான் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே சொன்னேன்… “ம்ம்.. நான் ஆண்பால் குடிக்கப் போறேன்..”
இப்படி நான் சொல்லிச் சிரித்தபோது, என் மடியில் படுத்து இருந்தவள், விருட்டென எழுந்து உட்கார்ந்து கொண்டாள். என்னையே பார்த்தாள்.
நான், மறுபடியும் வெட்கத்தில் சிரித்தேன். அவள் எனது தோள்பட்டையில், செல்லமாக ஒரு குத்து விட்டாள்.
“ஆ.. வலிக்கிறது” நான் நடித்தேன். பின்னர் இருவரும், சிரியோ சிரி என்று சிரித்தோம்.
பூவரசியைப் பார்க்க முடியாத அந்த ஐந்து வருடங்கள்.. ஐயகோ… என்னால் மறக்க முடியாத வருடங்கள்.
ஆண்பால் என்றால் என்னவென்று புரிந்துகொண்ட அந்த ஐந்து வருடங்கள்.. வேனில் உட்கார்ந்து இருந்த எனக்கு இப்போது நினைவுக்கு வந்தது.
இப்போது, ஜேம்ஸ் பாதரும், சிம்பாரிப் பிள்ளைகளும் தூங்கிப் போனார்கள். ஆனால், எனது பழைய நினைவுகள், என்னை மட்டும், தூங்க விடாமல், அலைக்கழித்தது.
பழங்குடித் தலைவர், சிம்பாரி இனம், பாப்புவா நியூ கினியா
“நான் புனிதக் குழல் திருவிழாவிற்கு வரமாட்டேன். ஆண் பால் குடிக்க மாட்டேன்.” குடிசையின் முன் நின்றுகொண்டு, பீட்டர் கத்தியபோது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பல இளம் பிள்ளைகள், ‘கொல்’ எனச் சிரித்தார்கள்.
“புனிதக் குழல் திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள். நமது சிம்பாரி மலை தேவனின் அருளைப் பெறுங்கள்.. மசளையான் மாந்தரீக குருவை சந்தோசப் படுத்துங்கள்.. ம்சளையான், நமக்காக, நாம் நன்றாக வாழ்வதற்காக, நமது சிம்பாரி தேவனிடம் வேண்டிக் கொள்ளட்டும்” என்று விழாவிற்கு அழைக்கப் போன, எங்கள் சிம்பாரி இனக் குழுவுக்கு, பீட்டரின் கேலிப்பேச்சு, மிகவும் அவமானத்தைக் கொடுத்தது.
பீட்டரின் குடிலில் மட்டுமல்ல, எங்கள் இனத்தின் பல குடில்களில், நாங்கள், அதே மாதிரி அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது.
“எல்லாம், கிறித்துவ மதம் செய்யும் மாயம்… எல்லாம், நம் சிம்பாரி இனக் கலாச்சாரத்தை அழிக்கத் துடிக்கும், கிறித்துவ மதத்தின் சித்து வேலைகள்..” எனது தம்பி குத்தீட்டி புலம்பினான்.
குத்தீட்டி பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்த, எனது மாமா இருளன், அவனைப் பார்த்து உடனே சீறினார்.
“குத்தீட்டி மாப்பிள்ளை.. அப்புறம் ஏன் நீ, அந்தக் கிறித்துவக் கூட்டங்களுக்கு செல்கிறாய், குத்தீட்டி மாப்பிள்ளை? அங்கே போய், நீயும் தானே கிறித்தவப் பிரார்த்தனைகள் செய்கிறாய் குத்தீட்டி? உன்னயெல்லாம், நாங்கள், நம்ம சிம்பாரி இனம் என்று நம்புகிறோம் பாரு.. ச்சீச்சீ” என்று இருளன் மாமா சொன்னபோது, நான் குத்தீட்டியை, சற்று சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தேன்.
குத்தீட்டி, இருளன் மாமா பேசியதற்கு, ஒன்றும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அவன் கோபப்படவும் இல்லை. மாறாய், அமைதியாகப் பேசினான்.
“இருளன் மாமா… சிம்பாரி இனம் நன்கு வாழவேண்டும் என்று நினைக்கும் இந்த நமது குழுவில், நான்தான் இளையவன். வயதில் பெரியவரான உங்களுக்கோ, அல்லது, நமது குழுவில் இருக்கும், மற்றவர்களுக்கோ, கிறித்துவ மதம் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை. எனவேதான், நான் அந்தக் கூட்டத்திற்கு செல்கிறேன். அங்கே, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துகொண்டு, இங்கே வந்து உங்களை எச்சரிக்கிறேன்” குத்தீட்டி, பேசி முடித்தான்.
பதிலுக்கு இருளன் மாமா பேசவில்லை. ஆனாலும், குத்தீட்டியும் ஒரு நாள் மாறிப்போய் விடுவானோ என்ற சந்தேகம், எனக்கும் எழாமல் இல்லை. குத்தீட்டியும், இப்போது, நன்கு ஆங்கிலம் எழுதுகிறான்…நன்கு, ஆங்கிலம் படிக்கிறான்.
“அது கிடக்கட்டும் குத்தீட்டி… நம் புனிதக்குழல் திருவிழாவிற்கு, இன்னும் பன்றி இறைச்சி அதிகம் தேவை. கூடவே, பிள்ளைகள் மூக்கில் மாட்ட, இன்னும் அதிகமாக, காட்டுப் பன்றிகளின் கொம்புகள் தேவை. எனவே, கொஞ்சம் காட்டுக்கு போய், வேட்டையாடி வருகிறாயா?” என்று நான் கேட்டவுடன், “உத்தரவு நாட்டாமை” என, என்னை வணங்கி விடை பெற்றான், குத்தீட்டி.
“இவன் மீது, எப்போதும் ஒரு சந்தேகக்கண் இருக்கட்டும்” என்று, குத்தீட்டி போகும், பாதையைப் பார்த்து, இருளன் மாமா, என்னிடம் எச்சரித்த போது, நான் அதை மறுக்கவில்லை.
நான் இருளன் மாமாவிடம் கேட்டேன். “ஏன் இருளன் மாமா.. ஆண் பால் குடிக்கமாட்டேன்.. ஆண் பால் குடிக்கமாட்டேன்.. என்று நமது சிம்பாரி வாலிபர்கள் பேசுவதைப் பார்த்தீர்களா? அதுவும் அந்த செம்படையான் பய.. என்னமா கத்துறான்?” நான், இருளன் மாமாவிடம் கவலையாகப் பேசினேன்.
அதற்கு இருளன் மாமா சிரித்தார். “அவனை செம்படையான் என்று சொல்லாதே.. இப்ப அவன் பெயர் பீட்டர்…” என்று சொன்னவுடன், எனக்கும் சிரிப்பு வந்தது. கூடவே, இன்றைய சிம்பாரி இன இளைஞர்களின் போக்கு குறித்த கவலையும் வந்தது.
“இருளன் மாமா… நீங்கள் என்னை விட வயதில் மூத்தவர்… ஆண் பால் குடிப்பதை, ஏன் இந்தப் பிள்ளைகள் வெறுக்கிறார்கள்?” நான் மாமாவிடம் இருந்து, ஆண்பால் குறித்து இன்னும் தெரிந்துகொள்ள, அவரிடம், இந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தேன்.
“சிங்கா.. உனது கேள்விக்கு நான் பதில் சொல்லுமுன், உன்னிடம் ஒரு கேள்வி? நீ பால் மாந்தம் என்றால் என்னவென்று கேள்விப் பட்டு இருக்கிறாயா?” அவரது, இந்தக் கேள்விக்கு, எனக்குத் தெரிந்த பதில் சொன்னேன்.
“கேள்விப்பட்டு இருக்கிறேன். ஒரு பெண், தனது பிள்ளைக்குத் தரும் முலைப்பால், ஆரோக்கியமானதாக இல்லாமல் இருந்தால், அந்தப் பிள்ளைக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அதையே நாம் மாந்தம் என்று அழைக்கிறோம்.” நான் சொன்ன போது, அதை ஆமோதித்த இருளன் மாமா, “மேலே சொல்லு..” என்றார்.
“மாந்தத்தால், பிள்ளைக்கு வாந்தி வரலாம், வயிற்றுப்போக்கு வரலாம்.. எனவே, முலைப்பால் தரும் தாய்மார்கள், எப்போதும் ஆரோக்கியமான, பிள்ளைக்குப் பிடித்த உணவையே உண்ண வேண்டும்.. சரியா மாமா” நான் சொன்னவுடன், இருளன் மாமா, தனது தலையை ஆட்டி, அதைச் சரி என்று ஒத்துக்கொண்டார்.
“சரி.. சிங்கா.. உன்னிடம் இன்னொரு கேள்வி… ஆண்டாண்டு காலமாக, நாம், புனிதக்குழல் திருவிழா கொண்டாடுகிறோம்… அந்த விழாவில், இளம்பிள்ளைகள், முதிய பிள்ளைகளிடம் இருந்து ஆண் பால் குடிக்கிறார்கள். அப்படி, காலம்காலமாக வரும் இந்த வழக்கத்தால், எத்தனை சிறுவர்கள், இறந்து போனார்கள்? அல்லது நோய் வாய்ப்பட்டார்கள் என்று சொல்ல முடியுமா?”
“ஒருவரும் இறக்கவில்லை இருளன் மாமா..” என்று நான் சொன்னவுடன், “அப்படி உறுதியாகச் சொல்லாதே” என்று மறுத்துப் பேசினார் இருளன் மாமா.
“சிங்கா.. ஆண் பால் சாப்பிட்டு, ஒருவரும் இறக்கவில்லை, ஒருவரும் நோய்வாய்ப் படவில்லை என்று சொல்லாதே.. நிச்சயம், சிலர், பாதிக்கப்பட்டு இருக்கலாம். அதை நாம் ஒத்துக்கொள்வோம்.” என்ற போது, “சரிங்க மாமா..” என்றேன் நான். மாமா தொடர்ந்தார்.
“ஆனால், ஒரு பெண்ணின் தாய்ப்பாலில், மாந்தம் வருவது போல, ஒரு வீரமுள்ள ஆண்பாலைக் குடித்து, நோய்கள் சிலருக்கு வந்து இருக்கலாம். ஆனால், அப்படி ஆண்பாலைக் குடித்து வரும் நோய்கள் அதிகமாக இருந்து இருந்தால், அதைப் பார்த்துக்கொண்டு இருந்தும், நமது மூதாதையர்கள், இந்த ஆண்பால் குடித்தலைத் தொடர்ந்து செய்ய முன்வருவார்களா?” என்று இருளன் மாமா கேட்டபோது, “நிச்சயமாக தொடர்ந்து செய்ய முனவந்து இருக்க மாட்டார்கள் மாமா” என்று, அழுத்தமாகச் சொன்னேன்.
இருளன் மாமா, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மறுபடியும் பேசினார். “பெண்ணின் முலைப்பால் என்பதில் வீரம் நிச்சயம் இருக்கிறது. ஆனால் வீரத்தை விட, அன்பும் கருணையும் அதிகம் இருக்கிறது.”
“ஆண்பாலிலும், அன்பு கருணை எல்லாம் இருக்கிறது. ஆனால், ஆணின் பாலில், அன்பையும் கருணையையும் விட, வீரம் அதிகம் இருக்கிறது. இதுதான், காலம் காலமாய், நமது மூதாதையர் நம்பும் நம்பிக்கை..” மாமா தொடர்ந்தார்.
“சிங்கா.. மறந்து விடாதே.. நாம், மலையில் வாழும் வேட்டையாடிகள். நம் எதிரிகளை, அம்பு எய்து கொன்று, நம் இனத்து மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறவர்கள். நம் இன மக்கள் உயிர்வாழ, காட்டில் இருக்கும், சிங்கம், புலி, காட்டுப்பன்றி போன்ற மிருகங்களைக் கொன்று, அதன் கறியை, நம் இனத்துக்குக் கொடுப்பவர்கள்.”
“அப்படி இருக்க, நம் இளம்பிள்ளைகளுக்கு, பெண்ணின் தாய்ப்பால் போன்று, ஆணின் வீரப்பால் கொடுத்து வளர்க்க, நம் முன்னோர்கள் நினைத்ததில் என்ன தவறு?” மாமா நிறுத்தினார். நான், தொடர்ந்தேன்.
“உண்மைதான் மாமா.. நல்ல மரம் வளர, நல்ல உரம் தேவை. நாம், விழாவில், சிறுவர்களுக்குக் கொடுக்கும், முதியவர்களின் ஆண்பாலை, அந்த உரம் போலவே நினைக்கிறோம். அப்படி உரம் கொடுக்கும் முதியவர்கள், உண்மையிலேயே வீரம் செறிந்தவர்களா? அவர்களின் வீர தீர சாதனைகள் என்ன, என்று ஆராய்ந்து பார்த்து, பின்னர், அவர்களில், ஒரு சிலரையே, சிறுவர்களுக்கு ஆண்பால் கொடுக்க அனுமதிக்கிறோம்.”
“அப்படி திடகாத்திரமான வீரர்களின் ஆண்பாலில், ஒருபோதும் நச்சு இருக்காது என நாம் நம்புகிறோம்” நான் பேசி முடித்தேன்.
“நீ சொல்வது சரி சிங்கா… வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் விழாவில் மட்டுமே, நாம் இந்த வழிவழி வரும் வழக்கத்தைப் பின்பற்ற நினைக்கிறோம்.. அதையும் யாரோ அன்னியர்கள் இங்கே வந்து, பாழ்படுத்துவதை, நம்மால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்”
மாமா, வருத்தமாகப் பேசிக்கொண்டே, என்னிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டார்.
காலையில் இருந்து, குடில் குடிலாக அலைந்ததில், எனக்கு மிகவும் அயர்ச்சியாக இருந்தது. நான் தூங்கிப் போனேன். மறுநாள் காலையிலேயே, இருளன் மாமா, எனது குடில் வாசலில் வந்து நின்றார். அவர் உடல் முழுவதும், ஒரு பதற்றம் இருந்தது. பயத்தில், அவர் நாக்குளறிப் பேசினார்.
“சிங்கா.. பீட்டரை.. மசளையான், மலைப்பாம்பு வடிவத்தில் வந்து கொன்று விட்டான்” என்று இருளன் மாமா கதறிய போது, எனக்கு நெஞ்சு சில்லிட்டது.
“இந்த மசலையான் வேறு, நம் இன மக்களை, கருணையே இல்லாமல், கொன்று கொண்டே இருக்கிறான். இதற்கு ஒரு முடிவே கிடையாதா?” எனக்கு மசளையான் செய்யும், இந்தக் கொலைகள், பிடிக்கவில்லை.
ஆனாலும், அவனை சமாதானப் படுத்தியே ஆகவேண்டும். அவனது கோபத்தைத் தணித்தால்தான், எனது இன மக்கள், நிம்மதியாக வாழ முடியும்.
நான் மசளையானைப் பார்க்க, அந்த இரவில், மறுபடியும் கிளம்பினேன்.
தொடரும் அழகர்சாமி சக்திவேல், சிங்கப்பூர்