21ம் நூற்றாண்டு

This entry is part 5 of 12 in the series 1 ஜனவரி 2023

                                                          

சோம. அழகு

கிரகம் : செவ்வாய் கிரகம் (Mars)

வருடம் : 2100

இடம் : மலையும் மலை சார்ந்த இடமும்

            திடீரென்று சுத்தம், சுகாதாரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அங்குள்ள சில ஜீவராசிகளுக்கு மண்டையினுள் முதலில் ஓர் அரிப்பெடுத்தது. இந்தத் தினவு ஆண் இனத்திற்கு மட்டுமே உரித்தானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தினமும் இரு முறை நீராடச் சொல்லி உடல் முழுவதும் அரிப்பெடுக்கத் துவங்கியது. மூன்று வேளையும் பழையன விலக்கி புதியன மட்டுமே உண்ண வாயும் வயிறும் அரிப்பெடுத்தது. ஒரு மாதம் கழித்து கற்களையும் முட்களையும் புசு புசு மெத்தையாக எண்ணி பதினேழோ பத்தொன்பதோ படிகள் ஏறிச் சென்று தரிசனம் பெற, முன்னரே பயிற்சியாக காலணிகளைத் துறக்கவென காலுக்கும் அரிப்பு பரவியது. சில நாள்கள் தாங்களும் சாமியாகப் பாவிக்கப்பட வேண்டும் என்று மனதில் எழுந்த அவா இறுதியாக கண்டிகை அணிய வேண்டி கழுத்து அரிப்பில் முடிவடைந்தது.

            உடனடியாக வீடுகளில் இரட்டை குவளை மட்டுமல்ல… இரட்டை தட்டு, இரட்டை கிண்ணம், இரட்டை கரண்டி என எல்லாம் அவர்களுக்கென பிரத்யேகமாக தனித்தனி பண்ட பாத்திரங்களின் புழக்கம் முதலில் அமலுக்கு வந்தது. சுத்தம், சுத்தம், சுத்தமோ சுத்தம்; சுத்தத்துக்கெல்லாம் சுத்தம்…. உப்பு, சீனியைக் கூட கழுவித்தான் பயன்படுத்த வேண்டுமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த ஒரு மாதத்தில் கேளிக்கை, தேறல், புகை, மாமிசம் என எல்லாவற்றுக்கும் தடை. பயபக்தி! பயத்தின் கண் பக்தி உண்டாகுமா? அதன் பெயர் பக்தி தானா? என்னவோ… இப்படியாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் துவங்கியது அம்மாதம்.

             முடி, நகம் வெட்டிக் கொள்ளாமல் இருப்பது, பொது இடங்களிலும் காலணி இன்றி செல்வது என பக்தியை நிலைநாட்டும் பொருட்டு சுத்தத்தைக் கைவிட்டால் பரவாயில்லை. நரப்பிசிவு நோய் (Tetanus) தாக்கினால் சொல்லுங்கள் ‘ஹைய்யோ ஹரிஹரா! ஐயோ அப்பா!’ என்று. தமது வசதி கருதி அவரவர் சிற்சில கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொள்ளும் போதெல்லாம் ‘இதிலெல்லாம் என்ன வந்துவிட்டது? பக்தி மனதில் இருந்தால் போதும். இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு யாரும் எழுதி வைக்கலயே!’ என்ற அருஞ்சொற்களால் அரற்றி முரண்களால் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்தனர்.

யார் தலையை? இங்குதான் நம் கதையின் முன்னணி கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் சுயமரியாதைச் சுடரின் வழித்தோன்றல்கள். இதில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். மனக்குகையில் எழுந்த சிறுத்தையின் சிந்தனைச் சுவடுகளைப் பற்றி வந்த முற்போக்காளர்கள். இவர்களைச் சுடரொளி இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்றும் பிறரை பொதுசன ஜீவராசிகள் என்று விளிப்போமாக! அப்பேரியக்கத்தின் கொள்கைகளுக்குப் பொது சனத்தில் பெரும்பாலும் ஆண் இனத்திடம் இருந்து வந்த எதிர்ப்பைக் காட்டிலும் பெண் இனத்தின் சில ஜீவராசிகளிடம் இருந்தும் வெளிப்பட்ட எதிர்ப்புதான் மிகவும் வினோதமாகவும் அசட்டுத்தனமாகவும் இருந்தது. அதையெல்லாம் மீறித்தான் அவர்களுக்கும் சேர்த்து சுடரொளி இன்னும் இன்னும் ஒளியைப் பாய்ச்சி போராடிக் கொண்டிருந்தது.

சரி! கதைக்கு வருவோம். ஒவ்வொரு பொது சன ஜீவராசியும் எதைத் தளர்த்திக் கொண்டாலும் ஒட்டு மொத்தமாக எல்லோரும் ஒன்று கூடி கடைபிடிக்கும் ஓர் உன்னத(!) விஷயம் இருந்தது. ‘பெண் ஜீவராசி தன் மாதசுழற்சி காலத்தில் இந்த (ஆ)சாமிகளின் கண்களில் படவே கூடாது. அடுப்பங்கரையினுள் நுழையவும் கூடாது’ என்பதே அது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுடரொளிகள் ஒரு முடிவுக்கு வந்தன. அவ்வியக்கத்தின் திட்டம் கச்சிதமாய் அரங்கேறியது.

கண்டிகைக் கூட்டம் ஒட்டு மொத்தமாகப் பெரிய பயணம் மேற்கொண்டு எமனையும் வெல்லக் கூடிய திருப்பாதங்களைக் காணுற்று மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த போதே ஏதோ வித்தியாசப்படுவதாய் உணர்ந்தார்கள். நெடுந்தொலைவில் தங்கள் வீடுகள் இருக்கும் இடம் முழுக்க பற்பல வண்ணங்கள் புள்ளியாகத் தெரிந்தன. வேக வேகமாக அதை நோக்கி ஓடினார்கள். கற்றை கற்றையாகக் காகிதங்கள் அங்குமிங்குமாகப் பறந்து ஒவ்வொருவரின் முகங்களிலும் அப்பின. அவை காற்றைக் கிழிக்கும் தூரிகைகளாகி செவ்வாயின் வெளி முழுவதையும் வண்ணங்களால் நிரப்பிக் கொண்டிருந்தன.  ஒவ்வொருவருக்கும் ஒரு வண்ணக் காகிதம் கையில் அகப்பட அதை வாசிக்கலானார்கள்.

சுடரொளிப் பெண் ஒருவள் அவ்வியக்கத்தின் சார்பாக பொதுசன ஆண்களுக்கும் பெண்களுக்கும் அம்மடலை வரைந்திருந்தாள். இதோ வண்ணக் காகித எழுத்துகள் உங்கள் பார்வைக்கும்.

                                                            ******************

            ‘அன்புடையீஈஈஈர்!’ என்றெல்லாம் சம்பிரதாயமாகக் கூட அழைக்க மனம் ஒப்பவில்லை எங்களுக்கு. ஏதோ இந்தக் கண்டிகைக் கட்டுபாடுகள் மட்டும்தான் எங்களை இம்முடிவிற்குத் தள்ளியது என எண்ண வேண்டாம். வாழ்நாள் முழுக்க உங்கள் சமூகம் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம், “நீ அசுத்தமானவள்; சற்று ஒதுங்கி நில்” என மீண்டும் மீண்டும் நினைவூட்டியபடி விலக்கி வைக்கும் அகங்காரமே முக்கிய காரணி. எல்லாம் சேர்ந்து வெடித்தது இப்புள்ளியில். நாங்கள் புழுப் பூச்சிகளாகக் கூட பிறப்பெடுத்திருக்கலாம் போலும். இவ்வெண்ணம் எங்களுள் உருவானதற்கு நீங்கள்தான் கூனிக் குறுக வேண்டும். ‘அந்நாட்களில்’ சக மனுஷியாகக் கூட மதிக்கத் தயங்குகிற உங்கள் இயலாமையை… ‘இயலாமை’ என்பதை விட ‘கையாலாகாத்தனம்’ இன்னும் பொருத்தமாய் இருக்குமோ? உங்கள் பொதுசன பெண் இதை எங்ஙனம் ஏற்றுக் கொள்கிறாள் என்று புரியவில்லை. தன் சுயமரியாதையின் மீது பக்தியை நன்கு கொதிக்க வைத்து ஊற்றி அதில் அடிமை சாசனத்தைக் குழைத்து அள்ளியெடுத்து விரும்பிப் பூசிக் கொள்வாள் போலும். உங்கள் பொதுசன ஆணும் தன் அறிவின் மீது பக்தி என்னும் சையனைடைத் தடவி தன்னுள் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கும் அதிகாரம் செலுத்தும் மனப்பான்மைக்கு அரிதாரம் இட்டு தன்னைக் கச்சிதமாக சமூகத்தில் தகவமைத்து ஆனந்தம் அடைகிறான்.

            உங்கள் குல/இன/மத மானம் எல்லாவற்றையும் எங்கள் கருப்பையில் ஏன் முடிந்து வைத்திருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்களுக்கு, கஷ்டங்களுக்கு, தோல்விகளுக்கு ‘அந்நாட்களில்’ நாங்கள் சகஜமாக வீடுகளில் வளைய வந்து புழங்கியதே காரணம் என சற்றும் வெட்கமே இல்லாமல் அனைத்துப் பழியையும் எங்கள் கருப்பையின் மீது தூக்கிப் போடுகிறீர்கள். நாங்கள் அந்நேரத்தில் சமைக்கும் போது கருப்பையின் குற்றம் (குற்றம் – இவ்வார்த்தையைப் பயன்படுத்துவதில் எனக்கு சறும் உடன்பாடில்லைதான். ஆனால் உங்கள் மொழியில் அப்படித்தானே கூறுவீர்கள்!) உணவிலும் ஏறி விடுமோ? சில பெண்களும் சேர்ந்து இதை ஆமோதிக்கும் அபத்தம் சகிக்கவில்லை. ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்!’ என அறிவிப்புப் பலகை ஏந்தி நிற்க வேண்டுமா நாங்கள்? நிஜமாகவே முழங்காலுக்கும் முல்தானிமட்டிக்கும் முடிச்சு போட்டால் கூட பரவாயில்லை என்ற அளவில் இருக்கிறது உங்கள் வாதம். உங்கள் கடவுள்களின் புனிதத்தைக் கெடுக்க வல்ல வஸ்து அது எனில், உங்கள் இறைகளின் சக்தி அவ்வளவுதானா? தீட்டு, அழுக்கு, அசிங்கம் என ஒதுக்கி வைக்கும்போது உங்கள் பிறப்பே 10 மாதங்களாக அவை சேர்ந்ததுதான் என்பதை வசதியாக மறந்து தொலைக்கிறீர்கள். பெண் தெய்வங்களையும் அந்நாட்களில் விலக்கி வைப்பீர்களோ? பெண்களை வழிபாட்டிற்கு உள்ளே அனுமதிக்காத கடவுளை, அக்கடவுளை வழிபடும் ஜீவராசிகளை எந்தப் பிரிவில் சேர்ப்பது? ‘கண்ணிலேயே படப்பிடாது’ – வீட்டுப் பெண்களை அறையினுள் பூட்டிவிடலாம். சாலையில்? அலுவலகங்களில்?

பெண்ணுடலின் இயற்கையைப் புரிந்து கொள்ளாது கண்டிகைக் காலம், பண்டிகைக் காலம் என எங்களை உள்ளறையில் முடங்கி இருக்கச் சொல்லி தீண்டாமை ஏவுகணையை நீங்கள் ஏவும் ஒவ்வொரு முறையும் உங்கள் முற்போக்கு முகத்திரை கிழிவதைப் பார்த்தால் முதலில் பரிதாபமும் அதைத் தொடர்ந்து சிரிப்பும் பின்னர் கடுஞ்சினமும் வருகின்றது. ஏற்றத்தாழ்வுகளைத்தான் உங்கள் கடவுள் போதிக்கிறாரா? எங்கள் யாக்கை அவ்வளவு அருவருப்பைத் தருகிறதெனில் நீங்களும் ஆளுக்கொரு மலையில் குத்த வைத்துக் காத்திருங்கள், உங்கள் வரையறையில் சுத்தமான பெண் இனம் உருவாகும் வரை.

             “அது… அந்த காலத்துல இருந்து அப்படித்தான் வச்சுருக்காங்க” என்பதைத் தாண்டிய அறிவியல்பூர்வமான ஆக்கப்பூர்வமான விளக்கம் ஏதும் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆம்! முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, அடி முட்டாள்கள் (ஆரிய வரவிற்குப் பிறகான உங்கள் முன்னோர்களைக் கூறுகிறேன்). எனவே கண்டிகைக் கலாச்சாரத்தைக் கையிலெடுக்கும் ஒவ்வொரு ஜீவராசியும், பாரபட்சத்தை ஆழ்மனதில் ஆதரிக்கும் உயிரினமே! இப்போது காலம் மாறி விட்டபடியால் உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கொஞ்ச நஞ்ச நாணம் உங்கள் மனதிடமும் பிறரிடமும் இதை மறுதலிக்கச் சொல்லலாம். ஆனால் உங்கள் செய்கைகள் காட்டிக் கொடுக்கின்றனவே! நேரிடையாக இல்லாவிடினும் மறைமுகமாகவேனும் பெண் மீது அதிகாரம் செலுத்துவதை விரும்பும் பொது சனம் தங்களுள் புரையோடிக் கிடக்கும் பார்ப்பனீயத்தைக் கைகாட்டி நிற்கிறது. இவ்வளவு அட்டூழியமும் ‘கருப்பு’ நிறத்தை அணிந்து கொண்டு செய்கிறீர்கள் என்பதுதான் முரண்களின் உச்சம்.

உலகம் போற்றும் கொள்கைகள் எங்களுடையது எனினும் அவற்றைத் திணிப்பது இல்லை. நாங்கள் யாரையும் கடவுள் வழிபாட்டினின்று தடுக்கவும் இல்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வாத உங்கள் நம்பிக்கையோடு தாராளமாக இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் அது சார்ந்த நடைமுறைகளை அடிப்படைவாத அணுகுமுறையுடன் எங்கள் மீதும் திணிக்க முயலும் உங்கள் அடாவடித்தனத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது. அறிவியலின் அசுர வளர்ச்சிக்கு நடுவிலும் உங்கள் வழக்கங்ககளை இன்னமும் ஆணித்தரமாக நிலைநாட்டுவதில் தெரியும் ஒருவித பதற்றம் உங்கள் பயத்தைப் பறைசாற்றுகிறது.

நாங்கள் மாதம் ஒருமுறை எங்களைச் சுத்திகரிப்பு செய்து கொள்கிறோம். உங்கள் மனங்களில் பொதிந்து கிடக்கும் பிசுபிசுக்கும் அழுக்குகளை எந்தப் புனித நதியாலும் சுத்தம் செய்ய இயலாது. உங்களுள் கவிந்திருக்கும் இருளை எந்தப் பேரொளியாலும் போக்க முடியாது. “எல்லாம் ஒரு நாள் மாறும்” என்று எங்களை நாங்களே எவ்வளவு காலம்தான் ஏமாற்றிப் பொய் சமாதானம் சொல்லிக் கொள்வது? நாங்கள் களைப்படைந்து விட்டோம். உங்களைச் சகித்துக் கொள்ளும் பொறுமை அணு அளவேனும் எங்களிடம் இல்லை. இனியேனும் நல்லுலகு ஒன்றில் ஜீவிக்கும் ஆசை எங்கள் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துவிட்டது.

எங்களில் கருவுற்றிருக்கும் பெண்கள் உங்களது சீழ் பிடித்த உலகிற்குத் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வர விரும்பவில்லை. பேரியக்கத்தில் உள்ள இளம் தாய்மார்கள் உங்கள் உலகின் குருட்டுத்தனமான நம்பிக்கைகள், அறிவிற்கு அப்பாற்பட்ட நடைமுறைகள் எல்லாம் விவரம் அறியா பருவத்தில் (the stage before age of reasoning) இருக்கும் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்றப்படும் அபாயத்தை எப்படியேனும் தடுக்க விழைகிறார்கள். எனவே நாங்கள் அனைவரும் இளஞ்சிறார்களுடன் நீங்கள் யாரும் தேடினாலும் கண்டுபிடிக்க இயலாத கிரகத்திற்குச் செல்கிறோம். ‘அசிங்கம்! அசுத்தம்!’ என்ற இடைவிடாத உங்கள் கூச்சல் எங்கள் மூளையைத் துளைத்து எங்கள் உடலின் தனித்துவத்தையும் எங்களையும் நாங்கள் வெறுக்கத் துவங்குவதற்கு முன் போகிறோம். அங்கு ஆக்ஸிஜன் வாயு சற்று குறைவு என்றாலும் கூட இங்கு உங்களால் உருவாகியிருக்கும் மூச்சுத்திணறலுக்கு அவ்விடம் பன்மடங்கு மேல் என்ற முடிவிற்கு வந்துவிட்டபடியால் கிளம்பிவிட்டோம். மனதளவில் எப்போதோ உங்கள் சமூகத்திடம் இருந்து வெகு தொலைவு சென்று விட்டோம் ஆகையால் எங்களுக்கு எவ்வித வருத்தமோ கவலையோ துளியும் கிடையாது. எங்களைச் சமமாக மதிக்கும் எங்கள் இயக்கத் தோழர்களின் உதவியுடன் இதுவரை இல்லாத அளவிற்கான அதிவிரைவு விமானம் தயாரானது. உங்களுக்கு இது வாசிக்கக் கிடைக்கையில் நாங்கள் பாதி தூரம் சென்றிருப்போம். இனி உங்கள் உலகம் சுத்தமாகவும் புனிதமாகவும் இருக்கும்.

எங்கள் உலகம் கற்பனையிலேயே அவ்வளவு அழகாக இருக்கின்றது. எங்கள் பிள்ளைகள் சிற்பிக்கு நரகத்தைத் தந்த கற்களை விடுத்துத் தங்கள் மீது நம்பிக்கை கொள்வார்கள். புராணங்களையும் கட்டுக்கதைகளையும் வரலாறாகப் பார்க்கும் வழக்கம் எங்கள் அவனியில் இருக்காது. எதிலும் புனிதம் ஏற்றப்படாது. உங்களது தேவையற்ற நடைமுறைகள், அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், அருவருப்பான பாகுபாடுகள் எதுவும் இல்லாது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆழ்ந்து அனுபவித்து ஆடிப் பாடி மகிழ்ந்தே கழி/ளிப்போம். நிஜத்தில் இன்னும் கூட அருமையாக இருக்கப் போகும் அவ்வுலகமும் பிறக்கப் போகும் புது நூற்றாண்டும் எங்களுக்கான புதிய நம்பிக்கை ஊற்று. நானே காளி! நானே துர்கை! நானே அம்மன்!

                                                *******************

வாசித்து முடித்தவுடன் செவ்வாய்க் கிரகமே அமைதியில் உறைநிலைக்குச் சென்றுவிட்டது. சிலருக்கு மண்டையில் சுத்தியலால் அடித்தது போல் இருந்தது. மிச்சமிருந்த பிறருக்கு இன்னும் புரிந்தபாடில்லை, சுடரொளி எதற்கு இவ்வளவு கோபமாய்ப் பால்வெளியை ஊடுருவிப் பறந்து சென்றது என. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய்ப் புரிந்தது…. ஊளைக்காற்று ஒவ்வொருவரின் காதிலும் வந்து சொன்னது “ஊழிக்காலம் வெகு தூரத்தில் இல்லை”.  

  • சோம. அழகு
Series Navigation2022 ஒரு சாமானியனின் பார்வைபுத்தாண்டு பிறந்தது
author

சோம. அழகு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *